ஆவலும் அப்பாவித்தனமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 36-வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி ‘)

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

பாவண்ணன்


என் மகன் மயனுடைய ஓவியப் பயிற்சிக்காக எங்கள் குடியிருப்பிலிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் தள்ளி ஜீவன்பீமநகர் என்னும் இடத்திலிருந்த பயிற்சி நிலையமொன்றில் சேர்த்திருந்தோம். பேருந்தைப் பிடித்துத்தான் அந்த இடத்துக்குப் போக வேண்டும். ஜீவன்பீமநகர் என்னும் பெயரை முழுதாகச் சொல்லத் தெரியாமல் மழலையில் அவன் ஜீபூம்பா நகர் என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகும் அந்த நகரைத் தான் சூட்டிய பெயராலேயே அழைத்து வந்தான். நாக்கில் படியாமலோ மனத்தில் படியாமலோ குழந்தைகள் தாமாகச் சூட்டிவிடும் பெயர்களில் எப்போதும் இயற்கையான கவர்ச்சியுண்டு. தம் மனத்தில் பொதிந்துள்ள குறைவான சொற்களே இடம்பெற்றிருக்கும் மொழிக்கிடங்கிலிருந்து மிகக்கச்சிதமாக இப்பெயர்களை அவர்கள் மிக இயல்பாக உருவாக்கி விடுகிறார்கள். சாப்பிடுகிற தட்டுக்கும் போட்டுக் கொள்கிற சட்டைக்கும் கூட அவர்கள் சூட்டி வைத்திருக்கும் பெயர்களின் பட்டியலைப் படிப்பதும் அறிவதும் எந்த இலக்கியச் சுவைக்கும் நிகரானது.

நாளாவட்டத்தில் உலகியல் அறிவும் கல்விஅறிவும் அவர்களைத் தம் குழந்தைமையிடமிருந்து பிரித்து விடுவதுதான் சோகம். சிற்சில சமயங்களில் மிக வயதானவர்களிடமும் அவ்வளவாக உலகியல் அறியாத அப்பாவிகளிடமும் அபூர்வமான தருணங்களில் இக்குழந்தைமை வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். உலகியல் அறியாதவர்கள் என்பதாலேயே உலக வழக்கின் உச்சரிப்புகளைப் பொருட்படுத்தாமல் தமக்கே உரிய உச்சரிப்புகளுடன் சொற்களைக் கையாளுவதையும் கண்டிருக்கிறேன்.

குடகு நாட்டிலிருந்து வந்திருந்த நண்பரொருவருக்கு அலுவலக முகவரிக்குச் சொந்த ஊரிலிருந்து ஒருநாள் கடிதம் வந்தது. அவரது தாயாருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக அவரது இளைய சகோதரன் எழுதியிருந்தான். நண்பர் உடனே விடுப்பெடுத்துக் கொண்டு போய்விட்டார். மகனைக் கண்டதும் தாயார் அதிகமும் பிதற்றத் தொடங்கி விட்டார். அந்த ஊரில் தன் நோயைக் குணப்படுத்தும் மருத்துவர்கள் இல்லையென்றும் பெங்களூரில் இருக்கிற மருத்துவர்களால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றும் உடனே அழைத்துச் செல்லவில்லை என்றால் உயிரிழக்க நேருமென்றும் சொல்லி அழுதிருக்கிறாள். நண்பர் உள்ளூரில் மருத்துவம் பார்த்த மருத்துவரைச் சந்தித்துப் பேசினார். அவரும் தாம் பார்த்த மருத்துவத்தையெல்லாம் விரிவாகவே சொல்லியிருக்கிறார். அவரைப் பற்றித் தொடர்ந்து நண்பரின் தாயார் அவநம்பிக்கையையே தெரியப்படுத்தி இருக்கிறார். அதே தெருவில் ஒன்றிரண்டு நபர்கள் பெங்களூருக்குச் சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் குணமாகி வந்திருக்கும் கதைகளையும் எடுத்துக் காட்டித் தன்னையும் அழைத்துச் சென்றால்தான் பிழைப்பது சாத்தியமாகும் என்று அழுதிருக்கிறார்.

வேறு வழி புரியாத நண்பர் மிகுந்த பணச்செலவில் வாடகைக்காரில் அம்மாவை அழைத்துக் கொண்டு பெங்களூர் வந்து சேர்ந்தார். எனக்குத் தெரிந்த மருத்துவரின் நர்சிங்ஹோமில் அவரைச் சேர்த்தோம். சிறப்பு அறை. ஒரு நாளைக்கு 500 ரூபாய் வாடகை. மருத்துவமனை என்றே புலப்படாத வகையில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட விடுதி அறையைப் போன்ற இடம். தாயாருக்கு அந்த இடத்தில் சேர்ந்ததைப் பற்றி மிகவும் திருப்தி. அறை வாடகை பற்றி மறுபடியும் மறுபடியும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டார். மருத்துவர் அவரிடம் ஒருமணிநேரத்துக்கும் மேல் பேசி, தன்னால் அந்த நோயை எளிதாகக் குணப்படுத்திவிட முடியும் என்றும் ஒருவாரம் படுக்கையில் இருக்க வேண்டும் என்றும் சொல்லி மருத்துவத்தைத் தொடங்கினார். காலை, இரவு இரண்டு வேளைகளிலும் இரண்டு ஊசிகள். பகலில் நரம்பில் டிரிப்ஸ் ஏறும். வேளைக்கு மூன்றாக மூன்று வேளைகளுக்கும் வண்ணவண்ண மாத்திரைகள். சரியான மணிக்கு இதமான வார்த்தைகளுடன் வந்து மாத்திரை, மருந்துகளைக் கொடுத்துவிட்டுச் செல்லும் தாதிகளின் சேவையில் தாயார் பூரித்துப் போய்விட்டார். ஒரே வாரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். வெளியேறும் தருணத்தில் மருத்துவர் அவரிடம் கனிவாகப் பேசி உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளும் முறைகளைப் பற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு உட்கொள்ள வேண்டிய மாத்திரை மருந்துகளின் வகைபாடுகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். ‘எவ்வளவு ஆச்சிங்க டாக்டர் ? ‘ என்று கேட்டார் தாயார். ‘ நீங்க ஏம்மா அத நெனச்சி கவலப்படறீங்க ? எல்லாத்தயும் உங்க புள்ள பாத்துக்குவாரு ‘ என்றார் மருத்துவர். விடாப்பிடியாக மறுபடியும் மறுபடியும் தாயார் கேட்கவே ‘அம்பதாயிரம் அறுபதாயிரம் இருக்கும், பில் போட்டாத்தான் சரியா சொல்ல முடியும் ‘ என்றார். அதைக் கேட்டதும் தாயாரின் முகம் சந்தோஷத்தில் மலர்வதைப் போல மலர்ந்தது. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மருந்துப் பெயர்கள் எழுதப்பட்ட பெரிய சீட்டையும் அவரது கையிலேயே கொடுத்தார் மருத்துவர். நன்றி சொல்லி வணங்கிய தாயாருடன் கீழே சென்ற நண்பர் அவரை வாடகைக்காரில் அமர வைத்துவிட்டு மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த மீண்டும் மேலே வந்தார். கட்டணச்சலுகை ஏதேனும் இருப்பின் வாங்கித்தர நானும் கூட இருந்தேன்.

மருத்துவர் புன்னகைத்தபடி அறைவாடகையை மட்டும் கட்டிவிட்டுச் செல்லுங்கள் என்றார். எங்கள் இருவருக்கும் அதிர்ச்சி. குழப்பத்தில் பேச்சு வராமல் தயக்கத்தைப் புலப்படுத்தினோம். அவர் சிரித்தபடி நண்பரின் தாயாருடைய உடல்நிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் வெகுநாட்களாக மகன் சென்று பாராதது, பெங்களூர் மருத்துவம் பற்றிக் கிராமத்தில் எழுந்த கதை, பெருந்தொகையைச் செலவு செய்து பிழைத்தெழுந்த ஆள் கிராமத்து மூலை முடுக்கிலெல்லாம் பேசப்படுகிற ஆளாக மாறி விட்டதும், அதே புகழ் அதே விலையில் தனக்கும் கிட்ட வேண்டும் என்று உள்ளூர அவள் எடுத்த முடிவு எல்லாம் கலந்த விநோதக் கலவைதான் அந்த நோய் என்றும் சொன்னார். தனக்கென்று பெருந்தொகை செலவு செய்யப்பட்டதைக் கேட்டதும் அவள் நோய் பஞ்சாய்ப் பறந்து விட்டதென்றார். மருத்துவ மனையில் அவளுக்குத் தரப்பட்டதெல்லாம் வைட்டமின் மருந்துகளே என்றும் அதையே விதம்விதமாகச் சீட்டிலும் எழுதியிருப்பதாகவும் தைரியமாக வாங்கித் தரும்படியும் சொன்னார்.

ஆச்சரியமான நண்பருடைய தாயாரின் கதையை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம் மலையாள எழுத்தாளரான வைக்கம் மகம்மது பஷீர் தீட்டிய ஐஷூக்குட்டியின் சித்திரம் மனத்தில் நிறைகிறது.

ஐஷூக்குட்டி இளம்பெண். அப்பாவி. வறுமைப் பின்னணியில் அமைந்த குடும்பம். தன் கணவனுக்கு பெரிய அளவில் எந்த வருமானமும் இல்லை என்பதோ உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் என்பதோ குடும்பத்தின் மூத்த மகன் என்பதால் அவனுக்குச் சில பொறுப்புகள் உள்ளன என்பதோ எதுவும் தெரியவில்லை அவளுக்கு. அவளுக்குத்தான் அன்று பிரசவ வலி. ‘லாக்கோட்டரை ‘ அழைத்துவராவிட்டால் பிரசவிக்கப் போவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறாள். பக்கத்து வீடுகளில் பணக்காரர்கள் பிரசவத்துக்கு டாக்டரை வரவழைப்பதைப் பார்த்தும் கணவனின் தம்பி மனைவியின் பிரசவத்துக்கும் டாக்டர் வரவழைக்கப்பட்டதைப் பார்த்தும் ஐஷூக்குட்டிக்கும் அந்த ஆசை தொற்றிக் கொண்டது. முதல் பிரசவத்துக்கே அவளுக்குள் அந்த ஆசை இருந்தது. இறுதி நேரத்தில் எப்படியோ மறந்து போயிற்று. இரண்டாவது பிரசவத்துக்காவது மறக்காமல் டாக்டரை வரவழைத்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தில் டாக்டர் வந்தால்தான் பிரசவம் என்பதில் உறுதியாக இருக்கிறாள். கணவன்காரனுக்கோ டாக்டரை வரவழைக்கத் தேவையான அறுபது ரூபாயைப் புரட்ட வழியில்லை. பிரசவம் பார்க்க வந்த மருத்துவச்சி கூட வயிற்றைத் தடவிப் பார்த்து விட்டு சிக்கலில்லாமல் பிரசவித்துவிட முடியும் என்றும் டாக்டரின் அவசியமில்லை என்றும் சொல்கிறாள். ஒரே குடும்பத்தில் சின்னமருமகளாக இருக்கிறவளுக்கு வரவழைக்கப்பட்ட டாக்டர் மூத்த மருமகளான தனக்காக வரவழைக்கப் பட்டால் என்ன என்கிற எண்ணத்தில் பிடிவாதமாக இருக்கிறாள் ஐஷூக்குட்டி. குடும்பத்தினர் பலரின் ஆலோசனைகள், விவாதங்கள், கருத்து மாறுபாடுகள், அறிவுரைகள், இயலாமைகள். இறுதியில் டாக்டர் வரவழைக்கப்படுகிறார். வாசலில் டாக்டர் இறங்கும்போதே அறைக்குள் சந்தோஷத்துடன் குழந்தையை ஈன்றெடுக்கிறாள் அவள். எது எப்படியாக இருந்தாலும் டாக்டர் வந்தபிறகுதானே பிரசவித்தோம் என்கிற மனநிறைவுடன் சிரிக்கிறாள் ஐஷூக்குட்டி.

கதையை முக்கியமான ஒன்றாக்கும் விஷயங்கள் பல. வீண் ஜம்பத்துக்கு ஆவலுறும் ஒரு பெண்ணின் கதை என்கிற அளவிலோ அல்லது டாக்டரை வரவழைக்க இயலாத வசதியற்ற வறுமைக் குடும்பத்தின் கதை என்கிற அளவிலோ இருந்திருந்தால் இக்கதைக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கூடியிருக்காது. ஐஷூக்குட்டியின் அப்பாவித்தனத்தையும் நுட்பமான தொனியில் வெளிப்படுத்தப்படும் குடும்பத்தின் வறுமையையும் இணைத்துள்ள விகிதமே இக்கதையின் சிறப்பு. கதை நெடுகப் பரவியிருக்கும் எளிய நகைச்சுவையும் ஒரு காரணம். ‘லாக்கோட்டரைக் கொண்டா ‘ என்று கொச்சையில் அவள் போடும் அலறலில் வெளிப்படும் அப்பாவித்தனத்தையும் வலியையும் எளிதில் மறக்க முடியாது. அவஸ்தையின் வெளிப்பாடாக எழும் அக்குரல் மெல்ல மெல்ல ஒரு நகைச்சுவைச் சுவடு படிந்த குரலாக மாறுவது விந்தையான ஒன்றாகும். கதையின் உச்சத்தில் ‘லாக்கோட்டரைக் கொண்டா ‘ என்கிற அலறல் வார்த்தை ஊரெல்லாம் பரவி, குறும்புக்காரர்களின் கிண்டல் வார்த்தைகளாக மாறி, ஐஷூக்குட்டியின் இடுகுறிப்பெயராகி, வறுமையும் ஆவலும் இணைந்த மனத்தின் படிமமுமாகி மாற்றம் கொள்ளும் புள்ளி பஷீரின் மேதைமை தெளிவாகும் இடமாகும்.

*

கேரளத்தின் மூத்த படைப்பாளி வரிசையில் முக்கியமானவர் வைக்கம் முகம்மது பஷீர். ஞானபீடப் பரிசைப் பெற்றவர். எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது, இளம்பருவத்துத் தோழி, பாத்துமாவுடைய ஆடு. மதிலுகள் ஆகியவை இவரது முக்கிய பிற படைப்புகள். மெல்லிய நகைச்சுவை உணர்வோடு கதை சொல்லும் திறன் ஈடு இணையற்றது. புஷ்பவேணி கோவி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்திய அகாதெமி வழியாக 1971 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மலையாளச் சிறுகதைகள் ‘ என்னும் தொகுப்பில் பஷீரின் இக்கதை இடம்பெற்றுள்ளது.

Series Navigation

1 Comment

Comments are closed