எந்தையும் தாயும்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

ஜெயந்தி சங்கர்


மாலாவைக் கடக்கும்போதெல்லாம், அன்று நான் உணர்ந்தது விநோதமானது. சகிக்க முடியாத ஒரு நாற்றம். யாராலும் அலட்சியப்

படுத்தி விடமுடியாத படிக்கு. சட்டென்று ஆளைத் துரத்தும் அளவிற்கு. மழையின், மண்ணின் இதமான மணத்தை அடக்கி வீழ்த்திய

நாற்றம். மாலாவின் இருக்கையினருகே இருந்த ஜன்னலின் வழியாக ஒரு முறை எட்டிப் பார்த்தேன். சந்தேகிக்கக் கூடியதாய் அங்கே

ஒன்றுமேயில்லை. பெய்து ஓய்ந்திருந்த மழையின் சுவடுகளாய் இன்னமும் சொட்டுச் சொட்டாக மழைநீர் முதல் மாடியிலிருந்து

சொட்டிக் கொண்டிருந்தது. அறையிலும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லையே என்று யோசித்த படி சுற்று முற்றும் பார்த்தேன்.

ஆனால், அந்த நாற்றம் ?

வெவ்வேறு வகுப்பில் பயிலும் மாணவர்கள் தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் இவ்வறையில் கூடுவர். மூன்றாம் வகுப்பிற்கு அன்று தேர்வு நாள்.

மாணவர்கள் அவரவர் தேர்வு விடைத் தாளில் கவனமாயிருக்க சோர்ந்து காணப் பட்ட மாலா மட்டும் கவனமின்மையின் பிடியில்

இருந்தாற் போலிருந்தது. அவள் உட்கார்ந்திருந்தது வகுப்பறையின் கடைசி வரிசையின் மூலை இருக்கை. அவளை நான் கவனிக்கும்

போது அவள் தலையைக் கவிழ்த்து விடைத் தாளில் பார்வையைச் செலுத்தினாள். ஆனால், அது ஒப்புக்காக என்று எனக்குத்

தோன்றியது. என் கவனம் அவளைவிட்டு அகன்றதும் அவளின் கவனம் மற்றவற்றில் படிந்தது. அல்லது, இலக்கின்றி அங்குமிங்கும்

அவளது பார்வை பரபரவென்று அலைந்தது. வகுப்பைச் சுற்றி வந்த ஒவ்வொரு முறையும் இதை நான் கவனித்தேன்.

மூன்றாம் முறை அவளைக் கடந்த பிறகு சட்டென்று திரும்பினால், மாலா வேறெங்கோ பார்த்துக் கொண்டு, அதை நான் பார்த்து

விட்டதை அறிந்ததும் கவனத்தைக் குவிக்க முயன்று, பிறகு முடியாமல் போகவே நீரிலிருந்து தூக்கி நிலத்தில் போட்ட மீனாகத்

தவித்தாள். வழக்கத்திற்கு அதிகமாகவே அவளின் நீல ஸ்கர்ட்டும் வெள்ளை ப்ளெளவுஸும் அழுக்கேறியிருந்தது என் கவனத்தை

ஈர்த்தது. காலுறையும் சப்பாத்தும் வெள்ளையென்று கற்பூரமடித்து சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.

நான்காவது முறையாக மாலாவைக் கடக்கும் போது மீண்டும் அதே நாற்றம் என் மூக்கில் மோதியது. அப்போது தான் அழுகிய

முட்டையை நினைவுபடுத் தும், பலநாள் அழுக்குடன் சேர்ந்த வியர்வையின் அந்நாற்றம் மாலாவின் மீதிருந்துதான் கிளம்பியது என்று

என் நுகர்புலன் அடித்துச் சொன்னது. ஆனால், ஏன் குளிப்பதில்லையா அவள் ? என்ன தான் ஆயிற்று ? என்னால் காரணத்தை

அனுமானிக்கவே முடியவில்லை.

000

கடந்தசில நாட்களாகவே மாலா பாடங்களில் போதிய கவனம் செலுத்துவதில்லை. சராசரியான மாணவியான அவள் திடாரென்று

காட்டிய பின்தங்கல் என்னுள் சில அக்கறைகளை எழுப்பிய படியே தானிருந்தது. எது கேட்டாலும் தலையாட்டலில் பதில்.

அதிகபட்சம், ‘ம் ‘ என்றோ ‘ஹூஹும் ‘ என்றோ ஒற்றைச் சொல்லில் முணுமுணுப்பாய். அகன்று விரிந்த விழிகளில் ஒரு நிரந்தர

சோகம். குடும்பத்தில் ஏதும் பிரச்சனையா ? அவளைப்பற்றி அவளுடைய வகுப்பாசிரியை எஸ்தர் தியோவிடம் பேச வேண்டும் என்று

கிட்டத்தட்ட தினமும் நினைத்துக் கொண்டிருந்த போதிலும் ஏதேதோ வேலைகளில் மூழ்கிவிடுவதால், தட்டிக் கொண்டே போனது.

மணியடித்ததும், எழுதுவதை நிறுத்திவிட்டு, அறையை விட்டு வெளியேறி அறை வாசலில் வைத்திருக்கும் தங்கள் புத்தகப்பைகளை

எடுத்துக் கொண்டு அவரவர் வகுப்புகளுக்குப் போகச் சொன்னேன். அதுவரை அமைதியாயிருந்த அறை திடாரென்று குசுகுசுவென்று

விடைகளைச் சரிபார்க்கும் உரையாடல்கள், நாற்காலி மேசைகள் இழுபடும் நகர்த்தும் ஓசையு மாய் நிறைந்தது. ஓட்டமும்

நடையுமாக அவரவர் வகுப்பறைகளை நோக்கி விரைந்தனர். அத்தனை நெருக்கடியிலும் கவனமாக மாலாவைத் தவிர்க்கவென்று

விலகி பயந்தோடினார்கள். வெளிப்படையாக முகத்தைச் சுளித்துக் கொண்டு ஒவ்வொருவரும் தொற்று நோயாளியைக் கண்டு

பயப்படுவதைப் போலத் தான் நடந்து கொண்டனர். ஒருவர் செய்தவுடன் உடனே அடுத்தடுத்து மற்ற சிறார்களும் அப்பட்டமாகப்

பின்பற்றினர்.

எல்லா விடைத் தாள்களையும் ஒவ்வொன்றாக சேகரித்து, அடுக்கிக் கட்டி வைத்துக்கொண்டே மாலாவைப் பற்றிதான்

நினைத்துக்கொண்டிருந்தேன். அவள் பையை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து போகும்போது இருகிக்கிடப்பதுபோல

முதல்பார்வையில் தோன்றும் அவளின் முகம் பலவித உணர்ச்சிகளைக் காட்டவே செய்தது. அவமானம், வருத்தம் கொஞ்சம் அடக்கிய

அழுகை, சோர்வு என்று எல்லாவற்றிலும் ஒரு இழையைச் சேர்த்துப் பின்னினாற்போல்.

அன்றைக்கு வேறு வகுப்பு இல்லாததால், வீட்டிற்குப் போய் விடலாமா என்று யோசித்த படியே நடந்தேன். இரவெல்லாம்

இருமிக்களைத்த தினேஷ் மிகவும் சோர்வுடன் காலையில் பள்ளிக்குப் போயிருந்தான். வீட்டிற்குப் போகும் வழியில் வெற்றிலை, துளசி

வாங்கிக் கொண்டு போனால், கஷாயம் வைத்துக் கொடுக்கலாம் என்ற யோசனை உதித்தது.

மாலாவின் வகுப்பைக் கடந்த போது, வகுப்பாசிரியை எஸ்தர் தியோ கண்ணில் பட்டார். அறையின் மூலையில் தனியே ஒரு

இருக்கையில் மாலா உட்கார்ந்திருப்பது தெரிந்தது. வாசலில் நின்று கொண்டு, ‘எக்ஸ்க்யூஸ் மீ ‘, என்றழைத்ததும் அவர் வெளியில்

வந்தார். மாலாவைப் பற்றி அவரிடம் விசாரித்தேன். வகுப்பில் மற்ற பாடங்களிலும் அவள் பின் தங்குவதாகச் சொன்னவர், கடந்த சில

நாட்களாக அவள் ஒரே நாற்றமாய் நாறுகிறாள் என்றும், மாணவர்கள் அவளைப்பார்த்து ஓடுகிறார்கள், கேலி செய்கிறார்கள் என்று

பலவாறாய் முறையிட்டார். மாலாவை என்னுடன் அனுப்ப முடியுமா என்று கேட்டேன். கூட்டிக் கொண்டு போய் பேசிப்பாருங்கள், நான்

கேட்டு ஓய்ந்து போனேன் என்று சொல்லி மாலாவை என்னோடு அனுப்பினார்.

000

மாலா என்னோடு நடந்தாள். பள்ளிப்பூங்காவிலிருந்த இருக்கைக்கு வந்ந்து உட்கார்ந்தோம். அவளும் அவளுடன் வந்த நாற்றமும் என்

அருகில். குட்டையாய் இரட்டைப் பின்னலும் நடுவகிடும் அவளுடைய காளையான குண்டு முகத்திற்குப் பொருத்தமாகவே இருந்தது.

கிட்டத்தில் உற்றுப்பார்க்கும் போது தான் அவள் முகம் நீர்கண்டு பலநாட்கள் ஆகியிருக்கும் என்று தோன்றியது. தலைமுடி

சீப்பையும், சீருடை சோப்பு நீரையும் சந்தித்து குறைந்தது ஒருவாரமிருக்கும். இப்போதும் இப்படி இருக்க மாட்டாளே, ஏன் ?

‘சொல்லு மாலா, என்ன பிர ச்சன ? ஏன் உன்னால பாடத்துல கவனம் செலுத்த முடியல்ல ? ஆமா, நீ தினமும் குளிக்கிறயா ? ‘, என்று கேட்டுவிட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஹூஹும், முகத்தில் ஒரு சலனமில்லை. இவளுக்குள் இருப்பதை இவள் பேசினால் தான் அறியமுடியும் ? இப்படி வாயைத் திறப்பேனா என்றிருந்தால் ? கொஞ்சம் எரிச்சலும் கோபமும் என்னுள் கிளம்பியது.

என் கைத் தொலைபேசி சிணுங்கியது. தினேஷ்தான்! ‘அம்மா, இன்னிக்கி நா வர லேட்டாகும். அது சொல்லத் தான் போன்

போட்டேன் ‘, என்றான். ‘சாப்பிட்டயா தினேஷ் ? ‘, என்று நான் கேட்டபடி மாலாவின் பக்கம் எதேச்சையாக திரும்பினேன். அவள்

வாயில் சுரந்த உமிழ்நீரைக்கூட்டி முழுங்கியபடி உட்கார்ந்திருந்தாள். ‘ ஓ, கமான்மா, இந்த வருஷம் நா ‘ஓ ‘ லெவெல் எடுக்கப்

போறேன். சாப்டியான்னு கேட்டுகிட்டு. சாப்பிட்டுவிட்டுத் தான், ப்ரோஜெக்ட் வொர்க் செய்யப்போறேன். ஓகே, பை மா ‘, என்று

அலுப்புடன் ஆரம்பித்து சிரிப்போடு முடித்து துண்டித்து விட்டான் தினேஷ்.

கண்கள் பனிக்க உட்கார்ந்திருந்த மாலைவைப் பார்த்து, ‘சொல்லு மாலா. நீ பேசினாதானே புரியம் எனக்கு, ப்ளீஸ் ‘, என்று நான்

சொல்வதற்காகவே காத்திருந்ததைப் போல கொடகொடவென்று கண்களில் கண்ணீர் வழிய விசும்பினாள். ‘எதுக்கு அழுவுற ? நா இப்ப

ஒன்ன ஏசினேனா ? ‘, என்றதும், ‘டாச்சர், எனக்கு ரொம்பப் பசிக்குது ‘, என்று சொல்லிக் கொண்டே கண்களைத் துடைத்துக்

கொண்டாள். தினேஷச் சாப்பிட்டாயா என்று கேட்டதுமே இவளுக்குப் பசி வந்து விட்டதோ!

முதல் நாள் மதியம் பள்ளியில் ‘பன் ‘ விற்கும் மலாய் தாத்தா கொடுத்த பன் ஒன்றைத் தவிர நான்கு நாட்களாக ஒன்றுமே

சாப்பிடவில்லை என்றாள். அதை நான் துளியும் எதிர்பார்க்கவேயில்லை. வேறு ஏதோ இருக்கிறது என்றும், அவள் சொல்வாள்,

கேட்டுவிட்டு உதவுவோம் என்றும் நினைத்திருந்த எனக்கு என்னவோ போலாகி விட்டது. மற்றவற்றைப் பிறகு கேட்டுத் தெரிந்து

கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு, வாவென்று கூட்டிக் கொண்டு பள்ளி உணவகத்துக்குப் போனேன். பின் தொடர்ந்து

நடந்தாள். அங்கு அவளுக்கு ஒரு பெரிய கிண்ணம் நிறைய சூப் நூடில்ஸ் வாங்கிக் கொடுத்து சாப்பிடச் சொன்னேன். பசியில் அவசர

அவசரமாக வாயில் போட்டுக் கொண்டு சுட்டுக் கொண்டு தவித்தாள். பசியைத் தணிக்க அவள் பட்டபாடு பரிதாபமாக இருந்தது.

அவசரமாக உண்டதில் புரையேறி விட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது. ‘மெதுவா சாப்பிடு ‘, என்று சொன்னதும் இடையிடையே

என் முகத்தைப் பார்த்துக் கொண்டே ஊதிஊதிச் சாப்பிட்டாள். ‘போதுமா ‘, என்றதும் போதுமென்று தலையாட்டினாள். வீட்டிற்குத்

தொலைபேசச் சொன்னேன் மாலாவை. ஆனால், வீட்டில் யாருமில்லை.

000

மீண்டும் இருக்கைக்குத் திரும்பினோம். பேசாமல் இவள் வீட்டிற்கே இவளுடன் போய்ப் பேசினால் என்ன என்று யோசித்தபடியே, ‘ம்,

சரி இப்ப சொல்லு. உங்கம்மா வீட்டுல இருப்பாங்களா இப்போ ? ‘, என்றதும், ‘ டாச்சர், அம்மா இல்ல. எங்கன்னும் தெரியல்ல ‘,

என்றாள். ‘அப்ப, உங்கப்பா சாயங்காலம் இருப்பாரா ? அவரோட நா பேசமுடியமா ? ‘, என்று நான் கேட்டதுமே, ‘ அப்பாவையும்

காணோம். எங்க போயிருக்காருன்னும் தெரியல்ல ‘, என்று படி மாலா மீண்டும் அழக்கிளம்பினாள். விசும்பல்களுக்கிடையேயும்

அழுகை தேயத்தேய, கேவல்களுக் கிடையேயும் சொல்லிக் கொண்டே வந்தாள்.

நான்கு இரவுகளும் ஐந்து பகல்களுமாக பெற்றோர் இருவரையும் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல், தனியாக பூட்டிய வீட்டு வாசலில்,

படுத்து, உறங்கி, விழித்து, பள்ளிக்குப்போய், மீண்டும் அங்கேயே போய் வீட்டைத் தட்டிப் பார்த்துவிட்டு, அங்கேயே உட்கார்ந்து

பாடங்களை எழுதி, உறங்கி, விழித்திருக்கிறாள். அம்மாவும் வரவில்லை அப்பாவும் வரவில்லை. கையில் காசும் இல்லை.

பொதுத்தாழ்வாரத்தில் இருந்த சிறுமியை அண்டை வீட்டார் கூடவா கவனித்து விசாரிக்க மாட்டார்கள் ? வேறுவித ஆபத்துகள் கூட

சிறுமிக்கு ஏற்பட்டிருக்கலாமே என்று என் சிந்தனை அசுர வேகத்தில் நாலா திசையிலும் பாய்ந்தது. பெற்றோர் இருவரும் தினமும்

சண்டையிட்டுக் கொண்டு பலநாட்கள் பேசிக் கொள்ளாமலே இருப்பார்கள் என்றாள். குளிக்காமலேயே இருந்ததால் தான் அவள் மேல்

நாற்றமடித்தது என்றும் சொல்லிமுடித்தாள். உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரையும் தெரியாதா என்று கேட்டதற்கு

திருதிருவென்று சிலகணங்கள் விழித்துவிட்டு இடவலமாகத் தலையை ஆட்டி இல்லையென்றாள்.

எட்டு வயது சிறுமி கவனிப்பாரற்று நாலைந்து நாட்களாக பொதுத் தாழ்வாரத்தில் இரவுபகலாக இருந்திருக்கிறாள் என்பதைக்

கேட்டதும் வயிற்றிலிருந்து வேதனை கசப்பாகக் கிளம்பி தொண்டை வரை வந்து அடைத்தது. கூட்டி முழுங்கிக் கொண்டேன்.

அங்கேயே மாலாவை உட்காரச் சொல்லிவிட்டு, பள்ளிவளாகத்தை விட்டு விடுவிடுவென்று வெளியேறி நடந்தேன். அருகில் இருந்த

அங்காடிக்கடையில் சோப்பு, சீப்பு மற்றும் தலைக்குத் தடவ எண்ணை வாங்கிக் கொண்டு, அங்கேயே அருகிலிருந்து

துணிக்கடையில் மலிவு விலையில் மாலாவுக்கு ஒரு துண்டும், ஒரு உடுப்பு ஒன்றையும் வாங்கிக்கொண்டு வந்தேன்.

பள்ளியிலிருந்து குளியலறையில் மாலாவை முதலில் குளிக்கச் சொன்னேன். முளித்து உடை மாற்றிக் கொண்டவளிடம் தலைக்கு

எண்ணையைத் தடவி சீவிக்கொள்ள்வும் சொன்னேன். அதன்பிறகுதான் மாலா, கொஞ்சம் பார்க்கும் நிலைக்கு வந்திருந்தாள்.

மீண்டுமொரு முறை அவள் வீட்டிற்குத் தொலைபேசச் சொன்ன போது, மாலாவின் அ ம்மா எடுத்தார். வீட்டிலேயே இருக்கச் சொல்லி,

நாங்கள் வருவதையும் மாலாவைச் சொல்லச் சொன்னேன். இதற்குள் பள்ளியும் முடிந்துவிட்டிருந்தது. வகுப்பிலிருந்து பள்ளிப்பையை

எடுத்துக் கொண்டு மாலா வந்ததும் கிளம்பி, அவர்களுடைய வீட்டிற்குப் போனோம்.

000

பத்துப்பன்னிரண்டு அடுக்ககங்களைத் தாண்டி நடந்தோம். எங்களைப் பார்த்ததுமே, மாலாவின் அம்மா, ‘என்னடி ஆச்சு ?ஸ்கூல்ல

ஏதும் பிரச்சனயா ? ‘, என்று கேட்க ஆரம்பித்துவிட்டார். நடந்ததையெல்லாம் சொல்லச் சொல்ல ஆச்சரியத்தில் அப்படியே

உட்கார்ந்துவிட்டார். ‘உங்கப்பா உங்கிட்ட வீட்டு சாவிய கொடுக்கல்ல ? கொடுக்கச் சொன்னேனே ? காசும் கொடுக்கல்லயா ?

நாலுநாளுமா வீட்டுக்கு வராம இருந்தாரு ? ‘, என்று பலவாறாகத் தன் மகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.

அப்போது மாலாவின் அப்பா வீட்டிற்குள் நுழையவும், ‘நாலஞ்சு நாளா எங்க போயிட்டாங்க ? இவ கிட்ட சாவி கொடுக்கச்சொல்லி ‘எஸ் எம் எஸ் ‘ அனுப்பினேனில்ல. எங்க ? அவ வீட்டுக்கா ? ‘, என்று நான் அங்கிருப்பதைச் சட்டென்று மறந்தாற்போல பேசிக்கொண்டே

போனார். ‘நான், ரொம்ப பிஸி, நீயே மாலாவுக்கு சாவி, காசு எல்லாம் குடு, நாலஞ்சு நாளைக்கி நா வீட்டுக்கு வரமாட்டேன்னு நானும் தானே உனக்கு ‘எஸ் எம் எஸ் ‘ அனுப்பினேன் ? ஏன் ? நீ ஊர் மேயலாம்னா நான் மேயக்கூடாத ா ? நீ எங்கடா போயிருந்த,

அதச்சொல்லு ‘, என்று சண்டைக்கான அத்தனை அறிகுறிகளோடும் அவர் பங்குக்கு முனைப்புடன் கேட்டபடி துவங்கினார்.

நான் ஒருத்தி அங்கு நின்றிருப்பதையே இருவரும் மறந்துவிட்டிருந்தனர். மாலாவின் இருப்போ, அவள் அனுபவித்த கஷ்டங்களோ,

அவளுக்கு இருக்கக் கூடிய வேதனைகளோ பற்றித் துளியும் கவலையே படவில்லை இருவரும். யார் எங்கேயிருந்தார், யாருடன்

இருந்தார், எதற்கு இருந்தார் என்று கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டு காரசாரமாக விவாதித்தனர். என் முகத்தையே

பார்த்தபடி நின்றிருந்த மாலாவை நோக்கிக் கையசைத்தேன். செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

எவற்றைப் பற்றியெல்லாம் பேசலாம் என்று வந்திருந்தேனோ அவற்றையெல்லாம் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்வோம்

என்ற நினைப்புடன், அநாகரீகத்தின் உச்சியில் இருந்த அவர்களின் வாய்ச்சண்டையைக் காண முடியந்ததால் விடுவிடுவென்று

நடந்தேன். கைத்தொலைபேசியை எடுத்து, ‘ தினேஷ், உன்னோட சாவி இருக்கா ? ‘, என்றதும், ‘ஏம்மா திடார்னு ? சாவி எங்கிட்ட

இருக்கே. இதோ, வீட்டு கிட்டயே வந்துட்டேன் ‘, என்றான்.

(முற்றும்)

பெண்கள் சந்திப்பு மலர் 2005

http://tamil.sify.com/general/deepavali04/fullstory.php ?id=13966112

http://jeyanthisankar.blogspot.com/

Series Navigation

எந்தையும் தாயும்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

கோமதி நடராஜன்


ஆடாமல் அசையாமல்,
அங்குலம் நகராமல்,
தந்தை ஆதவன்,
ஓடி ஆடி உழைப்பது போல்
பாவனை காட்டுகிறார்.
நொடி கூட ஓய்வெடுக்காமல்,
அச்சாணியில் சுழன்று கொண்டு
அன்னை பூமி,
அமர்ந்தே இருப்பது போல்
அழகாக நடிக்கிறாள்.
அன்னையும் தந்தையும்
நடிக்கும் போது,
அவர்களின்,குழந்தைகள்,
நாமும் நடித்தால் என்ன ?
பூமியில்
இறக்கி விடப் பட்டதே
இறக்கும் வரை நடிக்கத்தானே!
கோபத்தை மறைத்துக்
கொஞ்சுவது போல் நடிப்போம்.
பிடிக்காதவர்களைப்
பிடித்தவர் போல் நடிப்போம்.
நடிப்பவர்களை,
நம்புவதுபோல் நடிப்போம்.
அன்னையும் நடிக்கிறாள்
தந்தையும் நடிக்கிறார்
நாமும் நடிப்போம் ,
தப்பே இல்லை.

***

ngomathi@rediffmail.com

Series Navigation

author

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்

Similar Posts