ஊழலின் சந்நிதியில் 100 நரபலிகள்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

மஞ்சுளா நவநீதன்


கும்பகோணத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும் என் வருத்தங்கள். எத்தனையோ வருத்தங்கள் வரும்போது எழுதாமல் இருந்திருக்கிறேன். வருத்தங்களை சொல்லும் விதம் எனக்கு வருவதில்லை. அதனாலேயே வாய்மூடி மெளனியாகப் பேசாமல் இருந்துவிடுவேன். வருத்தத்துடன் கோபமும் வரும்போது பேசிவிடத்தான் வேண்டியிருக்கிறது.

குழந்தையை இழந்த ஒரு தாயின், தந்தையின் கண்ணீரின் முன் ஒரு வினாடியில் படிப்பும், செல்வமும் அகங்காரமும், எப்படிப்பட்ட ஆறுதல் மொழிகளும் பொருளற்றுப் போய்விடுகின்றன. என்ன வார்த்தைகளினால் அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்லிவிட முடியும் ?

நேரடியிலும் இணையத்திலும் பத்திரிக்கைகளிலும் எல்லாவிடங்களிலும் மக்கள் இயற்கையாக வருத்தப்பட்டிருக்கிறார்கள். புலம்பியிருக்கிறார்கள். கவிதைகளில் கதறியிருக்கிறார்கள். பலருடைய கரங்கள் நீண்டு இன்றைய ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களை நீக்கி சுட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக வெகுகாலமாய் வளர்ந்து நிற்கும் ஊழலின் இன்றைய பலனை மட்டும் பார்த்து இன்று ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்களை குற்றம் சொல்லிப் பயனில்லை. கும்பகோணத்துக்குச் சம்பந்தமே இல்லாத என்னருகில் உட்கார்ந்திருக்கும் அமெரிக்கப்பெண் படத்தை பார்த்து அழுதாள்.

அடிப்படையில் ஈரமும் இரக்கமும் மனிதாபிமானமும் உள்ள மக்களே நாம் என்றிருந்தாலும், ஏன் அந்தக் குழந்தைகள் இறந்துபோயின ?

அதற்கும் நாமே காரணம்.

என்னதான் ராகுல் காந்தி வரை அனைத்து அரசியல் தலைவர்களும் ‘இதனை அரசியல் படுத்தக்கூடாது ‘ என்று கூறியிருந்தாலும், எனக்கு அவை அனைத்தும் அபத்தமானவையாகவே படுகின்றன. அதையும் தாண்டி அவர்களின் சுயநலமே தெரிகின்றது. அவர்களது அரசியல் படுத்தி ஆதாயம் தேடிக்கொள்ளும் விழைவுகளாகவே எனக்கு தென்படுகின்றன.

இது முழுக்க முழுக்க அரசியல் விளைவு. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்த பின்னரும், அவரவர் அள்ளிப்போட்ட நெருப்பு அவரவர் நெஞ்சைச் சுடவில்லை என்பதைக் காணும்போது எனக்கு வியப்பும் அயர்வுமே வருகின்றது. இந்த அரசியல் நிகழ்வை நாம் அறிந்துவிடக்கூடாது என்று இந்த அரசியல்வாதிகள் செய்யும் மாய்மாலமும் அதனை நம்பி ஏமாறும் மக்களும் எனக்கு அயர்வையே உண்டுபண்ணுகிறார்கள்.

இந்த நிகழ்வின் காரணம் நம் சமூகம் முழுவதும் ஊடுருவி நம்மை நாசம் செய்துகொண்டிருக்கும் சமூகப் பொறுப்பின்மையும், அரசியலினால் மேன்மையும் அங்கீகாரமும் பெற்றுவிட்ட ஊழலும் தான்.

நம் வீட்டை சுத்தம் செய்து குப்பையை அடுத்த வீட்டின் வாசலில் கொட்டும் நம் குணம். நம் குடும்பம் ஜாதி தாண்டி அடுத்தவரை கண்டுகொள்ளாத ஒரு சுய பாதுகாப்புத்தனம். நாம் இப்படி இருந்ததில்லை. நாம் இப்போது இப்படி இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அது நம்மைச் சுற்றி இருக்கும் ஊடகங்களும், நம் அரசியல் அமைப்பில் கெளரவப்படுத்தப்பட்ட சில நியமங்களுமே காரணம்.

அண்ணா காலம் வரைக்கும் எத்தனையோ அரசியல் பிரச்னைகள் இருந்தாலும் அரசில் ஊழல் இவ்வாறு ஊடுருவவில்லை. வடக்கில் லால் பகதூர் சாஸ்திரி காலம் வரைக்கும் அரசில் இந்த அளவுக்கு ஊழல் ஊடுருவவில்லை. ஆனால் அதுவரைக்கும் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்ற கட்டுப் பாடுகள் நிறைந்த சோசலிஸ அமைப்பு , விதிகள் யாருக்கும் புரியாதபடி அதிகாரவர்கக்த்தினர் கையிலும், அரசியல்வாதிகள் கையிலும் ஏராளமான அதிகாரக் குவிப்பை ஏற்படுத்திவிட்டது. பின்னால் வந்தவர்களுக்கு ஊழல் செய்ய இதுவே மிகவசதியான ஒரு அமைப்பாக கிடைத்துவிட்டது. வடக்கே இந்திரா காந்தி தெற்கே கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும், அமைப்பு ரீதியாக ஊழல் நம் சமூகத்தை அழிக்க ஆரம்பித்தது. அதன் தீய விளைவுகளே தீ நாக்குகளாக கும்பகோண பள்ளிக்கூடத்தை அழித்திருக்கின்றன. இதுவே ஸ்ரீரங்கத்து திருமண மண்டபத்தையும் அழித்தது.

நேரடியாகவே நாம் கேட்ட அரசியல் வசனங்கள் என்ன என்ன என்று பாருங்கள்.

‘தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா ? ‘

‘பணப்புழக்கம் ‘

‘என் சாதிக்காரன் மட்டும் தான் ஊழல் செய்கிறானா ? ‘

‘லஞ்சம் வாங்காதவன் பிழைக்கத் தெரியாதவன். ‘

‘உலகத்தில் எந்த நாட்டில் தான் ஊழல் இல்லை ‘ (இது இந்தியில்)

‘ நான் ஊழல் செய்யவில்லையென்றால் வேறு ஒருவன் செய்யத்தானே போகிறான் ? நானே செய்துவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டால் என் குடும்பத்திற்கு உதவுமே. ‘

இப்படி பேசுபவர்களைப் பாராட்டி நாம் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு முதலமைச்சர்களாகவும் பிரதமர்களாகவும் ஆக்கியிருக்கிறோம்.

இன்று அரசியலுக்கு வருகின்றவர்கள் அதனை ஒரு வியாபாரமாகவே பார்க்கிறார்கள். யாரும் சமூக சேவை செய்யவரவில்லை. அதெல்லாம் காந்தி காலத்தைய மனிதர்கள் உயிருடன் இருந்தவரைக்கும்தான். இந்திரா காந்தி அனைவருக்கும் ஊழல் ஸ்னானம் செய்துவைத்து சென்றுவிட்டார்.

அந்த நிகழ்ச்சியை பத்திரிக்கையில் படிப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பு என் அரசியல்வாதியாக விரும்பும் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் ஒரு அரசியல்வாதியை எதிர்பார்த்தது போலவே அவரும் பணத்துக்காகவே அரசியலில் ஈடுபடவிரும்புவதாகத் தெரிவித்தார். இத்தனைக்கும் அவர் மெத்தப்படித்தவர். உயர்கல்வி முடித்தவர். பணம் செய்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கும்போது அரசியலில் சேர்ந்து அரசாங்கத்தில் இருந்துகொண்டு லஞ்சம் வாங்குவதன் மூலம் ஏன் பணம் சேர்க்கவேண்டும் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டேன். நான் இல்லையென்றால் வேறொருவன் இருப்பான். என் வியாபாரத்துக்கு அனுமதி வேண்டி நான் அவனிடம் கை கட்டி, கப்பம் கட்டி நிற்கவேண்டும். நான் வாங்கக்கூடிய லஞ்சத்தை நான் கொடுக்க வேண்டும், என்றார்.

ஊழல் அனைத்து நாடுகளிலும் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தியாவில் ஊழல் பிணி சமூகத்தை அழுகி நாறடிப்பது போல வேறொரு நாட்டில் நான் பார்த்ததில்லை.

ஒவ்வொரு முறையும் இந்தியா வரும்போது நான் கஸ்டம்ஸ் தாண்டி வரும்போது லஞ்சம் கேட்கப்படாமல் நான் தாண்டியது கடந்த இரண்டு முறைகளில் மட்டுமே. நான் லஞ்சம் கொடுக்காவிட்டாலும், என் பொருட்டு என் சுற்றத்தாரும் நண்பர்களும் நிச்சயம் அரசில் பணி புரிபவர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.

யாருக்கும் புரிபடாத சட்டங்கள், மக்களுக்குத் தெரியாத சட்டங்கள், குழப்பமான சட்டங்கள், நடைமுறைக்கு ஒவ்வாத சட்டங்கள், அபத்தமான சட்டங்கள் என்று நம் சட்டப்புத்தகமே நிரம்பிவழிகிறது.

97 சதவீத வருமான வரி, மேலே 5 சதவீத மார்க்-அப், 5 கோடி சைக்கிள் செய்யும் தொழிற்சாலை 50000 சைக்கிள்கள்தான் செய்யமுடியும் என்ற கோட்டா, சைக்கிள் தொழிற்சாலை நிறுவ லைசன்ஸ், சைக்கிள் உற்பத்தி செய்ய பர்மிட் என்று கழுத்தை இறுக்கிப்பிடித்து சட்டங்கள். அதிகார வர்க்கத்திடம் குவிந்திருக்கும் அதிகாரத்துக்கு சம்பந்தமில்லாத வருமானம் அரசில் வேலை செய்பவர்களுக்கு. படிப்பறிவற்ற ஏழைகள் நிரம்பி வழியும் நாட்டில் சுதந்திரமடைந்து 50 வருடங்களுக்கு மேலாகியும் அடிப்படைக் கல்வியைக் கூட முழு மக்கள்தொகைக்கும் கொடுக்க விரும்பாத அரசியல்வாதிகள். மாட்டுத்தீவன ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரயில்வே காபினட் மந்திரிப்பதவி. சூர்ஹட் லாட்டிரிசீட்டு ஊழலில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு மக்கள் நல மந்திரி பதவி. அவர்களுக்கு இன்னும் ஓட்டுப்போடும் படிப்பறிவற்ற மக்கள்.

அந்த தீக்கு நானும் ஒரு பொறுப்பாளி. என் சுற்றத்தாரும் பொறுப்பாளிகள். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நாட்டை ஆள ஓட்டுப்போட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்.

இது ஊழலின் விளைவல்ல, வெறும் அஜாக்கிரதை தான் என்று சொல்பவர்கள் இருக்கக் கூடும். பொதுவாகவே ஊழலினால் யாரும் பாதிக்கப் படுவதில்லை அதனால் பரவாயில்லை என்ற ஒரு கருத்து தமிழ்நாட்டில் எல்லோரிடமும் இருக்கிறது. ஊழல் பின்விளைவற்ற ஒரு விஷயம் அல்ல. கார் ஓட்டத்தெரியாத ஒருவன் பணம் கொடுத்து பெர்மிட் வாங்கும்போது, அவன் ஓட்டும் கார் விபத்துக்காளானால் பாதிப்பில்லையா ? சாலை போடப் பணம் லஞ்சம் கொடுத்து சாலையை மோசமாய்ப் போட்டால் அதனால் நடக்கும் விபத்துகளுக்கு லஞ்சம் வாங்கியவன் பொறுப்பில்லையா ?

ஊழலிற்கு பலியானவர்களையே ஊழலினால் நிகழ்ந்த விளைவிற்குப் பொறுப்பாக்கும் அசிங்கமான ஒரு நடத்தை தான், ஆசிரியர்கள் மீது பழி போடுவது. பாவம், பள்ளி ஆசிரியர்கள். கல்வி வியாபாரத்தில் மந்திரிகளும், அரசியல்வாதிகளின் ஆதரவில் பணம் பண்ணும் வியாபாரிகளும் , அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது லஞ்சத்தினாலோ இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏதும் இல்லாத பள்ளிகளுக்கு அனுமதி அளித்த அதிகாரிகளையும் விட்டுவிட்டு ஆசிரியர்கள் குழந்தைகளைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்று பேசுவது மோசமான அடாவடிச் செயல்.

சரியான சம்பளம் கூட கிடைக்காமல் சுரண்டலுக்கு ஆளாகிற , இந்த தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தீ அணைக்கும் உபகரணங்கள் கிடைத்தனவா ? அந்த உபகரணங்களைப் பயன்படுத்தப் பயிற்சி முறைப்படி அளிக்கப் பட்டதா ? ஒரு கட்டடத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்ற விதிமுறைகள் உண்டா ? அதை யாராவது பின்பற்றுகிறார்களா ?

நம் மக்கள் அடிப்படையில் நல்லவர்கள். அனைவருக்கும் உதவவேண்டும் என்ற மனப்போக்கு உள்ளது. மதம், சாதி போன்ற பிரிவு சக்திகள் ஒரு புறம் இருந்தாலும் அது ஒன்றை மட்டுமே வைத்து இவர்கள் எதையும் எடை போடுவதில்லை. மற்றவர்களை மதிக்கும் இந்தப் பண்பிற்கு மிகப்பெரிய அடி எம் ஜி ஆர்- கருணாநிதி பிளவின் போது ஏற்பட்டது. கருணாநிதியை சினிமா வில்லன் இடத்துக்குக் கொண்டு சென்று , உன்னை விடமாட்டேன் என்று எம்ஜியார் செய்த பிரச்சாரமும், அதற்கு எதிராக கருணாநிதி எம் ஜி ஆரைக் கேவலமாக நடிகன், மலையாளி என்று திட்டியதும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக ஒரு கட்சி சார்ந்த பிளவினை உருவாக்கிவிட்டது. கட்சி சார்பினால் வாழ்க்கையின் எல்லாமும் விளக்கம் கொள்கிற ஒரு சகிப்பின்மை உருவாகியது. இன்று அது பூதாகாரமாகி ஜெயலலிதா-கருணாநிதி என்று நிற்கிறது. ஜெயலலிதா முதல்வர் என்றால் கருணாநிதி சட்டசபைக்குப் போவதில்லை. கருணாநிதி முதல்வர் என்றால் ஜெயலலிதா போவதில்லை. இதனால் ஒருவரையொருவர் மதிக்கும் போக்கு புதைக்கப் பட்டுவிட்டது, எதிராளி எது செய்தாலும் அதை ஓட்டை என்று கூறும் மனப்பான்மை உருவாகிவிட்டது . அது அன்றாட வாழ்க்கையில் எந்தப் பணியில் ஈடுபட்டாலும், கட்சி சார்பற்றவர்களுக்கு எதிர்காலம் இல்லாத ஒரு நிலையை உருவாக்கி விட்டது.

99 சதவீத மக்கள் லஞ்சம் வாங்கவோ அதன் மூலம் பலனடையவோ முடியாதவர்கள். ஆனால் லஞ்சத்தால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகிறவர்களும் இவர்களே. இவர்கள் லஞ்சம் கொடுப்பதை நிறுத்திவிட்டால், நிலை சீர்பெற்றுவிடும் என்று உபதேசிப்பவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள் – லஞ்சம் என்பது ஓர் இடத்தில் மட்டுமே என்றால் இந்த உத்தி பலன் தரக் கூடும். ஆனால் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இதனை ஒரு பொது மக்கள் இயக்கம் அன்றி வேறு எதுவும் எதிர்த்துப் போராட முடியாது. அரசியல் கட்சிகள் தாம் பலன் பெறத்தான் போராடுமே தவிர, மக்களின் ஒருங்கிணைந்த நலனுக்குப் போராடும் என்று எதிர்பார்க்க முடியாதபடி சுயநலம் மிகுந்து நிற்கின்றன.

இந்த நிலையின் முக்கிய குற்றவாளிகளாக நம் பத்திரிக்கைகளும் படித்தவர்களுமே இருக்கின்றார்கள்.

அரசியல் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காத குமுதம் , ஆனந்தவிகடன் போன்ற கேளிக்கை ஊடகங்கள். கட்சி சார் அரசியலை முன்னிறுத்தி மக்களை முட்டாளடிக்கும் சன் , ஜெயா தொலைக்காட்சி நிறுவனங்கள். கட்சி சாராதவர்களையும், இருகட்சி சாராதவர்களையும் அதிகாரம் எதுவும் பெற முடியாமல் நிறுத்தி வைத்துள்ள தேர்தல் முறைகள். விதிகளைக் கருதாமல், எம் எல் ஏ, எம் பி மற்றும் அரசியல்வாதிகளின் சிபாரிசில் தான் எல்லாம் நடக்கும் என்று ஆகிவிட்ட வழக்கங்கள்.

அரசியல் கருத்துகளுக்கு இடம் கொடுக்கும் ஊடகங்களும் ஒரு சார்பான அரசியல் கருத்துகளுக்கும் கட்சி சார்ந்த வெறுப்பை முதன்மைப் படுத்தும் ஊடகங்களாக துக்ளக் , தினமலர், தினகரன் போன்று இருப்பது. ஜூனியர் விகடன் , நக்கீரன் போன்ற ஏடுகளில் சில ஊழல்கள் பற்றி செய்திகள் வந்தாலும் அது என்ன பயனை அளிக்கிறது என்பது தெரியவில்லை. ஓரிரு இடங்களில் தான் இது நடப்பது போன்ற ஒரு பிரமையையும் உண்டுபண்ணிவிட்டது.

சிறிய அளவில் நடக்கும் ஊழல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிய அளவில் நடக்கும் ஊழல்களை மழுப்புவதும் மறைப்பதுவும் தான் இந்த ஏடுகளின் பணியாய் உள்ளது.

தான் விரும்பும் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்ற காரணத்துக்காக தன் கட்சி அரசியல்வாதியின் ஊழல்கள் அவ்வளவு பெரியவை அல்ல என்று சாதிப்பது.

நம் அரசியல் அமைப்பில் இருக்கும் குறைபாடுகளை நீக்க வேண்டிய ஆராய்ச்சிக் கட்டுரைகளோ அல்லது பிரச்னைகளை பேசும் கட்டுரைகளையோ வெளியிடாமல் மெளனம் சாதிப்பது.

**

நான் முன்பே எழுதியிருந்தது போல நம் மாநில அரசாங்கங்களில் பணி புரியும் எந்த அமைச்சரும் ரகசியக்காப்பு பிரமாணம் எடுக்கத்தேவையில்லை. என்ன ரகசியத்தை மக்களிடமிருந்து காப்பாற்றபோகிறார்கள் ? மாநில அரசின் அனைத்து ஆவணங்களும் எந்த பத்திரிக்கையாளர் கேட்டாலும் கிடைக்கும் படி இருக்க வேண்டும். மத்திய அரசிலும் ராணுவதுறை தவிர வேறு எந்த துறையிலும் ரகசியம் தேவையில்லை. ஆனால் மாநிலம் மாநிலமாக இந்த திறந்த அரசாங்கத்தைக்கொண்டுவரலாம். ஆனால் மாநில அரசுக்கு ஆட்சிக்கு வரக்கூடிய எந்த அரசியல்வாதிக்கும் அதில் நன்மை இல்லை என்பதை கவனிக்கும்போது இதனை ஒரு பெரும் கோரிக்கையாக வைக்ககூடியவர்கள் மக்களும் பத்திரிக்கைகளும் படித்தவர்களுமே. ஏதேனும் ஒரு கட்சி தான் ஆட்சிக்கு வந்தால் இந்த திறந்த அரசாங்கத்துக்கான சட்டம் கொண்டுவருகிறேன் என்று சொன்னால் அதற்கே என் ஓட்டு என்று மக்களின் எண்ணம் உருவாக்கப்படவேண்டும்.

குழப்பமான பொருந்தாத சட்டங்களை ஆராயவும் அவற்றை மறு பரிசீலனை செய்து காலத்துக்குத் தகுந்தாற்போல மாற்றவும் பத்திரிக்கைகளும் படித்தவர்களும் நேரம் ஒதுக்கவேண்டும் எந்த சட்டம் மூலம் யாருக்கு

எளிமையாக அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் படி சட்டங்களும் விதிகளும் இருக்கும்படி இவர்கள் முனைய வேண்டும். உதாரணமாக ஒரு கட்டிடத்துக்கு சொத்துவரி செலுத்துவது ஒரு ‘எஸ்டிமேட்டர் ‘ கையில் தான் தோன்றித்தனமாக இருக்கக்கூடாது. இத்தனை சதுர அடி இடத்தில் இந்த ஊரில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு சொத்துவரி இத்தனைதான் என்று யார் வேண்டுமானாலும் கணக்கிட்டுக்கொள்ளும்படி எளிமையாக இருக்கவேண்டும். அந்த பணத்தை நியாயமாக ஒருவர் யாருடைய இடையூறும் இல்லாமல் கட்டிவிட்டுச் செல்லும்படி இருக்கவேண்டும். அந்த விதிகள் அந்தந்த மாநகர மற்றும் முனிஸிபாலிட்டி அமைப்பால் ஒரு சிறிய புத்தக வடிவத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்படவேண்டும்.

சமூகப் பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டியது. சமூகத்தில் ஒரு தவறான நிலையில் கட்டிடமோ அல்லது பள்ளிக்கூடமோ இருந்தால் அதனைப் பற்றி ஒரு மொட்டை கடுதாசியாவது எழுதிப்போட அக்கறை வேண்டும். அச்சமில்லாமல் அநியாயம் தட்டிக் கேட்க ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும். நிர்வாகம் திறந்த புத்தகமாக செயல்பட்டால் தான் இந்தச் சூழ்நிலை உருவாகும். நிர்வாகிகள் மக்களுக்குப் பணிபுரிகிற வேலைக்காரர்களே தவிர எஜமானர்கள் அல்ல என்ற உணர்வு பெருக நாம் என்ன தான் செய்ய முடியும் ?

***

உடனே knee jerk reaction என்று சொல்லும் விதமாக கூரைகளைப் பிரித்துப் போட ஆரம்பித்துவிட்டார்கள். 2000 வருடங்களுக்கும் மேலாக கூரை தமிழ்நாட்டின் வீடுகளைப் பாதுகாத்துவருகிறது. பிரசினை கூரையில் இல்லை. மக்கள் கூடும் இடம் மாடியில் இருப்பதும். தீ அணைப்பு வசதிகள் இல்லாமல் புளிமூட்டையாய் அடைத்து கல்விக் கடைகள் நடத்தும் பண மூட்டைகள் தான். அவசர அவசரமாக இவர்கள் கூரையைப் பிய்த்து எறிந்துவிட்டு , அஸ்பெஸ்டாஸ் போட ஆரம்பித்துவிடுவார்கள் என்று என் மனம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அஸ்பெஸ்டாஸ் வளர்ந்த நாடுகள் எல்லாவற்றிலும் தடை செய்யப் பட்டுவிட்டது. டி பி, மற்றும் நுரையீரல்க் நோய்களுக்கு அஸ்பெஸ்டாஸ் காரணம் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.

வெளியேற வசதிகள் செய்யப்பட்டு, தரையில் அமைக்கப்பட்ட அறைகளில் கூரையை உபயோகப் படுத்தத்தான் வேண்டும். அதைவிட்டு கூரைப் பள்ளிகளை மூடினால், ஏற்கனவே கல்வி மறுக்கப் பட்ட ஏழைமக்களை அனாதரவாய் விடுவதற்கு ஒப்பாகும்.

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்