ஈ. வே. ரா பற்றிய திரைப்படத்தால் தெரியவரும் தகவல்கள்

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

மலர் மன்னன்


தமிழ் நாடு அரசு தனது கஜானாவிலிருந்து மிகவும் தாராளமாக அள்ளிக்கொடுத்த ரூபா 90 லட்சம் நிதியுதவியுடன் ஞான ராஜசேகரன் எடுத்துள்ள ஈ வே ரா பற்றிய வரலாற்றுத் திரைப் படம், சமகால முக்கிய தலைவர் ஒருவரைப்பற்றிய விவரங்களைச் சொல்வதில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதைக் கண்டறிவது அவசியமாகிறது.

பொதுவாக இம்மாதிரியான திரைப்படங்கள் கற்பனைக்கு இடமில்லாத ஆவணப்படங்களாகத்தான் அமைய வேண்டும். ஆனால் ஞான ராஜசேகரனின் பெரியார், அவரது நிஜ சொரூபத்தைக் காட்டிலும் கற்பனைக் கதாபாத்திரமாகத்தான் திரையில் தோற்றமளிக்கிறார். பல இடங்களில் வரலாற்று உண்மைக்கு மாறான சித்திரிப்பு இடம்பெறுவது அறியாமையினாலா அல்லது வேண்டுமென்றே கதைத் தலைவனது எதிர்மறை அம்சங்களைக் காட்டுவது உசிதம் அல்ல என்பதற்காகவா என்று யோசிக்க வேண்டியுள்ளது.

படத்தைப் பார்க்கிறபோது முக்கியமாக மனதில் பதிந்து போவது ஈ வே ரா அவர்கள் தமக்குப் பிடிக்காத அல்லது தமக்கு நம்பிக்கையில்லாத அம்சங்களைத் தர்க்க ரீதியாகப் புறந்தள்ளுவதற்குப் பதிலாக இடக்காகப் பேசியும், பிறர் மனம் புண்படுமாறு நடந்தும் வந்துள்ளார் என்பதுதான். எல்லாவற்றையும்விட விசேஷம் அவர் ஏதேனும் ஒரு விவகாரத்தில் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காகவும் தமது தரப்புக் கருத்தைச் சொல்லவும் வழக்கமான சினிமா கதா நாயகன்போலப் பாட்டுபாடியுமிருக்கிறார்!

ஈ வே ரா வை அறியாத இன்றைய தலைமுறையினர் அவர் நன்றாகப் பாடக்கூடியவர் என்கிற முடிவுக்கு வர ஞான ராஜசேகரனின் பெரியார் உதவும்.

வெப்பம் மிகுந்த நாட்களே கூடுதலாக உள்ள தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்கிறவராக ஈ.வே. ரா. அவர்கள் இருந்தபோதிலும் குளிக்கவே விரும்பதவராக இருந்திருக்கிறார் என்கிற விசித்திரமான தகவலும் மிகவும் முக்கியமானதுபோல் மனதில் பதியத்தக்க அளவுக்கு இப்படத்தில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. பொதுவாக நீருக்கு பயப்படுகிறவர்கள்தான் குளிப்பதற்குக்கூட அஞ்சுவார்கள். மனிதருக்குள்ள பலவாறான பயப்பிராந்திகளுள் அது ஒருவகை. ஈ வே ரா குளிக்க விரும்பாததை வலியுறுத்துவது, அவருக்குத் தண்ணீரைக் கண்டு அஞ்சும் மனப் பிராந்தி இருந்திருக்குமோ என்கிற தவறான எண்ணத்தை இன்றைய தலைமுறையினரிடையே தோற்றுவித்துவிடக் கூடும்.

தனக்குத் தேவை என்று வருகிறபோது சாமியார் போல வேடமிட்டு ஊரை ஏய்ப்பதில் ஈ வே ராவும் விதி விலக்கல்ல என்பதைத்தான் அவரது காசி புனிதத் தல நிகழ்வுகள் உணர்த்துவதாகப் பார்வையாளர்கள் கருதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

காசியில் ஒரு மடத்தில் வேலைக்குச் சேரும் ஈ வே ரா, குளிக்காமலேயே குளித்ததுபோல ஏமாற்றி, பூஜைக்குப் பூப் பறித்து வருவது ஒரு நாள் வெளிப்பட்டு அதன் காரணமாக வெளியேற்றப்படுகிறார். ஆனால் அந்த மடத்தில் அதன் அதிபதியும் மற்றவர்களும் காமாந்தகர்களாக நடந்துகொண்டதைக் கண்டித்து விட்டு அவர் வெளியேறுவதுபோல் கூடுதலாக ஒரு காரணத்தைக் காட்டியிருப்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அவ்வாறே இருப்பினும், தாம் அந்த மடத்திலிருந்து வெளியேற்றப்படும்வரை அத்தகைய முறைகேடுகள் குறித்து ஈ வே ரா கவலைப்படாதவராக இருந்திருக்கிறார், வெளியேற்றப்பட்ட பிறகு அந்த ஆத்திரத்தில்தான் அங்கு நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறார் என்றுதான் பார்வையார்கள் கருத நேரிடும்.

ஈ வேரா அவர்கள் தம் மனைவி கோவிலுக்குப் போவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தம் நண்பர்களையே அனுப்பி அவர்கள் தம் மனைவியிடம் முறைகேடாக நடந்துகொள்ளச் செய்தார் என்பதுதான் உண்மையில் நிகழ்ந்தது. ஆனால் இந்த உண்மையைத் தெரிவிக்காமல் அது ஏதோ தற்செயலாக நடந்த சம்பவம்போல் காண்பித்திருப்பது, ஒரு கணவனே தன் மனைவியை இவ்வாறு அசிங்கப்படுத்துவது அருவருப்பான விஷயம் என்பதால்தானா?

மேலும் சினிமாக் கதாநாயகரான ஈ வே ராவுடன்தான் பேசுகிறோம் என்பதால் காந்திஜியும் அம்பேத்கரும் ஏன், வெள்ளைக்கார அதிகாரிகளுங் கூடத் தமிழில்தான் பேசியிருக்கிறார்கள்! நிகழ்வின் இயல்புத்தன்மை சிதையாமல் இருக்க ஈ வே ரா அவர்களுக்கும் பிற மொழிப் பிரமுகர்களுக்குமிடையிலான பேச்சு வார்த்தைகள் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் நடைபெறுவதாகக் காட்டியிருக்கலாம் அல்லவா?

ஈ வே ரா வின் குடும்பச் சூழலை விவரிப்பதிலும் முழுமை இல்லை. அவரது அண்ணன் கிருஷ்ணசாமி நாயக்கர் பற்றிச் சிறிதளவும் தகவல் இல்லை. அண்ணன் மகன் ஈ. வி.கே. சம்பத், ஈ வே ரா வின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம். ஆனால் அவரைப் பற்றிய பிரஸ்தாபமே படத்தில் இல்லை. அண்ணாவும் அவரது தம்பிமார் பலரும் தி. க. விலிருந்து வெளியேறியபோது, சம்பத்தும் தனது சிற்றப்பாவான ஈ வே ரா அவர்களைவிட்டு விலகி அண்ணாவின் பின்னால் போய்விட்டது ஏன் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏனோ தெரியவில்லை.

ஈ.வே. ரா. அவர்கள் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் ஏற்கவேண்டும் என்கிற நிபந்தனையின் பேரில்தான் காங்கிரசில் சேர்ந்தார் என்பதற்கோ, ராஜாஜி அதற்கு நேரடியான பதில் கூறாமல் மழுப்பியதற்கோ ஆதாரம் ஏதும் இல்லை.

வ வே சு ஐயர் நடத்திய குரு குல சுதேசிப் பள்ளியில் உணவு வேளையில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கிற பேதம் பாராட்டப் படுவதாகக் குற்றம் சுமத்தி, அதற்குத் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி நிதியிலிருந்து உதவிப் பணம் தரலாகாது என்கிற வலியுறுத்தலின் தொடர் நிகழ்வாகத்தான் ஈ வே ரா காங்கிரசிலிருந்து வெளியேற நேர்ந்தது. இதுவும் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு முக்கிய கட்டம். சொல்லப்போனால் தமிழ் நாடு முழுவதும் மட்டுமின்றி தேசிய அளவிலும் அவரது பெயர் தெரிய வந்தமைக்கு அவரது காங்கிரஸ் பிரவேசம்தான் காரணம். இல்லாவிட்டால் ஈ.ரோடு நகரசபைத் தலைவர் என்கிற அளவில் அவர் பெயர் அடங்கிவிட்டிருக்கக் கூடும். அப்படியிருக்க அவரது காங்கிரஸ் வெளியேற்றம் விரிவாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாகத் தமிழ் சினிமாக்களில் வருகிற பதினட்டுப் பட்டி பஞ்சாயத்து விசாரணையும் தீர்ப்புமாக அச்சம்பவம் முடிந்து போகிறது!

வ வே சு ஐயர் திருநெல்வேலி சேரன்மாதேவியில் தொடங்கிய குருகுலப் பள்ளிக்கு ஒரு சரித்திரமே உள்ளது. முதலில் அது அவரால் ஏற்று நடத்தப்பட்டதேயன்றி நிறுவப்பட்டது அல்ல. அரசாங்கப் பள்ளிகளுக்கும் கிருஸ்தவ மிஷனரிப் பள்ளிகள், கான்வென்ட்டுகள் முதலானவற்றுக்கும் மாற்றாக ஒரு சுதேசிப் பள்ளிக் கூடம் நடத்துகையில் தொடக்கத்தில் சில சமரசங்களைச் செய்துதான் தீர வேண்டியிருக்கும். அன்றைய சம்பிரதாயத்தில் ஊறிப்போன சிலர் தம் வீட்டுப் பிள்ளைகளை குருகுலப் பள்ளிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டபோது, அந்தப் பிள்ளைகளுக்குத் தனியாக உணவு அளிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். காலப் போக்கில் இது சரியாகிவிடும் என்கிற நம்பிக்கையில் அந்த நிபந்தனை ஏற்கப்பட்டது. வ வே சு ஐயரின் குருகுலப் பள்ளிக்குத் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூபா பத்தாயிரம் நன்கொடை தருவதாக ஒப்புக்கொள்ளப் பட்டு, அதில் ரூபா ஐந்தாயிரம் தரப்பட்டு, மீதி ஐந்தாயிரம் நிலுவையில் இருந்தது. குருகுலப் பள்ளியில் இரு பிராமணப் பிள்ளைகளுக்குத் தனியாக உணவு தரப்படுவதால் சாதி வேறுபாடு பாராட்டப்படும் பள்ளிக்கு காங்கிரஸ் கட்சியின் பணத்திலிருந்து நிதி உதவி அளிக்கப்படலாகாது என்று ஈ வே ராவும் வேறு சிலரும் ஆட்சேபித்தனர். மற்றபடி, வ வே சு ஐயரின் குருகுலப் பள்ளியில் பிராமணர் அல்லாத சிறுவர்கள் கொடுமைப் படுத்தப் படுவதுபோல் ஞான ராஜசேகரனின் பெரியாரில் காண்பிக்கப்படுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை.

194849 ஆண்டுகளில் சேரிப்பெண்கள் எல்லாரும் ரவிக்கைபோடத் தொடங்கி விட்டதால்தான் துணி விலை ஏறிவிட்டது என்று ஈ வே ரா பேசியது தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பைத் தோற்றுவித்தது. பல இடங்களில் ஈ வே ரா வின் பேச்சைக் கண்டித்து தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் கூட்டம் நடத்தின. இது ஈ வே ரா அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க அம்சம். அதேபோல் கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவத்தின்போதும் ஈ வே ரா அவர்களின் பேச்சு எரிந்து சாம்பலான தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை. இதனைப் பதிவு செய்யாமல் விட்டதன் மூலம், ஈ வே ரா அவர்கள் பிராமணர் அல்லாத , தாழ்த்தப்பட்டோரும் அல்லாத இதர சாதியாரின் பிரதிநிதியாகச் செயல்பட்டவர் என்ற வரலாற்று உண்மையை இத்திரைப் படம் தெளிவுபடுத்தத் தவறிவிட்டது.

ஈ வே ரா அவர்களின் ரஷ்யச் சுற்றுப்பயணத்தைப் பதிவு செய்துள்ள படம், ஜெர்மனியில் முழு நிர்வாணர் கழகத்தில் அவர் தாமும் பங்கேற்றுப் புரட்சி செய்ததை ஏனோ மறந்துவிட்டிருக்கிறது!

1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் தி மு க வுக்கு எதிராகவும் காங்கிரசுக்கு ஆதரவாகவும் தனி நபர் தாக்குதல் உள்ளிட்ட மிகக் கடுமையான பிரசாரத்தை ஈ வே ரா மேற்கொண்டார். ஆனால் இது விவரிக்கப்படாமல் 1967 ல் தி மு க வெற்றி பெற்றதும் அண்ணா இயல்பாக வந்து வாழ்த்தும் ஆதரவும் கேட்டதும் ஈ வே ரா உடனே உடன்பட்டு, தி மு க ஆதரவாளராகிவிட்டது போல ஒரு தோற்றம் படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மையில் 1967 தேர்தலில் தி மு க அறுதிப் பெரும்பான்மைபெற்று ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றபோது, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் வீடு தேடிச் சென்று அவர்களின் வாழ்த்தையும் ஆதரவையும் அண்ணா கேட்டுப் பெற்றார். அதையொட்டியே ஈ வே ரா வையும் தேடிச் சென்ற அண்ணா, உங்களுடைய கடும் எதிர்ப்பையும் மீறி மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியடைந்துவிட்டோம் பார்த்தீர்களா என்று கேட்பது போலவும், ஈ வே ரா வெட்கித் தலை குனியுமாறும் தமது அரசை அவருக்குக் காணிக்கையாக்குவதாக உபசார வார்த்தை கூறினார் எனலாம்.

மேலும் திராவிட இயக்கமே கலகலத்துப் போகிற மாதிரி ஈ வே ரா வின் வாழ்க்கையில் நிகழ்ந்த மணியம்மையின் பிரவேசம் ஏதோ சஸ்பென்ஸ் காட்சிபோலப் படத்தில் காண்பிக்கப்படுகிறது. உண்மையில் மணியம்மையின் வரவு ஈ வேராவுக்குத் தெரிந்தும், அவரது சம்மதத்தோடும் நிகழ்ந்த சம்பவம்தான். படத்தில் மணியம்மை ஈ வே ராவின் வீட்டு வேலைக்காரியைப் போலச் சித்திரிக்கப்படுவதும் சரியல்ல. அவர் ஈ வே ரா அவர்களின் பிரத்தியேக உதவியாளராக அவரது தேவைகளை கவனித்துக்கொள்பவராகத்தான் இருந்தார்.

தமது தள்ளாத வயதில் முப்பது வயது மணியம்மையைத் திருமணம் செய்துகொள்வதற்கு ஈ வே ரா சொன்ன சமாதானம் தாம் அரும்பாடு பட்டுக் கட்சிக்குச் சேர்த்துவைத்துள்ள சொத்துக்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்பதுதான். ஈ வே ரா வின் திருமணத்தைக் காட்டிலும் அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அண்ணாவையும் அவரது தம்பிமார்களையும் மிகவும் புண்படுத்திவிட்டது. அதன் விளைவாகவே அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகிப் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். அந்தச் சமயத்தில் கருணாநிதி திராவிட இயக்கத்தில் ஒரு முக்கியஸ்தர் அல்ல. மாடர்ன் தியேட்டர்ஸ் என்கிற சினிமா கம்பனியின் கதை இலாகாவில் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராகத்தான் அப்போது அவர் இருந்தார். ஆனால் புதிய கட்சியை அண்ணா தொடங்கியபோது அவருக்குப் பக்க பலமாக இருந்தது கருணாநிதிதான் என்பதுபோலக் காண்பித்திருப்பதற்குக் காரணம் இன்று கருணாநிதிக்கு உள்ள முக்கியத்துவமேயன்றி வேறு என்னவாக இருக்கக் கூடும்?

ஈ வே ராவின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல முக்கியமான சம்பவங்கள் படத்தில் தவிர்க்கப்பட்டு, சாதாரணச் சம்பவங்கள் இடம் பெறச் செய்திருப்பதன் காரணம் விளங்கவில்லை. இப்படி இடம் பெறும் சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித் தனித் துண்டுகளாகத் திடீர், திடீரென்று வந்துபோகின்றன.

தரமான ரசனைக்குரியதாகக் கலை நயம் மிக்க நுட்பமான ஒரு காட்சிகூடப் படத்தில் அமையாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம்தான்.

நீண்ட நெடுங்காலம் வாழ்ந்த ஈ வே ரா, தாம் வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டின் அரசியல் நிகழ்வுகளிலும், சமூக மாற்றங்களிலும் பெரும் பாதிப்புகளைத் தோற்றுவித்தவர் என்பதை மறுக்க முடியாது. அவர் வாழ்ந்த காலமும் தமிழ் நாடு மட்டுமின்றி, பாரதம் முழுமையுமே பல முக்கிய திருப்பங்களும் சிக்கல்களும் தீர்வுகளும் நிரம்பிய காலகட்டமாகும். இவற்றையெல்லாம் பிரதிபலிக்காத ஞான ராஜசேகரனின் பெரியார், அவரை வேண்டுமானால் திருப்தி செய்யக்கூடுமேயன்றி, சமகால வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்