இன்னொரு ஜாதிக் கட்சி உதயம்

This entry is part [part not set] of 7 in the series 20000905_Issue

சின்னக் கருப்பன்.


கண்ணப்பன் என்று ஒருவர் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இவர் முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் இவர்களையெல்லாம் அழைத்து வரவிருக்கிறோம் என்று வேறு சொல்லியிருக்கிறார். யாதவர்கள் என்று இவர்களை ஏன் அழைத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. தூய தமிழான கோனார் என்ற வார்த்தை என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை. கோனார் உரைகளைப் படித்து நல்ல தமிழ் பயின்ற என் போன்றோர் இன்னமும் இருக்கிறோம். இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்பதெல்லாம் போய் இந்திப் பிரதேசத்தின் சாதீய அடையாளத்தைப் பெருமையுடன் மேற்கொள்கிற வரை நாம் வந்திருக்கிறோம் என்பது சமூகவியல் ஆய்விற்கு உட்படுத்த வேண்டியது.

இந்த ஜாதிச் சங்கம் – கட்சி விவகாரத்தைத் தொடங்கி வைத்த ‘பெருமை ‘ ராம்தாஸ் அவர்களையே சாரும். தொடங்கி வைத்த என்று சொல்லமுடியாது தான். அவருக்கு முன்பே கூட ஜாதி இயக்கங்கள் – தேவர் பேரவை, நாயுடு மகாஜன சபை, நாடார் உறவின் முறைச் சங்கம் என்றெல்லாம் இருந்தாலும் கூட அரசியல் தளத்தில் ஜாதியைத் தீவிரமாய்ப் புகுத்தியவர் ராம்தாஸ் தான். முன்பிருந்த ஜாதிச் சங்கங்கள் தம்மால் இயன்ற அளவு தம் ஜாதியினருக்கு சில வசதிகளைச் செய்து தருவதில் ஈடு பட்டன். ஆரிய வைஸ்யச் செட்டியார்கள் ஆங்காங்கு தம் மாணவர் விடுதிகளும், முக்கியமான பிரயாணஸ்தலங்களில் தங்ஙுமிடம் குறைந்த வாடகைக்குத் தருவதுமான சமூக சேவையைச் செய்து வந்தது நல்ல பணிகள். ஆனால், வன்னியர் சங்கம், வன்னியர்களுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் ஒரு பாவமும் செய்யாமல் தேமே என்று நின்று கொண்டிருந்த மரங்களை வெட்டிய புண்ணியவான்களைக் கொண்ட சங்கம். வன்னியர் சங்கம் , பாட்டாளி மக்கள் கட்சியானாலும் கூட இன்னமும் டாக்டர் ராம்தாஸின் மையமான பலம் வன்னியர்களிடையே தான் என்பதும் உண்மை. ‘ வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை ‘ என்ற அருவருக்கத்தக்க கோஷம் இப்போது ‘அன்னியர் ஓட்டு வன்னியருக்கு இல்லை ‘ என்று மற்ற சாதியினரிடமிருந்து எதிரொலியாகக் கிளம்பத் தொடங்கி விட்டது. வன்னியர் பெரும்பான்மையும் உள்ள கிராமங்கள் பலவற்றிலும் தனி கிளாஸ் தாழ்த்தப் பட்டவருக்கு இருப்பதை மாற்ற முடியாத போது, எப்படி தாழ்த்தப் பட்ட மக்கள் பா.ம.க-வைத் தம் கட்சியாக ஏற்பார்கள் ? இப்போது அய்யாவுடன் அம்மாவும், மகனும் கூட வன்னியர்களைக் காப்பாற்ற (யாரிடமிருந்து என்று தெரியவில்லை) கட்சித் தலைமை ஏற்றிருக்கிறார்கள் என்று அறிகிறேன். வன்னியர் நீதிபதி வேண்டும் என்று போராட்டம் நடந்தது. தீர்வு என்னாயிற்று என்று தெரியவில்லை.

முதலியார்களும் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் அரசியல் மாறுதல்களுக்கிடையேயும் கூட , அரசியல் பலத்தை இழந்ததில்லை என்று சொல்கிறார்கள். ‘மணவழகர் ‘ என்பவர் பெயரில் ஓர் இயக்கம் கூட இவர்கள் ஆரம்பித்துள்ளார்கள் என்று அறிகிறேன். யார் இந்த மணவழகர் என்று விசாரித்தேன். திரு வி.கல்யாண சுந்தரம் பெயரைத் தான் தமிழாக்கி யிருக்கிறோம் என்று சொன்னார்கள். திரு வி.கல்யாண சுந்தரமே தன் பெயரைத் தூய தமிழ் என்று தான் கருதிக் கொண்டிருந்தார். அவர் அனுமதியில்லாமலே அவர் பெயரையும் தமிழையும் கொலை செய்கிறவர்களை என்னவென்று சொல்ல ? கல்யாண சுந்தரம் என்பதன் பொருள் திருமணம் செய்து கொண்ட சுந்தரம் என்பதல்ல. கல்யாணம் என்கிற பேச்சு வார்த்தைத் தமிழுக்கு முன்பேயே புழங்கின வார்த்தை கல்யாண சுந்தரம். ‘கல்யாண ‘ என்பதற்கு ‘நல்ல ‘, ‘சிறப்பான ‘ என்றெல்லாம் தான் பொருளே தவிர ‘திருமணம் ‘ என்பது பொருள் அல்ல. திரு வி.க. என்ற மகத்தான தமிழரை, முதலியார் இயக்கத்திற்குப் பெயர் சூட்டப் பயன் படுத்தும் மனிதர்களை விடக் கேடு கெட்டவர் யாருமில்லை. அவர் முதலியார் நன்மைக்கு மட்டும் பாடுபட்டவர் இல்லை. சிறந்த தொழிற்சங்க வாதி. தமிழின் உரைநடையில் சாதனைகள் புரிந்தவர். அவரையும் சாதித் தலைவராய்க் குறுக்கி விட்டார்களே ?

தேவேந்திர குல வேளாளர்க்கு இரண்டு கட்சிகள் உள்ளன. ஒன்று ஜான் பாண்டியனுடையது. (ஜான் பாண்டியன் எப்படி தேவேந்திர குல வேளாளர் ஆனார் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிர் தான். ஏசுநாதரும் திருச்சபையும் கோபித்துக் கொள்ள மாட்டார்களோ ? ) இன்னொன்று டாக்டர் கிருஷ்ண சாமியினுடையது. பள்ளர் சமூகத்தினர் தம்மை இந்தப் பெயரால் அழைக்கிறார்கள் என்று அறிந்தேன். வேளாளர் என்கிற பெயருக்கு உழுதுண்டு வாழும் இவர்களல்லாமல் வேறு யாரைத் தகுதி என்று சொல்ல முடியும் ?. ஐம்பது வருடங்களுக்கு முன்பு தேவேந்திர குல வேளாளர் மாநாட்டில் பேசிய பெரியார், இந்தப் பெயர் சூட்டிக் கொள்வதை விமர்சனம் செய்திருக்கிறார். அவர் விமர்சனம் வேளாளர் என்பதைப் பற்றியதல்ல. தேவேந்திரன் பெயரைச் சுமப்பது பற்றி.யது அவர் விமர்சனம். கடவுளர்களுக்கு எதிரியல்லவா அவர் ? ஆனால் ஜாதியின் பெயரால் ஒன்று சேரும் தார்மீகக் கடமையும் உரிமையும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

அதில்லாமல் முக்குலத்தோர் கூட மூவேந்தர் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கும் ஒரு டாக்டர் தான் தலைவராம். டாக்டர்களுக்கும், சாதிக் கட்சிகளுக்கும் அப்படி என்ன பாந்தமோ தெரியவில்லை. செங்குந்த முதலியார்களும் தனி இயக்கம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் இந்தக் கட்சிகள் எவையும் தம்மை ஜாதிக்கட்சி என்று அழைத்துக் கொள்கிற நேர்மையை மட்டும் வெளிப்படுத்துவதே இல்லை. ‘இனம் ‘ என்று ஜாதிக்கு வேறு ஓர் நாமகரணம் செய்து விட்டார்கள். இதில்லாமல், எல்லாக் கட்சி பெயரிலும் தமிழ், தமிழ் நாடு, தமிழகம் நுழைந்து விடுகிறது. அதில்லாமல் இந்தக் கட்சிகள் எல்லாமே பெரியார் புகழ் பாடுபடுகின்றன. ‘வருணாசிரமத்தையும் ‘ , ‘பார்ப்பனீயத்தையும் ‘ சாடுகின்றன. சிரிக்காதீர்கள் , இது உண்மை.

இந்தப் பிரசினை முடிவு பெறும் என்று தோன்றவில்லை. சொல்லப் போனால் , எல்லா ஜாதிச் சங்கங்களும் ஒரு முறை உருவாகி, பல கூறுகளாய்ப் பிளவுண்டு – இந்தப் பிளவுகளைச் செய்ய கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் காத்திருக்கிறார்கள் – தானே நசிந்து போகும் என்று தான் தோன்றுகிறது. ஆனால் குறுகியகாலத் திட்டங்களில் ஒன்றாக, ஜாதியை முன்னிறுத்துகிற அரசியல் தீவிரமாய்த் தான் நடக்கும். இந்த உண்மையை ஒப்புக் கொண்டு அரசாங்கம் ஜாதிவாரி மக்கள் தொகை மற்றும் வருமான வசதிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் பல ஆச்சரியங்கள் வெளி வரலாம். எம்.ஜி,ஆர் காலத்தில் ஜாதிகள் தத்தம் விகிதாசாரத்தின் படி இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய போது எல்லாரையும் எவ்வளவு பேர் உங்கள் ஜாதி என்று கேட்டுக் கொண்ட போது, அவரவர் தத்தம் ஜாதி ஜனத்தொகையைக் கூட்டிப் பார்த்தால், கடைசியில் தமிழ் நாட்டின் ஜனத்தொகை 18 கோடியைத் தாண்டிய கூத்து பலருக்கு நினைவிருக்கும்.

ஜனத்தொகை வாரியாக ஒதுக்கீடு தருவதிலும் தவறில்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஒதுக்கீடு என்பதை அடிப்படையான சமூக நீதிப் பார்வையாய் எல்லாக் கட்சிகளுமே ஒத்துக் கொண்டு விட்டபின்பு , இது தான் தர்க்க ரீதியான தீர்வாக இருக்க முடியும். அப்படி ஒன்று நேர்ந்தால் என் ஜாதிக்கு நான் தலைவனாக்கும், நான் தான் உங்களுக்கு வழிகாட்டி, தானைத் தலைவன் , உங்கள் நன்மைக்காக்ப் போராடுகிறேன் என்றெல்லாம் சவடால் விட்டுக் கொண்டு, ஜாதிக் கலவரங்களில் தலைவர்கள் குளிர் காய்வது குறையும்.

 

 

  Thinnai 2000 September 5

திண்ணை

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்