என் புருஷன் எனக்கு மட்டும்

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

சம்பத் ரெங்கநாதன்


சாத்தான் மரத்தின் மீதிருந்து இனிய குரலில் பாடிக்கொண்டிருந்தான்.ஏடன் தோட்டமெங்கும் அவன் குரல் இனிமையாக ஒலித்தது.தனிமையில் நடந்து வந்துகொண்டிருந்த ஏவாளின் காதில் அது விழுந்தது.அதுவரை அவள் ஆதமின் குரலையும்,கடவுளின் குரலையும் தவிர வேறு குரலை கேட்டதில்லை.பாடுவது யார் என்று உற்று நோக்கினாள்.மரத்தின் மீது அமர்ந்து பாடிக்கொண்டிருப்பது ஒரு பாம்பு என்று தெரிந்ததும் அவள் ஆச்சரியமடைந்தாள்.

‘யார் நீ ? ‘ என்று கேட்டாள்.பாம்பு வடிவில் இருந்த சாத்தான் மெதுவாக கீழிறங்கினான். ‘என்னோடு நீ பேசினால் கடவுளுக்கும்,உன் கணவனுக்கும் பிடிக்காது.போய்விடு ‘ என்றான் சாத்தான்.

‘கடவுள் கருணையே வடிவானவர்.என் கணவர் என் மீது உயிரையே வைத்துள்ளார்.ஆக எனக்கு எந்த பிரச்சனையும் வராது.நீ யார் ‘ என்று கெட்டாள் ஏவாள்.

‘என் பெயர் லூசிபெர்.உங்கள் இருவரைபோல் கடவுளின் அன்புக்குரியவனாக முதலில் இருந்தேன்.ஆனால் போகபோக எனக்கு அது பிடிக்காமல் போய்விட்டது.என் கதையை விடு.அது ஒரு பெருங்கதை ‘ என்று பெருமூச்சு விட்டது சாத்தான்.

ஏவாள் அதிர்ச்சி அடைந்தாள்.கடவுளை கூட ஒருவருக்கு பிடிக்காமல் போகும் என்பதை அவள் அன்று தான் கண்டாள்.ஏன் என்று தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல் வந்தது.

‘ஏன் உனக்கு கடவுளை பிடிக்கவில்லை ? ‘ என்று கேட்டாள்.

‘உனக்கு ஏன் கடவுளை பிடித்திருக்கிறது ? ‘ என்று திருப்பி கேட்டது சாத்தான்

‘எங்கள் இருவரை அவர் படைத்தார்.அன்போடு பாதுகாக்கிறார்.அவரை பிடிக்காமல் வேறு யாரை பிடிக்க வேண்டுமாம் ? ‘ என்று ஏவாள் கோபமாக கேட்டாள்

‘ஏன் உன் கணவனை உனக்கு பிடிக்க வேன்டாமா ? ‘ என்று திருப்பி கேட்டது சாத்தான். ‘உனக்கு கடவுளை அதிகம் பிடிக்குமா அல்லது உன் கணவனை அதிகம் பிடிக்குமா ? ‘

‘கடவுள் எனக்கு தந்தை.ஆனால் ஆதாம் என் கணவன்.எனக்கு ஆதமை தான் முதலில் பிடிக்கும் ‘ என்றாள் ஏவாள்.

‘உன் கணவனுக்கு யாரை முதலில் பிடிக்கும் தெரியுமா ? என்று கேட்டது சாத்தான்.

‘இதில் என்ன சந்தேகம்.என்னை தான் முதலில் பிடிக்கும் ‘ என்றால் ஏவாள்.

‘அப்பாவி பெண்ணே.. ‘ என்று சிரித்தது சாத்தான். ‘நீ ஒரு முட்டாள் ‘ என்று சொல்லிவிட்டு மறைந்தது.

***

ஏவாள் அழுது கொண்டே இருந்தாள்.சாத்தான் சொன்னதை கேட்டு கணவனிடம் சென்று உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டதற்கு அவன் கடும்கோபம் கொண்டான்.கடவுளுக்கு இணையாக உன்னை கருதுகிறாயா என்று சத்தம் போட்டான்.அவன் கடும்மொழி பேசி ஏவாள் இதுவரை கேட்டதே இல்லை.

பாம்பையாவது பார்க்கலாம் என்று சென்றாள்.பாம்பு அதே மரத்தில் உட்கார்ந்திருந்தது.அவளின் அழுத கண்களை பார்த்ததும் என்ன நடந்திருக்கும் என்பது அதற்கு தெரிந்துவிட்டது.

‘இதில் வருத்தபட ஒன்றும் இல்லை ‘ என்றது பாம்பு. ‘கடவுளுக்கு அடுத்துதான் அவன் உன்னை தான் விரும்புவான்.கடவுள் மேல் பக்தி கொண்ட அனைவரும் அப்படிதான் இருப்பார்கள் ‘ என்றது பாம்பு.

‘பெண்ணின் மனம் உனக்கு தெரியாது என்றாள் ஏவாள். ‘என்ன தான் கடவுளே ஆனாலும் என் கணவனுக்கு என்னை தான் முதலில் பிடிக்க வேண்டும்.அந்த உரிமையை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்.ஆனால் இவன் இப்படி இருக்கிறான்.எனக்கு இது பிடிக்க வில்லை ‘ என்றாள் ஏவாள்.

‘அவன் அப்படி தான் சொல்வான்.ஆனால் மனதில் உன்மேல் அவனுக்கு பிரியம் இருக்கும்.நீயா கடவுளா என்று வந்தால் அவன் உன்னை தான் தேர்ந்தெடுப்பான் ‘ என்றது சாத்தான்.

‘எப்படி நம்புவது ‘ என்று கேட்டாள் ஏவாள்.

‘பரிசோதித்து பார்க்க வேண்டியது தான் ‘ என்று சொல்லி சிரித்தது சாத்தான். ‘ஆனால் அப்படி செய்தால் இந்த இனிமையான வாழ்வு மறைந்து விடும்.துன்பம் உன் வாழ்வில் நுழையும் ‘

‘நுழையட்டும் ‘ என்றாள் ஏவாள். ‘என்ன கஷ்டப்பட்டாலும் என் கணவன் எனக்கே சொந்தமாக இருப்பானல்லவா ?அவன் என் மேல் உண்மையான் காதல் கொண்டிருக்கிறானா இல்லை அவன் தந்தையை தான் அவனுக்கு பிடிக்குமா என்று சோதித்து பார்த்துவிடுகிறேன்.இதனால் என்ன விளைவுகள் வந்தாலும் பரவாய்ல்லை ‘ என்றாள் ஏவாள்.

****

‘என்ன காரியம் செய்துவிட்டாய் ‘ என்று பதறினான் ஆதாம். ‘ஐயோ நீ அந்த பழத்தை சாப்பிட்டது தந்தைக்கு தெரிந்தால் உன்னை அழித்துவிடுவாரே. ‘ என்று கலங்கினான்.

‘நான் செத்தால் உனக்கென்ன ‘ என்றாள் ஏவாள். ‘உன் இன்னொரு விலா எலும்பின் மூலம் இன்னொரு பெண்ணை உருவாக்குவார் உன் தந்தை.அவளோடு குடும்பம் நடத்து ‘ என்றாள் ஏவாள்.

‘முட்டாளே ‘ என்று அழுதான் ஆதாம். ‘உன்னை விட்டால் எனக்கு வாழ்வு இல்லை.நீ இல்லாமல் இந்த ஏடன் தோட்டத்தில் நான் வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறேன். ? ‘

தந்தை வரும் நேரம் நெருங்கியது.ஆதாம் அந்த ஆப்பிளின் மிச்சத்தை எடுத்தான்.சாப்பிட போனான். ‘வேண்டாம் ‘ என்று பதறினாள் ஏவாள். ‘உன் காதலை நான் உணர்ந்து கொண்டேன்,இனி மகிழ்ச்சியோடு சாகிறேன் ‘ என்றாள்.

‘முட்டாள் பெண்ணே ‘ என்றான் ஆதம். ‘வாழ்வோ சாவோ அது உன்னோடு தான்.உனக்கு என்ன நடக்கிறதோ அதை நானும் அனுபவிக்கிறேன் ‘ என்றான்.

ஆப்பிளை கடித்தான்.

ஏவாள் அழுது கொண்டே சிரித்தாள்.அவள் கணவன் அவளுக்கு கிடைத்து விட்டான்.அவளுக்கு மட்டுமே அவன் இனி சொந்தம்.அவள் வாழ்வில் தோற்றாலும் காதலில் ஜெயித்துவிட்டாள்

—-

doctorsampath@gmail.com

Series Navigation