இந்த வாரம் இப்படி – சூன் 9 2002 (இந்தியாவின் தேசீயப் நாளிதழ், மீண்டும் சைதாப்பேட்டை, மகாராஷ்டிரா இடைத்தேர்தல், கூட்டு ரோந்து)

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

மஞ்சுளா நவநீதன்


*****

இந்து என்றொரு சீன விசுவாசப் பத்திரிகை

இந்து என்றொரு தினசரிப் பத்திரிகை வருகிறது. தமிழ்நாட்டு ‘நடுநிலை நாளேடு ‘கள் போல, இதுவும் India ‘s National newspaper என்று போட்டுக்கொள்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இது சீனாவிலிருந்து வருகிறதா இல்லை சென்னை அண்ணா சாலையிலிருந்து வருகிறதா என்று தெரியவில்லை. தம்முடைய ‘ப்ரண்ட்லைன் ‘ இதழில் சீனச் சிறப்பிதழ் வெளியிட்டு இந்தியாவைத் திட்டித் தீர்த்துவிட்டு, திபெத்-தை ஆக்கிரமித்ததன் மூலம் திபெத் நாட்டை சீனா காப்பாற்றியிருக்கிறது என்று எழுதிய ஏடு, இந்த ‘தி இந்து ‘ ஏடு. அதனை முன்பே விமர்சித்து இருக்கிறேன்.

நேற்று ஒரு செய்தி. இது பி டி ஐ – பிரெஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா என்ற செய்தி நிறுவனம் அளித்த செய்தி. ‘ பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில் நுட்பத்தை சீனா அளித்தது . ‘ இது உலகில் எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்.இந்தச் செய்தியை இந்துவே தினசரி வலைப்பகுதியில் ‘கடைசிச் செய்தி ‘ பகுதியில் வெளியிட்டிருக்கிறது. ஆனால் அச்சில் இது வரவில்லை. சீனாவைப்பற்றி இந்தியர்கள் தவறாக நினைத்துவிடக்கூடாது என்று அப்படி என்ன இந்த செய்திகளை இருட்டடிப்புச் செய்ய வேண்டும் ? இது இதன் முதல் இருட்டடிப்பு அல்ல. இது நான் தொடர்ந்து பார்த்து வரும் வழக்கமான விஷயம். சீனாவைக் குறை சொல்வது போல எந்த செய்தியும் வந்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கும் பத்திரிக்கை இந்து. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்திருக்கிறதா என்று பார்க்கிறேன். இல்லை ? ஏன் ? ஒரே காரணம் சீனாவின் அடிவருடியாக ‘இந்து ‘வும் இடதுசாரிச் சார்புள்ள இந்தமாதிரிப் பத்திரிகைகளும் இருக்க வேண்டும் என்கிற அபார விசுவாசம் என்பது தான். (அடிவருடி என்ற வார்த்தையை இடதுசாரிகள் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா என்ன ?) இப்படிப்பட்ட ஒரு சார்புள்ள இந்திய எதிர்ப்புப் பத்திரிகைகளைப் படிப்பதையே தம் அறிவிஜீவித்தனத்தின் அடையாளம் என்று காட்டிக் கொண்டு ஒரு கும்பல் அலைகிறது.

இதே போல் வட கொரியா என்ற நாட்டிலிருந்து பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தைப் பெற்றிருக்கிறது. அமெரிக்காவிற்கு இது தெரியும். வட கொரியாவை ( ஈராக்குடனும், லிபியாவுடனும் சேர்த்து) தீய சக்திகளில் ஒன்றாக இனம் கண்ட அமெரிக்கா இன்று பாகிஸ்தானுடன் கூடிக் குலவிக் கொண்டிருக்கிறது. இந்தியா அமைதி காக்க வேண்டும் என்று உபதேசிப்பவர்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

****

மீண்டும் சைதாப்பேட்டை இடைத்தேர்தல் சமாச்சாரம்.

ஸ்ரீவி. அரங்க சடகோபன் அவர்கள் தினமணியில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஒரே நேரத்தில் மாநில, மத்திய, உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதால் அரசாங்கப்பணம் (நாம் வரியாகக் கொடுக்கும் பணம்தான்) மிஞ்சும், ஆகவே இடைத்தேர்தலை நடத்தாமல் அந்த அந்தத் தொகுதியில் ஜெயித்த கட்சியினரிடம் அடுத்த ஆளை நியமிக்கச் சொல்லிக் கேட்கலாம். பல நாடுகளில் இப்படித் தான் நடக்கிறது.

இப்படிச் செய்தால் அனாவசியமான செலவும் குறையும். நடுநடுவில் இடைத் தேர்தல் நடத்தும் போது பலப்பரீட்சை நடக்கிறது என்ற பெயரில் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு திட்டிக் கொள்வதும் குறையும். அதில்லாமல் முதல்வர் தொடங்கி எல்லா அமைச்சர்களும், வளர்ச்சி வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு தொகுதி வலம் வருமவ்தும் நின்று போகும். இடைத்தேர்தல் அபத்தங்களைப் பார்க்காமல் ஏதாவது செயல் திட்டங்கள் நடக்க வழி இருக்கிறது.

***

இனி வரப்போகும் இடைத்தேர்தல்

மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனைக் கூட்டு காங்கிரஸ், பவார் கட்சிக்கூட்டை உடைத்துவிடும் போலத்தான் தோன்றுகிறது. வித்தியாசமான கட்சி என்று ஓட்டுக்கேட்டுவந்த பாஜக, இன்று கழுதை தேய்ந்து காங்கிரஸாக ஆகிக்கொண்டு வருகிறது. ஒவ்வொரு எம் எல் ஏவுக்கும் விலை வைத்து வியாபாரம் நடந்துகொண்டு இருப்பது போலத்தோன்றுகிறது. (பெங்களூர் கடத்தல் ஞாபகம் இருக்கிறதா ? அதுபோல ஏறத்தாழ நடந்துகொண்டு இருக்கிறது)

காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு பாஜகவுக்கு ஓட்டுப்போட இன்னொரு காரணம் கிடைத்துவிடும். (ஆட்சிகவிழ்ப்பதிலும், எம் எல் ஏக்களை விலைக்கு வாங்குவதிலும் காங்கிரசுக்கு ஈடு இணை ஏதும் இல்லை, என்பதை போஸ்டராகவே அடிக்கக்கூடியவர்கள் அவர்கள்) கூடியவிரைவில் ஒரு காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும் ஒரு காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாகவும் இருக்கும் போல. சோனியா காங்கிரஸா அல்லது வாஜ்பாய் காங்கிரஸா என்பது தான் கேள்வியாய் மிஞ்சும்.

பா ஜ க காங்கிரஸ் கலாசாரத்தை மிக வேகமாகக் கற்றுத் தேறி வருகிறது.

***

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கூட்டு ரோந்து.

ஒரு புறம் வாஜ்பாய் இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லைப் பகுதியில் கூட்டு ரோந்து என்று சொல்லிவருகிறார். இன்னொரு பக்கம் ஃபெர்னாண்டஸ் கூட்டு ரோந்து ஒத்துவராது என்று சொல்கிறார். கேட்கிற நமக்குத் தான் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது.

இந்த கூட்டு ரோந்து என்ன பலனை விளைவிக்கும் என்று தெரியவில்லை. இதற்கு பாகிஸ்தான் ஒப்புக் கொண்டால், பாகிஸ்தானுக்குத் தான் லாபம். எங்கே ரோந்து பல என்பது தெரிந்து ஊடுரவல் காரர்களைப் பத்திரமாய்க் கொண்டு சேர்க்க உதவும். இந்த சந்தடிசாக்கில் இங்கிலாந்து தன் வீரர்களை ரோந்துக்கு அனுப்பத்தயார் என்று அறிவித்து இருக்கிறது. பங்குப் போட்டு தர குரங்கைக் கூப்பிட்ட பூனைகள் கதை பஞ்சதந்திரத்தில் இருந்தாலும் இன்னும் புரிந்து கொள்ளவில்லை இந்தியர்கள். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதை தன் நாட்டு அடையாளமாகக் கொண்டவர்கள் இந்த பிரித்தானியர்கள்.

காஷ்மீர் பிரச்னைக்கே ஆரம்பம் அவர்கள்தான். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக வெற்றிகரமாக ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இருந்து காஷ்மீர் பிரச்னை தீராமல் பார்த்துக்கொண்டவர்கள் அவர்கள்.

இந்திய எல்லைப் பாதுகாப்பிற்கு இந்தியா தான் பொறுப்பேற்க வேண்டும். கூட்டு ரோந்து, மற்ற நாடுகளின் படை ரோந்து என்பதெல்லாம் நடைமுறைப் படுத்த முடியாத விஷயங்கள்.

***

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation