அழகைத்தேடி

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

சி .மணி


நாங்கள் இந்தியர்கள்
நாங்கள் எல்லோரும்
பெண்களை மதிக்கிறோம்
அழகிகளை மதிப்பதில்லை

நாங்கள் இந்தியர்கள்
நாங்கள் எல்லோரும்
அழகிகளை மதிப்பதில்லை
அழகிகளை நேசிக்கிறோம்

செல்வி பிரபஞ்சம்
செல்வி வையகம்
செல்வி சென்னை முதலியோர்
இந்த விஷயத்தை கவனிக்கவும்

விபத்து போர்கள்
கடத்தல் என்று
கணவணை இழந்த
கைம்பெண்களை மதிக்கிறோம்

வரதட்சணை கொடுமை
கற்பழிப்பு கேலிகளால்
தற்கொலை செய்து கொண்ட
பிணங்களை மதிக்கிறோம்

கைம்பெண்கள் பிணங்கள் என்று
அழகாக இருந்தால் போதும்
வண்ணப்படங்கள் எடுத்து
சின்னத்திரை இதழ்களில்
விளம்பரமெழுதி
துக்கம் கொண்டாடுவோம்
அழகை ரசித்தவாறு
என்பது ஒரு பக்கம்

என்றாலும் நாங்கள்
பெண்களை மதிக்கிறோம்
பெண்கள் சாதனை செய்கிறார்கள்
நிலத்திலும் நீரிலும் வீட்டிலும்

ஆனால் எந்த அழகியும்
உருப்படியாக
முதல்வர் தொழிலதிபர் என்று
சாதனை செய்ததில்லை

சாதனை செய்தவர்கள்
சாதாரண பெண்கள்
பெரிய நாசி
கிளியோ பாட்ரா தவிர

ஒவ்வொரு அழகு ராணியும்
பேட்டிகளில் சிரித்தபடி சொல்வது
பயங்கர தொழு நோயும் எயிட்ஸும்
தன் சேவைக்களம் என்று

அழகு ராணிகளுக்கும்
எயிட்சுக்கும் தொழுநோய்க்கும்
இருக்கிற உறவு
உலகம் அறிந்தது தான்

பிதாவே அவர்களை மன்னியும்
அவர்கள் இன்னது விரும்புவது
என்று தெரியாமல் விரும்புகிறார்கள்
ஆமென்

[மார்ச் 20001 சொல் புதிது இதழில் வெளியானது]

Series Navigation

சி .மணி

சி .மணி