இந்த வாரம் இப்படி 18 மார்ச் 2001

This entry is part [part not set] of 14 in the series 20010318_Issue

மஞ்சுளா நவநீதன்


ஒழியட்டும் இந்த அரசாங்கம்

இந்தியக் குடிமகனுக்கு நம்பிக்கைகள் மட்டும் குறைவதே இல்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று காங்கிரஸ் , ஜனதா, பாரதீய ஜனதா கட்சி என்று மாறி மாறிச் சந்தர்ப்பம் தருகிறார்கள். ஆனால் இந்தக் கட்சிகள் எல்லாம் வெவ்வேறு முகமூடிகளை அணிந்திருந்தாலும், அடிப்படையில் ஒரே சாதி தான் – அரசியல் வாதி சாதி. எப்படிப் பணம் பிடுங்கலாம், எப்படிப் பணம் பண்ணலாம். வசதியாக கட்சி வளர்ச்சிக்கு நிதி என்று சொல்லிக் கொள்ளலாம். பங்காரு லட்சுமண், ஜெயா ஜேட்லி என்று ஊழல் வெளியே வந்த போது, தஹல்கா டாட் காம் பொய் சொல்கிறது என்று யாருமே சொல்லவில்லை – சதி, காங்கிரஸின் பணம், 10 லட்ச ரூபாய் இன்றைய இந்தியப் பொருளாதாரக் கணக்கில் ஒன்றுமில்லாத தொகை. ஒரு லட்சத்துக்கே பேரம் பேசத் தயாராகி விட்ட இவர்கள் கோடிக் கணக்கில் பணம் புரளும் ராணுவ தளவாட பேரத்தில் எவ்வளவு பணம் பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கவே நடுக்கம் ஏற்படுகிறது.

கடந்த ஐம்பது வருடங்களில் கறுப்புப் பணப் பெருக்கம் ஏராளமான அளவில் ஏற்பட்டுள்ளது. வருமான வரி கட்டாமல் ஏய்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்த ‘கணக்கில் வராத வரவு செலவு ‘ இப்போது இணையான பொருளாதாரமாகப் பூதாகாரமாகி விட்டது. போஃபர்ஸ் ஊழல் இன்னும் ஐம்பது வர்டம் ஆனாலும் முடிவுக்கு வராது என்பதன் காரணமும் இது தான். எல்லாருமே கூட்டுக் களவாணிகள் . ஜெயலலிதா, சோனியா போன்ற அறிக்கை அரசிகள் இதைக் கண்டனம் செய்வது போல கேலி கூத்து கிடையாது. யாருக்கும் வெட்கமில்லை என்று தான் சொல்ல வேண்டும், அந்தப் பெயரில் நாடகம் எழுதிய சோ உட்பட.

************

வேறு வழி என்ன ?

கொதிக்கும் கொப்பரையா ? எரியும் அடுப்பா ? என்பது தான் நமது தேர்வாய் இருக்கிறது. பெரிதும் ஊழல் குற்றச் சாட்டு இல்லாத பலரும் நம்மிடையே இருக்கத் தான் செய்கிறார்கள். இரா செழியன், மம்தா பானர்ஜி, ஜி கே மூப்பனார் , என்று ஆனால் இவர்கள் ஊழல்காரர்களின் தயவை அண்டித் தான் பிழைக்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே இவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரிது ஊழலில் சிக்க வில்லை என்பது உண்மை தான் . தா பாண்டியன், ஜோதி பாசு, நாயனார் போன்றோர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களின் பொருளாதாரக் கொள்கை நாட்டைத் திவாலாக்கி இன்னொரு கியூபா, எதியோப்பியா வாக்கி விடும்.

என்ன தான் செய்வது ? என்ன செய்வதானாலும் இந்த அரசாங்கம் ஒழிந்தே ஆக வேண்டும். புதிய இணைப்புகள் எழட்டும். புதிய தலைவர்கள் வரட்டும். இந்த அரசாங்கம் ஊழல் அரசு மட்டுமல்ல, ஒழுங்காக ஊழல் செய்கிற திறமை கூட இல்லாத அரசு.

*****

சிரிப்பு வருது சிரிப்பு வருது

அறிக்கை விடும் சோனியாவும், ஜெயலலிதாவும் ஒரு பக்கம் சிரிப்பு மூட்டுகிறார்கள் என்றால் , பங்காரு லட்சுமண் நான் தாழ்த்தப் பட்ட சாதியைச் சார்ந்தவன் . என் வளர்ச்சி பொறுக்க முடியாமல் மற்றவர்கள் சதி வலையில் என்னைச் சிக்க வைத்து விட்டார்கள் என்று அறிக்கை விடுகிறார். ஜெயாவும் கூட நான் பணம் வாங்குகிறேன் என்று சொன்னது கட்சிக்காக என்கிறார். கட்டுக் கட்டாகப் பணத்தை வாங்கிப் போட்டுக் கொண்டு விஷயம் வெளீயே வந்த வுடன் கட்சிப் பணம் , தாழ்த்தப் பட்டவன் என்று புலம்புவது , விவேக் காமெடியையும் மிஞ்சி விடும் போலிருக்கிறது.

கிரிக்கெட் ஊழலின் போது அசருதீன் கூட இப்படித் தான் நான் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவன் அதனால் என்னைச் சிக்க வைத்து விட்டார்கள் என்று புலம்பித் தள்ளினார். பிறகு இந்த அறிக்கைக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் இவர்களையெல்லாம் எங்கே வைப்பது ?

*****

குமரி அனந்தனின் கட்சி, சிதம்பரத்தின் இயக்கம்

குமரி அனந்தன் தொண்டர் காங்கிரஸ் என்று ஒன்று ஆரம்பித்து தி மு கவிடம் ஒரு எம் எல் ஏ இடம் பெற்றுள்ளார். சிதம்பரம் தமிழ் மானில காங்கிரஸிலிருந்து கழட்டிக் கொண்டு தி மு கவை ஆதரிக்கிற போக்கில் செல்கிறார்.

குமரி அனந்தன் கா கா தே க-வைக் கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைக்காமல் இருந்திருந்தால் அது இப்போதைய நிலையில் சரியான மூன்றாவது அணியாய் இருந்திருக்கும். சாதிக்கட்சிகளால் நொந்து போன மக்களுக்கும் சரியான மாற்றாய் இருந்திருக்கும். அது நடக்காமல் போய் விட்டது. காங்கிரஸ் என்ற சூனியத்துடன் சேர்ந்து அதுவும் சூனியம் ஆகிவிட்டது. த மா க – சோனியா அடிமைக் கட்சி ஆகிவிட்டது. இந்தத் தேர்தல் முடிந்த பின்பாவது, குமரி அனந்தனும், சிதம்பரமும் , இரா செழியனும் மற்ற உண்மையான மாற்றுக் கட்சிபற்றி சிந்தனை உள்ளவர்களும் இணைந்து கருணா நிதி, ஜெயலலிதா கட்சிகளுக்கு மாற்று உருவாக்க முயல வேண்டும்.

******

வை கோவிற்குப் பட்டை நாமம்.

வைகோ பாவம் . திமுக-வை நம்பிக் கெட்டவர் என்று சொல்லலாம். பா ம க என்ற சாதிக்கட்சியை தாஜா செய்வதற்காக ம தி மு க-வை ஏமாற்றிய கருணா நிதி இந்த முறை , பாமக வெளியேறியதால் தனக்கு உரிய இடம் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த வைகோவின் ஆசையில் மண்ணைத் தள்ளிவிட்டார் கருணா நிதி. பா ஜ கவிற்கு 23 இடங்கள். 4 இடத்திற்குக் கூடத் தகுதியில்லாத கட்சி இது.

கருணாநிதியின் கணக்கு வேறு மாதிரி போகிறது என்று நினைக்கிறேன். ம தி மு க – முழுதுமே தி மு கவின் இரட்டை போன்றது. கொள்கையளவில் தி மு கவிற்கு ம தி மு க-விற்கும் ரொம்பவும் வித்தியாசம் இல்லை என்பதால், அதனை ஊக்குவிப்பது, தி மு க-விற்கு ஆபத்தாய் முடியலாம் என்று அவர் கணக்குப் போடுகிறார் என்று தோன்றுகிறது. பா ஜ க- திமு க விற்கு நேரடியான ஆபத்து இல்லை என்று நம்புகிறார் போலும்.

*********

ஏ என் எஸ் – ஒரு நிஜமான ஜாம்பவான்

தினமணியின் ஆசிரியர் ஏ ன் சிவராமன் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். பத்திரிகையை அறிவுப் பரப்புதலின் சாதனமாய்ப் பயன் படுத்தவேண்டும் என்ற தன் கொள்கையை மாறாமல் நடைமுறைப் படுத்தியவர் அவர்.

********

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்