ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue


வடக்கு ட்ரான்ஸ்வால் பிரதேசத்தில் மெஸ்ஸினா நகருக்குப் போனால், அங்கு பூதம் போல ஊதிய ஒரு மரத்தைப் பார்க்கலாம். இந்தப்பக்கம் வந்த டேவிட் லிவிங்ஸ்டன் இதனை ‘தலைகீழாக நடப்பட்ட கேரட் ‘ என்று சொன்னார். இது ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம் – பாவோபாப் என்று அழைக்கப்படும் அடன்ஸோனியா டிஜிடாடா (ADANSONIA DIGITATA)

இதனை பலர் தாவர உலகின் பிசாசு என்று கூறி வந்திருக்கிறார்கள். பாவோபாப் மரங்கள் மிக உறுதியானவை, சட்டென்று இறக்காதவை. பிடுங்கி கீழே தரை மட்டமாகப் போட்டபின்னரும் நீட்ட வாக்கில் சில முறை இந்த மரங்கள் வளர்ந்திருக்கின்றன. மரங்களை வெட்டிச்சாய்த்த பின்னரும், இந்த மரத்தின் வேர்கள் மரத்தின் ஆணி வேரிலிருந்து சுமார் 40 மீட்டர் தொலைவு வரை இருக்கும் இதன் வேர்கள் உயிரோடு பலவருடங்கள் இருப்பதை பார்த்திருக்கிறார்கள். இந்த மரங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் உயிரோடு இருக்கும். மிக மெதுவாக வளர்கின்றன. சுமார் 5 மீட்டர் சுற்றளவுக்கு இந்த மரம் வளர்வதற்கு சுமார் ஆயிரம் வருடங்கள் ஆகும்.

பெரும் வெள்ளம் வருவதற்கு முன்னர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஒரு மரம் 25 மீட்டர் சுற்றளவு உள்ளதாக பார்த்திருக்கிறார். மொம்பாஸா தீவில் இதனை விட பெரிய மரங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த போர்களில் பெற்ற பீரங்கிக்குண்டுகளை இன்னும் தாங்கிக்கொண்டு உயிர்வாழும் பாவோபாப் மரங்களை இன்றும் பார்க்கலாம்.

எங்கே காணப்படுகின்றன ?

இந்த பாவோபாப் மரங்கள் ஆப்பிரிக்கா முழுவதும் பல இடங்களில் வாழ்கின்றன. இவைகளை மடகாஸ்கர், இந்தியா, இலங்கை ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கூட பார்க்கலாம். (இவைகள் இந்தியாவில் என்னவாக அழைக்கப்படுகின்றன என்பதை யாரேனும் எழுதலாம்) ஜிம்பாப்வே நாட்டின் பல இடங்களில் இவை காணக்கிடக்கின்றன. லிம்பாப்போ, சூட்பான்ஸ்பர்க் மலைத்தொடர்களிலும் இவை இருக்கின்றன. மெஸ்ஸினா உண்மையிலேயே ஒரு பாவோபாப் நகரம். பாவோபாப் மரங்கள் பெரும்பாலும் வெப்பம் அதிகமுள்ள மணல் அதிகமுள்ள சமவெளிகளை இடங்களை விரும்புகின்றன.

பாவோபாப் பற்றிய நாடோடிக்கதைகள்

உலகம் ஆரம்பிக்கும் போது, இளைய பாவோபாப் மரங்கள் நேராக பெருமையுடன் நின்று கொண்டிருந்தன என்றும், இவற்றின் கீழே இருந்த சிறிய மரங்களை தடாலடியாக ஆண்டு கொண்டிருந்தன என்றும் ஜாம்பெஸி மக்களிடையே நிலவும் நாடோடிக்கதை கூறுகிறது. கடவுள்கள் இதனால் கோபம் கொண்டு பாவோபாப் மரங்களைப் வேரோடு பிடுங்கி மீண்டும் தரையில் தலைகீழாக, வேர் மேலாக, வீசி எறிந்து விட்டதாக நாடோடிக்கதை கூறுகிறது. இதன இனிப்பான வெள்ளைமலர்களை பேய்கள் சுற்றிவருகின்றன என்றும் இதனை பிய்ப்பவன் சிங்கத்தால் கொல்லப்படுவான் என்றும் நம்புகிறார்கள்.

ஜாம்பியாவில் இருந்த ஒரு ராட்சச பாவோபாப் மரம் ஒரு பேய்த்தனமான மலைப்பாம்பால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது என்றும், வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னர், இந்த மரத்துக்குள் இருந்த பெரிய குகையில் இந்த மலைப்பாம்பு வசித்துக்கொண்டிருந்தது என்றும், இதனை அங்கிருந்த பழங்குடியினர் கும்பிட்டு வந்தார்கள் என்றும் ஒரு பழங்கதை கூறுகிறது. மழைக்காவும், நல்ல விளைச்சலுக்காகவும், நல்ல வேட்டைக்காகவும் இந்த மலைப்பாம்பிடம் வேண்டிவந்தார்கள். மலைப்பாம்பும் இவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்துவந்தது. முதலாவது வெள்ளைக்கார வேட்டையாள் இந்த மலைப்பாம்பை சுட்டுக்கொன்றான்.இது பல தீய விளைவுகளுக்கு ஏதுவாகி விட்டது. அமைதியான இரவுகளில் பாம்பின் ஹிஸ் என்ற மூச்சுக்காற்று இந்த மரத்திடமிருந்து கேட்பதாக பழங்குடியினர் கூறுகிறார்கள்.

ஜாம்பியாவில் இருக்கும் காஃபூ தேசிய தாவரப்பூங்காவில் உள்ள மிகப்பெரிய பாவோபாப் மரம் ‘கொண்டானாம்வாளி ‘ என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் கன்னிப்பெண்களை விழுங்கிய மரம் என்பதாகும். இந்த பெரிய மரம் ஒருமுறை இதன் நிழலுக்கு வந்த நான்கு அழகிய பெண்கள் மீது காதல் கொண்டது. இந்தப் பெண்கள் பூப்பெய்தியதும் அவர்கள் தங்களுக்கு கணவன்மார்களைத் தேடினார்கள். இது மரத்துக்கு பொறாமையை வரவழைத்தது. ஒரு நாள், புயலும் இடியும் அடிக்கும் இரவில், இந்த மரம் தன்னுடைய வயிற்றைப் பிளந்து இந்தப் பெண்களை உள்ளே விழுங்கி விட்டது. இந்த மரத்தின் கிளைகளில் ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது. புயலடிக்கும் இரவுகளில், இந்தப்பெண்களின் அழுகுரலே மக்களை நடுங்க வைக்கிறது, காட்டுவிலங்குகளின் குரல்கள் அல்ல.

வாழும் குளங்கள்

காலஹாரி பாலைவனத்தில் ஒரு வரிசையாக 96 கிலோமீட்டருக்கு ஒரு மரமாக பாவோபாப்கள் இருக்கின்றன. இவைகள் வாழும் குளங்களாக பலரது உயிரைக் காப்பாற்றி இருக்கின்றன. பாவோபாப் இல்லாமல் உயிர்வாழ பல ஆப்பிரிக்க பிரதேசங்களில் முடியாது. சூடானில் இருக்கும் சுமார் 30000 பாவோபாப் மரங்களிலிருந்து பல நூற்றாண்டுகளாக மக்கள் தண்ணீரைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு பாவோபாப் சுமார் 4000 அல்லது 5000 லிட்டர் தண்ணீரைச் சேமித்து வைக்கும். பாவோபாப் மரங்கள் இன்று பாதுகாக்கப்பட்ட தாவர இனம். பல நூற்றாண்டுகளாக, இவை காகிதம் தயாரிக்கவும், இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தும் அழிக்கப்பட்டிருந்தன.

இவைகளின் மலர்கள் பெரியவை. இனிப்பான மணம் பொருந்தியவை. மாலை நேர வானத்தில் வெள்ளை நட்சத்திரங்கள் போல காட்சியளிக்கும். பாவோபாப் மரங்கள் வெகுகாலமாக தொடர்ந்து இருக்கும் வறட்சியை தாங்காது. காட்டுத்தீயிலும் இவை அழிந்து போகும். ஒரு பாவோபாப் மரம் இறக்கும்போது, மின்னலால் தூள் தூளாகப் போகும் ஒரு நாறுக்கொத்து போல உதிர்ந்து விழும். ஒரு காற்று இந்த நாற்றுத் தூளை அள்ளிக்கொண்டு பல நூற்றாண்டுகளாக அடையாள மரமாக இருந்த பெரும்மரத்தை ஊதித்தள்ளும்.

பாவோபாப் மரத்தின் உபயோகங்கள்

இதன் இலைகளை சூப் போல சாப்பிடலாம். இந்த இலைகளைக் கீரையாகவும் சாப்பிடலாம்

இந்த இலைகளை காயவைத்தும் பயன்படுத்துகிறார்கள்

இந்த மரத்தின் நடுவில் இருக்கும் சோற்றை, கூழ் போல சாப்பிடுகிறார்கள் ஆப்பிரிக்கர்கள்.

இந்த மரத்தின் விதைகளுக்குள் வெள்ளையாக இருக்கும் சோற்றை தண்ணீரோடு கலந்து புத்துணர்வு பானமாக அருந்தலாம்.

விவசாயிகள் இந்த சோற்றை தண்ணீரோடு கலந்து மலேரியாவுக்கு மருந்தாகப்பயன்படுத்துகிறார்கள்

இதன் விதைகளை வறுத்து, நிலக்கடலை போல உபயோகப்படுத்துகிறார்கள்

இதன் பட்டையை உரித்து உடைத்து, ஊறவைத்து, கயிறுதிரிக்கவும், மீன் வலை பின்னவும், துணி நெய்யவும் பயன்படுத்தலாம்.

Series Navigation

செய்தி

செய்தி