எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ?

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

மலர் மன்னன்


அடிப்படையில் பார்க்கிறபோது வெறும் துவேஷத்தின் வெளிப்பாடுகளாகத்தான் எதிர்வினைகள் வருகின்றன. அவற்றுக்கும் ந்ிதானமிழக்காமல், மனதைப் புண்படுத்தாமல், விளக்கம் அளிக்க இயலும் என்றாலும், இவ்வாறு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பதாலேயே சொல்லவேண்டிய எத்தனையோ சங்கதிகளைச் சொல்வதற்குத் தடங்கலும் தாமதமும் ஏற்பட்டுப் போகின்றன.

எதிர்வினைகளுக்கு விளக்கம் அளிக்காவிடில் முழு விவரம் அறியாத இளந் தலைமுறையினரும், வரலாற்று ஆதாரங்களைப் படித்தறிய வாய்ப்பில்லாதவர்களும் அந்த எதிர் வினைகளில் தெரிவிக்கப்பட்ட தகவல்களே சரி என்று கருதிவிடக்கூடும். இந்நிலையில், எழுதுவதைவிடச் செயலாற்றுவதில்தான் இப்போதெல்லாம் என் கவனம் உள்ளது என்பதாலும், என் செயல்முறை அறிந்தோர் என்னிடம் எதிர்பார்ப்பதும் செயல்தான் என்பதாலும் எழுதுவதைக் குறைத்துக்கொள்வதையே விரும்புகிறேன். நான் முன்னரே குறிப்பிட்டதுபோல் நான் எழுதத் திட்டமிட்டது வேறு, எழுதும்படியானது வேறு என்றாகிவிட்ட நிலையில் இவ்வாறு திசை திரும்பிப் போவது தேவைதானா என்பதை

வாசகர்கள்தான் முடிவு செய்யவேண்டும். ஏனெனில் எழுதுவது எனக்கு எப்போதுமே உற்சாகம் தரும் விஷயமாக இருந்ததில்லை. நேரில் பிரச்சினைகளை எதிர்கொண்டு செயல்படுவதில் உள்ள சுகம் எழுதுவதில் இல்லை!

எதிர்வினைகளுக்கு விளக்கம் அளிக்கையில், தொடர்பு இருக்கும் பட்சத்தில் கூடியவரை எனது அனுபவங்களையும் பதிவு செய்ய முடியும். ஆனால் அதில் முழுமை இருக்காது. எனது காலத்தை எனது பார்வையின் கோணத்தில் பதிவு செய்வது பலருக்கும் பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டதாலேயே எழுத முற்பட்டேன். ஆனால் எழுதத் தொடங்கியதுமே எதிர்வினைகள் வந்து என்னைத் திசை மாறிப்போகச் செய்துவிட்டன. எனினும், எதிர்வினைகளுக்கான எனது விளக்கங்களுக்குத்தான் வாசகர்களிடமிருந்து வரவேற்பு அதிகமாக உள்ளது என்பதையும் உணர்கிறேன்.

இதற்கிடையில் அண்ணாவைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரையைப் படித்துவிட்டு, மேலும், மேலும் அண்ணாவைப்பற்றி எழுதுமாறு தொலைபேசி மூலமாகவே கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும், உற்சாக மிகுதியால் எனது தகுதிக்கும் ஆற்றலுக்கும் மீறி, முன்பின் யோசியாது பல செயல்களில் இறங்கி, அவகாசமோ சக்தியோ போதாமல் எந்தச் செயலையுமே முழுமையாகச் செய்யமாட்டாமல் தவிப்பவன் என்பது. உங்களிடம் கன்சிஸ்டன்சியே இல்லை, அதனால்தான் உருப்படியாக உங்களால் எதுவும் செய்யமுடிவதில்லை என்பார், கி. கஸ்தூரிரங்கன், கணையாழி நிறுவன ஆசிரியர். இது முற்றிலும் சரியான கணிப்புதான். கவனத்தையும் ஆற்றலையும் பல்வேறு வகைகளில் சிதறவிடுவதால் எடுத்த காரியம் எதிலும் முழுமையாக இறங்கமுடிவதில்லை. திண்ணையில் எழுதுகிற பணியே அப்படித்தானே ஆகிவிட்டிருக்கிறது, எழுதத் திட்டமிட்டது ஒன்று, எழுதிக்கொண்டிருப்பது வேறு என்பதாக!

இம்முறை எதிர்வினைகளுக்கு விளக்கம் அளித்துவிடுகிறேன், மிக மிகச் சுருக்கமாக. அதன்பின் திட்டமிட்டவாறு எழுத இயன்ற வரை முயற்சி செய்வேன். இல்லை, அடுத்து அடுத்து வரும் எதிர்வினைகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதுதான் தேவையா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

நண்பர் கற்பக விநாயகம் ஹிந்து சமயத்தின் மீது ஏன் இவ்வளவு வெறுப்புடன் இருக்கிறார் என்பது விளங்கவில்லை. ஹிந்து மதம் பிடிக்காமல் போய், அதன் மீது நம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் அம்பேத்கர் மிகவும் நாணயமாக ஹிந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்த சமயத்தைத் தழுவினார். ஆனால் ஈ.வே.ரா. வுக்கு அந்த நாணயம் இல்லை! ஹிந்து மதத்தில் இருந்து கொண்டிருந்தால்தான் அதைத் தூற்றிிக் கொண்டிருப்பதற்கான உரிமையும் சுதந்திரமும் இருக்கும் என்பதால் அவர் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறாமல் இறுதிவரை ஹிந்துவாகவே இருந்துவிட்டார்.

ஹிந்து சமயத்தில்தானே யாரும் எப்படி வேண்டுமானாலும் சமயத்தைத் தூற்றிக்கொண்டிருக்க முடியும்! வேறு சமயம் சார்ந்துவிட்டால் ஹிந்து சமயத்தை விமர்சிக்கும் உரிமையை இழக்க வேண்டியிருக்கும். பிற சமயங்களில் அவ்வாறான சுதந்திரத்திற்கும் இடமேது ? ஈ.வே.ராவைப் போற்றுபவர்களும் இதன்காரணமாகத்தான் ஹிந்துக்களாக நீடிக்கிறார்கள், போலும்.

ஆலயங்களை இடிப்பதும் தெய்வ உருவங்களை உடைத்தெறிவதும் சமயக் கடமையாகவே மேற்கொண்டவர்கள், முகமதியப் படையெடுப்பாளர்கள். இவ்வாறான செயல்களைப் பாராட்டி அவர்களே தங்கள் சாதனையை ஆவணப்படுத்தியும் இருக்கிறார்கள். ஆலயங்களில் இருந்த செல்வத்தைக் கொள்ளை கொண்டதும், அர்ச்சகர்களைக் கொன்றதும், பெண்டிரைக் கவர்ந்ததும் உபரி சாதனைகள்தான்.

நம் காலத்திலேயே கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தின்போது அதற்கு முந்திய ரயில் நிலையத்தில் ஒரு முகமதியப் பெண்ணை சிலர் கவர்ந்துவிட்டதாகவும் அதன் எதிரொலியாகத்தான் கோத்ராவில் ரயில் பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டது என்றும் புரளி கிளப்பிவிடவில்லையா ? காந்திஜ்ி கொலையின்போது முகமதியர் மீது பழி விழுந்து அந்தச் சாக்கில் முகமதியர் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்பதற்காகவே கோட்ஸே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருந்ததாகக் கூடப் புரளி கிளப்புகிறார்கள்! இம்மாதிரிதான் காசி விச்வநாதர் ஆலயத்தில் அவ்ரங்கசீப்பின் அந்தப்புரத்துப் பெண்ணைப் பூசாரிகள் பாலியல் தாக்குதல் நடத்திப் பிறகு கொன்று போட்டதாகப் புரளி கிளப்பித் தம் செயலுக்கு சமாதானம் சொல்வதும்!

கடந்த வாரம் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவம்: என் மனைவி பெங்களூர் சென்று ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது உடன் பயணம் செய்த ஒரு முகமதிய இளைஞர் பிரபாகரனின் தாய், தந்தை இருவரையும் பாரத அமைதிப் படையினர் நிற்க வைத்துச் சுட்டுவிட்டார்கள்; அதனால்தான் ராஜ்ீவ் காந்தியைக் கொலை செய்தார்கள் என்று கதை அளந்துகொண்டிருந்தாராம்! கேட்பதற்கு ஆள் இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருக்கலாம்தான்!

சத்ரபதி சிவாஜ்ியின் படையில் முகமதியர் இருந்ததும் விஜயநகர சாம்ராஜ்யத்தின் படையில் முகமதியர் இருந்ததும் கூலிக்காகத்தான். அதேபோல் முகமதிய அரசர் படைகளில் ஹிந்துக்கள் சேவை செய்ததும் கூலிக்காகத்தான். ஆனால் ஹிந்து தளபதிகளோ சிப்பாய்களோ தாம் பணிசெய்த முகமதிய மன்னர்களுக்குத் துரோகம் செய்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால் விஜய நகர சாம்ராஜ்யம் பாமினி சுல்தான்களுடன் நடத்திய இறுதிப்போரின்போதும் மூன்றாம் பானிப்பட் போரின்போதும் முகமதிய சிப்பாய்களும் தளாகர்த்தர்களும் எதிரியும் முகமதியர்கள் என்பதால் திடாரென எதிரிகள் பக்கம் சாய்ந்து சொந்த சைன்னியத்திற்கே துரோகம் செய்து, தோல்வி தேடித் தந்தார்கள். ஆக, மத அடிப்படையிலும் மதக் கண்ணோட்டத்துடனும் மாற்றார் பக்கம் சாய்தல் ஹிந்துக்களிடையே இருந்ததில்லை.

ஹிந்து சமூகத்தில் சதி என்ற பெயரில் இருந்த விதவையரை சிதையிலேற்றிக் கொல்லும் கொடுஞ் செயல், தீண்டாமை எனும் மனிதாபிமானமற்ற செயல் முதலானவையெல்லாம் ஹிந்துக்களாலேயே தவறு என உணர்த்தப்பட்டு, சட்டபூர்வமாகக் கைவிடப்பட்டவையே அல்லவா ? பொட்டுக் கட்டும் சமாசாரம் தனியாகவே நடைமுறைக் கண்ணோட்டத்துடன் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். தேவதாசி முறை தடை செய்யப்பட்டதன் விளைவு என்ன என்பதை அந்தச் சமூகத்துப் பெண்டிர் வாயிலாகவே கேட்டறிந்தவன், நான். உண்மை நிலவரம் பற்றி நான் பேசப்போகிறேன், என் அனுபவத்தின் அடிப்படையில். அதற்காக என்னைத் தூற்ற விரும்புவோர் இப்போதே அதற்குத் தயார் செய்துகொள்ளலாம்!

காஷ்மீரத்தில் ஹிந்துக்களான பண்டிட்டுகள் பூண்டற்றுப் போனது போல் குஜராத்தில் முகமதியர் பூண்டற்றுப் போய்விட்டதாக எவரும் எண்ணவேண்டாம். குஜராத் மாநில அரசே கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்துவருகிறது. காஷ்மீரப் பண்டிட்களோ, மத்திய அரசின் தயவில் அகதி முகாம்களில் அரை வயிறும் கால் வயிறுமாகக் காலம் கடத்திவருகிறார்கள்! நரேந்திர மோதி எனக்குத் தெரிந்தவர்தான். எவரேனும் குஜராத் சென்று நேரில் உண்மை தெரிந்து வர விரும்பினால் அவரிடமே சொல்லி ஏற்பாடு செய்யலாம். கம்யூனிஸ்ட் நாடுகளைப் போல நாடகம் ஏதும் இருக்காது. சர்வ சுதந்திரமாகச் சுற்றிவந்து தகவல் திரட்டலாம். பூகம்பம், கலவரம், வெள்ளம் என அடுத்தடுத்துப் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருபவர் மோதி. இயன்ற வரை மக்கள் மனநிறைவு பெறும்விதமாகச் செயல்பட்டு வருகிறார். முக்கியமாக கட்சிக்காரர்கள் ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை அவர் அனுமதிப்பதில்லை. அதன் காரணமாகவே அங்கு அவர் மீது கட்சிக்குள்ளும் எதிர்ப்பு தலையெடுத்தது. ஆனால் மக்கள் ஆதரவு இருப்பதால் அவரை அசைக்க முடியவில்லை. மோதி பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதையும் நினைவுகொள்வது நல்லது. குஜராத்தில் திண்ணையைப் படிக்கும் ஒரு தமிழர் கூடவா இருக்க மாட்டார் ? அவர் ஒரு கடிதம் எழுதலாகாதா, அங்குள்ள உண்மை நிலவரம் பற்றி!

மேற்கத்திய நாடுகளில் தனி நபர் வாழ்க்கையில் கிறஸ்தவ மத குரு பீடங்களின் தலையீடு வலுவிழந்துவிட்டது. அதற்கு ஈடு செய்யும் வகையில், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்தவ ஆலயத்தின் தலையீடு மிகவும் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டு வருகிறது. முகமதிய சமயம் பற்றிப் பேசாமல் விடுவதே மேல். சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையையும், எச் ஜ்ி ரசூலின் வஹாபிசம் பற்றிய எச்சரிக்கைக் கட்டுரையையும்விட அதிகமாக என்னால் ஆதாரப் பூர்வமாக எதுவும் சொல்லிவிட முடியாதுதான். ஹிந்து சமயத்தின் அளவுக்குப் பிற சமூகங்களில் காலத்திற்கு ஒவ்வாத வழக்கங்களும் கொடிய பழக்கங்களும் கைவிடப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஆகவே ஏதோ இன்றைக்கும் தீதான வழக்கங்கள் ஹிந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படுவதுபோல் குறை

காண்பதில் பொருள் இல்லை. கல் எறிந்து கொல்லுதல், ஆட்டை அறுப்பதுபோல் மதத்தின் பெயரால் மனிதர் கழுத்தை நிதானமாக அறுத்தல் போன்ற கொடுஞ் செயல்கள் இன்றைக்கும் நீடிப்பது ஹிந்து சமூகத்தில் அல்ல.

எண்ணாயிரம் சமணர் கழுவில் ஏற்றப்பட்டது பற்றிச் சிறிது யோசித்துப்பார்க்க வேண்டும். எண்ணாயிரம் பேரைக் கழுவில் ஏற்றுவது என்ன சாதாரண விஷயமா ? உண்மையில் எண்ணாயிரம் என்ற, இன்றைக்கும் சமணப் பள்ளி உள்ள கிராமத்தைச் சேர்ந்த சில சமணர்கள்தான் கழுவில் ஏற்றப்பட்டார்கள் அல்ல, ஏறினார்கள். முன்பெல்லாம் வாதம் செய்வோர் வாதில் தோற்றால் ஒரு கொடிய தண்டனையை ஏற்பதாக அவர்களே சபதம் செய்வார்கள். இன்று கூடப் பேச்சு வழக்கில் என் காதை அறுத்துக் கொள்கிறேன் என்பது போன்ற சவால்கள் விடப்படுவது இதன் எச்சம்தான். குமாரில பட்டர் இப்படித்தான் தமக்குத் தாமே தண்டனையாக உமிக் குவியலுக்குள் உட்கார்ந்து, அதற்குத் தீ மூட்டச்செய்து சிறுகச் சிறுக வெந்து மடிந்தார். வாதில் தோற்ற எண்ணாயிரம் கிராமத்துச் சமணர் சிலர் அவ்வாறு தாமே வலிந்து ஏற்றுக் கொண்ட தண்டனைதான் அந்தக் கழுவேற்றம்.

இன்று சலுகைகள் பெறவேண்டும் என்பதற்காகவே ஜாதிகளைக் கை கழுவாமல் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பது வழக்க

மாகியிருக்கிறது. அப்படி வைத்துக் கொண்டே ஜாதிகள் இருப்பதை ஒரு குறையாகப் பேசுவதும் வழக்கமாகிவிட்டதுதான் ஆச்சரியம்! வலங்கை இடங்கை என்பனவெல்லாம் ஜாதிகள் வேறு வர்ணாசிரம தர்மம் வேறு என்பதைத்தான் உறுதி செய்கின்றன. வலங்கை ஜாதியாருக்கும் இடங்கை ஜாதியினருக்குமான பூசல்கள் ஜாதிச் சணடைகள்தானே!

தொடக்கத்தில் வர்ணம் என்று பேசப்பட்டதும் பின்னர் அது ஆதிக்க சக்திகளால் வசதியாகத் திரித்துக் கொள்ளப்பட்டதும் புரிந்து

கொள்ளப்படவேண்டிய விஷயம். மனித அங்கங்களிடையே அவற்றின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருப்பினும் அவற்றிடையே உயர்வு தாழ்வு இல்லை. எண் சாண் உடம்புக்கு முகமே பிரதானம் என்று பழமொழியாக வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாமே தவிர உடம்பு பூமியில் ஸ்திரமாக நின்று இயங்கக் கால்கள் அல்லவோ முக்கியம் ? ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதத்தில் இன்றியமையாததுதான். இதில் ஒன்றை உயர்வாகவும் இன்னொன்றைத் தாழ்வாகவும் நமக்கு நாமே கற்பித்துக்கொண்டு கீதையின் நாயகனைக் குறை சொல்வது என்ன நியாயம் ? மேலும், நால்வகை வர்ணம் என்பது குணாம்சத்தின் பிரகாரமும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறும் ஒரு நபரிடமே இருப்பதுதான் (இதனை விளக்கும் பொருட்டே 2005 ஆம் ஆண்டு அமுதசுரபி தீபாவளி மலரில் ஜாதியில்லை வர்ணமுண்டு என்ற சிறுகதையினை எழுதினேன். இச்சிறுகதையினைப் படித்த சிலர் ரிஷ்ி அரவிந்தரும் இதே கருத்தைச் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தனர்). எனவே சூத்திரர் என்பதுவும் கெட்ட வார்த்தையோ இழிவான வார்த்தையோ அல்ல. ஆதியில் பிறவியின் அடிப்படையில் வர்ணம் நிர்ணயிக்கப்படவும் இல்லை. கால வெள்ளத்தில் எல்லாமே புரண்டும், உருண்டும் சிதைந்து போகின்றன. நமது ஹிந்து சமயக் கட்டுமானங்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. மனதில் துவேஷம் இல்லாதிருப்பின் இதைப் புரிந்துகொள்ளத் தடையேதும் இராது.

நான் கண் மூடித்தனமாக ஹிந்து சமயக் கோட்பாட்டையும் சமூக அமைப்பையும் ஆதரிப்பவன் அல்ல. என் மாணவப் பருவம் நாத்திகத்தில்தான் ஊறிக்கிடந்தது. ஆனால் என் வயது இளஞர்கள் பெண்களை வெறித்துப்பார்த்துக் கொண்டு திரிவதும், பாலியல் தொடர்பான ஆர்வங்களில் பொழுதைக் கழிப்பதுமாக இருக்கையில் எனது

பொழுதுகள் நூலகங்களில் கழிந்தன. எனது இளமை எல்லாச் சமய நூல்களையும் ஆராய்வதும் விவரம் அறிந்தோரிடம் விவாதிப்பதுமாகக் கழிந்தது. மேற்கத்திய, கிழக்கத்திய தத்துவ ஞானிகளின் கோட்பாடுகளை ஒப்பீடு செய்வதும் சுவாரயமான ஈடுபாடாக இருந்தது. புரிந்துகாள்வதற்கு மிகவும் கடினமான நீட்சேயின் கோட்பாடு பற்றிிய எனது சிந்தனையாளர் நீட்சே என்ற நூல் எனது இளம் பிராயத்தில், 1964 ஆம் ஆண்டு வெளிவந்தது. நான் அதை எழுதியது 1960ல்! நீட்சேயை யாரும் தொடத் துணிவதில்லை, நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் என்று அரு. ராமநாதன் சொல்லி, அதன் பிறகு நீட்சேயின் நூல்களையெல்லாம் வாசிக்கலானேன். உடன் ஷொபன்ஹாவர் நூல்களையும் படித்து சிந்தனையாளர் ஷொபன்ஹாவர் நூலையும் எழுதினேன். உண்மையில் ஹிந்து சமயக் கோட்பாடுகள் மீது எனக்கு மரியாதையும் ஈடுபாடும் ஏற்பட்டதே அவ்விரு ஜெர்மன் தத்துவ ஞானிகளின் கருத்தை அறிந்த

பிறகுதான். ஒரு பித்தனைப்போல நமது தத்துவ நூல்களை வாசித்தேன். அப்போதும் நாத்திகனாகவே இருந்தேன். சொன்னால் நம்ப மாட்டார்கள், என்னுள் இடி மாதிரி இறையருள் இறங்கியதே புதிய ஏற்பாட்டில் ஏசுநாதரின் மலைப் பிரசங்கத்தைப் படித்தபோதுதான்! ஒப்புக்கொள்கிறேன், நான் எனது ஹிந்து சமயம் உணர்த்தும் இறைக் கோட்பாட்டைப் புரிந்துகொண்டது ஏசு கிறிஸ்து உபதேசித்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள மலைப் பிரசங்கத்தின் வாயிலாகத்தான். இதன் நுட்பத்தை விளக்க இறையியலாளர்களால்தான் இயலும் (சிறையில் வீர் சாவர்கர்ஜ்ி கேட்டு வாங்கிப் படித்தது புதிய ஏற்பாட்டைத்தான். அதில் உள்ள மலைப் பிரசங்கத்தை வாசித்து வாசித்து மன அமைதி பெற்றார். இன்னொரு செய்தி இப்போது நினைவுக்கு வருகிறது. பாரதிய ஜனதாவின் மூல வேரான ஜன சங்கம் மதவாத இயக்கம் என்றுதானே பேசுகிறார்கள் ? சென்னையில் தமிழ் நாடு ஜனசங்கம் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்கத் தலைவராகப் பொறுப்பேற்றது ஜான் என்ற கிறிஸ்தவர்தான்! அந்தத் தொடக்கக் கூட்டத்திற்கு நான் என் தந்தையாருடன் சென்றேன். அது பற்றிய விவரங்களைப் பின்னர் தெரிவிக்க முடிகிறதா பார்க்கலாம்).

இன்று பாரதம் முழுவதும் கிறிஸ்தவத் தனி நபர்கள் அவரவர் இஷ்டப்பிரகாரம் ஏதோவொரு பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு மதமாற்ற வேலையில் முழு மூச்சுடன் இறங்கியிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளிலிருந்து இதற்கென நன்கொடைகள் அள்ளித் தரப்படுவதால் அவர்களுக்குள் போட்டா போட்டியே நடக்கிறது. பல ஹிந்துக் குடும்பங்கள் மதம் மாறிவிட்டன. என்னை தினமும் அழைத்துச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் நண்பர்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமது கிராமத்தில் தம் உறவினர் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டதாக அவர் தெரிவிக்கிறார். மத மாற்ற முயற்சியில் ஈடுபடுவோர் ஹிந்துப் பெயர்களில் ஆண் பெண்களை முன்னிறுத்தி, அவர்கள் ஹிந்து தெய்வங்களை வேண்டியபோது பிரச்சினை தீரவில்லை என்றும், ஏசுவை வேண்டியதும் அது தீர்ந்துபோனதாகவும் சொல்லவைக்கிறார்கள். உலகாயதம் வேறு, ஆன்மிகம் வேறு என்கிற நுட்பம் அறியாப் பாமரர் இவ்வாறு எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் ஏதோ இப்பிரசாரகர்கள் தினம் தினம் தீக்கிரையாக்கப்படுவதுபோல் ஒரு சித்திரத்தைத் தீட்டுவது சரியல்ல. ஒரிஸ்ஸாவில் வனவாசிகளின் பொறுமையினை அளவுக்கு மீறி சோதித்து ஒரு பிரசாரகர் (பாதிரியார் அல்ல) தீக்கிரையானதால் அது ஏதோ ஹிந்துக்கள் திட்ட

மிட்டுப் பழி வாங்கிய செயல்போல் பேசக்கூடாது. வனவாசிகள் வில்லும் அம்புமாக இருப்பவர்கள். கானகத்தின் குழந்தைகள். அவர்களிடம் உள்ளொன்று வைத்துப் புறமொன்று நடக்கும் சாதுரியம் இல்லை. தங்கள் உணர்வை மூடி மறைக்க அவர்களுக்குத் தெரியாது. அவர்களிடம் பழகுகிற விதத்தில் பழகினால் நமக்காக உயிரையே தருவார்கள். இடக்கு செய்தால் உயிரை எடுக்கவும் செய்வார்கள். ராஞ்சியில் தங்கியிருந்து வனவாசிகளுடன் ஒரு உறவினன் போல் பழகி பிர்ஸா பகவான் பற்றிய நாவலை எழுதினேன். நா. பா. அதனைத் தமது தீபம் மாத இதழில் வெளியிட்டார். இது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி! இதேபோல் மத்தியப் பிரதேசத்திலும் வனவாசிகளுடன் வாழ்ந்தேன். முரட்டுக் குழந்தைகள்! பிடிவாதக் குழந்தைகள்! அதன் காரணமாகவே பட்டினத்து நாகரிக மனிதர்களின் சூதுகளுக்கும் வாதுகளுக்கும் பலியாகி, பகிரங்கமாக வன்முறைத்தாக்குதலில் இறங்கிச் சிறையிலும் காவல் நிலையங்களிலும் சித்திரவதை செய்யப்பட்டு சமயங்களில் இறந்தும் போவார்கள். ஏன் என்று கேட்க நாதியிருக்காது! இப்படி மாட்டிக் கொள்பவர்கள் கொடுமைப்படுத்தப்படலாகாது என்பதற்காகவே காவல் நிலையங்கள், நியாய ஸ்தலங்கள், வக்கீல் வீடுகள், சட்ட மன்ற உறுப்பினர் விடுதிகள் என்று அலைந்தலைந்தே உருக்குலைந்தேன். என்ன செய்தென்ன, நிலைமை எங்கும் ஒரேபோலத்தான் தொடர்கிறது. தமிழ் நாட்டிலும் கூட வீரப்பனை வளைக்கும் சாக்கில் வனவாசிகள் மீது நடந்த அத்துமீறல்களுக்கு இன்றுவரை பரிகாரம் கிட்டவில்லை. அதில்

நேரடியாக இறங்க இயலாதவாறு வேறு பணிகளில் சிக்கிக்கொண்டேன். எனினும், இங்கே சென்னை அருகாமையில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் உள்ள வனவாசிகளுக்கான நலப்பணிகள் சிலவற்றில் பங்கெடுத்துவருகிறேன். இங்கும் வனவாசிகளிடையே கிறி ?தவ பிரசாரகர்களின் மத மாற்றப் பணி உச்ச கட்டத்தில் உள்ளது. கவலை வேண்டாம், அவர்களில் எவரும் தீக்கிரையாக மாட்டார்கள்.

மூட்டை மூட்டையாக டாலர்கள் வேண்டும் என்பதற்காகக் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சுற்றித் திரிந்து பாரதத்தில் கிறிஸ்தவர்கள் பலவாறான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும், வாழ வசதியின்றி வாடுவதாகவும் புலம்பியழுது கையேந்துகிறார்கள் என்றால் நாமுமா அதேபோல் பேசுவது, வெறும் வாதத்திற்காக ?

++++

malarmannan79@rediffmail.com

Series Navigation