உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

ரெ.கா.


‘சிங்கப்பூர் மலேசிய நாடக ஆசிரியனோ, சிறுகதை ஆசிரியனோ, நாவலாசிரியனோ தமிழக அல்லது இலங்கை எழுத்தாளர்களை விடச் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று யாரும் ஒரு விவாதத்தைச் சிங்கப்பூரிலிருந்தோ மலேசியாவிலிருந்தோ சொன்னதில்லை ‘ எனத் தமிழவன் தம் எதிர்வினையில் (ஜூன் 23) கூறுகிறார். இதற்கு முன் அவர் தமிழ் எழுத்தின் அடையாளம் பற்றியே எழுதினார். இப்போது யார் யாரை விடப் பெரியவர் என்ற வாதத்தை எழுப்புகிறார்.

சிறந்த எழுத்து எது என்பதைப் பற்றிய போட்டி அல்ல இது. தமிழவன் அசலில் எழுப்பிய கேள்வியை ‘சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்கள் தங்கள் தனி அடையாளத்துடன் எழுதுகிறார்களா, அல்லது தமிழ் நாட்டு எழுத்துக்களைப் பிரதி எடுக்கிறார்களா ? ‘ என்றே நான் அர்த்தப்படுத்திக் கொண்டேன். ( ‘பிரதி எடுக்கிறார்கள் என்ற வாசகத்தைப் பயன் படுத்தவில்லை ‘ எனத் தமிழவன் கூறினாலும் அவரின் உட்கருத்து இதுதான் என மீண்டும் சொல்லுவேன்.) ஆனால் அவரின் இந்த எதிர்வினைக்குப் பிறகு அவர் தமிழ் இலக்கியத்துக்கு ஓர் உலகப் பொது அடையாளத்தைத் தேடுகிறார் என்றும் அந்தப் பொது அடையாளத்தைக் காட்டிக்கொள்ள சிங்கப்பூர், தமிழ் இலக்கியங்கள் ஒரு பங்களிப்பும் செய்திருக்கவில்லை எனவும் சொல்கிறார் எனவும் அர்த்தப்படுத்திக் கொள்ளுகிறேன்.

தமிழ் எழுத்துக்கு எப்படி ஓர் உலகப் பொது அடையாளம் இருக்க முடியும் ? ஏன் அப்படி ஒன்று இருக்க வேண்டும் ? எந்தெந்த மண்ணில் அவை விளைகின்றனவோ அந்தந்த மண்ணின் தனி அடையாளங்களைத்தான் அது காட்ட வேண்டும். மலேசியத் தமிழ் இலக்கியம் தன் உள்ளடக்கத்தில் அந்தத் தனி அடையாளத்தைக் கொண்டிருக்கிறது என்பதே என் முதல் பதில். இப்படித் தமிழ் இலக்கியம் தனது diaspora மூலம் பரந்து விரிந்திருப்பதுதான் அதன் அடையாளத்தைப் பெருமைப் படுத்துவது.

‘வடிவம் சொல்முறை என்று பிரிக்காமல், பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்திருக்கும் உயர் மனமொழியை மண்ணின் இயல்புக்கேற்ற இலக்கியம் என்கிறேன் ‘ என்று அவர் கூறுகிறார்.

மலேசியாவில் வழங்கும் தமிழ் மொழியின் DNA தமிழ்நாட்டுத் தமிழிலிருந்து பெறப்பட்டது. இதை நாங்கள் மலேசியாவுக்கு ஏற்ப மாற்றமுடியாது. ஆகவே சொல்முறை இங்கு அதிகம் மாறியிருக்கவில்லை. இதை விட்டால் எங்களுக்குத் தனி அடையாளத்தைத் தர இருப்பது எங்கள் மண்ணின் வாழ்வும் அதன் கூறுகளும்தான். இவை தமிழ்நாட்டிலிருந்து மாறுபட்டுள்ளன. அதை நாங்கள் எழுதுகிறோம். அதையே எங்கள் தனி அடையாளமாகக் காணுகிறோம். இந்த அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டு மேம்படுத்துவதே இங்கு இலக்கியம் வளரும் வழி.

தமிழ் எழுத்துக்கு உலகப் பொது அடையாளம் இருக்க வேண்டும் என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. தமிழ் வாசக, விமர்சன உலகம் தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, புகலிட எழுத்து ஆகிய அனைத்தையும் ஒரே கூடையில் போட்டு அதற்கொரு உலகப் பொது அடையாளம் காண முடியாது. எந்த உலகளாவிய மொழிக்கும் (ஆங்கிலம் உட்பட) அப்படி ஓர் பொது அடையாளம் கிடையாது. அப்படி இல்லாமல் இருப்பதே இலக்கியச் செழுமைக்கு நன்மை தரும்.

தமிழ்நாட்டுச் சிறு பத்திரிகைகள் மலேசிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது முற்றிலும் வேறு பிரச்சினை. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றின் முற்போக்குச் சிந்தனைகளுக்கு எங்கள் நாட்டு எழுத்தாளர்கள் ஈடுகொடுக்க முடியாமல் இருக்கலாம். மலேசியக் கருப்பொருள்கள் பொதுவான தமிழ்நாட்டு வாசகர்களுக்கு ஈர்ப்புடையனவல்ல என்ற கருத்து இருக்கலாம். எங்கள் நாட்டு எழுத்தாளர்கள் தமிழ்நாட்டு சிறுபத்திரிகைகளில் தங்கள் எழுத்தைப் பதிப்பதில் முயற்சிக் குறைவு உடையவர்களாக இருக்கலாம். இந்தக் காரணங்கள் எவையும் எங்கள் நாட்டின் இலக்கிய அடையாளத்தைக் குறித்தவை அல்ல.

‘கார்த்திகேசு… இலக்கியம் என்ற பெயரில் அங்குக் கொஞ்ச நஞ்சம் இருப்பதை விட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார் ‘ என்று தமிழவன் எழுதுவதில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி. வேறு நான் எப்படி நினைப்பது ? ஆனால் இந்தக் ‘கொஞ்ச நஞ்சம் ‘ என்று தமிழவன் புறங்கையால் தள்ளும் இலக்கியத்தின் அளவு மிகப்பெரிது என்பதையும், இந்த நாட்டில் 130 ஆண்டுகளாகத் தமிழ் மறைந்து விடாமல் காப்பாற்றி வரும் கொள்கைவாதிகளின் உழைப்பில் அவை உருவானவை என்பதையும் நாங்கள் மிக மரியாதையோடு போற்றுகிறோம் என்பதை மட்டும் அவருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

அன்புடன்

ரெ.கா.

karthi@myjaring.net

Series Navigation