இரு நாட்டிய நிகழ்வுகள்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

வெளி ரங்கராஜன்சென்னையில் நடைபெறும் மார்கழி மாத இசை நாட்டிய விழாக்களுக்கு முன்னோடியாக மைலாப்பூர் பாரதீய வித்யா பவனிலும், பி.எஸ். உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும் இரு நாட்டிய விழாக்கள் நடைபெற்றன. அந்த விழாக்களின் ஒரு பகுதியாக பரத நாட்டியக் கலைஞர் லக்ஷ்மி ராமசாமி அவர்களால் பாரதியாரின் ஊழிக்கூத்து கவிதை வரிகளும் எதிர்மறைப் பொருள்களை மையமாகக் கொண்ட அபிநய ஷ்ருங்கலா என்ற தொகுப்பும் நாட்டிய வடிவில் நிகழ்த்திக் காட்டப்பட்டன.

நடனம் என்பது மனதின் பரவசங்களை ஒரு தேர்ந்த உடல் மொழியில் நிகழ்த்திக் காட்டும் ஒரு வசீகரமான அழகியல் வடிகாலாக காலம் காலமாக மனித வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒரு வடிவமாக உள்ளது. குறிப்பாக நம்முடைய பரத நாட்டிய வடிவம் அதிக நுட்பங்களுடனும், விசாரணைகளுடனும் எண்ணற்ற சிறு சிறு இழைகளுக்குள் ஊடுருவிச் சென்று விரிவுகள் கொள்ளும் தன்மைகளுடன் மேலும் மேலும் கூடுதலான தேர்ச்சிகளை இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறது. மரபு சார்ந்த குறிப்பிட்ட பாவங்களை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டு சிறப்பான நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டு வரும் எண்ணற்ற கலைஞர்கள் நம்மிடையே உண்டு என்றாலும் கலையை வாழ்வின் ஊடாட்டமாக ஏற்று சமகால இருப்பு மற்றும் சிந்தனை சார்ந்த பல்வேறு உணர்வுகளை கலையின் ஊடாக அடையாளம் கண்டு அவைகளுக்கு வடிவம் கொடுக்க முனையும் கலைஞர்கள் வெகு சிலரே நம்மிடம் உண்டு. மரபான வெளிப்பாடுகளுக்கு இடையிலும் புதிய அர்த்தங்களையும், விளக்கங்களையும் உருவாக்குவதற்கு இடமிருப்பதை உணர்ந்து அந்த வடிவமைப்புக்குள்ளேயே புதுப்புது வடிவங்களை உருவாக்க அவர்கள் முயன்று வருகிறார்கள். உண்மையில் நம்முடைய தொன்மங்களும் காவியங்களும் அதற்கான எண்ணற்ற திறப்புகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருவதை நாம் பார்க்க முடியும். அவைகளை அடையாளம் கண்டு புதிய படைப்புகளுக்கான களமாக அவைகளை மாற்ற முயல்வதே படைப்புக் கலைஞர்கள் முன் உள்ள சவாலாக உள்ளது. உண்மையில் இது போன்ற முயற்சிகளே மரபிற்கு ஒரு நவீன முகத்தையும், புதிய உயிரோட்டத்துக்கான சாத்தியங்களையும் வழங்கி நடனத்தை வாழ்வுடன் இணைந்த என்றும் புதிய வடிவமாக நிலைபெறச் செய்கிறது.

அப்படிப்பட்ட புதிய படைப்புப் பொறிகளை லக்ஷ்மி ராமசாமியின் இரு நாட்டிய நிகழ்வுகளிலும் பார்க்க முடிந்தது. இந்தப் பிரபஞ்ச இயக்கத்தை ஒரு முடிவில்லாத கோள்களின் நடனமாகக் கண்டு அதன் ஊடாகவே சகல ஜீவராசிகளின் உருவாக்கமும், மறைவும், உயிர்ப்பும் நிகழ்வதை பாரதியார் ஊழிக் கூத்தாக தன்னுடைய கவிதையில் அனுமானித்திருந்தார். ‘ஆடுங்கூத்தை நாடச் செய்தாய் என்னை’ என்று சக்தியின் கூறுகள் சேர்ந்தும், சிதறியும், கூடியும், பிரிந்தும்,உயிர்த்தும் மரணித்தும் மேற்கொள்ளும் முடிவில்லாத இயக்கத்தை ஆனந்த நடனமாகப் பாவித்த பாரதியின் கவிதை மனத்தை லட்சுமி ராமசாமி தன்னுடைய குழு நடனத்தின் மூலமாக ஒரு அழகியல் அனுபவமாக மாற்றினார். தோற்றம், மறைவு, உயிர்ப்பு ஆகிய கணங்களின் ஊடாகவே நாம் இவைகளை அடையாளப்படுத்தினாலும் அத்தோற்றங்களைக் கடந்து அந்தப் பயணத்தின் ஊடான பரவசங்களையும், வலிகளையும் ஒரு கட்டற்ற ஆற்றுப் பெருக்கான உணர்வு நிலையாக பாரதியார் அனுமானித்திருந்ததை வண்ணங்கள் குழைத்து ஒரு கோர்வையான நடன அனுபவமாக அவர் நிகழ்த்திக் காட்டினார். ‘வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட’ என்று பாரதியார் அனுமானித்தபடியே மோகன ராகத்தில் ஒலித்த கவிதை வரிகள் அத்தகைய ஒரு பிரபஞ்ச உணர்வுக்கான செறிவான ஒரு பின்புலத்தை வழங்கின. ஒவ்வொரு உயிரும் தனக்கான ஒரு லயத்தை அடையப் போராடும் ஒரு துடிப்பை தேர்ந்த அசைவுகளுடன் நாட்டியம் சிறப்பாக உருவகம் செய்திருந்தது. நம்முடைய தமிழ் நடன வடிவங்கள் குறித்தும், அதன் வரலாறு குறித்தும் சிறப்பான ஆய்வுகள் செய்து வரும் டாக்டர். ரகுராமனும், பாடல்களை இசைத்து நிகழ்வுக்கு செறிவை வழங்கிய வானதி ரகுராமனும் இந்த நாட்டிய வடிவமைப்புக்கு பின்புலமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

அதே போல் இரண்டாவது நிகழ்வான அபிநய ஷ்ருங்கலா என்ற நாட்டியத் தொகுப்பில் வேறுபட்டதுபோல் தோன்றும் எதிர்மறை அம்சங்களை எடுத்துக் கொண்டு அவைகளின் இருப்பு ஒரு குறிப்பிட்ட உணர்வின் சுவையைக் கூட்டுவதில் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை நம்முடைய காவியங்களின் சில படிமங்களையே எடுத்துக் கொண்டு அவைகளை சிறப்பான நடனச் சிதறல்களின் தொகுப்பாக அவர் நிகழ்த்திக் காட்டினார். குறிப்பாக அவதாரங்கள் மூலமாக வெளிப்படும் இறைவனின் பாதங்கள் குறித்த பல்வேறு படிமங்கள் எவ்வாறு காத்தல், அழித்தல், உயிர்ப்பித்தல் வாத்ஸல்யம், காதல் ஆகிய மாறுபட்ட உணர்வுகளின் வடிகால்களுக்கான வடிவங்களாக இருப்பதை மாறுபட்ட நடன அசைவுகளில் நிகழ்த்திக் காட்டினார். அதே போல் காத்திருத்தல் என்ற உணர்வின் இரு வேறு நிலைகளாக கண்ணன் வரவுக்காக காத்திருக்கும் ஒரு கோபியின் மன நிலையையும், கண்ணன் கதவைத் தட்டும் போது திறக்க மறுத்து அவனுடன் பிணக்கு கொண்டு திருப்பி அனுப்பும் மற்றொரு கோபியின் வேறுபட்ட நிலையையும் வெவ்வேறு வடிவங்களின் வெளிப்பாடாக நிகழ்த்திக் காட்டினார். வாழ்நிலை என்பது தொடர்ந்து வேறுபட்ட தோற்றங்களின் கொள்கலமாக இருப்பதும் அப் பன்முகங்களே வாழ்நிலைக்கு சுவைகளை வழங்குவதையும் அந்த நாட்டியமாக்கலில் பெற முடிந்தது. அவருடைய நடன அசைவுகள் நளினமும், உயிர்ப்பும் கொண்டு அவ்வுணர்வுக்கு ஒரு வசீகரமான பின்புலத்தை வழங்கின.
கலையின் மூலமாக வாழ்நிலை குறித்த அழகுணர்வையும் புரிதலையும் மேம்படுத்தும் களமாக நாட்டியம் செயல்படுவதற்கான பல சாத்தியங்களை லக்ஷ்மி ராமசாமி மற்றும் அவரது குழுவின் இது போன்ற ஒருங்கிணைந்த முயற்சிகள் புலப்படுத்துவதை இந்த நிகழ்வுகளில் உணர முடிந்தது.


Series Navigation

வெளி ரங்கராஜன்

வெளி ரங்கராஜன்