உள்ளே இருப்பதென்ன?

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

மஹ்மூத் அல் ஹஸன்


திண்ணை 30/06/06 இதழில் சூபிமுகமது பெயரில் வெளியான கடிததத்தில்
//அதுசரி கபாவின் வெளியே ஹரம்சரீபில் தொழுகை நடத்தும் அதேசமயத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கபாவின் வாசல் திறக்கப்படுகிறது. சவுதி மன்னர் சார்ந்த பரம்பரைக்குமட்டுமே போக அனுமதியுள்ள கபாவின் உட்புறத்தில் என்ன இருக்கிறது வகாபி ஆதாரத்தோடு சொல்லமுடியுமா.. //
என்று வகாபியிடம் கேட்கப் பட்டுள்ளது. திண்ணை எழுத்தாளர் வகாபி இது குறித்துத் தெளிவாக்கக் கூடும் எனினும் இக்கேள்வி, ‘அறியாமை’ அல்லது, ‘சும்மா போகிற போக்கில் ஏதோ கேட்க வேண்டுமே’ என்பதற்காகக் கேட்கப் பட்டது என்பதைத்தான் காட்டுகிறது.
ஒரு விஷயத்தைப் பற்றி எழுதுவதற்கு முன் அதற்கான ஆவணங்கள், நூலாதாரங்கள், கட்டுரைச் சான்றுகள், வரலாற்றுப் பதிவுகள் போன்றவை உண்டா எனத் தேடி எழுதுவதுதான் எழுத்து நேர்மை (வகாபியின் ஆக்கங்களில் இதைத் திண்ணை வாசகர்கள் கண்டு வருகிறோம்).
க’அபாவைத் தூய்மைப் படுத்தும் பணியில் அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் அனுமதிக்கப் படுவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழகத் தலைவராகவும் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினராகவும் செயல்பட்ட மறைந்த ஆ.கா.அ. அப்துஸ்ஸமது, ‘புனித ஹஜ்ஜின் இனிய நினைவுகள்’ என்று ஒரு நூல் எழுதியிருந்தார் ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்கு முன் வெளியான நூல் அது. அந்நூலில் அவர் க’அபாவைத் தூய்மை செய்யும் குழுவில் தாம் இடம் பெற்றதை மெய்சிலிர்க்க விவரித்துள்ளார். அதைச் சூபி படித்துப் பார்த்து அவரது அனுபவத்தைத் தெரிந்து கொண்டு, பின்னர் எழுதியிருக்க வேண்டும். ஆனால் தமிழில் 21 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு சிறு நூலைக் கூடப் படிக்காமல் அல்லது படிக்கும் ஆர்வமின்றி, தமக்கு அறிவற்ற ஒரு கரு குறித்துக் கருத்துச் சொல்ல வந்துள்ளார் சூபி.
நம்மூர் அப்துஸ்ஸமது சவூதி மன்னர் பரம்பரையில் தோன்றியவரா என்பதைச் சிந்தனையுள்ள திண்ணை வாசகர்களின் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.
இபுறாஹீம் நபிக்கும் அவரது மகனுக்கும் க’அபாவைத் தூய்மை செய்யும்படி இறைக்கட்டளை வந்தது (அல் குர் ஆன் 2:125, 22:26).
க’அபா ஆலயத்தை நிர்வகிக்கவும் தூய்மை செய்யவும் அதிகாரம் பெற்றவர்கள் ஆதிகாலம் முதலே இருந்து வந்துள்ளனர் என்பது வரலாறு. இன்று சவூதி அரசு அதன் நிர்வாகியாய் உள்ளதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் மட்டுமே அதைத் தூய்மை செய்வதற்கு உரிமை கொண்டாடினாலும் உலக முஸ்லிம்களுக்கு அதில் எவ்வித அட்டியுமில்லை.
//மற்றுமொரு கருத்து கபா என்ற சொல் கர்ப்பகிருகா என்ற சமஸ்கிருத மூலச் சொல்லிலிருந்து உருவானது என்றும் இது கோவிலின் மூலஸ்தான கருவறையை குறிப்பது போன்றதாகும் என்பதும் கபாவிற்கு உள்ளே அஷ்ட கோண வடிவ மகாம் ஏ இபுராகீமின் பீடம் உள்ளது என்றொரு கருத்தும் உள்ளது. மேலும் ஹஸ்ருல் அஸ்வத் கறுப்புக்கல்லை ஸ்ங்கே அஷ்வேத என்னும் பொருள்படும் வெண்மை அல்லாத கல் எனவும் இது சிவலிங்கத்திற்கு ஒப்பானது எனவும் கூட பொருள் கொள்ளப்படுகிறது.//:
மேற்கண்டவாறு கருத்துச் சொல்பவர் யார்/யாவர் என்று விபரம் எழுதியிருந்தால் நன்றாயிருந்திருக்கும். எதிலும் கருத்துச் சொல்ல யாருக்கும் உரிமை இருக்கிறது: ஆனால் அதில் சிறிதளவு ‘உண்மையின்’ சாயலும் தேவை.
க’அபா என்ற அரபிச் சொல்லின் பொருள் ‘சதுரம்’ என்பதாகும். சதுரமான கட்டடம் அல்லது அறை என்று கொள்ளலாம். அதைக் ‘கர்ப்ப கிறுக்கா’ என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து உருவானது என்று சொன்னால், அந்தச் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் ‘கார்பெட் கேரேஜ்’ என்ற ஆங்கிலச் சொல் என்று மற்றொருவர் சொன்னாலும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் பிறகு இதற்கு முடிவே இராது..
மகாமே இபுறாஹீம் இருப்பது க’அபாவிற்கு வெளியே தான்; மாறாகச் சூபி கூறியுள்ளது போல் க’அபாவிற்கு உள்ளே இல்லை. க’அபா கட்டடத்திற்கு உள்ளே எதுவுமே இல்லை.
ஹஜ்ர் என்ற அரபிச் சொல் கல் என்ற பொருள் தரும்.
அஸ்வத் என்றால் கறுப்பு என்று பொருள் .
க’அபாவின் கல் கறுப்பு நிறத்தது என்பதால் அரபி மொழியில் கறுப்புக் கல் என்கின்றனர். அதற்கு இவர் குறிப்பிட்டபடி வெண்மை அல்லாத கல் என்று பொருள் கொண்டால் நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை எனப் பல நிறங்களையும் குறிக்குமே தவிர கறுப்பு என்று மட்டும் குறிக்காது.
அவரிடம் கடவுச் சீட்டு இருந்தால் சவூதிகளின் நாட்டிற்குச் சென்று க’அபாவில் சிவலிங்கம் உள்ளதா அல்லது வெறும் கரு நிறக் கல் உள்ளதா எனப்பார்த்து வரலாம் என் நேசமுடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
ஹமீது ஜாஃபரே! கொஞசம் இந்தப் பக்கமும் வாருங்களேன்: க,அபா பற்றிக் கருத்துச் சொல்ல!
mahmoodalhasan@gmail.com

Series Navigation

மஹ்மூத் அல்ஹஸன்

மஹ்மூத் அல்ஹஸன்