உயிர் போகும் தருணம் குறித்து

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

ம.ஜோசப்


எனது உயிர் போகும் தருணம் குறித்து, இன்று
அதிகாலையில் ஏனோ யோசித்தேன்.
அது, அதற்கு முன் கண்ட கனவின் நீட்சியே.
எனது பூர்வீக கிராமம் குறித்த சித்திரம் அது.

பன்னெடுங் காலமாக வற்றிப் போயிருந்த குளத்தில் நீர் நிரம்பியிருந்தது.
அதன் நடுவே இருந்த கிணறு முற்றிலும் மறைந்து போயிருந்தது.
குளத்திற்கு நீர் வரும் பாதைகளிலெல்லாம் நீர் நிறைந்திருந்தது.
சிறுவர்கள் அதில் விளையாடிக் களித்தனர். அவர்களது
தாய்மார்கள், அவர்களை ‘போதும், போதுமென ‘ செல்லமாய்
கடிந்து கொண்டிருந்தனர்.

எங்கும் பசிய வயல் வெளிகள்.
விருந்தினர்களை அழைத்து, ஊரின் பெருமைகளை விவரித்து,
கோவிலையும், மலைக் கோவிலையும் சுற்றிக் காண்பிக்கிறேன்.

புராதனக் கோவில் அழகுறப் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதனை ஒட்டிய புதிதாகக் கட்டப்பட்ட பெரிய கோபுரமொன்றின்
உச்சியில் சிறுவர்கள் விளையாடுகின்றனர்.

அப்படி ஒரு காலத்தில் உயிர் பிரிந்தால்
நலமாக இருக்குமென நினைக்கும் போது,
கனவு முடிந்து போயிருந்தது.

—-
michaelarulabel@yahoo.co.uk

Series Navigation