எதிர்காலம் என்று ஒன்று….! (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)

This entry is part [part not set] of 42 in the series 20050408_Issue

ரெ.கார்த்திகேசு


I am a cheerleader, I am a promoter, I am a salesman, I am a debt collector, I am a father confessor and there are other aspects I still have to discover.

– UN Secretary-General Kofi Annan describing his job.

ஈஸ்ட் நதியில் மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. மேன்ஹேட்டனின் கிழக்குப் பகுதி முழுவதும் மழை மூட்டமாகத்தான் இருந்தது.

தனக்கென்று அமைந்துள்ள ரகசிய வாசல் வழியாக நுழைந்து தன் அலுவலக அறையை நோக்கி நீண்ட கோரிடோர் வழியாக நடந்து கொண்டிருந்த போது கோஃபி அன்னானின் மனத்திலும் இருள் மூட்டமாகத்தான் இருந்தது. இருந்தும் இனிமேல் தான் அடிக்கடிப் புன்னகைக்க வேண்டும் என்று கோஃபி அன்னான் நினைத்துக் கொண்டார்.

இன்று காலையில் எழுந்து உடற்பயிற்சிக்குப் பின் குளிக்கப் புகுந்து கண்ணாடியின் முன் நின்றபோது தன் முகம் இறுக்கமாக இருப்பதாக உணர்ந்தார். பெரும்பாலும் அது அப்படித்தான் இருக்கிறது. உலகின் நிலை நெருக்கடிக்கு மேல் நெருக்கடியாக இருக்கும்போது புன்னகைக்க ஒன்றும் இல்லைதான். இருந்தாலும் தொலைக்காட்சியின் வழியாகத் தன் முகத்தை அன்றாடம் காணும் உலக மக்களிடம் தன் பயத்தைப் பரப்பத் தேவையில்லை. தன் புன்னகை ஓரளவு அவர்களை ஆறுதல் படுத்தும்.

இன்று காலை முதல் அப்பாயிண்ட்மண்ட் ஐநாவின் உலகக் கோள் வெம்மை ஆய்வு குறித்த குழுவின் தலைவர் கிரெகிரி கார்லோசுடன். அந்தக் குழுவின் இரண்டு ஆண்டுகால ஆய்வின் முடிவுகள் அடுத்த மாதம் பாதுகாப்பு மன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன. அதன் முன்முடிவுகள் சிலவற்றை பொதுச் செயலாளருக்கு அறிவிக்கத்தான் கார்லோஸ் இன்று காலை வருகிறார். ஒரு வாரத்துக்கு முன் அவரை ஐ.நா. கட்டிடத்தின் லோபியில் தற்செயலாகச் சந்தித்த பொழுது கைகுலுக்கி ‘நோயாளி எப்படி இருக்கிறார் ? ‘ என்று கேட்டார் அன்னான்.

‘சாவதற்கு நாள் குறித்தாகி விட்டது என்றுதான் எண்ணுகிறேன் ‘ என்று தனது இஸ்பானிய வாசனையுடன் கூடிய ஆங்கிலத்தில் குரூரமாகப் பதில் சொன்னார் கார்லோஸ். இன்று அதற்கான ஆதாரங்களுடன் வருவார்.

எப்படியும் வலிந்து புன்னகைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவாறு தன் அறைக் கதவை நெருங்கியபோது பாதுகாவலர் மரியாதையாகக் கதவைத் திறந்து விட்டார். ‘காலை வணக்கம் ராபர்ட் ‘ என்று கூறி அன்னான் உள்ளே நுழைந்தார்.

அன்னானின் அந்தரங்கச் செயலாளர் காத்திருந்தார். ‘கார்லோஸ் வந்து விட்டாரா மிஸ் லிம் ? ‘ என்று கேட்டார்.

‘மன்னிக்கணும் சார்! கெட்ட செய்தி. கார்லோஸ் நேற்றிரவு இறந்து விட்டாராம். அவருடைய அலுவலகத்திலிருந்து செய்தி வந்திருக்கிறது! ‘ என்றார் மிஸ் லிம்.

அதிர்ந்தார். ‘கடவுளே! எப்படி ? ‘

‘தெரியவில்லை. உடலைச் சோதனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ‘

‘அவருக்கு ஐம்பது வயதுதானே இருக்கும் ? ‘

‘ஐம்பத்தி இரண்டு. நல்ல உடல் நலத்துடன் இருந்தவர். நாளை காரணம் தெரியலாம்! ‘

தனது முகம் மேலும் இறுக்கமானது போல் உணர்ந்தார். இல்லை, இல்லை. இதனால் இன்று அதிர்ந்துவிடக் கூடாது. புன்னகைக்க வேண்டும். உலகம் ஒருநாள் சரிப்பட்டு விடும். சிரித்துக் கொண்டுதான் இந்த அதிர்ச்சிகளைச் சந்திக்க வேண்டும்.

‘மிஸ் லிம். ஒரு பூ வளையம்…. ‘

‘காலையில் அனுப்பி விட்டேன்! ‘ என்றார்.

‘சரி. அப்போ அப்பாயிண்ட்மண்ட்.. ?

‘அடுத்தடுத்த அப்பாயிண்ட்மண்ட் உள்ள யாரையும் இந்த நேரத்தில் வரச் சொல்ல முடியவில்லை. ஆனால் முன் அப்பாயிண்ட்மண்ட் இல்லாமல் மூன்று பேர் உங்களை அவசரமாகப் பார்க்க வந்திருக்கிறார்கள். ‘

நெற்றி சுருங்கச் செயலாளரைப் பார்த்தார். ‘முன் அப்பாயிண்ட்மண்ட் இல்லாமலா ? இது மிக அசாதாரணமாக இருக்கிறதே… யார் ? ‘

‘யார் என்று சொல்ல முடியவில்லை. என்ன விஷயம் என்று கேட்டால் உங்களிடம் மட்டும்தான் சொல்ல முடியும் என்கிறார்கள். உங்களுக்கும் வேறு அப்பாயிண்ட்மெண்ட் ஏற்பாடு பண்ண முடியாததால் அவர்களை இரண்டாம் மாநாட்டு அறையில் காத்திருக்கச் சொல்லியிருக்கிறேன்! ‘

‘மிஸ் லிம். எனக்கு அப்பாயிண்ட்மண்டுக்கு ஆள் இல்லாவிட்டால் என்ன ? பார்ப்பதற்குக் கோப்புகள் இருக்கின்றன. படிப்பதற்கு மலை மலையாக அறிக்கைகள் இருக்கின்றன. முன் அப்பாயிண்ட்மண்ட் இல்லாமலும் சந்திக்க வேண்டிய விவரம் சொல்ல மறுப்பவர்களுமான மனிதர்களை நான் ஏன் பார்க்க வேண்டும் ? ‘

‘ஆட்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. உங்களுக்கும் பொழுது போகட்டும் என்றுதான்… வேண்டாமென்றால் அவர்களை அனுப்பி விடுகிறேன். ‘

இது வேடிக்கையாக இருந்தது. இந்த உயர்ந்த பீடத்தில் பாவப்பட்ட மனிதர்களா ? அதுவும் கறார்க்காரரான மிஸ் லிம்மின் மனதை இளகவைத்தவர்கள் ?

‘பாதுகாப்பு அனுமதிகள் பெற்றிருக்கிறார்களா ? ‘

‘எல்லாம் முறையாக இருக்கின்றன. வேண்டுமானால் ஒரு பாதுகாவலரை உடன் அனுப்புகிறேன். ‘

‘வேண்டாம். பாதுகாவலரை அறைக்கு வெளுயே நிற்கச் சொல்லுங்கள். நான் அவர்களைப் பார்க்கிறேன்! ‘ எழுந்து இரண்டாம் மாநாட்டு அறை நோக்கி நடந்தார்.

தொளதொளவென்ற கோட்டுப்போட்ட மூவர் அங்கிருந்தார்கள். கட்டை குட்டையாக இருந்தார்கள். அன்னானைக் கண்டதும் எழுந்து ஜப்பானிய முறையில் குனிந்து வணங்கினார்கள். குனியும்போது ஒருவர் மண்டை இன்னொருவர் மண்டையை இடித்தது. இடித்துக் கொண்ட மனிதர் அடுத்தவரை முறைத்துப் பார்த்துவிட்டு அவர் தலையில் குட்டினார்.

அன்னானுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அவரும் அப்படியே குனிந்து வணங்கிவிட்டு ஒவ்வொருவராகக் கைகுலுக்கினார். இவர்கள் மூவரையும் எங்கோ பார்த்தது போல இருந்தது.

கட்டையாக இருந்த முதல்வர் பேசினார்: ‘சார், என் பெயர் லேரி, இவர் மோ, இவர் கர்லி! ‘

லேரி, மோ, கர்லி! பெயர்கள் மொட்டையாக இருந்தன. இவர்களைப் பார்த்தால் கொஞ்சம் கோமாளிகள் போல…. பட்டென்று நினைவு வந்தது. சிரித்தார். ‘இது இந்த திரீ ஸ்டூஜஸ் பெயர்களல்லவா.. ? ‘ என்றார்.

மோ சிரித்தார். அகலமான சிரிப்பு. கர்லியைப் பார்த்து சொன்னார்: ‘பார்த்தாயா! புத்திசாலி என்று சொன்னேனல்லவா ? உடனே புரிந்து கொண்டார்! ‘ என்றார். மற்ற இருவரும் வேகமாகத் தலையாட்டினார்கள்.

அன்னானுக்கு வேடிக்கையாகவும் எரிச்சலாகவும் இருந்தது. ‘ஜெண்டில்மென், இது என்ன வேடிக்கை காட்ட வந்திருக்கிறீர்களா ? இந்த வேஷம் எதற்கு ? ஏதாவது நாடகக் கம்பெனிகாரர்களா ? அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை….! ‘

லேரி அவரைக் கையமர்த்தினார். ‘சார்! எங்களுக்கும் நேரம் அதிகமில்லை. நாங்கள் சொல்லப்போகும் விஷயம் கடுமையானது. அந்தக் கடுமையைக் குறைக்கத்தான் இந்த வேடம். உங்கள் சிரிப்புடன் இதை ஆரம்பிக்கலாம் என்றுதான் இப்படி… ‘

‘எங்கள் அலுவலகத்தின் கடுமையான கட்டுப்பாடுகளை எப்படிக் கடந்து வந்தீர்கள் ? ‘

லேரி அன்னானை முறைத்துப் பார்த்தார். ‘சார். சில்லறை விஷயங்கள் பேசி நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்கள் அடுத்த அப்பாயிண்ட்மண்ட் இன்னும் முப்பது நிமிடங்களில் இருக்கிறது. அதற்குள் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்! ‘

தங்கள் பையிலிருந்து ஓர் கண்ணாடி உருண்டையை எடுத்து மேஜையில் வைத்தார். அதில் ஏதோ விசையைத் தட்ட மேஜைமேல் ஹோலோகிரேம் தோன்றியது. லேரி பேசினார். ‘சார்! இது உங்கள் பூமி; இப்போது ஜூம் அவுட் செய்கிறோம்; இது உங்கள் சூரியக் குடும்பம்; இப்போது பால்வெளு தாண்டிப்போகிறோம். வேறு சூரிய குடும்பம்; இதன் பெயர் அன்றோமிடா; உங்கள் பூமியிலிருந்து 2.9 ஒளு ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது; இப்போது இந்தக் கோளத்தைப் பாருங்கள். என்ன நினைக்கிறீர்கள் ? ‘

பார்த்தார். ‘பூமியைப் போலவே இருக்கிறது! நீல நிறத்தில்! ‘

மோ கர்லியைப் பார்த்துச் சிரித்தார். ‘சொன்னேன் பார்! இவர் ரொம்ப புத்திசாலி! ‘

‘வாயை மூடு! ‘ என்று அவர் தலையில் அடித்தார் லேரி. பின் அன்னானிடம் பேசினார்: ‘இந்தக் கிரகத்தின் பெயர் சுகமி! ‘

அன்னான் திகைத்திருந்தார். இது உண்மையாக இருக்க முடியாது. இது ஏதோ வேடிக்கை. மாயாஜாலம். என்னை ஏமாற்றி முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்.

‘ஜெண்டல்மென்! இந்த வேடிக்கை எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. நான்…! ‘

‘வாயை மூடிக் கேள் மனிதப் பதரே! ‘ என்று சீறினார் லேரி. அன்னான் அதிர்ந்து நாற்காலியில் சாய்ந்தார்.

‘பாத்தியா, சொல்பேச்சு கேக்கிற நல்ல பிள்ளை! ‘ என்றார் கர்லி. ‘இந்தா வங்கிக்கோ! ‘ என்று கர்லியின் முகத்தில் குத்தினார் மோ.

லேரி தொடர்ந்து பேசினார்: ‘அன்னான் அவர்களே! இந்தக் கிரகத்தில்தான் நாங்கள் வசிக்கிறோம். எங்கள் சூரிய குடும்பத்தில் இது ஒன்றில்தான் உயிர்கள் இருக்கின்றன. உங்கள் சூரிய குடும்பம்போலவே! ஆனால் எங்கள் சூரியன் மடிந்து கொண்டிருக்கிறது. விரைவில் சூப்பர்நோவா ஆகிவிடும். அதற்குள் நாங்கள் எங்கள் உயிர்வாழ்க்கைக்கு ஒரு புதிய வழி தேட வேண்டும்! ‘

அன்னானுக்குக் கொஞ்சமாக மனதில் திகில் எற்பட்டது. இது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் அசாதாரணமான உயிரிகள். மனித வேடம் போட்டிருக்கிறார்கள். அப்பாவிக் கோமாளி வேடம் போட்டுத் தங்கள் கொடூரத்தை மறைத்திருக்கிறார்கள்.

அந்நியக் கோள்வாசிகள் பூமியை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஏராளமான அறிவியல் கற்பனைகளை அவர் படித்திருக்கிறார். இருந்தும் இளவயதில் படித்த ‘உலகங்களின் போர் ‘ என்னும் எச்.ஜி.வெல்ஸ்-இன் கதையைப்போல அவர் மனதைத் திகில் படுத்திய கதை வேறில்லை. இப்போது இது உண்மையாகிறதா ? கடவுளே…!

‘ஒரு இருபது ஆண்டுகளாகவே உங்கள் சூரிய குடும்பத்தையும் உங்கள் பூமியையும் கவனித்துக் கொண்டு வருகிறோம். இங்குதான் சுற்றுச் சூழல் எங்களுக்கு ஏற்றவாறாக இருக்கிறது. ஆகவே எங்கள் மக்கள் தொகை அனைத்தையும் இங்கு கொண்டு வரப் போகிறோம்! ‘

அன்னான் நாற்காலியில் அசைந்தார். ‘நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். நீங்கள் வரலாம், வரமுடியாது என்று சொல்ல நான் யார் ? நான் ஒரு பொது ஊழியன்… ‘

‘தெரியும்! ‘ என்றார் லேரி. ‘உங்களிடம் அனுமதி கேட்க வரவில்லை. தகவல் தெரிவிக்கவே வந்தோம். இந்த பூமியின் பிரதிநிதியாக உங்களை மதித்துப் பேசுகிறோம்! ‘

‘நன்றி. உங்கள் மக்கள் தொகை எவ்வளவு ? ‘

‘உங்கள் கணக்கில் அறுபது பில்லியன் ‘

‘கடவுளே! எங்கள் மக்கள் தொகையில் பத்து மடங்கு இருக்கிறதே! இப்போதே எங்கள் பூமி மக்கள் நெருக்கத்தில் திணறுகிறது. இனி இதில் அறுபது பில்லியன் சேர்த்தால்…! ‘

அவர் முடிக்கவில்லை. லேரி இடையில் புகுந்து சீறினார்: ‘யாருக்கு வேண்டும் உங்கள் ஒட்டை உடைசல் பூமி ? நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் யாரும் அதில் எங்கள் வால் கூடப் பதிக்க மாட்டோம்! ‘

மோ லேரியின் தலையில் ஓங்கிக் குட்டினார். ‘மடையன், மடையன். நமக்கு வால் இருப்பதை இப்படி போட்டு உடைத்து விட்டாயே… ‘

லேரி தன் இரு விரல்களைக் கூராக்கி மோவின் முகத்தில் குத்தினார். ‘நீதான் மடையன். வாலைப் போட்டு எப்படி உடைக்க முடியும் ? இந்த ஆளுக்கு அதெல்லாம் ஒன்றும் புரியாது, வாயை மூடிக் கொண்டிரு! ‘

ஒரு இருண்மை மிகுந்த சர்ரியல் நாடகத்துக்குள் தாம் மாட்டிக் கொண்டதாக அன்னான் உணர்ந்தார். ஆனால் இவர்கள் திட்டமென்ன ?

‘எங்கள் பூமி உங்களுக்கு வேண்டாம் என்றால் வேறு என்ன வேண்டும் ? ‘

லேரி சொன்னார்: ‘எங்கள் கோளத்தை இங்கு கொண்டு வந்து நிறுத்தப் போகிறோம். உங்கள் ஓர்பிட்டில் நேர் எதிர்த் திசையில் அது நின்று உங்கள் பூமிபோல் இயங்கும். உங்கள் தென் துருவம் எங்கள் வட துருவத்தைப் பார்த்து நிற்கும். ‘

‘அதாவது உங்களுக்கு நாங்கள் அண்டை வீடாகப் போகிறோம்! ‘ என்றார் கர்லி பெருஞ் சிரிப்புடன்.

அன்னானுக்குக் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது. நம் பூமி பிழைத்தது என்று எண்ணினார். ஆனால் ஒரு முழுக் கோளத்தை எப்படி… ?

‘கனவான்களே! எப்படி ஒரு முழுக்கோளத்தை இன்னொரு அண்டத்திலிருந்து இங்கு கொண்டு வருவீர்கள் ? ‘

‘ஆள் அவ்வளவு சூட்டிகையில்லை! ‘ என்றார் மோ. ‘விஞ்ஞானம் கொஞ்சம் கூடத் தெரியவில்லை! ‘ என்றார் கர்லி.

லேரி இரண்டு பேரையும் கன்னத்தில் அறைந்தார். ‘உங்கள் கருத்துத் தேவைப் படும்போது நான் கேட்க மாட்டேனா ? ஏன் பிதற்றுகிறீர்கள் ? ‘ என்றார்.

‘அன்னான் ஐயா! கேட்டுக் கொள்ளுங்கள். எங்கள் கோளத்தை நகர்த்திக் கொண்டுவர எங்களிடம் தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதல்ல பிரச்சினை…! ‘

‘அப்புறம்.. ? ‘

‘எங்கள் கோளம் இந்த அண்டத்துக்குள் வரும்போது எழுகின்ற காந்த அலைப் புயலால் உங்கள் கோளத்துக்குக் கொஞ்சம் சேதங்கள் ஏற்படலாம்! ‘

‘சேதங்கள் என்றால்… ‘

‘கொஞ்சம் கோடி காட்டுகிறேன். முதலில் பெரும் காந்தப் புயல் வீசும். உங்கள் மின்சாரக் கருவிகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் பெரும்பாலும் சேதமாகும். மிகச் சிறிய துணைக்கோளான உங்கள் சந்திரக் கோள் பெரும்பகுதி உடைந்து பெரும் தூசு மண்டலம் ஏற்படும். ஆனால் இதன் நன்மை இந்த உடைந்த பகுதிகள் நாளடைவில் சேர்ந்து ஒரு இரண்டாம் சிறு நிலவாக ஆகலாம். ‘

‘ஆமாம். உங்கள் கவிஞர்கள் பாட்டையெல்லாம் மாற்ற வேண்டும். நிலவு என்று வருகிற இடத்திலெல்லாம் கள் போட வேண்டும் ‘ என்று சொல்லி ‘ஹா ஹா ‘ என்று சிரித்தார் கர்லி.

மோ அவர் தலையில் படாரென்று அடித்தார். லேரி தொடர்ந்தார்: ‘பின் எங்கள் கோள் உங்கள் ஓர்பிட்டில் முதலில் சுற்றுகின்ற கடுமையான வேகத்தில் உங்கள் செயற்கைத் துணைக்கோளங்கள் அனைத்தும் நொறுங்கும். பல பூகம்பங்கள் ஏற்படும்; எரிமலைகள் தீக்கக்கும்; கடல் கொந்தளிக்கும்; பல பிரதேசங்கள் நிரந்தரமாக மூழ்கும். ஆனால் எங்கள் கோளத்தின் சுற்றும் வேகத்தை நாங்கள் கட்டுப்படுத்தி கிட்டத்தட்ட உங்கள் பூமியின் சம வேகத்துக்குக் கொண்டுவந்து விடுவோம். அப்புறம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எல்லாம் அமைதியாகி நாம் சமாதான சகவாழ்வு வாழலாம்! ‘ என்றார் லேரி.

‘அதாவது எங்கள் தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்கலாம். உங்கள் தொலைக்காட்சிச் சேனல்கள் அனைத்தையும் நாங்கள் பார்க்கலாம்! ‘ என்றார் கர்லி. மோ அவர் முகத்தில் குத்தினார். ‘அதுதான் இப்போ ரொம்ப முக்கியமா ? ‘

அன்னான் பலவீனமான குரலில் கேட்டார். ‘பேரழிவு பற்றிப் பேசுகிறீர்கள். எவ்வளவு காலத்துக்கு இந்த அழிவுகள் நீடிக்கும் ? எப்போது அமைதியாகும் ? ‘

‘எங்கள் விஞ்ஞானிகள் கணக்குப் பண்ணி உங்கள் காலத்துக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். ரொம்ப காலமாகாது. ஒரு நூறு ஆண்டுகளில் எல்லாம் அமைதியாகிவிடும்! ‘

அன்னானுக்குத் தொண்டை வரண்டு விட்டது. தண்ணீர் கூடக் கேட்கத் தெம்பில்லாமல் உட்கார்ந்திருந்தார். நூறு ஆண்டுகள்! நான்கைந்து தலைமுறைகள்! அவர் மூளை கொதித்தது. இருதய லப் டப்பைக் காதால் கேட்க முடிந்தது.

கர்லி லேரியின் காதில் ஏதோ முனுமுனுத்தார். ‘ஆமாம். நேரம் ஆகிவிட்டது! ‘ என்ற லேரி அவசரமாகத் தனது கண்ணாடிப் பந்தை எடுத்து அணைத்துப் பைக்குள் வைத்தார். ஒரு குறுந்தட்டை எடுத்து அன்னானிடம் நீட்டினார். ‘சார்! இந்தக் குறுந்தகடு உங்கள் தொழில் நுணுக்கத்துக்கு ஏற்பச் செய்யப்பட்டது. உங்கள் விஞ்ஞானிகளிடம் கொடுங்கள். அவர்கள் புரிந்து கொள்ளுமாறு தகவல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பார்த்து உங்களுக்கும் இந்த பூமியின் அரசாங்கங்களுக்கும் வேண்டிய ஆலோசனைகளை அளிப்பார்கள். அரை மணி நேரம் ஆகிவிட்டதால் நீங்கள் அடுத்த அப்பாயிண்ட்மண்டுக்குப் போகலாம். நாங்கள் விடை பெற்றுக் கொள்ளுகிறோம்! ‘ என்றார்.

‘நில்லுங்கள்! ‘ என்றார் அன்னான். ‘இது இவ்வளவு எளிதான விஷயமா ? எங்கள் அரசாங்கங்களிடம் பயங்கரமான அணு ஆயுதங்கள் இருக்கின்றன. அவர்கள் இலேசில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துச் சாகும் வரை போராடுவார்கள்! ‘

‘தெரியும். அதைத் தவிர்க்கத்தான் இந்த விவரங்களை உங்களிடம் கொடுக்கிறோம். வேறு வழி இருக்கிறதா என நாங்கள் மீண்டும் மீண்டும் ஆய்ந்து பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வந்தோம். நம்புங்கள். நாங்கள் சமாதானத் தூதுவர்கள். நம் இரு உலகங்களின் உயிருடல் சேதத்தையும் பூகோள சேதத்தையும் குறைக்கவே இந்த முயற்சி. நீங்கள் போராடாமல் ஏற்றுக் கொண்டால் உங்கள் உலகத்தில் 50 விழுக்காடு மக்கள்தான் மடிவார்கள். எங்கள் உலகத்திலும் பூமிப் பெயர்ப்பு மற்றும் பிரயாண அதிர்ச்சியில் பாதிப்பேர் மடிவார்கள் என்றே எதிர்பார்க்கிறோம். ஆனால் குறைந்த பட்சம் இரு உலகங்களுக்கும் எதிர்காலம் என்று ஒன்று இருக்கும். அணு ஆயுதப்போரில் ஈடுபட்டால் உங்கள் உலகம் முற்றாக அழிந்துவிடும். நன்றி. உங்களுக்கு அமைதி உண்டாகுவதாகுக! ‘

மூன்று பேரும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் கதவைத் திறக்காமல் சுவரின் வழியாக வெளுயேறினார்கள்.

கையில் வைத்திருந்த குறுந்தகட்டை அன்னான் பார்த்தார். இலேசாக இருந்தது. ஆனால் எத்தனை கிகாபைட் தகவல்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை.

அறையை விட்டுத் தான் வெளுயே வரும்போது தம் முகத்தில் பயம் இருக்கக் கூடாது. பிறர் பார்க்கப் புன்னகைத்துக் கொண்டே வரவேண்டும் என்று எண்ணினார். ஆனால் கார்லோஸ் இறந்து போனார் என்ற நினைவு வந்தது. இந்த எதிர்காலப் பேரழிவின் முதல் பலி அவர் என்று தோன்றியது. ‘சாவதற்கு நாள் குறித்தாகி விட்டது ‘ என அவர் வேடிக்கையாகச் சொன்னது தீர்க்க தரிசனமாகிவிட்டதோ ?

ஆனால் இறப்பு என்பது சோகத்துக்குரியதா என்று தெரியவில்லை. முப்பது பில்லியன் உயிர்களைப் பலி கொடுக்கத் தயாராகும் ஓர் உலகத்தின் விஞ்ஞானிகள் கோமாளி வேஷம் போட்டுக் கொண்டு அந்தத் தகவலைப் பரிமாறிக்கொள்ள முடியும்போது தாமும் புன்னகைக்க முடியும் என்று தோன்றியது.

(முடிந்தது)

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு