இரண்டாம் பீஷ்மன்

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

பாரதிராமன்


காட்சி: 1

காலம்: மகாபாரதக் காலம்,ஓர் இரவுப் பொழுது.

களம் : அஸ்தினாபுர அரண்மனைத்தோட்டம்.

கதை மாந்தர் : துரோணர், அர்ச்சுனன்

அர்ச்சுனன் இருளில் விற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறான். துரோணர் தீவட்டி வெளிச்சத்துடன் அவனை நோக்கி வருகிறார்.

துரோணர்: அர்ச்சுனா, வில்லின் நாண் உன் உள்ளங்கையில் உராய்ந்த ஒலி கேட்டு இங்கே வருகிறேன். இவ்விருளில் என்ன செய்துகொண்டிரு- க்கிறாய் வீரனே ?

அர்ச்சுனன்: வணக்கம் குருதேவா!விற் பயிற்சிதான் செய்து கொண்டிரு க்கிறேன். அன்றொரு நாள் இரவில் உணவருந்திக்கொண்டிருக்கும்போது

காற்றடித்ததில் விளக்குகள் அணைந்து போயின. ஆனால் நான் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. என் கை வாயைத்தவிர வேறிடத்தில் செல்லவில்லை. அதேபோல உணவை எடுத்த இடத்திலும் கை மாறவில்லை. இதற்கெல்லாம் காரணம் தினம் உண்டதால் ஏற்பட்ட கைப்பயிற்சிதானே என்று உணர்ந்தேன். அதே பயிற்சியை வில்லிலும் இரவில் தொடர எண்ணியே இங்கே வந்தேன். தங்களிடம் கூறாமல் வந்துவிட்டதை மன்னிக்க வேண்டுகிறேன்.

துரோணர்: ( அர்ச்சுனனைத் தழுவிக்கொண்டே) மகிழ்ச்சி, அர்ச்சுனா மெத்த மகிழ்ச்சி. உன்னைப்போன்ற சிறந்த பயிற்சி உடையவனைக் காணேன். இனி உலகில் உனக்குச் சமமான வில்லாளி இல்லை எனும் அளவுக்கு உனக்குப் பயிற்சி தரப்போகிறேன். இது உண்மை.

அர்ச்சுனன்: நன்றி குருதேவா! நான் பெரும் பாக்கியம் செய்தவன்! அதற்கான தகுதி எனக்குண்டாக ஆசீர்வதியுங்கள் பெருமானே!

துரோணர்: அங்ஙனமே ஆகுக, என் பிரிய சீடனே!

காட்சி:2

காலம்: ஒரு பகல்

களம் : துரோணர் இல்லம்

கதை மாந்தர் : ஏகலைவன், துரோணர்

ஏகலைவன்: வணக்கம் குருதேவா!

துரோணர்: யாரது மகனே, உன் தேடல் யாது ?

ஏகலைவன்: குருதேவரே, பக்கத்துக்காட்டில் வாழும் வேடர்களின் தலைவனான இரண்யதனுஸ் என்பவரின் மகன் நான். என் பெயர் ஏகலைவன். வில் வித்தையைச் சிறப்பாகக் கற்றுக்கொள்ளவிழைகிறேன். அவ்வித்தையைக் கற்பிப்பதில் தங்களைவிடச் சிறந்த ஆசிரியர் எவரும் இலர் என்று கேள்விப்பட்டு த் தங்களையே குருவாக வரிக்க வந்திருக்கிறேன். என்னையும் தங்கள் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக் கடாட்சிக்கவேண்டும் மகாகுருவே! (மீண்டும் வணங்குகிறான்)

துரோணர்: எழுந்திரு வேடன் மகனே! கல்வி தேடி குருவை நாடி வந்தவனை உதாசீனப்படுத்தக்கூடாது. ஆனால் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கே எனக்கு நேரம் காணவில்லை. என்றாலும் உன்னையும் என் சீடனாகக் கருதுகின்றேன். எப்போதும் விற்பயிற்சி செய்பவனாய் இரு. அதில் மிக்க பலம் உள்ளவனாவாய். இப்போது வீட்டிற்குத் திரும்பச்செல். என் மனமார்ந்த ஆசிகள்.

ஏகலைவன்: தங்கள் கட்டளைப்படியே ஆகட்டும் குருதேவா! (வணங்கித் திரும்புகிறான்)(மனதுக்குள்): தங்களையே குருவாக வரித்து தங்கள் பதுமையின் முன் என் பயிற்சிகளை ஆரம்பிப்பேன், வழிகாட்டுவீராக!

காட்சி:3

காலம்: சில மாதங்கள் கழித்து ஒரு பகல்

களம் : துரோணர் இல்லம்

கதை மாந்தர்: துரோணர், அர்ச்சுனன்

அர்ச்சுனன்: (துரோணரைப் பார்த்து) வணக்கம் ஐயனே! ‘உனக்கு மேம்பட்ட சீடன் எனக்கில்லை ‘ என்று என்னைத் தழுவிக்கொண்டு ஒரு முறை அன்புடன் கூறி இருக்கிறீர்கள். அப்படியிருக்க தங்களுக்கு என்னைவிட மேம்பட்ட சீடன் ஒருவன் இருக்கிறானே, அதெப்படி குருவே ?

துரோணர்: என்ன கூறுகிறாய் அர்ச்சுனா, சற்று விளக்கமாய்ச் சொல்.

அர்ச்சுனன்: குருதேவா, நேற்று உங்களிடம் அனுமதி பெற்று நாங்களும் கெளரவர்களும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றோமில்லையா ? எங்கள் பின்னால் வந்துகொண்டிருந்த நாய் ஒன்று பலமாகக் குரைத்துக்கொண்டே ஒரு கரிய வேடுவச் சிறுவனை நோக்கி ஓடியது.ஆனால் சிறிதே நேரத்தில் ஏழு பாணங்களால் நிரப்பப்பட்ட வாயுடன்

குரைக்கமுடியாமல் அந்நாய் எங்களிடம் ஓடி வந்தது. யார் இவ்வளவு திறமையுடன் அம்புகளை எய்தார்கள் என்று அவ்வேடச்சிறுவனைத்தேடிக் கேட்டதில், ‘ வீரர்களே, நான் இரண்யதனுஸ் என்பவனுடைய மகன். என் பெயர் ஏகலைவன்.தனுர் வேதத்தில் பயிற்சி பெற்றுவருகிறேன். துரோணரின் மாணவன் நான் ‘ என்று அவன் பதில் கூறினான். இப்போது கூறுங்கள், குருதேவரே, அவன் எவ்வாறு உங்கள் சீடனானான், எப்போது விற்பயிற்சி பெற்றான், எங்களுக்கும் தெரியாத வித்தைகளை அவன் எப்படிக் கற்றான் ?

துரோணர்: வீரனே, அவசரப்பட வேண்டாம். என்னுடன் வந்து அவனைக் காட்டு. அவன் முன்னிலையிலேயே நீதான் என் அத்யந்த சீடன் என்பதை நிரூபிக்கிறேன். வா, செல்லலாம்.

காட்சி:4

காலம்:மாலை.

களம் :வனம்

கதை மாந்தர்: துரோணர், அர்ச்சுனன், ஏகலைவன்

ஏகலைவன் துரோணரைப் போன்று மண்ணால் செய்யப்பட்ட பதுமையின் முன் வணங்கிவிட்டு தொடர்ந்து அம்புகளை எய்தவண்ணம் விற்பயிற்சியில் இருக்கிறான். துரோணர் வருவதைக்கண்டவுடன் ஓடிவந்து அவர் பாதங்களில் விழுந்து வணங்குகிறான். ஏகலைவன்: வணக்கம் குருதேவரே, நான் தங்கள் சீடன் ஏகலைவன். தங்கள் கிருபையால் தனுர்வித்தை ஒரளவு கைவரப் பெற்றிருக்கிறேன். மேலும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.அருள்பாலியுங்கள் குருநாதரே!

துரோணர்: மகிழ்ச்சி ஏகலைவனே, உன் திறமை கண்டு போற்றுகிறேன். அதிருக்கட்டும்; நீ என் சீடன் என்றால் எனக்கு குரு காணிக்கை கொடுக்கவேண்டுமல்லவாஅப்போதுதானே கற்ற வித்தைக்குப் பலன் உண்டாகும் ?

ஏகலைவன்: பெருமானே, நான் என்ன கொடுக்கவேண்டும் ?கட்டளை இடுங்கள்!

துரோணரின் முகம் நிறம் மாறுகிறது.தன் வஞ்சக எண்ணத்தை மறைத்து,

துரோணர்: என் பிரிய சீடனே, குரு காணிக்கையாக உன் வலக்கைக் கட்டை விரலைத் தருவாயா ?

ஏகலைவன்: குருதேவரே, என்னவோ என்று பயந்துபோய் விட்டேன். இதோ உங்கள் காணிக்கை, ஏற்றுக்கொள்வீர்களாக!(இவ்வாறு கூறிக்கொண்டே தன் வலக்கைக் கட்டை விரலை வெட்டி துரோணரிடம் தருகிறான் ஏகலைவன். துரோணரும் வாய்ப் பேச்சற்றவராக கைகளை உயர்த்தி ஏகலைவனை ஆசீர்வதித்தவண்ணம் அர்ச்சுனனைப் பார்க்கிறார், ‘உன் போட்டியை ஒழித்துவிட்டேன் பார்த்தாயா ‘ என்ற குறிப்பு தோன்ற)

அர்ச்சுனன்: ஏகலைவா, என்னே உன் குரு பக்தி! நீ நீடூழி வாழ்க! உன் வித்தையும் வாழ்க!

காட்சி: 5

காலம்:சில வாரங்கள் கழித்து ஒரு மாலை.

களம் :துரோணர் இல்லம்

கதை மாந்தர்:அர்ச்சுனன், துரோணர்.

அர்ச்சுனன் பதறிக்கொண்டே ஓடி வருகிறான். துரோணரைப் பார்த்து அர்ச்சுனன்: நாம் மோசம் போய்விட்டோம் குருதேவா! ஏகலைவன் உங்களை ஏமாற்றிவிட்டான்.

துரோணர்: என்ன பதட்டம் இது அர்ச்சுனா, எதைக் கண்டு இந்த முடிவு ?

அர்ச்சுனன்: ஆம் குருதேவரே, இன்னொரு முறையாக இப்போதுகூட ஏகலைவனின் வில் திறனை நான் பார்க்கநேர்ந்ததே காரணம். நேற்றிரவு ஏகலைவன் கானகத்தினோரம் ஒரு பசுவைக் கொல்ல வந்த புலியின் வாயை அம்புகளால் கட்டி விரட்டியடித்த விந்தையை நட்சத்திர ஒளிக்கிடையே நான் கண்டேன். இருளிலும் சப்தங்களைக்கேட்டே அம்பைக்குறி வைக்கும் திறனை அவனிடம் பார்த்தேன். ஆனால் அவனிடம் நேரில் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். இது எப்படி சாத்தியமாயிற்று அவனுக்கு ? அவன் எதோ ஏமாற்று வேலை செய்திருக்கிறான் என்றே நினைக்கிறேன் குருதேவா!

துரோணர்: இருக்காது வீரனே, என்னை நம்பு. என் சீடர்கள் எவரும் பொய்யர்கள் அல்லர். இன்னமும் நீதான் என் தலையாய சீடன். எனினும் நீ கூறியது என்னை சங்கடப்படுத்துகிறது. நாமிருவரும் நாளை ஏகலைவனைச் சந்தித்து உண்மையை அறிவோம்.அதுவரை பொறுமை காத்திரு.

அர்ச்சுனன்: குருதேவா, என்னைவிடச் சிறந்த வில்லாளி என்னிடம் ஏற்படுத்திய மன உளைச்சலில் தங்கள் மனதை சங்கடப்படுத்தியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள் பெருமானே!

துரோணர்: சென்று வா வீரனே, வீரம் வெல்லட்டும்!

அர்ச்சுனன் வணங்கி விடை பெறுகிறான்.

காட்சி:6

காலம்: மறு நாள் காலை

களம் :கானகம்

கதை மாந்தர்: ஏகலைவன், துரோணர், அர்ச்சுனன்

ஏகலைவன் குருவின் பதுமையின் முன் வணங்கி கண்களை மூடித் தியானத்தில் இருக்கிறான். துரோணரும் அர்ச்சுனனும் வரும் சலசலப்பு சத்தம் கேட்க, கண் திறந்து துரோணரைப் பர்த்துவிட்டு அவரை வணங்குகிறான்.

துரோணர்(ஏகலைவனைப் பார்த்து): வாழ்க குழந்தாய்,ஒன்பது விரல்களைக் கொண்டு கைகூப்பி வணங்கும்படி உன்னைச் செய்துவிட்டேனே,என் விபரீதகோரிக்கையை பொறுத்துக்கொள்வாயாக! இன்னமும் உன் வில் வித்தை ஆசை போகவில்லைபோலிருக்கிறதே. நேற்று முன் தினம் இரவு நீ ஒரு புலியின் வாயைக்கட்டி விரட்டியதை அர்ச்சுனன் பார்த்தானாம். என்னிடம் சொன்னான். வலக்கை கட்டைவிரல் இழந்தும் இது எப்படி சாத்தியமாயிற்று என்று எனக்கே வியப்பாக இருக்கிறது!

ஏகலைவன்: குருதேவரே! உங்கள் பரிபூரண ஆசி இருக்கும்போது எதுதான் சாத்தியமாகாது ? மேலும் நீங்கள் வலக்கை கட்டை விரலைத் தானே பெற்றுப்போனீர்கள் ? நான் இடக்கைப் பழக்கம் உள்ளவனாயிற்றே! அதனால் என் வில் வித்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை; இனியும் இருக்காது.அது இருக்கட்டும், தாங்கள் இப்போது என்னைக் காண வந்த காரணம் நான் அறியலாமோ பெருமானே ?

எகலைவன் கூற்றைக் கேட்ட துரோணரும் அர்ச்சுனனும் திகைத்துப் போகிறார்கள்.முகத்தில் குற்ற உணர்வுடன், துரோணர்: என்னை மன்னித்துவிடு , என் பிரிய சீடனே, நான் முதலிலேயே உன்னிடம் உண்மையைக் கூறியிருக்கவேண்டும். அர்ச்சுனன்தான் என்றும் என் சிறந்த சீடன் என்று அவனிடம் வாக்களித்திருந்தேன். ஆனால் சத்திரியனான அவனைவிட வேடனான நீ வில் வித்தையில் சிறந்து விளங்குவதை அவனால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. என் வாக்கும் பொய்த்துப்போய் விடும்போலிருந்தது. எனவேதான் உன்னைச் செயலிழக்கச் செய்ய உன் வலக்கை கட்டைவிரலைக் காணிக்கையாகப் பெற்றேன். ஆனால் என் பொய் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது.உன் இடக்கைப் பழக்கம் உன் வித்தையைக் காப்பாற்றிவிட்டது. (அர்ச்சுனனைப் பார்த்தவாறே) அர்ச்சுனனும் என்னை மன்னிக்கட்டும்! நான் வருகிறேன்.(திரும்ப யத்தனிக்கிறார்)

ஏகலைவன் (அவரை இடைமறித்து) :குருசிரேஷ்டரே,அபசாரம்,அபசாரம். இவ்வார்த்தைகள் தங்கள் திருவாயிலிருந்து வரலாமா ? தாங்கள் என்னிடம்காணிக்கை கேட்டபோதே தங்கள் நோக்கத்தை நான் உணர்ந்திருக்கவேண்டும். அதற்கேற்ப என் இடக்கைக் கட்டை விரலை தங்களுக்குக் காணிக்கையாக தந்திருக்கவேண்டும். நான் வேட்டுவன்தானே, அரசாளும் சத்தியர்களுக்கும் அவ்ர்கள் பேணும் அந்தணர்களுக்கும் உள்ள சாமர்த்திய புத்தி எனக்கில்லையல்லவா ? இப்போதும் கேளுங்கள். இன்னொருமுறை காணிக்கையாக என் இடக்கை க் கட்டை விரலையும் தரத் தயார்!…….

துரோணர் இடை மறிக்கிறார்: வேண்டாம் குழந்தாய், வேண்டாம். நான் இழைத்த ஒரு குற்றமே போதும்!

அர்ச்சுனனும் இடைமறித்து:நண்பனே ஏகலைவா,போதும். உன் குரு பக்தியையும் விற்திறனையும் கண்டு நான் வெட்கப்படுகிறேன், பொறாமைப்படுகிறேன். என் தகுதி எனக்குத் தெரிந்துவிட்டது. நீ மேலும் உன்னை வருத்திக்கொள்ளவேண்டாம்.

ஏகலைவன்: மன்னிக்கவேண்டும் குருதேவரே! நான் இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும். உங்களுக்கு என் இடக்கை கட்டைவிரலைக் காணிக்கையாக்கிவிட்டு நான் சும்மா இருக்கமாட்டேன். வில் வித்தையின் மேலுள்ள என் ஆர்வம் என்றுமே தீராதது.ஆகவே கை கட்டைவிரல்களை இழந்தாலும் கால் விரல்களால் பயிற்சி செய்ய ஆரம்பிப்பேன். குருவருளால் வெற்றியும் பெறுவேன். ஆனால் குருவின் எண்ணங்களை நிறைவேற்றாத பாவியாகிவிடுவேன். ஆகவே என் கை கால்களில் உள்ள எல்லா விரல்களையுமே உங்களுக்குக் காணிக்கையாக்கத் தயாராகயிருக்கிறேன்.கட்டளை இடுங்கள் குருநாதரே!

துரோணர்(திடுக்கிட்டு ஏகலைவா, என்ன விபரீதம் இது ? எங்களை மேலும் கொடூரர்களாக ஆக்க முயற்சிக்காதே. என் வாக்கு பொய்த்ததாகவே இருக்கட்டும்.அர்ச்சுனனை நான் வேறு வழிகளில் சமாதானப்படுத்துகிறேன். எல்லாம் விதிப்படிஅன்றோ நடக்கும் ? குழந்தாய், உன் குரு பக்தி இணயில்லாதது.எங்களை மீண்டும் மன்னித்துவிடு. நாங்கள் விடை பெறுகிறோம்.

ஏகலைவன்: குருதேவரே, உங்கள் பெரிய மனது எனக்குப் புரிகிறது. ஆனால் என்னைக் கடமை தவறியவனாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய நான் கடமைப் பட்டுள்ளேன். அதை உங்கள் மீது பழியில்லாவண்ணம் என் விரல்களை வெட்டிக் கொள்ளாமலேயே நிறைவேற்றும் வழி உண்டு என்று நினைக்கையில் எனக்கு மகிழ்ச்சி மேலிடுகிறது. உங்கள் வாக்கு பொய்க்காதபடி இனி அர்ச்சுனனே உங்களின் தலை சிறந்த சீடனாக விளங்குவான். ஆம்,இக்கணம் முதல் நான் வில்லைத் தொடமாட்டேன். என் வேட்டுவத் தொழிலுக்காக ஈட்டி,கத்தி,கம்பு, கை போன்றவைகளையே பயன் படுத்துவேன். இது உறுதி, அந்தணரும் சத்திரியரும் அறிய, கானும் வானும் அறிய, என் வில்லும் அம்புகளும் அறிய உறுதி. இச் சபதம்தான் குருவுக்கான என் காணிக்கை. மன மகிழ்வுடன்ஏற்று என்னை வாழ்த்தி அருளுங்கள் முனிபுங்கவரே! (துரோணரின் கால்களில் விழுகிறான்)

துரோணர்(ஏகலைவனை தூக்கி நிறுத்தி மார்புடன் அணைத்து): குழந்தாய் ஏகலைவா! உன் சபதம் என்னை மெய் சிலிர்க்கவைக்கிறது. எவர் வேண்டுமானாலும் என் தலை சிறந்த சீடனாகயிருக்கலாம், ஆனால் குருபக்தியில் எந்தச்சீடனும் உன்னை மிஞ்சமுடியாது. இது சத்தியம். சத்திரியர்களையும், அந்தணர்களையும் இன்று வெட்கப்படச் செய்துவிட்ட வேட்டுவ வீரனே, வீரத்துக்கும் நற்பண்புகளுக்கும் குலம் தடையல்ல என்று நீ நிரூபித்துவிட்டாய்.பிதாமகர் பீஷ்மரும் பொறாமைப் படக்கூடிய இரண்டாவது பீஷ்மன் நீ! வாழ்க உன்னனையோர்! ஐயனே, எங்களுக்கு விடை கொடு!

துரோணரும் அர்ச்சுனனும் வெட்கம் சூழ வெளியேறுகின்றனர்.

திரை.

Series Navigation