இன்னொரு முடிவும் எனக்கு முன்னால்

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

மு ரெங்கம்மாள்


MY life closed twice before its close;
It yet remains to see
If Immortality unveil
A third event to me,
So huge, so hopeless to conceive,
As these that twice befell.
Parting is all we know of heaven,
And all we need of hell.

Emily Dickinson

முடிவதன் முன்பே
இருமுறை முடிந்தது என் வாழ்க்கை.
அழியாத் தருணம் என் முன் இனிமேல்
மூன்றாம் முடிவையும் அவிழ்க்குமா பார்ப்போம்.

பெரிதினும் பெரிதாய், கற்பனைக்கும் அப்பால்
இரு முறை நிகழ்ந்த முடிவினும் பெரிதாய்
நிகழக் கூடும் அந்த மூன்றாவது முடிவு.

சொர்க்கம் பற்றித் தெரிந்தது – பிரிவு மட்டுமே –
நரகம் பற்றித் தெரிய வேண்டுவதும் அதுவே.

எமிலி டிக்கின்ஸன்

முடிவுகள் மரணங்கள்
கனவெனும் சொர்க்கம்.
கனவிலிருந்து விழித்து நனவுலகின் நரகம்.

அழியா வரம் கேட்டு
புவனேஸ்வரியிடம் இறைஞ்சலாம்.

இருந்து என்ன செய்வாய்,
மண்சாலைகள் மாறிவிட்டன
கோயிலின் உள்ளே குழல் விளக்குகள்.

பல் உதிரும்
நரை முதிரும்
தொங்கிப்போன உறுப்புகள்
அருவருப்பைப் பறைசாற்றும்.
சந்தோஷம் அளிக்காத உறவுகள்

மரணம் தினசரி வாழ்க்கை.
வாழ்க்கை பழகிப்போன சிலுவையில்.
பிரிவுக்குப் பயந்து சகிப்பு.
சகிப்பும் ஒரு மரணம்.

இன்று புதிதாய்ப் பிறக்க வழியில்லை.
முடிவுக்குக் காத்திருத்தலும் ஒரு முடிவல்லவா ?

***

Series Navigation