இரண்டு கன்னடர்களும் நானும்:::

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

கே ஆர் விஜய்


இந்த மொழித் தொல்லை என்னை விடாமல் துரத்துகிறது. சுற்றி சுற்றி என்னை இறுகக் கட்டிக் கொண்டு பயமுறுத்துகிறது… என் சகிப்புத்தன்மையின் எல்லையை அடிக்கடி சோதித்துப் பார்க்கிறது… என்னை என்னால் புரிந்து கொள்ள முடியாதபடி செய்கிறது ? இன்னும் ….

பெங்களூரில் இருந்தபோது பொறுமையாக இருந்த என்னால் இங்கு வந்தபிறகு அதே பொறுமையைக் கடைபிடிக்க முடியாததற்கானக் காரணம் இன்றுவரை எனக்குப் புரியவில்லை. அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று பெங்களூரில் எனக்கு நண்பர்கள் அதிகம்.. கல்லூரியில் படித்தவர்கள்.. அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் தமிழர்கள் .. பள்ளியில் படித்தவர்கள் என்று நிறைய பேர் என்னைச் சுற்றி இருந்தார்கள். இரண்டு பெங்களூரில் கலவரம் இல்லாத சமயங்களில் தமிழிலே காலத்தை ஓட்டிவிட முடியும். ஆட்டோக்காரரானாலும் சரி…. திரையரங்கானாலும் சரி.. ஹோட்டலானாலும் சரி.. தமிழிலே கேள்வி கொடுத்து பதில் வாங்கிவிட முடியும்.

ஆனால் இந்த ஊரில்.. குளிர் சூழ்ந்த வட அமெரிக்காவின் வட பகுதியான இந்த மிக்சிகன் மாகாணத்தில் என்னால் இவர்களுடன் காலம் தள்ளுவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆரம்பத்தில் எல்லோரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யப் போகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக ஒன்றாகத் தங்கியிருந்தோம். எங்கள் மூவருக்குமே நிறைய ஒற்றுமைகள் .. இந்தியாவிலும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்தோம்.. எல்லோருமே மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் படித்துவிட்டு சாப்ட்வேர் துறைக்கு வந்தவர்கள்.. உலகத்தில் தலைசிறந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான க்ரைசலர் அலுவலகத்தில் பணிபுரியும் வாய்ப்பு ஒரே சமயத்தில் எங்களுக்குக் கிடைத்தது. இந்த ஒற்றுமைகள் தான் எங்களை ஒன்றாகத் தங்க வைத்தது.

மிகுந்த சந்தோஷத்துடன் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கு வந்து சேர்ந்த பின் அலுவலகதிற்குப் பக்கத்திலே உள்ள ஒரு அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸில் வாடகைக்கு ஒரு அபார்ட்மென்ட் எடுத்துக் கொண்டோம். மூன்று பேருக்கும் நல்ல சம்பளம் கிடைத்ததால் வேலைபார்க்கும் இடத்திற்கு அருகிலேயே கொஞ்சம் வசதியான அபார்ட்மென்டிற்குக் குடிபெயர்ந்தோம்.

முதல் ஒரு வாரம் எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. எங்கள் மூவரில் ஒருவன் மட்டும் தான் அமெரிக்காவிற்கு இதற்கு முன் இரண்டு முறை வந்துள்ளான். நாங்கள் இருவரும் யு.எஸ். வருவது இது தான் முதல் தடவை. வந்த முதல் வாரத்தில் நான் இங்கு பார்த்தது எல்லாம்….டெளன் டவுனில் இருக்கும் ஸ்கைக்ரேப்பர்ஸ்(skyscrapers) என்றழைக்கப்படும் வானளாவிய கட்டிடங்கள்… சீராக பராமரிக்கப்பட்ட கடைகள்… எங்கு சென்றாலும் இனம் கண்டு கொள்ள முடியாத ஒருவித புது வாசம்.. புதிய தண்ணீரின் சுவை…இழுத்துப் போர்த்தி நடந்து வந்த பெண்கள்… ஆம்! மொத்த ஊரே குளிருக்கு உறைந்து கொண்டிருந்த போது நான் நினைத்து வந்த கற்பனைகள் எல்லாம் ஒரே நிமிடத்தில் தவிடு பொடியாகின.

எனக்கு இந்த ஊரில் பிடித்தது எல்லாம் டவுன் டவுனில் இருக்கும் அந்தப் பெரிய ரினையசன்ஸ் பில்டிங்கும் அதிலிருந்துத் தெரியும் கனடா நாட்டு எல்லையும் தான். அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. நடுவில் ஆறு. அந்தப்புறம் கனடா நாட்டின் வின்ட்ஸர் நகரம் இந்தப்புறம் டெட்ராய்ட். இரண்டு பக்கங்களிலும் வானாளாவிய கட்டிட்ங்கள். இந்த ஒரு விஷயம் தான் மிக்சிகனை நினைத்துப் பெருமை அடைய வைத்தது.

இந்த ஊர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து அவர்கள் சொன்னது எல்லாம்…. இங்கு இருக்கும் மக்கள் அனைவரிடமும் குறைந்த பட்சம் ஒரு காராவது இருக்கும் என்றும் எங்கு பார்த்தாலும் வாகனங்களின் அணிவகுப்பாக தென்படும் என்றும் கோடை காலத்தில் ஏரிகள் நிரம்பி வழியும் என்றும் ஊர்ப் பெருமைகளைப் புகழ்ந்து தள்ளினார்கள். நான் பார்த்த போது அனைத்தும் குளிருக்கும் உறைந்து கிடந்தது. அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு பட்டப் பெயர் உண்டு .. நம்ம ஊரில் சேலம் பேருந்துகளில் mango city என்றும், திருச்சி பேருந்துகளில் rock city என்றும் எழுதியிருப்பது மாதிரி இங்கு மிக்சிகனுக்கு great lakes என்று எழுதியிருப்பார்கள். சில சமயம் world ‘s motor capital என்றும் எழுதுவது உண்டு.

மெதுவாக இந்த புதிய வாழ்க்கை முறைக்கு என்னைப் பழக்கப் படுத்திக் கொண்டிருந்தேன். எல்லாவற்றிலும் முடிந்த வரை மாற முடிந்த என்னால் ஒரே ஒரு விஷயத்தில் சுத்தமாக மாற முடியவில்லை.. அது முதல் நாளே ஒரு எதிர்வினையாக வந்தது…. என்னால் எவ்வளவு முயன்றும் மாற முடியாத அந்தப் பழக்கம்.. என் உணவுப் பழக்கம் தான் ? ? முதல் நாள் அலுவலகத்தில் இருக்கும் டைனிங் ஹாலுக்குச் சென்று அங்கிருந்த உணவுகளைப் பார்த்து எது என்னவென்றுத் தெரியாமல் முதல் நாளே ‘ஹாட் டாக் ‘ என்ற ஒரு உணவை வாங்க.. முதல் கடியைக் கடித்ததும்.. வித்தியாசமான சுவையாய் இருந்ததால்.. அருகிலிருந்த நண்பனிடம் கேட்டேன்… அவன் பன்றியோ ? மாடோ ? இரண்டில் ஒன்று தான் என்று சொல்ல உடனடியாக வாயில் இருந்ததைத் துப்பிவிட்டு பாட்டில் தண்ணியைக் குடித்து என் மதிய உணவை முடித்துக் கொண்டேன்.

அடுத்த நாள் மதியம் சிப்ஸ் மட்டும் சாப்பிட்டேன். கொஞ்ச நேரத்திலே தலை சுற்ற இரண்டு டெட்டினால் மாத்திரைகளை காபியுடன் சேர்ந்து சாப்பிட்டேன்.கொஞ்ச நேரத்தில் தலைவலி பறந்தது.

ஒருவழியாக இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முதல் வாரத்திலேயே முடிந்துவிட்டன. மெல்ல மெல்ல எங்கள் அறையை பொருட்களால் நிரப்பினோம். டி.வி, டைனிங் டேபிள், குளிரைத் தாங்கவல்ல கம்பர்ட்டர்கள் என்று ஒவ்வொன்றாக வாங்க ஆரம்பித்தோம். பின்னர் அருகிலிருக்கும் இந்தியன் ஸ்டோர்ஸ் சென்று அங்கிருக்கும் நம்மூர் அரிசி பருப்பு என்று எலலா வகைகளையும் வாங்கி வந்து சாம்பார் ரசம் சமைத்து சாப்பிடவும் ஆரம்பித்துவிட்டோம். ஒருவழியாக வயிற்றுப் பிரச்சினை தீர்ந்தது.. ஆனால் வயிற்றுப் பிரச்சனை முடிந்த போது தான்.. என் காது எனக்குப் பிரச்சினைக் கொடுக்க ஆரம்பித்தது.

ஆம்! நான் தமிழ் கேட்டு ஒரு வாரத்திற்கும் மேல் ஆகிறதே! ஏ! ஏ! என்ன ஆச்சு எனக்கு ? என்று என் உள்ளம் பாடத் தொடங்க என் கைகள் சும்மா இருக்குமா ? அருகிலிருந்த என் லேப் டாப் கம்ப்யூட்டரில் தமிழ்ப் பாடல்களைத் தட்டிவிட்டது.

என் பின்புறம் சுமார் 4புட் தொலைவில் இருந்து வந்தது அந்தக் குரல்!!!!

வாட் ஈஸ் திஸ் யார்! காமன் சாங்ஸ் ப்ளீஸ்!

ஏ! ப்ளீஸ்! ரஹ்மான் ‘ஸ் லேட்டஸ்ட் சாங் யார்! என்ற என் விண்ணப்பத்திற்கு மற்ற இருவரும் செவி சாய்க்கவில்லை.எதுவும் பொது தான் என்று சொன்னது மட்டுமில்லாமல் அதிலொருவன் என் கையிலிருந்த லேப் டாப்பைப் பிடுங்கி கிஷோர் குமார் பாடல்களைப் போட ஆரம்பித்தான்.

எனக்கு இதில் இம்மியளவும் சம்மதமில்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் நான் மட்டும் தனியாக அந்த லேப் டாப்பில் தமிழ்ப் பாடல்களைப் போட்டு ஹெட் போன் வைத்து தனியே காதுகுளிர ரசித்துவிட்டு உறங்கியது தனிக்கதை.

அடுத்தநாள்- ச்ச! தேவையில்லாமல் அவர்களைப் போய் தமிழ்ப் பாடல் கேட்க வைத்தது நம் தவறு தான் என்று என் தவறுக்கு நானே வருந்திக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த நேரத்தில் தான் அவர்கள் இருவரில் ஒருவனுக்கும் எனக்கும் ஒரு சின்ன பிரச்சனை சமையல் ரூபத்தில் வந்தது.

தினமும் நான் தான் சமைக்க வேண்டுமா ? நீ எப்போது சமைக்கப் போகிறாய் ? என்று நான் ஆரம்பித்ததை –

அப்படி என்றால் காலையில் இனி உன்னை எழுப்ப மாட்டேன் ? உனக்கு இனி காலையில் சாதம் வைக்க மாட்டேன் ? என்று சதாம் உசேனைப் போலச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்….

என்னடா இது! கல்லூரி வாழ்க்கையை விட மோசமாக அடித்துக் கொள்கிறோமே ? இனி விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும் என்று எனக்கு அன்று மாலையில் ஞானோதயம் வர … சரி வீட்டிற்கு வந்தவுடன் அவனிடம் இனி சண்டை போட வேண்டாம் என்று நினைத்து வந்தேன்….

அப்போது அவன் மற்றொருவனுடன் தன் மொழியில் வேகமாக பேசிக் கொண்டிருந்தான்… அது மட்டுமல்லாமல்… அவன் என்னைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான்.. நமக்குத் தான் எந்த ஊர் சென்றாலும் அந்தந்த ஊர்களில் பேசும் ‘அந்தந்த ‘ வார்த்தைகள் எல்லாம் தெரிந்து கொள்வது வழக்கமாயிற்றே ? ? இருந்தாலும் எதுவும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

நாட்கள் நகர்ந்தது.. இப்போது எல்லாம் அலுவலக வேலை மிகவும் அதிகமானது.. காலையில் எழுந்ததும் அலுவலகத்திற்குச் சென்றுவிடுவதும்… இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து சமைத்து உண்டு உறங்குவதுமாக கடந்த இரண்டு வாரங்கள் ஓடின. ஆனால் இந்த இரண்டு வாரங்களிலும் அவர்களிடையே நட்புறவு பலமாக வளர்ந்திருந்தது… ஆரம்பத்தில் மூவரும் ஒன்றாக இருக்கும் போதெல்லாம் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்த அவர்கள் தற்போது முழுக்க முழுக்க தங்கள் மொழியிலேயே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

வார இறுதியில் பொழுதைக் கழிக்க இந்தியன் ஸ்டோர்ஸ்க்குச் சென்று புதிதாக வந்திருந்த இரண்டு ஹிந்திப் படங்களை எடுத்து வந்திருந்தார்கள். நான் என் ஆசைக்கு ஒரு தமிழ்ப் படம் எடுத்துக் கொள்ளட்டுமா என்று அவர்களைக் கேட்க உடனே மறுத்து விட்டார்கள். எங்களிடம் ஒரே ஒரு கார் தான் இருந்தது. எவனொருவன் ஏற்கனவே அமெரிக்காவிற்கு வந்திருந்தானோ அவனிடம் மட்டுமே லைசன்ஸ் இருந்தது…. எங்கள் இருவரிடமும் லைசன்ஸ் இல்லை. இந்தக் குளிரில் நடந்து வெளியே செல்வது என்பது முற்றிலும் முடியாத ஒன்று … எப்பொழுதும் மைனஸ் செல்சியஸிலே வெப்பநிலை(குளிர் நிலை) இருந்து வந்தது. அடிக்கடி பனிமழை பெய்வதும் சாலை முழுவதும் எட்டு ஒன்பது இன்ஞ்சிற்கு பனி சாலையை மூடிவிடுவது வழக்கமாக இருந்ததால் கார் இல்லாமல் வெளியே செல்வது இயலாத ஒன்றாக இருந்தது.

என் இயலாமையின் காரணத்தால் என் மீது வெறுப்பு உண்டானது. கடவுள் உலகத்தில் எப்பொழுதுமே பனி பெய்து கொண்டிருக்கும் ஊர் ஒன்றை ஏன் படைக்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் கடவுளின் மீதும் கோபம் வந்தது.

அடுத்த நாள் கேசட்டுகள் திரும்பக் கொடுக்க வந்தபோதும்.. நான் கமலஹாசனின் தீவிர ரசிகன்… இந்தப் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சின்னக் குழந்தை பஞ்சுமிட்டாய்க்கு அடம்பிடிப்பது போல் அடம்பிடிக்க ஆரம்பித்ததும்.. அவர்கள் கடைசியாக ஒப்புக் கொண்டார்கள்…

வீட்டில் வந்து தனியாக மூன்று மணி நேரம் உட்கார்ந்து படத்தைப் பார்த்ததும் தான் என் ஆத்திரம்(ஆசை) அடங்கியது. ஆனால் இந்த படம் பார்ப்பதற்குள் அவர்கள் அடித்த கமெண்ட்டுகள் இருக்குதே ? யப்பா! எதுக்குடா! எடுத்து வந்தோம் என்று இருந்தது.

ஒன்றாக இருந்துவந்த எங்களின் நடுவில் இந்த மொழி சின்ன நிலநடுக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நானும் எவ்வளவோ கட்டுப் படுத்தினாலும்… தமிழ்ப்ப்டங்களைப் பார்க்காமல்.. பாடல்கள் கேட்காமல் இருக்க முடியவில்லை.. இந்த நாட்களில் எங்களிடம் இருந்த சில பொதுவான விருப்பங்கள் என்றால் அமெரிக்காவின் நூலகங்களில் இருந்த வீடியோ கேசட்டுகளைப் பார்ப்பது.. எங்கள் அலுவலகத்திற்கு சிலன் டியோன் வந்தபோது கொடுத்த சி.டியைத் திரும்ப திரும்பக் கேட்பது போன்ற சிலவை தான்.. இவை தான் எங்களுக்கிடையே இருந்த மைல் கணக்கிலான விரிசல்களை இன்ஞ் அளவிலாவது குறைத்தது.

இந்த சனிக்கிழமை காலை வழக்கம் போல நான் பதினொரு மணிக்கு எழுந்திருந்தேன். அப்போது தான் இவர்கள் இருவரும் அக்னிவர்ஷா என்றொரு படம் பார்க்க ஆரம்பித்தார்கள். நம்ம ஊர் பிரபுதேவாவும் இதில் நடித்திருந்தாலும் படத்தை மூன்று மணி நேரம் உட்கார்ந்து பார்ப்பது என்பது என்னால் சுத்தமாக முடியவில்லை. அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல இந்த முறை என் கஷ்டத்தைச் சொல்ல ஆரம்பித்துவிட்டேன். இந்த பாருங்கப்பா ! என்னால மூன்று மணி நேரம் உட்கார்ந்து ஹிந்தி படத்தை எல்லாம் பார்க்க முடியலை. ஒரே போர் என்று. அது கடைசியாக சண்டையில் போய் முடிந்தது. சண்டை காரசாரமாகிவிட்டது. நான் கடையில் நீங்கள் ஒரு ஹிந்திப் படம் பார்த்தால்… நான் அதற்குப் பதில் ஒரு தமிழ்ப் படம் பார்ப்பேன் என்று சொன்னேன்.

டி.வி என்பது மூவருக்கும் பொது! நீ ஒரு தமிழ்ப் படம் பார்த்தால் நாங்கள் மூன்று மணி நேரம் எப்படி சும்மா உட்கார்ந்திருப்பது!

எனக்கும் அதே பிரச்சனைதானே ! உங்களுக்கு ஏன் அது புரியவில்லை ?

லுக்! எங்கள் தாய்மொழி ஹிந்தி அல்ல… இருந்தாலும் நாங்கள் ஹிந்திப் படம் ஏன் பார்க்கிறோம் – உனக்கும் புரியுமே என்பதால் தான் ? ஆனால் நீயோ ……

அதுவரை சிந்திக்காமலே இருந்த என் மூளை முதன் முறையாக சிந்திக்க ஆரம்பித்தது. தங்கள் தாய்மொழியை விட்டுவிட்டு எனக்காகத் தான் இவர்கள் ஹிந்திப் படம் பார்க்கிறார்களா ? எனக்காக விட்டுக் கொடுப்பவர்களா இவர்கள் ? இல்லை இவர்கள் மொழியில் நல்ல படங்கள் இல்லையா ? பலவாறு யோசித்ததில் அவர்கள் மீதிருந்த கோவம் முழுமையாக என்னை விட்டு விலகியது.

சண்டை போட்ட மூவரும் ஒன்றாகச் சேர்ந்து பழைய படி வாழ்க்கையை ரசித்து வாழத் தொடங்கினோம். அன்றிலிருந்து இதுவரை எங்களுக்குள் ஒரு சின்ன சண்டை கூட மொழி காரணமாக வரவில்லை.

ஆனால் நாங்களோ அன்றிலிருந்து ஆங்கிலப் படங்களை மட்டும் தான் பார்த்து வந்தோம்.

கே ஆர் விஜய்

vijaygct@yahoo.com

Series Navigation