இறகில்லா சின்னப்பறவை

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

ந.வீ.சத்தியமூர்த்தி


மதிக்கவும் துதிக்கவும் மட்டுமின்றி
கதைக்கவும் சிதைக்கவும்
தெரிந்த தசைத்துண்டு!

வில்லம்பை மழுங்கடிக்கும்
சொல்லம்பு வித்தகன்!

பசிவந்தால் ருசிமறந்து
புசித்தபின் அசைபோடும்
அவசரக் குடுக்கை!

பொய்யும் உற்பத்தி செய்யும்
மெய் விழிச்சாலை!

மூளையின் கட்டளைமீறி
பாய்ச்சாலை கடக்கும் பாதசாரி!
ஆறடி உடலையும்
வேரோடு சாய்க்கும் அரக்கன்!

மொட்டுகளை மட்டும்
விட்டுப்பிரியாத சொற்கொடி!
மீறினால் கண்டிக்கப்படும்
பற்களால் தண்டிக்கப்படும் குற்றவாளி!
உமிழ்நீரையே அமிழ்நீராய் எண்ணும்
நிரந்தர நீச்சல்காரன்!

பேசும் கலை ஒன்றை
காசாக்கும் காரியவாதி!
எள்ளுடன் உடைந்த
கல்லையும் பிரித்திறியும் அன்னப்பறவை!
என்னவள் முன்னேமட்டும்
இறகில்லா சின்னப்பறவை!

– ந.வீ.சத்தியமூர்த்தி
sathiyamozhi@yahoo.com

Series Navigation

ந.வீ.சத்தியமூர்த்தி(சிங்கப்பூர்)

ந.வீ.சத்தியமூர்த்தி(சிங்கப்பூர்)