என்னைப் பெத்த அம்மாாாாஆ…

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

புதியமாதவி, மும்பை42


‘எப்ப வந்த தாயி.. ? ‘

மாட்டைப் பத்திக்கொண்டுப் போகும் கோனார் மாமா கேட்டார்.

‘வந்துப் பத்து நாளு ஆவுது மாமா.. ‘

‘என்ன இன்னும் அப்படியேதான் கிடக்காளா.. ‘

‘யோவ் கோனாரு ..சாகப்போறவக்கிட்டே ஏன் போட்டிப்போடுதேரு..உள்ளெ

வந்து நாடிப் பிடிச்சுப் பார்த்துதான் சொல்லப்பிடாதா.. மூவடையா இன்னும்

எத்தனை நாளைக்கு இந்தப் பிள்ளைய இப்படிக் காக்கப் போடப்போறாளோ

தெரியலையே.. ‘ சின்னம்மா அழுது கொண்டே அலுத்துக் கொண்டாள்.

கோனாரும் மூவடையாளும் ஒரே கிணத்தில் குளித்தவர்கள்.. ஒரே குளத்தில்

அயிரை மீனைப் பிடித்து விளையாண்டவர்கள்..

என்ன ரண்டு பேருக்கும் ஒருவித சண்டை நேசம் உண்டு.அந்தக் காலத்திலிருந்தே

அப்படித்தான். இப்பவும் ரண்டு பேருக்கும் அப்படித்தான் சண்டை வந்தது.

ஆண்பிள்ளை இல்லாதவர்களுக்கு அரசு மானியமாக அறுபதோ எழுபதோ மாச

மாசம் கொடுக்கின்றது. உனக்கென்ன கொடுத்து வச்சவா.. மாச மாசம் பொண்ணு

வேற பணம் அனுப்பறா.. கவர்மெண்ட் பணம் வேறு .. ‘ என்று சொல்ல

ப்டி பிடி என்று பிடித்துக் கொண்டாள் மூவடையா..

மூவடையாளுக்கு யாரும் அவளைக் கொள்ளி வைக்க ஆண்பிள்ளை இல்லாதவள்

என்று சொல்லிவிட்டாள் போதும் .. அவ்வளவுதான்.. அன்னிக்கு பூரா ஊர்ச்சனம்

தூங்கினப்பிறகும் அவள் குரல் அடங்காது.. சகட்டுமேனிக்கு எல்லாரையும்

ஏக வசனத்தில் அறுத்து வாங்குவாள்..மூவடையா வாய்க்குப் பயந்தே பலர் அவளிடன்

அதிகம் பேசமாட்டார்கள்.

ஆனா மூவடையா கடும் உழைப்பாளி. எல்லோருக்கும் கிணத்தில் தண்ணிரில்லை

எப்படி விவசாயம் செய்வது என்று கவலையிலிருக்க இவள் மட்டும் பஞ்சாயத்து

போர்டில் கொடுத்த இரண்டு ஆட்டை வைத்து வியாபாரம் ஆரம்பித்துவிட்டாள்.

வேறென்ன.. ஆட்டுப்பாலில் நல்ல இஞ்சிக் கலந்த டா போட்டு காலையில்

மலையாளத்து மார்க்கெட்டுக்குப் போகும் லாரி டிரைவர்களுக்கு வண்டி லோட்

ஏற்றும் இடத்திற்குப் போய் விற்றுவிட்டு வருவாள்.

அரைமணி நேரம் நடந்துப் போய் இவள் விற்கின்றாள் என்பதைவிட இவள்

எப்போதடா நமக்கு இஞ்சி சாயாக் கொண்டுவருவாள் என்று லாரி டிரைவரிலிருந்து

ரிக்ஷா டிரைவர் வரை காத்திருப்பார்கள்..

எப்படியும் ஒரு நாளைக்கு பத்து முதல் இருபது வரை லாபம் கிடைக்கும்.

அதுபோதும் அவளுக்கு.. அவள் என்ன ஒத்தக் கட்டை..

இப்போது படுக்கையில் விழுந்து பதினைந்து நாளாகின்றது.

பெரிய டாக்டரு எல்லாம் ‘சரி .. சொல்றவுங்களுக்கு சொல்லிடுங்க.. ரொம்பநாளு

தாக்குப்பிடிக்காது என்று சொல்லிவிட்டார்.

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு..

பணம் செலவு செய்தால் சுகமாக்க கூடிய வியாதி தான்.

அறுவைச் சிகிச்சைக்கே இரண்டு லட்சம் ஆகும். இவர்களால் முடியாது என்பது

டாக்டருக்கும் தெரியும். அதுதான் கையை விரிச்சுட்டார்.

அது தெரியாமல் அவர் முடியாதுனு சொன்னதையே அவருக்குடைய சிறப்பாக

அந்த ஊர்ச் சனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..

‘ சும்ம சொல்லப்படாது.. அவுங்க அப்பா கோட்டையிடி வைத்தியரு மாதிரியே தான்

இவரும்.. நம்மளை ஏமாத்தி பைசாப் பிடுங்க மாட்டாரு.. முடியாட்டா முடியாதுனு

கரைக்கட்டா சொல்லிப்புடுவாரு.. இப்படித்தான் போனமாசம் பால்தேவர் அப்பாவுக்கு

நாள் குறிச்சுக் கொடுத்துபுட்டாராம்..பிறகென்ன.. பால்தேவரு அக்கா தங்கச்சினு

எட்டுபேருல்லே அத்தனை பேருக்கும் சொல்லிவிட்டு எல்லாலுவளும் வந்து

பாலு ஊத்தி தான் காரியம் முடிஞ்சிருக்குனாப் பாத்துக்காங்களேன் ‘

கோனாரு கைகாலை கழுவிட்டு தாழ்வாரத்தில் கயித்துக் கட்டிலில் கிழிந்த தலையனை

மாதிரி ஒரு சின்ன ஓலைக் கூடையில் வச்சி எடுத்துட்டுப் போற பருத்திப் பஞ்சு

மாதிரி கிடக்கின்ற மூவடையா கையை தூக்கி நாடிப் பிடித்து பார்த்தார்..

ஒரு நிமிடம் அமைதி..

எல்லோரும் அவரு முகத்தையே பாத்திட்டிருந்தாங்க..

‘எல்லா நாடியும்தான் அடங்கிபோச்சே.. ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சிக்கிட்டு

இருக்கே.. ‘

அதுதானே.. அந்தப் பிள்ளையும் பிள்ளை குட்டிகளை விட்டுட்டு போட்டது

போட்டபடிக் கிடக்க ஓடி வந்திருக்கு.. அவ மாப்பிளை நல்ல அமந்த குணம்..

அதுதான் பேசாமா இருக்கு.. இவ இப்படிக் கிடந்து கடைசியிலே பால் ஊத்த

யாருமில்லாமலே காய்ஞ்சிப் போகப் போறாளா..

எப்படியும் ரண்டு நாள்ளே அடிச்சிடும்.. வெள்ளிக்கிழமையிலே அமாவாசை வருது.

இழுத்துட்டுக் கிடக்கிற உசிரை எல்லாம் அடிச்சிட்டுப் போறதுக்குத்தான் இந்த

வெள்ளிகிழமை அமாவாசைனு சொல்லுவாங்க..ம்ம்ம் பார்ப்போம்..

கூட்டம் கலைந்தது..

‘ஏ மைனி.. கோனாரு என்ன சொன்னாரு.. ? ‘

அவரு என்னத்தை சொல்லறதுக்கிருக்கு.. இப்ப பத்து நாளா இந்தக் குளுகோஸ்

தண்ணியை நாக்கிலைத் தொட்டு வைக்கறதில்தான் அவ உசிரு ஆடிக்கிட்டு

கிடக்கு. என்னத்தை நினைச்சுக்கிட்டு கிடக்காளோ அவ மவளும் மருமவனும்

வந்து காத்துக்கிடக்காவா.. ‘

‘என்ன தம்பி.. நீங்கதான் மூவடையா மருமகனா.. ? ‘

ஆமாய்யா..

‘இல்லஏ ஒன்னுமில்லே.. மூவடையா எங்கிட்டே ஒரு சீட்டுப் போட்டா பாருங்க..

ரண்டாவது சீட்டு எடுத்திட்டா.. இன்னும் 13 சீட்டு பாக்கி இருக்கு..

மாசமாசம் 250 ரூபா.. பணவிசயம் எதுக்கும் அவ உயிருடனிருக்கும்போதே

சொல்லிட்டா நல்லதுனுதான்… ‘

மூவடையா இவர்கள் சொல்கின்ற பணக்கணக்கு , சீட்டு நாட்டு கணக்கை எல்லாம்

கேட்டிட்டிருக்க மாதிரி அவர் சொன்னார். அவர்மட்டுமல்ல.. இரண்டு மூன்று பேர்

இப்படி அவனிடம் மட்டும் கணக்கு சொல்லியிருக்கின்றார்கள். அவனும் எல்லோரிடமும்

சொல்வதுபோல் இவரிடமும் பதில் சொன்னான்.

‘அதனால் என்னய்யா.. நானு மாசமாசம் உங்க பேருக்கு மணியார்டர் பண்ணிடறேன்

மாமியார் ரொம்ப சமாளிப்புள்ளவள் என்ரு அவன் கேள்விப்பட்டிருக்கின்றான்.

அவர்கள் மாச மாசம் அனுப்புகின்ற 100 ரூபாயில் இதை எல்லாம் செய்ய முடியாது.

இதெல்லாம் அவள் எப்படியும் சமாளிச்சிடலாங்கிற துணிச்சலில் செய்திருக்கும்

காரியங்கள்.

எதற்குமே எழுத்து கணக்கு கிடையாது..கேட்கவும் முடியாது. நம்பித்தான் ஆகவேண்டும்.

மூவடையாவுக்கு அவர்கள் ஊர் அம்மனின் பெயர் என்று அவர்களின் சின்னம்மா

சொல்லியிருக்கின்றாள்.

‘மூன்று யுகம் கொண்டாள் ‘ அவர்கள் ஊர் அம்மனின் திருநாமம்.

அந்த அம்மனின் பெயர்தான் இவளிடம் வந்து மூவடையாளாக மூக்கு வடித்துக்

கொண்டு நின்றது.

மூவடையாவுக்கு ரஞ்சிதம் ஒரே பெண்தான். அதுவும் அவள் வெள்ளி செவ்வாய் தவறாது

ஊர் அம்மனுக்கு விரதமிருந்து ரஞ்சிதத்தை உண்டானாள். ரஞ்சிதம் பிறந்தவுடன்

மூன்று யுகம் கொண்டாளுக்கு தனியாக ஆடுவெட்டி கொடை விட்டுக் கொடுத்தாள்.

தனக்கு குழந்தை இல்லை என்பதை விட அம்மனின் பெயர் வைத்த தன்னை

யாரும் மலடி என்று சொல்லிவிட்டால் அது அம்மனுக்கே இழுக்கு என்று எண்ணி

அழுதிருக்கின்றாள்.

‘அம்மா தாயே.. உன் பேரைச் சொல்லி என்னை யாரும் மலடினு சொல்லலாமா ?

நீ அதுக்கு இடம் கொடுக்கலாமா ? ‘ தினமும் அம்மனிடம் இப்படித்தான்பேசிக்

கொண்டிருப்பாள்.

அவள் விரதங்களும் நம்பிக்கையும்தான் அவளுக்கு ரஞ்சிதத்தைத் தந்ததாக

அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.

எந்த நல்லக் காரியத்திற்கும் அம்மனிடம் தான் ஓடுவாள். எல்லா முடிவும்

அம்மன் முன்னால் பூ போட்டுப் பார்த்துதான் முடிவுச் செய்வாள்.

ஒரு வெள்ளைப் பூவையும் சிவந்தி, கேந்தி, பூவரசம் என்று எதாவது கலர் பூவையும்

சேர்த்து வைத்து விளக்கு ஏற்ற வரும் பூசாரியை எடுக்கச் சொல்லுவாள்.

அவர் வரும் நேரத்தைத் தவற விட்டால் அங்கே வேப்ப மரத்தடியில் விளையாண்டு

கொண்டிருக்கும் சின்னப் பிள்ளைகளை பூ எடுத்து தரச் சொல்லுவாள்.

அவள் நினைத்த மாதிரி பூ வந்துவிட்டால்.. அன்று அவள் துட்டுப் பையில்

சில்லறைப் புழங்கினால் அடித்தது யோகம் அந்தப் பிள்ளைகளுக்கு,

கடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட பைசாக் கொடுப்பாள்.,

ரஞ்சிதத்தை இந்த உறவில்லாத பையனுக்கு கொடுக்க ரொம்பவும் தயங்கினாள்.

எல்லோரும் சொன்னார்கள். சொந்தத்தில் கொடுத்தால் தானே நாளை உன்னை

அக்கறையாகக் கவனித்துக் கொள்வான் என்று. அவர்கள் சொல்வதும் சரியாகப்பட்டது.

ஆனால் இந்தப் பையனுக்கு நல்ல வேலை என்று வடக்குத் தெரு வாத்தியாரப்பா

சொன்னதும் யோசிக்க வைத்தது.

பூ கட்டிப் போட்டுப் பார்த்தாள். அம்மன் ‘சரி ‘ நு உத்தரவு கொடுத்தவுடன்

துணிந்து திருமணம் செய்து கொடுத்தாள்..

அவள் வளர்ப்பில் ரஞ்சிதத்திற்கும் ஊர் அம்மனின் மேல் எப்போதும் தனியானப் பக்தி

உண்டு, பரீட்சைக்கு போகும்போது அவள் படிக்காத கேள்வி வரக்கூடாது

என்று அம்மனிடம் வேண்டிக்கொள்வாள். வரவில்லை என்றால் ‘அம்மனே.

எல்லாம் உன் அருள்.. ‘ என்று மனசில் உருகிப்போவாள்.

எப்போதாவது அவள் படிக்காதது வந்துவிட்டால் அம்மனைப் பற்றி அவளுக்கு

வருத்தப் படவே தோன்றியதில்லை.

ரஞ்சிதம் கை காலைக் கழுவிவிட்டு புடவையை சரி செய்து கொண்டாள்.

தலை முடி சரியாக வராமல் சிக்குப் பிடிக்கத் துவங்கிவிட்டது.

அப்படியே எடுத்து ஒரு கொண்டையாக போட்டுக் கொண்டாள்.

நேராக அம்மன் கோவிலுக்குப் போனாள்.

அம்மனிடம் போகவேண்டும் என்றுதான் தோன்றியதே தவிர அதற்கு மேல்

அம்மனிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. எல்லாம் அறிந்தவள்தானே

நானும் என் சுயநலமும் என்ன வேண்டி அவள் முன்னால் வந்திருக்கின்றோம்

என்பதை அவளுக்குச் சொன்னால் தான் புரியுமா.. என்ன ?

அவள் மெளனமாக கோவில் பண்டாரம் பூசை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவுக்கு உடல் நலமில்லாமல் ஆகும்போதெல்லாம் எத்தனைத்தடவை

இதே அம்மனிடம் ஓடிவந்து ‘சாமி என் அம்மாவைக் காப்பாத்து ‘ என்று கண்ணீர்

விட்டிருக்கின்றாள்.

திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இப்படித்தான் அம்மா நெல் காய வைத்துவிட்டு

ஏணியிலிருந்து இறங்கும்போது கீழே விழுந்துவிட்டாள். டிரெயின் பிடித்துவந்து

மறுநாள் ஊரிலிறங்கி அம்மாவைப் பார்க்கும்வரை எத்தனை வேண்டுதல்கள்..

இதுவரை அவள் அம்மாவுக்காக வேண்டியதிலிருந்து இன்றைய வேண்டுதல்

எவ்வளவு வித்தியாசமானது.. அதனால் தான் அவள் வார்த்தைகள் வராமல்

ஊமையைப் போல .. மனசில் நினைப்பது சொல்லாகப் பிறக்கும் முன்பே

அவள் மெளனத்தில் கருக்கலைப்பு செய்து கொண்டு .. வாழ்க்கையின்

யதார்த்தப் படுக்கையில் மனக் கண்மூடி நின்றாள்.

கோனார் சொன்ன வெள்ளிக்கிழமை அமாவாசை வந்துவிட்டுப் போய்விட்டது.

ரஞ்சிதத்தின் கணவன் பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டான்.

‘ரஞ்சிதம்.. மூத்தவனுக்கு இது பத்தாம் கிளாஸ்.. இன்னும் பத்து நாளையிலே

பிரி லியம் டெஸ்ட்.. ‘

அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவள் கணவன் சொல்வதிலும்

நியாயம் இருப்பதாகவே பட்டது.

கோனாருக்கு நம்பவே முடியவில்லை.

எப்படி தொண்டைக்குழியில் மட்டும் அவள் உயிர் துடித்துக் கொண்டிருக்கின்றது

என்று யோசித்துக் கொண்டிருந்தார்.வாத்தியாரப்பா வந்து பார்த்தார்.

‘ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சுக்கிட்டு இப்படி பிள்ளையைக் காக்கப்

போடுதே தாயி..ரஞ்சிதம் இன்னிக்கு சாயந்திரம் அம்மன் கோவில்

பண்டாரத்திட்டே போயி திருநீறு வாங்கி நீ கொடுக்கிற குளுகோஸ் தண்ணியிலே

கரைச்சுக் கொடு.. ஆங்ங்..அப்படியே மறக்காம நம்ம நாத்தங்காலுக்குப் போயி

மண் எடுத்து கிணத்து தண்ணி.. கீழே கொஞ்சமா கிடக்கு.. அதையும் நம்ம

கோனாரு கிட்டச் சொல்லி எடுத்து தரச்சொல்லு.. கிணத்து தண்ணிலே

அவ நாத்தங்காலு மண்ணைப்போட்டு கலக்கி வாயிலே ஊத்து தாயி..

உங்க அம்ம எப்பவும் துட்டுப் பையிலே துட்டு இல்லாம இருக்கவே மாட்டா..

அவ துட்டுப் பையிலே கொஞ்சம் பைசாவைப் போட்டு அவக் கிட்டே

சொல்லு தாயி.. ஏம்மா, உன் துட்டுப் பையிலே பைசா இருக்குனு.. ‘

அவர் சொன்ன எல்லாவற்றுக்கும் ரஞ்சிதம் தலை அசைத்தாள்.

அவர் போனவுடம் வாத்தியாரப்பாவின் மனைவி வந்தாள்.

‘ஏ ரஞ்சிதம்.. இங்க பாரு.. இப்படி கயித்துக் கட்டிலிலே மெத்தையிலே

போட்டா அவ இழுத்துக் கிட்டு கிடந்துதான் அவஸ்தைப் படுவா.. ஆமா சொல்லிப்

புட்டேன். அவளை எடுத்து நடு வீட்டிலே தரையிலே கிடத்து தாயி.. அவ

கட்டின வீட்டிலே அவ நல்ல உருண்டு பிரளட்டும்.. ‘

சொன்னது மட்டுமல்ல… யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல்

அவளே எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

அவள் போகும்போது ரஞ்சிதத்தை தனியாகக் கூப்பிட்டு பேசினாள்.

ரஞ்சிதம் கண்களில் கண்ணீர் வழிந்தது..

‘ஏ ரஞ்சிதம் இப்படி நீ அழுதேனா.. அப்புறம் இருக்க வேண்டியதுதான்..

எத்தனை நாளு தாயி இப்படிக் காத்துக் கிடக்கப்போறே.. ? ‘

அன்று முழுவது ரஞ்சிதத்திற்கு தூக்கமே வரவில்லை…

கூரையில் கோழி கூவியச் சத்தம்.. எழுந்து வந்து அப்படியே கயித்துக் கட்டிலில்

அம்மாவைத் தூக்கிப் படுக்க வைத்தாள்..நைந்துப்போன பழந்துணி மாதிரி

அவள் இவள் கைகளில்..

அவள் தலையில் குளிரக் குளிர நல்லெண்ணெய் வைத்தாள்.

அப்படியே கட்டிலை நகற்றி வைத்துக்கொண்டு ராத்திரிப் பிடித்து வைத்திருந்த

சிமிண்ட் தொட்டி தண்ணியைக் குடம் குடமாக அவள் தலையில் கொட்டினாள்.

நல்ல அம்மாவின் உடம்பை தண்ணீர்விட்டுக் கழுவினாள்.

அம்மாவின் உடலைப் பார்க்கும்போது தன் உடலைத் தானே பார்ப்பது போல்

பிரமை. அவள் கைகள் நடுங்கியது. கால்களைத் துடைப்பக்கத்தை..மார்பை

நடுங்கியத் தன் கைகளால் துடைத்துவிட்டாள்.. முகத்தை அழுத்தி துடைக்கும்போது

அம்மா கண்திறந்து இவளைப் பார்த்தது போலிருந்தது.

‘அம்மா…அம்மா ‘ அவள் குரல் உடைந்து அந்த இருட்டில் அவளுக்கே

அந்நியமாகக் கேட்டது.

அம்மாவை கட்டிலுடன் நகர்த்திக் கொண்டுவந்து நடுவீட்டில் தரையில் கிழிந்தப்

பாயில் கிடத்தியப்போது அம்மா இவளுடைய புடவையின் முந்தானையைப்

பிடித்திருப்பது தெரிந்தது, எப்போது என் புடவையின் முந்தானையைப்

பிடித்தாள்.. அவள் .. அவள் கைகளை எடுக்க முடியாமல் அப்படியே

உட்கார்ந்திருந்தாள்..

அம்மாவும் அவளுமாய். அவள் சேலையில் முந்தானி விரிப்பில் படுத்திருந்த இடம்..

அவள் சின்னவளாக இருக்கும்போதே இறந்துப்போன அப்பாவைப் பற்றி

அவரின் வீர பிரதாபங்களைப் பற்றி அவள் கதை கதையாகச் சொன்னதற்குச் சாட்சியாக

நிற்கும் நடுவீட்டின் சுவர்கள் ..

அவர் வண்டி அடிச்சிட்டு வந்தார்னா ஊருக்குள்ளே நுழையும் போதே எனக்குத்

தெரிஞ்சிடும்.. அவரு கையாலே காளை மாடுக ரண்டும் அப்படி ஒரு குதியாட்டம்

போட்டுக்கிட்டு ‘ஜல் ஜல் ‘னு வரும்..

காலையில் குளித்தவுடன் அப்படியே செவ்விள நீரை (தேங்காய்) உடைத்து

தண்ணீரைக் கொடுத்தாள். குளுகோஸ் தண்ணீருக்கெல்லாம் கைகளால் தட்டிவிடும்

அம்மா மடக் மடக்கென செவ்விளநீரைக் குடிப்பதைப் பார்த்து ஓவென அழ

வேண்டும் போலிருந்தது. அழுகையை அடக்கிக் கொண்டாள்..

இரண்டு நாட்கள்… இது தொடர்ந்தது…

மூன்றாவது நாள்… மூவடையாளின் மூச்சு அடங்கியது…

‘அம்மாஆஆஆஆ

என்னப் பெத்த அம்மாஆஆஆஆ என்னை விட்டுட்டுப் போயிட்டியே

அம்மாஆஆஆஆ ‘ ரஞ்சிதத்தின் அடிமனசிலிருந்து கதறலுடன் வெளிப்பட்ட

அழுகையின் குரல் அம்மன் கோவிலில் இருந்த மூன்று யுகம் கொண்டாள்

செவிகளிலும் விழுந்தது..

….>>> அன்புடன்,

புதியமாதவி,

மும்பை 400 042

—-

puthiyamaadhavi@hotmail.com

புதிய மாதவி கதைகள்

  • வரங்கள் வீணாவதில்லை
  • கூட்டணி
  • பாசுவின் தவம்
  • மேறிக்ஸ் டே
  • தீபாவளிப் பரிசு

    Series Navigation

  • புதியமாதவி, மும்பை

    புதியமாதவி, மும்பை