இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

வே.சபாநாயகம்.


1. எனக்கு எழுதணுமென்னு ஒரு உந்துதல் வந்ததில்லாதே எழுத மாட்டேன்.
ஊற்று வற்றிப்போனா அதுக்கு நம்மொ பொறுப்பில்லெ. அதுக்கு நான்
வருத்தப்படவுமில்லே. பின்னாலே எழுத முடியாத ஒரு காலமும் வந்தது.
என்னதான் உந்தித் தள்ளினாலும் எழுத முடியாது. எழுத முடியலேன்னு
நான் வருத்தப்படவே இல்லை.

2. என் நாவல்களில் மதப்பிரச்சாரம் கூடவே கூடாது என்று கண்டிப்போடு
தான் எழுதியிருக்கிறேன். நான் பைபிள் பிரச்சாரம் நெறையவே செய்தி
ருக்கேன். ஆனா என் படைப்பு வாயிலாகச் செய்யல்லே. எந்தவிதப்
பிரச்சாரமானாலும் வாழ்க்கைக்கு நேரான சத்தியத்தை எதிர்ப்பதாகுமென்று
நினைக்கிறேன்.

3. என்னுடைய வாழ்க்கையில் பெண்ணியத்திற்கான தேவை ஏற்பட்டதே
இல்லை. ஏனென்னா என் அப்பாவுக்கு நான் மகனாத்தான் வளர்ந்தேன்.
என் கணவரும் வீட்டிலே எனக்குத் தந்திருப்பது ரண்டாம் ஸ்தானமில்லே.
அதனாலே எனக்குப் பெண்ணியத்தெப் பத்திய சிந்தனையே இல்லை.

4. நாவல் எழுதுவதற்கென்று தனி வரைமுறைகள் கிடையாது. பொதுவாக
சில வரைமுறைகள் உண்டு. நம்மொ ஒரு கதை சொல்கிறோம். அந்தக்
கதை சத்தியத்தோடு (எதார்த்தம்) சேர்ந்திருக்கணும். இப்படித்தான்
நடந்திருக்கணும், அந்த ஆளு இப்படித்தான் பேசியிருக்கணும் என்னுள்ளதை
மனசிலே வச்சிக்கிட்டு நம்மொ எப்படி செய்தாலும் எந்த technic வச்சாலும்
சரிதான். ஆனா ஒரு technic வச்சிக்கிட்டு நாவல் எழுதப் போனோமானா,
அந்த நாவல் தோல்வியேதான். இதுதான் எனக்கு ‘டக்டர் செல்லப்பா’ விலே
சம்பவிச்சது. ‘புத்தம் வீட்டி’லே எந்த technic-ம் கையாளல்லே. 15 நாளிலே
எழுதினதாக்கும். என்ன எழுதினோம்னு தெரியாம எழுதினதாக்கும்.

5. எப்பம் ஒரு மனுசன் தன்னை விட சத்தியம் பெரிசு என்னு நெனைச்சு,
அந்த சத்தியத்தை மற்றவியளுக்குத் தெரிவிக்க வேணுமென்ன வேகத்தொட
எழுதினானோ, அந்தப் படைப்பு நாலு பேருகிட்டே போய்ச் சேரும்.
inspiration என்னு சொல்லுறதை நம்பக்கூடியவளாக்கும் நான். inspiration
என்னா, வெளியிலே இருந்து ஒரு சக்தி உள்ளே வருது. அப்படி அந்த
சக்தி வந்து எழுதணும். ஆனா, இது எல்லோருக்குள்ளேயும் வராது.
நம்மொ அதுக்கு அடிபணிஞ்சு இருக்கணும். சத்தியத்துக்கு நாலுபேர்
இருந்தாலும் கட்டாயம் தமிழில் இலக்கியம் வளரும். 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்