உயர்சாதிமயநீக்கம்

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இந்தியாவில் விடுதலைக்கு முன்பாக பிரிட்டீஷ் ஆட்சியின்போது 79 ஆண்டுகளுக்கு முன்பு 1930 ல் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.இந்துக்களில் ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளும் உட்சாதிபிரிவுகளும் இருந்துள்ளன. இந்த கணக்கெடுப்பின்படிஇருபத்தைந்து சதவிகிதம் மக்கள் தலித்துகளாக இருந்துள்ளனர்

விடுதலைக்குப்பிறகு பிறகு குடியரசு இந்தியாவில் முதற் கணக்கெடுப்பு 1951ல் நடை பெற்றது.இதில் சாதிவாரி கணக்கெடுப்புமுறை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய்பட்டேல் சாதிவாரியான கணக்கெடுப்பை எதிர்த்தார். இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 341 மற்றும் 342 ன் படி பட்டியலில் உள்ள தலித் மற்றும் பழங்குடியினர் குறித்த கணக்கெடுப்பு மட்டும் தொடர்ந்தது.
தற்போதைய சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை தலித் மற்றும் பழங்குடியினரின் கோரிக்கையாக எழவில்லை.இந்து இடைநிலை பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களின் முக்கியக் கோரிக்கையாகவே வெளிப்பட்டுள்ளது.

இந்திய அரசியல்சாசன பிரிவு 340ன்படி சமூகரீதியாகவும்,கல்வி மற்றும் பொருளாதாரரீதியாகவும் பின் தங்கியுள்ள சாதிப்பிரிவினர்களுக்கான முன்னேற்றத்திட்டங்களை வகுக்கும் நோக்கில் இரு ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஒன்று 1953 ல் அமைக்கப்பட்ட காகாகலேல்கர் கமிஷன். மற்றொன்று 1978 ல் அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன். மண்டல் கமிஷன் அறிக்கை இந்துக்களில் 44 சதவிகிதமும் பிற சமயங்களில் எட்டு சதவிகிதமுமாக பிற்படுத்தப்பட்டவர்கள் 52 சதவிகிதம் பேர் உள்ளதாக தெரிவிக்கிறது.

இந்திய சமூகவியல் அறிஞர்களில் ஒருவரான கெயில் ஓம்வெட் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிகளின் விவரங்களை சேர்ப்பது நவீன தேசத்தை கட்டமைக்கும் அரசியல்ரீதியான நடவடிக்கையாகும்.இது சாதிச் சமூகங்களின் சமத்துவமின்மைகளை நீக்குவதற்குபெரிதும் துணை புரிவதாக குறிப்பிடுகிறார்.இந்து பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கணக்கெடுப்பு அச் சாதிகளின் எழுச்சிவாயிலாக தலித்துகளின் மீதான தீண்டாமை வன்கொடுமைக்கு வழிவகுக்கும் என்பதாக சமூகவியல் அறிஞர் அமுல்யா கங்குலி ஒரு கருத்தை முன்வைக்கிறார்.விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியா சாதீய பிரிவினையை அதிகரிக்க வழிசெய்யுமெனவும் சாதீய நடவடிக்கைகளுக்கு சமூகத்தில் அதி முக்கியத்துவம் ஏற்பட்டு விடுமென்றும் சாதிரீதியான கணக்கெடுப்பிற்கு எதிரான கருத்தை தெரிவிக்கிறார்.

சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பிற்கு எதிராக எழுப்பப்படும் குரல்களில் உயர்சாதீய மனோபாவமே நிறைந்திருக்கிறது. ஏன் சாதிரீதியான கணக்கெடுப்பிற்குஇவர்கள் அஞ்சுகிறார்கள் என்றால் உயர்சாதியினர் சதவிகிதம் மிகக் குறைவாக உள்ளதையும் மிகச் சிறுபான்மையாக உள்ள இவர்கள் உயர்மட்ட அதிகாரவர்க்கமாக உள்ளதும் அம்பலப்பட்டுவிடும்.பிற்படுத்தப்பட்டவர்களின் சதவிகிதம் அதிகமாக இருக்கும்நிலை அதிகாரபூர்வமாக உறுதிப்படும் போது தேசிய வளத்தின் பங்கீடும் வளர்ச்சியின் அனுகூலங்களும்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகம் சென்று சேர்ந்துவிடும் என்பதான பயத்தின் வெளிப்பாடாகவும் இவை அமைந்துவிடுகின்றன.

2)சாதிவாரியான கணக்கெடுப்பு பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சாத்தியம் உள்ளது.ஆயிரக்கணக்கான மக்கள் தலித்துகளாக இருந்தாலும் தங்களின் சாதியை சரியான முறையில் பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளவர்களாகவும் உள்ளனர். ஏனெனில் சாதிப்பட்டியலில் ஒடுக்கப்பட்ட பல சாதிப்பிரிவுகள் இல்லாமலேயே உள்ளன.
இந்தியாவில் ஏறத்தாழ 24 மில்லியன் கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பழங்குடி மக்களாக உள்ளனர்.கிறிஸ்தவப் பழங்குடிகளாக மதம் மாறிய இம்மக்கள் ஏற்கெனவே பழங்குடி மக்கள் பெறுகின்ற கல்வி,வேலைவாய்ப்பு உரிமைகளிலிருந்து புறந்தள்ளப்பட்டிருக்க்றார்கள். தற்போதைய கணக்கெடுப்புப்பிலும் பழங்குடியினர் பட்டியலில் கிறிஸ்தவப் பழங்குடிகள் செர்க்கப்படவில்லை என்பதும் கவனத்திற்கொள்ளவேண்டிய பிரச்சினையாகவே உள்ளது.

அகில இந்திய கிறிஸ்தவ கவுன்ஸில் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் துறை பதிவாளருக்கு சட்டரீதியாக தாக்கீது அனுப்பியுள்ளது.அதில் அரசியல் சாசனம் வழங்கிய மதச்சார்பின்மை,சுதந்திரமான மதநம்பிக்கை சார்ந்த அடிப்படை உரிமைக்கு எதிரான வகையில் கணக்கெடுப்பாளர் கையேட்டில் மக்களுக்கான கேள்விகளில் மதம்,பழங்குடிசாதிப்பிரிவு பகுதி கிறிஸ்தவப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளதற்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

1931 ல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆணையர் ஹூட்டன் தனது பதிவில் சாதியை உண்மையாக மக்களிடமிருந்து தெரிந்து கொள்வதில் ஏற்படும் இடர்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.அப்போதைய கண்க்கெடுப்பில் தென்பட்ட கருத்தாக்கம் சமஸ்கிருதமயமாக்கம்/உயர்சாதிமயமாக்கம் என்பதாக இருந்தது.
அடித்தளசாதியைச் சார்ந்த ஒருவர் தன்னை உயர்சாதியாக காண்பித்துக் கொள்வது. ஆனால் தற்போதைய சூழலிலோ சமஸ்கிருதமய நீக்கம்/உயர்சாதிமயநீக்கம் என்பதான கருத்தியல் செயல்பாடு நிகழ்கிறது.மண்டல்கமிஷனின் அமுலாக்கத்திற்குப் பிறகு இது தீவிரமாகியுள்ளது.

கல்வி,வேலைவாய்ப்பு உரிமைகளை தன் சாதியினர் பெறும் பொருட்டு தங்களை உயர்சாதி அடையாளத்திலிருந்து நீக்கம் செய்ய போராட்டங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன்.பழங்குடியினர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ள போராடிய குஜ்ஜார்களையும், உத்தரபிரதேசத்தில் ஜாட் சாதியினரை பிற்படுத்தோர்பட்டியலில் அப்போதைய பாஜாக அரசு அரசியல் காரணங்களுக்காக சேர்த்ததையும் குறிப்பிடலாம். தமிழத்தில் உயர்சாதி வெள்ளாள சமூகத்தினர் தங்கள் சாதியை பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இணைக்கப் போராடுவதையும் கல்வி வேலைவாய்ப்பு உரிமை களை மட்டும் பெறுவதற்காக உயர்சாதிமயநீக்கம் என்பதாக ஆய்விடலாம்.

Series Navigation