ஆராய்ச்சிகள் எப்போதும் மேல்நோக்கியிருக்கும், சூழ்ச்சிகள் ஒருபோதும் ஆராய்ச்சியாகாது

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

எஸ்.காமராஜ்



இந்த சமூகத்துக்கு ஒரு பொதுப்பார்வை தேவை இருக்கிறது.
அன்பு நண்பர் மலர்மன்னன் உங்கள் சமூக அக்கறை மீதும், ஆராய்ச்சியின் மீதும் நான் குறை கூறவில்லை. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்கிற ஸ்மரணை இல்லாமல் மனுவுக்குப் புதிய பொழிப்புறை எழுதுவதை விட்டு விட்டு உங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்து கொஞ்சம் கீழே இறங்கி வாருங்கள். குவித்து வைக்கப்பட்டிருக்கிற ஆயிரத்து ஐநூறு ஜாதிகளுக்குக் கீழே
கிடக்கும் பஞ்சமர்களைக் கொஞ்சம் உற்றுப்பாருங்கள். அதோ பாதாள சாக்கடைக்குள்ளிறங்கிக் கைவிட்டுச் சுத்தம் செய்கிற மக்களுக்கு மனுஸ்மிருதியின் செய்யுள் வரிகளுக்குள் என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றித் திண்ணையில் தெளிவுபடுத்துங்கள். கயர்லாஞ்சியில் கொலைசெய்யப்பட்ட, இல்லை, இல்லை அதைக் கொலை என்று சாதாரணமாகக் குறிப்பிடமுடியாது அதற்கு வேறு பதம் தேடியாகவேண்டிய அவசியம் இருக்கிறது. கூட்டாகக் கற்பழித்தபின்னர் காணாத்தலம், உயிர்த்தலம், பிறப்புறுப்பு, என்று இந்த உலகம் போற்றுகின்ற ஜன்ம விருத்தி ஸ்தலத்தில் இரும்புக்கம்பிகளையும், உருட்டுக்கட்டைகளையும் திணித்த ஆணாதிக்கமும் ஜாதீய மேலாதிக்கமும் கலந்த குரூரத்திற்கு சுலோகம் என்ன பெயர் சொல்கிறது அந்த அர்த்தம் பொதிந்த மணு. மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளியே உறைந்துகிடக்கும் பள்ளுப், பறை நாடார்களின் குருதியில் வீசுகிற முடைநாற்றத்திற்கு என்ன இடைச்செருகல் எழுதப் பட்டிருக்கிறது. குலக்கல்வி முறைதான் எல்லோருக்குமான கல்வித் திட்டமா. அப்படியென்றால் ஏகலைவன் விரலறுத்ததற்கு ஏற்றத்தாழ்வு காரணமில்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும். சூத்திரன் காதில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றச்சொன்னதற்கு புதிதாக ஏதாவது சொல்லவிரும்புகிறீர்களா. ” தூரம் அபசர ரே சண்டாள ” என்பதும், ” கேன ஏஷ நிமிர்த நாரீ மோகினி ” என்பதும் என்னபொருள் கொண்டு வருகிறது. தயவு செய்து ஆங்கில வழித்தமிழில் வேண்டாம் நேரடித் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லுங்கள். பிருஸ்டத்தில் பெருக்குமாரும் கழுத்தில் எச்சில் கலையமும் கட்டிவிட்டு இந்த தேசத்து ஒடுக்கப்பட்டவர்களைத் தெருவுக்குள் நுழையவிடாமல் தடுத்தது யார், கிறிஸ்தவர்களா, முஸ்லீம்களா,. அப்படித்தடுத்த வன்கொடுஞ்செயலுக்கு மனுவின் அகராதியில் என்ன தண்டனை எழுதப்பட்டிருக்கிறது எனபதை அடிக்கோடிட்டு அனுப்பிவைத்தால் உலகம் தெரிந்துகொள்ளும். ஓலைச்சுவடிகளாக்கக்கிடந்த உயர் மக்களின் இலக்கணத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துக் கொடுத்த ஜேம்ஸ்ராப்டன் இந்த மண்ணின், இந்த மக்களின் வாசனையோடு அதை அர்த்தப்படுத்திப் பார்த்திருக்க முடியாது என்பதுதான் உண்மை சத்தியம். இந்திய வரைபடம், இந்திய பரப்பளவு, இந்தியச்சாலைகள், வாகனங்கள், இந்தியக் கல்விச்சாலைகள், கல்விமுறை, இந்திய அரசியல் அடுக்கு, சட்டம் ஒழுங்கு அது அணிந்திருக்கிற தொப்பி, நீதி பரிபாலனம் அது மூடப்பட்டிருக்கிற கருப்பு அங்கி இப்படியே நீண்டுகொண்டு போகிற பட்டியல் அந்த ஐரோப்பியன் நமக்கு அறிமுகம் செய்துவைத்தது தான். இப்போதும் நடைமுறையிலிருக்கிற ஜாதிய அமைப்பு மட்டும் நாம் கண்டுபிடித்தது, கடைப்பிடிப்பது நாம் அறிமுகப்படுத்தியது, அடைகாப்பது அது மட்டும் தான். அதற்கு முன்னால் இங்கிருந்த மண்ணின் மைந்தர்கள் செய்ய மறந்ததை செய்ததற்காக அந்த ஐரோப்பியனின் தலையில் தீவைக்கலாம். (தலையில்தீவைப்பதும் மனுவில் கூறப்பட்ட தண்டனைதான்) ஆனால் அந்த ஐரோப்பியனின் தொகுப்பை இன்னும் ஏன் தலையில் தூக்கி வைத்து ஆடவேண்டும் என்று தெரியவில்லை. அவன் அடிமைகளில் பேதம் பார்க்கவில்லை அடிமைகளாயிருந்த நமக்குள் பேதமிருந்தது என்பதை யாராவது மறுக்க முன்வருகிறார்களா. நான் இறுதியில் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன் வன்கொடுமையும், பாலியல் பேதமும் பால்ய விவாகமும் செய்த எல்லோரும் மனுவைக்கையில் வைத்துக்கொண்டு இந்த மாபாதகத்தைச் செய்யவில்லை. துரதிஷ்ட வசமாக அந்த மனுவை, நீங்கள் சொன்ன, படித்தவர்கள், எல்லாம் அறிந்தவர்கள், சொல்லிக்கொடுக்கிற இடத்திலிருந்த மனிதர்கள் மட்டும் தான் அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அது நீங்களே சொன்னது. ஆனால் இங்கிருக்கும் இருபதுகோடிப் பஞ்சமர்களுக்கும், அவர்களை உள்ளடக்கிய எண்பதுகோடி உழைக்கிற பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் மனுவில் என்ன சொல்லியிருக்கிறது என்பது இன்னும் தெரியாது.
ஆனாலும் சட்டம் ignorance of law is not excusable எனச் சொல்லுகிறது. இந்த முரண்பாட்டில் தான் இன்னும் நம்மைப்போன்ற படித்தவர்களின் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஓடட்டும், படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்.
தனது மூதாதையர்கள் தவறு செய்தார்களென்பதை இந்திய வரலாறு ஒரு போதும் ஒப்புக் கொள்ளாது. அது அவரவர் வரலாறு. பெருமித வரலாறு.

என்னைக் கருவுற்றிருக்கும் போது மசக்கையில்
என் தாய் தெள்ளித்தின்ற மண்ணைத்தவிர
இந்த பரந்த தேசத்தில் எங்கள் மண் எது?
தடித்த இதிகாசத்தின் பக்கங்களின்
எந்தப்பக்கம் எங்கவாழ்கை ?
என்ற கேள்விகள் முளைக்கிற காலம் இது.
உன் முழு விலாசமும்தெரியாத ஊரில் போய் உன்னைப் பறை யென்று சொல்லிப்பார் அப்போதுதான் ஜாதி என்பதன் குரூரம் என்னவென்பது தெரியுமென்கிற வலியின் வாதங்கள்
வந்து கொண்டிருக்கிற காலம் இது.
அன்பு நண்பர் மலர் மன்னநுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் கண்டுபிடித்த பூக்களை அப்பாவிச் சனங்களின் காதுகளில் சுத்தவேண்டாம். அதைத்தான் ஆயிராமாயிரம் ஆண்டுகளாக சமயங்கள் செய்துவருகின்றனவே ?.


skraj_125@yahoo.co.in

Series Navigation