அவ்ரங்கசீப்பின் உயில்

This entry is part [part not set] of 23 in the series 20051111_Issue

நாகூர் ரூமி


மெளலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி அவ்ரங்கசீப்பின் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து:

1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்யவேண்டும் என்பது என் விருப்பம். வேறுயாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

2. என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்து வைத்த 04 ரூபாயும் 02 அனாக்களும் இருக்கின்றன. எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர்ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன், தொப்பிகள் தைத்தேன். அந்த தொப்பிகளை விற்றுத்தான் நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்த பணத்தில்தான் (என் உடல்மூடும்) கஃபன் துணி வாங்கப்பட வேண்டும். இந்த பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம்.

(என் கையால் எழுதப்பட்ட) குர்ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ருபாய்கள் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்த பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

3. என்னுடைய சாமான்கள் அனைத்தும் — துணிமணிகள், மைக்கூடுகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸமிடம் கொடுத்துவிட வேண்டும். என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4. ஒரு அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்பட வேண்டும். என்னைப் புதைத்த பிறகு, என்னுடைய முகத்தைத் திறந்து வைக்க வேண்டும். என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம். திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன். அவனுடைய உச்ச நீதிமன்றத்துக்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

5. எனது கஃபன் துணி தடித்த கதர்த்துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம். எனது சவஊர்வலம் செல்லும் வழியில் மலர்களைத் தூவவேண்டாம். என் உடல்மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது. நான் இசையை வெறுக்கிறேன்.

6. எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது. வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக்கொள்ளலாம்.

7. பல மாதங்களுக்கு என்னால் என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. நான் இறந்தபிறகு, என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளங்களும் கொடுக்கப்பட வேண்டும், ஏனெனில் கஜானா காலியாக இருக்கிறது. நிஅமத் அலீ எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன். என் உடலை அவன்தான் சுத்தப்படுத்துவான். என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயிலை.

8. என் நினைவாக எந்த கட்டிடமும் எழுப்பக் கூடாது. எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்தக் கல்லும் வைக்கக் கூடாது. கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது. என்னைப் போன்ற ஒரு பாவிக்கு நிழல் தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியில்லை.

9. எனது மகன் ஆஸம் டெல்லியிலிருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான். பிஜாபூர், கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பக்ஷிடம் விடப்பட வேண்டும்.

10. அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன்தான் இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன். எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது.

கி.பி. 1658-லிருந்து 1707-வரை இந்தியாவை ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆண்ட ஆறாவது முகலாய மகா சக்கரவர்த்தியின் மரண விருப்பங்கள் இவை! அவருடைய விருப்பப்படியே சாதாரண செங்கற்களால் கட்டப்பட்ட அவரது கல்லறையை இன்றும் ஒளரங்காபாத்-தில் காணலாம்.

மேற்கண்ட உயிலின் வாசகங்கள், நவம்பர் மாதம் 7-ம் தேதி, 1976-ம் ஆண்டு தேதியிடப்பட்ட ‘ஃபதஹ் ‘ என்ற வார இதழில், எஸ். அஜ்மீர் சிங் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்த்துப் போடப்பட்டது.

Series Navigation