எனதும் அவளதுமான மழைபற்றிய சேகரிப்புகள்

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

கோ.முனியாண்டி, மலேசியா


எனை வாசித்தபடியே
எம் மழைதனில் நீங்களும்
உமை யாசித்தபடியே
நின் மழையதனில் யானும்
அழுகையிழைகளாய்
பிரிந்தபடியும் கலைந்தபடியும்
புவியீர்ப்பு விசையளுத்த
இணைந்தபடியும்
மிதந்து கொண்டிருக்கிறோம்.

வர்ணசொரூப ஜோதிபொழியும்
ஒளிக்கற்றைகளினின்று
வெடிக்கும் கிரகணத்தின்
அரவணைப்பதனில் இருகியிருவரும்.

மழையதுபற்றியும்
அதனுள்ளிரிந்து வழிகிற
மதுரகீத லயங்கள் பற்றியும்
அதன் நிகரற்ற ரம்மியம் பற்றியும்
ஸ்னேகித்துப் பேச ஆரம்பித்த தருணங்கள்
உருகியுருகிக் கரைந்தழுதபடி
எவ்விதமான மாறுதல்களுமற்று
மணல்வெளி சமுத்திர அணைப்பு மாதிரி
அலையாடிக்கொண்டு.

தேங்கிய நிலையதனில் தூங்கி
இன்னமும் சோம்பல்முறித்தெழாத
இலைநடுநீர் துளியில் அப்பியிருக்கும்
நீலவண்ண கலவையிலான பதிவுகளுடன்
முன் எப்போதோ
பெய்து சென்ற மழையின்
எச்சபற்றிகூட பேசியிருப்போம்.

மயிற்பீலிகொண்டு நீவும் விதமாய்
எனக்குப்பிடித்த உங்கள் மழையின்
சோகங்களைச் செதுக்கி
வைத்திருக்கிறீர்கள்.

மழையென்றால்
மீன்கொடித்தேரில் மன்மத
ராஜன் ஊர்வலம் மாதிரி
பவனிக்கவேண்டும் என்பீர்கள்
மழையென்றால்
இனிப்பையும் துகர்ப்பையும்
நாவினில் படியவிட வேண்டும்
என்பீர்கள்

மழையென்றால்
கனவுகண்ட காதலாகி
கதை கண்ணீராகி
நிலாவீசும் வான முழுவதும்
மழை சூழவேண்டுமென்பீர்கள்.
நாமிருவருக்கும் பிடித்த மழையென்றால்
எதிர்நின்ற நேரத்தின் சொப்பனங்களைக்
கூண்டினுள் பட்சியாகித்
தூங்கியபடித் தொலைந்துவிடவேணும்
ஏகாந்தமொன்றுக்காகவே காத்திருக்கும்
சோகப்பாடல்கள் மாதிரி என்பீர்கள்

எண்திசையெங்கும் திரண்டேகி
வந்தெனை நினைத்ததொரு
மழைநாளின் ஈரத்தில்
நீங்களும் யானும் அறிமுகமாகிறோம்.
மண்ணை ஏமாற்றும்
பொய்வான் மானாய் மருள்கிறோம்.
கடலதனில் உதிர்கிறோம்
காமுழுதும் படர்கிறோம்
இருட் பகலெங்கும்
சுக்கிலப்பட்சமாய் வளர்கிறோம்.
இருந்தும்
யுன்வீட்டு மேல்மாடியில்

செம்புலப்பெயல் மையாடியிருந்த
கனகாம்பரங்களை நனைத்தபடி
காற்றுடன் கலந்து சிதறுமந்தச்
சூரியனின் விழுந்தநேரத்துச்
சுடர்மழைத் தாரைகளில்
உடல் நனைத்தே நித்தம்
எனை நினைத்தழுவதாக
வெழுதித்தெரிவித்திருப்பது
படித்து
இங்கேயும்கூட தேஹ அதிர்வு
உணரப்பட்டது.

நாமிருவரினுடைய மழையும்
அதன் ஸ்வரூபத்தை மனமேவ
வைத்தெங்கோ சென்றுவிட்டது.

***
kabirani@tm.net

Series Navigation

கோ.முனியாண்டி - மலேசியா

கோ.முனியாண்டி - மலேசியா