இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

அக்னிப்புத்திரன்


காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கிவிட்டும், திமுக தலைமையிலான வலுவான ஏழு கட்சி கூட்டணியை முறியடித்துவிட்டும், அதிமுக அதிக ஓட்டுக்களைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது எதிர்க்கட்சிகளையும் அதிர்ச்சி வைத்தியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் இடைத்தேர்தலில் அதிமுக கணிசமாக இடங்களில் வெற்றி பெற்றபோதே எதிர்க்கட்சிகள் சற்றுச் சுதாரித்துக் கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். என்னதான் ஆளும் கட்சியிடம் படைபலம் பணபலம் என்று கூறினாலும் அதை எதிர்த்து நிற்க எதிர்க்கட்சிகளிடம் போதுமான தேர்தல் வியூகம் இல்லாமல் போனது ஏன் ? இந்த இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைச் சற்று ஆராய்வோம்.

இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி வெற்றி என்பது இயல்பான ஒன்று என்று இதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில், இன்னும் ஒரு ஆண்டுக்குள் பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலையில் அதுவும் பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்த ஒரு சூழ்நிலையில் அதிமுக இவ்வளவு கூடுதலான ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற முடிகின்றது என்றால் அதற்கு என்ன காரணம் ?

முதலில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தையே முழுமையாக நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. இந்த தேர்தலில் திமுக வாங்கியுள்ள ஓட்டைச் சற்றுக் கூர்ந்து அலசி ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும்.

சென்ற ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக பெற்ற வாக்குகள்: 80,875. தற்போதைய இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள்: 69,696. சுமார் 11,000 வாக்காளர்கள் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்கு அளித்துவிட்டு ஒரு ஆண்டுக்குள் தங்களின் முடிவை மாற்றி இருக்கிறார்கள் என்பது புலனாகின்றது.

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். திமுகவிற்கு நிரந்திரமாக உள்ள ஓட்டு வங்கி வாக்குகள் ஏறத்தாழ 55.000 வாக்குகள் அப்படியே திமுகவிற்குப் பதிவாகி இருக்கின்றன. கூட்டணிக் கட்சிகளின் பலமாக மேலும் 15,000 ஓட்டுகள் விழுந்து இந்த இடைத்தேர்தலில் சுமார் 70,000 வாக்குகளை திமுக பெற்றுள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகள் மூலமாக மேலும் விழ வேண்டிய சுமார் 15,000 ஓட்டுகள் காணாமல் போய்விட்டது! கும்மிடிப்பூண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது திமுக 78,201 ஓட்டுகள் வாங்கி இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் திமுகவுக்கு 56,554 ஓட்டுக்களே கிடைத்துள்ளது. இவ்வோட்டுகளில் கணிசமானவை திமுகவின் நிரந்திர ஓட்டு வங்கிக்குரியவை. நிரந்திர ஓட்டு வங்கியிலும் சற்று விலை போயிருக்கலாமோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.

திமுகவின் நிரந்திர ஓட்டைத் தவிர மற்றவர்கள் மாற்றி வாக்களித்து இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கலாம் ? இன்னும் ஒரு ஆண்டுக்குள் சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும் என்பதாலும், எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட்டு எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை என்பதாலும் ஆளும்கட்சிக்குப் போட்டால் ஏதாவது பயன் கிட்டும் என்ற நம்பிக்கையிலும் ஓட்டு மாற்றிப் போட்டு இருக்கலாம். மேலும் பல உள் மற்றும் வெளி வேலைகளின் தாக்கமும் காரணமாக இருக்கலாம்.

எது எப்படி இருப்பினும் ஒரு உண்மையை உரக்கக் கூறுகின்றது இந்தத் இடைத்தேர்தல் முடிவுகள்.

திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஓட்டு வங்கியிலிருந்து சுமார் 50% வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்பிக்கொள்ளும் ஆற்றல் அதிமுகவிடம் இருப்பது இதன் வழியாக நன்கு புலப்படுகின்றது. பொதுத்தேர்தலில் 50% முடியாவிட்டாலும் எப்படியும் 25% ஓட்டுக்களைத் திருப்பிவிட முயலுவார்கள். ஆக, திமுக மெத்தனமாகச் செயல்பட்டால் மீண்டும் கோட்டையை கோட்டை விட வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடக் கூடும்.

பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசின் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளினால் குறிப்பாக திமுகவினால் கடுமையாக விமர்சிக்கப்படவே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் எப்படி எல்லாம் எந்தந்த துறைகளில் பின்தங்கியுள்ளது என்பதை ஆதாரத்துடன் மக்கள் மன்றம் முன்பு எடுத்துச் சொல்ல தவறிவிட்டதாகவே தெரிகின்றது. அதே சமயம் தமிழகத்தின் 12 மத்திய அமைச்சர்கள் மாநிலத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று அடிக்கடி கிளிப்பிள்ளையைப் போல ஜெயலலிதா சொல்லியது மக்களிடம் எடுபட்டிருக்கின்றது. இப்படிச் சொல்லிச் சொல்லியே ஆளும் கட்சி மீது மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியைச் சுலபமாக மத்திய அரசின் பக்கம் திருப்பி விட்டுவிட்டார். மத்திய அரசு திமுகவின் அரசு என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்திவிட்டார். விளைவு ஆளும் கட்சிக்கு எதிராக விழ வேண்டிய அதிருப்தி ஓட்டுகள் இரண்டு பக்கமும் சிதறியுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், சாதனைகள் எதுவும் மக்களிடம் சரியான முறையில் சென்றடையவில்லை. மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சிறந்த செயல்பாடுகள் மற்றும் அவரது சாதனைகள் வடக்கே உள்ளவர்களே பாராட்டும் அளவிற்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால், அவரது செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் தமிழக மக்களிடம் சென்று சேர்ந்ததா என்று தெரியவில்லை. அதுபோலவே தமிழகத்தின் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அன்புமணி, டி.ஆர்.பாலு போன்றவர்களின் உழைப்பும் செயல்பாடும் மக்கள் மன்றத்தில் உரிய முறையில் கொண்டு போய் சேர்ப்பதில் கோட்டை விட்டுவிட்டனர். சிறப்பாக செயல்படும் இவர்களின் நிலையே இப்படி என்றால் தமிழகத்தின் மற்ற மத்திய அமைச்சர்களின் நிலையோ பரிதாபத்திற்குரியது. அவர்களின் பெயர்களே வெளி உலகுக்குத் தெரியவேயில்லை.

ஜெயா தொலைக்காட்சி, ஆளும் அதிமுகவிற்குப் பிரச்சார பீரங்கியாகச் செயல்படுகின்றது. அதே சமயம், சன் டிவி திமுகவிற்கு ஆதரவாக இருந்தாலும் அது அதிமுகவின் ஜெயா டிவியைப்போல செயல்படுவதில்லை. திமுகவிற்குக் கட்சியின் அதிகாரத்துவ தொலைக்காட்சி ஒன்று இல்லாதது மிகப்பெரிய குறையாகும். உடனடியாக, திமுக தன்கட்சி சார்பு தொலைக்காட்சி ஒளிவழி ஒன்றைத் தொடங்கினால் மட்டுமே அவர்களின் சாதனைகள் மற்றும் பிரச்சாரம் மக்கள் மன்றத்திற்கு விரைவில் சென்று சேரும்.

தமிழகத்தைப் பொருத்தவரையில், ஆளும்கட்சியான அதிமுகவில் ஜெயலலிதாதான் ஒன்வுமன் ஆர்மி! ஜெயலலிதாதான் எல்லாம் என்பதால், மக்கள் மற்ற மாநில அதிமுக அமைச்சர்களைச் சட்டை செய்வதில்லை. அதிமுக அமைச்சர்களும் மக்களைச் சட்டை செய்வதில்லை. ஏன் என்றால் மறுநாள் மந்திரியா என்று அவர்களுக்கே தெரியாது. முதல் நாள் இரவே நீ “எந்திரியா” என்றும் கூறும் நிலையில் அவர்களின் நிலை உள்ளது. எனவே அவர்களிடம் இருந்து யாரும் எதையும் பெரிதாக எதிர்பார்ப்பதில்லை. இதை எல்லாம் எதிர்க்கட்சிகள் முறையாக மக்களிடம் எடுத்துச் சென்று விளக்கியதா என்றால் அதுவும் இல்லை என்றே கூற வேண்டும்.

இந்த இரு தொகுதிகளின் இடைத்தேர்தலில் காட்டிய அதே அளவு பணபலம் மற்றும் பலப்பிரயோகத்தைப் பொதுத்தேர்தலில் ஆளும் அதிமுக தமிழகம் முழுவதும் காட்ட முடியுமா என்பதும் கேள்விக்குறியே! எது எப்படி இருப்பினும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு ஒரு புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளித்துள்ளது என்பதும், எதிர்க்கட்சிகளுக்கு ஒற்றுமையின் அவசியத்தை அறிவிக்கும் எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது என்பதும் உண்மை!

திமுக கூட்டணியின் கட்சித் தலைவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருப்பதால் எந்த ஒரு பயனும் ஏற்படாது. அக்கட்சிகளின் தொண்டர்கள் வரையும், அக்கட்சிகளின் அனுதாபிகள் வரையும் அந்த ஒற்றுமை ஊடுருவிச் செல்ல வேண்டும் என்ற உண்மையை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஓங்கி ஒலித்துள்ளது இந்தத் இடைத்தேர்தல் முடிவுகள்.

எனவே, அடுத்து வரும் பொதுத் தேர்தலைப் பொருத்த வரையில் பட்டுக்கோட்டையின் பாடல் வரிகள்தான் பொருத்தமான பதிலாக அமையும்!

விழித்துக்கொள்வோர் எல்லாம் பிழைத்துக்கொள்வார்!

குறட்டை விடுவோர் எல்லாம் கோட்டை(யை) விடுவார்!!

-அக்னிப்புத்திரன்.

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்