இலை போட்டாச்சு ! – 17 -புளிக்காய்ச்சல்

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

பாரதி மகேந்திரன்


தேவைப்படும் பொருள்கள்

புளி – 2 எலுமிச்சங்காய் அளவு
மிளகாய் வற்றல் – 15
உப்பு – 2 மே. க.
தனியா (கொத்துமல்லி விதை) – 4 மே. க.
கடலைப்பருப்பு – 2 மே. க.
கொண்டைக்கடலை – 250 கிராம்
பெருங்காயப் பொடி – 3 தே. க.
மிளகுப் பொடி – 1 மே. க.
சீரகப் பொடி – அரை மே.க.
வெள்ளை எள்ளு – 2 மே. க.
கடுகு – 1 தே.க.
உப்பு – 2 மே. க.
நல்ல எண்ணெய் – 150 கி.
கறிவேப்பிலை – 5, 6 ஆர்க்குகள்

புளிக்காய்ச்சல் என்பது புளியஞ்சாதம் பிசைவதற்கான கெட்டியான குழம்பு என்பது நாம் அறிந்ததே.

முதலில் புளியை ஐந்தாறு தடவைகள் தண்ணீர் விட்டுக் கரைத்து அக் கரைசலை ஓர் ஏனத்தில் வைத்துக்கொள்ளவும்.

வெள்ளை எள்ளைத் தூசு தும்பு போகப் புடைத்துக் களைந்து வடிகட்டி உலர்ந்த நிலையில் எண்ணெய் விடாமல் வறுத்து வைக்கவும். கொண்டைக்கடலையைக் களைந்து நசுங்குகிற பதத்துக்கு ஊறவைத்துச் சிறிது உப்புப்போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய்யை ஊற்றி அடுப்பில் ஏற்றி அது காய்ந்ததும் கடலைபருப்பைப் போட்டு, அது முக்கால் வாசி சிவந்ததும் தனியாவையும் 10 மிளகாய் வற்றலையும் போட்டு வறுத்து இறக்கி மின் அம்மியில், பொடித்துக்கொள்ளவும். பின்னர், கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகைப் போட்டு அது வெடித்த பின் மீதமுள்ள ஐந்து மிளகாய்களைக் கிள்ளிப் போட்டு அது சிவந்ததும், கறிவேப்பிலைகளைப் போட்டுப் புளிக் கரைசலை ஊற்றி உப்பைப் போட்டுக் கொதிக்க விடவும். புளியின் பச்சை வாசனை போய் கரைசல் நன்றாக வற்றிக் கெட்டியான குழம்பு போல் ஆனதும் அதில் வேகவைத்துள்ள கொண்டைக்கடலை, பெருங்காயப் பொடி, வறுத்துப் பொடித்து வைத்துள்ள பொடி, எள், மிளகு, சீரகப் பொடிகளைப் போட்டுக் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும். இக் குழம்பு கொதிக்கும் போதே பெருங்காயப் பொடியை இத்துடன் கலக்கலாம். அல்லது கடைசியிலும் போட்டுக் கலக்கி வைக்கலாம். நன்றாக ஊறி ஆறிய பின் சாதத்தில் போட்டுப் பிசைந்து தேவையானால் நல்லெண்ணெய் சிறிது ஊற்றிக் கொண்டு அப்பளம், வடகம், வறுவல் போன்றவற்றைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இது சில நாள் வரை கெடாமல் இருக்கும்.

mahendranbhaarathi@yahoo.com


பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்