எடின்பரோ குறிப்புகள்

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

இரா முருகன்


மறுபடியும் இங்கிலாந்தில் டேரா போடக் கிளம்பி வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஓடிவிட்டது. வழக்கம்போல் யார்க்ஷயர் இல்லை இந்த முறை. ஸ்காட்லாந்து. பழைய விக்டோரியா வாசனை யார்க்ஷயரை விடப் தூக்கலாக அடிக்கிற ஹைலாண்ட் என்ற உசரமான வடக்குப் பகுதி. சந்து பொந்து, கல் பதித்த நடைபாதை, காரோடும் வீதி, கட்டிடம் எல்லாம் முன்னூறு வருடம் பழசு. 1760ம் வருடம் தொடங்கிய மதுக்கடை இன்னும் அப்படியே இருக்கிறது. கடைசி மரபெஞ்சில் பியர் குடித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னூறு வருடமாக அங்கேயே உட்கார்ந்திருக்கிறதாகத் தெரிந்தது.

தெருவில் நடந்தால் அங்கங்கே குட்டைப் பாவாடைகள் தட்டுப்படுகின்றன. கிழவர்கள், மத்திய வயசன்மார் என்று ஆண்கள் தான் எல்லா பாவாடைச் சாமிகளும். சிவப்பிலும் பச்சையிலும் சதுரம் சதுரமாக ஏகப்பட்ட ப்ளீட்டோடு முழங்காலுக்குக் கீழே இறங்காத இந்த ஆம்பளைங்க சமாச்சாரம்தான் ஸ்காட்லாந்தின் தேசிய உடையான கில்ட். எப்பவும் வேகமாகக் காற்று வீசுகிற பிரதேசமாகையால், ஆத்தாடி(டா) பாவாடை காத்தாட, அப்புறம் கொஞ்சம் மேலே உயர, அதைப் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்ளாமல், கழுத்தில் டை முடிச்சைக் கவனமாகச் சரிப்படுத்திக்கொண்டு இந்த அடலேறு ஆண்கள் ரயிலை, பஸ்ஸைப் பிடிக்க ஓடுகிறார்கள்.

வீட்டுப் பக்கத்துக் கடையில் கில்ட் என்ன விலை என்று விசாரித்தேன். சும்மா வம்புக்குத்தான். விலை உயர்ந்த த்ரீ பீஸ் சூட்டை விட குட்டைப் பாவாடை இரண்டு மடங்கு அதிக விலை. கிறிஸ்துமஸ் நேரத்தில் வந்தால் தள்ளுபடி செய்து கம்மி விலைக்குத் தருகிறேன் என்று ஆசை காட்டினார் கடைக்காரர். ஊஹூம். வேணாம். அதை மாட்டிக்கொண்டு தெருவில் நடக்க எனக்குத் தைரியம் கம்மி.

தெருவுக்குத் தெரு இரண்டு சர்ச். ஞாயிற்றுக்கிழமை காலையில் சர்ச் வாசலில் பளிச் என்று விளம்பரங்கள். ஆங்கிலோ சாக்சன் சர்ச் பலகையில் ‘Under the same management for the past two thousand years ‘. எதிர் வரிசையில் ஸ்காட்டாஷ் சர்ச் வாசலில் ‘Fight Truth decay. Brush with Bible ‘.

பிரிட்டாஷ் பத்திரிகைகள் இந்த இரண்டு வருடத்தில் ரொம்ப மாறவில்லை. ஆனாலும், தமிழ்ப் பத்திரிகையிலிருந்து வந்து யாராவது கிளாஸ் எடுத்தார்களோ என்னமோ, முன்னைக்கிப்போது அதிகம் இலவச இணைப்புகளை மும்முரமாகப் பத்திரிகையோடு வினியோகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையோடு சினிமாப்பட டிவிடி முற்றிலும் இலவசம். இஸ்மாயில் மெர்ச்சண்டின் ‘ஹீட் அண்ட் டஸ்ட் ‘, வால்ட் டிஸ்னி படமான ‘லயன் கிங்க் ‘ என்று இப்படியான ஓசி டிவிடிகள் என் அலமாரியை வேகமாக நிறைத்துக் கொண்டிருக்கின்றன.

எடின்பரோ செய்தித்தாள் நிருபர்கள் மகா காரியமாக இந்த ஊரை தினசரி நாலு தடவை பிரதட்சிணமாகச் சுற்றி வந்து (என்ன, நம்ம காரைக்குடி பரப்பளவு இருக்குமா ?) மாய்ந்து மாய்ந்து செய்தி உருவாக்கி சாயந்திரங்களில் அச்சடித்து இறக்குகிறார்கள். படிக்கக் கொஞ்சம் வினோதமாக இருக்கிறது இந்தப் பேட்டைப் பத்திரிகை பலதும்.

உதாரணத்துக்கு முந்தாநாள் சாயந்திர முதல் பக்கச் செய்தி –

எடின்பரோ பிரின்சஸ் வீதியில் – இந்த ‘ராஜகுமாரர்கள் வீதி ‘ நம் அண்ணா சாலை போல்; அதில் காலே அரைக்கால் நீளம் கூட வராது என்றாலும் – ஒரு கடையில் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளையடித்த திருடன் கடை வாசலுக்கு வந்ததும் குற்ற உணர்ச்சி தாங்காமல் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். பத்து நிமிடம் இப்படி அழுத பிறகு தெருவோடு நடந்து போன ஒரு போலீஸ்காரர் இந்த ஆளைத் தோளைத் தட்டிக் கண்ணைத் துடைத்து விட்டு விஷயம் என்னவென்று விசாரிக்க, ‘கொள்ளையடிச்சிட்டேன் அண்ணாச்சி ‘ என்று நம்மாள் போலீஸ்காரர் தோளில் சாய்ந்து இன்னும் அதிகம் விம்மியழுதிருக்கிறான். மனசு கனக்க காவலர் அழுவாச்சித் திருடனை காவல்நிலையம் கூட்டிப் போக, வழக்கு நடக்கிறதாம். கோர்ட் கச்சேரியில் வக்கீல், நீதிபதி, குமாஸ்தா எல்லோரும் கூட்டமாக அழுது மூக்கைச் சிந்தி முன்னூற்றைம்பது வருடச் சுவரில் தடவாமல் இருந்தால் சரிதான்.

ஊரில் தெருவுக்கு நாலு உணவு விடுதி இந்தியச் சாப்பாட்டுக்கடை. அதாவது வடக்கத்திய ரொட்டி, னான், லாம்ப் டிக்கா, கபாப், தட்கா தால், பிண்டி சப்ஜி, மொகலாய் பிரியாணி வகையறா தான் மொத்த இந்தியாவிலும் மக்கள் சாப்பிடும் உணவு என்று அடம்பிடித்து ஊரை உலகத்தை நம்ப வைக்கிற வகை. இந்த ரெஸ்டாரண்ட்காரர்கள் தொண்ணூறு சதவிகிதம் பங்களாதேஷ்காரர்கள்.

வைக்கோல் சந்தை பகுதியில் (ஹே மார்க்கெட்) டால்ரி தெருவில் நீள நடந்தால், வரிசையாக முடிதிருத்தகங்கள். ஹேர் டிரஸ்ஸர் என்று எந்த விளம்பரப் பலகையும் சொல்லவில்லை. ‘பார்பர் ஷாப் ‘ தான் எல்லாம். நாலு பார்பர் ஷாப்புக்கு நடுவில் ‘வெராந்தா ‘ என்று ஒரு ரெஸ்டாரண்ட். உள்ளே கிளிண்ட் ஈஸ்ட்வுட் புகைப்படம். இங்கே பலதடவை வந்து பிரியாணி சாப்பிட்டுப் போயிருக்கிறாராம் அவர். ஸ்காட்லாந்துக்காரரான ‘ஜேம்ஸ்பாண்ட் ‘ புகழ் சியன் கானரி வந்து சப்பாத்தி சாப்பிட்டிருக்கிறாரா என்று விசாரித்தேன். முன்னொரு காலத்தில் எடின்பரோவில் சாமானியமான பால்காரராக இருந்து அப்புறம் சூப்பர் ஸ்டாராக மாறிய சியன் கானரி ஸ்காட்லாந்தில் தங்குவதே அபூர்வமாம்,

வெராந்தா ஓட்டல் மெனு கார்டில் பத்தாவது ஐட்டம் ‘மதராஸ் சாம்பார் ‘. படுகுஷியாக ஆர்டர் செய்தால் திட பதார்த்தமாக ஒரு வஸ்து சுடச்சுட மேசைக்கு வந்து சேர்ந்தது. ஓட்டல் சமையல்காரர்கள் முன்னே பின்னே மதராஸையும் பார்த்ததில்லை, சாம்பாரையும் பார்த்ததில்லை என்பதால் உத்தேசமாகச் செய்து ஒப்பேற்றிய சமாச்சாரம் அந்த சாம்பார். அது வயிற்றுக்குள் ரொம்ப நேரம் அமர் சோனார் பங்க்ளா என்று பெங்காலியில் உரக்கப் பாடிக்கொண்டிருந்தது.

பி.பி.சியில் வழக்கம்போல் இரண்டாம் உலக யுத்த டாக்குமெண்டரி காட்டிய நேரம் போக பிரதமர் டோனி பிளேர் சொற்பொழிகிறார். சும்மா சொல்லக்கூடாது. பொய் சொன்னாலும் புஷ்ஷை விட நம்பும்படி சொல்கிறார். சேனல் நாலு டிவியில் வழக்கமான ஜான் ஸ்நோ, நம்மூர் கிருஷ்ணன் குருமூர்த்தி கூட்டணி வெற்றிகரமாக செய்தி படித்துக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணனின் சகோதரி கீதா குருமூர்த்தி பிபிசியில் இப்போது மிஸ்ஸிங்க்.

இந்தியா அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று எல்லா பிரிட்டாஷ் சானலிலும் மாய்ந்து மாய்ந்து சொல்கிறார்கள். நம் நாட்டுப் பொருளாதார முன்னேற்றம் உலகிலேயே அதிகமான ஆறரை சதவிகிதம் என்று தெரிகிறது. கூடவே வேகவேகமாக முன்னணிக்கு வருவது சீனா. அங்கே இப்போது ‘Communism is spelt with the smallest C ‘ என்று பிபிசி செய்தியாளர் ஜோக் அடிக்கிறார்.

காலை டெலிவிஷன் ‘ஹார்ட் டாக் ‘ பேட்டியில் ப.சிதம்பரமும், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் உற்சாகமாக இன்னும் ஒளிமயமான எதிர்காலம் இந்தியாவுக்கு உண்டு என்று சொல்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா கராத் சங்கடத்தோடு சிரிக்கிறார். மத்திய அரசை ஆதரித்துக்கொண்டே எதிர்க்க வேண்டிய, ‘running with the hares and hunting with the hounds ‘ தனமான நிலைமை மார்க்சிஸ்டுகளுக்கு. ‘இந்தியா முன்னேறி வருகிறது. ஆனால் வளர்ச்சி அடையவில்லை ‘ என்கிற மாதிரி பிருந்தா சொல்லும்போது அவருடைய நெற்றியை விடப் பெரிய பொட்டில் முகத்தை மறைத்துக்கொள்ள முயல்கிறார். How do you spell communism, comrade Brinda ?

—-

eramurukan@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்