ஆளுடையப்பிள்ளையின் புதியன படைத்த திறம். (பதிக எண் 71 முதல் பதிக எண் 80 வரை)

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

மு. பழனியப்பன். எம்.ஏ., எம்.ஃபில்.,


சம்பந்தப்பெருமான் சீர்காழியில் உறையும் போதெல்லாம் அத்தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவர் தனது தாய்வீடாகிய சீர்காழிப் பதியில், விளங்கும் இறைவனையும், இறைவியையும் தம் பனுவல்களால் பாடுகின்றபோது ஒவ்வொரு பதிகத்திற்கும், ஒவ்வொரு சிறப்பை ஏற்றிப்பாடியுள்ளார். இதனால் சீர்காழிப் பதிகங்கள் மற்ற பதிகங்களிலிருந்து வேறுபட்டு அமைவனவாக உள்ளன. யாப்புநிலையாலும், சித்திரக்கவிமுறையாலும், பொருள்கோள் அமைப்பாலும் சீர்காழிப்பாடல்களை அவர் வேறுபடுத்தியுள்ளார். இதனால் புதியன படைக்கும் அவரது முயற்சிக்குச் சீர்காழிப் பதிகங்கள் களமாக அமைந்து விடுகின்றன.

தாய்வீடு எனச் சீர்காழி சுட்டப்பெற்றிருப்பதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று சம்பந்தப் பெருமானின் பிறந்தஊர் அது; அதாவது அவரைப் பெற்றதாய் வாழுமூர் அதுவன்றி ஞானப்பால் அருத்திய தாய் உறையுமூர் மற்றது. எனவே அவ்வூரின் மீது கொண்ட காதலால், மீண்டும் மீண்டும் அவ்வூரைப்பற்றிப்பாடும் சூழல் ஏற்பட்டபோது, படிப்போருக்குச் சுவை கூட்டும் பாங்கு கருதி பதிகங்களைப் பல்வகை அமைப்பால் வேறுபடுத்தி அவர் பாடமுற்பட்டுள்ளார் என முடியலாம்.

சீர்ழியும் அதன் திருப்பெயர்களும்
பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், சிரபுரம், புறவம், சண்பைநகர், சீகாழி, கொச்சைவயம், பூந்தாராய், கழுமலம் ஆகிய பெயர்களை உடையதாகச் சீர்காழி விளங்குகின்றது. இப்பெயர்க்கான காரணங்கள் பின்வருமாறு
1. பிரமபுரம் – பிரமன் பூசித்த காரணத்தால் ஏற்பட்ட பெயர்.
2. வேணுபுரம் -சூரபதுமனுக்கஞ்சி இந்திரன் பூசித்தபோது
இறைவர் வேணுவாய் (மூங்கிலாய்) முளைத்தெழுந்தமையால் பெற்ற பெயர்.
3. புகலி – சூரபதுமனால் வந்த துன்பம் பொறுக்கவாற்றாது
முருகப் பெருமானைத் தந்தருளும்படி
தவங்கிடந்த தேவர்கள் புகலடைந்ததனாற் பெற்ற பெயர்.
4. வெங்குரு – அசுரகுரு சுக்கிரன், பூசித்துத் தேவகுருவுக்கு
இணையானநிலை பெற்றமை கருதி வந்த பெயர்.
5. தோணிபுரம் – உலகமெல்லாம் அமிழ்ந்தபோது பிரணவமாகிய
தோணியாக மிதந்து, சிவபெருமான் அம்மையுடன்
எழுந்தருளப் பெற்றதால் இப்பெயர் பெற்றது.
6. பூந்தாராய் – பூமியைக் கொம்பால் தரித்த திருமால்அப்பாவம்
போக வழிபட்டமையானும், இரணியாக்கனை
வெல்ல பன்றி உருவம் பெற்ற திருமால்
அப்பாவம் போக்க வழிபட்டமையானும்
இப்பெயர் ஏற்பட்டது.
7. சிரபுரம். தேவருடன் அமுதுண்ண கலந்துவிட்ட,
அசுரனைச் சூரியன் சட்டுவத்தால் வெட்ட
அவனது தலை பூசித்தமை கருதி எழுந்த பெயர்.
8. புறவம் சிபிச்சக்கரவர்த்தியிடம் புறாவாக வந்த
தீக்கடவுள் சோதித்த பாவம் போக்க,
வழிபட்டமையான் ஏற்பட்ட பெயர்.
9.சண்பை கபில முனிவர் சாபத்தால் தம் குலத்தினன்
வயிற்றுதித்த பிள்ளையாகிய இரும்புலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிட
சண்பைப் புல்லாக முளைக்க, அவற்றையே ஆயுதமாகக் கொண்டு போர்செய்து, யாதவ குமாரர் மடிய அப்பழி போகும்படி கண்ணன் வழிபட்டமையான் ஏற்பட்ட பெயர்.
10. வளர்காழி – காளிதன் என்ற பாம்பும், நடனத்தில் தோற்ற
காளியும் பூசித்தமையான் போந்த பெயர்.
11.கொச்சைவயம் பராசரர், மச்சகந்தியைப் புணர்ந்ததனால்
ஏற்பட்ட நாற்றத்தையும் இழிவையும்
போக்கிக்கொள்ள வழிபட்டமையான் ஏற்பட்ட பெயர்.
12.கழுமலம் உரோமமுனிவர் ஞானோபதேசம் பெற்று
உலகஉயிர்களின் மலங்களைப் போக்கும் நிலை
எய்தினமையான் இப்பெயர் ஏற்பட்டது.

இவ்வாறு பன்னிருபெயர்களை உடையதாய் சீர்காழி விளங்குகிறது. கட்டுரைக்கு உரிய பகுதியில் எட்டுப் பதிகங்கள் சீர்காழி சார்ந்தனவாகவும், இரண்டு மட்டும் வேறு பதிகள் பாற்பட்டனவாகவும் அமைந்துள்ளன. எட்டுப் பதிகங்களில், பிரம்மபுரம் எனப்பெயரிவ் மூன்றும், கழுமலம் என்ற பெயரில் இரண்டும், சண்பைநகர், புறவம், வெங்குரு பெயரில் ஒவ்வொன்றும் பாடப்பெற்றுள்ளன. இவையெட்டும் ஒரேதலம் குறித்தமைவன என்றாலும் ஒவ்வொன்றுக்கும் இடையே பல வேறுபாடுகள் காணப்பெறுவதால் புதுமை பெறுகின்றன.

1. பிரம்மபுரப் பதிகங்கள்.
பிரம்மபுரம் சார்ந்தனவாக மூன்று பதிகங்கள் அமைந்துள்ளமையால் பெருமை கருதி அவை முதலில் ஆராயப்பெறுகின்றன.

1.1. திருச்சக்கரமாற்று. (74) (2ம் திருமுறை . பதிகஎண்209)
விளங்கிய சீர் எனத் தொடங்கும் பதிகம் மேற்கண்ட பன்னிரு பெயர்களையும் பாடல்கள் தோறும், சக்கரம்போல் மாற்றி மாற்றிச், சுழற்றிச் சுழற்றி இசைக்கும் முறையில் பாடப்பெற்றுள்ளது. முதற்பாடலில் சம்பந்தப்பெருமான் பிரமபுரத்தில் துவங்கி, கழுமலத்தில் சக்கரமாற்றாக ஊர்ப்பெயர்களை அமைத்துள்ளார். முதற்பாடல் பின்வருமாறு.

விளங்கியசீர்ப் பிரனூர், வேணுபுரம்,புகலி,வெங்குரு,மேற்சோலை
விளங்கவரும் தோணிபுரம்,பூந்தாராய்,சிரபுரம்,வண் புறவமண்மேல்
களங்கமிலூர் சண்பை,கமழ் காழி,வயங்கொச்சை மலம்என்றின்ன

இரண்டாம் பாடல் கழுமலம் எனத் தொடங்கி, தோணிபுரம் என முடிகின்றது. மூன்றாம் பாடல் தோணிபுரத்தில் தொடங்கி, வெங்குரு என முடிகின்றது. அடுத்தபாடல் வெங்குருவில் தொடங்கி சண்பையில்; முடிய, இதற்கடுத்த பாடல் சண்பையில் தொடங்கி புறவத்தில் முடிய இவ்வாறு ஒருபாடலின் இறுதி ஊர்ப்பெயர் அடுத்த பாடலின் தொடக்கமாக அமைந்து சக்கரச் சுழற்சி பெற்று சக்கரமாற்று என்ற புதுவகை அமைப்பு கொண்டதாக இப்பதிகம் விளங்குகின்றது.

மேலும் இப்பதிகம் வாயிலாக சிவபெருமானின் சிறப்புமிக்க ஊர்களுள் ஒன்றாகச் சீர்காழியை சம்பந்தப் பெருமான் எடுத்துக்காட்டியுள்ளார். இப்பதிகம் முதல்பாடலில் பிரமனூர் எனத் துவங்குவதால் பிரம்மபுரம் தலமாகக் குறிக்கப் பெற்றுள்ளது.

1.2. கோமூத்திரி அந்தாதி ( 77) (2ம் திருமுறை . பதிகஎண்.210 )
அந்தம் ஆதியாக நடப்பது அந்தாதி எனப்படும். கோமூத்திரி என்பது பசுவின் பாய்ச்சல் கருதிய சித்ரகவியாகும். இதற்குக் காட்டாக இப்பதிகத்தில் ஒருசில சொற்களைக் காணஇயலுகின்றது.

தெரித்தபுகழ் என்ற மேலடியும், விரித்தபுகழ் என்ற கீழடியும் ஒன்றோடொன்று முதல்எழுத்து தவிர்ந்து மற்ற எழுத்துக்களால் ஒரே அமைப்பினவாக இருப்பதனால் நேர்முறையிலும், சாய்முறையிலும் தொடர்புடையனவாகக் காணப்பெறுகின்றன. இவ்வமைப்பில் முழுப்பாடலையும் பாடுவது கோமூத்திரி (கோ- பசு, மூத்திரி- மூத்திரப் பாய்ச்சல்) என்னும் சித்திரக்கவியாகும்.

இங்குச் சம்பந்தப் பெருமான் அந்தாதித் தொடையைக் கோமூத்திரியின் அமைப்பில் கையாளுவதால் இப்பதிகம் இப்பெயர் பெறுகின்றது. எவ்வாறெனின் கருதுமூரே என முதற்பாடல் முடிகின்றது. அடுத்தபாடல் ஊரே என ஆரம்பிக்காது கருத்துடைய என்று தொடங்குகின்றது. இவ்வாறே ஒவ்வொரு பாடலும் ஊரே என முடிய, அதன் முன் சீரே அடுத்த பாடலின் தொடக்கமாக உள்ளது. இப்பாய்ச்சல் கோமூத்திரியாகக் கொள்ளப்பெற்று, இப்பதிகம் அவ்வந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளது எனல் பொருந்தும். இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் பன்னிரண்டு பெயர்களும் முன்னர் சக்கரமாற்றில் சொல்லப்பெற்றது போலவே அடுக்கிக் கூறப்பெற்றுள்ளன. முதல்பாடல் பிரம்மபுரத்தில் தொடங்கி, கழுமலத்தில் முடிவதாக உள்ளது. எனவே பிரம்மபுரம் தலமாகக் குறிக்கப்பெற்றுள்ளது. அடுத்த பாடல் கழுமலத்தில் தொடங்கி சண்பை எனமுடிகிறது. இதன்பின்னர் வரும்பாடல்களும் முன்னர் கண்ட ஊர்ப்பெயரந்தாதி முறையிலேயே பாடப்பட்டிருப்பது எண்ணத்தக்கது,

1.3. பல்பெயர்பத்து (78) (1ம் திருமுறை . பதிகஎண். 63)
இப்பதிகம் சீர்காழிக்குரிய பல பெயர்களை, அதாவது பன்னிரு பெயர்களைக், கொண்டு முடியும் காரணத்தால் பல்பெயர்பத்து என வழங்கப் பெறுகின்றது. பிரமபுரத்தானே என முதற்பாடல் முடிவதால் இப்பதிகமும் பிரம்மபுரம் சார்ந்ததாக அமைகின்றது. இப்பதிகம் மற்ற பதிகங்களின் எண்ணிக்கை அளவான பதினொன்றில் இருந்து மிகுந்து, பன்னிருபாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஏனெனில் பன்னிரு பெயர்களும் அமையவேண்டும் என்ற எண்ணம் கருதி சம்பந்தப்பெருமான், இப்பதிகத்தை நீட்டிப் பாடியுள்ளார். பன்னிரண்டாவது பாடல் திருக்கடைக்காப்புப் பாடலாக அமையினும் அதில் கழுமலம் என்ற பெயர் குறிப்பிடப்பெறுவதன்மூலம் முன்னர் காட்டிய ஊர் வைப்புமுறை இங்குப் பின்பற்றப் பெற்றுள்ளது என்பது தௌ¤வு. இப்பதிகத்துள், பிரம்மபுரம் தொடங்கி கழுமலம் வரையான பெயர்களுக்கான காரணங்களைச் சம்பந்தப் பெருமான் பாடல்தோறும் ஏற்றிப் பாடியுள்ளமை கருதத்தக்கது. எனவே பதிகத்தை தேவை கருதி நீட்டிப்பாடும் புதுமைநிலையை இங்குக் காரணம் கருதி சம்பந்தப் பெருமான் அமைத்துள்ளமையை உணர முடிகின்றது.

பிரம்மபுரம் சார்ந்த இம்மூன்று பதிகங்களை அடியொற்றி சில பொது முடிவுகளுக்கு வர இயலுகின்றது.
1. பன்னிருபெயர்களைச் சிறப்பிப்பது என்பது இம்மூன்று பதிகங்களின் கருத்துப் புலப்பாடாக உள்ளது.
2. பதிகத்தின் இறுதிப்பாடலான திருக்கடைக்காப்புப் பாடலில் சக்கர சீர், எனச் சக்கரமாற்றைக் குறிப்பிட்டும், முடக்கு மாவின் பாய்ச்சல் எனக் கோமூத்திரி அந்தாதியை உரைத்தும் பல்பெயர் பத்தும் வல்லார் எனப் பல்பெயர்பத்தினைச் சுட்டியும், பதிகத்தின் புதுமையமைப்பு முறையினைச் சம்பந்தப்பெருமான் எடுத்தியம்பியுள்ளமை கவனிக்கத்தக்கது.
3. முதல்பாடல் பிரம்மபுரம் எனத் துவங்கப்பெறுவதால் இப்பதிகங்கள் மூன்றும் பிரம்மபுரம் எனக்கொண்டு தொகுக்கப் பெற்றுள்ளன.
4. சக்கரமாற்றிலும், கோமூத்திரி அந்தாதியிலும் முதல்பாடலில் பிரம்மபுரம் துவங்கி கழுமலம் ஈறான கட்டுரையில் முன்காட்டப்பெற்ற முறைமை பின்பற்றப் பெற்றுள்ளது. அடுத்த பாடல்கள் ஊர்ப்பெயரந்தாதி முறையில் பாடப்பெற்றுள்ளன.

சேக்கிழாரும் சம்பந்தப் பெருமானின் பிறப்பினைப் பாடுகையில், சீர்காழியின் பெருமையினைச் சுட்டும்பொழுது இப்பன்னிரு பெயர்களையும் முன் காட்டிய முறையிலேயே, அதாவது பிரமபுரம் துவங்கி கழுமலம் ஈறாகப் பாடியிருப்பது குறிக்கத்தக்கது. இவ்வமைப்புமுறை பிரம்மன் துவக்கிய பிறப்புநிலையைக் கழுவும் ஊராகச் சீர்காழி விளங்குகின்றது என்பதை எடுத்துரைப்பதாக உள்ளது. பிரம்மபுரம் சார்ந்த இப்பதிகங்கள் பன்னிருபெயர்களையும், பல்வகையான் சுட்டுவதால் தனிச்சிறப்புடையனவாக விளங்குகின்றன.

2. கழுமலப் பதிகங்கள்.
கழுமலம் என்ற பெயர்சுட்டி இருபதிகங்கள் அமைந்துள்ளன. இவையிரண்டும் பொருட்சிறப்பு வாய்ந்தனவாக விளங்குகின்றன.

2.1 திருவடிப்பெருமை ( 73) ( 1ம் திருமுறை . பதிகஎண். 19)
பிறையணிபடர்சடை எனத் துவங்கும் இப்பதிகத்துள், திருகழுமல இறைவனின் அடிகளை வணங்க மலம் அகலும் என்று உறுதியாகச் சம்பந்தப் பெருமான் காட்டியுள்ளார். எனவே இப்பதிகம் திருவடிப்பெருமை பேசும் பொருட் சிறப்புடையதாக விளங்குகின்றது.

இப்பதிகத்துள் நலமலிகழல் (1,2), இறைவனதடி (3, 10) அதிர்கழல்கள் (4), புலியதளுடையினன் அடியிணை (6), அதிருறுகழலடி (7), அடிசரண் (8), கனலுருவினன் அடியிணை (9) சிவனடி (11) என இறைவனது திருவடி சிறப்பிக்கப் பெற்றுள்ளது. திருக்கடைக்காப்பில் சிவனடி எனக்குறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடியிணை தொழ வருவினையெனும் உரைபொடிபட வுறு துயர்கெட, உயர் உலகு எய்தலொரு தலைமையே (6) என்ற அடிகளின் வழி வரும் வினைகளை பொடியாக்கும் பெருமை பெற்றவன் சீர்காழி இறைவன் என்பது புலனாகின்றது. வினைகளைப் பொடியாக்கும் வலிமை கொண்டனவாக, சிவனதடி உள்ளது என இப்பதிகத்தின் வாயிலாக வாழும் உயிர்களுக்குச் சம்பந்தப் பெருமான் அறிவுறுத்துகின்றார்.

2. 2 திருக்குணச்சிறப்பு ( 76) ( 1ம் திருமுறை . பதிகஎண். 126)
பந்தந்தால் எனத்தொடங்கும் மற்றொரு திருக்கழுமலப் பதிகத்தில், சிவனது திருக்குணச்சிறப்பு விதந்தோதப் பெற்றுள்ளது. உயிர்களுக்கு வரும் அனைத்துத் துன்பங்களையும் தான் ஏற்றுக் கொள்ளும் பெருங்குணம் வாய்ந்தவனாகக் கழுமலப்பெருமான் விளங்குகின்றான். தாரகன் உடலை, அவன் எதிரிலேயே வெட்டி வீழ்த்திய, ஊழித்தீயைப் போன்ற கோபமுடைய காளியின் வெகுளி உலக உயிர்களிடம் செல்லாவண்ணம் காத்த பெருமான் கழுமலத்தான்(5), சலந்தரன், திரிபுராதிகள் முதலியோரை வென்று ஆண் யானை வடிவுகொண்ட சிவபெருமான், பெண்யானையாகிய உமையம்மையோடு கூடிட, கோபம் தணிந்து, யானைமுகக்கடவுளை தந்திட்ட பெருமான் கழுமலத்தான், அன்பாகிய விதையை இட்டு, புலன் வழி பொருந்தாது, பகையாறையும் கடிந்து, முக்திக்கு இடையூறாகிய சாத்வீக, இராஜ, தாமங்களாகிய மூன்று குணங்கள் மூடாதபடி அந்தக்கரணம் ஒரு நெறிப்பட, மெய்ப்பொருளைத் தியானிப்போரை, சிவமாகச் செய்யும் குணமுடையோன் கழுமலத்தோன் (7), உலகத்தார்க்கு ஏதம் செய்திட்ட இராவணனை மலர் போன்ற திருவடியின் விரல் ஒன்றால் ஊன்றி ஆணவம் அழித்து, அவனையும், உலகையும் காத்த வள்ளல் கழுமலத்தான் (8), அடிமுடி தேடியும் அகப்பாடது வேறு உருகொண்டவன் கழுமலத்தான் (9), சமணரும், பௌத்தரும் போல்வோர் அறியா குணத்தான் இவன் (10) என இப்பெருமானது குணங்களைச் சம்பந்தப் பெருமான் வகைமை செய்துள்ளார். மேலும் திருக்கடைக் காப்பில், இக்குணத்தானை, ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசையியல் பா கொண்டு பாடிட அதாவது இருபத்தோரு பண் முறையால் பாடிட திருமகள் சேர்வாள் எனக்காட்டியிருப்பதன் மூலம் பண்வகையால் புதுமைசெய்துள்ளமை தெரியவருகின்றது. இதன்மூலம் அக்காலத்தில் விளங்கியப் பண்களின் எண்ணிக்கை இருபத்தொன்று என முடியலாம்.

கழுமலம் சார்ந்த இவ்விரு பதிகங்களைக் கொண்டுப் பின்வரும் முடிவுகளுக்கு வரமுடிகின்றது.
1) இவை முதற் தொகுதியுள் இடம் பெற்றுள்ளமையால் பொருள் வகையான் மட்டும் சிறப்புப் பெறுகின்றன. திரும்பத் திரும்பச் சீர்காழியைச் சிறப்பிக்கும் போதுதான் வேறுபடுத்திப் புதுமைப்படுத்தி பாட வேண்டிய சூழல் சம்பந்தப்பெருமானுக்கு இருந்துள்ளது. முதற்தொகுதியில் இவை இடம் பெற்றுள்ளமையால் வடிவ வேறுபாடு கொள்ளாது பொருள் சிறப்பிப்பனவாக உள்ளன.
2) இருப்பினும் கழுமலத்தின் இரண்டாவது பதிகமாகக் கட்டுரையில் கொள்ளப்பட்ட பதிகம் பண் வகைமைகூறி புதுமை பெறுகின்றது.
3) மொத்தத்தில் கழுமலம், என்பது மலங்களைக், குணங்களைக் கழுவும் தலம் என்னும் கருத்து இருபதிகங்களின் வாயிலாகத் தெரியவரும் உண்மையாகும்.

3. வெங்குரு திருமுக்கால் (75) ( 3ம் திருமுறை . பதிகஎண். 352)
திருமுக்கால் என்கிற புதுவகை யாப்பு முறையினைப் பலபதிகங்களில் சம்பந்தப் பெருமான் கையாளுகின்றார். முதலடி நான்குசீர்களாலும், அடுத்தவடி மூன்று சீர்களானும், மூன்றாமடி நான்கு சீர்களானும், நான்காமடி மூன்று சீர்களானும் அமைவது இம்முக்காலாகும். அதிலும் இரண்டமடியின் சொற்களை மூன்றாமடி பெற்று- நான்காவதாக ஒரு புதியசீர் பெற்று அமையும் முறையில் சம்பந்தப்பெருமான் இதனை அமைத்துள்ளார். இவரின் புதிய யாப்பு முறையாக இதனைக் கருதலாம். வெங்குரு மேவிய இறைவனை விண்ணவர் எனத் தொடங்கி பதிகத்தால் வாழ்த்தியுள்ளார்.

விண்ணவர் தொழுதெழு வெங்குரு மேவிய
சுண்ணவெண் பொடியணி வீரே
சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
எண்ணவல்லார் இடரிலரே(1)

இம்முக்கால் பதிகத்தில் பதினொன்றாம் பாடல் கிடைக்கவில்லை. இராவணன், மால் அயன், பிறசமயத்தார் குறிப்புகளும் இதனுள் இடம்பெற வேண்டிய எட்டு, ஒன்பது , பத்து எண்ணுடைப் பாடல்களில் இடம்பெறாததும், வேறு எவ்விடத்தும் இடம்பெறாததும் குறிக்கத்தக்கது. இப்பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் முதலடி முடிவாக வெங்குருமேவிய என்ற தொடரைக் கொண்டு விளங்குகின்றன. இரண்டாமடி இறைவனைப் பாராட்டி விளிப்பதாகவும், மூன்றாமடி விளித்த பாராட்டிற்குரிய இறைவனை வணங்குவதாகவும், நான்காமடி அதனால் ஏற்படும் பயனை உரைப்பதாகவவும் உள்ளது. இதனால் பயனுரைக்கும் பதினோராம், திருக்கடைக்காப்பு பாடல் தேவைப் பாடாது நின்றிருக்க வாய்ப்புண்டு. பதிகத்தின் பொருள் முடிவு, பயன்நிலை கூறல் முதலியன கருதி அதனை நீட்டிப்பாடவும், குறைத்துப் பாடவும் சம்பந்தப் பெருமான் முயன்றுள்ளார் என்பது இப்பதிக வழி தெரியவருகின்றது,

4. திருச்சண்பைநகர்ங பல்வகைப் பொருள்கோள் கொண்ட பதிகம்( 3)ங
( 1ம் திருமுறை . பதிகஎண். 333)
அந்தமது எனத் தொடங்கும் திருச்சண்பைநகர் பதிகம் ஒவ்வொரு பொருள்கோளை, ஒவ்வொரு பாடலிலும் கொண்ட புதுமை நிலையில் பாடப்பெற்றுள்ளது. அதனால் இப்பதிகம் எல்லாப் பொருள் கோளும் முற்றப்பாடியதாகக் கொள்ளப் பெறுகின்றது.

எடுத்துக் காட்டிற்குச் சிலபொருள்கோள்களை இங்கு விளக்குவது ஏற்புடையதாக அமையும் என்பதால் பின்வரும் பாடல்கள் விளக்கம் பெறுகின்றன.

4. 1 தாப்பிசைப் பொருள்கோள்
தாம்பு- இசை= தாப்பிசை
– ஊசல் கயிறு போல் ஒரு சொல், தான் இருந்த இடத்தே இருந்து முன்னும் பின்னும் சென்று பொருள் கொள்ள ஏதுவாயின் அது தாப்பிசைப் பொருள்கோள் எனப்படும். இப் பொருள் கோள் முறையில் பின்வரும் பாடலைச் சம்பந்தப் பெருமான் பாடியுள்ளார்.

விண் பொய்த னான்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை
மண்பொயத னால்வளமிலா தொழியினும் தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல தோறுநிலை யானபதிதான்
சண்பைநக ராசனடி தாழுமடி யார்தமது தன்மையகவே. (7)

இப்பாடலில் இடம்பெறும் உண்பகர என்னும் சொல் அடியவர்களுக்கு உணவுதர என்ற பொருளில் முன்னும், பின்னும் இயைந்துப் பொருள் கூட்டுகின்றது.

மேகம் பொய்த்ததனால் மழை விழாது ஒழிந்தாலும், நிலம் வறண்டதனால் வளம் இன்றிப் போனாலும், அடியவர்களுக்கு உணவு தரும், தமது கொடையின் வழுவாதவர்கள் வாழுமூர் சண்பைநகர்

நெடிய உலகத்தில், பல ஊழி வந்த போதும் அழியாத நகராக விளங்கும் சண்பை நகரில்,அடியவர்களுக்கு உணவு தர, அதனால் அவர்கள் அங்குள்ள சிவனடிகளை, தாழ்ந்து வணங்குவதில் மாற்றம் கொள்ளார்.
இவ்விரு பொருள்நிலையால் இப்பாடலில் தாப்பிசை பொருள்கோள் அமைந்துள்ளது எனக் காட்டலாம்.

4.2.அடிமறிமாற்றுப் பொருள்கோள்
பதிகத்தின் ஒன்பதாம் பாடல் அடிமறிமாற்றுப் பொருள்கோள் முறையில் அமைந்துள்ளது. ஒரு செய்யுளில் யாதானும் ஓரடியை, யாதானும் ஓரிடத்து மாற்றினும் பொருள் மாறுபடாதிருப்பது, பொருளிசை மாறாதது அடிமறிமாற்று எனப்படும். இம்முறையில்

நீலவரை போலநிகழ் கேழல்உரு நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானும்அறி யாமைவளர் தீயுருவ மானவரதன்
சேலுமின வேலுமன் கண்ணியொடு நண்ணுபதி சூழ் புறவுஎலாம்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பை நகரே

என்ற பாடல் பொருளிசை மாறா அடிமறிமாற்று பொருள்கோள் கொண்டதாக அமைகின்றது. இதன் பொருளை
1) நீல மலை போன்ற பன்றி வடிவம் தாங்கிய திருமாலும், பெரிய
அன்னவடிவம் தாங்கிய நான்முகனும் காண நேரிய உருவம் ஆனவன்
2) திருமாலும் , தாமரைமலரானும் அறியாமல் வளர்ந்த தீயின் உருவமானவன்
3) மீன், வேல் வடிவொத்த கண்ணாளொடு வாழுபவன் இடம் புறவம்.
4) நெற்பயிர்கள் செழித்த கோலைகளில், குயில், கிளி, இன்னும் பலபறவைகள் தங்கியிருக்கும் சண்பை நகர் உறைபவன்
என வரியடிப்படையில் கொண்டோமானால், இவ்வரிகளை எங்கு மாற்றி வைத்து நோக்கினும், பொருள் மாறுபடாது விளங்கும் புதுமை தெரியவரும்.

4.3 அளைமறிபாப்புப் பொருள்கோள்
புற்றினுள் தலைமுதலாக உட்சென்று உடன் மடிந்து உடலோடும், வாலோடும் ஒட்டி மேல் வரும் பாம்பு போல, ஈற்று நின்ற மொழி இடையிலும், முதலிலும் சென்று இயைத்துப் பொருள் தருவதால் இப்பொருள் கோள் அளைமறி பாப்புப் (பாம்பு) பொருள் கோள் எனப்படும்.

வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமருமூர்
சாரின்முர றெண்கடல் விசும்புற முழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே(11)

என்ற பாடலில் வரும் இறுதியடி மற்ற அடிகளோடு இயைய

3); பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஹhனசம் பந்தனுரைசெய – சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியேஸ்ராஸ்ரா
2) சாரின்முர றெண்கடல் விசும்புற முழணு;கொலிகொள் சண்பைநகர்மேற – சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியேஸ்ராஸ்ரா
1) வாரின்மலி கொணு;கையுமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமருமூர்- சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியேஸ்ராஸ்ரா
என மூவடிக்கும் சிவலோக நெறிகாட்டி உய்வித்தமையான் இது அளைமறியாப்பு பொருள்கோள் ஆயிற்று.

இவை தவிர ஆற்றுநீர்ப்பொருள்கோளாகச் சில பாடல்களும் அமைந்தள்ளன. இதன் காரணமாக, பொருள்கோள்கள் பலவற்றையும் ஒன்றாகத் தொடுத்து, மாலையாக ஒரு பதிகத்துள் பாடிய, பெருமை, புதுமை சம்பந்தப் பெருமானுக்கன்றி வேறு ஒருவருக்கும் தமிழுலகில் இல்லை.

5. திருப்புறவம்அடியார் பெருமை ( 71) ( 3ம் திருமுறை . பதிகஎண். 342)
பெண்ணியல் உருவினர் எனத் தொடங்கும் இப்பதிகத்துள் அடியவர் தம் பெருமையினை எடுத்துரைத்துப் பொருள் சிறப்பு தருகின்றார் சம்பந்தப்பெருமான்.
சொல்நய முடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையார் நடுவுணர் பெருமையர் திருவடி பேணிட
முன்னைய முதல்வினை யறவருள் இனருறை முதுபதி
புன்னையின் முகைநிதி பொதியவிழ் பொழிலணி புறவமே(6)

என்ற பதிகத்தின் ஆறாம் பாடலில் அடியவர் தம் உண்மை நிலையினைச் சம்பந்தப்பெருமான் விவரித்துக் கண்டுள்ளார். அடியவரின் இலக்கண முரைக்கும் இப்பாடலைத் தற்காலத்தில் உலகறியச் செய்யவேண்டியது பெருந்தேவையாகும்.

1)அடியவர்கள் சொல் நயமுடையவர்கள்.
2) இனியபொருள்கள் அடங்கியத் தோத்திர மொழிகளைக் கூறுபவர்கள்.
3) வேதம் முதலிய நூல்கள் கருதிச் சொல்லிய பணிகளைப் புரிவோர்.
4) பின்னையர் – பெரியோர்க்குப்பின் நின்று பணிபுரிவோர்
5) நடு உணர் நண்மையர்.
இத்தொடருக்கு இருவகையால் பொருள் கொள்ளலாம். அவை
1) நமசிவாய என்ற இக சுகம் அருளும் பஞ்சாட்சரத்தில் நடுவில் உள்ள பதியின் தன்மையை அறியப் பெற்றவர்கள்.
2) வேதத்தின் நடுவில் பிரதிபதிக்கப்படும் பொருள் சிவனேயென்ற தன்மையை உணரும் பெருமையார்.
என்பனவாகும்.
6) முன்னை முதல் வினைகளாகிய, ஆணவம், மாயை, கன்மம் என்ற மூன்றில் முதலாவதாகிய ஆணவம் அற- அருள் பெற்ற பெருமையார்.

எனக் கூறும் சொல்- முன்னோர் போற்றல்- நமசிவாய மொழிதல்- ஆணவம் அறுதல்- என்ற படிநிலை முறைமை வியக்கத்தக்க அளவில், உயிர்களைத் தக்க வழிப்படுத்தும் நிலையில் அமைக்கப் பெற்றுள்ளமை உலகினர் அனைவரும் அறியத்தக்க வாழ்முறையாகும்.

6. திருக்கண்ணார்கோயில். பழிபோக்கும்பதிகம் (79) ( 1 ம் திருமுறை . பதிகஎண். 101)
இப்பதிகம் கண்ணார் கோயில் விளங்கும் இறைவனைத் திங்கள், பாம்பு கங்கை அணிந்தவன்(1) மண்ணியாறு பாயும் சோலை வாழ்பவன்(2), பூதம் ஏத்த இரவில் நடம் செய்பவன் (3), காட்டானை உரித்தணிந்தவன் சனகாதியருக்கு உபதேசித்தவன்(4), திருமாலால் வழிபடப் பெற்றவன்(5), விடமுண்டவன்(7), இராவணனுக்கு வாளும் தேரும் தந்தவன்(8), மால், அயன் நோக்கத் தீயுருவானவன் (9) என காணுகின்றது.

மேலும் இவனை வணங்கக் கைதொழுவோர்கட்கு இடர் பாவம் நண்ணா (1), நண்ணவல்லோர்கட்கு இல்லை நமன் பால் நடலையே(6), பத்தும்வல்லார் மேற்பழி போமே(11) போன்ற பயன்கள் கிடைக்கும் என்கிறார் சம்பந்தப் பெருமான். இவ்வாறு பயன்கருதி பெருமைமிக்கதாக இப்பதிகம் விளங்குகின்றது.

7. திருக்கடை முடி-கடைமுடி சிவனடி( 1ம் திருமுறை . பதிகஎண். 111)
உயிர்கள் சென்றடை கடைமுடி- சிவனடி எனக்காட்டுவதாக இப்பதிகம் பாடப்பெற்றுள்ளது. திருக்கடைமுடி என்ற தலத்தின் சிறப்புகள் பலவாறு பதிகப்பாடல்கள் அனைத்திலும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன.
மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் என உலகேத்துங் கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியேஸ்ராஸ்ரா
என இறைவனது தன்மையினை, பதிகத்தின் ஐந்தாவது பாடல் உணர்த்துகின்றது. மேலும் இப்பாடல்களின் அடிகள் அனைத்தும் எதுகைத்தொடை ஒன்றிவருவனவாகத் தொடுக்கப்பெற்றுள்ளமை குறிக்கத்தக்கது. இதன் மூலம் தொடை நலத்துடன் பாடும் பாங்கும் சம்பந்தப் பெருமானிடம் காணப்பெறுகின்றது என்பதும் தெரியவருகின்றது.

இவ்வாறு கட்டுரைப் பகுதியல் விளங்கும் பத்துப் பதிகங்களிலும், ஒவ்வோர் சிறப்பினைக் காட்டிப் படிப்பவரின் உள்ளத்தில் கவியொளியும், உள்ளொளியும் பரவச்செய்து, சம்பந்தப் பெருமான் பெருமை கொண்டுள்ளார். அவரது ஞானவழி தமிழுக்கு அணி, பொருள்கோள், யாப்பு ஆகிய பல நிலைகளில் புதுமை; சேர்ப்பதாக உள்ளது


muppalam2003@yahoo.co.in muppalam2006@gmail.com


M.Palaniappan
manidal.blogspot.com
puduvayalpalaniappan.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்