இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

இயான் புருமா (Ian Buruma) – மொழிபெயர்ப்பும் பின் குறிப்புகளும்: ஆசாரகீனன்


அப்படி ஓர் அமைப்பை அடைவது கடினமான செயல்தான். ஆனால், மத்திய கிழக்கில் மதசார்பற்ற அரசியல் என்பதன் பரிதாபகரமான வரலாற்றைக் கருதினால், அதற்கு அப்பாலும் போகும் அடாதுர்கிய வழியை இராக்கில் பின்பற்றலாம் எனக் கருதுவது குறித்து இஸ்லாம் பற்றி சிறப்பான ஞானம் உள்ள பல அறிஞர்கள் முரண்படுவது ஏன் என்பது நமக்குத் தெளிவாகிறது. அரசாங்கங்களின் பொதுக் கொள்கைகள் மீதான ஆய்வுக்கான அமெரிக்க முனைப்பு நிறுவன (American Enterprise Institute for Public Policy Research) உறுப்பினரும், முன்னாள் சி.ஐ.ஏ. நிபுணருமான ராவுல் மார்க் கெரெக்ட் (Reuel Marc Gerecht), ஜனநாயகம் மலர இருக்கும் வலுவான நம்பிக்கை சிஸ்டானியின் தீவிர ஆதரவாளர்களே என்பதோடு இருக்கும் ஒரே நம்பிக்கை அவர்கள்தான் என்று வாதிடுகிறார். கெரெக்ட்டின் பார்வையில் சிஸ்டானியின் ‘இரானிய பாரம்பரியமும், இஸ்லாமியக் குடியரசில் வாழும் அவரது சொந்த பந்தங்களும் அவரை மதத் தலைவர்களின் சர்வாதிகாரத்தில் உள்ள பாதகங்கள் பற்றி விழிப்புணர்வு மிக்கவராக ஆக்கியுள்ளன ‘, மேலும் ‘இராக்கின் ஜனநாயகத்தைப் பொறுத்து, சிஸ்டானி ஓர் உருப்படியான அமெரிக்கக் கூட்டாளியாக மீண்டும் ஆகக் கூடும் ‘. நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் நோவா ஃபெல்ட்மன், இராக்கில் ஜனநாயகம் சாத்தியமானதே, வோட்டுப் போடும் உரிமையை மக்களுக்குத் தரும் ஜனநாயகமாக மட்டுமல்லாமல், அதில் ‘இஸ்லாமிய நம்பிக்கைகளுடனும் ஆதர்சங்களுடனும் மதிப்பீடுகளுடனும் பிணைக்கப்பட்ட சட்டங்களுக்கு [ஆதரவாக] வாக்களிக்க முடியும் என்பதோடு அரசாங்கம் இஸ்லாத்தை அங்கீகரித்து மத நிறுவனங்களுக்கும் மதக் கல்விக்கும் நிதி உதவி செய்யவும் முடியும் ‘ என்று தீவிரமாக வாதிடுகிறார்.8

பெண்களின் உரிமைகளையும் பிற சமூகப் பிரச்சினைகளையும் பற்றி [இறை]நம்பிக்கை மிகுந்த ஷியாக்கள் மேற்கொள்ளும் நிலைப்பாடுகளை பெரும்பாலான அமெரிக்க வாக்காளர்கள் ஒப்புக் கொள்ளாமல் இருந்தாலும், அந்த ஷியாக்கள் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட மக்கள்-மைய அரசாட்சியை (Popular Sovereignty) விரும்புவதாகச் சொல்கின்றனர். சிஸ்டானியும் அவரது ஆதரவாளர்களும் இந்த நிலையை மேற்கொள்ளக் காரணம், இராக்கின் பெரும்பான்மையினர் ஷியாக்களாக இருப்பதால் தேர்தல்கள் அவர்களுக்குத் தான் சாதகமாக அமையும், சுன்னிகளுக்கு அல்ல என்பதாலா அல்லது அவர்கள் விரும்புவது கொள்கை அடிப்படையில் அமைந்த ஒரு தேர்தல் முறையா என்பதே [நமக்கிருக்கும்] கேள்வி. இது சோதித்துப் பார்க்கப்படும் வரை — அதாவது, ஒரு குழுவோ அல்லது வேறு குழுவோ தேர்தலில் தோல்வி அடைந்த பின், மாற்றுக் கட்சி ஆட்சி செலுத்த தம் ஒப்புதலைத் தரும் வரை நம்மால் இதற்கான விடையை அறிய முடியாது. ஒருங்கிணைக்கப்பட்ட ஷியா கூட்டணி ஒன்றை உருவாக்க சிஸ்டானி கடுமையாக உழைத்தாலும், ஷியாக்களிடையே இன்னமும் ஒற்றுமை ஏற்பட்டாகவில்லை. சலாபிக்கும் தீவிரவாத ஷியா மதத்தலைவர் முக்தாத அல்-சாதிருக்கும் இடையிலான ஒரு கூட்டணி, கணிசமான ஷியா வோட்டுகளைப் பிரிக்கக் கூடும்.9

ஜனவரி மாதம், சுமார் 200 அரசியல் குழுக்கள் 275-உறுப்பினர் கொண்ட தேசிய ஆளும் மன்றத்துக்குப் போட்டியிட உள்ளனர். ஐரோப்பாவைப் போலவே, இராக்கிலும் இந்தக் கட்சிகள் ஒட்டுப்போட்ட கூட்டணிகளை (இவற்றுள் பலவும் சந்தேகமில்லாதபடிக்கு மத அடிப்படையில்தான் அமையும்) உருவாக்கிய பின் ஒரு பிரதமரை நியமிக்கவும் நிரந்தர அரசியல் அமைப்பு ஒன்றை வரையவும் தொடங்கும். முழு ஆட்சிக் காலத்துக்கு நிலைத்து ஆளும் ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2005 இறுதியில் நடைபெற வேண்டும். மேலும், ஜனவரி இறுதியில் மாநில அல்லது வட்டாரத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் தவிர, வடக்கு கர்த் இனப் பகுதியில் கர்த் மக்கள் ஒரு தனிப் பேரவையைத் தேர்வு செய்யும் தேர்தலும் நடைபெறும்.

இது சிக்கலாகத் தோன்றினாலும், உலகிலேயே அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் இந்தோனேசியாவின் நிலையை விட இது ஒன்றும் மோசமில்லை. மூன்று மாதங்களுக்கு முன், இராக்கின் அரசியல் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவினர் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜனநாயகத் தேர்தலைப் பார்வையிட அங்கு சென்றிருந்தனர். பெரும்பாலும் சுன்னி பிரிவினர் அங்கம் வகிக்கும் ‘சார்பற்ற இராக்கிய ஜனநாயகவாதிகள் ‘ (Independent Iraqi Democrats) கட்சியின் அகிஃப் கலிக் இப்ராஹீம், ‘[நாம்] இங்கு கற்கும் முக்கியமான பாடம், பணியின் சிக்கல் மற்றும் துன்பங்களைக் கண்டு பயந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதே — இதைச் செய்ய முடியும் [என நம்ப வேண்டும்] ‘ என்கிறார். பெருமளவில் மதசார்பற்ற அமைப்பான இராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இக் குழுவின் உறுப்பினராகப் பங்கெடுத்த மாஹ்தி ஜாபெர் மாஹ்தி, இதே போன்ற கருத்தைத் தெரிவித்ததோடு, ஏஜென்சி ஃபிரெஞ்சு-ப்ரஸ் என்ற ஃபிரான்ஸ் நாட்டு செய்தி நிறுவன நிருபரிடம், இந்தோனேஷியாவைப் போலவே இராக்கும் பல்வேறு மத இனக் குழுக்களைக் கொண்டிருப்பதாகவும், ‘இந்த வேறுபட்ட தன்மைகளை நிர்வகிப்பது ‘ முக்கியமானது என்றும் சொன்னார். மேலும் அவர், ‘எவ்வளவு ஜனநாயகத்துடன் இவை நிர்வகிக்கப் படுகின்றனவோ, அவ்வளவுக்கு நாடு பிளவுபட்டு விடாது என்பதும் உறுதியாகும் ‘ என்றும் குறிப்பிட்டார்.

இந்தோனேசியா ஜனநாயகப் பாதைக்கு வந்தது எளிதில் நடந்ததல்ல. அங்கு பல ஆண்டுகள் நிலவிய மதசார்பற்ற சர்வாதிகாரத்தின் போது, இராக்கில் நடந்ததைப் போலவே அரசியல் தளத்தில் இஸ்லாத்தின் இயக்கம் ஒடுக்கப்பட்டது. ஆனாலும், அதன் பின்விளைவு அடிப்படைவாத இஸ்லாமிய ஆட்சியாக அமையாமல், ஒரு ஜனநாயக அமைப்பாக இருந்தது. எவ்வளவு குறைகள் இருப்பினும், இந்த அமைப்பில் பிற கட்சிகளைப் போலவே இஸ்லாமியக் கட்சிகளும் வாக்குகளுக்காக அலைய வேண்டியதாகவே ஆயிற்று.

இந்தோனேஷிய முஸ்லிம்கள் அரேபியர்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பது என்னவோ நிச்சயம். அவர்களுடைய மதப் பழக்க வழக்கங்கள் அவ்வளவு கறாரானவை அல்ல.10 அவர்களுடைய மரபில் தீவிரவாதம் என்பது கிடையாது. பெண்களுக்கு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுடைய அரசியலோ சகிப்புத்தன்மை மற்றும் கூட்டு ஒப்புதல் (consensus) என்ற வகையிலான வார்த்தைகளில் பொதிக்கப் பட்டிருந்தாலும், [அரேபியரின் அரசியல் போலவே] மிகக் கொடூரமானது. 1969-ல் ஒரு ரத்தக் களறியான ராணுவப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய அதிபர் சுஹர்தோ, எல்லா முஸ்லிம் கட்சிகளையும் கட்டாயப்படுத்தி, முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஒரே ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் முஸ்லிம் அல்லாதவர்களையும் ஏற்றுக் கொள்ளும்படி செய்து, அதன் மூலம் அரசியல் இஸ்லாத்தை ஒடுக்கினார். அது P.P.P. அல்லது கூட்டு வளர்ச்சிக் கட்சி என்று அழைக்கப்பட்டது. சுஹர்தோவின் முன்னோடியான சுகர்னோவால், தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதாரமாக அமையும் பொதுவான ஒழுக்க விதிகளை உருவாக்கும் ஒரு வித அரசாங்க மதமாக வடிவமைக்கப்பட்ட பஞ்சசீலமே அதிகாரபூர்வமான கொள்கையாக ஆக்கப்பட்டதே தவிர இஸ்லாம் அல்ல. பஞ்சசீலம் என்பது ஐந்து கோட்பாடுகளைக் குறிக்கும் ஒரு சமஸ்கிருதச் சொல்: அனைத்தையும் விட உயரிய ஒருமையில் நம்பிக்கை, நீதி மிக்கதும் பண்பட்டதுமான மானுடம், இந்தோனேசியாவின் ஒருமைப்பாடு, அனைத்து இந்தோனேசியர்களுக்குமான ஜனநாயகம் மேலும் சமூக நீதி ஆகியன இவை. சுஹர்தோவின் தலைமையில் ஜனநாயகம் இருக்கவில்லை என்பதால் ஓரளவு போலித்தனமானதுதான் என்றாலும், இது அடக்கமான குறிக்கோள்தானே என்பீர்கள். ஆனால், இஸ்லாத்தை விட அரசாங்கத்தின் அரசியல் கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய வலுக் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டதால், முஸ்லிம்கள் தங்கள் மத அடையாளம் கொள்ளையிடப் பட்டதாகக் கருதினர். ஜகர்தாவில் கலவரங்கள் ஏற்பட்டன,11 சீனர்களும் கிருஸ்தவர்களும் தாக்கப்பட்டதோடு,12 பொரோபொதுரில் இருந்த பழமையான பெளத்த ஆலயம் குண்டு வீசித் தகர்க்கப்பட்டது. அமைதியான எதிர்ப்பைக் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவரான சுஹர்தோ கடும் அடக்கு முறையை அவிழ்த்து விட்டார். அதிகாரபூர்வமான முஸ்லிம் அமைப்புகள் பஞ்சசீலத்தை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தன.

சவுதி அரேபியாவின் வஹாபியர்களால் நிதியுதவி செய்யப்பட்டு வளர்க்கப்படும் இஸ்லாமிய தீவிரவாதம் (radical Islam), இராக்கில் சதாம் ஹுசேனின் ஆட்சியின் போது இராக்கியர்களைக் கவர்ந்த அதே காரணங்களால் இந்தோனேசியாவிலும் பலரை ஈர்க்கத் தொடங்கியது: எல்லா அரசியல் எதிர்ப்புகளும் சர்வாதிகாரிகளால் நசுக்கப்படும்போது, மசூதி [அமைப்பு ரீதியான இஸ்லாம்] மட்டுமே அரசியல் அடைக்கலத்துக்கான ஒரே இடமாக மாறிவிடுகிறது. பொருளாதாரச் சிக்கல் ஒன்றின் காரணமாக சுஹர்தோவின் சர்வாதிகார ஆட்சி கவிழ்ந்த பின்னர் ஏற்பட்ட ஒரு புதிய தாறுமாறான ஜனநாயகம், ஓர் இஸ்லாமிய நாட்டை ஏற்படுத்த அழைப்பு விடுக்கும் நவ-பழமைவாதிகள் சுதந்திரமாக இயங்க இடம் கொடுத்தது. இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என பழிக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக மதசார்பற்ற அரசியல்வாதிகள் இஸ்லாமிஸ்டுகளைக் கண்டிக்க மறுத்தனர். மேலும், மிதவாத முஸ்லிம்கள் அவர்களைக் காணாதது போல ஒதுக்க முயன்றனர். ஆனால், அல் கய்தாவுடன் தொடர்புடைய ஜெமா இஸ்லாமியா என்னும் ஓர் இயக்கத்தினர், பாலி தீவில் உல்லாசப் பயணிகளுக்காக நடத்தப்படும் ஒரு டிஸ்கோ நடன விடுதியில் 200-க்கும் அதிகமானவர்களைக் கொன்ற பின்னரும் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இஸ்லாமிய பயங்கரவாதப் பிரச்சினை இருப்பதை இந்தோனேசியர்கள் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

சுஹர்தோவின் செயல்பாடுகள் சரியானதே என்று இதிலிருந்து நீங்கள் முடிவு செய்யக் கூடும். அவருடைய ஆட்சி கடுமையானதாகவும் லஞ்ச லாவண்யங்கள் நிறைந்ததாகவும் இருந்தாலும், அவர் இஸ்லாமிஸ்டுகளைக் கூண்டுக்குள் அடைத்து வைத்தார். ஜனநாயகம் இப்படித்தான் பயங்கரவாதத்தில் சென்று முடிகிறது [என்றெல்லாம் கருதக் கூடும்]. ஆனால் அது தவறான முடிவாகவே இருக்கும். சுஹர்தோவின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் மதத் தீவிரவாதம் தோன்றக் காரணமாக இருந்தது மட்டுமல்ல; மதத் தீவிரவாதத்துக்கு நல்ல மருந்தாக ஜனநாயகமே இருக்க முடியும் என்பதும் நிரூபிக்கப்படுகிறது — இந்தோனேசியாவில் இன்னமும் பெரும்பான்மையினராக விளங்கும் மிதவாத முஸ்லிம்கள், பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்படும் ரத்தக் களறிகளைக் கண்டு அடைந்த அதிர்ச்சியின் அளவு காரணமாக பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய எந்த ஒரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தீவிரவாதிகளை வெளிப்படையாகப் புறக்கணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இஸ்லாமியக் கட்சிகள் ஆளாகியுள்ளனர்.13

இந்தோனேசியாவைப் போலவே இராக்கும் இருக்குமா ? அரேபியருக்கும் கர்தியர்களுக்கும், ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்கும், மத சார்புள்ளவர்களுக்கும் மத சார்பற்றவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை வன்முறையின்றித் தீர்த்துக் கொள்ள ஜனநாயகம் வழிகோலுமா ? அப்படி நடக்கும் என்று கருத்தளவில் நீங்கள் சொல்லாம். ஆனால், இந்தோனேசியர்கள் எதிர்கொள்ள வேண்டியிராத சிக்கல்கள் இராக்கியர்களுக்கு உண்டு. வெறுக்கப்படும் ஓர் அன்னிய ஆக்கிரமிப்பின் கீழ் அவர்கள் தங்கள் ஜனநாயக அமைப்புகளை எழுப்ப வேண்டி இருக்கிறது.

குண்டு வீசும் விமானங்களிலும் டாங்கிகளிலும் வந்திறங்கிய அன்னிய வாத்தியார்களின் மாணவர்களாக இருந்து கொண்டு ஒரு ஜனநாயகத்தைக் கட்டி

எழுப்புவது மிகக் கடினமானது. இந்த அன்னிய ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களும் கூட இராக்கிய ஜனநாயகத்தையே விரும்புகிறோம் என்று சொன்னாலும், அன்னியர்களோடு சேர்ந்து நிற்கும் எவரும் அல்லது எந்தக் கட்சியும் துவக்கத்திலிருந்தே நம்பத் தகாதவர்களாக மாறி விடுகின்றனர். அதிலும், இந்த அன்னியர்கள் எந்த அளவு மதசார்பின்மையை வலியுறுத்துகின்றனரோ அந்த அளவு உள்நாட்டினர் தீவிர இஸ்லாமியத்தின் பக்கம் திரும்பக் கூடும். மேலும் இஸ்லாமிஸ்டுகள் பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டால் இராக்கியர்கள் ஆபத்தின்றி வாக்களிப்பதும் கடினமாகவே இருக்கும். குறிப்பாக, சுன்னி முக்கோணம் என்று அழைக்கப்படும் வடக்கு மற்றும் மேற்கு பாக்தாத் பெரு நகரப் பகுதிகளில் இதுதான் நேரப் போகிறது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலர் டானால்ட் ரம்ஸ்ஃபீல்ட் மற்றும் [இராக்கின்] முக்கியமான ஷியா கர்த் தலைவர்கள், மக்களில் பலர் தேர்தலில் பங்கு பெற முடியாது என்றாலும் கூட எப்படியாவது தேர்தல்களை நடத்துவது என்பதுதான் மேலானது என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால், [அதில்] நன்மை ஏதும் கிடையாது. ‘மிகச் சீரான தேர்தல் என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது ‘ என ஸா ‘த் ஜாவத் க்வாண்டில் என்பவர் பாஸ்டன் க்ளோப் பத்திரிகையிடம் சொன்னார். க்வாண்டில், ‘ஸ்கிரி ‘ என அழைக்கப்படும் ஒரு பெரிய ஷியா கட்சியின் இஸ்லாமியப் புரட்சிக்கான உயர்மட்டக் குழுவில் உயர் நிலை உறுப்பினராக இருப்பவர். ‘பாதுகாப்புக் காரணங்களால் சில சிறுபான்மையினர் பங்கு பெற முடியவில்லை என்பது, பெரும்பான்மையினரின் தேர்வுகளை ரத்து செய்வதற்கான காரணமாக இருக்கக் கூடாது. ‘ ஏன், அப்படிச் செய்வதுதானே சரி. ஏனெனில், சுன்னிகள் வாக்களிக்க முடியவில்லை என்றால், இராக்கில் ஜனநாயகம் செயல்படாது, அதாவது இந்த சிறுபான்மையினரின் ஒப்புதல் இல்லாவிட்டால், பெரும்பான்மையினர் ஒருபோதும் அமைதியாக ஆட்சி நடத்த முடியாதே.14

பல [மத]நம்பிக்கைகளையும், பிரிவுகளையும் ஒட்டி இணைக்கும் பணியை உள்ளடக்கிய ஜனநாயகத்தில் வேறு பிரச்சினைகளும் உண்டு. இரு-கட்சி அரசியல் அமைப்பு நடைமுறையில் கைகூடாதது. ஆனால் பல கட்சி அமைப்பில், இஸ்ரேலில் இருப்பது போல, சிறிய கட்சிகளுக்கு மிக அதிகமான செல்வாக்கு இருக்க முடியும். பெரும்பாலான இஸ்ரேலியர்கள் மதசார்பற்றவர்கள், ஆயினும் சிறிய பழமைவாதக் கட்சிகள் சில நேரங்களில் [இஸ்ரேலிய] அரசை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியும். ஆரம்பகால ஜயானிஸ்டுகள் பெரும்பாலும் மதசார்பற்றவர்களாவும், சோசலிச கூட்டு வாழ்வமைப்பினர்களாகவும் (kibbutzniks) இருந்தாலும் கூட, திருமணத்துக்கான தனிப்பட்ட விதிகள் போன்ற சிறப்பு அமைப்புகளைக் கட்டமைக்க அனுமதித்ததன் மூலம் மதசார்புள்ளவர்களுக்கு [தேவையற்ற அளவு] அதிக இடம் கொடுத்து விட்டனர். அத்தகைய ஒரு ஏற்பாடு இல்லாவிட்டால், அதி-பழமைவாதிகள் இஸ்ரேலிய நாட்டை அங்கீகரிக்க மாட்டார்கள் என்பதே அவர்களுடைய [அன்றைய] அச்சம். மத விஷயங்களில் கொடுக்கப்பட்ட அத்தகைய சுயாதிகாரம் பின்னர் மதசார்பற்ற அரசியலையும் வெகுவாக பாதிக்கும் என்பதை இஸ்ரேலை உருவாக்கியவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ அல்லது பிற பகுதிகளிலோ இருக்கும் மதசார்புள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் மதகுருமார்களோ அல்லது முல்லாக்களோ சொல்வதைத் தான் செய்கின்றனர் என்பது உண்மையே. சமீப காலம் வரை கூட கத்தோலிக்க அல்லது ப்ராடஸ்டண்ட் கட்சிகளைக் கொண்ட நாடுகளின் மக்களும் அப்படித்தான் செய்து வந்தனர். ஆனால், அவர்கள் தேர்தல்களில் வாக்களித்ததோடு, ஜனநாயக விதிகளை ஒப்புக் கொண்டு, ஒருவர் குரல்வளையை மற்றொருவர் பிடிக்காமல் ஒன்றாக வாழ்ந்து வர முடிந்தது. வருங்கால இராக்கில் மதக் கட்சிகளுக்கு வாக்களித்தாலும், ஷியாக்களும்

சுன்னிகளும் அப்படி [ஒற்றுமையாக] இருக்க முடியுமென்றால், அவர்கள் அப்படியே செய்து விட்டுப் போகட்டும். ஆனால், முதலில் அவர்கள் [தேர்தலில் பங்கு பெறுவதற்காக] கொல்லப்படாமல் வாக்களிக்க முடிய வேண்டும். அதுதான் பிரச்சினையே ஒழிய மதம் அல்ல. இதற்கான விடையானது ஜனநாயகத்தைச் சாத்தியமாக்கிய ஓர் அன்னிய ஆக்கிரமிப்பால் வடிவம் பெறப் போகிறது. ஆனாலும், அதன் இருப்பே அதைப் பிடுங்கி எறியவும் துணை போகலாம்.

பின் குறிப்புகள்:

இக் கட்டுரை டிசம்பர் 5, 2004 தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் மாகஸினில் வெளிவந்தது.

கட்டுரை ஆசிரியர் இயான் புருமா 1951-ம் வருடம் நெதர்லாந்தில் பிறந்தவர். இவரது அப்பா ஒரு டச்சுக்காரர். அம்மா ஓர் ஆங்கிலேயர். ஹாலாந்திலும், ஜப்பானிலும் கல்வி கற்ற புருமா, பல ஆண்டுகள் ஆசியாவில் வாழ்ந்துள்ளார்.

இவர் எழுதிய புத்தகங்களின் பட்டியல்:

Behind the Mask: On Sexual Demons, Sacred Mothers, Transvestites, Gangsters, Drifters, and Other Japanese Cultural Heroes (1984)

God’s Dust: A Modern Asian Journey (1989)

Wages of Guilt: Memories of War in Germany and in Japan (1994)

Anglomania : A European Love Affair (1999)

The Missionary and the Libertine: Love and War in East and West, a collection of essays revolving around the idea of nationhood (2000)

Bad Elements: a work on Chinese dissidents (2001)

Inventing Japan, 1853-1964 (2003)

Occidentalism: The West in the Eyes of Its Enemies (2004, Ian Buruma and Avishai Margalit)

மேலும், கிரிக்கெட் வீரர் ரஞ்சித் சிங்கை மையமாகக் கொண்ட Playing the Game (1991) என்ற ஒரு நாவலையும் புருமா எழுதியுள்ளார்.

புருமா தற்போது நியூயார்க் நகரிலுள்ள பார்ட் (Bard) கல்லூரியில் மனித உரிமைகள் மற்றும் இதழியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

[8] இதைச் சொல்வதால் அவரை ஒரு வலதுசாரி என்று இந்தியாவில் இருக்கும் பொய்யர்களில் ஒரு பெரும் பொய்யர் கூட்டமான இடதுசாரியினர் முத்திரை குத்துவரா ? நிச்சயமாக மாட்டார்கள். ஏனெனில் மதக்கல்வி என்று இங்கு சொல்லப்படுவது இஸ்லாமியக் கல்வி அல்லவா ? கிருஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்தியாவின் பண்டைப் பண்பாட்டை அழிப்பது என்று உறுதி பூண்ட வேறு எந்த கல்வி வகைகள் அனைத்திற்கும் அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்பதில் இந்திய இடதுக்கு அசைக்க முடியாத உறுதிப்பாடு உண்டு. ஆனால் இந்து மதம் அல்லது இந்துப் பண்பாடு ஆகியன பள்ளிகளில் போதிக்கப்படலாமா ? அது பாசிசம், சின்னஞ் சிறாரின் மனதில் விஷத்தை ஊட்டும் செயல், வேரோடு அறுத்து எறியப்பட வேண்டிய செயல். மாறாக கொலைகாரர்களான ஸ்டாலின், மாஒ பற்றிய புகழாரம் சூட்டும் வரலாற்றைப் பக்கம் பக்கமாகப் போதிக்கலாமா ? நிச்சயம் அதைத்தான் செய்ய வேண்டும். அதுதானே முற்போக்கு.

இந்தியாவில் குப்தர்களின் பேரரசைப் பற்றிப் போதிக்கலாமா ? பார்ப்பனீயத்தின் வேர் அங்குதானே இருக்கிறது. அது வரலாற்றில் நடக்கவே இல்லை என்று மறைப்பதுதான் கருத்து நேர்மையும், சரியான மக்களாட்சியின் கடமையும். ஆகவே நாம் இந்தியாவில் குப்தர்கள் என்று யாரும் இருந்ததையே நம் மாணவர்களுக்குப் போதிக்கத் தேவை இல்லை. இந்தியப் பண்பாடு, இலக்கியம் கலை ஆகியவற்றுக்குக் குப்தப் பேரரசு பெரும் பங்களித்ததாக அந்தக் காலத்து வரலாற்றில் நாம் படித்தோமே, அது எப்படி இன்று திடாரென்று இல்லாமல் போயிற்று ? அதுதான் இடதுசாரிகளின் ரசாயன வித்தை அல்லது alchemy. ஆனால் அதே போல மதத்தைத் தலையாயதாக வைத்து அரசு நடத்திய வேறு அரசர்களையும் இருட்டடிப்பு செய்யுமா இடதுசாரி ? சே…முஸ்லிம் பேரரசர்கள் எவ்வளவு கண்ணியமானவர்கள் ? இந்தியாவிற்கு அவர்கள்தானே பெரு நன்மை செய்தார்கள். அவர் புகழையும், லெனின் மாமாவின் புகழையும் சொல்லித் தராமல் என்ன பள்ளிப் படிப்பு ?

மேலும், உலகெங்கும் இஸ்லாத்தைப் பரப்புவதுதானே உலக/இந்திய இடதுசாரிக்கு இன்று இருக்கும் தலையாய கடமை ? ஏனெனில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க இடதுக்கு இன்று இருக்கும் ஒரே ஆயுதம் இஸ்லாமிய அடிப்படைவாதம். நம்பகமான கூட்டாளி சீனாவோ சத்தம் போடாமல் அமெரிக்க முதலியத்தின் பாதுகை தாங்கும் ஏவலனாகிப் பல வருடம் ஆகிவிட்டது. இந்தியாவில் ஆக்கிரமிப்பாளராக வந்த வன்முறைக் கும்பல்கள் இஸ்லாமிய ஏகாதிபத்தியத்தை நிறுவப் பெரும் பாடுபட்டு, அதில் ஒரு சில நூற்றாண்டுகள் அடிமைகளை வைத்து ராணுவத்தை நிர்வாகம் செயதது போல உலக ஏகாதிபத்தியத்துக்கு அமெரிக்கா பயன்படுத்துவது சீன உழைக்கும் மக்களை. அதற்கு ‘காம்ப்ரதார் பூர்ஷ்வா ‘ (தரகு முதலாளி) வேலை செய்வது சீனாவின் பெரும் பொலிவு பெற்ற பொதுவுடைமைக் கட்சியும் அதன் ‘மக்கள் படையின்’ கேட்பாரற்ற வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துள்ள பல தளபதிகளும். இதை எந்த இந்திய இடதுசாரியாவது நாணயமாக நம்மிடம் ஒத்துக் கொள்வாரா என்று பாருங்கள். அது ஒருக்காலும் நடக்காத ஒன்று.

ஆனால், சீனத் தரகு முதலாளிகள் நாளை தாமே உலக ஏகாதிபத்தியத்தின் அதிபர்களாகப் போகிறோம் என்று மனப் பால் குடிப்பதும், கிட்டத்தட்ட இஸ்லாமிய அரசுகளை இந்தியாவில் அடிமைத் தளகர்த்தர்களின் அதிகாரம் கைப்பற்றியதை ஒத்ததுதான். ஒரிஜினல் முஸ்லிம் அரசர்கள் – அதாவது இந்திய மக்களோடு கலக்காமல், இஸ்லாமிய மைய நாடுகளில் இருந்து வந்த ரத்த சம்பந்தங்கள் எப்படி அரசவைக் கலகங்களில் தம் பதவியை இழந்தார்களோ அதே போல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதலாளிக் கூட்டங்கள் இன்று சீன அடிமைத் தளபதிகளிடம் தம் அரசாட்சியை இழக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

உதாரணம், I.B.M. நிறுவனத்தின் ஒரு பகுதியை இன்று ஒரு சீனக் கணிப் பொறி நிறுவனம் வாங்கி இருப்பது. இது மட்டுமல்ல, இன்று இராக்கியப் போருக்கும் அமெரிக்க முதலாளிக் கூட்டங்களின் பெருத்த வயிற்றுக்கும் பெரும் தீனியாக அமெரிக்க அதிபர் புஷ் அவர்களுக்குப் போட்ட இறைச்சி – பெரும் வரி விலக்குகள். இவை அமெரிக்க அரசை ஓட்டாண்டியாக்கி, பெரும் கடனாளியாக்கி வைத்திருக்கின்றன. இந்தக் கடனை அமெரிக்க மக்களோ அல்லது அமெரிக்க முதலாளிகளோ கொடுக்கிறார்களா ? இல்லை. ஏனெனில் அமெரிக்க மக்களே வரவுக்கு மேல் செலவு செய்து கடனாளிகளாகத்தான் வாழ்கின்றனர். அவர்கள் எங்கே அமெரிக்க அரசுக்குக் கடன் தருவது ? அமெரிக்க முதலாளிகள் தந்திரசாலிகள். தமது முதலை ஓட்டாண்டி அமெரிக்க அரசுக்குக் கடனாகக் கொடுத்தால் 10 சதவீதம் கூட அதில் ஆண்டு வரவு இராது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே அவர்கள் தம் முதலை உலகெங்கும் முடக்கி வைத்திருக்கின்றனர். பெரும் முதல் சானல் தீவுகள் போன்ற வரி என்ற பேச்சே இல்லாத சிறு நாடுகளில் அல்லது சிறு தீவுகளில் உள்ள கணக்குக்கு உட்படாத வங்கிகளில் பதுக்கப்பட்டு இருக்கின்றன. உலகில் நடக்கும் ஏராளமான தில்லு முல்லுகள், ராணுவப் புரட்சிகள், போதை மருந்து கடத்தல் வியாபாரம், ஆயுதக் கடத்தல் வியாபாரம், மேலும் சொல்லவொண்ணாத வகைக் கடத்தல்கள் ஆகியவற்றில் இவை முதலீடு செய்யப்பட்டு மக்களின் ரத்தம் உழைப்பு மற்றும்ம் கவுரவம், பண்பாடு ஆகியவற்றை எல்லாம் சிதைக்கும் மறைமுக வன்முறையில் இந்த முதல் செயல்படுகிறது.

ஆக அமெரிக்க முதலாளிகள் அமெரிக்க அரசுக்கு கடன் எதுவும் தர முன்வரப் போவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்கள் மிகச் சிறு அளவே அங்கு முதலீடு செய்வர். அமெரிக்க முதலாளிகள் தேசப்பற்று மிக்கவர் என்று ஒரு பொய்ப் பிம்பத்தை அரசியல்வாதிகள் அமெரிக்க மக்களிடம் உருவாக்க எவ்வளவு குறைந்த பட்ச முதலீடு தேவையோ அவ்வளவே அங்கு முதலீடு செய்யப்படும் என்பது என் ஊகம். இதை பன்னாட்டு வணிகம், மேலும் முதலீட்டுச் சந்தையில் நிபுணர்கள்தான் நமக்கு விளக்க வேண்டும். நான் இதுவரை படித்த தகவல்கள், off-shore banking மற்றும் Tax shelters ஆகியவற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க முதலாளிகளின் முதல் உலகில் வேறெந்த நாட்டின் பொருளாதாரத்தையும் விடப் பெரியது என்பதுதான். அது எதற்குப் பயன்படுகிறது என்பதையும் மேற்படி படிப்பில் இருந்துதான் தெரிந்து கொண்டேன்.

இன்னொரு குறிப்பிட்ட கூட்டம் இதே போன்ற வசதிகளைப் பயன்படுத்தி பன்னாட்டு வன்முறைக்குத் தன் முதலைப் பயன்படுத்துகிறது. வைரக் கடத்தல், பசை மூலப் பொருள் பதுக்கல், போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் என்று உலகெங்கும் சட்ட விரோதச் செயல்களில் மூலதனத்தைத் தேடும் இன்னொரு கூட்டம் யாராக இருக்கும் ? விடை அந்த ‘பசை’ என்ற சொல்லில் இருக்கிறது. ஊகியுங்களேன். எல்லாம் இந்திய இடதுசாரியின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரின் கூட்டம்தான்.

அமெரிக்க அரசின் தறுதலைத் தனமான செலவுகளுக்குக் கடன் கொடுத்து அமெரிக்க அரசையும், அமெரிக்க மக்களையும் ஓட்டாண்டிகளாக்கப் பெரும் முயற்சி செய்து வரும் இன்னொரு கூட்டம் எது ? அதேதான் – இந்திய இடதுசாரியினரின் இன்னொரு அபிமான நாட்டின் இன்றைய அடக்குமுறை அரசின் நாயகர்கள் – சீன அதிகார வர்க்க முதலாளிகளும், சீன ராணுவத் தளபதி – முதலாளிகளும், சீனாவின் பன்னாட்டுக் குற்றக் கும்பல்களின் கிழக்காசிய முதலாளித் தலைவர்களும் தான். இந்தச் சூதாட்டத்தில் இந்திய முதலாளிகளின், ஏன் இந்திய அரசின் பங்கு மிக மிகக் குறைவு. அந்த அளவுக்கு இந்திய மக்கள் இன்னமும் உலகச் சந்தையில் அடிமைகளாக்கப் படவில்லை. ஆனால் இந்திய பெருநிலக் கிழார்கள், இடை சாதித் தலைவர்கள், மேலும் இதர உதிரி முதலாளிகளின் பாசிசத்துக்கு இந்திய உழைக்கும் மக்கள் பலியாகித்தான் இருக்கின்றனர் – இது மற்றொரு பெரும் அவலக் காட்சி. இங்கு சம்பந்தம் இல்லாத ஓர் அரசியல் அவலம் அது.[8]

[9] கட்டுரையில் முன்னமே தெரிவித்தது போல, சலாபி அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஒரு மதசார்பற்ற நபர். இவருடைய அரசியல் ஆய்வை நம்பி அமெரிக்க அரசு இந்தப் போரில் இறங்கி இருப்பது போலத் தெரிந்தாலும், இவரது மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை அப்படியே அமெரிக்க உளவு நிறுவனங்களோ, ராஜ தந்திரிகளோ, அயல் நாட்டுக் கொள்கை நிபுணர்களோ நம்பியிருப்பார்கள் என்பது நம்பக் கூடிய தகவலாக இல்லை. புஷ் நிறுவனத்தின் எண்ணைய் ஏகாதிபத்தியக் கொள்கைக்கு ஒரு மேல் பூச்சு தேவைப்பட்டது. அதாவது ‘இராக்கிய மக்களை சதாமின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுவிக்க இராக்கிய மக்களின் வேண்டுகோள் ஒரு தூண்டுகோல்’ என்னும் சப்பைக் கட்டைச் சலாபி போன்ற இராக்கிலிருந்து வெளியேறி அயல் நாட்டில் குடியேறிய புலம் பெயர்ந்த இராக்கியரின் கூட்டணி ஒன்று சாத்தியமாக்கியது.

மற்றபடி அமெரிக்க அரசின், ஆளும் வலதுசாரியினரின் ஏகாதிபத்தியப் பேராசைக்கு சலாபி ஒரு பகடைக் காய் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். ஆனால் சலாபி போன்றவர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அவர்கள் அமெரிக்க அரசுக்கு அது கோரிய சப்பைக் கட்டுகளைப் பொய்த் தகவல்கள் மூலம் கொடுத்தாலும், இராக்கில் சதாமின் அரசு விழுந்த பின் என்ன மாதிரி அரசியல் அதிகாரம் அமைக்கப்பட வேண்டும், அதில் யாருக்குப் பெரும் பங்கு சேர வேண்டும் என்பன பற்றி எல்லாம் சலாபி போன்ற சாதாரண வெட்டுக் காய்கள் தம் திட்டத்தை அமல்படுத்த முயன்றனர் என்பது அமெரிக்க ஆளும் கூட்டத்திற்குச் சற்று அதிர்ச்சி அளித்தது. அவர்கள் சலாபி மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரை ஓரம் கட்ட முயன்றனர். அதில் தோற்றுப் போயிருக்கின்றனர். சலாபி மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என்று இராக்கிய நீதி மன்றம் சமீபத்தில் முடிவு செய்து, அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி உள்ளவர் என்றும் அனுமதித்துள்ளது என்ற போதிலும் சலாபி போன்ற அயல்நாட்டில் வசிக்கும் இராக்கியர் மீது உள்நாட்டு இராக்கியர் நம்பிக்கை வைக்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது.

இதனால், புருமா சொல்லும் சாத்தியக் கூறு, அதாவது சலாபி மற்றும் முக்தாத அல்-சாதிர் போன்ற இளைய தலைமுறை ஷியா மதத் தலைவர்களிடையே கூட்டணி ஏற்படும் சாத்தியக்கூறு குறைவானதே என்று தோன்றுகிறது. மேலும், அல்-சாதிர் போன்றவர்கள் ஆயுதம் தரித்த வன்முறைக் கும்பல்களைக் கைவசம் வைத்துள்ள தலைவர்கள். அமெரிக்க ராணுவம் பலத்த தாக்குதலுக்கும் பலத்த சேதங்களுக்கும் பின்னரே அல்-சாதிரை அவரது கோட்டையாக இருந்த ஒரு நகரத்தில் இருந்து வெளியேற்ற முடிந்தது. அதற்குப் பிறகும் அல்-சாதிர் மீதுள்ள பல கொலைகளுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க அமெரிக்க ராணுவத்தாலோ, இராக்கில் உள்ள தற்காலிக அரசாலோ முடியவில்லை. எனவே அல்-சாதிர் நிச்சயமாக தன்னளவில் ஒரு வலுவான தலைவர். ஆனால், சலாபி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமளவு சாதுரியமும் இராக்கிய அரசியல் உள் வட்டங்களிடையே அங்கீகாரமும் உள்ளவர் என்றாலும், அவருக்கு மக்களிடையே அங்கீகாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, அல்-சாதிருக்குச் சலாபியோடு கூட்டு வைக்க அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும், வேறு எந்த அரசியல் ஆய்வாளரும் புருமா இங்கு சொல்லும் சாத்தியக்கூறு பற்றி எதுவும் எழுதாததால், புருமா ஒரு கற்பனைக் காட்சியைக் கட்டுகிறார் என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. இதை விட மேலான ஒரு காட்சியை அவர் கற்பனை செய்திருக்கலாம்.[9]

[10] இந்த அறிக்கை போன்ற சொற்றொடர் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. புருமா ஒரு வெடிகுண்டைத் தூக்கி நம் மீது வீசி விட்டு அனாயாசமாக மேலே போய் விடுகிறார். ஒரு சாதாரண இந்தோனேசிய முஸ்லிம் இதைப் படித்தால் பெரும் கோபம் கொள்வார் என்பது உறுதி. வெள்ளையர் அல்லது ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இப்படி ஓர் அனாயாசமான முன் முடிவுகள் நிறையவே கிடைக்கின்றன. இந்திய இஸ்லாமிய ஆய்வாளர்களில், ஓரளவு இஸ்லாமிய மார்க்க அறிவைத் தாண்டி பிற துறைகளில் நல்ல கல்வி பெற்ற ஆய்வாளர்களில் பலரும் இத்தகைய அறிக்கைகளைப் பார்த்தால் சினம் கொள்வர். அதாவது இந்த அறிக்கையில் அரேபிய இஸ்லாம் ஒன்றுதான் சுத்தமானது, மற்றெல்லா இஸ்லாமிய வழக்கங்களும் அவ்வளவு சுத்தமானவை அல்ல அல்லது நேரியன அல்ல என்ற முன் முடிவு அதிகம் கவனம் இல்லாமலும், நல்ல ஆய்வு இல்லாமலும், இஸ்லாமிய உலகின் வரலாற்றைக் குறித்து நல்ல தெளிவு இல்லாமலும் எறியப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. அரபி மொழியில் குரான் இருப்பதாலும், இதர சில முக்கிய நூல்கள் அரபியில் இருப்பதாலும் மட்டுமே அரேபியரின் இஸ்லாம்தான் உயர்ந்தது என்று முடிவு கட்ட எந்த ஆதாரமும் இல்லை.

வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இடைக்கால இஸ்லாம் தளர்ந்தும் ஓரளவு கூடுதலாக சிதைவுற்றும் இருந்த காலத்தில் தென்னாசியா (அன்றைய இந்தியா) இஸ்லாமிய மையங்களுக்கு உயர்ந்த தரத்தில் சிந்திக்கக் கூடிய மார்க்க அறிஞர்களையும், சிந்தனையாளர்களையும், மேலும் தத்துவாசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோரையும் அனுப்பி மையத்தில் மீண்டும் ஒரு புத்தெழுச்சி நடக்க உதவியது என்று பல இஸ்லாமிய வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர். நவீன காலத்தில் கூட பல இஸ்லாமியச் சிந்தனை மாறுதல்கள் தென் ஆசிய உப கண்டத்திலிருந்து வெளியே போய் உலக இஸ்லாத்தை மாற்றி இருக்கிறது.

ஆனால், இப்படி மைய இஸ்லாம் அரேபிய இஸ்லாம்தான் என்று வாதிடும் வரலாற்று அறிஞர்களில் பலர் ஐரோப்பியர் மட்டும் அல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும் கூட. ஆனால் சவுதி அரேபிய அரசிடம் பண வளம் கொழிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து உலக இஸ்லாத்துக்கு வந்தது கேடு காலம். எண்ணெய் விற்றதனால் கிடைத்த அபரிமித காசைக் கொண்டு சவுதி அரசு உலகெங்கும் இந்த ஆதாரமற்ற, பெரிதும் பொய்களைக் கொண்டு உருக்கட்டப்பட்ட வஹாபியச் சிந்தனையை, அதாவது மைய இஸ்லாம் அரேபிய இஸ்லாம் என்ற உள்ளீட்டை வெளிப் பார்வைக்கு மறைத்து தன் வழிதான் ஒரே இஸ்லாம், மற்றெல்லாம் திரிந்தவை, கெட்டுப் போனவை என்று உலக இஸ்லாமியரை ஒரு கலக்கு கலக்க ஆரம்பித்தது. இதன் ஒரு வன்முறை முகம்தான் பலவகை ‘இஸ்லாமியச் சுத்திகரிப்பு ‘ இயக்கங்கள். இந்த உட்கட்சிப் பூசலில் நாம் சிக்கி குழம்ப வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், புருமா போன்ற அறிஞர்கள், உலகின் பெருவாரி முஸ்லிம்களை தெளிவற்ற முஸ்லிம்கள் என்றும், கடந்த பல நூறாண்டாக பெரும் வன்முறையிடமும், அன்னிய ஏகாதிபத்தியங்களிடம் அடிமைப்பட்டும் கிடந்த இராக்கியரின் இஸ்லாம்தான் சீரியது அல்லது கறாரானது என்று கூறிப் போவதை அப்படியே ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

இஸ்லாத்தில் தலைவர் என்று யாரும் இல்லை என்று மீண்டும் மீண்டும் உள்ளூர் முஸ்லிம்கள் திண்ணையின் பக்கங்களிலேயே தம்பட்டம் அடிக்கும் போது, அதை அப்படியே ஏற்போமானால் – யார் சுத்தமான முஸ்லிம், யார் சுத்தம் இல்லாத முஸ்லிம் என்று யார் அறிவிப்பது ? அப்படி அறிவிப்போருக்கு எங்கிருந்து அத்தகைய தகுதி வருகிறது ? மற்ற முஸ்லிம்கள் இந்த நபர் அல்லது நபர்கள் சொல்வதை கேட்டு அதன் வழி ஏன் நடக்க வேண்டும் ? ஒரு சமூக ஒப்பந்தத்தில் இஸ்லாம் நம்பிக்கை வைக்கிறது என்றால், சமூகங்கள் சேர்ந்து ஒருவரின் நடத்தையைத் திரிந்தது என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. மொத்த தேசத்தின் இஸ்லாமே கறாரானதல்ல, திரிந்தது என்று சொல்ல எந்த ஒரு நபருக்குமோ அல்லது சிறு குழுக்களுக்கோ தகுதி ஏதும் இருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் தமிழகத்து முஸ்லிம்களின் அரசியலோ ஒரு தனி வகையானது. அவர்கள் இதைப் படித்தால் என்ன நினைப்பார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்! ஆனால் புருமா இப்படியும் சொல்லி விட்டு, அடுத்த வரிகளில் சொல்வதையும் கவனியுங்கள். மனிதரிடம் தேவையற்ற குறும்பு இருக்கிறது என்று எடுத்துக் கொள்வதா அல்லது முதல் வரியில் இப்படிச் சொன்னோம் என்று சரியாக உணராமல் அடுத்த வரிகளை எழுதுகிறார் என்று கொள்வதா ?[10]

[11] இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகர்தா. தலைநகரில் ராணுவ மையம் இருந்தது. அங்கு அரசின் பிடி மிகவும் இறுக்கமாக இருந்தது. அதனால் தான் சுஹர்தோ இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு கோலோச்சினார். எனவே ஜகர்தாவில் கலவரங்கள் ஏற்படுவது என்பது அரசுக்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்பு, அரசு அதிகாரத்தை சாதாரண மக்களால் ஆட்டிவிட முடியும் என்பதை மக்களுக்கும் அரசுக்கும் இது எடுத்துக் காட்டியது என்பன இங்கு குறிப்பு.[11]

[12] சீனர்கள் ஏன் தாக்கப்பட்டனர் என்பது மிகவும் ஒரு விறுவிறுப்பான வரலாற்றுப் பாடம். இது குறித்து இங்கு அதிகம் கவனிக்க முடியாது என்றாலும், தென் கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் வணிகம், இயந்திர உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வங்கிகள் ஆகியவை சீனரிடம், அதாவது மையச் சீனாவை விட்டுப் புலம் பெயர்ந்து பல பத்தாண்டுகளாகவோ அல்லது நூறாண்டுகளாகவோ பிற நாடுகளில் வாழும் சீனரின் கையில்தான் பெருமளவும் உள்ளன. இங்கெல்லாம் குவிக்கப்படும் – இந்திய இடதுசாரியினரின் அன்புக்குரிய சொல்லில் சொல்வதானால், ‘சுரண்டப்படும்’- பெரும் செல்வம், அந்த நாட்டு மக்களின் வளமான வாழ்வுக்குப் பயன்படுத்தப் படாமல், மாறாக ‘செஞ்சீனா’ வில் கொண்டு போய் முதலீடு செய்யப்படுகிறது. தாம் வாழும் நாட்டின் மக்களை குறைந்த பட்சம் இந்த புலம் பெயர்ந்த சீனர்கள் மதிக்கவாவது செய்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. பல நாட்டுப் புலம் பெயர்ந்த மக்கள் தமக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டின் பெருவாரியின மக்களை நாளாவட்டத்தில் இழிவாகக் கருதத் தொடங்குவது போலவே, சீனரும் தமக்கு அடைக்கலம் கொடுத்து வாழ வழியும் கொடுத்த மலேசிய, இந்தோனேசிய, பர்மிய, வியத்நாமிய மற்றும் பிலிப்பைன் நாட்டு மக்கள் மீது வெறுப்பையும் இழி சொல்லையும் தான் வீசுகின்றனர். இது தேசிய உணர்வு தலைதூக்கத் தொடங்கிய இருபதாவது நூற்றாண்டின் மத்தியில் அந்நாட்டு மக்களின் மனதில் சீனர் மீது பெரும் வெறுப்பைத் தூண்டி இருக்கிறது.

இது பற்றி மேலும் தகவல்களைத் தேடிப் படிக்கும் வாசகருக்கு (குறிப்பாக Amy Chua எழுதியுள்ள World on Fire: How Exporting Free Market Democracy Breeds Ethnic Hatred and Global Instability என்ற புத்தகம்), செஞ்சீனாவுக்கும் இந்தப் புலம் பெயர்ந்த சுரண்டல் பெருமான்களான சீன முதலாளிகளுக்கும் இருக்கும் விஷ உறவுக்கும், சீனாவின் பெரும் ‘முன்னேற்றத்துக்கும்’ இருக்கும் பலமான தொடர்பு புலப்பட ஆரம்பிக்கும். இது பற்றி இந்திய இடதுசாரியினரோ அல்லது ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வோ நம்மிடம் உண்மை ஏதும் பேசுவார்கள் என்று நினைக்கிறீர்களா ? அதற்கு மேலே போய் இன்னும் உள்ளே நுழைந்து கவனித்தால், சுஹர்தோ போன்ற ராணுவ தளபதிகள் ஏராளமாக இந்தோனேசிய வளங்களைச் சுரண்டித் தாம் பெரும் செல்வந்தர்கள் ஆவதற்கு இந்தச் சீன முதலாளிகளும், வங்கிச் சொந்தக்காரர்களும் காரணம் என்று மக்கள் கருதினர். இதில் மிகவும் உண்மை இருந்தது. ஆனால் சீனர்கள் அனைவருமா முதலாளிகள் ? அல்ல. எப்போதும் போல இதில் உண்மை மிகவும் குழப்பமான நிலையில் உள்ளது. சீனரில் ஏராளமான இளைஞர்கள் செஞ்சீனாவில் மாஒயிச மயக்கம் ஆண்ட போது, இந்தோனேசியாவிலும் மாஒயிச வறட்சியைப் பரப்புவது தம் தலையாய கடமை என்று கருதி இந்தோனேசியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினராகி, புரட்சிக்கு முயன்று கொண்டிருந்தனர் என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பட்ட சீனர்களை இந்தோனேசிய அரசு கொடும் அடக்கு முறைக்கு உள்ளாக்கி, பல்லாயிரக்கணக்கான சீன இளைஞர்களையும் இதர இந்தோனேசிய இளைஞர்களையும் கைது செய்து சில தீவுகளில் கொண்டு போய் அடைத்துப் பட்டினி போட்டே கொன்றது என்று படித்த நினைவு இருக்கிறது. இதை மறு ஆய்வு செய்து அது பற்றி எழுத வேண்டும். பிற்பாடுதான்.

திண்ணை வாசகர்களில் தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக இந்தோனேசிய தேசியம் பற்றித் தெரிந்தவர்கள் பலர் இருப்பர் என்று கருதுகிறேன். அவர்கள் தம் வல்லமையை நமக்குக் காட்ட இங்கு முன்வருவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் கிருஸ்தவர்களை ஏன் இந்த முஸ்லிம்கள் தாக்கினார்கள் ? அது பற்றி என்னிடம் இப்போதைக்குத் தகவல் இல்லை. அதையும் பிறிதொரு சமயம்தான் கவனிக்க வேண்டும்.[12]

[13] மொத்தமாகப் பார்த்தால் பல உருப்படியான கருத்துகளையும், தர்க்க ரீதியாக உபயோகமான முடிவுகளையும் தரும் இக் கட்டுரையில் புருமா ஆங்காங்கு பல தவறுகளைச் செய்கிறார் என்று முன்னமே பார்த்தோம். இந்த வரியில் அவர் சொல்வது மிகைப்படுத்தல் என்ற வகைத் தவறாகவே எனக்குப் படுகிறது. நான் இந்தோனேசிய அரசியலிலோ அல்லது இந்தோனேசிய இஸ்லாமிய இயக்கங்கள் பற்றியோ கூடதிகமான அறிவு உள்ளவன் அல்ல என்றாலும் எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, இந்தோனேசியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் உயிர்ப்போடு உள்ளது. பல மிலியன் நபர்களை உறுப்பினராகக் கொண்ட ஜெம்மா இஸ்லாமிய இயக்கம், இங்கு நாட்டை வன்முறை மூலம் புதுப் புடம் போட்ட சுத்த இஸ்லாமிய நாடாக்கியே தீருவோம் என்று உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் அரேபிய இஸ்லாமிஸ்டுகளின் நிதி உதவியும் கருத்துப் பரப்பலும் என்றாலும், ஒரு முக்கியமான காரணம் இன்னொரு சிந்தனையாளரின் வீச்சு. இவர் மேற்கில் பயணம் செய்து, கல்வி கற்று, மேற்கின் அசாதாரணமான வலுவோடு ஒப்பிட்டால் இஸ்லாமிய உலகு தேய்வில் இருக்கிறதே என்ற ஆதங்கத்துக்கு உள்ளாகி, மேற்கை உலைப்பிலாழ்த்தி, அதே நேரம் இஸ்லாமிய உலகில் பெரும் எழுச்சியைக் கொணர்ந்து, உலகில் மீண்டும் இஸ்லாமியரை ஆட்சியாளராக மாற்ற வேண்டும் என்ற ‘அமைதியான நல்லெண்ணத்தை ‘க் கொண்ட பல இஸ்லாமிஸ்டுகளைப் போன்றவர். தத்துவத்திலும் வரலாற்றிலும் நல்ல பயிற்சி கொண்டவர். இவரைக் குறித்து பின்னர் பார்ப்போம்.

காரணங்கள் எப்படி இருந்த போதும், வன்முறையை மேற்கொள்ள ஒரு கூட்டத்துக்குத் தொடர்ந்த பயிற்சி தேவை, அது எப்படி ஜெமா இஸ்லாமியா இயக்கத்தால் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது என்பதை நிறுவ இன்றளவில் பலத்த ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லி அதன் நிறுவனரைக் கைது செய்ய சமீபத்தில் இந்தோனேசிய நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. இவரைச் சிறையில் தள்ளாமல் பல வருடங்களாக இந்தோனேசிய அரசு ஏதேதோ சாக்குப் போக்கு காட்டிக் கொண்டிருந்தது என்பதையும் நாம் கருத வேண்டி இருக்கிறது. சமீபத்தில் பதவி இழந்த மேகவதி சுகர்னோபுத்திரியாகட்டும், அவருக்கு முன்னால் பதவியில் இருந்த அப்துர் ரஹ்மான் வாஹிதாகட்டும், இருவருமே இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க அஞ்சினர் என்பது தெளிவு. சமீபத்தில் நாட்டின் அதிபர் பதவிக்கு வந்தவர் முன்னாள் ராணுவ அதிகாரி என்பதால் நடவடிக்கைகள் சற்று கண்டிப்புள்ளவை போலத் தோன்றுகிறது. இவை உண்மையிலேயே இஸ்லாமியத் தீவிரவாதத்தை அடக்குமா என்பது சந்தேகத்துக்குரியது. சில நேரம் தீவிரவாதக் கும்பல்கள் இருப்பது ஓர் அரசுக்குப் பலவிதங்களில் அரசியல் லாபங்களைப் பெற்றுத் தரும் என்று மாகியவெல்லித் தனமாகவும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. வீரப்பனால் ஆளும் கூட்டங்களுக்கு எத்தனையோ லாபம் என்று சிலர் நம் ஊர்ப் பக்கம் வாதிடவில்லையா ? அது இப்படிப்பட்ட சிந்தனையால்தான் எழுகிறது.[13]

[14] இதை ஒரு பொதுப்பட்ட அறிக்கையாகச் சொல்லாமல், புருமா புத்திசாலித்தனமாக ஒரு குறிப்பிட்ட இடத்துக்கான அறிக்கையாக எழுதுகிறார். ‘இந்த ‘ சிறுபான்மையின் ஒப்புதல் இல்லாவிட்டால் என்று அவர், அதாவது ஆங்கிலத்தில் எழுதும்போது, ‘this minority ‘ என்று எழுதுகிறார். ‘[T]he minority ‘ என்று பொது அறிக்கையாக, எந்த இடத்துக்கும் சமூகத்துக்குமான அறிக்கையாக அவர் எழுதவில்லை. சமீப காலத்தில் ஓரளவு நுட்ப சிந்தனை உள்ள வரலாற்றாசிரியர்கள் வரலாற்றின் பலவித பாடங்களையும் குறித்து எழுதும்போது ஓரளவு சமூக அறிவியல் ஆய்வு முறைகளைப் பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றனர். அதாவது தம் கருத்துகளை அல்லது விருப்பு வெறுப்புகளை ஏதோ அனைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய அல்லது பொருந்த வேண்டிய கருத்துகளாக எழுதித் தள்ளாமல் தன் சாய்வுகள் என்ன, பொது சமூகத் தகவல் எது, பொதுமைப் படுத்துவதில் தன் சாய்வு இல்லாத பொதுமைப்படுத்தல் எவ்வளவு சாத்தியம், அது எவ்வளவு சாத்தியமில்லாதது என்பன குறித்து ஓர் அனுமானம் (ஊகமான எடை தூக்கலில் அடையும் முடிவு) அவர்களிடம் காணத் தலைப்படுகிறது. இன்னமும் இந்திய வரலாற்றாசிரியர்கள் பலரிடமும் இந்த சற்றாவது மேலான போக்கு அதிகம் காணப்படுவதில்லை. அவர்கள் தம் வழக்கமான சுய சார்பையே உலகப் பொதுமறையாக அறிவிக்கும் போக்குடன் தான் அதிகமும் எழுதித் தள்ளுகிறார்கள்.

வாசகர்களான நாம்தான் முன் எப்போதையும் விடக் கூடுதலான விழிப்புணர்வோடு எல்லா ‘அறிஞர் ‘ பெருமான்களின் எழுத்தையும் சல்லடை போட்டுச் சலித்து கப்பி, மண், புழு எல்லாவற்றையும் விலக்கி தானியத்தைப் பிரித்து எடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் கிட்டிய நெல்மணியிலும், கோதுமையிலும், வரகிலும், கம்பிலும் – நோய் தரும் வேதியல் பூச்சி மருந்துகளும், புற்று நோய் தரும் ரசாயனப் பொருட்களும் கண்ணுக்குப் புலப்படாத வகையில் இருந்து நம் உடலை நாளாவட்டத்தில் அழிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கெதிராக அதிகம் வேதிப் பொருட்களைப் பயன்படுத்தாத இயற்கை வகை வேளாண்மையில் விளைக்கப்பட்ட பொருட்களை நுகர்வது நலம் என்று இப்போது அறிந்திருக்கிறோம் இல்லையா ?

இதே வகை அறிவைத்தான் மேற்சொன்ன இந்திய, தமிழ் வரலாற்று அறிஞர்களின் விளை பொருட்களூக்கும் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கும் என்று நான் கருதுகிறேன். சுய சிந்தனை, மேலும் சுய விமர்சனம் அற்ற கடன் வாங்கிக் கலியாண ராமன்களின் வரலாற்று அறிவை நாம் பெரிதும் ஒதுக்கி வைக்கக் கற்க வேண்டி இருக்கிறது. மேலான வரலாற்று அறிஞர்கள் என நான் எவரையேனும் கருதுவதானால், அவர்கள் எல்லா இடத்துக்கும், எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய முடிவுகள் அல்லது கொள்கைகளாக எதையும் எழுதாதவராக இருப்பர்.

இன்றளவில் வரலாறு பல இடங்களிலும் மிகவும் தொகுப்பற்றதாகவும், சாதாரண மக்களின் வாழ்வுகளை அதிகம் பதிவு செய்யாததாகவும் தான் இருக்கிறது. இதை முதலில் தொகுப்பதே பெரும் வேலை. அப்படித் தொகுக்கும் போது அம் மக்களின் வாழ்வோடு சிறிதும் உறவற்ற மாஒயிசம், லெனினியம், மேலும் அரேபியம்/சீன தேசியம்/ஐரோப்பியம் அல்லது ஓரியண்டலியம் என்ற வகைக் கருத்தாக்கங்களால் தம் மனதையும் அறிவையும் கறைபடுத்திக் கொண்ட ‘அறிஞர் ‘களால் தொகுக்கப்படும் எதுவும் துவக்கத்திலேயே கோணலாகிப் போன முயற்சியாகத்தான் இருக்கும் என்பதில் எனக்குச் சற்றும் ஐயம் இல்லை.

இதெல்லாம் பற்றி இன்னொரு கட்டத்தில் எழுத வேண்டி இருக்கிறது. குறைந்தது இந்தியா, இந்திய மக்கள் ஆகிய கருதுகோள்கள் மீது காழ்ப்புணர்வு இல்லாத சிந்தனையாளர்களை நாம் இனிமேல் தான் கண்டெடுக்க வேண்டும் போல இருக்கிறது. நவீன உலகைக் கட்டுகிறோம் என்ற பெயரில் நம் சுதந்திர நாடு கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு வகை தேசியத்தைக் கட்டி இருந்தாலும், அதன் வழியில் உருவான சிந்தனையாளர் பெருமளவும் பண்டை இந்தியாவை ஒரு சாக்கடையாகக் கருதும் வகையான போலிகளாகத் தான் அல்லது புல்லுருவிகளாகத் தான் உருவெடுத்திருக்கின்றனர். இவர்கள் ஐரோப்பா அல்லது சீனா அல்லது அரேபிய நாகரிகங்களின் பிரதியாக இந்தியாவை மாற்றுவது ஒன்றுதான் நம் விமோசனத்துக்கு வழி என்று முன் முடிவு செய்து கொண்டு நம் கடந்த காலத்தை அணுகும் ‘மேதைகள் ‘. இவர்களை முதலில் நம் வரலாறு, சமூகவியல், தத்துவம் ஆகிய துறைகளில் இருந்து

களையெடுத்து விட்டுத்தான் எதையும் மறுபடி விதைக்க முடியும் போலிருக்கிறது.

ஓரளவு ‘கட்டுடைப்பு ‘ சிந்தனை ஓட்டத்தின் தாக்கத்தாலும், கடந்த நவீனத்துவ சிந்தனையின் தாக்கத்தாலும் வரலாறு எழுதுவது என்பதே ஓரளவு சிக்கலான முயற்சியாக மாறி இருக்கிறது. எழுதுபவரின் இருப்பிடம், அதாவது அவர்களுடைய சிந்தனையின் தொடக்க காலம், கட்டம் ஆகியவற்றில் இருந்து தற்போதைக்கு அவர்கள் வந்து சேர்ந்துள்ள கட்டம் வரையிலான அறிவுப் பயணத்தில் அவர்கள் கற்றுத் தேர்ந்தவை, கழிக்காமல் விட்டு வைத்திருப்பவை, அவர்களுடைய சொந்த மரபு அல்லது வரலாற்றின் எச்ச சொச்சங்கள் ஆகியன, மேலும் இன்ன பிற அனுபவங்களின் தாக்குதல் எல்லாமே சேர்ந்துதான்

அவர்களுடைய சீர் தூக்கும் பார்வை அமைகிறது. இது ஒன்றும் முழுவதும் நேரியதோ அல்லது நம்பகமானதோ அல்ல. எனவே வாசகரின் சீர் தூக்கும் அறிவு படு கூர்மையாக இருப்பது வெகு அவசியமாகி இருக்கும் கால கட்டம் இது.

இந்த இடத்தில் புருமா சொல்லியிருப்பது இராக்குக்கு இந்த கால கட்டத்தில் பொருந்தலாம். காரணம், சமீப காலம் வரை சதாம் ஹுசேனின் கொடுங்கோல் (சுன்னி சிறுபான்மை) ஆட்சியில் சுன்னிகளில் ஒரு சிறு கூட்டம் அதிகார வெறியில் கண் மூடித்தனமான வன்முறையை மக்கள் மீது அவிழ்த்து விட்டிருந்தனர் என்பது இப்போது அசைக்க முடியாத வரலாற்று அறிவாக நிறுத்தப்பட்டு விட்டது. இதற்குப் பிறகும் இடதுகளும் இஸ்லாமிஸ்டுகளும் இந்த உண்மையை மறுத்துத் திரிப்பு வரலாறு எழுதுவது சாத்தியம் தான் என்றாலும், அப்படி எதையும் எழுதுபவர்களின் சொந்த நம்பகத்தன்மை தான் முற்றிலும் கெட்டழியுமே தவிர வரலாறு புரட்டப்பட்டு விடாது. பொதுப் புதைகுழிகளில் இருந்து இன்னமும் அவ்வப்போது அகழ்ந்து எடுக்கப்படும் நூற்றுக்கணக்க்கான ஷியா மக்களின் உடல்கள் அல்லது எலும்புக் கூடுகள் சதாம் எப்படிப்பட்ட அரக்க ஆட்சி நடத்தினான் என்பதையும், அதற்கு எப்படி ஆளும் சுன்னி கூட்டங்கள் துணை போயின என்பதையும், இந்த அரசு எப்படி பல பத்தாண்டுகளாக இராக்கிய மக்களை நசுக்கி வைத்திருந்தது என்பதையும் மறுபடி மறுபடி

நிறுவிக் கொண்டிருக்கின்றன. இந்த வகை சுன்னி குழுக்கள் கேட்பாரற்ற வகையில் பல பத்தாண்டுகள் தம் வளங்களையும் சமூகத்தின் நிறுவன அமைப்புகளின் இயக்கங்களின் மீதான கட்டுப்பாட்டையும் பெரிதும் பெருக்கி வைத்து இருந்திருக்கிறார்கள். இதர மக்கள் தம் சமுகத்திலேயே அன்னியராக வாழும் நிலையில் இருந்திருக்கிறார்கள்.

ஆக இன்று சமூகம் தலை கீழாகப் புரட்டப்பட்டு சுன்னிகளின் கட்டுப்பாடு உடைக்கப் பட்டாலும், ஷியாக்களோ அல்லது கர்து இன மக்களோ உடனடியாக

அரசையோ, நாட்டு அரசியலையோ, அமைப்புகளையோ, பண்பாட்டையோ, பொருளாதாரத்தையோ, ராணுவத்தையோ, கல்வி அமைப்புகளையோ மாற்றி அமைத்துத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தக்க நிர்வாகத் திறமை அல்லது வசதிகளற்ற நிலையில் உள்ளமையால் அவை அனைத்தும் கட்டி எழுப்பப் படும் வரையிலும் பெரும் தடைகள் இல்லாத, எதிர்ப்பு இல்லாத ஒரு சமூக அமைப்பு தேவையாக உள்ளவர்கள். இந்த நிலையில் நாள் தோறும் வன்முறையை அவிழ்த்து விடக் கூடிய நிலையில் உள்ள எந்த சிறுபான்மையினரும் நாடு சமச் சீர் நிலைக்குத் திரும்ப முடியாத ஒரு தாறுமாறான நிலையைத் தொடர்ந்து எழுப்பக் கூடியவராகவே இருப்பர். எனவே சுன்னிகளின் ஒப்புதல் இராக்கிய ஷியாக்களுக்கு இன்றைய கால கட்டத்தில் மிக அவசியம்.

மாறாக பாகிஸ்தான், பங்களா தேஷ் ஆகிய நாடுகளில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருந்த போதும் ஓரளவு கணிசமான எண்ணிக்கை உடையவராக இருந்த போதும், நாட்டு அமைப்பில் எந்த கட்டுப்பாடோ அல்லது அதிகாரப் பகிர்வோ அல்லது ராணுவ அமைப்புகளோ தம் வசம் இல்லாதவராக

இருந்ததால், அந்த நாட்டு இஸ்லாமிய சமூகங்கள் சிறுபான்மை இந்து மக்களைச் சுலபமாகவே ஓரம் கட்டி நாளா வட்டத்தில் அழித்து விட்டு முழு இஸ்லாமிய அரசையும் அரசியலையும் அந்த நாடுகளில் கட்டி இருக்கிறார்கள். சிறுபான்மையினரின் ஒப்புதல் எல்லா அரசியல் அமைப்புகளுக்கும் இன்றியமையாதது அல்ல என்பதை இது நிறுவுகிறது. இத்தகைய பொருட்படுத்தாத வன்முறையை மையமாகக் கொண்ட அரசு அல்லது சமூகம் ஒரு ஜனநாயக அமைப்பாகக் கருதப்பட முடியுமா என்னும் கேள்வியை இப்போது நாம் சந்திக்க முடியாது. அதை வேறு ஒரு தலைப்பின் கீழ்தான் கருத வேண்டும்.[14]

aacharakeen@yahoo.com

இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1

Series Navigation

இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

இயான் புருமா (Ian Buruma) – மொழிபெயர்ப்பும் பின் குறிப்புகளும்: ஆசாரகீனன்


‘இஸ்லாமிய மக்களாட்சி ‘ (Islamic Democracy) என்பது உண்மையில் சாத்தியம் தானா ? அல்லது ‘யூத அறிவியல் ‘ என்பதைப் போல அது அர்த்தமற்ற ஒன்றா, அல்லது பொதுவுடைமையின் கீழ் ‘மக்களின் ஜனநாயகம் ‘ என்பதைப் போல முரணான ஒன்றா ?1 இக் கேள்விதான் இராக்கின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. ஏனெனில், நொறுக்கப்பட்ட அந்த தேசத்தில் மிகவும் நம்பப்படும் மனிதரான ஷியாக்களுடைய மதத்தலைவர் பேரயதுல்லா அலி அல்-சிஸ்டானி, அரசியல் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மறுத்தாலும், இஸ்லாமிய மக்களாட்சி என்ற கருத்தைத் தாம் ஆதரிப்பதாகச் சொல்கிறார்.

இராக்கின் அரசியலமைப்புப் பேரவை நேர்த் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், “இப் பேரவையால் எழுதப்படும் எந்த ஓர் அடிப்படைச் சட்டமும் நாடு தழுவிய தீர்வு வாக்கெடுப்பு (referendum) மூலம் ஆமோதிக்கப்பட வேண்டும்” என்றும் அயதுல்லா வலியுறுத்துகிறார். அத்தகைய சட்ட அமைப்பின் அடிப்படையாக குரானிய சட்டங்கள் இருப்பது குறித்து அவர் மிக லேசாகவே சுட்டுகிறார். பாதுகாப்புத் தேவை குறித்த கவலைகளைக் காரணமாகக் காட்டி, அதிலும் குறிப்பாக சுன்னி பிரிவினர் அதிகமாக வாழும் பகுதிகளில், பொதுத் தேர்தலை ஒத்திப் போடும் எந்த முயற்சிகளையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அக்டோபர் மாத நடுவில், எல்லா ஆண்களும் பெண்களும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்ற ஃபட்வா [மதக் கடமைக்கான ஆணை] ஒன்றை அவர் வெளியிட்டார். அதில் அவர் ரமலானின் போது சாப்பிடாமல் நோன்பிருப்பது போன்ற மிக அடிப்படையான மதக் கடமைகளுக்கு இணையான கடமையாக வாக்களிப்பதைக் குறிப்பிட்டிருந்தார். சுன்னி பிரிவினர் மற்றும் கிருஸ்தவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் ஷியாக்களின் கடமையாகும் என்றும் அயதுல்லா அறிவித்தார். இராக்கின் மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதத்தினரான கர்ட் (Kurds) இனத்தவருக்கு அரசியல் சட்டத்தின் மீது ஒருதலைப்பட்ச மறுப்பு (veto) அதிகாரம் வழங்கும் திட்டம் ஒன்றை அவர் எதிர்த்தாலும், ஒரு புதிய அரசாங்கத்தின் கீழ் ஓரளவாவது தன்னிச்சையாகச் செயல்பட முடியும் என்ற கர்டுகளின் நம்பிக்கையை அவர் நசுக்கி வ்ிடவில்லை. அவருடைய இந்த அறிவிப்புகள் எல்லாம் உயர்வானவை என்றாலும், இதையெல்லாம் இனிமேல்தான் நடப்பில் பரிசோதிக்க வேண்டும். ஆனாலும், இரானில் பிறந்த ஒரு ஷியா மத போதகரிடமிருந்து வருவதால் இவை அதிசயமானவையே, எனவே மிகக் குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டும்.2

சமீபத்தில் அமெரிக்காவில் தலைதூக்கியுள்ள கிருஸ்தவ பழமைவாதத் தீவிர நடவடிக்கைகளை புறம் ஒதுக்கினால் கூட, மேலை நாடுகளில் பொதுவாக ஏற்புடைய கருத்தாக இருப்பது, ஜனநாயக நாடுகளில் மத அமைப்புகளும் அரசும் ஒன்று சேர முடியாதவை என்பதே. மேலும் அடிக்கடி நம் காதில் விழுவது என்னவென்றால், குறிப்பாக இஸ்லாம் என்பது ஜனநாயகத்துக்குப் பொருத்தமில்லாதது, ஏனெனில் முஸ்லிம் நாடுகளில் அரசாங்கம் என்பது மதத் தலைவர்களின் பிடியிலிருந்து என்றுமே விடுபட்டதில்லை. ஆனால் இராக் மட்டும் அலாதியானது, ஏனெனில் அது பெரும்பாலும் மதசார்பற்ற அரசாகவே இருந்தது. உண்மையில் இந்த இரண்டு கூற்றுகளுமே மிகையானவை. முஸ்லீம்கள் மதத்தலைவர்களால் மிக அரிதாகவே ஆளப்பட்டிருக்கின்றனர். உலகாயதத் தலைமையும் ஆன்மீகத் தலைமையும் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் பிரிந்துதான் இருந்துள்ளன. மிகச் சமீப காலம் வரை கூட யூதர்களைப் போன்ற மதச் சிறுபான்மையினர், கிருஸ்தவ உலகை விட அதிக சகிப்புத் தன்மையுடன்தான் முஸ்லிம் உலகில் நடத்தப்பட்டு வந்துள்ளனர். உலகாயத அதிகாரம் பொறுக்க முடியாத அளவுக்கு ஒடுக்குமுறையை மேற்கொள்ளும் போது, மதம்தான் அதற்கான ஒரே எதிர்ப்பு மையமாக இருக்கிறது. உதாரணமாக, போலந்தில் கம்யூனிஸ ஆட்சியின் போது கத்தோலிக்க சர்ச் எதிர்ப்பின் ஊற்றாகத் திகழ்ந்தது. சதாம் ஹுசேனின் ஆட்சியில், மசூதி அதே போன்ற பணியையே செய்யத் தொடங்கியது. அரசியல் இஸ்லாமானது மதசார்பற்ற பாதிசத்தை (Baathism) எதிர்த்துப் போரிடும் வழியாகவும், அலி அல்-சிஸ்டானி அதன் முக்கிய ஷியா பேச்சாளராகவும் ஆகினர். இத்துடன் ஒப்பிடத்தக்க ஒரு பாத்திரத்தையே போப் கம்யூனிஸம் நிலவியபோது ஏற்றார்.3

எனினும், அமெரிக்க அதிபர் புஷ்ஷைச் சுற்றியுள்ள நவ-பழமைவாதிகள் இராக்கின் ஜனநாயகத்துக்கு பெரும்பாலும் ஒரு மதசார்பற்ற பாதையையே விரும்புகின்றனர். போரின் ஆரம்ப கட்டத்தில், [அமெரிக்க] பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் [அமைச்சருக்கு நிகரானவர்] பால் ஓல்ஃபோவிட்ஸ் (Paul Wolfowitz) ‘இஸ்லாமிய உலகில் ஏனையோருக்குப் பயனுள்ள ஒரு முன்மாதிரியாக ‘ துருக்கியையே உதாரணமாகக் காட்டி வந்தார். [அமெரிக்க] நிர்வாகம் நம்பியதும் தஞ்சம் புகுந்த மதசார்பற்ற அரசியல்வாதிகளான அஹமத் சலாபி போன்றவர்களையே, லண்டனுக்கோ தெஹ்ரானுக்கோ தப்பி அரசியல் அகதிகளாகச் சென்ற ஷியா முல்லாக்களை அல்ல. நிர்வாகத்தால் மிகவும் விரும்பப்படுபவரான பெர்னார்ட் லூயிஸின் பார்வையிலும் இத்தகைய சிந்தனை விரும்பத்தக்கதாக இருந்தது. பிரின்ஸ்டன் [பல்கலைக்கழக] அறிஞரான பெர்னார்ட் லூயிஸ் சொல்வது என்னவென்றால் துருக்கியில் கெமால் அடாதுர்க் செய்தது மிகச் சரியானது: நவீனத்துவத்தை முன்னெடுத்துச் செல்ல சரியான வழி மதத் தலைமையை அரசியலிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எறிவதுதான். துருக்கியின் சமூக வாழ்க்கையை ஒரே அடியில் மாற்றி விடுவேன் என்று 1917-ல் அடாதுர்க் சொன்னார். அப்படிச் சொன்னதை அவர்

1923-ல் செய்யவும் தொடங்கினார். பெண்களின் முக்காடுகள் களையப்பட்டன, இஸ்லாமியப் பள்ளிகள் மூடப்பட்டன, மேலும் தீவிர மத இயக்கங்களான டெர்விஷ் சகோதரத்துவம் போன்றவை தடை செய்யப்பட்டன. விஞ்ஞானம், அறிவுச்சேமிப்பு, மற்றும் நாகரிகம் ‘ ஆகியவற்றால் ஆளப்படும் இந்தப் புதிய சமூகத்தில் ஆண்கள் அணியும் [மத அடையாளமான] துருக்கியத் தொப்பி (fez) கூடத் தடைசெய்யப்பட்டது.

இதே போன்ற புரட்சிகள் வேறு இடங்களிலும் நடந்தன அல்லது முயற்சிக்கப்பட்டன. ஜப்பானில் 1860-களில் மெய்ஜி (Meiji) மறு எழுச்சிக்குப் பின், கலாச்சாரம் மற்றும் அறிவொளியுகம் என்ற பெயரால் பெளத்த ஆலயங்கள் தரை மட்டமாக்கப்பட்டன. மே 4, 1919-ல் சீனாவில் நடந்த மாணவர்களின் கலகம், கன்ஃப்யூசிய மரபு மற்றும் மத மூடநம்பிக்கைகளின் இடத்தை ‘திருவாளர் அறிவியல் மற்றும் திருவாளர் ஜனநாயகம் ‘ ஆகியவற்றைக் கொண்டு நிரப்புவதை நோக்கமாகக் கொண்டது. 1920-களில், பாரசீகத்தில் ரெஜா ஷா பஹ்லெவி மசூதிகளை இடித்தும், மதபோதகர்களை கொன்று அல்லது கைது செய்தும், பர்தா அணிவதைத் தடை செய்தும் தன் தேசத்தை நவீனப்படுத்த முயன்றார். பாரசீகம் பின்னர் இரான் என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால பாதிஸ்டுகளின் பரந்த-அரேபியம் (pan-arabism) – இவர்களுள் சிலர் சிரியாவின் கிருஸ்தவர்கள், பரந்த-ஜெர்மன் தேசியத்தால் உந்தப்பட்ட ஒரு மதசார்பற்ற இயக்கமாகும்.

துரதிஷ்டவசமாக, இந்த மதசார்பற்றதாக்கும் தீவிரத்தின் விளைவு ஜனநாயகமாக அமையவில்லை. மாறாக விளைந்தவை ராணுவக் கட்டுப்பாடு, அல்லது எதிர்ப்பற்ற மன்னராட்சி, அல்லது பாசிசம் மற்றும் கொடும் ஸ்டாலினியத்தின் பல மறு உருக்களும் தான். தற்போது முஸ்லிம் உலகத்தைப் பீடித்துள்ள மதக் கலகத்துக்கு, நவீன மதசார்பற்ற அரசியலின் தோல்விக்கு எதிர்வினையாக அது நிகழ்வதும் ஒரு காரணம். எனினும், புஷ் நிர்வாகத்திடம் பரிவு கொண்ட டேனியல் பைப்ஸ் போன்ற பல மேற்கு ஆசியா பற்றிய ஆய்வாளர்கள் அடாதுர்க் அல்லது சியாங் காய்-ஷேக்கின் (Chiang Kai-shek) வழியைப்

பின்பற்றும் ஒரு வலிமையான மதசார்பின்மைவாதியே இராக்குக்குப் பொருத்தமானவர் என்று கருதுகிறார்கள், இதற்குக் காரணம் குறுகிய காலத்தில் நடக்கும் தேர்தல்கள் ‘கொமேனியைப் போன்ற முல்லாக்களையே ‘ பதவியில் அமர்த்தும் என்பதே. மதத் தலைவர்கள் மீது அவநம்பிக்கை கொண்டவர்கள் நவபழமைவாதிகள் மட்டுமல்ல. போலந்தில், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரிகளான இடதுசாரியினரையும் இந்த அவநம்பிக்கை பிளவுபடுத்தியது. கம்யூனிசத் தலைமைக்கு எதிராக பாதிரிகளை ஆதரிப்பது என்பதை ஏற்றுக் கொள்வது சில எதிர்ப்பாளர்களுக்குக் கடினமாக இருந்தது. இங்கு, கம்யூனிச அரசின் கடைசி ஆதரவாளர்களுள் (Spokesmen) ஒருவரான ஜெர்ஜி அர்பன் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாங்கள் அல்லது எங்களை விட்டால் செஸ்டகோவாவின் [தென் போலந்து நகரம்] கருப்பு மடோனா [கன்னி மேரி]. ஆனால், எப்போதும் இந்த இருவரில் ஒருவர்தான் தீர்வாக இருக்க வேண்டுமா ? உண்மையில் இராக்கின் தேர்வு அடாதுர்க் அல்லது கொமேய்னி – இந்த இருவரில் ஒருவர்தானா ?

இஸ்லாமிய ஜனநாயகம் என்பதற்கான சாதனைப் பட்டியல் என்று எதுவும் கிடையாது. ஏனென்றால், அப்படி ஒன்று இதுவரை இருந்ததே இல்லை. இரானில் நிலவும் ஜனநாயகமானது மத ஆணைக் குழு ஒன்றால் கட்டுப்படுத்தப்படும் வகையைச் சார்ந்தது. துருக்கி நாம் அறியும் ஓர் ஐரோப்பிய [அரசு] மாதிரியை நெருங்கி வரக்கூடும். அது மத அடிப்படையிலான ஒரு நாடாக அல்லாமல், மத மதிப்பீடுகளின் தளர்வான அடிப்படையில் அமைந்திருக்கிறது. ஆனாலும், துருக்கியின் ஜனநாயகம் பல ஐரோப்பியர்களின் நம்பிக்கைக்கு உரியதாக இல்லாததோடு மட்டுமல்லாமல் அது பெரும்பாவம் செய்யும் அரசு என்றும் சில முஸ்லிம்களால் கருதப்படுகிறது.

நவீன ஜனநாயகமானது மதசார்பற்ற தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்னும் கருத்து, உண்மையில், ஐரோப்பிய வரலாற்றில் தன் வேர்களைக் கொண்டிருக்கிறது. அறிவுத்துலக்கம் (enlightenment) எனும் வரலாற்றுப் போக்கின் ஒரு பகுதி, குறிப்பாக ஃப்ரான்ஸில் கிருஸ்தவ சர்ச்சுகளின் அதிகாரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் எனலாம். அரசியல் அமைப்பு ஆய்வறிவை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர மதத்தை அல்ல [என்பது உந்துதலாக இருந்தது]. நவீனனாக இருப்பது என்பது மதத்தை அல்லது ‘மூட நம்பிக்கையை ‘ புறக்கணிப்பதும் அறிவியலில் நம்பிக்கை வைப்பதுமாகவே இருந்தது. வால்டேர் போன்றவர்களின் பார்வையில் அமைப்பு ரீதியான மதத்தை அது இருக்க வேண்டிய இடத்தில் வைக்க இது போதுமானதாக இல்லை; ‘அந்தக் குப்பையைத் துடைத்தெறிவது ‘ பேரவசியமாக இருந்தது. மனித குலத்தின் எல்லா சிக்கல்களுக்கும் தீர்வாக அறிவியல் மீது நம்பிக்கை வைப்பது என்பது ஒரு வகை மூட நம்பிக்கையாகவே மாறிவிட்டது. உதாரணமாக ஸ்டாலின் மற்றும் மாஒவின் வழியிலான அறிவியல் சோஷலிசம், சகல விதமான சித்தப்பிரமை பிடித்த [சமூகப்] பரிசோதனைகளுக்கும் இட்டுச் சென்று பல மிலியன் மக்கள் சாகக் காரணமாக அமைந்தது.

எல்லா பகுத்தறிவாளர்களுமே மிக அதீதமானவர்கள் அல்ல என்பது உண்மைதான். ஜான் லாக் (John Locke) போன்ற அறிவுத்துலக்க காலச் சிந்தனையாளர்கள், மத ஒழுக்கத்தில் ஆழமான வேர்களைக் கொண்டிராத அறிவுத்துலக்கத் தன்மை கொண்ட ஓர் அரசியல் அமைப்பு பிழைத்திருக்க முடியாது என்றே நம்பினர். ஸ்டாலினிஸ்டுகளையும் பிற [கொடுங்கோல்] ஆதிக்கவாதிகளையும் உந்திய மதத்தலைமை-எதிர்ப்புப் போக்கு (anti-clericalism) என்பது பெரும்பாலும் ஃபிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகத் தோன்றியதே தவிர ஜனநாயக அடிப்படையில் அமைந்தது அல்ல.4

சொல்லப் போனால், மத்திய கிழக்கின் ரத்தக்களறி அரசியல் தோல்விகளுக்கு மதத் தீவிரத்தை விட மதத்தலைமை-எதிர்ப்புப் போக்கே அடிப்படையாக அமைந்தது: எகிப்தில் நாஸரியம் (Nasserism), சிரியாவிலும் இராக்கிலும் பாத்தியம் (Baathism), இரானில் ஷா. மதம் என்பது தங்கள் நாடுகளை பின்தங்கச் செய்கிறது அல்லது காலனியத்தைச் சார்ந்திருக்கச் செய்கிறது என்று கருதிய மதசார்பற்ற மேட்டுக்குடிகளே இந்த ஆட்சிகளின் தலைமைப் பொறுப்பில் இருந்தனர். நாஸர் உள்ளிட்ட இத்தகைய இரும்புக் கரம் கொண்ட சீர்திருத்தவாதிகளைக் கொல்லத் தொடர்ந்து மதத் தீவிரவாதிகள் செய்த முயற்சிகள், மதசார்பற்ற ‘முற்போக்கு ‘ மேட்டுக்குடிகளுக்கும் அவர்களால் ஆளப்பட்ட [மத வழி நடக்கும்] மக்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை நமக்குக் காட்டுகின்றன. அமைப்பு ரீதியான மதம் அழிக்கப்படும் போது, பெரும்பாலும் அதைவிட மோசமான ஒன்றே அதன் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அது பெரும்பாலும் மதத்தை ஒத்த ஒன்றோ அல்லது ஏதேச்சாதிகாரிகளால் முறை தவறிப் பயன்படுத்திக் கொள்ளப்படும் தனிநபர் வழிபாடாகவோ இருக்கிறது.

எகிப்திலும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும் நடந்தது போல அது ஓரங்கட்டப்படும் போது, அதன் காரணமாக மத எழுச்சி தூண்டப்படுகிறது.

முஸ்லிம் மதத் தலைவர்கள் தன்னியல்பாக ஜனநாயகத்தை விரும்புபவர்கள் என்ற சொல்லி விட முடியாது. ஆனால், சமீபத்தில் ‘வாஷிங்டன் மன்த்லி’ பத்திரிகையில் மைக்கேல் ஹெர்ஷ் எழுதிய கட்டுரையில் சுட்டியபடி, பல மத்திய கிழக்கு [இந்தியருக்கு இது மேற்கு ஆசியா] அறிஞர்களும் – ‘இஸ்லாமிய-கிருஸ்தவ நாகரிகத்தை ஆதரித்து ‘ என்ற புத்தகத்தை எழுதிய ரிச்சர்ட் புலியட் (Richard Bulliet) உட்பட – முஸ்லிம் உலகில் மதம் என்பது அடக்கு முறைக்கு எதிரான எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டுள்ளது என்று வாதிடுகின்றனர். பாரம்பரிய முஸ்லிம் நிறுவனங்களான மதப் பள்ளிகள், மசூதிகள் போன்றவை நவீனமயமாக்குதல் என்ற பெயரில் அழிக்கப்பட்டதன் காரணமாக சமூகத்தில் ஏற்பட்ட வெற்றிடமானது தீவிர அரசியல் இஸ்லாம் தழைக்க வழி செய்கிறது.5

அயதுல்லா கொமெய்னி ஒரு பாரம்பரிய ஷியா மதத்தலைவராகச் செயல்படவில்லை, மாறாக அரசியல் வலுவோடு நாட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு நவீனப் புரட்சியாளராகவே அவர் இருந்தார். [மத] நம்பிக்கையாளர்கள் பலரின் கருத்தில் முல்லாக்கள் அரசியல்வாதிகளைப் போல செயல்படக் கூடாது என்பதால், இரானில் அவருடைய உலகாயதச் சர்வாதிகாரமானது அவரது மதம் சார்ந்த அந்தஸ்தை மலினப்படுத்தியது. ஒஸாமா பின் லாடன் இஸ்லாத்தின் நுட்பங்களை அறிந்து கொள்வதை விட ஸ்விஸ் வங்கி வழியே பெரும் அளவு பணத்தை இடம் மாற்றுவதிலும், ஊடகங்களைக் கையாள்வதிலும் அதிக திறமை கொண்ட ஓர் அமெச்சூர் மதபோதகன். ஒஸாமாவை மதிக்கும் ஒரு தீவிரமான முஸ்லீம் மதத்தலைவரையோ அல்லது அறிஞரையோ பார்ப்பது மிகவும் கடினம்.6

மேலை நாடுகள் மதத்தை எப்படிக் கையாண்டன என்பதைச் சற்று கவனிப்பது உபயோகமாக இருக்கலாம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஜனநாயக வளர்ச்சிக்கு அரசாங்கத்தையும் மதத்தையும் பிரிப்பது இன்றியமையாத நிபந்தனையாக இருந்தது என்றாலும், அத்தகைய பிரிவினை ஒருபோதும் முழுமையாக இருந்ததில்லை. பிரிட்டன் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுள் ஒன்று அமைப்பு ரீதியான மதம்: அரச குலமே ஆங்கிலிகன் (Anglican) [கிருஸ்தவப்] பிரிவின் பாதுகாவலராக விளங்குகிறது. தற்போது இது ஒரு சம்பிரதாயமாக மட்டுமே இருந்தாலும், ஐரோப்பாக் கண்டத்தின் அரசியலைப் பொறுத்தவரை கிருஸ்தவ ஜனநாயகக் கட்சிகளே அரசியல் மைய நீரோட்டமாக இருப்பவை. இத்தகைய கட்சிகளுள் முதலாவதாகத் தொடங்கப்பட்ட எதிர்-புரட்சிக் கட்சி, 1879-ல் நெதர்லாந்து நாட்டில் கால்வினிஸ்ட் பிரவினரின் முன்னாள் பிரசாரகரான ஆப்ரஹாம் குய்பெர் என்பவரால் தொடங்கப்பட்டது. கடவுள் என்பவரை (சர்ச்-ஐ அல்ல), மானுட நடவடிக்கைகளின் மீது முழுமையான கட்டுப்பாடு கொண்டவராக மீட்டெடுப்பது அவருடைய இலக்காக இருந்தது. மதசார்பற்ற அரசாங்கமானது தன் வேர்களை கிருஸ்தவ நம்பிக்கைகளில் ஆழமாகப் பதித்திருந்தால்தான் அதன் ஜனநாயக நிறுவனங்கள் பிழைத்திருக்கும். அவர் நம்பியதும், கிருஸ்தவ ஜனநாயகவாதிகள் இன்னமும் நம்புவதும் இதைத்தான்.7

நான் இதை நம்பவில்லை. மதங்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாத ஒருவர் அமைப்பு ரீதியான மதத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதிப்பது மிகவும் செடுக்கு நிறைந்த செயலே. கூடுதலான மக்கள் மத நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றோ அல்லது கடவுள் இல்லாமல் ஜனநாயகம் பிழைத்திருக்க முடியாது என்றோ நான் சாதிக்க மாட்டேன் என்றாலும், மதத்தைக் கடைபிடிக்கும் மக்களின் குரல் கேட்கப்பட்டே தீர வேண்டும் என்று வாதிடுவேன். ‘இயங்கும் ஜனநாயகம்’ என்பதற்கான மிக முக்கியமான நிபந்தனை அதில் மக்கள் பங்கு பெற முடிய வேண்டும் என்பதே. மதச் சார்புகள் மூலம் பொதுவான விதிகளின் படி எல்லாரும் நடக்கத் தேவையான பொது ஒப்புதலை (consensus) அடைய முடிகிறதென்றால், அத்தகைய சார்புகள் வெளிப்படையாக ஏற்கப்பட வேண்டும். ஷரியத் சட்ட வழி அமைந்த ஷியா மதவழி அரசு (theocracy) ஒன்று, பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்பட்டாலும் கூட, அது ஒரு ஜனநாயகமாக இருக்க முடியாது. பல்வேறு இன மற்றும் மதக் குழுக்களின் உரிமைகளையும் நலன்களையும் பற்றிப் பேசி முடிவெடுத்துத் தேவையான சமரசங்கள் செய்து கொள்ளப்பட்டால் தான் அதை இயங்கும் ஜனநாயகம் எனலாம்.

(தொடரும்)

பின் குறிப்புகள்:

இக் கட்டுரை டிசம்பர் 5, 2004 தேதியிட்ட நியூயார்க் டைம்ஸ் மாகஸினில் வெளிவந்தது. கட்டுரை ஆசிரியர் இயான் புருமா பற்றிய குறிப்பு அடுத்த பகுதியில் வெளியாகும்.

[1] புருமா தன் கட்டுரையில் அதிகம் விளக்கங்கள் தருவதில்லை. ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் ஒரு மாறுபாடாக நான் கருதுவது என்னவென்றால், இத்தகைய கட்டுரைகள் ஆங்கிலத்தில் ஒரு தொடர்ந்த கருத்துச் சங்கிலி, அல்லது விவாதக் கட்டுக்குள் இயக்கம் பெறுகின்றன. எழுதுபவர், மேலும் படிப்பவர்கள் ஒரு சொற்களஞ்சியத்தைத் தம்முள் சுமந்து திரிகிறார்கள். ஏராளமான கருத்துக் கட்டுகள், தத்துவத் தொடர்புகள் எல்லாம் மேலை நாகரிகத்தின், சிந்தனை மரபின் உள்ளிருந்து எழுவதால் அந்த சமூகங்களில் ஓரளவு கல்வி அறிவுடன் வாழ்பவர்களுக்கும் (உயர்நிலைப் பள்ளியாவது படித்து முடித்தவர்கள்), வெளி நாகரிகங்களில் உள்ள பெருவாரியான அறிவு ஜீவிகளுக்கும் இந்த மரபுகளில் நல்ல பயிற்சி உள்ளதால் இந்த சொற்களஞ்சியத்தின் செழுமையையும், கருத்துச் சங்கிலியையும் எளிதில் அறிந்து கொள்கிறார்கள், புழங்குகிறார்கள், பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் தமிழில் மட்டும் படிப்பவர்கள் அல்லது மேலை நாடுகள், மேலைப் பண்பாடுகள் அல்லது மேலைக் கருத்துலகில் அதிகம் பயிற்சி இல்லாதவர்கள் தம் பண்பாட்டுக்கு உள்ளிருந்தும், கருத்துலகில் இருந்தும் புறப்படாதவையான இக் கருத்துகளை, அவற்றின் பின்புலன் அல்லது வரலாற்று விரிவுகள் எல்லாம் தமக்குக் கிட்டாத ஒரு நிலையில், தம் போக்கில் அல்லது தம் இச்சைப்படி புரிந்து கொண்டு பயன்படுத்துகிறார்கள். இதன் விபரீத விளைவுகள் ஏராளம்.

மாஒவின் மார்க்சியத்தை அதன் உள்ளீடான சீன தேசியத்தில் இருந்து விலக்கி, அதன் வரலாற்றுப் பின்னணியை விட்டு விலக்கியே புரிந்து கொண்டு, அதை ஓர் உலகளாவிய உண்மையாக, காலப் பின்னணிகளால் கட்டுப்படுத்தப் படாத நிரந்தர உண்மைகளாகப் புரிந்து கொண்டு, அதாவது அவற்றை தூலம் கடந்த கருத்தியலாகப் (metaphysics) புரிந்து கொண்டுள்ள இந்திய மாஒயிஸ்டுகள் இந்தியாவில் விளைக்கும் நாசம் இதற்கு ஓர் உதாரணம்.

இதையே பல மேலை நாட்டு இறக்குமதிகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். இங்கு ஒரு சிறு விளக்கம் மட்டும் தருகிறேன். மக்கள் ஜனநாயகம் என்பது பொதுவுடைமையோடு பொருந்த முடியாது என்பது நம்மில் பலருக்குப் புரிவதில்லை. மாஒயிசங்களில் உயர் மட்டங்களில் சிலருக்குப் புரியலாம். ஆனால் மாவோயிசங்களில் உயர் மட்டம், கீழ் மட்டம் என்று ஏதும் இல்லை என்று சாதிப்பார்கள் என்பதால் அவர்களிடமிருந்து உண்மை நிலையை நாம் அறிய முடியாது. ஜனநாயகம் என்றாலே மக்கள் யதார்த்தமாக சமத்துவத்தைத்தான் நாடுவார்கள் என்று கருதுவது ஓர் அறியாமை. ஜனநாயகத்தில், அதுவும் மக்கள் ஜனநாயகத்தில், அது உண்மையாக நடத்தப்படுமானால், முதல் பலியாக மாஒயிஸ்டுகளே கூட இருக்கக் கூடும் என்பதை நம்மில் பலரும் கருதுவதில்லை. அதனால்தான் புரட்சி முடிந்த பின்னும் வெகு காலத்துக்குப் ‘பொதுவுடைமைக் கட்சி’ தன் ஆயுதங்களைக் கீழே போடுவதில்லை. அதாவது, மக்களின் விருப்பம் எப்படி இருந்தாலும் தன் ஆயுதங்களால் மக்களைப் பலவந்தப்படுத்த மாஒயிஸ்டுகள் தயங்குவதில்லை, மேலும் அதை ஒரு தார்மீக அல்லது அறநெறிப் பிரச்சினையாகக் கூடக் கருதுவதில்லை. இதே போன்ற சர்வ நிச்சயத்தனம் ஒரு வலதுசாரியிடம் காணப்பட்டால் அதைப் பாசிசம் என்று பெரும் கூக்குரலிடும் இந்திய இடது, அதே வன்முறை, மக்களை அலட்சியம் செய்யும் போக்கு மாஒயிசங்களிடம் காணும்போது அதைப் பார்த்துப் புல்லரித்துப் போவதுதான் ஒரு பெரிய அபத்தம்.

அதே போல பொதுவுடைமை என்பதும் மக்கள் ஜனநாயகத்துக்கு இன்னொரு பலியாக இருக்கக் கூடும் என்பதையும் மாஒயிச உயர்மட்டங்களும் இதர பொதுவுடைமைக் கட்சி உயர்மட்டங்களும் அறிவர். அதனால்தான் பொதுவுடைமை பேசும் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமது அதிகார மையத்தை பல அடுக்குகளுக்கு உள்ளே, சாதாரண பாமர மக்களின் கைவசப்படாத தூரத்தில் வைத்துள்ளன. கேள்வி கேட்கும் பாமரர் ஒன்று ஒதுக்கப்படுவர் அல்லது அடக்கப்படுவர் அல்லது பலியாடாகக் கருதப்படுவர் அல்லது எதிரி என்று கொல்லப்படுவர்/சிறைப்படுத்தப்படுவர். இன்றும் அன்றும் சீனாவில் கேள்வி கேட்பவருக்குக் ஏற்படும் நிலைகள் இவைதான். ஸ்டாலினின் ‘பொதுவுடைமைக் கட்சி’ வெகு காலம், பல பத்தாண்டுகள் பல மிலியன் மக்களைக் கொன்று குவித்ததற்கு இந்த அடுக்கு அமைப்புக்குள் இருக்கும், மக்களின் கை வீச்சுக்கு அப்பால் இருக்கும் இரும்பு இதய அதிகார மையம்தான் காரணம். இந்த இதயமற்ற, நோய்க் கூறான மனப்பாங்கைத்தான் பீடத்தில் ஏற்றி வைத்துக் கூத்தாடுகிறது இந்திய இடதுசாரி. அதனால்தான் இன்று வரை ஸ்டாலினின் அரக்க முகம் இந்திய மக்கள் முன்னால் உண்மையாக வைக்கப்பட்டு அதற்கு இந்திய இடதுசாரி ஏதும் மன்னிப்போ அல்லது பிழை விளக்கமோ மேற்கொள்ளவில்லை. மேலும், இனி ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியும் தருவதில்லை. மாறாக எந்த இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் துவக்க நிலை உறுப்பினரும் முதலில் சந்திக்கும் சில நூல்களில் இன்றும் ஸ்டாலினின் நூல்கள் முதன்மையாக இருப்பதன் காரணமே பொதுவுடைமைக் கட்சிகளின் தவிர்க்க முடியாத பாசிச உள்ளீடுதான்.

இதைத்தான் புருமா லேசாக ஒரே வரியில் பொதுவுடைமை என்பதற்கும் மக்கள் ஜனநாயகம் என்பதற்கும் வெகு தூரம் என்றும் அவை முரணானவை என்றும் குறிப்பிடுகிறார். இதே போலவே இந்தியாவில் உள்ள அநேக ‘சமத்துவ’ இயக்கங்களும் இயக்க அமைப்பில் அதிகாரத்தைச் சிலர் கையில் குவித்த அமைப்புகளாக இருப்பதன் ரகசியமும் இதுதான். சமத்துவம் என்பது ஓர் இலக்காக மட்டும் இருப்பது எல்லா மக்களுக்கும் பிடிக்கும், அதை நடப்பில் கொணர ஜனநாயகம் உதவாது. ஜனநாயகம் என்பது பல போக்குகளும், பலவித மனச் சாய்வுகளும், பல பண்பாடுகளும் அதிகாரத்துக்கும், வசதிப் பகிர்வுக்கும், வாய்ப்புகளுக்கும் போட்டியிடும் ஓர் அமைப்பாகத்தான் இருக்க முடியும். போட்டி என்பதே மக்களுக்குப் பிடிக்காதது என்று சாதாரணமாகவும், அதையே என்றென்றைக்குமான ஒரு நிரந்தரக் கருத்தாகவும் உயரே ஏற்றி வைத்து அதற்கு அன்றாடம் பூசை செய்யும் இந்த இயக்கங்கள் மக்களை அறியவோ அல்லது அவர்களை நம்பவோ எந்த ஒரு முயற்சியும் செய்ய மாட்டார். ஏனெனில் யதார்த்தத்தில், ஒரு கட்சி சர்வாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் வெகு தூரம். பொதுவுடைமைக்கும் ஜனநாயகத்துக்கும் அதை விடவும் தூரம் அதிகம். ஏன் சமத்துவத்துக்கும் ஜனநாயகத்துக்குமே கூட கருதப்படக் கூடிய அளவு தூரம் உண்டு. இதையும் இந்திய இடதுசாரிகள் ஒரு போதும் நேர்மையாக ஒப்புக் கொள்வதில்லை.

ழாக் டெரிடா மேலும் ஃபூகோ போன்ற எதிர்ப்புக் கருத்தியலாளர்கள் பலவாறாகச் சுட்டுவது போல ஜனநாயக சமுதாயங்களில் வர வர சமத்துவப் போக்கை அதிகரிக்கலாம். வெறும் கருத்தாக மட்டும் இல்லாமல் நடைமுறையிலும், ஏன் பண்பாட்டிலுமே கூட சமத்துவத்தை ஓர் அற நெறியாக மாற்ற முடியலாம். ஆனால் இந்த மாறுதல்கள் நெடு நாளைய கருத்துப் பரிமாற்றங்களிலும், தொடர்ந்த பயிற்சியிலும் தான் சாத்தியமாகும். முன்னேகும் காலமும், பின்னடைவு நேரும் காலமும் இவற்றில் மாறி மாறி வரலாம். ஃபூகோ ஒரு விடையாகச் சொல்வது – மக்களை நம்புவது நாளடைவில் பெரும் பலன் தரும். அவர்கள் மீது அதிகார அமைப்புகளைச் சுமத்துவது நாளடைவில் சாதாரணமாகவே தோற்றுவிடும் என்பதுதான். தடாலென்று பொதுவுடைமையைக் கொணரும் சமுதாயங்கள் பெருமளவும் தோற்பதன் காரணமே இதுதான். குதிரைக்கு முன் வண்டி பூட்டினால் வண்டியும் நாசம், குதிரைக்கும் நோவு.[1]

[2] ஷியாக்கள் உயரிய கருத்துகளைக் கொள்வது அதிசயம் என்பதல்ல கருத்து. அண்டை நாடான இரானில், அனேகமாக ஷியாக்கள்தான் வாழ்கின்றனர். மிகச் சிறு எண்ணிக்கை யூதர்களும், கிருஸ்தவர்களும், வேறு சில மதத்தினரும் (ஜோராஸ்ட்ரியர்கள்) வாழ்கிறார்கள். ஆனால், இரானின் மத சார்பற்ற அரசான ஷாவின் அரசு தூக்கி எறியப்பட்டு, இஸ்லாமிய அரசு பதவிக்கு வந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இவற்றில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் ஷியா இஸ்லாமிய அரசு பெரும்பாலும் மேற்சொன்ன மாதிரி ‘உயரிய’ கருத்துகளை ஏதும் கொள்ளவில்லை என்பதோடு நடப்பில் அனேகமாக இவற்றில் பலவற்றையும் எதிர்க்கும் கருத்துகளைத்தான் கொண்டிருக்கிறது. குரானியச் சட்டங்களை நடைமுறையில் கொணர்வதில் துவக்கத்தில் இருந்த அளவு கட்டாயமும், வன்முறையும் இன்றைய இரானிய அரசு கைக் கொள்வதில்லை என்று சுட்ட நமக்குப் பல அறிகுறிகள் கிடைத்த போதும் இன்றும் மறைவில் உள்ள வன்முறையாகவே அச்சட்டங்கள் இருக்கின்றன. மக்கள் அச் சட்டங்களை விட்டு மனத்தளவிலும், நடைமுறையிலும், கருத்தளவிலும் விலகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதற்கும் நிறைய அறிகுறிகள் இருந்த போதும் ஷியாக்களின் மதபோதகர்களால் ஆன ஒரு சிறு குழு அதிகாரத்தைத் தன் கையில் குவித்து வைத்துக் கொண்டு மக்களை அடக்கி ஆண்டு கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை.

இது மேலே குறிப்பு எண் [1]-ல் சொன்ன பல கருத்துகளின் நிருபணம் என்று காண்பது எளிது. இந்த வரலாற்றுப் பின்னணியையும், இராக்கில் சுன்னி முஸ்லிம்களின் கண் மூடித்தனமான வெறியாட்டத்துக்குப் பெரும்பான்மை இராக்கிய ஷியாக்கள் அடிமைப்பட்டுக் கிடந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன, சதாம் ஹுசைனின் அரக்க அரசியல் அமைப்பு ஷியாக்களை இரண்டாம் நிலைக் குடிமக்களாக நடத்தியதோடல்லாமல், அவர்களை அடிக்கடி பெரும் குவியலாகக் கொன்று குவித்தது என்ற வரலாற்றையும் மனதில் கொண்டு புருமா இந்த வரியை எழுதுகிறார்.

இன்று அமெரிக்க ஆக்கிரமிப்பினால், சிறுபான்மை சுன்னிகளின் அடக்குமுறை அரசு கவிழ்ந்தது என்பது மட்டுமல்லாமல், முன்னாள் ஆட்சியாளர் கும்பலில் (சுன்னிகளில்) இருந்த ஒரு சிறு கயவர் கூட்டம் ராணுவம், காவல் துறை போன்ற அடக்கு முறை அமைப்புகளைத் தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொண்டு பெருவாரி இராக்கியரை வன்முறைக்கு அடிமைப் படுத்தி வைத்திருந்த நிலை மாறி பெரும்பான்மை ஷியாக்கள் இன்று தம் பண்பாடு, தம் வழிபாட்டு முறைகள், தம் மதம் ஆகியவற்றை சுதந்திரமாகக் கடைப் பிடிக்க முடிந்திருப்பதால், அவர்கள் சமீபத்தில் விடுபட்ட ஒரு பெரும்பான்மையினருக்கு இயல்பாகத் தோன்றக் கூடிய பழி வாங்கும் அரசியல் அமைப்பை நாடவில்லை என்பது இங்கு சுட்டப்படுகிறது. தம்மை அடக்கி இருந்த சுன்னிகளுக்கு அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்காத ஓர் அரசியல் அமைப்பைத் தாமும் கைப் பிடிக்கும் எண்ணம் இல்லாது இருப்பதையே அயதுல்லா சிஸ்டானியின் கருத்துகள் காட்டுவதைச் சுட்டுகிறார். அதாவது கருத்தளவிலாவது சிஸ்டானி போன்ற ஷியா தலைவர்கள் பெருந்தன்மையோடு நடக்க முயல்வதை நாம் கவனிக்க வேண்டும் என்பது குறிப்பு.[2]

[3] இங்கு புருமா சொல்லாதது என்னவென்றால், தற்போதைய போப் தலைமைப் பதவிக்குக் கத்தோலிக்க சர்ச்சால் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு ஒரு முக்கிய காரணமே அவர் போலந்து நாட்டவர், சோவியத் கம்யூனிசத்தின் அதிகார வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக, கத்தோலிக்க சர்ச்சை போலந்தில் தொடர்ந்து நடத்திக் காட்டியவர், போலிஷ் அரசுக்கு எதிரான தொழிலாளர் போராட்டக் குழுவான கூட்டொற்றுமை (solidarity) இயக்கத்துக்குத் தன்னாலான உதவியைச் செய்ததோடு, அதன் தலைமைப் பதவிகளில் இருந்த தொழிலாளர் தலைவர்களில் பலரைக் கத்தோலிக்கராகவும் கவர்ந்து வைத்திருந்தார். அன்றைய உலக அரசியல் நிலையில் ஆஃப்கானிஸ்தானில் பெரும் சிக்கலில் மாட்டி இருந்த சோவியத் அரசு தன் ராணுவத்தைப் பலத்த சேதத்துக்குப் பின்னர் தோல்வியை ஒப்புக் கொண்டு பின்வாங்கியதும், சோவியத் பொருளாதாரமும், அரசும் பெரும் ஆட்டத்தில் இருந்தது உலகுக்குத் தெரிய வந்ததும், கத்தோலிக்க சர்ச்சின் மேலாட்சிக் குழுவிற்கு ஊக்கம் தந்திருக்க வேண்டும். ஓர் ஐரோப்பிய அரசியல் நடவடிக்கையாக அன்று போலந்தில் சர்ச்சின் தலைமைப் பதவியில் இருந்தவரை போப்பாகத் தேர்ந்தெடுத்தனர். மேலை நாடுகளில் அரசாங்கத்தில் சர்ச் தலையிடக் கூடாது என்ற கருத்து நிலவுவதை இந்தப் பின்னணியில் பார்த்தால் இது ஒரு விதமான பொய்மை என்பது நமக்குத் தெளிவு. இதையே இங்கு புருமா கவனிக்கிறார்.

[3]

[4] புருமாவின் இன்னொரு சுருக்கமான அறிக்கை இது. ஃபிரெஞ்சுப் புரட்சியின் அரசியல் போக்கிற்கும், ஆங்கில முடியாட்சிக்கு எதிரான அரசியல் ஜனநாயக இயக்கங்களுக்கும் இடையே பல மாறுபாடுகள் இருப்பது நமக்குத் தெரியும். பொதுவாக இடதுசாரியினர், அதுவும் மார்க்சியர்கள், ஃபிரெஞ்சுப் புரட்சியை முன்மாதிரியாகக் கொள்வர். இதன் உட்பொருளாக எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், முந்தைய பண்பாடுகளை முற்றிலும் அழித்து மக்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் ஒரு பெரும் சமத்துவ சமுதாயம் மலரும் என்பது ஒரு மண்ணாந்தைத்தனமான நம்பிக்கை. இதுதான் இடதுசாரிகளின் மூட நம்பிக்கை. இதை விட்டு அவர்கள் விலகி, தம் தந்தை வழிச் சொத்தாக அவர்கள் கருதும் பகுத்தறிவைப் பயன்படுத்தினால், மக்கள் ஒருக்காலும் பச்சைக் களிமண்ணை மூளையாகக் கொண்டவர் இல்லை. சொற்களஞ்சியம், வாழும் பண்பாட்டுப் பயிற்சி, குடும்ப முறைகள், உற்பத்தி முறைகள் என்ற ஒரு கூட்டுக் கதம்பமான வாழ்வியலில் விருப்பப்பட்ட படி ஒரு கூறை மட்டும் பிய்த்து எறிந்து விட்டு அத்தனையையும் மாற்றி அமைக்க முடியாது என்பது சாதாரணமாகப் புரிந்துவிடும். ஆனால் இடதுகளின் அறிவு பாரிச வாயுவால் பீடிக்கப்பட்டது. பழமைவாத மதவாதிகளின் கற்பனையைப் போலவே அதுவும் ஒரு வண்டிச் சோடையில் தான் ஓடும். ஆனால், புருமா ஜனநாயகம் என்பதை தொடர்ந்த இயக்கத்தினால் உருமாறும் அரசியல் அமைப்பாகக் கருதுகிறார் என்பது தெளிவு.[4]

[5] இந்த வாதம் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலத் தீவு போன்ற நாடுகள்/இடங்களுக்குப் பொருந்தாது. இந்த நாடுகளில் நவீனமயமாக்குதல் அல்லது மதசார்பின்மை என்ற பெயரில் பழமை வாய்ந்த மசூதிகளை அல்லது மதப் பள்ளிகளை யார் இடித்தார்களாம் ? உண்மையில் அரசர்கள், பெரும் நிலக்கிழார்கள் அல்லது பெரும் வணிகர்களை நம்பி இருந்த ஒரு மதம் இன்று தன் பரவலுக்கும், செல்வாக்கு வளர்ச்சிக்கும், கவுரவத்திற்கும் உலகளவில் வேலை வாய்ப்புகளைத் தேடிப் போய் செல்வம் ஈட்டிய மத்திய வர்க்க முஸ்லிம்களையே பெருமளவு நம்பி இருக்கிறது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நாடு நெடுக சிற்றூர்களில் பள்ளிகளும், மதப் பள்ளிகளும், மசூதிகளும் கட்டுவதில் இந்த நாடோடி மத்திய வர்க்கத்தின் பங்கு அதிகம். சவுதி அரேபிய அரசு அல்லது இஸ்லாமிய பன்னாட்டு அமைப்புகளின் நிதி உதவி ஒரு பங்கு இருக்கும் என்று எடுத்துக் கொண்டால் கூட அத்தகைய உதவிகளைத் தேடவும், பெறவும் இந்த மத்திய வர்க்கத்தின் தொடர்ந்த முயற்சியும், பன்னாட்டு முஸ்லிம் புரவலர்கள் நடுவே நடத்தும் கருத்துப் பிரசாரமும் உதவியிருக்கும் என்று கருதுவது நடப்பு யதார்த்தமாகவே இருக்கும்.

ஆகவே கணக்கெடுத்துப் பார்த்தால், முஸ்லிம்கள் நடுவே உள்ள ஆளும் வர்க்கத்தின் பங்கை விட மத்திய வர்க்கத்தின் பங்கெடுப்பில் மசூதிகளும், மதப் பள்ளிகளும் பன்மடங்கு வளர்ந்திருக்கின்றன என்றே நான் கருதுகிறேன். இக் கருத்து உண்மையானால், அதன் பின் விளைவுகள், இஸ்லாத்தின் உலக வளர்ச்சி, உலக நடத்தை, மேலும் உலகளவில் அது எடுக்கப் போகும் நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பாதிக்கும் விதம் முன்னெப்போதையும் விட மாறுபட்டதாகவும், மிகத் தீவிரமான பாதிப்புகள் உள்ளனவாகவும் இருக்கும்.

என் கருத்தில் அச்சு எழுத்தால் வளர்க்கப்பட்ட இஸ்லாம், முந்தைய பல நூறாண்டுகளில் கத்தியையும், போரையும், பிற பண்பாடுகளை ஆக்கிரமித்து அழிப்பதாலும் வளர்ந்த இஸ்லாத்தை விடப் பன் மடங்கு பெரியதாக இருக்கும். அச்சு எழுத்தால் வளர்ந்ததால் அது ஜனநாயகத்துக்கு ஆதரவாகவோ, அல்லது அமைதி வழியாகவோ, அல்லது மக்கள் நடுவே சமத்துவத்தைப் பரப்புவதாகவோ அமைந்தது என்று கொள்வது மந்த புத்தி உள்ளவர் செய்வதாக இருக்கும். மற்றெந்த நவீனத்துவக் கருவிகள் போலவே அச்செழுத்தும், இதர ஊடகங்களான தொலைக் காட்சிகள், ஒலி நாடாக்கள், மேலும் ஒலிபரப்பு நிலையங்கள் ஆகியவற்றின் உதவியால் பரவிய இஸ்லாத்தின் தாக்குதலும் முழுவதும் அமைதி வழியானதல்ல. ஒரு சிறு உதாரணமாக தமிழகத்தில் ஒரு கட்டத்தில் பரபரப்புடன் விற்கப்பட்ட பழனிபாபா என்னும் இஸ்லாமியத் தீவிரவாதியின் ஒலி நாடாக்களை அமைதி வழி என்று சொல்பவருடைய மொழி நாம் சாதாரணமாகப் புழங்கும் மொழி வகையைச் சார்ந்ததல்ல. ஒஸாமா பின் லாடனின் ஒலி நாடாக்களோ அல்லது ஒளி நாடாக்களோ அமைதி வழியைச் சேர்ந்தவை எனச் சொல்வது எந்த மூளையில் இருந்து உதயமானது என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை. அதே போல் சவுதி அரேபியாவின் அழிப்புப் பாதை அரசியலுக்கு ஆணிவேராக விளங்கும் இனவெறி மதப் பார்வையுடன் எழுதப்படும் வஹாபிய மத விளக்கப் புத்தகங்களை அமைதி வழிப் புத்தகங்கள் அல்லது மிதவாதப் புத்தகங்கள் என்று சொல்ல பொய்மையில் ஏராளமாகவே பயிற்சி தேவைப்படும். எனவே நவீன சாதனங்களை இதர மக்கள் போலவே நன்மைக்கும் தீமைக்கும் ஒரு சேரத்தான் உலக இஸ்லாமியக் கருத்துப் பரப்புனர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். தம் சமூகத்தை ஒரு சேரக் கட்ட உதவ அச்செழுத்தைப் பயன்படுத்தும் அதே நேரம், பிற சமூகங்களைப் பெரும் தீமை என உருப் பெருக்கிப் பூதாகாரமாக்கவும், வஹாபியத்தின் வன்முறையை உலகெங்கும் நியதியாக்கவும் கூட பயன்படுத்தித் தீமையை வளர்த்திருக்கின்றனர்.

ஆனால் நவீனத்துவம் என்பதே தீமையின் மொத்த உருவம் என்பது போலவும் அவற்றின் மையமே அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் (பிற்சேர்க்கை: இந்தியா) என்று தொடர்ந்து பிரசாரம் செய்வது ஓர் இஸ்லாமிய நவ-பழமைவாத உத்தி. நவீனத்துவம் எப்படித் தன்னுடைய மையத்தில் அமர்ந்திருக்கிறது என்பதைப் பற்றி அது உருப்படியாக எதுவும் சொல்வதில்லை. இது பற்றி விவரமாகப் பேச இங்கு இடம் இல்லை.

எனவே புருமாவின் இந்தக் கருத்து ஒரு சிறு நிலப் பகுதிக்குத்தான் பொருந்தும். புருமா சொல்வது போல நவீனத்துவத்தின் எதிர்ப்பால் இஸ்லாம் அழியவும் இல்லை, அது ஓரம் கட்டப்படவும் இல்லை. மாறாக நவீனத்துவத்தின் ஒரு மையமான சந்தையில் இருந்து பெரும் நிதி வளத்தைப் பெற்று அதன் உதவியால் பல வகையான நவீனத்துவத்தின் ஆயுதங்களைத் தானும் கைமாற்றிப் பெற்றுக் கொண்டு, அவற்றுடன் கிட்டும் (நவீனத்துவத்தின் மையத்தில் உள்ள) மதம், கடவுள், அதிகாரம் – இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கும் சிந்தனை முறையை, அல்லது அத்தகைய குணங்களை அழித்து அக் கருவிகளின் இன்னொரு இயல்பான, பாதையான அரசு அதிகாரப் பரப்பல், நுகர் பண்பாட்டுக்கு மக்களை அடிமையாக்குதல், மேலும் பல அடுக்கு சமூக முறைக்குள் மக்களைப் பொருத்தி அவர்களை அரசியல் யதார்த்தத்தைப் பார்க்க விடாமல் முட்டாளடித்தல் ஆகியவற்றைக் கைக் கொண்டு, மதம், கடவுள் மற்றும் அரசு ஆகியவற்றை எதிர்க்க முடியாத ஒரு மந்தைக் கூட்டமாக மக்களை ஆக்கும் ஒரு நவ-பழமைவாதத்திற்கு (ஷரியா மீது மரபு என்ற முகமூடியுடன் வைக்கப்படும் புது வாசிப்புகள் என்று இதை நான் கொள்கிறேன்) உலகை ஆட்படுத்த முயன்று வருகிறது என நான் கருதுகிறேன்.

மேலும் இந்தியாவில், குறிப்பாக மலப்புரம், ஹைதராபாத், தமிழகத்தின் சில பகுதிகள் ஆகியவற்றுக்கு இது பொருந்தவே பொருந்தாது. இங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்துவது மதச் சார்பின்மை அல்ல. இன்றையத் தேதியில் காரணமற்றுப் பரவி இருக்கும் உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாதம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கு வெகு காலமாக நிலவிய பழமைப் பார்வை/பாதை மதத்தோடு, அரைகுறை நவீனத்துவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் கூட்டத்தின் அதிகார ஆசையோடு இழையும் அரைகுறை இஸ்லாம்தான் மோதுகின்றது. அரைகுறை என்று குறிக்கக் காரணம் – நவீனத்துவத்தின் ஆயுதமான அறிவியல் பாதை எப்படியோ தன் மதத்துக்குப் பொருந்தும், அதன் மூலமாக தம் மதத்தை எதிர்க்க முடியாத கருத்தியலாக நிறுவலாம் என்ற ஒரு அபத்தமான முரண்பாட்டை அடிப்படை நம்பிக்கையாகக் கொண்டு உலகப் பொது அறிவுக்கு எதிரான தன் அனைத்துக் கோரிக்கைகளையும் முன் வைப்பது இஸ்லாமியத் தீவிரவாதம்.

இதே போன்ற அபத்தமான முரணை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீவிரவாதம் உலகக் கிருஸ்தவத்திலும் பெருகி வருகிறது. அறிவியல், பகுத்தறிவு என இன்று அறியப்படும் இரு பெரும் போக்குகளின் இயல்பு என நான் கருதுவன இவை. அறுதி முடிவுகள் எனவும், மாற்ற முடியாத உண்மைகள் எனவும் எந்தக் கருத்தும் இல்லை, முன் முடிவுகளுடன் துவங்கப்படும் எல்லாத் தேடல்களும் தொடர்ந்து மாறி மாறிப் புது முடிவுகளுக்கு இட்டுச் செல்வது ஒன்றுதான் மாறாதது. ஆனால் அது ஒரு தொடர் நடவடிக்கை, அறுதி முடிவு அல்ல. ஏனெனில் என்ன வேகத்தில் மாற்றங்கள் நடக்கும், மாற்றங்கள் எப்போதும் முன்னேதான் செல்லுமா, பின்னாளில் ஒதுக்கிய கருத்துகள் ஒரே அடியாக அழிக்கப்பட்டு விடுமா, அல்லது எதிர்காலத்தில் மறு பரிசீலனையினால் மறுபடி தேர்ந்தெடுக்கப் பட்டு வேறு உருவில் தற்காலத் தற்காலிக உண்மைகளாக மேலிடம் பெறுமா என்பதெல்லாம் ஆய்வில் தொடர்ந்து ஈடுபடுபவரால் முடிவு செய்யப்படும். ஆனால் அறிவியல் என்பது தன் நடத்தை, அடிப்படைகள் மேலும் கொள்கைகளையே கூடத் தொடர்ந்து பரிசீலிப்பது, அதன் வழி காணப்படும் குறைகளை முடிகிறவரை களைவது, பிறகு எந்தக் குறைகள் எஞ்சுகின்றன, எவை பூரணமாகக் களையப்பட்டன என்பதைப் பட்டியலிட்டு உலகின் முன் ஒளிவு மறைவின்றி வைப்பது, அதாவது உலக மக்களின் அறிதிறன் மீது நம்பிக்கை வைத்து அவர்களோடு தம் நிறை குறைகளைப் பகிரங்கமாகப் பகிர்வது, தேடுபவரையும் அவர் பின் செல்பவரையும் அதிகாரப் பிரிவுகள் மூலம் மேல் கீழாக்காமல் சமதளத்தில் வைத்துக் கருத்துகளைப் பகிர்வது – யதார்த்ததில் அது ஒன்றும் சிறப்பான வழி முறை அல்ல என்றாலும் இதை ஒரு நல்லொழுக்கம் எனவும், எதிர்பாராத வகைகளில் சிறப்பான முடிவுகளுக்குக் கொண்டு செல்ல உதவும் ஒரு பாதை எனவும் அறிந்து கடைபிடித்தல், அறிந்த உண்மைகளை ஓர் ஏணியாகக் கொண்டு மேலும் மேலும் என்று அறிதலையும் உண்மைகளையும் தேடுவது போன்றவற்றை அறிவியல் முறையின் இயல்பு என நான் கருதுகிறேன்.

இதையே தத்துவம் மற்றும் கருத்தியல் தளங்களில் தனது இயல்பாகக் கொள்வது பகுத்து அறியும் முறை. அதற்குத் தனியாக ஒரு பீடம் ஏதும் இல்லை,

தமிழ் நாட்டில் இப்போது கொடுக்கப்பட்டிருப்பது போல பகுத்தறிவு அனைத்தையும் தீர்க்க வல்ல அரு மருந்து என்ற இடம் ஒரு மடமை – தத்துவ தளத்திலும் கருத்தியல் தளத்திலும் இது ஒரு பேதமையை உயர்பீடத்தில் ஏற்றும் முறை. அதாவது Reification என்று மார்க்சியமும், Iconization என்று பண்பாட்டு ஆய்வியலும், Idolatory என்று செமிடிய மதங்கள் வெறுத்து ஒதுக்குவதும் இத்தகைய போக்குதான். அறிவியல் எனவும், பகுத்தறிவு எனவும் இன்று தமிழகத்தில் அறியப்படும் போக்குகள் அனேகமாகப் பெருமளவும் செமிடிய மதங்களின் கருத்தாக்கத்திலிருந்து மூலாதாரம் தெரியாத பேதமையால் கடன் வாங்கப்பட்டுத் தமிழர் பண்பாடு, திராவிடர் பண்பாடு என்ற முத்திரைகளோடு புழங்கப்படுவதால் இதை மறுபடி சொல்கிறேன். மேற்படி மதங்கள் வெறுத்து ஒதுக்கும் பழக்க வழக்கங்கள் பலவும் தமிழகப் ‘பகுத்தறிவு’களிடம் ஏராளமாகவே இருக்கின்றன.

இவற்றின் ஒரு அபத்த விளைவுதான், தன் அதிகார வெறியால் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த அரக்கர்களின் பெயர்களை ஒரு பாவமும் அறியாத அப்பாவித் தமிழ் குழந்தைகளுக்குப் பெயராகச் சூட்டி அதைப் பகுத்தறிவின் உச்ச கட்டமாகவும், முற்போக்குத்தனத்தின் விளம்பரமாகவும் கருதும் மடமை. இல்லாவிட்டால் ஸ்டாலின், லெனின் என்ற பெயர்களைத் தமிழகத்தில் ஏன் காணப் போகிறோம் ? திருவரங்கக் கோயிலில் ‘பார்ப்பனிய’ எதிர்ப்பு என்ற பெயரில் கருவறையில் ஸ்டாலின், மாஒ போன்ற பெரும் கொலை வெறியர்களின் படங்களைப் பிரதிட்டை செய்யும் முயற்சிகளைக் காண நேர்வது வேறு எதனால் ? இப்படிப் பட்ட அடி முட்டாள்தனமான கடன் வாங்கலினால்தான். சமதர்மக் கருத்துக்குச் சீனக் கொடுங்கோலாட்சியிடம் போய்க் கை ஏந்தும் அறிவுக் கொழுந்துகளை நாம் என்னவென்று கருத ?

இதே மூடத்தனத்தால்தான் ‘பகுத்தறிவுப் பகலவன்’ என்றெல்லாம் பட்டம் வழங்கும் பேதமை தமிழகத்தில் புழங்குகின்றது. பகுத்தறிவு அனைவரிடமும் உள்ளது, எவரிடமும் எந் நேரமும் அது உச்சத்தில் இருக்க வாய்ப்பில்லை. பகலவனாக ஒளிருமளவு தமிழகத்தில், என் கருத்தில் கடந்த பல நூறாண்டுகளில் எவரும் இருந்ததில்லை. அது வேறு விஷயம். பகுத்தறிவின் உருவாக தன்னைத் தானே ஒருவர் கண்டாலோ அல்லது பிறர் அவரைக் கண்டாலோ அதை ஒரு மூடத்தனமாகவே நான் கருதுகிறேன். மனிதர் அனைவரும் தனியராகவோ அல்லது குழுக்களாகவோ எப்படியும், அவ்வப்போதுதான் உண்மைகளை, சிறப்பான விடைகளை அடைகின்றனர். என்றென்றும் ஒளிரும் மனிதர் அனேகமாக எவருமே இல்லை என்பது ஒரு நிதர்சன உண்மை.

வழுக்கி விழுந்தவள் என்ற பிம்பத்தைக் காட்டித் திரைக்கதைகளில் நெடும் வசனம் பேசிப் புகழ் பெற்ற திராவிட அரசியலாளர்களுக்கு ஓர் உண்மை அப்போதும் இப்போதும் புலப்படவில்லை. மனிதர் என்பவரே பாவ ஆத்மாக்கள் என்ற கருத்தை எப்போதும் முழங்கும் கிருஸ்தவருக்கும் ஓர் உண்மை புலப்படவில்லை. அது இதுதான். மனிதர் எல்லாரும் தொடர்ந்து வழுக்கி விழுபவர்தான் அதாவது பாதை தவறுபவர்தான், அதாவது வழி தெரியாது முன்னேகுபவர்தான். வழி முழுவதும் புலப்பட்டு விட்டால், பயணத்தில் எந்த சுவாரசியமும் வலிந்துதான் பெற முடியும். தம் வழி பெரும் துன்பத்தில் முடியும் எனவோ, அல்லது முடிவில்லா அயர்ச்சியுள்ளது என்றோ, அல்லது எந்த வளர்ச்சியும் அற்றது என்றோ அறிபவரில் அனேகர் பயணப்பட முன் வரமாட்டார். மனிதரில் கணிசமானவர் பிறரோடு பயணப்பட முன்வராத நிலை எழுந்தால், அதற்கு அனைத்தையும் முன் முடிவு செய்த கடவுள் அல்லது பெரும் பகுத்தறிவு என்ன செய்ய முடியும். அவர்களைத் தரதர என்று அவர்களது விருப்பத்துக்கு எதிராக தான் எது எதிர்காலம் என உறுதி செய்ததோ அந்த வழியில் இழுத்து வரும் அல்லது அவரைக் கடுமையாகத் தண்டிக்கும். ஸ்டாலினியம், மாஒயிசம் இரண்டும் பகுத்தறிவு மார்க்கங்கள் அல்ல, வெறும் அதிகார வெறி மார்க்கங்கள் என்றாலும் அவை இந்த விடையைத்தான் தேர்ந்தெடுத்தன – விருப்பம் இல்லாத, காட்டிய வழியில் செல்லத் தயாரில்லாத மக்களை அந்த அதிகார மையங்கள் எதிர் கொண்ட போது. இன்று தம்மைப் பகுத்தறிவுச் சோதிகளாகக் காணும் திராவிடப் ‘பகலவர்’களோ, அல்லது மாஒயிசச் செம்மல்களோ நாளை ஒரு வேளை தனித் தமிழ்நாடு அல்லது மாஒயிசக் கொடுங்கோல் அரசு ஒன்றை நிறுவினால் மக்களை இப்படித்தான் வன்முறைக்கு ஆளாக்குவர் என்பது என் ஊகம். மேலும் அதுதான் பகுத்தறிவு என்று வேறு முழங்குவர் என்பதுதான் ஒரு பரிதாபம்.

அனைத்தையும் அறிபவன் கடவுள் என்று அவன் புகழ் பாடும் மக்கள் மீது எனக்கு மிகுந்த பரிவு உண்டு. அனைத்தையும் அறிந்து விடுவதை விட ருசியற்ற அல்லது உபயோகம் அற்ற நிலை என்னவாக இருக்க முடியும் ? கடவுளின் இருப்பே ஒரு சாரமற்ற சக்கை நிலை என்பதும் என் கருத்து. ஒரு வேளை செமிடிய மதங்களின் துவக்க காலக் கடவுள் போல பழி வாங்குவதைத் தன் மைய இயக்கமாக வைத்திருக்கும் கடவுளோ எக் காலத்திலும் நம் மதிப்பையோ அல்லது அடிபணிதலையோ பெறத் தக்கவர் அல்ல. எறும்பின் காலை ஒவ்வொன்றாகப் பிய்க்கும் அல்லது வண்ணத்துப் பூச்சியின் இறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்து அவற்றைக் கொதிக்கும் வெயிலில் போட்டு வேடிக்கை பார்க்கும் சிறுவரை நீங்கள் கண்டிருப்பீர்கள். அல்லது பச்சிளம் சிறுவரை 14 மணி நேரம் கல்லுடைக்கவோ, அல்லது தறியில் நூல் கோர்த்துத் தரவோ, அல்லது தீப்பெட்டியைப் பசை போட்டு ஒட்டவோ பயன்படுத்தும் வயது வந்த மனிதரைப் பற்றி நீங்கள் கேட்கவாவது செய்திருப்பீர்கள். இத்தகைய மனிதர் வறுமைக் கொடுமையால் இப்படிச் செய்தார் என்று ஓர் அற்பக் காரணமாவது இருக்கும். அந்தக் கொடுமை செய்யும் சிறுவர் அவ்வளவு அற உணர்வு வளராத சிறுவர் என்று நாம் அவரையும் மன்னிக்கலாம். ஆனால் அனைத்தும் தெரிந்த, எல்லா வல்லமையும் பொருந்திய முக்காலமும் தெரிந்த கடவுள் ஒருவரின் பழி வாங்கும் குணத்தை என்ன சால்ஜாப்பு சொல்லி ஒத்துக் கொள்ள முடியும் ?

அப்படி ஒரு கடவுள் இருந்துதான் ஆக வேண்டும் என்று முழங்குபவரோ, அப்படிப்பட்ட எல்லாம் அறிந்த, அறிய முடிகிற பகுத்தறிவு ஒரு மனிதரிடம் இருக்கிறது என்று தெண்டனிடுகிறவரோ அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால் அங்கு ஜனநாயகம் எப்படி வளரும் ? அல்லது அப்படி ஒரு சமூகத்தில் சமத்துவம் எப்படி உதயமாகும் ? வளர்வது இருக்கட்டும், எப்படித் தோன்றும் ?

காட்டாக, சமத்துவம் என்ற கருத்தாக்கமே கூட புதியதும் அல்ல, ஐரோப்பியரின் கண்டுபிடிப்பும் அல்ல, கிருஸ்தவத்தின் கொடையும் அல்ல. இஸ்லாத்தின் தனிப் பண்பும் அல்ல. ஆனால் அங்கிருந்துதான் தமிழருக்குக் கிட்டியது என்பது போன்ற பிரமைகளை நிரந்தர உண்மைகளாகத் தமிழகத்தில் அனைத்து முற்போக்குகளின் மனதிலும் நாம் காணமுடியும். மேலும், சமத்துவம் என்பது உண்மையில் மனித சமுகத்தால் சமீப காலத்தில் எந்த வகையிலும் அடையக் கூடியதும் அல்ல.

மாறாத உண்மை என்று எதையாவது சொன்னால், அடுத்த பல பத்தாண்டுகளுக்காவது இதை ஒரு மாறாத உண்மை என்று வேண்டுமானால் சொல்லலாம். இதைப் படிக்கும் முற்போக்குகளில் பலருக்குக் குருதி கொப்பளிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குருதி கொப்பளிப்பதால் உண்மைகளை நாம் அடைவதில்லை. மாறாக கடும் அமைதியை நம் சிந்திக்கும் திறனில் கொள்வதன் மூலம் வேண்டுமானால் ஒரு சில உண்மைகளை நாம் சில நேரம் அடைய முடியலாம்.

ஆர்தர் கோயஸ்ட்லர் (Arthur Koestler) என்ற ஒரு சிந்தனையாளர் 50-களிலிருந்து 70-களின் இறுதி வரை ஓரளவு பிரபலமாக இருந்தார். பின்னர் அவர் நோய் வாய்ப்பட்டுத் துன்பம் தாளாமல் தற்கொலை செய்து கொண்டார். உண்மையைத் தேடும் பலருக்கும் அதுதான் அனேகமாகக் கிட்டும் முடிவு என்பது என் கருத்து. அவர் எப்படிச் சிந்தனையாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை அடைகின்றனர், அதுவும் அறிவியல் துறைகளில், என்று ஆராயத் தலைப்பட்டு தன் முடிவுகளை ‘The Sleepwalkers ‘ என்ற ஒரு நூலில் எழுதினார். அதன் பிறகு இத்தகைய ஆய்வுகள் ஒரு துறையாகவே கூட வளர்ந்திருக்கும் என்று நான் ஊகிக்கிறேன். Cognitive psychology, Sociology of science, Neuro-physiology (பார்க்க: www.med.uwo.ca/physiology/courses/medsweb/objectives.htm) Neuro-psychology, (பார்க்க: www.med.uwo.ca/physiology/courses/medsweb/objectives.htm) என்று பல விதமாகப் பாதை பிரிந்து போய் மனித அறிவு எவ்வகைக் கூறுகளால் கட்டப்பட்டுள்ளது, அறிதிறன் எப்படி எதையும் அணுகுகிறது என்று கடுகைத் துளைத்து கடலை அதில் பாய்ச்ச முயன்று கொண்டு இருக்கிறார்கள். ஏதும் தெளிவடைய இன்னமும் ஒரு நூறாண்டாவது ஆகும் என்று நினைக்கிறேன். அதுவரை நம் நாட்டின் அழுக்குப் பஞ்சாங்கங்களும், மூலம் இல்லாத அதிசயங்களான கறுப்பு நூலும், பச்சை நூலும் (நான் எவற்றைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்!) வெறுப்பு, இனவெறி மேலும் அரைகுறை அறிவில் வேர் கொண்ட தாஸ் காபிடலும், செம்புத்தகமும் நம் அறிவைச் சிறை வைக்காமல் இருந்தால். அதில் அவர் ஒரு விடையாகக் கண்டது ‘serendipity’ என்பதுதான் கண்டுபிடிப்புகளுக்கு அதிகம் உதவி இருக்கிறது, பகுத்தறிவை விட என்பது. இந்தச் சொல் ஏதும் பெரிய கருத்தாக்கம் இல்லை. தற்செயல் நிகழ்வு என்று பொருள். ஒரு தலையணை அளவு உள்ள புத்தகத்தின் முடிவு இதுதான். கிழவருக்குக் கூடத் தெரியுமே இது என்பீர்கள். சில நேரம் அறிவியல் முறைகள் இப்படித்தான் மலையைக் கெல்லி எலியைப் பிடிக்கின்றன. தற்செயல் நிகழ்வுகள் வழியே அறிவியலின் பெரும் தாவல்கள் நேர்ந்தன என்றால் ‘பகுத்தறிவு’ மூலம் அனைத்தும் நடந்தது என்று சாதிப்பவர்கள் எங்கிருந்து அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்று கேட்கத்தானே நமக்குத் தோன்றும்.

என் கருத்தில், முழுவதும் தன் கட்டுப்பாட்டில் உள்ள விடை காணும் முறை என்று எவரிடமும் ஒரு வழி கைவசப்படுவதில்லை. பகுத்தறிவு என்பது அப்படிப் பட்ட முழுமையான கருவியும் அல்ல. அது பல துறைகளில், பல தளங்களில் நல் விடைகளுக்கான ஒரு வழிமுறை, பாதை. ஆயினும் மனித உறவுகள், நெருக்கம், உடல் ஆசைகள், உடல் தேவைகள் போன்ற இடங்களில் பகுத்தறிவின் பங்கும், விடைகளும் அனேகமாக உபயோகம் அற்றவை. காட்டாக, மனித உறவுகளைப் பற்றிய சித்தர் பாடல்கள் போன்றவை தர்க்கத்தின் ஓர் அதீதமான முடிவுகள். இப்படி அறிவியல் பார்வையை வரலாற்றுக்கப்பால் இட்டுச் சென்ற ஒரு பயன்படுத்தல் சித்தர்களைப் போலச் சமூகத்தை ஒதுக்கிய தன்னிச்சையான நடத்தைக்குத்தான் நம்மை இட்டுச் செலும். மனித குலம் இதனால் வளராது, மாறாக நசித்துப் போகும். ஆசை என்பதே அபத்தம் என்ற இன்னொரு தளத்துக்குப் பகுத்தறிவு நம்மை இட்டுச் செல்லும். மாற்று வழிகளான கொனாரக், காம சூத்திரம் போன்றவை தவறு எனப் பகுத்தறிவால் நமக்கு உறுதி சொல்ல முடியாது. முத்தம் என்பது கிருமிகளின் பரிமாற்றம் என்று அறிவியலில் பால பாடம் படித்த சிறுவர்கள் கருதுவதை நாம் பார்த்திருக்கலாம். அது போன்ற கருத்துகளுக்குத்தான் ‘பகுத்தறிவின்’ மோசமான பயன்படுத்தல் நம்மை இட்டுச் செல்லும். ஆகப் பகுத்தறிவு அறுதியான விடைகளைத் தரும் என்ற பிரச்சாரத்தில் நம்மை மூழ்கச் சொல்லும் எந்த கருத்தியல் வாதமும் ஒரு வகை மதமாகச் சீரழிகிறது என்றே நான் கருதுகிறேன். எங்கு அறிதிறன் தன் கூரிய வெட்டு முனையை இழக்கிறது, எங்கு அது தன் கூர்மையின் உச்சத்தை அடைகிறது எனக் காண்பதற்குப் பகுத்தறிவு அல்ல, உள்ளுணர்வின் நுட்பம்தான் பெரிதும் உதவுகிறது. முடிவைக் கண்டபின் சான்று தேடப் பகுத்தறிவு உதவும், அதில் ஐயம் இல்லை.

இவை பற்றி இதற்கு மேல் எழுத இது இடம் அல்ல. ஆக, ஒரு பாதையில் நடப்பவரை அப்பாதையாகவே காண்பதுதான் reification அல்லது iconization. இம் முறையைப் பின்பற்றுவதில் சங்கர மடத்துக்கும், திராவிட மடத்துக்கும், மாஒயிச (சீன தேசிய) மடத்துக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. அறிவியலின் ஆதிக்கம் நடப்பு உலகின் மீதும், மக்களின் வாழ்வு மீதும், மக்களின் சிந்தனை முறை மீதும், அவர்கள் நம்பிக்கை பழக்க வழக்கங்கள் மீதும் தன் பாதிப்பைப் பரப்பி வருவதைக் கண்டு அஞ்சிய மத நம்பிக்கைப் பழமைவாதம், அறிவியலின் அறிமுறைகளைத் தானும் கையாண்டு தன் உள்ளீடு நிரந்தர உண்மைகளைக் கொண்டது எனக் காட்டினால் தன் பெருமை மிச்சப்படும் என்று நம்பி அதன் வழியே பல வகை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இவ் வழியில் உதாரணமாக, கிருஸ்தவத்தில் படைப்பியல் வாதம் (creationism) என்ற ஒரு வகைக் கருத்தியல் பல முகங்களோடு செயல்பட்டு வருகிறது. இதன் செயல் முறைகளால் உந்தப்பட்டு நடந்த அரசியல் மாறுதல்களுக்கு ஓர் உதாரணம்: அமெரிக்கப் பள்ளிகளில், டார்வினின் பரிணாமவியலுக்குப் போட்டியாகப் படைப்பியல் வாதம் போதிக்கப்பட வேண்டும் என்ற பெருவாரி கிருஸ்தவரின் வற்புறுத்தலின் வலுவால் பல மாநிலங்களில் பாடத் திட்டங்களில் சேர்க்கப்பட்டு விட்டது. இதில் இன்னொரு முகம் ‘புத்திசாலித்தனமான அமைப்பு’ (Intelligent design) என்ற கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் நம்பிக்கை ஆகியவற்றால் ஆன கலவை வாதம். இதில் பல அறிவியலாளரும் சேர்ந்து வருகின்றனர் என்பது அசதியூட்டும் ஒரு தகவல். இந்த வாதம் முழுவதுமே மத நம்பிக்கை உள்ள கூட்டத்தால் உந்தப்படுவதில்லை. மாறாக குறிப்பிட்ட மதம் எதையும் நம்பாத, ஆனால் பட்டுணர்வுக்கும் அறிதிறனுக்கும் புலப்படும் பெரும் அண்ட பேரண்டம் முழுவதும் தற்செயலாக உருவாகி இருக்க முடியாது என்ற ஒரு வாதத்தின் அடிப்படையில் ஓர் ஊகமான முடிவுக்கு வரும் அறிவியலாளரும் இதர சிந்தனையாளரும் இதில் சேர்ந்திருக்கின்றனர். எனவே, இது முழுவதும் கிருஸ்தவ மதத்தின் உலகாளும் விருப்பத்தால் கட்டப்பட்ட சதி என்று கருத இடம் இல்லை. இந்த இயக்கத்தில் அது ஒரு பக்கம் இருக்கிறது என்றாலும் அதுவே முழு ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால், இத்தகைய வழிமுறைகள் மதத்தையும் அறிவியலையும் ஒரே நேரத்தில் அவமானப்படுத்துகிறது என்பதை இந்த அரை வேக்காட்டுக் கிருஸ்தவர்கள் சற்றும் அறிந்தாரில்லை. அதே போலவே கடவுள் என்ற கருத்தே ஒரு அபத்தம் என்ற அறிவியலின் மிக அடிப்படையான வாதத்தை எதிர்கொள்ளத் திராணி இல்லாத ஒரு கூட்டம் இந்த இளைஞர் + முல்லா கூட்டணி. எனவே, இவர்களின் மதப் பிடிப்பே ஓர் அரைகுறைப் புரிதல் சார்ந்தது என்பது என் கட்சி. நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று நான் அடம் பிடிக்கப் போவதில்லை.

இன்று இஸ்லாத்திலும், கிருஸ்தவத்திலும் பழக்கத்தில் இருந்து எழும் மதப் பிடிப்புக்கும், அதிகார வெறியில் எழும் மத மூர்க்கத்துக்கும் நடுவேயான மோதலில் எழுவது சகிப்பற்ற தீவிரவாதமாக மாறுகிறது. மேற்சொன்ன நாடுகளில் இன்று கணிசமான பகுதி மக்கள் திரள் இன்று தீவிரவாத அதுதான் நவ-பழமைவாத இஸ்லாத்தின் சார்பாக இருப்பதற்கு புருமா காட்டும் காரணங்கள் பொருந்தவில்லை என்று நான் கருதுகிறேன். மாறாக, வாலறுந்த நரி கதை மேலாகப் பொருந்தும் என்பது என் கருத்து. தம் நாட்டின் அல்லது சமுகத்தின் தேக்கத்துக்கும், நசிவுக்கும் காரணமும், பரிகாரமும் தேடும் புதுத் தலைமுறைகள், உலக வரலாற்றை ஓரளவாவது பள்ளிகளில் பயின்று, பின்பு அன்றாட தற்கால வரலாற்றைத் தகவல் சாதனங்கள் மூலம் பெறும் இன்றைய இளைஞர்களுக்கு அவரது முன்னோரைப் போல கருத்து மையங்கள், மேலும் கருது பொருள்களாக அருகாமையில் உள்ள சமூகங்கள் இருப்பதில்லை. சரியாகச் சொன்னால் அருகாமையில் உள்ள சமூகங்கள் அவரது கவனிப்பில் அதிக இடம் பெறுவதில்லை என்று கூடச் சொல்லலாம். ஆனால் அருகாமையில் உள்ள சமூகங்களின் தேக்க நிலை அல்லது உயிர்ப்பற்ற சிந்தனை வழிகள் அவர்கள் மனதில் சலிப்பைத் தரும் என்பதில் ஐயம் இல்லை. தகவல் சாதனங்களின் நாடகத் தன்மையுடன் கூடிய கலகத் தகவல்களினால் உலகில் வேறெங்கோ அனைத்து வளர்ச்சியும் படு வேகமாக நிகழ்கிறது, தாம் மட்டும் பின்னே விட்டுச் செல்லப் படுகிறோம் என்னும் ஆதங்கம் அவர்கள் மனதைப் பீடிக்கிறது. அதே நேரம் அவர்களிடம் உள்ள ஒரே கருத்தியல் ஓரளவாவது அவருக்குப் பிடிபடுகிற கருத்தியல் கருப்பு நூல் அல்லது பச்சை நூலில் இருந்துதான் கிட்டுகின்றன. பள்ளிகளில் படிக்கும் விவர அறிவும் ஆய்வறிவும் சிகரங்கள் இன்னும் எவ்வளவு தூரங்களில் இருக்கின்றன என்பதைத் தான் அவர்களுக்குச் சுட்டுகின்றன. மாறாக கருப்பு நூலோ அல்லது பச்சை நூலோ ஒரே புத்தகத்தின் மூலம் சிகரத்தை எட்டி விடலாம் என்ற பிரமையை அவர்களுக்குத் தந்து அப் புத்தகத்தின் மூலம் உலகையே ஆளலாம் என்ற ஒரு குதூகலமான நம்பிக்கையையும் தருகின்றன. அரைப் படிப்பு என்பது, அரைகுறை அறிவு என்பது எத்தனை ஆபத்தானது என்பதற்கு இந்த வகை இளைஞரின் அரசியல் இயக்கங்களும், மத நம்பிக்கைகளும் தெளிவான சான்றுகள்.

அதுவும் சந்தைப் பொருளாதாரம் நாட்டைப் பீடிக்க, உயிர்த்திருக்கக் கூட தம் மக்கள் பெரும் போட்டிக்குத் தயாராக வேண்டுமே, அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் மெத்தனமாக இருக்கின்றனரே என்றெல்லாம் கருதத் துவங்கும் ஒரு தலைமுறை, முந்தைய தலைமுறையினரின் இஸ்லாத்தை விலக்கி, உலகில் ஆதிக்கம் செலுத்த விழையும் ஒரு வகை இஸ்லாத்தோடு அணி சேர விழைகின்றனர் என்றுதான் நான் இந்த தீவிரவாத இஸ்லாத்தின் பரவலைப் புரிந்து கொள்கிறேன். மற்ற காரணங்கள் அனைத்தும் தவறானவை என்று வாதிடவில்லை. அவை இந்தக் காரணங்களை விட மெலிவானவை, தாக்கம் குறைவானவை என்பது என் கருத்து.

சாமுவெல் ஹண்டிங்டனின் ‘நாகரிகங்களின் மோதல்’ (Clash of civilizations) என்ற கருத்தாக்கம் பெருமளவும் ஏற்கப்பட முடியாததாக இருக்கலாம். ஆனால் அதன் மைய வாதங்களில் பல பகுதிகள் தவறானவை அல்ல. அல்லது இஸ்லாம் இன்று உலகெங்கும் போர்க் கோலம் பூண்டு காணப்படுவதற்கு எளிதில் ஒரு சரியான தூண்டுதலைக் காண முடியாது. இஸ்ரேல்-பாலஸ்தினம், காஷ்மீர், செசன்யா, பாஸ்னியா என்று பல தூண்டுதல்களைக் காட்டுகின்றனர் இஸ்லாமியத் தீவிரவாதிகள். இதை விடவும் தீவிரமான, மோசமான ஆக்கிரமிப்புகளை இஸ்லாமிய உலகம் சந்தித்தது 19-ஆம் நூற்றாண்டிலும், 20-ஆம் நூற்றாண்டின் மத்தியிலும். அப்போது இத்தகைய உலகளாவிய போர்க்கோலம் காணப்படவில்லை. லெபனிய நாட்டுப் பத்திரிகைப் பதிப்பாசிரியர், சலாமெஹ் நெமாத் (Salameh Nematt), அல்-ஹயத் (Al-Hayat) என்ற லெபனியப் பத்திரிகையின் ஆசிரியர் (அல்லது ஜோர்டானியப் பத்திரிகையா ?), இந்தத் திடார்ப் போர்க்கோலம் எழுந்ததற்கு இதையெல்லாம் விட ஒரு எளிய காரணத்தைக் காட்டுகிறார். (பார்க்க: C-span தொலைக் காட்சி அலையில் சமீபத்துப் பகல் நேர நிகழ்ச்சி ஒன்று. அவருடைய பெயரை வைத்துத் தேடினால் தகவல் கிட்டும் என நினைக்கிறேன்).

அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள், அரேபிய நாடுகளிலும் மேற்கு ஆசியாவிலும் பெருமளவு மையத் தகவல் பரப்பு சாதனங்களாக உருவெடுத்த பின் கடந்த முப்பது ஆண்டுகளில் சாதாரண அரபு மற்றும் மேற்காசிய மக்களுக்கு உலகைப் பற்றிய உருப்படியான நம்பகமான தகவலே கிட்டுவதில்லை. பெரும்பாலும் மேற்கு ஆசியாவில் ஆட்சியில் இருக்கும் களவாணிக் கூட்டங்களின் பிடியில் இருக்கும் அடக்கு முறை அரசுகளின் பொய்ப் பிரச்சாரம், அரபு தேசியம் அல்லது இதர பண்பாடுகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் ஆகியவற்றால் சாயம் பூசப்பட்டுத் தொடர்ந்து தரப் படுவதால் உலக மக்களில் கணிசமானவர்கள் மீது அவநம்பிக்கையுடனேயே இம் மக்கள் வாழ்கின்றனர். இதிலிருந்துதான் புறப்பட்டிருக்கிறது இஸ்லாமியத் தீவிரவாதம் என்கிறார். அல்-ஜசீரா என்னும் தொலைக் காட்சி நிறுவனம் உண்மையின் தூதுவராக இன்று முஸ்லிம் ஜனத்திரள் நடுவே உலவுகிறது. ஆனால் உண்மையில் கத்தார் நாட்டு அரசரின் கைப்பாவை அது என்பது மக்களுக்குத் தெரியாது என்பது இவரது வாதம். இதை அவர் சொன்ன அதே அரங்கில் அல்-ஜசீரா நிறுவனத்தின் பிரதிநிதியும் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். அவர் தலையை ஆட்டி எதிர்ப்புத் தெரிவித்தார் என்றாலும், நெமாத்தின் அடிப்படையான வாதம் எளிமையானது – யார் முதலீடு செய்கிறார்களோ அவர்களின் கொள்கைதான் அரபு தகவல் நிறுவனங்களை ஆள்கிறது என்பது. இதை யாரும் அன்றைய அரங்கில் எதிர்க்கவில்லை. அது தவறு என்று கூட, அதாவது இப்படித் தகவல் திரிக்கப்படுவது தவறு என்று கூட அந்தப் பகுதியிலிருந்து பங்கெடுத்த தகவல் நிறுவனப் பிரதிநிதிகள் வாதிடவில்லை.

ஆக ஆளும் வர்க்கத்தினரின் தொடர்ந்த பொய்ப் பிரச்சாரத்தால் பெரும் மக்கள் திரள்கள் தவறான நம்பிக்கைகளின் வழியே செலுத்தப்பட்டு தம் அடையாளக் குழுவைத் தவிர இதர மக்கள் குழுக்களை எதிரிகளாகவும், அழிக்கப்பட வேண்டிய கூட்டங்களாகவும் காணத் தலைப்படுகின்றனர், இதைத் தற்கால மக்கள் தொடர்பு சாதனங்கள் துரிதமாகவும், எளிதில் எதிர்க்க முடியாத வகையிலும் செயல்படுத்துகின்றன என்பது இவரது அடிப்படையான வாதம். ஆனால் இதில் என்ன புதிதாக இருக்கிறது ? கடந்த ஈராயிரம் வருடங்களுக்கு மேலாக இதுதானே உலகத்தில் பல பகுதிகளிலும் அரசியலாக இருந்திருக்கிறது. அனேக மதங்களுமே இந்த வகைச் செயல்பாடுகள்தானே ?

ஒப்பீட்டில் இன்றைய இஸ்லாமிய உலகு முன்னெப்போதையும் விட அதிகம் வசதியோடும், ஆயுத பலத்தோடும், குறிப்பிட்ட பெரும் எதிரி யாரும் இல்லாமலும்தான் இருக்கிறது. அமெரிக்கா என்பது ஒரு பெரும் எதிரி என்று வாதிடுவது ஒரு பாசாங்கு. அமெரிக்கா இஸ்லாமிய உலகின் இயற்கை வளமான எண்ணெயைப் பெருமளவு நம்பி இருக்கிறது, அதில்லாமல் அமெரிக்கப் பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போகும். அதனால்தான் பெருவாரி இஸ்லாமிய நாடுகளின் அடக்குமுறை அரசுகளோடு கூட்டுறவு வைத்துக் கொண்டு இயங்கி வருகிறது அமெரிக்கா. எண்ணெய் வளம் இல்லாத இஸ்லாமிய உலகு உடனடியாக தனது உலக இயக்க சக்தியை இழந்து இன்னொரு வலிவில்லாத அரசியல் கொள்கையாக மாறிவிடும் என்பது அமெரிக்கருக்கு நன்றாகவே தெரியும். ஆப்பிரிக்க மதங்களை இன்று யாராவது சட்டை செய்கின்றனரா ?

இந்து மதம் இன்று கந்தல் துணியாகக் கிழிக்கப்பட்டு யார் வேண்டுமானாலும் அதன் மீது சாணி எறிய முடியும் அவல நிலையில் இருப்பதற்கு என்ன காரணம் ? அதனிடம் எந்த அரசின் பலமும் இல்லை. மேலும், அதன் வழி செல்லும் மக்களிடம் உலகச் சந்தையில் சூதாட்டம் நடத்த எந்த வளமும் இல்லை என்பதுதானே ? இஸ்லாமியப் படையெடுப்புகளும், ஐரோப்பியக் காலனியத்தின் கொள்ளைகளும் சீரழித்த இந்திய மக்களிடம் பழங்காலம் பற்றிய வெற்றுப் பெருமிதத்தைத் தவிர இன்று சொந்தமான திறன் என்று என்ன உள்ளது ? இருக்கும் படித்த கூட்டத்தின் அறிவையும் முன்னேற்றம் என்ற பெயரில் காலனி ஆதிக்கத்தின் பண்பாடு, அறிவுத் திரட்டு ஆகியவற்றுக்கு அடகு வைத்தாயிற்று. மீதம் உள்ள புத்திசாலிகளில் கணிசமானவர் சீன தேசியம், ரஷ்ய தேசியம், அரபு தேசியம் ஆகிய உலக ஏகாதிபத்திய வெறிகளுக்கு இரையாகி இருக்கின்றனர். ஆக இந்தியாவோ, இந்து மதமோ அது சார்ந்த சமூகமோ இன்று உலக அரசியலில் வெறும் உதை பந்துதான்.

மாஒயிசம் இன்று உலக அரசியலில் காணாமல் போனதற்கு என்ன காரணம் ? அதன் ஒரே பலமான மக்கள் திரளின் உற்பத்தித் திறனை, சீனாவின் அதிகார வர்க்க முதலாளிகள் சமத்துவம் என்ற பெயரில், தம்மிடம் தரப்பட்ட அரசியல் அதிகாரத்தை வைத்துக் கொள்ளை அடித்துக் கொண்டு, உலக முதலாளியத்துடன் ஆடும் சூதாட்டத்தில் மக்களைப் பகடைக் காயாக வைத்து பலி கொடுத்துத், தம் நலனை முற்படுத்த ஆரம்பித்து இரண்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இன்று சீன மாஒயிசம் இருளில் தடுமாறும் சில நடைமுறைக் குருடர்களின் கருத்தியலாக மட்டுமே எஞ்சி இருக்கிறது. சீனாவின் உலக ஏகாதிபத்தியத்துக்கு, இந்தியா போன்ற உதிரி நாடுகளில் மக்கள் அந்தந்த நாட்டு தேசியத்தின் பின்னே திரளாமல் தடுக்க உதவும் ஒரு சதித் திட்டத்துக்கான ஆயுதமாகவே இன்று சீனாவில் அது எஞ்சி இருக்கிறது. இந்திய மாஒயிசங்களின் அரசியல் குருட்டுத்தனத்துக்கு ஒரு தெளிவான சான்று அவர்கள் பெரும் மக்கள் திரளின் பட்டினிச் சாவிற்குக் காரணமான ஓர் அரக்கக் கருத்தியலை இன்னமும் உயர்த்திப் பிடித்திருப்பதுதான்.

உலகத்தில் சுதந்திரச் சந்தை மட்டுமே இயங்கினால் எண்ணெய் வளத்தை நம்பும் இஸ்லாமிய நாடுகள் துரிதமாகவே தம் பெரும் பணபலத்தை இழந்து விடுவர். சுதந்திர சந்தையை ஒடுக்கிய உற்பத்தியாளரின் கூட்டு (Producer’s cartel) உலக எரிபொருள் சந்தையில் புழங்கும் பெரும் முதலீட்டில் ஒரு கணிசமான பகுதியை அடக்குமுறை ஆட்சியாளர்களின் தனி நபர் வங்கிக் கணக்குக்கு மாற்றித் தந்து, அந்த நிலப் பகுதியில் வாழும் எளிய மக்களை ஓட்டாண்டிகளாக வைத்திருக்கிறது. இதற்கு அமெரிக்கர்தான், அமெரிக்க வெளி நாட்டு உறவுக் கொள்கைகள்தான் காரணம் ? ஆம் என்று சொல்பவர் கருத்துக் குருடர் மட்டும் அல்ல, காரணக் குருடரும் கூட என்றே நான் கருதுகிறேன். அவர்கள் உள்ளங்கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேடும் காரியக் குருடரும் கூட. இந்தக் கூட்டுக் கொள்ளை முயற்சியில் அமெரிக்கருக்கும் பங்கு உண்டா என்றால், உலகத்தில் நடக்கும் கொள்ளைகளில் அமெரிக்க வணிக நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் பங்கில்லாமல் எந்தக் கொள்ளை சுலபமாக நடக்க முடியும் ? ஆனால் மேற்காசியாவில் மக்களைக் கொள்ளை அடிக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கர்தானா மூல காரணம் அல்லது முழுக் காரணம் ? இல்லை என்பது என் கருத்து. என்றுமே முதுகில் குத்துவதில் முதல் குத்து சொந்தக்காரருடையது தானே ?[5]

[6] இங்கும் புருமா வழி தவறுகிறார். இது மதசார்பற்ற ஆய்வாளர் பலரும் வழி தவறும் இடம்தான். பொதுவாக அறிவுத் துலக்கப் பாதையை (enlightenment paradigm) மதிப்பவரும், அதுதான் மக்களின் உய்வுக்கு வழி என்று நம்பும் கருத்தியலை விழிப்புணர்வுடனோ அல்லது உள்ளுணர்வு மூலமாகவோ பின் தொடரும் எந்த ஆய்வாளரும் வழி தவறும் இடமும் இதுதான். அடையாள அரசியல் என்பதே அழிவுக்கு இட்டுச் செல்வது என்று கருதிய துவக்க கால அறிவுத் துலக்கச் சிந்தனை (மார்க்ஸ் இந்தக் காலத்துக்கு ஓர் உதாரணம்) பின்னர் அடையாள அரசியலின் முன் தன் அரசியல் தோற்றுப் போய்விட்டது என்று அறிந்து, ஓர் இரண்டாம் தர அரசியலாகச் சீரழிந்து போய் அடையாள அரசியலுக்கு வால் பிடிக்கும் அரசியலாக இன்று உலக அரங்கில் உலவுவதன் காரணமே இந்த வழி தவறுதல்தான். இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும், பின்னர்தான்!

ஆனால் இங்கு புருமா வழி தவறுவது ஏன் என்றால் அவர் மீண்டும் இஸ்லாம் இதர கருத்தியல்கள் போன்றதே என்று இயல்பாகக் கருதுவதுதான் என்பது என் கருத்து. இஸ்லாமியச் சிந்தனையாளர் – பழமைவாதிகளும் சரி, நவ-பழமைவாதிகளும் சரி – பலரும் மறுபடி மறுபடி சொல்வது உண்மையானால், இஸ்லாத்தில் அரசியலுக்கும் மதத்துக்கும் இடையே தனிப் பிரிவு அல்லது சுவர் ஏதும் இல்லை. அரசியலில் எது வெல்லுகிறதோ அதுதான் சரி என்ற ஒரு சிந்தனை பெரும் சக்தியாகச் செயல்படுகிறது என்றால் அதேதான் இஸ்லாத்தின் மையத்திலும் இயங்குகிறது என்றே நான் கருதுகிறேன். ஆனால் இஸ்லாமியச் சிந்தனையாளர் இந்தக் கருத்தை ஏற்க மாட்டார். அப்படி ஒப்புக் கொண்டால் அரசியலின் இயல்பான அதிகாரத் தேட்டைதான் இஸ்லாத்தின் மையத்தில் இருக்கிறது என்று ஒப்புக் கொள்வதாக ஆகிவிடும். அது இஸ்லாத்தின் அறநெறியை மறுப்பதாகவோ அல்லது பின்னொதுக்குவதாகவோ ஆகும்.

எனவே ஒரு சமரசத்தை முன்வைக்கிறார். அதாவது அரசியலை இஸ்லாத்தின் அறப்பார்வை பதப்படுத்தி மேம்படுத்திவிடும் என்றும் அதுதான் இஸ்லாமிய அரசியலின் இயல்பு எனவும் அவர்கள் தொடர்ந்து வாதம் செய்கின்றனர். என் கருத்தில் இது ஒரு சாமர்த்தியமான கட்சி கட்டல். நடை முறையில் பொய்க் காசு நல்ல காசைப் புழக்கத்தில் இருந்து விரட்டி விடும் என்பதுதான் உலகப் பொருளாதார நடைமுறை காட்டுவது. அரசியலும் பொருளாதாரத்தைப் போன்ற ஓர் இயக்கம்தான். இங்கும் அனேகமாக வன்முறையும், பொய்மையும், சாமர்த்தியமும் நேர்மை, அமைதி முறை, உண்மை தேடும் யதார்த்த அரசியல் ஆகியவற்றை விரட்டும்தான். புருமா இஸ்லாமிய சமூகங்களில் அரசியலில் வெற்றி பெறும் அல்லது வெற்றி பெறுவது போலக் காணப்படும் தலைவர்களை அவர்களது மத நம்பிக்கையின் ஆழம் அல்லது தூய்மை அல்லது நேர்மை என்னும் உரைகல்லால் மக்கள் சோதித்துப் பார்ப்பர் என்று கருதுவதே ஒரு அபத்தம். அவரது கட்டுரையின் துவக்கத்தில் செய்த ஒரு தவறு இங்கும் முடிவுகளைப் பாதிக்கிறது.

அதாவது இஸ்லாமிய சமூகம் உலகளவில் இன்று தனக்கு ஒரு வீச்சு இருக்கிறது என்று நம்புகிறது, தம் ஆதிக்கம்தான் உலகில் நிலவ வேண்டும் என்ற கருத்தியல் இஸ்லாமிய சமூகங்களில் ஒரு கணிசமான பகுதி மக்களிடம் பரவி இருக்கிறது என்ற ‘உண்மை’ களைக் கணக்கில் எடுக்க மறுக்கிறார். இது சாமுவெல் ஹண்டிங்டன் போன்ற மோதல் பற்றிய கருத்தை முன் வைக்கும் கருத்தியலாளரிடம் இருந்து தன்னை மாறுபடுத்திக் காட்டித் தான் ஒரு ‘முற்போக்கு ‘ என்று நிறுவ புருமா கைக்கொள்ளும் ஓர் உத்தி என்றே நான் கருதுகிறேன். இது முற்றிலும் தவறு அல்ல. ஆனால் நடைமுறை உண்மைகளை இப்படித் தவற விடுவது சரியான முடிவுகளுக்கு இட்டுச் செல்லாது என்பதுதான் என் கருத்து.

முடிவாக, ஒஸாமாவை மதிக்கும் அல்லது அவரது பாதை சரி எனச் சொல்லும் தீவிர முஸ்லிம் மதத்தலைவரை அல்லது அறிஞரைக் காண்பது எளிது என்றே நான் கருதுகிறேன். ஆனால் ஒரு முல்லா அல்லது உள்ளூர் மார்க்க அறிஞர் பகிரங்கமாக ஒரு செய்தித்தாள் பேட்டியிலோ, தொலைக்காட்சி நேர்காணலிலோ இதை ஒப்புக்கொள்வாரா என்றால் மாட்டார். ஏனெனில், பெருவாரியான ஜனநாயக நாடுகளில் ஒஸாமா பின் லாடன் போன்றவரின் வன்முறை மற்றும் அழிப்புப் பாதை மீது வெறுப்பு இருப்பது அவர்களுக்குத் தெரியும். எனவே தற்போதைக்கு அவர்கள் வெளிப்படையாக இப்படி ஒப்புதல் தருவதை தவிர்ப்பர்.

ஆனால் ஜனநாயகம் இல்லாத நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் ஒஸாமாவிற்கு ஆதரவு தெரிவிக்க மதத்தலைவர்கள் பலர் இருக்கின்றனர் என்பது பன்னாட்டு செய்தித்தாள்களைப் புரட்டினால் உடனேயே தெரிந்து விடும் என்றே நான் கருதுகிறேன்.[6]

[7] இந்தியாவில் மதசார்பற்ற அரசு வேண்டும் என முழங்குவதில் கிருஸ்தவ சர்ச்சுகளும், கிருஸ்தவ இயக்கங்களும் பேரூக்கம் காட்டுவது இந்த வரலாற்றுணர்வு அவர்களிடம் இருப்பதால்தான். அவர்கள் மதசார்பற்ற அரசு எனக் காண்பது ஒரு கிருஸ்தவ அறநெறியால் இயக்கப்படும் அரசைத்தான். இதையே களம் மாற்றிப் பெருவாரியினரின் மதம்தான் ஒரு மதசார்பற்ற அரசின் அறக் கோட்பாட்டை இயக்க வேண்டும் என்ற கருத்தாக்கமாக மாற்றிக் கொடுத்தால் இந்த கிருஸ்தவ நிறுவனங்கள் உடனே அங்கிருந்து ஓட்டம் பிடிப்பர் அல்லது அதை எதிர்ப்பர். இந்தக் கருத்தை செமிடியப் பண்பாட்டில் இருந்து வெளிவந்து, தன் வேர்களை முழுவதும் அறியாத ஓர் அரை வேக்காட்டு இயக்கமாக இன்று உலகில் உலவும் மார்க்சியமும் முன்வைப்பதன் காரணம் கிட்டத்தட்ட அதன் கிருஸ்தவப் பின்புலன்தான். இந்த இரு இயக்கங்களும் இன்று இந்திய அரசியலிலும், மைய அரசிலும் கை கோர்த்துக் கொண்டிருப்பதன் காரணமும் அவற்றின் கிருஸ்தவ மத வேர்கள்தான். ஆனால் மேற்சொன்ன வகையில் இந்தியாவின் பெருவாரி மதம் இந்து மதம், அதன் அறநெறிதான் இந்திய மத சார்பற்ற அரசின் மதிப்பீடுகளை உருவாக்க வேண்டும் என்று ஒரு கருத்து முன்வைக்கப் பட்டால் மேற்சொன்ன இரண்டு இயக்கங்களும் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்பதில் நாம் எந்த ஐயமும் கொள்ள வேண்டாம். அதே வகை ஆர்ப்பாட்டத்தை முஸ்லிம் இயக்கங்களும் மேற்கொள்ளும். அதே இயக்கங்கள் இஸ்லாமிய நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் பெருவாரியாக உள்ள நாடுகளில் ஷரியாதான் அரசின் மதிப்பீடுகளை வழி நடத்த வேண்டும் என்று கோருவதற்குச் சற்றும் தயங்குவதில்லை. இந்த வகை நடத்தையை நான் ‘இரட்டைக் குவளை’ அரசியல் என்றே கருதுகிறேன். இதைத்தான் புருமா வேறு விதமாக அடுத்த பகுதியில் ஒரு பத்தியில் எதிர் கொள்கிறார். இதை அடுத்த வாரம்காண்போம்.[7]

aacharakeen@yahoo.com

Series Navigation

author

ஆசாரகீனன்

ஆசாரகீனன்

Similar Posts