இறந்தது யார்?

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

இமாம்.கவுஸ் மொய்தீன்


தந்தையின் சாவு!
உறவினர்
நண்பர்கள்
அதிகாரிகள்
அக்கம்பக்கத்தவரென
கூட்டமயம்.

‘பாவம்!
இப்பத்தான்
படிப்பை முடித்தான்
அதற்குள்
இப்படி ஆகிவிட்டதே?
இனி
அம்மா தம்பி தங்கையர்
கல்வி கல்யாணம் காட்சி
எல்லாமே
இவன் தலையில் தான்’
என்றது உறவின் ஒப்பாரி.

‘ரொம்ப நல்ல மனிதர்!
நேர்மையானவர்
நேரம் பாராமல் உதவியவர்
இப்படி
திடீரென்று போய்விட்டாரே!’
என்றது நட்பின் குரல்.

‘என்ன படித்து இருக்கிறாய்?
……சரி………
உன் தந்தையின் வேலை
உனக்கு அளித்து விடுகிறோம்
கருணையின் அடிப்படையில்..!
என்றது அதிகார வர்க்கம்.

‘அதோ!
ஒல்லியாய் உயரமாய்
போகின்றானெ
அவன் தான் மூத்தவன்!
இனி
பொறுப்பெல்லாம்
இவன் தலையில் தான்’
என்றது இறுதி ஊர்வலத்தில்
வீதியில் ஓர் குரல்.

எல்லாம் முடித்து
வீட்டுக்கு வந்தபின்
புரிந்தது
செத்தது அப்பா அல்ல!
அன்பு பாசம் அரவணைப்பு
கடமைகள் பொறுப்புகள் என
அவர் என்னில் நானாக
வாழப் போகிறார்!

உண்மையில் இறந்தது….
தந்தைக்காக நான் கண்ட
என் கனவுகளும்
உணர்வுகளும்
நானும் தான்!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.

Series Navigation