இந்தியனாக இருப்பது குற்றமா ?

This entry is part [part not set] of 1 in the series 20000620_Issue

சின்னக்கருப்பன்


பிஜித்தீவுப் பிரச்னை இன்று பெரிதும் பேசப்பட்டுவருகிறது.

உலகத்தில் ஆங்கில காலனியாதிக்கம் காரணமாக விளைந்த பிரச்னைகளில் இதுவும் ஒன்று. ஒருபுறம் அமெரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சி அங்கிருந்த செவ்விந்தியர்களை வியாதிக் கிருமிகள் தோய்த்த போர்வைகளையும், இன்னும் பல இனப்படுகொலைகளையும், கொடுமைகளையும் செய்து கொன்று அவர்களை சிறுபான்மையினராக ஆக்கினார்கள்.

ஆஸ்திரேலியாவிலும் இவர்கள் அங்கிருந்த பழங்குடியினரை இனப்படுகொலைகள் மூலம் சின்னாபின்னப்படுத்தி அவர்களை மிஷன்களில் அடைத்து, அவர்கள் இருக்குமிடத்துக்கு அருகில் அணுகுண்டு பரிசோதனைகள் நடத்தி அவர்களை நாசம் செய்தார்கள்.

ஆப்பிரிக்காவில் புகுந்து அவர்களது கலாச்சார மொழி மத உரிமைகளை அழித்து, அங்கிருந்த மனிதர்களை அடிமைகளாக விற்று வாங்கி பெரும் நாசம் விளைவித்தார்கள். பின்னர் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறேன் என்ற பேரில், ஆப்பிரிக்காவின் இன, மொழிப்பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் நேர்கோடுகளில் தேச எல்லைகளை வகுத்து காலம் காலமாக அவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் ஒரு நிலையை உருவாக்கினார்கள்.

இந்தியாவிலும் அவர்கள் செய்தது கொஞ்சம் நஞ்சமில்லை. அதுவும் எல்லோருக்கும் தெரியும். இங்கிருக்கும் பயிர் நிலங்களை அழித்து அபின் தயாரிக்கவும், கயிறு தயாரிக்கவும் மாற்றினார்கள். இங்கு உருவாக்கப்பட்ட அபினை சீனாவில் விற்று சீன மனிதர்களை அபினுக்கு அடிமையாக்கி அவர்களது மன நலத்தை அழித்தார்கள். அந்த வியாபாரம் கூடாது என்று சீனா கேட்டுக் கொண்டு அபின் கொண்டுவரும் கப்பல்களை தடுத்ததை, பெரும் போராக்கினார்கள். இது பின்னால் ‘ஓப்பியம் போர்கள் ‘ என்று வழங்கப்பட்டது. அபின் மட்டுமே உருவாக்கப்பட்டதால் இந்திய மக்கள் இரண்டு முறை பெரும் பஞ்சத்துக்கு ஆளாக நேரிட்டது. அப்போதும் ஆங்கிலேயர்கள் வரியை கொடுக்க வற்புறுத்தினார்கள்.

தங்களுக்கு வேண்டிய சர்க்கரைக்காக பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இடங்களிலும் தீவுகளிலும் இந்தியர்களை ஏமாற்றி கூட்டிக்கொண்டு சென்று பயிர் செய்ய வைத்தார்கள். பிஜித்தீவில் கரும்புத்தோட்டங்களில் அழியும் தமிழர்கள் பற்றி பாரதியார் எழுதிய இரங்கல் கவிதையை படித்துப் பாருங்கள்.

பிரிட்டிஷ் குயானா, சூரினாம், டிரினிடாட் டோபாகோ போன்ற தென் அமெரிக்க நாடுகளில் இதற்காகவே இந்தியர்களை கொண்டு சென்று அங்கு கரும்புத் தோட்டங்களிலும், வாழைத் தோட்டங்களிலும் வேலை செய்யவைத்தார்கள். நிறையப் பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டி அழைத்துச் சென்று பின்னர் அவர்களுக்கு சிறிதளவு சம்பளம் கொடுத்து, பணம் சேர்த்து இந்தியா திரும்பவேண்டும் என்ற நிலைக்கு கொண்டுவந்து எந்தக் காலத்திலும் இந்தியா திரும்ப இயலாத ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

இது இலங்கையில் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்ய கங்காணிகள் மூலம் அழைத்துச் சென்ற இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையிலேயே தங்கிவிட்டார்கள். இலங்கை சுதந்திரமடைந்தபோது இந்த இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை மறுக்கப்பட்டது. நேரு காலத்தில் இந்த தமிழர்களுக்காக ஒரு துரும்பு கூட நகர்த்தப்படவில்லை. பின்னர் பெருத்த போராட்டத்தின் பிறகு சாஸ்திரி காலத்தில் சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் பாதி தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையும் பாதி தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமையும் அளிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ்காரர்கள் எப்போதும் வட இந்திய காங்கிரஸ்காரர்களின் அடிவருடியாக தங்களை கருதிவந்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். (உதாரணமாக வங்கப்பிரிவினை போது பெருத்த கலவரம் வெடித்தது இந்தியாவில். அதற்கு தமிழ் காங்கிரஸ்காரர்கள் கூட போராட்டத்தில் இறங்கினார்கள். இலங்கை இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டபோது எந்த தமிழர்களும் அதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்பது நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது.)

இந்தியா என்ற ஜனநாயக தேசத்தில் கன்னடரான தேவகவுடாவும், தெலுங்கரான நரசிம்மராவும், மத்தியபிரதேசத்தினரான வாஜ்பாயியும், பஞ்சாபியான குஜ்ராலும், பிகாரியான சந்திரசேகரும் எந்தவித இனத்தகறாரும் இன்றி பிரதமராக இயலுகிறது. தமிழ்நாட்டில் கூட கன்னடரான ஜெயலலிதாவும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்ஜியாரும் பதவி வகித்திருக்கிறார்கள். தமிழ் ஈழம் ஆதரவாக முதல்குரல் கொடுப்பவராக தன்னை அடையாளம் காணும் வை.கோபால்சாமி நாயுடு தெலுங்கர் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

இந்தியர்கள் இனம் மொழி மதம் தாண்டி மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை சிறந்த குணமாக கருதிவந்திருக்கிறார்கள்.

அதனாலேயே இங்கு தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் பேசிய காந்தியையும், சென்னையை தன் இல்லமாக கொண்ட அன்னிபெசண்டும் இங்கு போற்றப்படுகிறார்கள்.

இந்திய முஸ்லீம்களை அன்னியர்கள் என்று சொல்லுபவர்களும், கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று பிராம்மணர்களை பேசும் கும்பல்களும் இங்கு இருந்தாலும், சட்டரீதியாகவோ, நடைமுறையிலோ அவர்கள் எந்தவித அடக்குமுறையும் இல்லாமல் சரிநிகர் சமானமாகவே இங்கு வாழ்கிறார்கள்.

ஆங்கிலோ இந்தியர்களும், பார்ஸிகளும் தங்கள் ஓட்டு மூலமாக பாராளுமன்றத்தில் இடம் பெற முடியாது என்பதற்காக அவர்களுக்கு நியமன பாராளுமன்ற உறுப்பினர் என்ற புதிய சட்டத்தையே ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் இந்திய மக்கள். இதுதான் இந்தியர்களுக்கும் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

இப்போது பிஜித்தீவில் இந்திய வம்சாவளியினரான ஒரு பிரதமரை வன்முறையின் மூலம் பதவி இறக்கி, இந்திய வம்சாவளியினர் எப்போதும் பிரதமர் பதவி வகிக்க முடியாது என்ற அரசியல் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முன் வந்திருக்கிறார்கள் பிஜித்தீவு பழங்குடியினர்.

இந்தியர்கள் அங்கு வேலைக்குச் சென்றவர்கள். பிஜித்தீவு மக்களைப் போலவே அவர்களும் பிரிட்டிஷ் அரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள். பிஜித்தீவுக்கு, ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்த போது இந்தியர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது என்று சட்டம் எழுதிவிட்டுச் சென்றார்கள். இது பின்னால் பல பிரச்னைகளுக்கு ஆதாரமாக ஆகிப் போனது. பின்னர் வந்த பழங்குடியினர்கள், இந்தியர்கள் எந்த முக்கிய பதவிக்கும் வரக்கூடாது என்று முன்னாள் ராணுவத்தளபதி சட்டம் போட்டார்.

இதே தர்க்கவியலை வைத்துப் பார்த்தால் , பூர்வகுடிகளான ‘செவ்விந்தியர்களை ‘த் தவிர அமெரிக்காவில் வேறு யாரும் பதவிக்கு வரக் கூடாது. அதே போல் தான் ஆஸ்திரேலியா, நியூஜிலாந்தில் வெள்ளையர்கள் பதவிக்கு வரக்கூடாது. ஆனால் இந்த நாடுகளில் பூர்வகுடிகள் ‘ரிசர்வேஷனுக்கு ‘த் தள்ளப் பட்டு, உரிமைகள் பறிக்கப் பட்டு , கலாசாரம் சிதைக்கப் பட்டு, வாழ்க்கை முறை உருக் குலைந்து வாழ்கின்றனர்.

வேறொரு நாட்டிற்குச் சென்று , நிர்ப்பந்தத்தாலும் பஞ்சம் பிழைக்கவென்றும் சென்ற மக்களை அகதிகள் என்று பெயரிட்டுத் துரத்துவது தான் இருபதாம் நூற்றாண்டிற்கு காலனியாதிக்கம் விட்டுச் சென்ற பெரும் கொடை. இதிலும் கூட வாயில்லாப் பூச்சிகளாய் இருப்பது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான்.

இப்படிப்பட்ட பிரசினைகளுக்கு மூல காரணமான பிரிட்டிஷ் காலனியாதிக்கம் பற்றி யாரும் மூச்சுக் கூட விடக் காணோம்.

 

 

  Thinnai 2000 June 06

திண்ணை


  • இந்தியனாக இருப்பது குற்றமா ?

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்