இணையத்தில் தமிழ்

இணையத்தில் தமிழ்

This entry is part 29 of 30 in the series 20100425_Issue

மு. பழனியப்பன்


தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணில் வெந்துவிடாமல் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.

மதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. வவி//றறற.சடிதநஉவ அயனரசய.டிசப என்ற இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் பல தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி, அவர்கள் அவர்களாகவே சிலச்சில நூல்களை மின்வடிவமாக மாற்றி ஒட்டுமொத்தமாகத் தந்திருப்பதுதான். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைய நூலகம் மிகவும் பயன்பாடு மிக்கது. இதனுள் பல நூறு நூல்கள் சேமிக்கப் பெற்றுள்ளன. நூல்களை அடுத்த அடுத்த பக்கங்களுக்குச் சென்று படிப்பது போல இணையப் பக்கங்களைப் புரட்டி நூல்களைப் பார்வையிட முடியும். மேலும் இந்நூலகத்தில் தேடுதல் வசதி உள்ளது. அதாவது தேடுதல் வசதி என்பது சொல் தேடல் என்பதாகும். திருக்குறளில் ஏதாவது ஒரு சொல் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டறியவேண்டுமானால் இத்தளத்திற்குச் சென்று திருக்குறள் பகுதியை அழுத்தி அதன்பின் தேடல் பகுதியில் தேவையான சொல்லை இட்டால் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இடங்கள் அனைத்தும் கிடைக்கும். இப்படியே ஒவ்வொரு நூலிலும் தேடல் வசதி தரப் பெற்றுள்ளது. தற்போது தமிழ் இணையப் பல்கலைக் கழகம் என்ற பெயர் உலகத் தமிழ் இணையப் பயிற்சிக் களம் என்பதாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இருப்பினும் வவி//றறற.வயஅடைஎர.டிசப என்ற முகவரியில் இத்தளம் இயங்கி வருகிறது. இத்தளத்தில் கலைக்களஞ்சியங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி சொல் வளம் பெற இயலும்.

அடுத்து சென்னை லைப்ரரி (வவி//றறற.உநயேடைநெசயசல.உடிஅ) என்ற தளம் குறிக்கத்தக்கது ஆகும். சிறுகதைகள், நாவல்கள் முதலியனவற்றைப் படிப்பதற்கு இந்தத்தளம் உதவுகின்றது. குறிப்பாக சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியங்கள் போன்றனவும் இத்தளத்தில் கிடைக்கின்றன. கம்பராமாயணம் முழுவதும் இதனுள் கிடைக்கின்றது. பெரும்பாலும் இணையத்தில் தற்போது முல நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. உரை நூல்கள் கிடைப்பதில்லை. கல்கியின் நாவல்கள், புதுமைப்பித்தன் கதைகள், ஜெயகாந்தன் படைப்புகள் போன்றவற்றை இதனுள் பெற இயலும்.

அடுத்துப் பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம்.நெட் வவி//றறற.வாயஅணையஅ.நேவ/ என்ற இணைய தளம் பல அறியப்படாத நூல்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இத்தளத்தில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. முன்னூறு தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் கிடைக்கின்றன. மேலும் சிற்றிதழ்களின் கண்காட்சியாக பல சிற்றிதழ்கள் பார்வைக்கு உள்ளன. தமிழில் உள்ள குறிக்கத் தக்க இணையதளங்களுக்கான இணைப்பு தரப்பெற்றுள்ளது. இவ்வகையில் மிக முக்கியமான தளமாக இது விளங்குகின்றது.

இதுபோன்று தமிழ் மரபு அறக்கட்டளை (வவி//றறற.வயஅடைநசவையபந.டிசப), நூலகம்.காம் போன்ற பல தளங்கள் வாயிலாக தமிழ் நூல்களை இணைய நூல்களாகக் காண முடிகின்றது. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம் ஓலைச்சுவடிகளை மின்வடிவில் தருவதில் பெரு முயற்சி எடுத்து வருவது குறிக்கத்தக்கது.

சமண சமய நூல்களினைப் பார்வையிட ஜெயின்வோர்ல்டு .காம் என்ற இணையதளம் பயன்படுகிறது.

தமிழ் விக்கிபீடியா என்ற இணையதளம் தமிழின் கட்டற்ற கலைக் களஞ்சியமாக உள்ளது. தமிழ்மொழியில் உள்ள தகவல்களைப் பெற இத்தளம் மிக முக்கியமானதாகும். மேலும் இதனுள் இடுகை இடுதலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் திருத்தலாம். அதற்கான வழிமுறைகள் படி நுழைய வேண்டும். இதனை வளப்படுத்தவே தற்போது இளைஞர்களுக்குப் போட்டிகள் வைக்கப் பெற்றுள்ளன.

இணையப் பரப்பில் அடுத்து முக்கியமாகக் கருதத்தக்கது இணைய இதழ்கள் ஆகும். இணையத்தில் மட்டுமே இடம் பெறும் இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிடவேண்டும். பிரபல தமிழ நாளிதழ்கள், தமிழ் வார இதழ்கள் அனைத்தும் இணைய முகவரியைப் பெற்றுள்ளன. இருப்பினும் இவற்றை இணைய இதழ்கள் எனக் கருதமுடியாது.

இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும். அவ்வகையில் குறிக்கத்தக்க தமிழ் இணைய இதழ்களாக கருதத்தக்கனவாக திண்ணை, பதிவுகள், முத்துக்கமலம், வரலாறு.காம், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பதிவுகள், நிலாச்சாரல், தமிழோவியம் போன்றன வெளிநாட்டுத் தமிழர்கள் நடத்தும் இணைய இதழ்கள் ஆகும். இவற்றுள் திண்ணை இதழ் மிகச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. இது வாரம் ஒருமுறை தன் பக்கத்தை மாற்றி அமைக்கிறது. பல இலக்கியச் செய்திகள் இதில் இடம் பெறுகின்றன. வார்ப்பு இதழ் கவிதைகளை மட்டுமே தாங்கி வரும் இதழாகும். இதனுடன் கவிதை நூல்களின் விமர்சனங்கள், மற்றும் நிகழ்வுகளின் அறிவிப்புகள் போன்றனவும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. இது தவிர இன்னும் பல இணைய இதழ்கள் தமிழ் இணையப் பரப்பில் உள்ளன.

வரலாறு .காம் வவி//றறற.எயசயடயயசர.உடிஅ/ என்ற இதழ் திருச்சி அறிஞர் கலைக்கோவன் அவர்களின் மேற்பார்வையில் நடத்தப் பெற்றுவருகின்றது. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் பல செய்திகளை, அரிய புகைப்படங்களுடன் தாங்கி வரும் இணைய இதழ் இதுவாகும். பழைய இதழ்களைக் காணும் வசதியும் இதில் உள்ளது. எனவே இது நல்லதொரு ஆவணமாக விளங்குகின்றது. ஏறக்குறைய ஆயிரம் செய்திகளைத் தொட்டுவிடும் தூரத்தில் இது வளர்ந்து வருகிறது. இது ஒரு மாத இதழாகும்.

செய்திகளை மட்டும் வழங்கும் தமிழ் இணைய இதழ்களும் உள்ளன. தட்ஸ் தமிழ்.காம், எம்.எஸ்.என் வெப்தூனியா.காம், யாஹூ தமிழ்.காம் போன்ற தளங்கள் இவ்வகையில் குறிக்கத்தக்கன. இந்நிறுவனங்கள் உலக அளவில் பெருமை பெற்றனவாகும். இவை தமிழிலும் தளங்கள் வைத்திருப்பது தமிழின் இணைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக உள்ளது. இவற்றின் வழி உலகத்தின் உடனடிச் செய்திகளை உடனே தெரிந்து கொள்ளமுடிகின்றது.

தமிழ் இணையப் பரப்பில் தற்போது வலைப்பூக்கள் அதாவது பிளாக்கர் என்ற அமைப்பு மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுவருகின்றது. கூகிள் என்ற நிறுவனம் பிளாக்கர் என்ற வசதியை வழங்குகின்றது. இந்த வசதி கூகிளின் மின்னஞ்சலான ஜிமெயில் பெற்றிருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஜி மெயில் முகவரியைப் பெற்றுள்ள எவரும் பிளாக்கரைத் தொடங்கலாம். எத்தனை வேண்டுமானாலும் தொடங்கலாம். பிளாக்கரில் புகைப்படங்கள், அசை படங்கள், படக் காட்சிகள் போன்ற எவற்றையும் சேர்க்க முடியும். அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியும். பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கான விமர்சனங்களையும் பார்ப்பவர்கள் வழங்கமுடியும். இந்த வசதி மிகச் சிறப்பானதாகும். வளவுபிளாக்ஸ்பாட்.காம், மானிடள்பிளாக்ஸ்பாட்.காம், இட்லிவடைபிளாக்ஸ்பாட்.காம், மலையருவிபிளாக்ஸ்பாட்.காம், தமிழ்க்கடல்பிளக்ஸ்பாட்.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன.

இந்த வலைப்பூக்களில் இடம் பெறும் செய்திகளை ஒன்று கூட்டும் அரங்கங்கள் பல உள்ளன. அதாவது ஒருவர் வலைப்பூவில் ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அதனை ஒருங்குகூட்டும் ஒரு அமைப்புக்கு அவர் தெரிவித்து விடவேண்டும். அதன்பின் அந்த ஒருங்கு கூட்டும் இணையப்பக்கத்திற்கு வரும் அனைவருக்கும் அந்தச் செய்தி தெரியவரும். இதன் முலம் வலைப்பக்கச் செய்திகள் பரவலாக்க முடிகிறது. இந்த ஒருங்கு கூட்டும் இணையப் பக்கங்களில் திரட்டி.காம், தமிழிஷ் .காம், தமிழ்மணம் .காம், தமிழ் வெளி.காம் போன்றன குறிக்கத்தக்கன.

தமிழ் இலக்கியப் பாடல்களைத் தக்க இசையோடு பல இணையதளங்கள் தருகின்றன. இசைத்தமிழை வளர்க்கும் இனிய பணி இதுவாகும். முருகன் குறித்த தமிழ் இலக்கியப் பாடல்களைக் கேட்கவேண்டுமானால் கௌமாரம்.காம் செல்ல வேண்டும். தமிழ் மரபு இசை மாறாமல் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை போன்றவற்றை இதில் கேட்டு ரசிக்கலாம். பன்னிரு திருமுறைகளையும் மரபு இசையுடன் தேவாரம்.காம் என்பதில் கேட்டு ரசிக்க முடியும். ஓதுவார்.காம் என்பது தமிழக இசைவாணர்களான புகழ்பெற்ற ஓதுவார்களின் இசைவடிவங்களை இணைத்துத் தரும் தளமாகும். இதுபோன்று ஆழ்வார்பாசுரங்கள் வவி//றறற.அயசயளேனடிப.உடிஅ/ என்ற தளத்தின் வாயிலாகக் கேட்க முடியும்.

இணையத்தமிழ் வானொலி சேவை இன்னும் குறிக்கத்தக்கதாகும். பி.பி.சி தமிழ்ச்சேவை, வேரித்தாஸ்வானொலி, சக்தி பண்பலை போன்றன இவற்றுள் குறிக்கத்தக்கன. இதனுள் மிக முக்கியமான வசதி என்னவென்றால் நாள் தேதி குறிப்பிட்டு வானொலி நிகழ்ச்சிகளைத் திரும்பக் கேட்க இயலும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை உரிய நேரத்தில் கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இவற்றில் இல்லை. தேவையான நிகழ்ச்சியை தேவையான போது கேட்டுக் கொள்ளும் வசதி இதனுள் உள்ளது.

இதுதவிர தமிழ்த் திரை இசைப் பாடல்களைக்கேட்க பல தளங்கள் உள்ளன. தேனிசை. காம், ஓசை.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன. இவ்வாறு இசைத்தமிழ் பல நிலைகளில் முன்னேறி இணையத்துக்குள் ஆட்சி செலுத்தி வருகின்றது.

இதுதவிர குழந்தைகள் கற்பதற்கான தமிழ்ப் பாடத் தளங்கள் பல உள்ளன. குறிப்பாக தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் இதற்குப் பெரிதும் உதவுகின்றது. மழலைக் கல்வி முதல் இளங்கலைக் கல்வி வரை அனைத்து நாட்டுத் தமிழரும் கற்கும் வண்ணம் ஒலி, ஒளிக் காட்சிகளுடன் பாடங்கள் இதனுள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும் இணைய வகுப்பறை சேவையும் இதனுள் தொடங்கப் பட்டுள்ளது. இதன் வழியாக வகுப்பறைத் தோற்றத்தினை வீட்டில் அமர்ந்து பெற இயலும். இணையவழித் தேர்வுகளும் இதன் வழியாக நடத்தப்படுகின்றன.

மழலைகள்.காம் என்ற தளமும் குழந்தைகளுக்கான தகவல்களை வழங்கி வருகிறது. இதுபோன்று பல தளங்கள் தமிழைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுதவிர தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தன் பாடநூல்களை இணையத்தில் இட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாட நூல்களை உலகத்தமிழர் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிட்ட பாட நூலைத் தன் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களின் தமிழறிவை வளர்க்க இயலும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்குத் தமிழ் இணையத்தின் வாயிலாகக் கொண்டு சேர்க்கப்படுகிறது.

இதுதவிர நகைச்சுவைப் பக்கங்களும் உள்ளன. அப்புசாமி. காம் என்ற தளம் பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் நடத்தப்படுகிறது. இவரின் கைவண்ணத்தில் எழுந்த நகைச் சித்திரங்களை இவற்றில் வாசிக்க முடியும். இதுபோன்று தனிநபர் இணையப் பக்கங்களும் தமிழில் அதிகமாக வாசிக்கப் பெறுகின்றன. எழுத்தாளர்களான ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றோர் தனக்கான இணையப் பக்கங்களை உருவாக்கியுள்ளனர். இதனுள் வாசகர்களுடனான உரையாடலையும் அவர்கள் நிகழ்த்துகின்றனர்.

சமையல் குறிப்புகள், ஜோதிடக் குறிப்புகள் போன்றவற்றைத் தமிழில் தரும் தளங்களும் உள்ளன.

மின்அஞ்சல் குழுமங்கள் என்ற குழு அமைப்பும் இணையத்தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகின்றது. அதாவது மின் அஞ்சலை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பலாம். இதற்குக் குழு மடல் என்று பெயர். இந்தக் குழு மடல் போலவே ஒரு குழுவை மின்அஞ்சல்காரர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். இதில் இணைவதற்கு உரிய நடைமுறைகளைச் செய்துவிட்டால் ஒருவர் மின்மடல் குழுமத்தில் உறுப்பினராகிவிடலாம். பின் ஒருவர் இடும் மடல் அனைத்து உறுப்பினருக்கும் கிடைக்கும். ஒரு செய்தியைப் பற்றி அனைவரும் விவாதிக்கலாம். இந்த முறையில் முத்தமிழ்குழுமம், மின்தமிழ் குழுமம் போன்ற மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இவையும் பல இணையத் தமிழ் விவாதங்களுக்கு களம் அமைத்துத் தருகின்றன.

மொத்தத்தில் உலக அளவில் தமிழின் தரத்தை உயர்த்த இணையத்தமிழ் உதவி வருகின்றது. இதனைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமை அனைத்து தமிழ் இணையப் பக்கங்களுக்கும் உண்டு.

muppalam2006@gmail.com

Series Navigation<< மனங்கவர்ந்த டோரேமோனும் அற்புத மனிதர்களும்முருகாற்றுப்படையில் கடவுளர் வழிபாடும், நம்பிக்கையும் >>

இணையத்தில் தமிழ்

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

முனைவர்.இரா.குணசீலன்



முன்னுரை
முச்சங்கம் வைத்ததும் மூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.மின் வெளியில் வலைமொழியில் சங்கம் வைத்து தமி்ழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.யாதும் ஊராக யாவரும் கேளிராக உலகு பரவி வாழும் தமிழர்களை இணையவழி தமிழ் மொழியால் இணைப்பது நம் நாளையாக இருக்க வேண்டும்.தமிழர் தம்முள் இணைவதால் நம் தொன்மை,கலை,இலக்கியம்,பண்பாடு ஆகியன காக்கப்படுவதோடு உலகோர் நம் மொழியின் சிறப்பை அறிந்துகொள்ள அது அடிப்படையான ஒன்றாகவும் அமைகிறது.
இணையம் இன்று இனம், மொழி, மதம், நாடு எனப் பல்வேறு எல்லைகளையும் கடந்து மனிதர்களை இணைக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக விளங்கி வருகிறது.இவ்வூடகத்தில் தமிழ் கடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்த்து அசைபோட்டு இன்றைய சூழலைச் சீர் தூக்கிப் பார்த்து நாளைய தேவையை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.
இணையத்தமிழ் நேற்று
 இணையத்தில் எழுத்துரு(Font) மிகப்பெரிய சிக்கலாக
இருந்தது.ஒவ்வொரு இணையதளங்களும் ஒவ்வொரு எழுத்துருக்களைப் பயன்படுத்தி வந்தன.அதனால் தமிழக அரசு (Tam,Tab)பொதுவான எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியது.
 தமிழ் மென்பொருள்கள குறைவான அளவிலேயே கண்டறியப்பட்டன.
 தமிழ் இணையதளம் தொடங்குவது,பராமரிப்பது எனும் இருநிலைகளிலும் தமிழர்கள் பின்தங்கியிருந்தனர்.அதற்கு கணிணி குறித்த ஆழ்ந்த அறிவும், பணவசதியும் அடிப்படையாக இருந்தன.
 இணையத்தில் தமிழ் நூல்கள்,தமிழ் ஒலி,ஒளிக் கோப்புகள் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தன.அவற்றை இலவசமாகப் பயன்படுத்தும் வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன.
 தேவையான தரவுகளைத் தமிழ் வழியே தேட தமிழ்த் தேடு எந்திரங்கள் போதுமானதாக இல்லை.
 தமிழ்க்கல்வி போதிக்கும் இணையதளங்கள் குறைவாகவே இருந்தன.
 புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுள் புதிய தலைமுறையினர் தமிழ் மொழியை ஒலி வடிவில் மட்டுமே புரிந்து கொள்பவர்களாகவும் எழுத்து வடிவங்களைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாகவும் இருந்தனர்.அவர்களின் தேவையை நிறைவு செய்ய இயலாததாக நேற்றைய இணையம் இருந்தது.

இணையத்தமிழ் இன்று

 தமிழ் தொடர்பான தரவுகளைத் தமிழ் வழியே தேடும் வசதியை கூகுள் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களும் வழங்குகின்றன.( http://www.jaffnalibrary.com/tools/google.htm,)
 தமிழ் எழுத்துருச் சிக்கலுக்கு நாம் கண்ட வழிமுறைகளுள் பிடிஎப்,யுனிகோடு ஆகிய இரண்டும் தனிச்சிறப்புடையன.
பிடிஎப்
1.பிடிஎப் என்பது எழுத்துருச் சிக்கலின்றி எல்லா இயங்குதளங்களிலும் எழுத்துருக்கள் தெரிய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும்.அடாப் ரீடர் எனும் மென்பொருள் மட்டுமே இதன் தேவைகளுன் குறிப்பிடத்தக்கதாகும்.இன்று பிடிஎப் கன்வெர்ட்டர்கள் பல இணையதளங்களில் இலவசமாகக் கி்டைக்கின்றன.
2.யுனிகோடு (ஒருங்குறி)
ஒருங்குறி என்பது கணிணிகளுக்கு இடையிலான எழுத்துருக்களுக்கான பொதுவான குறியீட்டு முறை. மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இக்குறியீட்டு முறையை ஆதரிப்பதால் இன்று எழுத்துருக்களுக்கான சிக்கல் ஓரளவிற்கு முடிவுக்கு வந்துள்ளது.பெரும்பாலானோர் எவ்விதமான தடையுமின்றி இணையத்தில் தமிழ் எழுதவும் படிக்கவும் பெரும் வாய்ப்பாக யுனிகோடு அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.இன்று வெவ்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்த பல இணையதளங்களும் யுனிகோடு முறைக்கு மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
எழுத்துருமாற்றிகள்
பல்வேறு எழுத்துருக்களை யுனிகோடு முறைக்கும் யுனிகோடு முறையிலுள்ள எழுத்துருக்களை நமக்குத் தேவையான எழுத்துருக்களுக்கும் மாற்றித் தர பல இணையதளங்கள் உள்ளன.அவற்றுள் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.( http://www.suratha.com/reader.htm)
 தமிழ் மென்பொருள்கள் மிகுதியான அளவில் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் வந்துள்ளன.சான்றாக () இவ்விணையதளம் பிறமொழி் இணையதளத்தையோ,வலைப்பதிவையோ நாம் படிக்க விரும்பும் மொழிக்கு மாற்றித்தருகிறது.
 இணையம் வாயிலாக பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களைப் பெறமுடிகிறது.( http://www.tamilnool.com/) அதனால் ஒரு நூல் இணையத்தில் பதிவு செய்யப்பட்டவுடனேயே பரவலாக அனைவரும் அறி்ந்துகொள்ளமுடிகிறது.
இணைய வலைப்பதிவுகள்
 இணையதளங்களால் இன்று இலவசமாக வழங்கப்படும் வலைப்பதிவுகள் மிகப் பெரிய தகவல்த் தொடர்பு ஊடகங்களாக உருவெடுத்துள்ளன.
 எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ளவும்,கருத்துப்பரிமாற்றத்துக்கும் இவை பயனுள்ளவையாக உள்ளன.
 இணையத்தில் இன்று ஒரு செய்தி்யத் தேடினால் வலைப்பதிவுகளின் செய்திகளே மிகுந்து காணப்படுகின்றன.இது வலைப்பதிவுகளின் ஆதிக்கத்தைக் காட்டுவதாக உள்ளது.
 இணையம் தொடர்பான அடிப்படை அறிவு உள்ளவர்கள் கூட ஐந்து நிமிடங்களில் ஒரு வலைப்பதிவைத் தொடங்கிவிடமுடியும்.
வலைப்பதிவுத் திரட்டிகள்
()பல இணையதளங்களும் இவ்வலைப்பதிவுகளை உடனுக்குடன் திரட்டித் தருகின்றன.இதனால உலகளவில் வலைப்பதிவுகள் அனைவரின் பார்வைக்கும் வரும் வாய்ப்பு ஏற்படுகிறது.

வலைப்பதிவுகளின் இரு நிலை
1.இலக்கியம்,அரசியல்,கருத்துப்பரிமாற்றம்,விவாதம்,
கருத்துக்கணிப்பு,வரலாறு,பண்பாடு,பொழுதுபோக்கு ஆகிய கூறுகளைக் கொண்டவை முதல் வகை வலைப்பதிவுகளாகும்,
2.புகைப்படம், ஒலி,ஒளி கோப்புகள் வழிக் கருத்துப்புலப்பாட்டு நெறியைக் கொண்டு விளங்குவன இரண்டாம் வகை வலைப்பதிவுகளாகும்.
பாட்காஸ்டிங்
Broadcasting,Telecasting போல இதுவும் ஒரு வகையான ஒலிபரப்புச் சேவையாகும். (podcasting)இணையத்தின் வாயிலாகக் கருத்துக்களை பதிவு செய்து வைத்தல் இதன் தலையான பணியாகும்.இன்று படிப்போர் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் பாட்காஸ்டிங் சேவையால் நாம் விரும்பும் நேரத்தில் படித்துக் கொள்ள இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இதற்குச் சான்றாக(http://vetripadigal.blogspot.com/,http://www.thamizham.net/ ) தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியைப் பாட்காஸ்டிங்காகத் தரஇயலும்.அதனை நாம் விரும்பிய நேரத்தில் பதிவிறக்கிக் கேட்டுக்கொள்ளலாம்.இணையதளங்களும் வலைப்பதிவுகளும் இன்று இம்முறைக்கே மாறிவருகின்றன.


வலைப்பதிவுகளின் வளர்ச்சி

வலைப்பதிவுகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.இன்றைய சூழலில் முழுநேர வலைப்பதிவர்கள் பலரையும் காணமுடிகிறது. வலைப்பதிவுகளில் விளம்பரங்கள் வாயிலாகக் கி்டைக்கும் வருமானமே இதற்குக் காரணமாகும்.ஆட்சீன் உள்ளிட்ட பல அமைப்புகள் வலைப்பதிவு விளம்பரங்களை ஊக்குவித்து வருகின்றன.
இணையத்தில் தமிழ்பதிவுகள்
(http://www.chennailibrary.com/,http://noolaham.net)பல இணையதளங்களும் தமிழ் நூல்களை மின்னூல் வடிவில் பதிவு செய்துள்ளன.இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பாகவுள்ளது.சான்றாக நூலகம் என்ற இணையதளம் 2000 நூல்களைக் கொண்டு விளங்குகிறது.தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் நூல்கள் பலவற்றை நூலகம் என்னும் பகுதியில் உரையோடு பதிவு செய்து இற்றைப்படுத்தி வருகிறது.இணையம் வாயிலாகக் கல்வி வழங்குவதிலும் இத்தளம் சிறந்து விளங்குகிறது.


தமிழ் ஒலிக்கோப்புகள்

(http://pkp.in/mydrive/index.php?dir=,http://ravidreams.net/library/)பல இணையதளங்கள் ஒலி, ஒளிக்கோப்புகளை பதிவு செய்துள்ளன. இவற்றில் திருக்குறள், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் குரல்வடிவம், வைரமுத்து, திருவாசகம், குழந்தைக் கதைகள் மற்றும் பாடல்கள், போன்ற பலவற்றையும் காணமுடிகிறது.CIIL எனப்படும் செம்மொழி ஆய்வு நிறுவனம் தொல்காப்பியம், சங்க இலக்கியங்களை ஓதல் முறையில் ஒலி வடிவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது.


இணையத்தமிழ் நாளை

 இணையத்தில் தமிழ் எழுதுவதும் படிபதும் குறையும்.மாறாக ஒலி, ஒளிக் கோப்புகள் வழி இணையம் இன்னொரு ஒலி, ஒளி ஊடகமாக மாற்றமடையும்.
 இணையதளங்களைவிட வலைப்பதிவுகள் மிகுதியான வழக்கில் வரும்.
 இணையத்தில் தமிழ் எழுதுவதிலோ, படிப்பதிலோ சிக்கல் ஏதுமிருக்காது.
 உலகமொழிகள் யாவும் சில குறியீடுகளுக்குள் அடங்கிப்போகும்.அதனால் தமிழ் மொழியின் எழுத்துருச்சிக்கலும் முடிவுக்குவரும்.

 (E.books)மின்னூல் வடிவில் தமிழ்ப் பயன்பாடு அதிகரிக்கும். இணையத்தில் அதிகமான மின்னூலகங்கள் தோன்றும் இலவசமாகப் பதிவிறக்கிப் பயன் படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

 (Sony E book Reader) மின்னூல்களைப் படிக்க கையடக்கமான கருவிகள் பயன்பாட்டில் வரும்.

 (www.thinnai.nifo) செல்லிடப் பேசிகளிலேயே மின்னூல்களைப் பதிவிறக்கிப் பயன்படுத்திக் கொள்ள பல இணையதளங்கள் துணைசெய்யும்.

 எம்பி3 வடிவிலான தமிழ் கோப்புகளை பல இணையதளங்கள் வழங்கும்.சான்றாக (www.itsdiff.com ) இவ்விணையதளம் வானொலியில் இடம்பெற்ற பல ஒலிக் கோப்புகளை வழங்குகிறது.


முடிவுரை

 இணையத்தில் நேற்றும்,இன்றும் பெற்ற அனுபவங்களையும், வளர்ச்சியையும் கொண்டு நாம் நாளை செய்ய வேண்டியன……………..
 தமிழ் மென்பொருள்கள் மேலும் கண்டறியப்பட வேண்டும்.அரசு அதனை ஊக்குவிக்க வேண்டும்.
 பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழி ஆய்வு நிறுவனம் இணையம் தொடர்பான தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதிநல்கை செய்தல் வேண்டும்
 உலகு பரவி வாழும் தமிழர்கள் தம்முள் தொடர்பு கொள்ள மொழிச்சிக்கல் எழுத்து வடிவிலோ ஒலி வடிவிலோ உள்ளதா என ஆய்வு செய்து நீக்க வேண்டும்
 தமிழ் மொழியின் சிறப்புகளை உலகத்தால் அறிந்து கொள்ளவும் உலக மொழிகளில் உள்ள அறிவுச் செல்வங்களை தமிழ் மொழியில் உணர்ந்து கொள்ளவும் வகை செய்யவேண்டும்.
 தமிழ் ஆய்வு செய்வோருக்குத் தேவையான தரவுகள் யாவும் இணையத்தில் கிடைக்கும் வகை செய்தல் வேண்டும்.
 இன்றைய சூழலில் இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவோ இணையம் குறித்த மிகுதியான அறிவோ தேவையில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.இதனைப் பயன்படுத்தி நம் கருத்துக்களை நம் தாய்மொழியான தமிழில் வெளியிடுவது நம் தலையான கடமையாகும்.இதுவே நாம் நம் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சேர்த்து வைக்கும் செல்வமாகும்.


Series Navigation