உடைந்த மாதாவும் உடையாத மாடுகளும்

This entry is part [part not set] of 46 in the series 20090108_Issue

வசீகரன்


கொம்பு முளைத்த
எங்கள் மாடுகளோடு
கொம்பில்லாத மாடுகள்
வந்து மோதிப் பார்க்கின்றன.

கொழும்பில் இருந்து
தடித்த கொழுப்போடு
பறந்து வரும் எருமைகளால்
மாதாவின் தலையைத்தான்
உடைக்க முடிகிறது.

வானத்தில் புல் முளைத்தால்
எங்கள் மாடுகளுக்கு
சிறகுகள் முளைக்கும்
என்பதை மறந்துவிட்டன
பறந்து வருகிற எருமைகள்.

உடையாத மனதோடு
உயிர் காக்கும்படி
அடைக்கலம் தேடும்
கோவில் வாசலில்
மாதாவின் தலை
தலைகிழாய் கிடக்கிறது.

எண்பத்தைந்து மாக்கள்
செத்தால் என்ன?
எண்பதினாயிரம் மக்கள்
செத்தால் என்ன?
எந்த நாடும் கேட்காது.

மதம் பிடித்த யானைகள்
மதம் பிடிக்காத பூனைகளோடு
கைகுலுக்கி மகிழ்ந்து
மௌனமாகிப் போனது.

இத்தனை நாள்
பேசாத தெய்வங்களா
இனி வந்து
எங்களுக்காய் பேசப்போகிறது?

எமக்காக நாங்கள் தான்
பேச வேண்டும்
அவர்கள் எந்த மொழிகளில்
பேசுகின்றார்களோ
அதே மொழிகளில்.

வாய் பேச முடியாத
பிராணிகள்கூட
வார்த்தைகள் தேடுகின்றன
வாஞ்சையோடு வாழ்த்த அல்ல
வன்மையாகத் திட்டித் தீர்ப்பதற்கு.

ஒரு மாறுதலுக்காக
நத்தார் வாழ்த்துச் சொல்லவும்
மனசு மறுக்கிறது.
மிஞ்சியிருக்கும் மாடுகளைப் போல்
மீண்டும் எழுந்து நடப்போம்.


vaseeharankavithai@gmail.com

-வசீகரன்
நோர்வே
28.12.2008

Series Navigation

வசீகரன்

வசீகரன்