ஈ.வே.ரா. சிறியார் அல்ல

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

மலர் மன்னன்


அரவிந்தன் எஸ். நீலகண்டன் எழுதும் கட்டுரைகளை விரைவாகப் படித்துச் செல்லும் வேகத்தில், அவர் மறைந்த பெரியவர் ஈ.வே.ரா. அவர்களைச் சிறியார் எனக் குறிப்பிடுவது என் கவனத்தில் பதியவில்லை. வாசக நண்பர் ஒருவர் இதுபற்றித் தமது வருத்தத்தை வெளியிட்டிருப்பதைப் படித்தபோதுதான் திரும்பவும் அரவிந்தனின் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். ஆம், அவ்வாறுதான் அவர் குறிப்பிட்டிருப்பதைப் படித்து மிகவும் வேதனையடைந்தேன்.

ஈ..வே.ரா அவர்கள் மீது மிகக் கடுமையான விமர்சனம் உள்ள எனக்கே அவர் சிறியார் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் படித்ததும் மனம் துணுக்குற்றது. சரியோ, தவறோ, அவரைப் பெரிதும் போற்றும் லட்சக் கணக்கானோர் இன்று உலகெங்கிலும் வியாபித்துள்ளனர். தமது போற்றுதலுக்குரிய, தந்தைக்குச் சமமாகத் தம்மால் மதிக்கப்படுகிற ஒரு பெரியவர் அவ்வாறு குறிப்பிடப்படுவதைப் படிக்கும்போது, அவர்களின் மனம் எந்த அளவுக்கு வேதனைப்படும் என்பதை நினைத்துப் பார்த்தபோது, மிகுந்த துயருற்றேன்.

ஈ.வே.ரா. பெரியாராக இல்லை எனப் பலருக்குத் தோன்றலாம். ஆனால் நிச்சயமாக அவர் சிறியார் எனத் தோன்றுவதோ, ஒருவேளை அவ்வாறு தோன்றினாலுங்கூட, அதனைப் பலர் நோகப் பகிரங்கப்படுத்துவதோ தகாது.

சாதாரணமாக ஒருவரைச் சிறியார் எனக் குறிப்பிடுவதே தாகாத செயல். அப்படியிருக்க, அறுபது எழுபது ஆண்டுக் காலம் பொது வாழ்வில் ஈடுபட்டு, தமக்குச் சரியென்றுபட்ட கருத்துகளை ஒளிவு மறைவின்றி வெளியிட்டு அந்திமக் காலம் வரை உழைத்த ஒருவரைச் சிறுமைப் படுத்துவது நம்மை நாமே சிறுமைப் படுத்திக்கொள்வதன்றி வேறல்ல.

காந்திஜி மறைந்தபோது ஹிந்துஸ்தானத்திற்கு (ஹிந்துஸ்தான் என்பது அவர் வாயாலேயே வந்ததுதான்) காந்திஸ்தான் எனப் பெயரிட வேண்டும் எனவும் ஹிந்து சமயத்திற்கு காந்தி மதம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் யோசனை தெரிவித்தவர்தான் ஈ.வே.ரா. அவர்கள். ஹிந்துக்களுக்கு சத்ஞானஜன் (ஹரிஜன் என்பது போல – சற்று வித்தியாசமான பெயர் – அண்ணாவின் திராவிட நாடு 15-2-48 ) என்பதுபோல் ஒரு பெயர் சூட்டலாம் என்றும் சொன்னவர். அந்த அளவுக்கு அவருக்கு உள்ளூறத் தாம் ஒரு ஹிந்து என்கிற உணர்வு நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டுதானிருந்தது. தம்மை ஒரு ஹிந்துவாக அவர் உணராதிருப்பின் பாரதத்தை ஹிந்துஸ்தான் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார். ஏதோ நடைமுறைப் பேச்சு வழக்கின் காரணமாக அவ்வாறு கூறிவிட்டா ர் எனத் தோன்றினாலும், மிகவும் கரிசனமாக ஹிந்து சமயத்திற்கும் ஹிந்துக்களுக்கும் மாற்றுப் பெயர் சொன்னார் அல்லவா, அதுபோதுமே உள்ளூற அவர் தம்மை ஒரு ஹிந்துவாகத்தான் உணர்ந்து உரிமையுடன் யோசனை சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ள!

மேலும், ஈ.வே.ரா. அவர்களைக் கொண்டாடுவோரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் ஹிந்துக்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. நாத்திகரான அவரை வெளிப்

படையாக ஆராதிக்க ஹிந்து சமயத்தாரால்தான் இயலும். ஹிந்து சமயத்தில்தான் அந்த சகிப்புத் தன்மை உண்டு.

ஈ.வே.ரா. அவர்கள் பிராமணர்பிராமணர் அல்லாதார் என்ற அடிப்படையில் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்திவிட்டார் என்பதற்காக நாமும் ஹிந்துக்களை “ஈ.வே.ரா. அவர்களைப் பெரியார் என மதிப்போர், அப் பெரியவரைச் சிறியார் எனக் கூறுவோர் எனப் பிளவுபடுத்துதல் தகுமோ ?

இன்றைக்கு உள்ள நிலைமைகளைப் பார்த்து, எது மத வாதம், அதன் ஊற்றுக்கண் எங்கு உள்ளது எனச் சிந்திக்கும் ஆற்றல் படைத்த பெரியாரின் அபிமானிகள், பெரியார் ஏதோ அன்றைக்கு இருந்த சூழ்நிலையைப் பொருத்தும் தமக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களின் அடிப்படையிலும் சில கருத்துகளைச் சொல்லிவிட்டார். இன்றைக்கு அது பொருந்தாது; நமது தாயகத்தில் ஹிந்துக்கள் பலவீனப்பட்டுப் போவது தேசத்திற்கும், தேசத்தின் அடிப்படையான சமரச மனப் பான்மைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஆபத்து என்று உண்ர்வார்கள், இன்றில்லாவிட்டாலும் நாளை என்கிற நம்பிக்கை இருக்க வேண்டாமா ?

அப்படிச் சிந்தித்துத் தெளிவு பெற்று வரக் கூடியவர்களை வெறுப்பூட்டுவதன் மூலம் அவர்கள் தொடர்ந்து பிடிவாதமாகத் தமது சொந்தச் சமூகத்திற்குப் பாதகமான சிந்தனைப் போக்கு உள்ளவர்களாக நீடிக்கச் செய்வது புத்திசாலித்தனமாகுமா ?

மேலும் ஹிந்து சமூகத்தை அனாவசியமாகப் பிளவு படுத்திவிட்டாரே என்பதால்தான் அவரைப் பெரியார் எனக் குறிப்பிட மனம் ஒப்புவதில்லையேயன்றி, அவரது ஆரம்ப காலகட்டத்தில் பிறர் எண்ணிப் பார்க்கவும் துணியாத அருஞ் செயல்களைச் செய்தவர்தான் அவர். செல்வச் சீமான் வீட்டுப் பிள்ளை. மைனர் விளையாட்டுகள் விளையாடித் திரிந்தவர்தான். ஆனால் அருணகிரியார் மாதிரி திடாரென மனம் மாறி அவர் பக்திமான் ஆனதுபோல் இவர் மக்கள் நலனில் நாட்டம் கொள்ளலானார். தந்தையார் வேங்கடசாமி நாயக்கர் விரும்பிய பிரகாரம் குடும்ப வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டும் ஏராளமான பரம்பரைச் சொத்துகளைப் பராமரித்துக் கொண்டும் சுகமாகக் காலம் கழிப்பதற்கு மாறாக பொதுக் கரியங்களில் இறங்குவது குடும்பத்திற்குள் எவ்வளவு எதிர்ப்புகளைச் சமாளித்து, பாசப் பிணைப்புகளை நிர்தாட்சண்யமாக அறுத்துப் போட்டுத் தாக்குப் பிடிக்க வேண்டிய சோதனை என்பது அவ்வாறான அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

நம் சமூகத்துத் தாய்மார்கள் எல்லாம் திரண்டு மாநாடு நடத்தி ஈ.வே.ரா. அவர்களைப் பெரியார் என அழைத்து மகிழ்ந்தார்கள். நம் தாய்மார்களுக்கு நாம் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதற்காகவாவது ஈ.வே.ரா. அவர்களை மரியாதைக் குறைவாகக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டாமா ?

ஈ.வே.ரா. அவர்களால் அவரே எதிர்பாராத விதமாகவும், அவர் விரும்பாதவாறும் நம் சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஏற்பட்டுவிட்டிருக்கிற இழப்புகளை ஆதாரப் பூர்வமாகவும், ஏற்கத் தக்கவகையிலும் எடுத்துச் சொல்வதுதான் நோக்கமாயிருக்க வேண்டும். ஆயிரந்தான் இருக்கட்டுமே, ஈ.வே.ரா. நம்மவரே அல்லவா ? அவருடைய கறாறான போக்கையும் தயக்கமின்றிச் செயல்பாட்டை மாற்றிக்கொள்ளும் இயல்பினையும் பார்க்கையில், இன்று அவர் இருப்பாரேயாகில், மதத்தின் பெயரால் தினம் தினம் இங்கு நிகழ்ந்து வரும் பயங்கரவாத அட்டூழியங்களை எதிர்த்து ஓர் இயக்கமே தொடங்கக் கூடும்.

காந்திஜி மறைந்தபோது பீறிட்டெழுந்த ஹிந்து உணர்வு இப்போதும் அவருக்கு எழும் என்பதே எனது அனுமானம்.

ஆகையால் மரியாதைக்குரிய ஈ.வே.ரா. அவர்களைப் பெரியார் என விளிக்க இயலாவிடினும் சிறியார் எனக் குறிப்பிடாமல் கன்ணியமாக விமர்சிப்பதே முறை.

ஈசருக்குக் கொடுக்க வேண்டியதை ஈசருக்கும் சீசருக்குக் கொடுக்க வேண்டியதை சீசருக்கும் கொடுப்போம்.

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்