உண்மையைத் தேடியலைந்தபோது

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

கற்பகவிநாயகம்புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும்
*****************************************

“புதுச்சேரியில் ஈச்வரன் தர்மராஜா கோவில் இடிக்கப்பட்டு மாதா கோவில் கட்டப்பட்டது” என்றும், “புதுவை ஈச்வரன் தர்மராஜர் கோவில் இடிக்கப்பட்டமைக்கு ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஆதாரமுள்ளது. ஈச்வரன் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட கன்னி மேரி மாதாகோவிலின் படிக்கட்டுகளாக ஹிந்துக்கள் வணங்கிய விக்கிரகங்கள் பயன்படுத்தப்பட்டன!” ( அந்த நான்கு பேருக்கும் நன்றி! – மலர்மன்னன் மார்ச்சு 24,2006) என்றும் மலர் மன்னன் சொல்கிறார்.

இவர் குறிப்பிடுவது போல் வேதபுரீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது அந்நாட்குறிப்பில் உள்ளது. ஆனால் அதை இடித்துத்தான் மாதா கோவில் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.

மலர் மன்னன் சொல்வதைப் போன்றே இந்து முன்னணியும் தனது துண்டுப் பிரசுரம் ஒன்றில் “பாண்டிச்சேரி புனித ஜென்மாக்கினி மாதா கோவில், வேதபுரீச்சுரர் ஆலயத்தை இடித்து விட்டு அதன் மீது கட்டப்பட்டது” என்றும், “1748ல் பிரெஞ்சு கவர்னராக பாண்டிச்சேரியில் இருந்த டியூப்ளேதான் இவ்வாறு கட்டினான்” என்றும் ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை ஆதாரம் காட்டி நீட்டி முழங்குகிறது.

உண்மையில் புதுவையில் அப்போது நடந்தது என்ன என்பதை ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் மூலமே அறிய முயல்வோம்.

1748 இல் இடிக்கப்பட்ட வேதபுரீசுவரர் கோவில் அருகில் ஏற்கெனவே கிறிஸ்தவ ஆலயம் இருந்துள்ளது என்பதனை, ஆனந்த ரங்கம் பிள்ளை, கோவில் இடிக்கப்படுவதற்கு முந்தைய ஆண்டில், 1747 ஆம் ஆண்டின் புது வருஷ ஆசி சொல்ல, சம்பா கோவிலுக்கு (கிறித்துவ கோவில்) போனதன் மூலம் நிரூபணமாகிறது.

ஆகவே, ஈச்சுவரன் கோவிலை இடித்துத்தான் கிறித்துவ ஆலயம் எழுப்பப்பட்டது என்பது உண்மை அல்ல.

துயூப்ளே, மத வெறியுடன் ஈச்சுவரன் கோவிலை இடித்தான் எனச் சொல்லவும் ஆதாரம் இல்லை. ஆனால் அக்கோவிலை அப்புறப்படுத்த சில பாதிரிகள் முனைந்தனர் 1747 ஆம் ஆண்டில். அப்போது துயூப்ளேயிடம் பெரும் செல்வாக்கோடு இருந்த பிள்ளையின் மூலம் சிபாரிசு பெற்றுக்கொண்டு வேதபுரீசுவரர் கோவிலை இடிக்க, காரைக்காலை சேர்ந்த கிறித்துவ மதகுரு முனைந்திருக்கிறார். அதற்கு தூதுவராய் வந்த ஆளின் பெயர் – அன்னபூரணய்யர்.

1747 அக்டோபர் 8ஆம் தேதி அன்னபூரணய்யர், காரைக்கால் கிறித்துவ மதக்குருவின் தூதராக வந்து வேதபுரீச்வரர் கோவிலை இடித்துப் போடச் சொல்லி, ஆனந்த ரங்கம் பிள்ளையிடம் சிபாரிசு செய்ததை அன்னாரின் டைரி பதிவு செய்துள்ளது. ஆனால், அச்செயலுக்கு பிள்ளை ஒப்பவில்லை.

மாறாக அதற்கு முந்தைய ஆண்டு 1746 செப்டம்பர் 22 ஆம் தேதி, “மக்கள், வேதபுரீஸ்வரன் கோவில் மதில் கட்டுவதற்கு உத்தாரம் கேட்டார்கள். அந்த மதில் கட்டுகிறதற்கு மாத்திரம் கட்டளையிட்டால், வெகு தூரம் கீர்த்தியாய் இருக்குமென்று பின்னையும் தோத்திரமான உபசாரமான வார்த்தைகளாய்ச் சொல்லிக் கேட்டவிடத்திலே நல்லது அப்படியே உத்தாரங் கொடுக்கிறோம் என்கிறதாய்ச் சொல்லிக் கொண்டே நடந்து கணக்கு எழுதுகிற அறையிலே போய் விட்டார்கள்” துயூப்ளே என்று பிள்ளையின் சொஸ்த லிகிதக் குறிப்பு சொல்கிறது.

ஜென்மராக்கினி மாதா கோவிலை புதுவை மக்கள் சம்பா கோவில் என்று அழைத்தல் வழக்கம். இதற்கும் இந்து முன்னணி “அது ஆதியிலே சம்பாலீசுவரர் கோவில்தான்” எனக் கரடி விட்டது. “சாம்பவுலோ” என போர்த்துகீசிய பாதிரிகளை அழைக்கும் சொல்லே மருவி “சம்பா” ஆனது என்பது உண்மை.

(இதே மாதிரி, சென்னையை அடுத்த பரங்கி மலையை ‘பிருங்கி முனிவர்’ மலை எனக் கயிறு திரித்தனர். பரங்கி என்பது ஐரோப்பியரைக் குறிக்கும் சொல் என்பதும், 18ஆம் நூற்றாண்டு முதல் அம்மலையைச் சார்ந்த இடங்களில் ஐரோப்பிய ராணுவம் பாளையம் அடித்திருந்தது என்பதையும் மத வெறியில் மக்கள் யோசிக்கவா போகின்றனர்? )

சம்பா கோவிலை 1692ஆம் ஆண்டில் பிரான்சு தேசத்தின் மன்னன் உதவியுடன் கட்டியுள்ளனர், புதுவை கிறிஸ்தவர்கள். அடுத்த ஆண்டே டச்சுப் படையெடுப்பில், இக்கோவில் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் டச்சுக்காரர்களின் சர்ச் கட்டப்பட்டது. 1761 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் மீண்டும் அது இடிக்கப்பட்டது. 1791ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டதே இப்போதுள்ள சர்ச்.

1746 ஆம் ஆண்டு, வேதபுரீசுவரருக்கு மதில் கட்ட உத்தாரம் கொடுத்த துயூப்ளே, ஏன் இரண்டே ஆண்டுகளில் இடிக்கச் சொன்னான்?

நாட்குறிப்புகளை வாசிக்கையில் 1746 க்கும், 1748க்கும் உள்ள வேறுபாடு புலனாகின்றது. ஆம். 1748 ஆகஸ்ட் மாதவாக்கில், பிரிட்டிஷ் படைகள் புதுச்சேரியைத் தாக்குவதும், பதிலுக்கு பிரெஞ்சுப் படையின் தாக்குதலும் விலாவாரியாகப் பதிவாகியுள்ளது.

அப்போரில் பீரங்கித் தாக்குதல் இருபக்கத்திலும் நடந்துள்ளது. பிரிட்டிசாரின் பீரங்கிக் குண்டு, தீக்குடுவை போன்றவை புதுச்சேரியுள் குறி தவறாது வீழ்ந்து பலர் கை கால் சிதறி மாண்ட செய்திகளும், பிராஞ்சுப் படையின் குண்டுகள் குறி தவறிப் போய் வீழ்வதும் பிள்ளையின் டைரியில் சொல்லப்பட்டுள்ளன.

இப்போரில், குறி பார்த்துக் குண்டு போட பிரிட்டிஷாருக்கு வேதபுரீச்வரர் கோவில் கோபுரம் நன்கு உதவியுள்ளது.
தூரத்தில் இருந்தே பிரெஞ்சுக் கோட்டையைக் கண்டுபிடிக்கும் வகையில் கோபுரம் இருந்ததால் அது பிரிட்டிஷ் படைக்கு உதவியாய் இருந்தது.

பிரிட்டிஷ் படைகளின் பீரங்கிக் குண்டுகளில் இருந்து புதுச்சேரிக் கோட்டையைக் காக்கவே, கோவில் இடிக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்டது, அப்போரின்போது வேதபுரீசுவரர் கோவில் மட்டும் இல்லை. கிறித்துவக் கோவில் ஒன்றின் மதிலும் இடிக்கப்பட்டது என்பதனை 1748 ஆகஸ்ட் 25ஆம் தேதி பிள்ளையின் டைரி குறிப்பிடுகிறது.

“இன்றைய தினம் மண்வெட்டி கோடாலி வெட்டுக்கத்தி முதலானதுகளெல்லாம் கொடுத்தனுப்பி அரியாங்குப்பத்துப் பாதிரி கோவில் சமீபத்திலே இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிப் போடச்சொல்லியும் கோவில் மதிலை இடிக்கச் சொல்லியும் கோவிலிலே நானூறு சிப்பாய்களைக் கொண்டு போய் வைக்க சொல்லி உத்தாரம்” என்கிறது டைரி.

செப்டம்பர் 8, 1748 ல் வேதபுரீசுவரர் கோவில் இடிக்கப்பட்டதை எண்ணி மிகவும் வருந்தி பிள்ளை எழுதி இருக்கிறார். அவ்வாறு அவர் வருத்தப்பட்டு எழுதியதிய செய்திகளும், கோவில் இடிக்கப்பட்டதற்கு எவ்வித மத துவேசக் காரணத்தையும் நமக்கு உணர்த்தவில்லை.

(இங்கிலீஷ் படை) “கோவிலைப் பிடித்தால் நூறு பேர் அன்பது பேர் சாவார்கள் யெல்லாரும் வூரைவிட்டுப் போவார்களென்கிற பயமொன்று நாளது வரைக்கும் இருந்ததுதான். போகாமல் மற்றுப்போய் கொளுத்தும்போது இப்படி செய்கிறோமெ யென்னமோ வென்கிற அனுமானத்தினாலே சொல்தாதையும் (soldiers ??) சிப்பாய்களையும் குதிரைக்காரரையும் யேர்க்கனவே கொண்டு போய் வைத்துக் கொண்டு நடத்தினான்” என்று அக்கோவில் இடிப்பின் சூழலை ஆனந்த ரங்கர் கூறுகிறார்.

போரின்போது கோவிலை இடிக்க யாரெல்லாம் ஆதரவாய் இருந்தார்கள் என்பதையும் அவரின் புலம்பலில் இருந்தே கண்டறிய முடியும்.

“ஆறுமுகத்தா முதலியுங் கொலுத்துக்கார வெங்கடாசலம் தம்பி லச்சிகானும், இரண்டொரு பேரும் அன்னபூரணய்யருக்கு சாவடி துபாசித் தனம் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்து அப்பாலே கட்டுகிறதற்கு நாங்கள் வூராருக்கு சம்மதி பண்ணிப் போடுகிறோமென்று வந்து சொன்னவர்கள் உங்களுடனே கூட இருக்கிறார்கள். இப்போ இரண்டு மாசமாய் துரை பெண்சாதியண்டைக்குப் போய் பெரிய துபாசித்தனம், தம்பிச்சா முதலி மகன் மலையப்ப முதலிக்கும், தனக்கு சாவடி துபாசித்தனமும் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்துப் போடுகிறோமென்று பேசவில்லையா?

இதுவுமல்லாமல் சம்பாவுலு கோவிலு பாதிரிகளண்டைக்கு அன்னபூரணய்யன் போய் ஊராரையெல்லாம் சம்மதி பண்ணினேன். நீங்கள் தனக்கும், மலையப்ப முதலிக்கும் உத்தியோகம் கொடுத்தால் அந்தப்படிக்கு ஈஸ்வரன் கோயிலை இடித்துக் கட்டிக் கொள்ள பண்ணிப் போடுகிறோமென்று பேசவில்லையா?” என்று வேதபுரீஸ்வரர் கோவில் இடிபட உறுதுணையாய் நின்ற இந்துக்களை ஆனந்தரங்கம் பிள்ளை எழுதி வைத்த டைரியே சாட்சி சொல்கிறது.

மலர்மன்னன் சொல்வது உண்மைக்கு மாறானது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

வேலூருக்கு ஒரு ‘ஜலகண்டேஸ்வரர்’ கதை என்றால், புதுச்சேரிக்கு ‘வேதபுரீஸ்வரர்’ புனைகதையா?

இல்லாத ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு எவ்வாறெல்லாம் கலவர விதை ஊன்றுகிறார்கள் இவர்கள்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் எனும் பெரிய மனிதர்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

“அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்கிற வழக்கறிஞர் மிகச்சிறந்த சட்ட நிபுணராக மட்டுமின்றி, பொறுப்புணர்வு மிக்க சமூக நல ஆர்வலராகவும் பணியாற்ற நேரம் ஒதுக்கிய, ஜாதி வித்தியாசமின்றி நம் அனைவரின் மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய பெரிய மனிதர்தான்.” – மலர்மன்னன்.

சாதி வித்தியாசமின்றி அல்லாடி ஆற்றிய அரும்பணி ஒன்றைப் பார்க்கலாம்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றி, பார்ப்பனர் அல்லாதோரின் நன்மைக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், இந்திய தேசியப் (அதாவது பிராமணர்களின் நலனுக்கான) பத்திரிக்கைகளான, ஹிந்து, சுதேசமித்திரன் ஆகியவை, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் முன்வைக்கும் புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் குறிப்பிடுவது போல் ஆதிக்க சாதி வெறி இங்கு கிடையாதென்றும், இப்பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தால் வன்முறை பெருகுவதாயும் கயிறு திரித்து வந்தன.

தேசபந்து சித்தரஞ்சன் தாஸின் (சுயராஜ்ஜியக் கட்சித் தலைவர்) தாயாதி சகோதரர் (cousin) எஸ் ஆர் தாஸ், தில்லியில் இந்திய அரசாங்க நிர்வாக சபை அங்கத்தினராக இருந்தார். வைஸ்ராய், தேசியப்பத்திரிக்கைகளின் செய்திகள் குறித்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத் (அதாவது ஜஸ்டிஸ் கட்சி) தலைவர்களில் ஒருவரான பனகல் அரசரிடம் விளக்கம் கேட்டார். பனகல் அரசர், வைசிராயிடம் உண்மை நிலையை அறிய ஓர் அதிகாரியை அனுப்பக் கோரினார். வைசிராயும் பார்ப்பனரல்லாதோரின் நிலைமையை அறிய, சென்னை மாகாணத்திற்கு எஸ் ஆர் தாஸை அனுப்பி வைத்தார்.

எஸ் ஆர் தாஸ் அரசு வேலையாக வந்தார். ஆனால், இங்குள்ள சில தலைவர்கள், தாஸ் நல்லதொரு அறிக்கையை-அதாவது பார்ப்பனர் நலனைக் காக்க- எழுத வேண்டும் எனும் உள்நோக்கத்துடன், அவருக்கு விருந்து நடத்தினர்.

தாசிகளை அழைத்து வந்து கச்சேரிகள் நடத்தினர்.

அந்தத் தலைவர்களில் முக்கியமானவர்கள் சர்.சி.பி.ராமஸ்வாமி அய்யர் மற்றும் அல்லாடி கிருஷ்ண சாமி அய்யர்.

எஸ் ஆர் தாஸ் இம்மக்களின் நியாயமற்ற இந்த நடவடிக்கைகளை மிகவும் கண்டித்துப் பேசியுள்ளார்.

“உத்தியோகத்தில் மற்றவர்கள் முன்னேறி வருவதை சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள”ச் சொல்லி ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அப்போது தேசிய இயக்கக்காரர்கள், அரசின் பதவிகள், விருதுகள், விருந்துகள் ஆகியவற்றையும், கோர்ட்டுகளையும் கூட ஒத்துழையாமை இயக்கத்தின்பேரில் புறக்கணித்து வந்தார்கள் என்பதையும், தன் சாதி நலனுக்காகவும், பார்ப்பனரல்லாதோர் நன்மை பெற்றிடக்கூடாது என்பதற்காகவும், ஒத்துழையாமையைக் கூட உதறி விட்டு, தாஸைக் காக்கா பிடிக்க, தாசிகளைப் பிடித்துவர அலைந்துள்ளனர். (ஆதாரம் 08/08/1926 குடியரசு)

பிற்காலத்தில்தான் (1950களில்) அல்லாடி, கம்யூனல் ஜிஓ வை எதிர்த்தார் என்றில்லை. 1926லேயே பிராமணரல்லாதோர் – சூத்திரர்,பஞ்சமர் மேம்பட்டு விடக்கூடாது என்பதற்காக தாசிகளை வைத்தும் காரியம் செய்யப் பார்த்தவர்தான்.

மயிலாப்பூரில் உட்கார்ந்து தனக்கு மட்டும் சொத்து சேர்க்காமல், தன் சாதியையும் கவனித்ததாலோ என்னவோ, ம.ம.வுக்கு அல்லாடி “மரியாதைக்கும் நன்றிக்கும் உரிய பெரிய மனிதர்” ஆகிறார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இந்துத்துவம் ஆதரித்த குழந்தைத் திருமணம்
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

குழந்தைத் திருமணம் பற்றி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் நிலைப்பாட்டையும், வைதீகர்களின் நிலைப்பாட்டையும் சில வாரங்களுக்கு முன் சொல்லி இருந்தேன். இதற்கு எதிர்வினையாக வந்த ஈ மெயில்களில் பல, 1920களில் உள்ள காலகட்டத்தையும், வைதீகத்தின் அன்றைய இறுகிய பிடிமானத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கோரியிருந்தன.

வைதீகத்தின் இறுகிய பிடிமானத்தை அன்றே எதிர்க்க ஒரு சுயமரியாதை இயக்கம் தேவைப்பட்டுள்ளது.

ஈமெயில் அனுப்பிய அன்பர்கள், இன்றைக்கு குழந்தைத் திருமணம் இந்துக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு விட்டது என நம்பிக் கொண்டு உள்ளனர். அதனை மறுக்கும் விதமாய், 1992ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம் இந்திய வரலாற்றில் பதிவாகி உள்ளது.

“ராஜஸ்தான் மாநிலத்தில் அரசின் பெண்கள் முன்னேற்றத் திட்டத்தில் பணியாற்றி வந்த பன்வாரி தேவி, உடன்கட்டை ஏற்றுதல், குழந்தைத் திருமணம் ஆகியவற்றினை எதிர்த்தும், குடும்பநலத் திட்டங்களை விளக்கியும் பெண்கள் மத்தியில் கிராமம்,கிராமமாய்ச் சென்று பிரச்சாரம் செய்து வந்தார். அவருக்குத் தரப்பட்டிருந்த பணியே அதுதான்.

குஜ்ஜார் எனும் உயர்சாதியைச் சேர்ந்த ராம்கரன் குஜ்ஜார் என்பவர் தனது ஒரு வயதுப் பெண் குழந்தைக்குத் திருமணம் செய்யத் திட்டமிட்டபோது, அது தவறு என்று அக்குடும்பத்தினருடன் வாதாடினார் பன்வாரி. அவரின் முயற்சி பயனில்லாது போகவே, தனது மேலதிகாரிகளுக்கு இதனைத் தெரிவித்தார். அங்கிருந்து காவல்துறைக்குச் செய்தி போனது. ராம்கரன் குஜ்ஜார் வீட்டுக்குப் போலீசு வந்தது. ஆனால் அதற்குள் திருமணம் நடந்து முடிந்து விட்டது. தங்களை அவமானப்படுத்திய பன்வாரியை மன்னிக்க குஜ்ஜார்கள் தயாராக இல்லை.

சரியாக ஆறு மாதங்கள் கழித்து, 22/09/1992 அன்று 38 வயதான பன்வாரியை, அவளது கணவனின் முன்னால் (அவனைக் கட்டிப்போட்டு விட்டு) ஐந்து பேர்கள் கற்பழித்தனர். கற்பழித்தவர்களில், குழந்தைக்குத் திருமணம் முடித்த ராம்கரன் குஜ்ஜார், மற்றும் அவனின் உறவினர் மூவர் மற்றும் சிரவண் பாண்டா எனும் 70 வயது பிராமணர் ஆகியோரும் அடக்கம்.

3 ஆண்டுகள் விசாரணை. பன்வாரிக்கு ஆதரவாய் 19 சாட்சிகள். விசாரணை முடியும் முன் 6 நீதிபதிகள் மாற்றம். ஆனால் வந்த தீர்ப்போ “சாதி வேறுபாட்டையும் (அதாவது பன்வாரி தேவி, கீழ் சாதிப்பெண் என்பதையும்) வயதையும் மறந்து ஒரு 40 வயதுக்காரரும், 60 வயதுக்காரரும், 70 வயதுப் பிராமணர் ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, ஒரு பெண்ணின் மீது ஓநாய் போலப் பாய்ந்து கற்பழித்திருப்பார்களா? இந்தியக் கிராமத்தின் பாமர மனிதன் ஒருவன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வானா? பாரதக் கலாச்சாரம் இன்னும் அவ்வளவு மோசமாகத் தாழ்ந்து போய் விடவில்லை” எனச்சொல்லி குற்றவாளிகளை விடுவித்தது.

தீர்ப்பு வந்ததுதான் தாமதம். ‘பெருமைமிக்க புராதனமான பாரதக் கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் அதன் ‘உள்ளர்த்தத்தை’ உலகிற்கு மீண்டும் நிரூபித்துக் காட்டினார்கள். குற்றவாளிகள் 5 பேரையும் மாலை மரியாதையுடன் ஊர்வலமாய் அழைத்து வந்தார்கள். மேடையில் அமர வைத்து குஜ்ஜார் சாதியின் மானத்தைக் காப்பாற்றிய அம்மறவர்களின் வீரத்தைப் போற்றினார்கள். இவ்விழாவிற்குத் தலைமை வகித்தவர் கன்னியாலால் என்ற பாரதீய ஜனதாக் கட்சி எம் எல் ஏ.”
(நன்றி: புதிய கலாச்சாரம் ஜூலை 1996 இதழ்)

இன்னும் செய்தி ஊடகங்களின் கவனத்திற்கு வராமலேயே போகும் செய்திகள் எண்ணற்றவை.

குழந்தைத் திருமணத்தை ஆதரித்தும், அதனைக் கண்டித்த பெண்ணைக் கற்பழித்த கும்பலைப் புகழ்ந்தும் விழாக்கொண்டாடுவது தான் 1996லும், இந்துக் காவலர்களின் வழக்கமாய் இருக்கின்றது.

இந்துத்துவவாதிகள் இன்னும் உடன்கட்டை ஏற்றுதலுக்கும், குழந்தைத் திருமணத்திற்கும் ஆதரவாய் இருக்கும் நிலையில் ‘தாங்களாகவே இந்துக்கள் வெறுத்து இக்கொடிய வழக்கங்களைக் கைவிட்டனர்’ எனும் கூற்றில் பொருள் இருக்கிறதா?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

தீண்டாமையும் ஆன்மீகமும்
$$$$$$$$$$$$$$$$$$$$$

‘தீண்டாமை ஷேமகரமானது’ என்றும், தலித்களின் கோவில் நுழைவை எதிர்த்தும் காஞ்சி சங்கராச்சாரியார் (மறைந்தவர்) பேசி இருக்கிறார் என்று நான் எழுதியதும், அதற்கு என்ன ஆதாரம் என்று பலரும் கேட்டிருந்தனர்.

அதனை 1933ல் ‘மதராஸ் லா ஜர்னல் ஆபீஸ், மயிலாப்பூரில்’ இருந்து வெளியான சங்கராச்சாரியாரின் உரைத் தொகுப்பில் இருந்து காணலாம். இதில் 1932-ல் – அதாவது காந்தியை ஆச்சாரியார் சந்தித்த பிறகு- சென்னையில் அவர் ஆற்றிய உரைகள் இடம் பெற்றுள்ளன. அத்தொகுப்பில் இருந்து கீழ்க்கண்ட பகுதியை ‘புதிய கலாச்சாரம்’ ஆகஸ்ட்-அக்டோபர் 1993 இதழ் மறு அச்சாக்கம் செய்துள்ளது. 1933-ல் மதுரை மீனாட்சி கோவில் முதலான பெருங்கோவில்களில் நுழையும் உரிமை, தலித்களுக்கும், நாடார்களுக்கும் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

“ஒரு நாள் ஸ்ரீசங்கராசார்யர்கள் (ஆதிசங்கரர்) ஸ்நானத்துக்குப் போனார்கள். அப்பொழுது ஒரு பறையன் வேண்டுமென்றே அவர் பக்கத்தில் வந்தான். அவனைப் பார்த்து எட்டிப்போ என்று ஸ்ரீசங்கரர் சொன்னார். அவன் உடனே சில கேள்விகள் கேட்க ஆரம்பித்தான்.

“எதையோ போகச் சொல்லுகிறீரே; எதிலிருந்து எதை எட்டிப் போகச் சொல்லுகிறீர். சாதம் சாப்பிட்டு அதனாலுண்டான எலும்பு, மாம்ஸம் முதலியவைகள் உள்ள ஒரு கூட்டுக்கு அதே மாதிரி எலும்பு மாம்ஸம் உள்ள ஒரு கூடு தூரத்தில் இருக்க வேண்டும் என்பது உங்கள் அபிப்பிராயமா? அல்லது அந்தக் கூட்டுக்குள் உள்ள சைதன்யமானது (ஆன்மா) கிட்ட வரக்கூடாது என்பது அபிப்பிராயமா? எது உம்முடைய அபிப்பிராயம். ஏ! பிராம்மணோத்தமா! பதில் சொல்லும். எதை தூரப் போகச்சொல்ல அபிப்பிராயப்படுகிறீர்? போ போ என்று சொல்லுகிறீரே” என்று அவன் கேட்டான். அந்தப் பறையன் கேட்ட கேள்வியிது….

இந்தக் கேள்விக்குத் தர்ம சாஸ்திர ரீதியாகப் (மனுதர்மப்படி) பதில் வருமென்று எல்லாரும் எதிர்பார்க்கலாம். ஆனால் ஸ்ரீஆசாரியர்கள் ஞான ரீதியாகப் பதில் சொன்னார்கள். அந்தக் கேள்வியும் ஞான ரீதியாகத்தான் இருக்கிறது.
உடனே ஸ்ரீ ஆசாரியர்கள் “தாங்கள் இப்பேர்ப்பட்டவர்களா? இப்படிப்பட்ட ப்ரம்மவித்துக்கள் யாராயிருந்தாலும் அவர்கள் தான் எனக்குக் குரு ஸ்தானம்” என்று சொன்னார்.

நாமும் இப்படிப்பட்டவர்களை நமஸ்கரிக்கத் தயார். எல்லாரும் தயாராக இருக்க வேண்டும். அந்த ஞானம் வந்த நிலையில், சண்டாளன், சண்டாளனில்லை. பிராம்மணன், பிராம்மணனல்ல, வேதம் வேதம் அல்ல என்று வேதம் சொல்லுகிறது. அதைத் தான் ஸ்ரீ சங்கரரும் இந்தப் பறையனுக்குச் சொன்னார். ஐந்து சுலோகங்கள் பதிலாகச் சொன்னார்….

அவை மநீஷா பஞ்சகம் என்று சொல்லப்படும். அந்தப் பறையன் யார்? விச்வேசுவரரே (இறைவனே)….

முதலில் ஸ்ரீசங்கராசார்யர்கள் லோகரீதிக்காக (உலக நடப்பையொட்டி) எட்டிப்போ என்று சொன்னார். அவனுடைய ஷேமத்திற்காகவும் அப்படிச் சொன்னார். அவன் அபேத (ஞான) நிலையை அடைந்தவன் என்று தெரிந்து கொண்டதும் இப்படிச் சொன்னார். “தாங்கள் வாஸ்தவமாக இப்படிப்பட்ட நிலையை அடைந்தவர்களானால்” என்று அதற்காகத்தான் சொன்னார்கள்.

இந்த சுலோகத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீ ஆசாரியர்கள் தீண்டாமையை ஒழித்து விட்டதாக சிலர் அர்த்தம் செய்கின்றார்கள். சுலோகம் தீண்டாமையை ஸ்தாபிப்பதாக நமக்குத் தோன்றுகிறது. எந்த ஸித்தாந்தத்தில் ஒருவருக்கு ஆசை இருக்கின்றதோ அதற்கு தகுந்தபடி அவர்கள் சுலோகங்களுக்கு வேறு அர்த்தம் செய்து கொள்வார்கள். தீண்டாமை ஷேமகரமானது (மிகவும் நல்லது) என்ற எண்ணம் நமக்கு இருப்பதால் அநாதியாக நாம் இப்படி அதற்கு அர்த்தம் செய்கிறோம். நம்முடைய அர்த்தத்திற்கு ஒரு சிபாரிசு (அடிப்படை) இருக்கிறது. இத்தனை நாள் நாம் இப்படித்தான் அர்த்தம் பண்ணிக்கொண்டு வருகிறோம். அனுஷ்டானம் செய்து கொண்டும் வருகிறோம். அவர்கள் புதிதாக அர்த்தம் செய்கிறார்கள்.

தின்பதில் சில பதார்த்தங்களை விலக்கி வைக்க வேண்டும். அப்படி விலக்கப்பட்ட ஸாமான் வந்தால் நடுங்க வேண்டும். அவ்வளவு பழக்கம் ஏற்படும்படி விலக்க வேண்டும். சுரணை என்பது அவசியமாக இருக்க வேண்டும். அது இப்பொழுது குறைந்து கொண்டு வருகிறது. எல்லாவற்றிலும் கட்டுப்பாடு (Restriction) இருக்க வேண்டும். இன்ன ஜாதியில்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விவஸ்தை இருக்க வேண்டும். மனது போனபடி நடக்காமல் ஆசையைப் பலவழிகளில் குறைத்துக் கொள்ள வேண்டும்….

ஒவ்வொரு ஜாதி ஸமூஹத்தினிடையிலும் தனித் தனியாகச் சிறப்புக் கடமையாகப் பரம்பரையாய் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியிருப்பவர்கள் எல்லாரோடும் கலந்து தொட்டுப் பழகாமலும் கலந்து உண்ணாமலும் கலந்து விவாஹம் செய்யாமலும் இருந்தால்தான் அந்த அந்த அனுஷ்டான நியமங்களைப் பரம்பரையாகச் சுத்தமாக ரக்ஷித்துக் கொண்டு வர முடியும்…..

ஒரு சீர்திருத்தக்காரர் (Reformer) ஒன்றை உடைத்தால் அடுத்தபடி வருகிறவர் அவர் அதை உடைத்தாரே இதையும் ஏன் நாம் உடைக்கக் கூடாது என்று பாக்கி உள்ளதையும் உடைக்க ஆரம்பிப்பார். “நாலைந்து வேலிகள் இருக்கின்றனவே, ஒன்று உடைந்தால் என்ன? அது தானாகவே உடைந்து போனால் என்ன பண்ணுவீர்கள்!” என்று கேட்கிறார்கள். எல்லாம் உடைந்தால்தான் என்ன பண்ணப் போகிறோம்? நாம் அழப்போகிறதில்லை. உடைக்கக் கூடாதென்று நினைத்து உடையாமல் இருப்பதற்கு வேண்டிய பிரயத்தினம் செய்ய வேண்டும்…..

மனஸில் தோன்றியதை யெல்லாம் செய்ய ஆரம்பித்ததனால்தான் இந்த நிலை வந்து விட்டது. ஒரு வேலியை உடைத்து விட்டால் எல்லா வேலியும் காலக்கிரமத்தில் போய்விடும். ஒரு விஷயத்தை மீறும் துணிவு முதலில் ஏற்பட்டால் அதுவே பாக்கி எல்லாவற்றிற்கும் வந்துவிடும்…..

நம்முடைய தேசத்தில் இப்பொழுது பறையர்கள் தாம் அதிக ஆஸ்திகர்களாக இருக்கிறார்கள். பிராம்மணர்களில்தான் தங்களுக்கேற்பட்ட நடைகளை விட்டுப் புது நடைக்காரர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். பறையர்களில் அவ்வளவு இல்லை. கிளர்ச்சிக்காரர்கள் அவர்களுடைய (பிரியர்களுடைய) பெயரை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்கிறார்கள். நம்முடைய தர்மத்தை எடுத்துச் சொன்னால் பிராம்மணனை விட பறையர்கள்தாம் அதிகமாகக் கேட்பார்கள்…

மனீஷா பஞ்சகத்தால் தீண்டாமை போயிற்றென்று சொல்லுவது தவறு. நம்மை மீறி ஓர் அதர்மம் உலகில் ஏற்பட்டு வந்துவிட்டால், அதைத் தடுக்க முடியாமலும் போய்விட்டால், அந்தக் காரணத்தைக் கொண்டு அதுதான் நியாயம், அதைத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லுவது தப்பு. நாம் நம்முடைய பரம்பரை தர்மத்தை நம்மால் கூடியவரையில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்….

இப்பொழுதுள்ள சீர்திருத்தக் காரர்கள் நீங்கள் கலப்புக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டாம். சேர்ந்து போஜனம் பண்ண வேண்டாம். தீண்டாமையை மட்டும் விட்டு விடுங்கள் என்று சொல்லுகிறார்கள்….

அடுத்தபடி அதுவும் பரவாயில்லை என்று யாராவது சொன்னால் அதையும் ஸரியென்று சொல்லுவார்கள்…

எவ்வளவோ பணத்தைச் செலவழித்து ஆலயங்களைக் கட்டியிருக்கிறார்கள். சாஸ்திரத்தை நம்பி அப்படிக் கட்டியிருக்கிறார்கள்…

ஆகம சாஸ்திரங்களில் எந்த விதி சொல்லப்பட்டிருந்ததோ அப்படியே நடந்து வரும் என்ற நம்பிக்கையுடன் அந்தப் பணத்தைச் செலவழித்திருக்கிறார்கள். அந்தச் சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், யாருக்கு அவைகளில் நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுடைய அனுஷ்டானங்களில் புகுந்து தொந்திரவு கொடுப்பது நியாயமில்லை. கோயில் தங்கள் உரிமைகளை ஸ்தாபிக்கும் இடங்களல்ல. பக்தி பண்ண ஏற்பட்ட இடங்கள். இப்பொழுதுள்ள கிளர்ச்சிக்காரர்கள் தரிசனத்துக்காகக் கோயிலுக்குப் போகும் சிரத்தையுடையவர்கள் அல்ல. பறையர்களைக் கோயில்களுக்குள் விடும் பாத்யஸ்தாபனத்திற்காகவே (உரிமையை நிலைநாட்டவே) இப்பொழுது வருகிறார்கள்…

சாஸ்திரத்தில் நம்பிக்கையில்லாதவர்களுக்குக் கோயிலில் என்ன காரியம்? முதலில் அவர்களை விடாமல் போனால் பறையன் தானே நின்று கொள்ளுவான். நாம் ஸத்தியமாகவும் சாஸ்திரத்தின்படியும் நடக்கிறோமென்று தெரிந்தால் அநாசாரப் பிரசங்கிகளுக்குத் தானாகப் பயம் ஏற்படும். நாம் இப்படிக் கடுமையாக ஆரம்பித்தால்தான் இந்த முயற்சிகளெல்லாம் நின்று போகும்.”

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

வெங்கடேசன், தனது ‘ஈ வே ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ நூலில் கேட்டிருந்த அதே கேள்வியை மாமுனிவரும் கேட்டுள்ளார். “சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாதவர்களுக்குக் கோயிலில் என்ன வேலை?” என்று. கோவில் நுழைவு என்பது அக்காலகட்டத்தில் நிலவிய சாதிக் கொடுமையை எதிர்த்து நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. அந்நிகழ்வையும் சகிக்க முடியாமல்தான் அன்றைய சநாதனிகள் இருந்தனர் என்பதற்கு இக்கேள்வியே ஒரு சான்று.

***********************
vellaram@yahoo.com

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்