இடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…

This entry is part [part not set] of 32 in the series 20081225_Issue

இரா. குரு ராகவேந்திரன்.


இடஒதுகீட்டை விமர்ச்சனம் செய்வது தவறெனவும் தண்டிக்க சட்டமியற்றலாம் எனவும் திண்ணையில் கடந்த இதழில் திரு அப்துல் ரஹ்மான் அவர்கள் எழுதியிருந்தார்கள். அவருடைய நோக்கம் சரியாக இருந்தாலும் எதிர்பார்ப்பில் பிழை இருக்கிறது.

இடஒதுக்கீடு தேவை என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. வெகுகாலம் பின்தங்கியிருக்கும் மக்களை முன்னேற வழி செய்யாமல் இருந்தால் அந்நாடு பொறுப்பற்ற முறையில் பெரும் பிழை செய்கிறது என்பதாகும்.

ஆனால், இடஒதுக்கீடு சரியான முறையில் செய்யப்படுகிறதா, முறைகேடில்லாமல் தேவையான மக்களை மட்டும் சென்றடையுமாறு செய்யப்படுகிறதா என்பது கட்டாயம் விமர்ச்சனம் செய்து கவனிக்கப்படவேண்டியதுதான். விமர்ச்சனமே தேவையில்லை, 100 சதவீதம் சரியாகத்தான் செய்யப்படுகிறது என யாராவது சொல்லமுடியுமா?

நன்நோக்கத்துடன் இருக்கும் அரசியல்வாதிகள் இருந்தாலும் இடஒதுகீட்டை ஓட்டுக்கான ஆயுதமாக பயன்படுத்தும் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர். மக்களை முன்னேற்றவேண்டும் என்பதைவிட இடஒதுக்கீட்டை ஓட்டாக மாற்றுகின்றனர்.

இடஒதுக்கீடு சரியாக செய்யப்படுவதின் அடையாளம் காலம் செல்லச்செல்ல மக்கள் முன்னேற்றப்பட்டு ஒடுக்கீடு செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்து ஒருகட்டத்தில் ஒதுக்கீடு தேவையில்லை எனும் நிலையை நோக்கி பயணிக்கவேண்டும். ஆனால் நடப்பது என்ன? ஒதுக்கீடு செய்யப்படுவோர்களின் எண்ணிக்கை நாளாக நாளாக அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஐம்பதாண்டுகால இடஒதுக்கீட்டில் எவ்வளவு பேர் முன்னேற்றப்பட்டனர்? யாருக்காவது தெரியுமா? தெரிந்தாலும் அவர்களை விடுத்து பிற்பட்டோரில் அடிமட்டதில் தேவையானவர்களுக்கு மட்டும் ஒதுக்க பேசும் தைரியம் யாருக்கும் இல்லை. ஏனென்றால் பேசினால் ஓட்டு பறிபோய்விடும். முன்னேறிய மக்களும் கீழே இருப்பவர்களுக்காக விட்டுகொடுக்க தயாரில்லை. இப்போது இருக்கும் முறையில் இன்னும் நூறு ஆண்டுகழித்தும் இடஒதுக்கீடு தேவைப்படும். பல நூற்றாண்டுகளாக பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்ற இன்னும் பல நூறாண்டுகள் தேவைப்படும் எனச்சொன்னால் அது நாட்டின் திறமையின்மையும், மக்களின்மீது உண்மையான அக்கறையின்மையையும் காட்டும்.

இந்தியாவின் பெரும் மக்கள் தொகையினால், இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதற்காக எதையும் தூக்கிக் கொடுக்கமுடியாது, பிற்பட்ட மக்களிடையே பெரும் போட்டி இருக்கிறது. இவர்களில் ஐம்பதாண்டுகால இடஒதுக்கீட்டில் கல்வியிலும் அரசாங்கத்திலும் முன்னேறி டாக்டர்களாகவும் இஞ்சினியர்களாகவும் இன்னும் பலவிதத்திலும் முன்னேறியவர்கள் உள்ளனர். இவர்களின் பிள்ளைகளோடு இன்னும் அடிமட்டத்திலிருப்போரின் பிள்ளைகள் போட்டிபோட முடியுமா? நியாயமாக யோசித்துப்பாருங்கள். வருடத்திற்க்கு 30000 ரூபாய் சம்பளம் வாங்குவோரின் பிள்ளைகளோடு தினக்கூலியின் பிள்ளைகளும் மாததிற்கு 2000 ரூபாய் கூட சம்பாத்யம் செய்யமுடியாதவர்களின் பிள்ளைகளும் போட்டி போடமுடியுமா? கல்வி வியாபாரமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நல்ல கல்வி மற்றும் கற்கும் சூழ்நிலை என்பது பெற்றோரின் நல்ல பொருளாதாரத்தை பொருத்தது என்பதை யாராவது மறுக்க முடியுமா? (கொஞ்சம் விதிவிலக்கு இருக்கலாம்). வறுமைகோட்டிற்கு கீழே பலகோடிக்கணக்கான மக்கள் உள்ளனர் என்பதை அரசே ஒப்புக்கொள்கிறது. இவர்களின் பிள்ளைகள் எப்படி போட்டியிடுவார்கள்? எப்போது முன்னேறுவார்கள்? இப்போதிருக்கும் ஒதுக்கீட்டு முறை பிற்பட்டோரில் கீழே இருப்பவர்களுக்கு கைகொடுக்காது. கொடுக்கிறமாதிரி கொடுத்து பிடிங்கிக்கொள்ளும் இந்த உண்மையை வறுமையின் கீழ்பட்ட மக்கள் உணராததும் அதை உணர்த்தும் வகையில் பிறர் குரல்கொடுக்காமல் இருப்பதும்தான் பரிதாபம்.

இதற்கு நல்ல வழி, இடஒதுக்கீட்டை அரசியல்வாதிகளின் கையில் கொடுக்காமல் அரசாங்கத்தில் மத்திய தேர்வாணையம் மாதிரி ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தவேண்டும். இடஒதுக்கீட்டை யாருக்கு எவ்வளவு என்பதை முறைப்படி நிர்ணயித்து கூட்டும் அல்லது குறைக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு இருக்கவேண்டும். மக்களிடம் மற்றும் அரசியல்வாதிகளிடம் விவரங்களை பெறலாம் ஆனால் நிர்பந்திக்கப்படக்கூடாது.

ஒதுக்கீடு தேவைபடுவர்களை மட்டும் சரியாக கணிப்பது முடியாது என இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூறினால் அது பொய், வேஷம் என உணரவேண்டும். கணிப்பதற்கு முறையான வழிகள் இருந்தாலும் அரசியல்வாதிகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அனைவரின் ஓட்டுகளும் வேண்டும். உதாரணமாக மேற்கல்விக்கான ஒதுக்கீட்டில் பிற்பட்டோரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை கணிக்க முடியாது, 1930 எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டைதான் கணக்கில் கொள்ளமுடியும் என அரசியல் நிர்பந்தம் காரணமாக அரசு கூறியுள்ளது. வல்லரசாக கனவுகாணும் நாட்டில் இதைகூடவா தெளிவாக செய்ய முடியாது? குத்துமதிப்பாகத்தான் செய்யமுடியும் என பிடிவாதம் பிடிக்ககூடாது. ஒவ்வொறு பள்ளியிலும் மாணவர்களின் ஜாதி மற்றும் தந்தையின் தொழில் விஷயங்கள் உள்ளன. ஒரு சுற்றறிக்கை மூலம் 10வது அல்லது 12வது படிக்கும் மாணவர்களின் விஷயங்களை நிச்சமாக பெறலாம். மேற்கல்விக்கு பிற்பட்டோரின் பொதுவான மக்கள் தொகை தேவையில்லை. 10வது அல்லது 12வது படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையே போதுமானது, சரியானது. ஆனால் இதுபோன்ற வழிகளை பேச அரசியல்வாதிகள் முன்வரமாட்டார்கள். எனவே இடஒதுக்கீட்டிற்கு மத்திய தேர்வாணையம் மாதிரி சரியான தனிஅமைப்பொன்று தேவை.

இடஒதுக்கீடு என்கின்ற நல்ல விஷயம் கீழ்மட்டத்திலிருந்த ஆயிரக்கணக்கான மக்களை மேலே கொண்டுவந்திருக்கிறது. உண்மையாகவே மக்களுக்கு நன்மைசெய்ய உழைக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். ஓட்டுக்காக, சுயலாபத்துக்காக உழைக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். மக்களைகேட்டால் எல்லாருமே தங்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என்பார்கள்.

இம்மாதிரியான விஷயங்கள், பிரச்சினைகள் இருக்கும்போது வாயைமூடிக்கொண்டு பேசாமலிருக்கவேண்டும், விமர்ச்சனம் செய்யக்கூடாது என்பது சரியல்ல. இடஒதுக்கீடு என்பது வெறும் விவாததிற்கான கருத்து அல்ல. மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை மற்றும் எதிர்காலம். தேவைப்படாத ஒருவர் ஒதுக்கீட்டினால் பயன்பெற்றால் அது தேவையான ஒருவரின் வாழ்க்கையைத் தட்டிப்பறித்ததாகும்.

உணர்வுபூர்வமாக சிந்திக்காமல் உண்மையாக சிந்திக்கவேண்டும்.

இரா. குரு ராகவேந்திரன்.

Series Navigation