ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


கடந்த 16 சனவரி 2008 அன்று தமிழக அரசு 2006ம் ஆண்டில் சிறந்ததாக எனது ‘நீர்வலை’ (வலைவீசி மீன் பிடித்தவனை அலைவீசி கடல் பிடித்த கதை) நாவலைத் தெரிவு செய்து பரிசளித்தது. தமது வயதுத் தளர்வையும் புறந்தள்ளிய உற்சாகத்துடன் மேடையில் தம் கைப்பட பரிசுகளை வழங்க முதல்வர் பிரியப்பட்டது அழகாய் இருந்தது.

இலக்கியப் படைப்பு உந்துதலும் ஆர்வமும் உள்ள முதல்வர் என்ற அளவில் சிறு உரையாடலுடன் அவரை நெருங்கிப் பரிசு பெறுவதில் உற்சாகப் பட்டேன். சுமார் முப்பது துறைகளில் படைப்புகள் பரிசு பெற்றன. அலுப்படையாத புன்னகையுடன் படைப்பாளிகளுக்கும், அப் புத்தகங்களின் பதிப்பாளர்களுக்கும் பரிசு வழங்கினார் முதல்வர். பரிசுத்தொகை பத்தாயிரம் ரூபாய். பதிப்பாளர் ஊக்கத்தொகை ரூபாய் இரண்டாயிரம் என அமைந்தது.

புதுக்கவிஞர் இரா.மீனாட்சி தமது இதே நூலுக்கே சிறிது முன் புதுவை அரசின் பரிசைப் பெற்று வந்திருந்தார். மரபுக் கவிஞர் வலம்புரி சோமநாதனும் தமது இதே நூலுக்கு மற்றொரு பரிசு பெற்றவர். நாவலுக்கு நான். சிறுகதைக்கு சு. வேணுகோபால். நாடகத்துக்கு எஸ். ராமகிருஷ்ணன், சுற்றுக்சூழல் நூலுக்கு என சா. கந்தசாமி, என எதிர்பாராத அளவில் படைப்பாளிகளைப் பார்க்க முதல்வர் மனமுவப்பு கொண்டார், எனத் தெரிகிறது.

மேடையில் தம் உரையின்போது பரிசுத்தொகையை இரட்டிப்பாக்கி ரூபாய் இருபதாயிரம் என அறிவித்ததில் அது உறுதியானது. அதை இந்த எழுத்தாளர்கள்முதலே நடைமுறைப் படுத்துவதாகவும் தெரிவித்ததில் எல்லாரும் மனம் நெகிழ்ந்தார்கள். ஒரே வாரத்தில் இந்த மேலதிகத் தொகை வழங்குவதாகவும் சொல்லப்பட்டது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, 17 சனவரி 2008 அன்று விடுமுறை நாளன்றே அரசு யந்திரம் சுறுசுறுப்பாகி யிருந்தது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு. ம. ராசேந்திரன் அவர்கள் துடிப்பாக இயங்கி வேண்டிய ஆணைகளைப் பெற்று பரிசுத்தொகைக்கான காசோலைகளைத் தயார் செய்து 18ம் தேதியன்றே எழுத்தாளர்கள் அனைவருக்கும் தொலைபேசியிலும், தந்தி மூலமாகவும் தகவல் தெரிவித்து, சிறு தேநீர் விருந்து என ஏற்பாடு செய்து மேலதிகத் தொகையை வழங்கிவிட்டார். நம்ப முடியாத வேகம் அல்லவா இது? அதுவும் ஓர் அரசுயந்திரம்.

முதல்வரின் மனசறிந்து செயல்பட்ட துறையினரையும், அதன் திறமையும் சுறுசுறுப்பும் மிக்க இயக்குநரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

கலைகள் செழிக்கிற நாடு வாழும். முதல்வர் இதை அறிந்திருக்கிறதாகவே நம்ப முடிகிறது. அவர்சார்ந்த தமிழ் வளர்ச்சித் துறையும் மெய்யாலுமே அக்கறையோடு இயங்குகிற பாங்கு ஆரோக்கியமானது. இது நீடிப்பது நாட்டுக்கு நல்லது.

தற்செயலாக எங்களை நேர்முகமாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றதில் இயக்குநர் திரு. ம. ராசேந்திரன் மனம் மகிழ்ந்தார். நிகழ்ச்சியமைப்பு பற்றிய கருத்துகளை அவர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அவரிடம் படைப்பாளிகளும், பதிப்பாளர்களும் கலந்துரையாடியபோது, இனிவரும் ஆண்டில் மேடைக்கு தூரத்தில் இருந்தாலும் கூட நிகழ்ச்சியைத் தெளிவாகப் பார்க்க முடிகிற அளவில், பெருந்திரைகளை ஓரங்களில் நிறுவி ஒளிப்பதிவு காட்டலாம் என்கிற திட்டம் மகிழ்ச்சியுடன் கருத்தளவில் அங்கிகரிக்கப் பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, அக்னி அட்சர விருது – எனப் பலதும் பெற்றவன் நான். பொதுவாக வெளியூர்வாசிகளைத் தங்க இடம் ஒதுக்கி அழைக்கிற பாங்கைக் காணலாம். அத்தோடு எல்லாரையும் ஒன்று திரட்டி விருந்தளித்து கெளரவிப்பதும் நிகழ்கிறது. அரசு விழாவில் இத்தனை சிறப்பாக அது நிகழ்வு பெறும் அளவில் வெளியூர் பிரமுகர்களைத் தங்க இடம் ஒதுக்கி அழைக்கிறதில் சிரமம் இராதெனவே நம்புகிறேன்.

எதிர்பாராமல் மேலதிகத் தொகை என வழங்கிய சூழலில் எங்களை நாங்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி அறிமுகப் புன்னகை பரிமாறிக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அவ்வாறில்லாமல் நிகழ்ச்சிக்கு முன்னோ, மாலை நிகழ்ச்சி எனில் காலையிலேயே கூட, பரிசு பெற்ற எல்லா எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் ஒன்றுகூட்டி, முதல்வர் விருந்து அளிக்கலாம் அல்லவா? சற்று நெருக்க உணர்வோடு அந்தப் பரிசை நாங்களும் பெற்றுக் கொள்வோம். அதேசமயம் நாங்கள் ஒருவரையொருவர் மனமுவந்து கைகுலுக்கிப் புன்னகை பரிமாறிக் கொள்ளவும் அது வழிவகுக்கும். பிற தனியார் பரிசுக்காரர்கள் செய்துகாட்டிய நற்செயல் இது.

விழாவில் எடுத்த படத்தொகுப்பும், புகைப்படங்களும் அரசே எங்களுக்கு அளித்தால் நலம் என்றும் வேண்டுகோள் வைக்கிறேன். பாதுகாப்பு முதலிய நெருக்கடிகள் காரணமாக தனியார் புகைப்படம் எடுக்க அரசுவிழாக்களில் சாத்தியம் இல்லாதிருக்கிறது.

வழக்கமான அரசு விழாக்களில் ஒன்றாக இது அமையவில்லை. மேலதிக வசதிகள் சாத்தியப்படும் சூழலில் முன்வந்து செய்துதரப் படலாம் என்று கோரிக்கை வைக்க வாய்ப்பு கிடைத்ததே நல்ல அம்சம்தான்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு ம. ராசேந்திரன், அவரே சிறந்த புனைகதைஞர், மொழிபெயர்ப்பு வல்லுநர், கட்டுரை எழுத்தாளர், பத்திரிகையாளர், நல்லிலக்கியவாதி, எனப் பல்துறை வித்தகராக அமைந்தது அரசின் பெருமை என்பதைப் பாராட்டிச் சொல்ல வேண்டும்.

தமிழ் வளர்ச்சித் துறை பிற அரசுத் துறைகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. வாழ்த்துவது ஒவ்வொரு தமிழனின் கட்டாயக் கடமை.


storysankar@rediffmail.com

Series Navigation