இந்த வாரம் இப்படி (ஜனவரி 1 2001)

This entry is part [part not set] of 13 in the series 20010101_Issue

சின்னக்கருப்பன்


**

எல்லாவற்றுக்கும் முந்தி , ‘புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ‘.

உண்மையான புத்தாயிரமாண்டு (millenium) நல் வாழ்த்துகளும் கூட.

ஒரு பழைய பாடல் ‘ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம், அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம் ‘ என்று. எழுதியது பாடியது எந்தப்படம் என்று ஞாபகம் இல்லை. பாட்டு ஞாபகம் இருக்கிறது. (எனவே இது என்னைப் பொறுத்தவரை நாடோடிப்பாடல் தரத்தை எட்டி விட்டது என்று சொல்லலாம்)

இதை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும், குறைந்தது ஒரு நாளாவது.

அடுத்த ஜாதியினரை இழிவு படுத்தும் இன்னொரு ஜாதியினர், வேறு மதத்தை திட்டும் இன்னொரு மதத்தினர், வேற்று நாட்டவரை கெடுக்க நினைக்கும் இன்னொரு நாட்டவர் எல்லோரும் நமக்குள்ளேயே இருக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை நாம் யார் என்பதை நாம் தீர்மானம் பண்ணுவதில்தான் இருக்கிறது. நாம் யார் என்று நம்மை நாமே எப்படி அடையாளம் செய்கிறோம் என்று யோசித்துப்பாருங்கள். நம்மை நாம் அடையாளம் கண்டதும், நாம் யாரை எதிர்த்து நிற்கிறோம் என்பதும் உடனே அடையாளம் காணப்படுவதையும் சற்று யோசித்துப்பாருங்கள்.

நாம் யார் என்று நம்மை நாமே அடையாளம் காண்பதும் வெவ்வேறு நிலைகளில் வேலை செய்வதை பார்க்கலாம். நான் உயிர், நான் மனிதன், நான் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன், நான் இந்த குழுவைச் சேர்ந்தவன், நான் இந்த ஊரைச் சேர்ந்தவன், நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன், நான் இந்த மொழி பேசுபவன், நான் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவன், நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன், நான் இந்த உலகத்தைச்சேர்ந்தவன் என்று ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிடலாம்.

அடிப்படையில் எல்லா அடையாளங்களும், நமது உடலில் இருக்கும் ஜீன்கள் (டி என் ஏவில் இருக்கும் ஜீன்கள்) எந்த குழுவில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதோ அந்த அடையாளத்தை தொடர்ந்து தக்கவைக்க நாம் முயல்வதைப் பார்க்கலாம்.

இது சுயநலம் மிக்க ஒரு செயல்தான். ஆனால் அதுதான் நம்மை தன்னலமில்லாமல் போரில் (அது ஜாதிப் போராக இருந்தாலும், இரு தேசங்களுக்கு இடையில் நடக்கும் போராக இருந்தாலும்) நம்மை நாமே காயப்படுத்தி நமது ஜீன் உள்ள உயிர்களை காப்பாற்ற போராட வைக்கிறது.

இது புரிந்து கொண்டால், தமது தோழமை உயிர்களின் நீண்ட வளமான வாழ்க்கையையும், போராட்டமில்லாத ஒரு வாழ்க்கையையும் அமைக்க முயற்சிப்பவர்கள் அந்த அந்த குழுவினரால் பாராட்டப்படுவதையும் கவனிக்கலாம். இதில்தான் காந்தி, அண்ணா, அம்பேத்கார் போன்றவர்கள் அந்த அந்த குழுவினரால் பாராட்டப்படுகிறார்கள்.

காந்தியின் அமைதியான விடுதலைப் போராட்டம் உயிர்களைக் கொல்லாமல் பிரச்னைகளைத் தீர்க்கச் சொன்ன வழி மனித உயிர்களுக்கு பிடித்துப் போனதால்தான் அவர் பெரும்பான்மையான மனித உயிர்களால் பாராட்டப்படுகிறார்.

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

**

கிராம இணைப்புப் பாதைகள்

வாஜ்பாயி எல்லா கிராமங்களையும் இணைத்து சாலைகள் போடவேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு சில திட்டங்களை அறிவித்திருக்கிறார். 1000 குடும்பங்களுக்கு மேல் இருக்கும் எல்லா கிராமங்களும் 2007க்குள் சாலைகளால் இணைக்கப்பட்டுவிடும் என்று தேதி குறித்து அறிவித்திருக்கிறார். இதற்கு முன்னால் எல்லா பெரு நகரங்களும் ஆறுவழிச் சாலைகள் மூலம் இணைக்கப்படும் என்று போனவருஷம் அறிவித்தார். அதன் நிலைமை பற்றி யாராவது எழுதினால் நன்றாக இருக்கும். இந்த திட்டத்துக்கு 60000 கோடி ரூபாய் தேவை என்று அவரே அறிவித்திருக்கிறார். எங்கே இருக்கிறது பணம் என்று அவர் சொல்லவில்லை. கடன் உடன் வாங்கியாவது இதை முடித்தால் நல்லது.

பெரும்பான்மையான திட்டங்கள் இவ்வாறு தேதி குறித்து அறிவிக்கப்படுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று சொன்ன வேகத்திலேயே மறந்து விடலாம். இரண்டாவது அப்படியே அந்த திட்டத்தை நிறைவேற்ற தாமதமானாலும், யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. இது வெகுகாலமாக இந்திய அரசியல்வாதிகளால் (வேறு யார் காங்கிரஸ்காரர்களால் தான்) உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

பரவாயில்லை. 2007இல் என்னய்யா ஆச்சு உன் திட்டம் என்று கேட்கலாம். அப்படியே முடிக்கப்படவில்லை என்றாலும் இந்த அறிவிப்பும் திட்டமும் கொஞ்சமாவது இந்திய கிராமங்களை மையமான நகரங்களுடன் இணைக்கும் என்று நம்புவோம்.

அண்ணாவும், கருணாநிதியும், எம்ஜியாரும் தங்கள் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான தமிழக கிராமங்களை இணைத்திருக்கிறார்கள். (இதில் நான் ஜெயலலிதாவை சேர்க்காதது ஏன் என்று கேட்பவர்களுக்கு நான் ஒரு குறிப்பிட்ட ஊழலைப் பற்றி பேசவேண்டி வரும். அந்த ஊழலுக்கு என்னிடம் ஆதாரங்கள் இல்லை. எனவே நான் பேசவில்லை)

இதனால் பெரும் போக்குவரத்துப் புரட்சி வந்து, ஒரு ரூபாய் பத்திரிக்கைகள் அதிகம் விற்றன. பஸ் நிறுத்தத்தில் கடைகள் தோன்றின. தங்கும் விடுதிகள் கட்டப் பட்டன. நகரங்கள் தூக்கம் இல்லாத ஊர்களாய் மாறின. கிராமங்கள் பெரிய கிராமங்களாகவும், பெரிய கிராமங்கள் நகரங்களாகவும் மாறின. ஆங்காங்குள்ள தொழில்கள் வளர்ச்சி பெற்றன. நகரம் தான் தொழில் முனஒவோருக்கான இடம் என்பது கொஞ்சம் மாறியது. உற்பத்தி பண்ணப் பட்ட பொருட்கள் வேகமாக சந்தையை அடைந்தன.

இந்த போக்குவரத்துப் புரட்சி மூலம், பம்பாய் தொழிலதிபர்களின் இந்திய கண்டுபிடிப்பான ஷாஷே என்ற ஆபத்து மூலம் ஷாம்பூ விற்கப்பட்டு சீயக்காய் காணாமல் போனது.

பிள்ளைகள் நல்ல பள்ளிக்கூடத்துக்குச் செல்வதும், பஸ்களால், மருத்துவமனை அருகில் வருவதும், நல்லதுதான். இதன்மூலம் கிராமம் நகரமயமாகிவிடும். ஆனால் தன்னிறைவான கிராமம் என்பது நமது குறிக்கோளிலிருந்து மாறக்கூடாது.

***

மீண்டும் ஜெயலலிதா

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரும் அறிகுறிகள் தெரிகின்றன. (ஸ்பிக் ஊழல் வழக்கு ஒருவழியாக அவர் மேல் போடப்பட்டிருக்கிறது. ஏன் இவ்வளவு காலம் தாழ்த்தி இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று அரசாங்கத்தை நீதிபதி கேள்வி கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது)

பெரும்பாலும் ஊழல் குறைந்துவிட்டதால், மக்களிடம் பணப்புழக்கம் இல்லை என்று பெரும் வதந்தி உலவுகிறது. இது ஓரளவுக்கு உண்மைதான் என்பதும் சிலர் சொல்லும் செய்தி. ஜனநாயகத்தில் இருக்கும் ஆபத்து பார்த்தீர்களா ? ஊழல் இல்லை என்பது ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராக பிரச்சாரத்துக்கு உதவும் கேலிக்கூத்து. அதாவது ஊழல் இருந்தால் தான் பணப் புழக்கம் இருக்கும். பணப் புழக்கம் இருந்தால் தான் வியாபாரம் பெருகும். வியாபாரம் பெருகினால் பொருளாதாரம் வளரும். இந்தத் தர்க்கம் சரியானது தான் – ஒரே ஒரு விஷயத்தைத் தவிர – ஊழல் தாம் பணப் புழக்கத்துக்கு வழி என்ற விஷக் கருத்தைத் தவிர.

இடையறாத விழிப்புணர்வு தான் ஜனநாயகத்துக்கு மக்கள் கொடுக்கும் விலையாக இருக்க முடியும். மக்கள் பாவம் – எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று கருணாநிதி , எம் ஜி ஆர் , ஜெயலலிதா என்று மாற்றி அரியணையில் ஏற்றித் தான் பார்க்கிறார்கள்.

******

பாகிஸ்தானில் வெடிகுண்டு செங்கோட்டையில் வெடிகுண்டு: பழிக்குப் பழியா ?

பாகிஸ்தானில் நான்கு நகரங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இது புது தில்லி செங்கோட்டை வெடிகுண்டு காரணமாய் , இந்திய உளவு அமைப்பு ‘ரா ‘ (Research and Anaysis Wing) -வின் வேலை என்று பாகிஸ்தான் அறிக்கை விடுகிறது. இந்தியாவில் உள்ள இந்துத்வா அமைப்புகள் ‘பழிக்குப் பழி ‘ என்று கொக்கரிக்கின்றன. பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கர வாதத்தைப் பரப்புவதில்லை என்று சத்தியம் செய்கிற பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தானின் உளவு அமைப்பும் இது இந்தியாவின் வேலை என்கிறார்கள். காஷ்மீரில் வெடிகுண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் ‘காஷ்மீர்ப் போரின் வெற்றி ‘ என்று சந்தோஷிக்கிற பாகிஸ்தானின் முல்லாக்களும் (நம் இந்துத்வா ஆட்களைப் போலவே) இந்தியாவை உண்டு இல்லை என்று பண்ணிவிட வேண்டும் என்று புனிதப் போருக்கு அறை கூவல் விடுக்கிறார்கள்.

கண்ணுக்குக் கண் என்ற முறையில் பழி வாங்கிக் கொண்டே போனால் உலகம் பூராவும் குருடர்களாய்த் தான் ஆவார்கள் என்று சொன்ன அந்தப் பைத்தியக்கார ஆள் – வேறு யார் காந்தி தான் – நினைவுக்கு வந்து தொலைக்கிறார்.

**********

மீண்டும் பெண்கள் இட ஒதுக்கீடு

நாடாளுமன்றத்தில் மீண்டும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப் படாமல் நாள் கடத்துகிறார்கள். லாலுவும், முலாயம் போன்ற ஆட்களும் இந்த மசோதா தாக்கல் செய்ய முயன்றாலே தகராறு செய்வதை ஒரு வழக்கமாகக் கொண்டு விட்டார்கள்.

இப்போது மீண்டும் இந்த மசோதாவைக் கிடப்பில் போட்டு விட்டு , அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினரை பெண்களாய் நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் விதி பிறப்பிக்கலாம் என்கிறார்கள். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பதும், ஆண்கள் அதிகாரம் செலுத்துகிற அரசியல் கட்சிகளில் பெண்களுக்கு இட முன்னுரிமையை அமல் படுத்துவதும் ஒன்று தான். இந்த விதி — இது சட்ட அமைப்புப் படி செல்லுமா என்பது எனக்குச் சந்தேகம் — நடைமுறைக்கு வந்தால் இந்த உரையாடலைக் கற்பனை செய்து பார்க்கலாம்.

‘ தானைத் தலைவரே! தமிழினச் செம்மலே! இந்த காற்றடிச்சான் பட்டியில் இருக்கிற சாதிக் காரர்கள் நமக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். நிச்சயம் தோல்வி தான். ‘

‘ அப்படியா ? சரி . அந்த கண்ணம்மாவோ , சின்னம்மாவோ மகளிர் அணியில் தலைவியோ செயலாளரோ இருக்கிறாளே அவளை எங்கே போட்டு விடுவோம். இந்தத் தேர்தல் ஆணையம் பயல்களைத் திருப்திப் படுத்தின மாதிரியும் இருக்கும். நம் ஆட்களை ஜெயிக்க முடிகிற இடத்தில் நிறுத்தின மாதிரியும் இருக்கும். ‘

தோற்கக் கூடிய தொகுதிகளில் எல்லாம் பெண்களை நிறுத்திவிட்டு , நாங்கள் சட்டப் படி நடந்துவிட்டோம் என்று கையைக் கழுவி விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.

**************

Series Navigation

author

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

Similar Posts