எனது ஊர்

This entry is part [part not set] of 11 in the series 20001029_Issue

சித்திரலேகா

‘எனது ஊர் கீழாம்பூர். இது நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது. ஊரின் வடக்கேஆழ்வார்குறிச்சியும், தெற்கே விக்கிரமசிங்கபுரமும்(உண்மையில் கோவங்குளம்), கிழக்கே பாப்பாங்குளமும், மேற்கே கருத்தப்பிள்ளையூரும் அமைந்துள்ளன. கடனா நதி என்னும் வற்றாத ஜீவநதி காரணமாக எங்கள் ஊர் பச்சை பசேல் என்ற அழகான கிராமமாக விளங்குகிறது ‘, இவை இரண்டாம் வகுப்பில் டாச்சர் சொல்லித்தர, கட்டுரை என்று எழுதியது.

கீழாம்பூர் எல்லோராலும் ஆம்பூர் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலோர் ஆய்ம்பூர் என்று ஒருமாதிரியாகக் கூறுவார்கள். பண்டைக்காலப் பெயர் ஸ்னேகபுரி யாம்.

வறறாத ஜீவநதியில் கோடையில், தலை கீழாக நின்றால் தலை நனையும் அளவு தண்ணீர் ஓடும். இருந்தாலும் அங்கு ஒரு தண்ணீர் தொட்டி கட்டி, வடக்கேஆழ்வார்குறிச்சி தொடங்கி தென்காசி வரை வீட்டுக்கனெக்ஷன் உண்டு. எங்கள் ஊருக்கு இனிமேல்தான் வரவேண்டும். தெரு குழாயில்தான் குடிதண்ணீர் பிடித்து வர வேண்டும்.

சிறுவயதில் குழாய் தண்ணீர் பிடிப்பதும், குழாய் சண்டையை வேடிக்கை பார்பதும் பொழுதுபோக்குகள். மற்றபடி ஆற்றிலோ பெரியவாய்க்காலிலோ குளித்தல்(பெரிய வாய்க்காலில் நிறைய தண்ணீர் பாம்பு உண்டு), சிலோன் ரேடியோ, வம்பு பேச்சு, ஸ்கூல், வெள்ளியும், செவ்வாயும் செல்லும் வடக்குவாசல் செல்வி என்னும் ராஜமாதங்கி அம்மன் கோவில் முதலியவை.

கோவில் என்றால், வெற்றிலை பாக்குக் கடை, பூக் கடை, வளயல் கடை, பலகாரக் கடை சூழ்ந்த கோவில் அல்ல. பெரிய வாய்க்காலுக்கு அருகே, வயக்காட்டு நடுவில் அமைந்த கோயில். மேற்கே ஊருக்கு பெருஞ்சுவர் போல மேகம் கவிந்த மேற்கு தொடர்ச்சி மலை. மலை தொடங்கி கோவில் வரை பச்சைக்கம்பளம் விரித்திருக்கும். பெரிய வாய்க்காலில் இருந்து அதிகப்படி தண்ணீர் ஆற்றுக்குச் செல்ல ஒரு அருவியும் ஓடையும் சலசலக்கும். அற்புதமான ஒரு scenic beauty. அதுவும் சாயங்காலம் சூரியன் அஸ்தமனம் சமயம் கோவிலுக்குச் செல்வது ஒரு அருமையான விஷயம். இந்த கோவிலுக்கு அழ்வார்குறிச்சிக்காரர்களும் வருவார்களோ என்னவோ, சிவன் கோவில் பெருமாள் கோவிலை விட கூட்டம் அதிகம். கோவிலும் நாளுக்கு நாள் improve ஆகிக்கொண்டு இருக்கிறது. கோவில் கொடை சமயம், ஜெனெரேட்டர் வைத்து வில்லுப்பாட்டு, கரகாட்டம் போன்ற கலை நிகழ்சிகள் நடக்கும். இனி யாரேனும் இந்த கோவிலின் website உருவாக்கக்கூடும். இந்த கோவில் தவிர சித்திரை அல்லது வைக்காசி மாதம் நடக்கும் வஸந்த மண்டகப்படி ஊருக்கு கூட்டத்தை அழைத்து வரும்.

வஸந்த மண்டகப்படி என்பது ஊருக்கு வடமேற்கே சிவசைலம் ஆலயத்தில் இருக்கும் சிவசைலபதியும், பரமகல்யாணி அம்மனும் ஆம்பூருக்கு வருகை தரும் விழா. சிவசைலம் கோவில் கடனாநதிக்ககு அருகில், மலைக்கு ரொம்பவும் பக்கத்தில் அமைந்த ஒரு அற்புதமான இடம். பரமகல்யாணி தெய்வம் அவதரித்தது ஆம்பூர் வடக்கு தெரு கிண்ற்றில். இப்போதும் தெரு நடுவில் கிணறு உண்டு. உப்புத்தண்ணீரானாலும் கோடையில் தண்ணீர் இரைக்க ஒரு கூட்டம் உண்டு. கூட்டம் என்றால் நான்கைந்து பேர்தான். பரமகல்யாணி, சிவசைலபதி காரணமாகவும், சங்கரன் கோவில் காரணமாகவும் எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒரு கல்யாணியும், சைலப்பன் அல்லது சிவசைலமும், சங்கரனும், கோமதியும் உண்டு. ஆண்களுக்குக்கூட கல்யாணி என்ற பெயர் வைப்பார்கள். இப்பேர்பட்ட பரமகல்யாணி- சிவசைலபதிக்கு பங்குனி கடைசி முதல் சித்திரை ஒண்ணாந்தேதி வரை ஆழ்வார்குறிச்சியில் திருவிழா நடக்கும். தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலையில் ஸ்வாமியும் அம்மனும் சப்தாவர்ணப்பல்லக்கில் ஏறி சிவசைலம் சென்று விடுவார்கள். அதற்கு முன் தினம் தேரோட்டம் நடந்த பிறகு, ஸ்வாமி ஆம்பூர் வருவதற்கு நாள் குறிப்பார்கள். ஸ்வாமி வருவது அனேகமாக வெள்ளிக் கிழமையும், திரும்ப செல்வது ஞாயிற்று கிழமையாகவும் இருக்கும்.

இந்த வஸந்த மண்டகப்படியை ஒட்டி ஊரில் புதிய முகங்கள் தென்படும். விருந்தினர் வருகை தந்திருப்பார்கள்.ஸ்வாமியோடும் அம்மனோடும் பிரியாவிடை என்று இன்னொரு சின்ன சாமியும் வரும். சைலப்பருடைய ஆசை நாயகியாம். ஸ்வாமி வந்த அன்று சாயரட்சை அபிஷேகமும் பூஜையும் விமர்சையாக வடக்குத்தெரு பெருமாள் கோவில் முன்பு நடைபெரும். பளபள புத்தாடை அணிந்து செல்லும் கூட்டமும், பலூன் கடையும், பலகாரக்கடையும், கொடை ராட்டினமும், லவுட்ஸ்பீக்கரும், ஆங்காங்கு அலையும் பிளசர் கார்களும், ரிஷபவாகனம் வரை நடை பெரும் கலை நிகழ்சியோ, நாதஸ்வரமோ எல்லாம் மறு நாள் பூம்பல்லாக்கு முடிந்து, ஞாயிறு காலை ஸ்வாமி வடக்குத்தெரு எல்லையை கடப்பதற்குள் காணாமல் போய் விடும். ஊரில் சாயங்காலத்துக்குள் விழா நடந்த எந்த விதமான அறிகுறியும் தென்படாது. ‘நரி ஒடும் ‘ களை வந்துவிடும்.

குழாய்க்கு தண்ணீர் பிடிக்கவரும் யமுனா அக்கா அடிக்கடி கூறுவார்கள்: ‘எத்தனை வயசு ஆனாலும், இந்த ஊர் பையனை கல்யாணம் செய்யமாட்டேன். பக்கத்துல அம்பாசமுத்திரம் கூட பரவாயில்லை, பெரிய பட்டணக்கரைன்னு இல்லைன்னாலும் ‘. இப்போது யமுனா அக்கா கல்கத்தாவோ, ஹைத்ராபாத்தோ கல்யாணம் ஆகி போய் விட்டார்கள். யமுனா அக்கா என்று இல்லை. பல பேர் ஆம்பூரை அசமஞ்ச ஊர் என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன். அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி வரும் உறவினர் கூட ஆம்பூர் வந்தது இல்லை.

எனக்கு சிறு வயதில் ஆம்பூர் இவ்வளவு ‘போர் ‘ ஆகத்தோன்றியது இல்லை. எங்கள் குடும்பம் அந்த ஊரில் குடியிருந்ததர்க்குக் காரணம், பரம்பரை சொத்தான- அப்பாவின் பாஷையில் ‘ஓட்டை வீடு ‘, அடிக்கடி ட்ரான்ஸ்பர் ஆகும் அப்பாவின் உத்யோகம், நடந்துசெல்லும் தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் ஸ்கூல், காலேஜ், இதெல்லாம். எதிர் வீட்டில் நெருங்கிய தோழி. சமவயது தோழியருடன் ஒன்றாக பள்ளி சென்று, விளையாடி மகிழ்சியாக இருந்த நாட்கள். இரண்டுவீடு தள்ளி சுப்பக்கா வீடு. சுப்பக்காவுக்கு எல்லா சினிமா பாட்டும் பாடத்தெரியும். சுப்பக்காவின் அப்பா டி.எம். செளந்திர ராஜன் மாதிரிப் பாடுவார். தம்பி எஸ்.பி.பி எக்ஸ்பெர்ட். இனிமையாக சீட்டியும் அடிக்கவரும். சுப்பக்காவின் தங்கையும் நானும் இரவில் பேய் மாதிரி சிரித்து, எதிர்வீட்டுப் பாட்டியை எரிச்சலூட்டுவோம்.

அப்பொழுதெல்லாம் இளைஞர் விழா அடிக்கடி நடக்கும். நான் கூட அண்ணன் எழுதித் தந்ததை மனப்பாடம் செய்து பாரதியார் பற்றி பேசி பரிசு வாங்கியிருக்கிறேன். ஓரளவுக்கு கல கலப்பாக இருந்த ஊர், டாவி வந்த பிறகு, திருவிளையாடலில் ‘ பாட்டும் நானே ‘ பாடலில் சிவனின் அசைவு நின்ற ஒரு கணம் அகிலமே நின்றது போல் ஆகி விட்டது.

ஆம்பூரில் இருந்து கல்லிடைக்குறிச்சியில் செட்டில் ஆன எனது சிறுவயது தோழி ஆம்பூரை மிஸ் பண்ணுவதாகக் கூறும்போது எனக்கு அவள் பொய் சொல்லுவதாகத் தோன்றும். பகல் வேளைகளில் ஆம்பூரின் அமைதி காதை கிழிப்பதாகத் தோன்றும். எங்கோ கோவன்குளத்தில் ஒலிக்கும் லவுட் ஸ்பீக்கர் பாட்டு வடக்குத்தெரு வரை மென்மையாகக் கேட்கும். ஆழ்வார்குறிச்சி, அம்பாசமுத்திரத்தில் உள்ள தோழிகள் ஆம்பூர் என்றால் பவர்கட் தான் ஞாபகம் வருவதாகக் கூறுவார்கள். மின் உற்பத்தி நடக்கும் பாபநாசம் ரொம்பப் பக்கம் ஆனாலும், ஆம்பூரில் அப்படி ஒரு கரண்ட் கட். தேர்வு சமயம் பகலிலேயே படித்து முடித்து விடுவேன். தேர்வு பற்றியோ, மதிப்பெண் பற்றியோ அதிகம் அலட்டியது கிடயாது.

இப்பொழுது எல்லார் வீட்டிலும் டெலிபோன் வந்து விட்டது. வீட்டுக்கு ஒருவர் அமெரிக்காவிலோ அரபு நாட்டிலோ இருக்கிறார்கள். போனமுறை அம்மா, தெருவிளக்கில் சோடியம் வேப்பர் லாம்ப் போட்டுக்கொண்டு இருப்பதாக போனில் சொன்னார்கள். அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வர நேரமானால், ஆட்டோ பிடித்து வருகிறார்களாம். முன்பு எனக்கு ஹாஸ்டலில் இருந்து இந்த ஊர் செல்வதே அம்மா அப்பா இருப்பதால்தான் என்று தோன்றும். அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பது ரொம்பவும் ஆயாசமாக இருக்கும். அம்மா அப்பா அட்லீஸ்ட் இந்த அம்பாசமுத்திரமாவது வந்து இருக்கக்கூடாதா என்று தோன்றும். ஆனால் தம்பி ஆர்வத்தோடு நண்பர்களை ஊருக்கு அழைத்துச் செல்கிறான். குத்தாலம், அகஸ்தியர் அருவி, பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சிவசைலம், கன்யாகுமாரி என்று அழைத்துச் செல்கிறான். அக்காவின் பத்து வயது மகன் ஆம்பூர் போவது என்றால் சந்தோஷமாகச் செல்கிறான். குழாயில் இருந்து சுவாரஸ்யமாகத் தண்ணீர் பிடித்து வருகிறான். தவறாது தம்பியும், அக்காவின் பத்து வயது மகனும் வஸந்த மண்டகப்படிக்கு ஊர் செல்கிறார்கள்.

சாம்பார் பொடி, அப்பளப்பொடி திரிக்க கல்லிடைகுறிச்சி, சினிமா பார்க்க அம்பாசமுத்திரம், பலசரக்கு வாங்க பொட்டல்புத்தூர், ஜவுளி எடுக்க திருநெல்வேலி, சென்னைக்கு வண்டி பிடிக்க தென்காசி என்று ஊர் ஊராகச் செல்ல வேண்டிய நிலைமை. சும்மாவானும் ஒரு கடைத்தெருன்னு போய் வந்தோம்னு இல்லாம என்ன ஊர் இது என்று எனக்குத் தோன்றும்.

மதுரை, சென்னை, மும்பை காரர்கள் ஊர் பற்றி கேட்கும் கேள்விகள் வேடிக்கையாக இருக்கும்.

‘எந்த ஸ்கூல் ல படிச்ச ? ‘

‘ஸ்ரீ பரமகல்யாணி ஸ்கூல் ‘

‘ என்னது ? பஞ்சகல்யாணி ஸ்கூல் லா ? ஹா ஹா ஹா ‘

‘பஸ்லாம் உண்டா ? ‘

‘ இல்லை ஆக்ஸ் அண்ட் ரோப் தான் ‘

அஸ்ட்ரானமி படிக்கும் தோழி இதை உண்மை என்று நம்பினாள். செவ்வாய் கிரகம் பற்றி கவலைப் படுபவளுக்கு தமிழ் நாட்டு கிராமத்தை பற்றிய விழிப்புணர்வு தேவையில்லையே.

‘என்னது லெட்டரா ? இங்கிலீஷ்ல இருக்கு ? உங்க அப்பாவுக்கு இங்கிலீஷ் கூடத்தெரியுமா ? ‘

‘ஒன்ன விட எங்கப்பாவோட வொக்காப்லரி க்ரேட்தான் ‘

‘உங்க ஊர்லலாம் டாவி உண்டா ? ‘

‘உண்டே ‘

‘தூர்தர்ஷன் மட்டும் வருமாக்கும் ? ‘

‘தனியார், கேபிள் எல்லாம் உண்டு ‘

‘எல்.பி.ஜி. சிலிண்டர் ? ‘

‘உண்டு ‘

‘டாய்லெட் ? ‘

‘எங்க வீட்டுல ரெண்டு ப்ளஷ் அவுட் உண்டு ‘.

கேள்விகள் எரிச்சலூட்டும். ஆனால் அவ்வளவு காயப்ப்டுத்தியது இல்லை. ஆனால், மும்பையில் இன்னமும் 386ல் wordstar ல் டைப் அடிக்கும் தீபக்,

‘உங்க ஊர்ல ரோட்டு ஓரமா போய் பழகி இருப்ப. இங்க வெஸ்டெர்ண் டைப் உனக்கு கஷ்டமா இருக்கும் ‘ என்று தீர்மானமாகவும், தோரணையாகவும் கூறிய போது மனது மிகவும் புண்பட்டுப் போனது.

Series Navigation