உண்மையின் ஊர்வலங்கள் – ஊர்வலம் 2

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

புதியமாதவி


32 வருடங்களுக்கு முன்பு நடந்த அருணாவின் சோகக்கதை.

வழக்கம்போல டைம்ஸ் ஆஃப் இந்தியா ஞாயிறு மலரைப்

புரட்டிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி புகைப்படத்துடன்.(written by

Pinki Virani, a columnist.)

இப்போதும் அந்தச் செய்தியின் தாக்கத்தையும் அந்தச் செய்தி தந்த

மனவுளைச்சலையும் தாண்டி வரமுடியவில்லை.

எப்போதாவது அருணாவின் நினைப்பு வரும். அப்போதெல்லாம் அவள் இன்னும்

இருக்கிறாளா என்பதை அறிய மனம் விரும்பும். அதே நேரத்தில் அவள் இன்னும்

உயிருடம் இருக்கக்கூடாது என்று உள்மனம் மவுனத்தில் அழும். அப்போதெல்லாம்

உடைந்து போகும் வாழ்வின் நியாயங்களும் தர்மச் சிந்தனைகளும்.

கர்நாடக மாநிலத்தின் ஹல்திபூரிலிருந்து வந்த எத்தனையோ

நர்ஸ்களைப்போலவேதான் அவளும் மும்பை மண்ணில் கனவுகளுடன் கால்

வைத்தாள். அவள் விரும்பியது போலவே மும்பையின் புகழ்பெற்ற கே.இ.எம்

மருத்துவமனையில் வேலை கிடைத்தது.(King Edward VII memorial

hospital). மருத்துவமனையிலிருக்கும் ஆய்வுக்கூடத்தில் அருணாவுக்கு வேலை.

அந்த ஆய்வுக்கூடத்தில் நாய்கள் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு

வந்தன. அந்த நாய்களுக்குரிய உணவு வகைகளையும் பாலையும்

திருடிக்கொண்டிருந்தான் அங்கே வார்ட் பாஃயாக வேலைப்பார்க்கும்

சோகன்லால் பாரத வால்மீகி. அவனைப் பலமுறை கண்டித்துப் பார்த்தாள்

அருணா. அவனோ அவளை அதனாலேயே பழிவாங்கத் துடித்தான்.

தான் விரும்பிய டாக்டருடன் திருமணம் செய்ய இருக்கும் கனவுகளில் வாழ்ந்து

கொண்டிருந்த அருணா எப்போதும் சோகன்லாலைப் பற்றியும் அவன் பலமுறை

அவளை ஏதாவது சிக்கலில் மாட்டிவிட முயற்சி செய்வது பற்றியும் சொன்னாள்.

அப்போதெல்லாம் ‘அவனை எதுவும் கண்டு கொள்ளாதே! ‘ என்று டாக்டர்

அவளுக்குச் சொல்லியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்

கண்முன்னால் நடக்கிற திருட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது அந்த திருட்டுக்கு

தானும் உடந்தையாக இருப்பதாகத்தானே அர்த்தம் என்று நினைத்தாள்.

அன்றும் அப்படித்தான்.. சோகன்லால் கையும் களவுமாக அவளிடம்

பிடிபட்டுவிட்டான். எப்படியும் அவள் மேலதிகாரிகளிடம் முறையிடுவாள் என்பதை

அவன் அறிவான். வெறி நாயாக அவன் அவள் பின்னால் மோப்பம் பிடித்து

அலைந்து கொண்டிருந்தான்.

அன்று 27 நவம்பர் 1973..மாலை மணி 4.50 இருக்கும் மருத்துவமனையின்

பேஸ்மெண்ட் பகுதியில் அவள்

தன் நர்ஸ் உடைகளைக் களைந்து லாண்டரியிலிருந்து சலவை செய்து வந்திருக்கும்

ராணிபிங்க் கலர் புடவையை மாற்றிக்கொண்டிருந்தாள். உடைந்த மரச்சாமான்களும்

கோப்புகளும் அடைந்து கிடக்கும் இருண்ட அறையில் அவளுக்கு முன்பே அவன்

நுழைந்து அந்த இருட்டில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தன் காக்கி கலர் பேண்ட் பாக்கெட்டிலிருந்து நாய்களின் கழுத்தில் மாட்டும் இரும்பு

செயினை உருவி எடுத்து அவள் கழுத்தை நெருக்கினான்.

திடகாத்திரமான சோகன்லாலின் உடல் அவள் மெல்லிய உடலைத் தின்று

தன் மிருகப்பசியைத் தீர்த்துக்கொண்டது. அந்தப் போராட்டத்தில் அவன் வலது

கன்னத்தில் மூன்று முறை பலம் கொண்ட மட்டும் கடித்து அந்த நாயை விரட்ட

அருணா போராடிய போராட்டம் நடந்தது. அந்த நாய் அருணாவின் கழுத்திலிருந்த

தங்கச்செயினையும் வாட்சையும் அவள் கைப்பையில் இருந்த சில்லறை பணத்தையும்

எடுத்துக்கொண்டு..ஏன் அவளுடைய புடவையும் உருவி எடுத்துக்கொண்டு

கதவைச் சத்தமில்லாமல் இழுத்துப் பூட்டிவிட்டு நடந்தது.அப்போது மாலை நேரம்

5.40..

அந்தப் போராட்டத்தில் அருணா இறந்து போயிருக்கலாம். ஆனால் அது

நடக்கவில்லை. இரத்த வெள்ளத்தில் கழுத்து நெறிக்கப்பட்டு கிடந்த அருணாவின்

மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டன. அவள் பார்வை இழந்தாள். ஊமையானாள்.

உணர்வுகள் இழந்த உயிர்ப் பிண்டமாய் 30 வருடங்களுக்கு மேலாக

மருத்துவமனைக் கட்டிலில் கிடக்கிறாள். இப்போதும் ஆணின் குரல் கேட்டால்

மட்டும் அவள் உடல் நடுங்குகிறது.. தங்களுடன் ஒருத்தியாய் பணி புரிந்தவளை

, துடைத்து எடுத்து நித்தமும் உடை மாற்றி நோயுண்னிகள் வராமல்

கவனிக்கிறார்கள் மருத்துவமனையில் இருக்கும் மற்ற நர்சுகள்.

அவளை விரும்பிய அவள் காதலன் இப்போது திருமணமாகி குழந்தைகளுடன்.

அருணாவைப் பற்றிய நினைவுகளை மறக்க நினைக்கும் போராட்டத்தில் அவர்

யாருடனும் அருணாவைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. மும்பையிலேயே

டாக்டராக க்ளினிக் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஏன் அவருடைய மனைவி,

குழந்தைகளுக்கு கூட அருணாவைப் பற்றி எதுவும் தெரியாது என்பது தான்

உண்மை!

அருணாவின் தங்கை வொர்லி பகுதியில் இருக்கும் (B.D.D. chawl) பி.டி.டி.

சால் பகுதியில் வசித்து வருகிறார். அருணாவைப் பற்றி அவரும் எதுவும் பேச

விரும்புவதில்லை.

சோகன்லால் அருணாவைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு

செய்யப்படவில்லை! ஆம் சோகன்லால் மீது திருட்டு குற்றம் மட்டுமே

சுமத்தப்பட்டது. அதற்கான தண்டனையாக ஆறு ஆண்டுகள் சிறைவாசம்

மட்டும்தான். இன்று சோகன்லால் டில்லி மருத்துவமனை ஒன்றில் வார்டு ஃபாயாக

வேலை பார்க்கிறான்.. அவனுடைய அடையாளம் அவன் வலது கையில்

அவனுடைய பெயரை அவன் பச்சைக் குத்தி இருப்பான். அவன் வாழ்ந்துவிட்டுப்

போகட்டும்…

ஆனால் எங்கள் அருணா இப்போது என்னவாக இருக்கிறாள் ?

அருணா இப்போது உயிருடன் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டால்

அந்த வேதனை மீண்டும் மீண்டும் இரவுகளைத் தூக்கமின்றி அடிக்கும்.

அவள் உயிருடனிருந்தாலும் அவளை இப்போது நேரில் போய்ப் பார்க்க நெஞ்சில்

உரமுமில்லை.

என்னவளே

பெருநகர மாயப்பிசாசுகள்

நாய்களுக்குப் போட்டியாய்

நடமாடும் நகரமிது.

தர்மங்கள் நிலைநிறுத்த

நீ கொடுத்த விலை

அதிகம் தாயே

உயிர்ப்பிண்டமாய்

கட்டிலில் கிடக்கும்

உன் சதைநார்களில்

இன்னும்

ஒட்டிக்கொண்டிருக்கிறதா

நியாயங்களின் சுவாசம் ?

—-

பி.கு

பிங்கி விரானி

அருணாவின் முழுக்கதையும் பிங்கி விரானி புத்தகமாக எழுதியிருக்கிறார்.

(The True Account of a Rape and its Aftermath, written by

Pinki Virani, a columnist.)

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை