ஆன்லைன் தீபாவளி

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

நா.இரா. குழலினி


யாஹூ மற்றும் ஹாட்மெயில் நிறுவனங்கள் வழங்கிய இலவச மின்னஞ்சல் தளங்களிள் எனது முகவரிகளுக்குள் நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பண்டிகை அல்லது விழாக்கள் நிகழும் போதும் எனது மின்னஞ்சல் தளத்தின் கொள்ளளவையும் தாண்டி வாழ்த்துக்கள் நிரம்பி வழியும். என் அண்ணன் கேட்பார் ஏம்மா உண்மையிலேயே இந்த வாழ்த்தெல்லாம் வந்ததா ? இல்லை பல்வேறு இணைய தளங்களுக்குப் போய் உனக்கு நீயே அனுப்பிக் கொள்கிறாயா என்று. அவரின் கிண்டலுக்கு சிறு முறைப்பை பதிலாக்கி விட்டுத் தொடர்வேன். இம்முறை நுழைந்து பார்த்த போது முழுவதுமாக தீபாவளிக்கான வாழ்த்துக்கள். நிறைய நண்பர்களிடம் இருந்து மின் வாழ்த்து அட்டைகள்(e-greetings). சில நண்பர்கள் துர்கா பூஜை, விநாயகர் பூஜை போன்றவற்றின் படக்காட்சித் தொகுப்பினை அனுப்பி வைத்திருந்தனர். ஒருவர் நாமே விரும்பிய வண்ணம் பூஜை செய்து கொள்ளுமாறான வாழ்த்து இதழை அனுப்பியிருந்தார். அதிலுள்ள மணியை அழுத்தினால் கடவுள் உருவத்திற்கு முன் மணியோசையுடன் மணி குலுங்கியது. ஊதுபத்தியை அழுத்தினால் ஊதுபத்திக் கட்டு சுற்றிலும் எழும் புகையுடன் கடவுள் உருமுன் சுற்றி வந்தது. தீபத்தட்டை அழுத்தினால் கடவுளைஷ சுற்றி வந்து தீப ஆராதனை செய்தது. என்ன ஒரு கற்பனை வழிபாடு. இதுவும் கற்பனை உண்மையின்(Virtual Reality) பகுதிதானோ ? இப்படிக் கோயிலையும் பூஜையையும் வழிபாட்டையும் என் சிறிய அறையினில் வழங்கிக் கொண்டிருக்கும் கணினியைப் பார்த்தேன். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு மனித இனத்திற்கும் தனித்தனியே தொன்மக் கதைகள் பல உண்டு. ஆனால் அந்தத் தொன்மக் கதைகளில் எல்லாம் கேட்பவருக்கு கேட்பதை அப்படியே உருவாக்கித் தரும் அல்லது வழங்கும் ஏதேனும் ஆணோ பெண்ணோ விலங்கோ மரமோ ஏதேனும வடிவிலான ஒரு கடவுள் அல்லது கடவுள் தன்மை பொருந்திய ஒன்று இருக்கும். சர்வ வல்லமை பொருந்திய அந்தத் தொன்ம நம்பிக்கையின் நீட்சியாகவே எனக்கு நவீன மனிதரின் கணினி தோன்றியது. யோசித்துப் பாருங்களோ அணுகுண்டு செய்வது முதல் நெய்யப்பம் சுடுவது வரை எது தொடர்பாகவும் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும் இணையத்தில் இணைந்த உங்கள் கணினியால்.

அந்த பூஜை வாழ்த்து இதழைப் பார்த்தவுடன் உலகத்தின் எங்கிருந்தும் என்னால் இப்படி நேரடியாகக் கோயில்களிலும் ஏனைய வழிபாட்டுத் தளங்களிலும் வழிபாடு செய்து கொள்ள முடியுமா என்று எனக்குக் கேள்வி வந்தது. இணையத்தில் தேடிப் பார்க்கலாம் என்று துவங்கினேன். தேடலில் பரிகாரம் டாட் காம் என்ற இணையதள முகவரியும் பிரார்த்தனை டாட் காம் என்ற முகவரியும் சிக்கின. இவை மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் உள்ள கிறித்துவ இணையவழி வழிபாட்டுத் தளங்கள் குறித்தும் நிறைய குறிப்புகள் வந்தன. பரிகாரம் தளத்தில் இந்தியாவின் சைவ வைணவ வழிபாட்டுத் தளஜகளின் குறிப்புகளும் நீங்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு கோயிலின் பூஜையை உங்களுக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற தேர்வையும் இணைத்திருந்தார்கள். நீங்களே வரவேண்டியதில்லை உங்களின் சார்பாக அவர்களே பூஜையை நடத்தி உங்களுக்கு பிரசாதத்தை கூரியரில் அனுப்பி விடுவார்களாம். அதற்கான அத்தாட்சிப் பத்திரங்களையும் அவர்களின் தளஜ்தில் இணைத்திருந்தார்கள். அது மட்டுமல்லாமல் யந்திரங்கள் யாகங்கள் முதலியவையும் அவர்கள் மூலமாக நீங்கள் செய்து கொள்ளலாம் என்றும் தளத்தில் குறிப்புகள் இருந்தன.

நிறைய, தொடர்பற்று எனக்கு சிந்தனை ஓடியது. ஏன் ஒருவரால் தன் சொந்தத் தேவையைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இன்னொருவர் தேவைப்படுகிறார். இது வசதிகளின் படியேற்றமா அல்லது வாழ்முறையின் படியிறக்கமா ? இரண்டு நாட்களுக்கு முன் செய்தியில் படித்தேன். ஆன்லைன் திருமணம் குறித்து. ஒரு வழிபாட்டுத் தளம் இணையத்தில் இணைக்கப்பட்டு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திருமணத் தம்பதிகள் வேறு இடத்தில் இருக்க திருமணம் நடத்தி வைப்பவர் வேறு இடத்தில் இருக்க இணையத்தின் வாயிலாகவே நேரில் சந்தித்துக் கொள்ளாமல் ஒருவரை மற்றவர் வீடியோ வழியாகவே பேசி திருமணம் நிகழ்த்தப் பட்டதாகச் செய்தி தெரிவித்திருந்தது. இங்கும் அதுபோல விரைவில் நிகழலாம் வாய்ப்பிருக்கிறது.

உலகமயமாயதலின் இறுக்கம் நிறைந்த சுவடுகளில் என்னால் அருகிருக்கும் மனிதரிடம் நட்பான ஒரு புன்னகையைக் கூடத் தர முடியவில்லை. ஒவ்வொன்றுக்குமான கணிதச் சமன்பாடுகளுக்குள் சிக்கி மனித உறவுகள் சிடுக்காகிப் போயின. விரைவான பொருள் குவிக்கும் வேகமும் சகல சாகசங்களுடனும் போட்டி மைதானத்தை குறுக்கு வெட்டில் தாண்டிக் குதிக்கும் அவசரமும் அனைத்தையும் தன் வாசற்படியருகே வரவழைக்கத் தவிக்கும் சிந்தனைப் போக்கும் மனிதனின் புழங்கு எல்லைகளைஷ சுருக்கிக் கொண்டே வருகின்றன. வாழ்வைக் குறித்துப் பல்வேறு விதமான பார்வையை நமக்கெல்லாம் வழங்கிய இந்தியாவின் மகாவீரரும் புத்தரும் சங்கரரும் இராமானுஜரும் மற்கலியாரும் கபீரும் குருநானக்கும் சதுர்மாஸ்ய விரதம் என்றழைக்கப்படும் மழைக்காலத்தைத் தவிர ஏனைய நாட்கள் அனைத்தும் கால்நடையாக இந்த நாடு முழுவதும் அலைந்து திரிந்து சுற்றி வந்து விவாதித்தனரே அந்த தத்துவப் பள்ளிகள் எங்கே போயின ? இந்தத் தத்துவ வெற்றிடம் எப்போது ஏற்பட்டது ? ஏன் காலத்தையும் வெளியையும் தொற்றிக் கொண்டு ஓடும் நிலை இங்கே அனைவருக்கும் ஏற்பட்டது. தமிழின் காப்பியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்ட அந்த பத்திற்கும் மேற்பட்ட தத்துவ மரபுகள் எங்கே போயின ?

ஏன் ஒரு பண்டிகையோ கொண்டாட்டமோ திருவிழாவோ மனித இனத்திற்குத் தேவைப்படுகிறது. ஒரு தனிமனிதரின் வெறுமை இடைவெளியை இட்டு நிரப்பி சமூக வயமாக்கும் வழிவாய்ப்பே எந்த ஒரு திருவிழாவும் கொண்டாட்டமும். வீட்டின் குளியலறைக்குள் குளிப்பதற்கும் குற்றாலத்தின் சாரல் உடல் தழுவ குளிர் பதனமிட ஒரு குழுவாய் பெரும் மக்கள் கூட்டத்தில் கலந்து பெரிதும் அடையாள இடைவெளிகள் குறைந்து குளிப்பதற்கும் உள்ள வேறுபாடு.

எனக்கு எனது சிறுவயதுக் கொண்டாட்டங்கள் நினைவு வந்தன. தீபாவளியும் பொங்கலும் பத்து நாட்களுக்கு மேல் நடக்கும் மாரியம்மன் திருவிழாவும் இன்னமும் ஒரு கோடையின் வெம்மை பொருந்திய மதியத்தில் வீசும் தென்றலாகவே நினைவுக்கு வருகின்றன.ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வீடும் தெருவும் ஊரும் முழு எதிர்பார்ப்புடனும் பரபரப்புடனும் காத்துக் கொண்டிருக்கும். இந்த முறை ஒருவாரத்திற்கு முன்பே ஊருக்கு வந்து விட்டேன். அண்ணன் மகள்களுடன் ஊரைச் சுற்றி வந்தேன். தீபாவளியின் அடையாளஹ் அற்று தெருக்கள் வழக்கமாய் இருந்தன. மாலைப் பொழுதுகளில் எங்கோ ஒரு சில வெடிச் சத்தம் அவ்வளவுதான். ஏன் என்று அவர்களிடம் கேட்டேன் அவர்கள் ‘தீபாவளிக்கு முதல் இரு நாட்கள் மட்டும்தான் கூட்டம் இருக்கும் அத்தை ‘ என்று சொன்னார்கள்.

பல திருவிழாக்கள் மனித இனத்தில் தோன்றியும் வழங்கியும் அருகியும் மறைந்தும் போயிருக்கின்றன. மெசபடோமியாவிலும் சுமேரியாவிலும் கொண்டாட்டங்கள் இல்லாமலா போயின ? எகிப்தின் அரசி இன்பிர்டிட்டி துவங்கி வைத்த சூரிய வழிபாட்டுத் திருவிழாவிற்கு என்ன நிகழ்ந்தது. எங்கே போயின அந்த திருவிழாக்கள் ? கிரேக்கத்திலும் ரோமிலும் நிகழாத கொண்டாட்டங்களா. கிரேக்கத்தின் டெல்பியும் ஆரக்கிளும் எங்கே போயின ? ஆனால் ஒலிம்பிக் மட்டும் ஏன் இன்னும் புதிப்பிக்கப்பட்டு உலகெங்குமாகக் கொண்டாடப் படுகிறது. பண்டைய தமிழகத்தில் கொண்டாடப் பட்ட இந்திர விழாவிற்கு என்ன ஆனது ? சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பெரிதுமாக பேசப்பட்ட இந்திர விழா ஏன் வழக்கிழந்து போனது ? இருநூற்று நாற்பது அடிகளில் இந்திர விழாவின் கொண்டாட்ட முறைகள் குறித்து சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் விவரிக்கின்றார். இந்திர விழா கொண்டாடப் படாததால் பூம்புகார் நகரே அழிந்தது என்கிறது மணிமேகலை.

கடைவீதியில் ஒரு சமண(ஜைன) மதத்தைச் சார்ந்த சகோதரரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தீபாவளியன்றுதான் எங்களின் நிறுவனத்திற்கு எல்லாம் புதுக்கணக்கு என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்று கேட்டபோது சொன்னார். ஜைனர்களின் கடைசித் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்தின் அரண்மனையில் அங்கு குழுமியிருந்த அரசனுக்கும் மக்களுக்கும் அறவுரை வழங்கினார். இரவு முழுவதும் நீண்ட இந்தச் சொற்பொழிவு அதிகாலையில் நிறைவுற்றது. வைகறை என்பதினால் அங்கே இருந்த மக்கள் திறள் தத்தம் வீடுகளுக்குச் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட மகாவீரரும் தாம் இருந்த ஆசனத்திலேயே அமர்ந்து வீடுபேறு அடைந்தார். பொழுது விடிந்தபின் இந்த செய்தியை அறிந்த அரசன் மற்றைய அரசர்களையும் கலந்தாலோசித்து உலகத்திற்கு ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் வீடு பேறு அடைந்த நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம்=விளஸ்ரீகு, ஆவளி=வரிசை) அதனால்தான் எங்களுக்கு அது ஒரு முக்கியமான வழிபாட்டு விழாநாள் என்றார்.

அவர் கூறியதைக் கேட்டு எனக்கு தீவிரமாக அதைத் தொடர்ந்தே சிந்தனை சென்றது. இது சமணத்திலிருந்து வைணவ மதத்திற்கு வந்திருக்குமா ? அல்லது இங்கிருந்து அங்கே சென்றிருக்குமா ? ஏன் இந்திய நிலப்பரப்பில் தோன்றிய புத்த மதத்தில் இது போன்ற வழிபாடு அல்லது விழா இல்லை. ஆனால் இந்தக் கேள்விகளைஸ் பின்தொடர்ந்து கொண்டிருப்பது அபத்தமாகவே தோன்றியது எனக்கு. எங்கிருந்து வந்தால் என்ன எங்கிருந்து போனால் என்ன. ஒவ்வொரு மரபும் இங்கே தமக்குள் சண்டையிட்டு இருந்திருக்கின்றன, கைகோர்த்து இருந்திருக்கின்றன. தங்களுக்குள் நம்பிக்கைகளை கொண்டும் கொடுத்தும் நீக்கியும் போக்கியும் வழங்கி வந்திருக்கின்றன. எதுவாயினும் என்ன, விழா என்பதும் பண்டிகை என்பதும் பொதுக் கொண்டாட்டங்களுக்குள் என் தனி அடையாளங்களை இழந்து கரைந்து போய் விடுவதுதானே ? இப்போது நம்முன்னே முந்தைய இந்தியச் சூழலுக்குப் புதிதான ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. நாமும் கொண்டாடுகிறோம். வாசல் முழுவதும் அடைத்து இழைத்துக் வண்ணம் நிரப்பிக் கோலமிட்டு ஓரமாக புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கோலமாவிலேயே எழுதி வைத்த தெருக்களை நாம் எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். மனித இனத்தின் இயல்பு அதுதான். ஏதேனும் ஒரு பெரும் பரப்பில் தன்னைக் கரைத்துக் கொள்ள ஒரு பெருவெளி வேண்டும் நமக்கு.

மேலும் இரண்டு வாழ்த்து அட்டைகள் வந்திருந்தன மின்னஞ்சலில். அவற்றுள் ஒன்று ஸ்பார்க்வுட் என்ற மென்பொருளைஸ்ரீகொண்டிருந்தது. கிளேசியர்பாயிண்ட் டாட் காம் என்ற இணைய தளம்ஹ் வெளியிட்ட மென்பொருள் அது. மொத்தமாக வெடி வெடிப்பதன் சப்தம், அதன் வண்ண வெடிச் சிதறல், சிதறலின் அளவு போன்றவைகளை நாமே கூட்டியோ குறைத்தோ வைத்துக் கொள்ளலாம். தேவையான அளவு என்று நாம் முடிவு செய்தபின் நாம் வெடிக்க அதற்கு ஆணையிடலாம், பிறகென்ன கணிப்பொறியின் திரையெங்கும் வண்ண வேடிக்கைகள் கூடிய வெடிச்சத்தம் அறையெங்கும் மோதித் ததும்பும். இன்னொன்று மெசேஜ்மேட்ஸ் டாட் காம் இணைய தளத்தில் உருவாக்கப்பட்ட வாழ்த்து அட்டை பெரும் வெடிச் சத்தத்துடன் கிளம்பும் இராக்கட் வெடிகள் வெடித்தபின் திரையெங்கும் வாழ்த்துச் செய்திகள். சிறுவயதில் வெகு அதிகாலை எழுந்து குளித்ததில் இருந்து நாள்முழுவதும் வேறு வேலையே இல்லாமல் வெடிகளை வெடித்துத் திரிந்தது நினைவுக்கு வந்தது. மறுநாளில் தெருவெங்கும் சிதறிக் கிடக்கும் வெடிகளின் எச்சமான வெற்றுக் காகிதங்கள் அவற்றின் எந்த செய்தி முக்கியத்துவமும் இல்லாமல் கிடக்கும். பெரும்பாலும் செய்தித்தாட்கள். இந்தியா முழுவதும் தமிழ்ச் செய்தித்தாள்களின் வெட்டுக் காகிதங்களைஸ்ரீ கொண்டு சேர்த்ததில் சிவகாசி வெடித் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழலையும் வயதானவர்களையும் நவீன கால நோய்களையும் குழந்தைகள் உழைப்பையும் கணக்கில் கொண்டு வெடிகளைப்ஸ்பொறுத்தவரை எந்த அளவு ஒலியளவுள்ள வெடிகள் எந்த இடங்களில் எந்த நேரத்திற்குள் வெடிக்கலாம் என்று வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. தெருக்களில் வெடிப்பதை விட கேரளாவின் வெடிக்கட்டுத் திருவிழாவைப் போல ஊருக்கு ஒதுக்குப்புறமாக காலி மைதானங்களில் அனைவரும் சேர்ந்து வெடிப்பது என்று முடிவெடுத்தால் நலம் என்றே தோன்றுகிறது.

இன்றைய நவீன நகரமயமான இந்தியச் சூழலில் கிராமங்கள் ஒவ்வொன்றாய் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. நகரங்கள் வீங்கியும் புடைத்தும் பெருகிவருகின்றன. வாழ்வதற்கான போட்டியும் வீச்சும் அதிகரித்துக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்முறையில் நாட்கணக்கான தொடர் கொண்டாட்டங்களுக்குச் சாத்தியமில்லாமல் போய்விட்டது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் உலகம் மேலும் சுருங்கி தகவல் தொழில்நுட்பத்தின் எல்லாப் பரிமாணங்களின் காரணமாக ஒரு குறு கிராமமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு தனிநபரும் சிறுசிறு தீவாக உள்ளுக்குள் சுருங்கிக் கொண்டிருக்கின்றனர். பெரும் மனிதக் கூட்டத்தில் கலந்து மொத்தமாகக் கொண்டாடித் திளைக்கும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருகிறது. இந்தக் கணினி சார்ந்த கற்பனை எதார்த்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் நம்முடைய விருப்பங்களின் வடிகால்களாகவே விளங்குகின்றன. இப்படியே வளர்ந்து கொண்டிருக்கும் சூழல் நிச்சயமாக ஒரு நல்ல தலைமுறையைக் கொடுக்காது.

நாளைய குழந்தைகள் புதுத்துணிகள் அணிந்திடாமல் தகுந்த மார்ஃபிங் மென்பொருட்கள் கொண்டு புத்தாடைகள் அணிந்ததைப் போல புகைப்படம் வடிவமைத்துக் கொள்ளலாம். பூக்களைஜ் தொடுக்காமலேயே எந்தப் பூவின் நறுமணம் வேண்டுமோ அந்த மணத்தை தேவையான நேரத்திற்கு தேவையான அளவிற்கு வெளிப்படுத்தும் கருவிகளைஸ் பொருத்திக் கொள்ளலாம் அல்லது அப்படி உணர்ந்ததாக மூளையை நம்ப வைக்கும் ஸ்டுமுலண்ட் சென்ஸார் கருவிகளைஸ் பொருத்திக் கொள்ளலாம். கலோரி அளவு கூடாமல் இருப்பதற்காக இனிப்பைச் சுவைத்தது போல உணர வைக்கும் கற்பனை யதார்த்தத் தொழில்நுட்பக் கருவிகள் வந்துவிடலாம். இணையத்தின் துணைகொண்டு விரும்பும் கோயிலில் நேரடி ஆன்லைன் பூஜையும் கணிப்பொறித் துணையுடன் கற்பனை வெடிகளையும் வெடித்துக் கொள்ளலாம். அனைத்திற்கும் தொழில்நுட்ப ரீதியாக வாய்ப்பிருக்கிறது.

போட்டி நிறைந்த இன்றைய உலகமயமான நவீன சூழலில் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் குழப்பங்களும் சிக்கல்களும் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. அதிகமான மனஅழுத்தம் ஏற்படுத்தும் இன்றைய நிலையில் ஒவ்வொரு தனிநபரும் மேலும் கூட்டுக்குள் சுருண்டு கொள்ளாமல் ஏனைய மக்களுடன் இணைந்து சார்ந்து வாழ்ந்திட நாம் சமூக வயமாகிட வேண்டும். இதற்காகத்தானே நமக்குக் கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் திருவிழாக்களும் இருக்கின்றன. அடுத்த தலைமுறை தன் குழந்தைமையோடு அனைவருடன் இயைந்த கொண்டாட்டத்தைத் துவங்கட்டும். வாழ்த்துக்கள்.

அன்புடன்

நா.இரா. குழலினி, திண்டுக்கல்.

(தினமணி தீபாவளி மலர் 2004)

kuzhalini@rediffmail.com

Series Navigation