(அ) சாதாரணன்

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

கே. ராமப்ரசாத்


ஒரு முறை அவர் என் அலுவலகத்துக்கு வந்திருந்தார். நான் எழுந்து அவரை வரவேற்றேன். அவர் தம் ஷூக்களைக் கழற்றியபடியே என்னைப் பார்த்து மெல்ல புன்னகைத்தார். நான் பதிலுக்கு ஒரு மரியாதை கலந்த புன்னகையை அவர் பால் வீசியபடி என் அன்பை வார்த்தைகளால் விவரித்து அன்புடன் அவரைப் பார்த்தபடி இருந்தேன்.

எனக்கு பழைய நினைவுகள் எப்படி மேலெழுந்து வந்ததோ, அவருக்கும் அதேபோன்று ஒரு உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். அறையின் உள் மெல்ல வந்து இருக்கையில் அமர்ந்தார்.

நான் வினவினேன், ‘ வார்த்தைகளால் நடிப்பது எனக்கு இன்னும் கைவரவில்லை. தங்களிடம் இவ்வளவு காலம் பழகியதன் பாதிப்பா ?’

அவர் புன்னகைத்தபடி, ‘பிறர் ஒன்றைக் கூறும்போது நீ ஒரு போதும் மறுப்பேதும் சொன்னதில்லை. அதுவே ஒரு நடிப்பாக உனக்குப் பட வில்லையா ?’ ‘எப்போது நீ அடுத்தவர்களை அவர்கள் கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சி செய்யத் துவங்குகிறாயோ அப்போது துவங்குகிறது உன் நடிப்பின் முதல் சாயல்’

நான், “அடுத்தவர்களை விமரிசிக்கும் முன்பு நான் என் அணுகுமுறையையும், என் தவற்றையும் என் மனதில் சற்று அசைபோடுவதின் விளைவு என்னால் மேலும் ஏதும் அப்போது பேச இயலாமல் போய்விடுகிறது. மேலும், ஒரு அந்தரங்க விமரிசனத்தையோ, புகாரோ என்னால் கூற முடிவதில்லை. வலுக்கட்டாயமாக திணிப்பது என்பதாக நான்
என் போக்கை நான் விமரிசித்துக் கொள்கிறேன்.” என்றேன்.

அவர், “இவ்விதம் நீ சொல்வது நடிப்பின் அடுத்த நிலை. தன் உணர்வுகளை அடுத்தவரிடம் இவ்விதம் வெளிப்படையாக விளக்கி பேசும் திறமை நடிக்க முடிந்தவரால் மட்டுமே சாத்தியம்”. ஆனால், உன்னால் எப்படி அடுத்தவரின் செயல்பாட்டை தவறு என்று தோன்றும்போது விமரிசிக்க முடியால் போய்விடுகிறது ?”

நான், “நீங்கள் போதனை செய்யவில்லை. ஆனால், என்னைச் சிந்திக்கத் தூண்டுகிறீர்கள். நன்றி. அடுத்தவரை நகைச்சுவை என்ற பெயரில், சிந்திக்காமல் பேசி, கிண்டல் செய்வது என் பாணி. இதில் தவறேதும் உள்ளதாக எனக்குத் தெரியவில்லை. நான் சொல்லும் தொனி நகைச்சுவையாகவும், ஆனால் யோசிக்கும்படியும் உள்ளது என்பதை நான் அறிவேன். என் எதிர்வினையில் உள்ள கிண்டலை மட்டும் எடுத்துக் கொண்டு, கருத்தை எடுத்துக் கொள்ளாமல் பலர் விட்டுவிடும்போது நான் என் பாணியை மாற்றிக் கொள்ளவேண்டுமோ என்று எனக்குத் தோன்றுகிறது”

அவர், “ஏன் சுற்றி வளைத்து ஒரு முறை ? நாகரீகம், நளினம், மென்மை என்ற பல வார்த்தை அலங்காரம் சேர்த்து பழக்கப்படுத்திக் கொள்கிறாய்?”

நான், ” எனக்குத் தெரிந்த ஒன்று எனக்கு ஒன்றும் தெரியாது என்பது தான். எனவே நான் கடைபிடிக்கும் வழிமுறைகள் பலரால் சொல்லப்பட்ட வெற்றி வழிமுறைகள் நான் அவற்றைப் பின்பற்றுகிறேன் அவ்வளவே வாதத்தில் வெல்ல ஒரே வழி அதைத் தவிர்ப்பதுதான்”

அவர், “நல்லெண்ணத்தை இழப்பது என்பதுடன் உன் கருத்து இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், நீ ஒன்றை இதில் மறந்து போகிறாய். தாழ்வுமனப்பான்மையாகவும் இது பலரால் புரிந்துகொள்ளப்படும் அபாயம் உண்டு”

நீ உரக்க உன் எதிர்க்கருத்தை அடுத்தவருக்குத் தெரிவிக்கும்போது, உன் செயல் பல அற்புதங்களை நிகழ்த்துகிறது.

1. அது திடீரென நிகழ்கிறது
2. ஞாபகத்தில் நீண்ட நாள் இருக்கிறது
3.உன் துன்பத்தைப் போக்கும் ஒரு வெளிப்படையான செயல்
4.இது உனக்கே உனக்கு மட்டுமான ஒரு பாணியாக அமையும்
5.ஆத்மார்த்தமான ஒரு நட்பு உருவாக வாய்ப்பு உண்டு

இறுதியாக, முக்கியமான ஒரு புரிதல் அடுத்தவர் மனதில் ஏற்படுத்தும். ” நீ பிறர் நலனில் அக்கறை உள்ளவன்” என்ற ஒரு அடையாளம்.

திரும்பத் திரும்பச் சொல்லப் படும் ஒரு செய்தி மனிதனின் ஆழ்ந்த விருப்பம் பிறர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பது. இவ்விதம் சொல்பவரும் சரி, செயல்படுத்துபவர்களும் சரி போலியாக தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஒரு செயல்பாட்டை ஊக்குவிப்பவர்கள்.

இந்த போதனைக்கு ஆட்ப்பட்டவர்கள் சொல்லும் பல உதாரணங்கள் உன்னை நம்பச் செய்யும் விதமாகவே இருக்கும்.

ஆனால், இதிலெல்லாம் விழுந்துவிடாமல் இருப்பவரே ஒரு அசல் வாழ்க்கை வாழ்பவர்.

ஒரு காரணம் கருதி, ஒரு செயல் ஒருவரால் செய்யப்படும்போது அது உடனே உன்னால் வெளிச்சம்போட்டுக் காட்டப்பட்டால் செய்தவரின் மனம் புண்படும். ஆனால், உன் செயல் ஏற்படுத்தும் வெளிச்சம் அதுபோன்ற ஒரு நகலான வாழ்க்கை வாழ்பவர் மனதில் திடுக்கிடலை ஏற்படுத்தி, இதை வெளிப்படையாகப் பேசி நடிப்பை உலகிற்கு
எடுத்துச் சொல்லும் வலிமை படைத்தவரும் அருகில் உண்டு என்ற எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டு அவ்விதம் அவர் மேற்கொண்டு செய்ல்படாமல் தடுக்கும்.

நான், “இவ்விதம் எதிரெதிர் போக்குகள் எப்படி நம்மை இணைத்துள்ளது என்பது என் வியப்பு”

அவர்,” தம்மை உலகிற்கு அடையாளம் காட்ட முயற்சி செய்யும் ஒரு போக்கு இது, இதில் என்ன வியப்பு? உன் கேள்விகளில் மிகச் சிறந்த கேள்வி ” நான் யார்? என்பதுதான் ”

நான், ” அது சரி , அதற்கான பதில் என்ன? இன்னும் சொல்லவில்லையே”

அவர்,” பதில்களிலேயே மிகச் சிறந்த பதில் தான் நான் அதற்குச் செல்வேன்”

அது என்ன ?

மெளனம்.

அவர் மெல்ல எழுந்து என் அறைவிட்டுச் சென்றார்.

——————
kramaprasad@gmail.com

Series Navigation

கே ராமப்ரசாத்

கே ராமப்ரசாத்