அவளுக்கும் நதியென்று பேர்

This entry is part [part not set] of 5 in the series 20000813_Issue

ருத்ரா (இ.பரமசிவன்)


1

அன்றொரு நாள்

ஆற்றில்

நான் குளிப்பதற்கு

முங்கியபோது

மின்சாரம் பாய்ந்தது.

உன் கண்களின்

‘கதிாியக்கம் ‘அது.

உன் குளிர்முகம்

என்னைப்பார்த்து

வீசிய பூவில்

நான் புதைந்து போனேன்.

உன் சிாிப்புக்கு

என்ன அர்த்தம் ?

அந்த தாம்பிரபரணிக்கு கூட

திகட்டிப் போன இனிப்பில்

மூச்சு முட்டியது!

2

நீர்க்காக்கை போல

நீருக்குள்

சிறகடித்துக் கொண்டிருக்கிறேன்.

நீருக்குள்

ஒரு வானத்தை சுரங்கம் வெட்டி

பறந்து கொண்டிருக்கிறேன்.

ஆற்றுக்கடியில்

உன் விழி தாக்கிய

இன்ப அதிர்ச்சியை

காதுக்குள்..அந்த

கூழாங்கற்கள் கூட

கூக்குரல்

எழுப்பிக்கொண்டிருக்கிறது.

3

நீ மூழ்கிக் குளிக்கும்போது

உன் மூச்சுக் குமிழிகள்

முத்துமாலையாய்

கோர்த்து வந்து

என்னைச் சுற்றிக் கொண்டுவிட்டது.

பெண்ணே!

அந்த சிாிப்பின் அர்த்தத்தை

இன்னொரு

சிாிப்பினால்

மொழிபெயர்த்து

சொல்லிவிட்டுப் போ.

உன் தாமரைச் சிாிப்பினால்

இந்த தாமிரபரணிக்கே

மெருகு சேர்க்க வந்தவள் நீ!

உன் உஷ்ண மூச்சுபட்டு

மெழுகுவர்த்தியாய் உருகி

ஓடுகின்றாள் ‘பொருனையவள் ‘.

குளிர் பூந்துளிக்குள்ளூம்

காதலின்

சுடு கவிதை

சுவை கூட்டித்தருபவளே!

பூங்காற்றில் உன் புன்சிாிப்பை

என்னிடம் நீ

தடம் ஒற்றி தந்து விடு.

4

என்னையே

பார்த்துக் கொண்டிருந்துவிட்டு

வெடுக்கென்று தலைகுனிந்தாய்.

நாணத்தின்

அந்த மென்சிவப்பில்

ஆற்று நீரெல்லாம்

காதலின் செம்பஞ்சுக்குழம்பை

பூசிக் களித்தது.

படித்துறையின் கல்விரல்களும்

மருதாணி பூசி சிவப்பேறின.

கரையோரத்து நாணல்கீற்றுகள்

பச்சையாய் சிவந்து

தழல் வீசின.

சூாியன் கூட

கொஞ்ச நேரத்துக்கு

வெட்கப்பட்டு போய்

அந்தி சிவப்பை

அள்ளிப் பூசிக்கொண்டான்.

எனக்கு மட்டும்

உன்னை நிமிர்ந்து

பார்த்துக்கொண்டே

இருக்கவேண்டும் போலிருந்தது.

5

அன்று

வெகுநேரமாய்

உன் பார்வைக்காக

காத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால்

அறைந்து அறைந்து

உன் துணிகளை

ஒரு கோபத்தோடு

அடித்துத்

துவைத்துக் கொண்டிருந்தாய்.

அந்த கல்லில்

உன் ரவிக்கை

கிழிபடுவதைக் கண்டு

என் நெஞ்சு பொறுக்கவில்லை.

காரணம் புாியாமல்

நின்றுகொண்டேயிருந்தேன்.

உடம்பை நனைக்காமலேயே

என் கைகள்

சோப்பு போட்டுக் கொண்டிருந்தன.

சுற்றியிருந்தவர்களின்

கேலிப்பார்வைகள்

என்னை மொய்த்தது கண்டு

தடால் என்று நீருக்குள்

‘விரால் ‘ பாய்ந்தேன்.

என்ன காரணமாயிருக்கும் ?

முங்கிக் கொண்டே

மூண்டு எாிந்தேன்.

நூற்றுக்கணக்காய்

அயிரைமீன்கள்

ஊசி அம்புகளாய்

என்னை சல்லடை ஆக்கின.

நேற்று வரை

அவள் முத்தங்களை

எனக்கு பாிமாறிய….அந்த

சிறு மீன்களும்

என்னோடு யுத்தம் புாிந்தன.

நீருக்குள்

அவளுடைய ‘மோனப் பொழிவுகள் ‘

எங்கே போயின ?

எப்படி வந்தது

இந்த கத்தி ஈட்டிகளின்

கட முடா சத்தங்கள் ?

யானை ஏறி

என்னை மிதிப்பது போல்

அவள் துணி துவைக்கும்

சத்தங்கள்

என்னைப் பிளந்தன.

தாமிரபரணியே!

உனக்குள்

இத்தனை கலிங்கத்துப்பரணியா ?

6

ஓ! காரணம் புாிந்தது.

நாலைந்து நாட்களாக

நான் ஆற்றுக்கு

குளிக்க வரவில்லை.

உறவினர்களின்

ஊர்களுக்கெல்லம்

உலா போய் விட்டு

இன்று தான் வந்தேன்.

அதற்குள்

ஓ!தாமிரபரணியே!

உன்னை அடித்துத் துவைத்து

கசக்கிப் பிழிந்து விட்டாளே!

சுழித்து நுரைத்து ஓடும்

உன் உற்சாகம் எங்கே ?

கந்தலாகி

கண்ணீர் விட்டுக்கொண்டு

வருகிறாயே.

அவள் என்னை

இத்தனை நாளாக

பார்க்காத கோபம் இது.

இந்த ஆற்றுப்படுகையில்

எங்கள் கண்களின்

‘ஆற்றுப்படைகள் ‘

அரங்கேறாத தாபம் இது.

7

நான் எந்த ஊர் சென்றாலும்

ஓ1 தாமிரபரணியே

உன் இரத்த நாளம் இருக்காத

இடமில்லை.

அதில் அவள் இதயம் துடிக்காத

சுவடும் இல்லை.

சாதாரண ஆறு இல்லை நீ.

அவள் காதலைத் தாங்கி

‘கல் பொருதிறங்கும்

மல்லல் பேர் ஆற்றின் ‘

மாணிக்க வடிவம் அல்லவா நீ!

8

அன்பே!

உன்னைப்பிாிந்து

இத்தனை நாட்களாய்

நானும்

இதே தாமிரபரணியின்

நீர் நரம்புகளில்

நம் காதல் ராகங்களை

யாழிசைத்துக் கொண்டிருப்பது

உனக்கு கேட்கவில்லையா ?

இது ஆறு அல்ல.

நம் கனவுகளை

உருக்கி வார்த்துக்கொண்டு ஓடும்

உன்னதமான

கண்ணாடித்திரவம் இது.

எங்கிருந்தாலும்

நம் பிம்பங்களை

நமக்கு காட்ட

வளைந்து நெளிந்து கொண்டு வரும்

‘ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள் ‘ இது.

அதனால்

கல்லிடைக்குறிச்சியில்

நீ குளித்துக்கொண்டிருந்த போதும்

உன் வடிவம்

நான் குளிக்கும்

சேர்மாதேவிக்கு ..நலமாய் வந்து

சேர்ந்து விட்டது.

கடகடத்த அந்த

கூண்டுபாலத்தில்

ஊர்ந்து செல்லும் ரயில்

வளையல்பூச்சியாய்

மறைந்தபோதும்..அது

உதிர்த்த

உன் வளையல் ஓசைகளில்

நான்

உறைந்துகிடந்தேன்

9

பத்தமடையில்

உன் நினவு

பட்டுப்பாய் விாித்ததுபோல்

நீர் பரப்பிய ஆற்றில்

உன் அழகையே ஆராதித்து

அதன் ஆழத்தில்

குளித்துக்கொண்டிருக்கிறேன்.

பல நூறாயிரம் மைல்களிலிருந்து

வானத்தைக்

கழற்றியொிந்து விட்டு

அந்த நிலவா

இந்த தாமிரபரணியில்

குளித்துக் கொண்டிருக்கிறது ?

9

பாபநாசத்தில்

அந்த வெள்ளி நுரைகளிடையே

உன் கொலுசு சத்தங்கள்

‘வில்லுப்பாட்டில் ‘ குலுங்கும்

மணிகளாய்

இந்த ஆற்றுக்குள்ளும்

எதிரொலிக்கின்றன.

கண்ணே!

நீாினுள்..அந்த பருமீன்கள்

உன் கண்களின் கூட்டமாய்

மேய்ந்து மேய்ந்து

என் மேனி தடவின.

அந்த தாமிரபரணியே

கண்களின் ஆறாகிப்போனது.

திறந்து திறந்து மூடும்

அந்த மீன்களின்

குமிழ் வாய்களில்…நீ என்னை

குசலம் விசாாிப்பது

நன்றாய் கேட்கிறது.

10

அம்பாசமுத்திரத்தின்

‘எாிச்சடையார் கோயில் ‘

படித்துறையில் இறங்கி

குளிக்கும்போதும்….

அன்பே!

எனக்கு முன்

பளீாிடும் ஒரு புன்னகையின்

படிக உருவமாய்…நீ

‘விடியல் ‘ பூக்கிறாய்.

அடர்ந்த மருதமரங்களின்

நாரைகூட்டங்கள்

நீ குளிக்கும்போது உன் மீது

நழுவிக்கிடந்த ‘பச்சைத் ‘துணியின்

‘வெள்ளைப்பூக்களை ‘ அல்லவா

என் கண் முன் நிறுத்தின.

அவிழ அவிழ பூக்கள் அழகு.

அவிழ்த்துக்கொண்டே

அவிழாமல் இருக்கும்

பெண்மைப்பூவின்

அழகு அற்புதம்

அதனுள் அடைகாத்திருக்கும்

உன் உள்ளம் அழகு.

உன் உடலும் அழகு.

உன் உடையும் அழகு..அதில்

உடையும் என் மனசு.

11

ஓ!தாமிரபரணியே!

‘கழிநெடிலடி

ஆசிாிய விருத்தம் ‘ ஒன்றை

நீண்டு பாடிக் களைத்த பின்

இந்த ‘குறுக்கு துறையில் ‘

குறுக்கு ஒடிந்து

சோர்ந்து விட்டாயா என்ன ?

என் காதலி

எனக்கு இட்ட கட்டளை

ஏதேனும் உண்டா ?

அந்த ‘கட்டளை கலித்துறையில் ‘

கட்டுண்டு கிடக்கும்

களிப்பின் ‘கலித்தொகையை ‘

கட்டவிழ்த்து விட்டுப்போ நதியே ?

என்னை அவள்

பிாிந்த துயர் தங்காது

சிந்தும் கண்ணீாின்..இந்த

சிந்து பூந்துறையும்

எனக்கு சுடுகின்றது.

12

‘இளைஞனே!

சற்று நில்.

நான் ஆறுமுகனோியில்

ஆறி அடங்கி போனாலும்

ஆவி அடங்காது.

உன்னிடம் ஒரு கேள்வி.

உன் காதலியின் பெயர் என்ன ? ‘

ஆற்றமாட்டாமல்

ஆறு கேட்டது.

13

‘நான் குளிக்கும் போது

அவள் ஆகினாய்.

கரையேறியதும்

நீ ஆறாகினாய்.

காட்டாறு அல்ல நீ.

ஆனாலும் அவள் காதலை

எனக்கு இன்னும் நீ

காட்டா ஆறு நீ.

அவளே காதலெனும்

ஒரு ஆழங்காணா சமுத்திரம்.

அவள் உன்னிடம் குளிக்கும் போது

நீயே ஒரு

கொட்டாங்கச்சியாய்

குறுகிப்போனாய்.

இருப்பினும்

மெல்லிய பூங்கொடியே!

உன்னிடம் அவள் பூத்திருக்கிறாள்..

இதழ் எனும் இறகு சிமிட்டி

எனக்காக அவள் காத்திருக்கிறாள்.

வளைந்து நெளிந்து

அவளும் உன் போல்

தரைமீது

ஒரு வானவில் காட்டுவதால்

அவளுக்கும் நதியென்று பேர். ‘

 

 

  Thinnai 2000 August 13

திண்ணை

Series Navigation

Scroll to Top