அலுமினியப்பறவைகள்

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

எம்.கே.குமார்


சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம். விதவிதமான மனிதர்களும் விமானங்களும் பரபரப்பாய் இயங்கும் இடம். சிங்கப்பூரிலிருந்து சென்னை செல்லும் விமானத்தின் இடதுபக்க இறக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். இறக்கையின் மேல்பாகம் மேலும் கீழும் லேசாக அசைந்தது. வரிசையாய் அதனுள்ளே இருந்த ஒவ்வொரு பிரிவுகளும் அடுத்தடுத்து ஆடின. காற்று நுழைந்து வெளியேற தாராளமான வழி விரிந்திருக்க, விமானத்தின் இறக்கைக்கு வயதாகியிருந்தது. பழுதாகியிருந்ததாலோ என்னவோ ‘இரண்டுக்கு இரண்டடி’யில் தகரப்பகுதியை நீக்கி புதியதை வைத்து இணைத்திருந்தார்கள். அதிலும் ஒரு மூலையில் எண்ணெய் போன்றதொரு திரவம் வழிந்திருந்தது. விமானத்தின் முதுவலும் இயந்திரத்தின் ‘கிர்’ரென்ற வித்தியாச சத்தமும் உள்ளுக்குள் அவனைக் கலவரப்படுத்த, நேற்றிரவு அவன் கண்ட கனவும், தன் பங்குக்கு மீண்டும் வந்து நினைவுக்குள் ஆடியது. ஊழிக்காற்றில் தாண்டவமாடும் மரங்களைப்போல நினைவுக்குள் அக்கனவு சுழன்றடிக்க, வியர்த்துப்போய் மூச்சை இழுத்துவிட்டான் சுந்தர். ‘கனவு வெறும் கனவுதானா?’

இருக்கைகளுக்கு இடையே மாட்டி பாதையை அடைக்கும் பெட்டியை இழுத்துக்கொண்டு வருபவர், பெட்டியை மேலே வைக்கமுடியாது சீட்டுக்கு மேலே ஏறி நின்று முனங்குபவர், வழியில் நின்று வருவோரை மறைத்துக்கொண்டிருக்கும் கதர்ச்சட்டை பெருவுடல்காரர், அழுதுகொண்டிருக்கும் ஒரு குழந்தை, ஆணையிடும் மேஸ்திரிகள் போல ஆங்காங்கு நின்றுகொண்டு உத்தரவிடும் விமானஸ்திரீகள், பதினான்காம் இருக்கையிலிருந்து இருபதாம் இருக்கைக்காரரோடு ‘மச்சான் சம்பந்தமாய்’ பேசிக்கொண்டிருப்பவர்கள், விமானத்திற்குள் வந்தபின்னும் விடாது கைபேசியில் ‘போய்வருகிறேன்’ சொல்பவர்கள் என சுந்தரைச்சுற்றி விமானத்தில் சந்தைக்கடையாய் சில்லறைச்சத்தங்கள். அவற்றிலேதும் கவனமில்லாது விமானத்தின் இறக்கையும் அதனடியிலிருக்கும் மனிதர்களையும் பார்த்துக்கொண்டிருந்தான் அவன். காதில் ஒலிதடுப்பானை அணிந்து பாதுகாப்புச்சட்டை போட்ட நபர் விமானத்தைச்சுற்றி அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார். விமானத்தின் முன் சக்கரங்களுக்கிடையே ‘தள்ளு டிராக்டரின்’ இரும்புக்கரம் கர்வத்துடன் இணைந்திருக்க, சுந்தர் ஏதோ யோசித்துக்கொண்டிருந்தான்.

ஒரே பக்கமாய் நிரம்ப நேரம் பார்த்துக்கொண்டிருப்பதால், பயந்தோ ஆர்வத்தாலோ காயத்ரி அவனது கையின்மேல் கையை வைத்து அவள் பக்கம் திருப்பினாள். அவளுக்கென்றே உள்ள புன்னகையை காட்டி ‘என்ன’ என்றான் சுந்தர் கண்களால்.

அவனுடைய கண்களை ஆழமாகப் பார்த்த அவள், மீசையையும் அதுசார்ந்த பகுதிகளையும் பார்த்தாள். விழிகள் கொஞ்சம் கீழ்நோக்கி வந்துவிட்டு மீண்டும் அவனது கண்களில் வந்து நின்றன. அவனும் அப்படியே பார்த்தான். பகலில் மரபுக்கவிதையாகவும் இரவில் புதுக்கவிதையாகவும் மாறும் அவளது கண்கள். நேர்த்தியான மூக்கும் அதற்கு மேலே எல்லைக்கோடுகள் போல திருத்திய புருவங்களும் புருவங்களுக்குக் கீழே கரிய இரவில் மிதந்து வரும் முழுநிலவைப்போன்ற கண்களும் ஆராதனைக்குரியவை. அவன் கூர்ந்து பார்த்துக்கொண்டு அவளுக்கான புன்னகையை வீச, மெல்ல அருகில் வந்த அவள் ‘சரக்கு நல்லாயிருக்கா’ என்று கேட்டாள் லேசான கேலியுடன். சிறிது தடுமாறிய அவன், விமானத்தின் உள்ளே நடமாடும் அவர்களை அப்போதுதான் அசுவாரஸ்யமாய் கவனிக்கத்தொடங்கினான்.

மார்பை செங்குத்தாய் நிறுத்த முனைந்திருந்த அந்தப்பெண் ஏறக்குறைய அவனைவிட இரண்டு அங்குலம் உயரமாய் இரூந்தாள். சேலையை ஒரு பக்கம் தெரிந்தோ என்னவோ விலக்கி விட்டுக்கொண்டிருந்தாள். தலைமுடியை கீரைக்கட்டைப்போல கொண்டை போட்டுக்கொண்டு அவனது வரிசையைக் கடந்து சென்ற அவளுக்கு அனேகமாக சுகந்தி, சுமித்ரா போன்ற பெயர்களில் ஏதோ ஒன்றுதான் இருக்கவேண்டும்.

“என்ன, சரக்கு ஓகேயா?” மெதுவாய் அவன் கைகளைக் கிள்ளி கேட்டாள் காயத்ரி மீண்டும்.

“ம்ம். ஓகேதான். ரொம்ப ஹைட்டா இருக்கா…” என்றான் அவன்.

“அதானே! யாரத்தான் நீங்க ஓகேயில்லைன்னு சொல்லியிருக்கீங்க? மார்க்கெட்லெ இருக்கிற சீனக்கிழவி, இந்தோனேசியா ‘மெய்டு’ன்னு எல்லாத்தையும் டபுள் ஓகேன்னு சொல்ற ஜென்மமாச்சே!”

லேசாகச் சிரித்த அவன், “சரி, எல்லா திங்சையும் கரெக்டா எடுத்திட்டியா? எதையும் மறக்கலியே..?” என்றான்.

“ம்ம்…எல்லாம் எடுத்தாச்சு. ஐயப்பண்ணா கொடுத்த அந்த ‘கிப்ட்’ கொஞ்சம் ‘வெயிட்’. அதனால அதை மட்டும் எடுக்கலாமா வேணாமான்னு யோசிச்சு கடைசியில எடுத்துட்டேன். மத்ததெல்லாத்தையும் பேக் பண்ணியாச்சி” என்றவளின் குரல் தொடர்ந்து கம்முவதை உணர்ந்து அவளை ஏறிட்டான். கண்களில் அவனது வலியின் பாதியை கஷ்டப்பட்டு மறைக்க முயன்றுகொண்டிருந்தாள். ‘எல்லாம் என்னால் தானாப்பா?’ என்று கேட்டன அவளது கண்கள்! எவற்றுக்கும் யாரும் காரணமில்லை. அவளது பார்வையின் பதிவை விழுங்க முயன்றான் அவன்.

‘எல்லாம் என்னாலதானாப்பா?’ என்றாள் கண்களால் மீண்டும். அக்கறையாய் குறுக்கிட்டு பேச்சை மாற்றமுயன்றான். “பெல்ட் எப்படிப்போடுறதுன்னு தெரியுமா உனக்கு?” என்று கேட்டான். அவளது பதில் வருவதற்குள் எதிரே கைகாட்டினான். அங்கே அந்த ‘யூகலிப்டஸ் மர’ மாது ஆங்கில பின்னணியில் அதைச் செய்துகொண்டிருந்தாள். கடலில் விழுந்து உயிர் பிழைக்க, அந்த கச்சடாவையெல்லாம் எப்படி அணிய வேண்டும் என்பன போன்ற விளக்கங்கள். மொழி புரியாதவர்களுக்கும் எளிதாகப் புரியும்வகையில் தெளிவாக இருந்தன அவளின் செய்கைகள்.

சுந்தருக்குப் பின்னாலிருந்த அந்த வழுக்கைத் தலைக்காரர் லேசாக சிரித்துக்கொண்டே அருகிலிருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “கேணப்பயலுவ. காலம் பூரா இதையெவே சொல்லிக்காட்டுறானுவ. அவ்வளவு உயரத்துலெயிருந்து கீழெ விழுந்தா மொதல்ல பொழைக்கமுடியுமா? அப்படியே விழுந்தாலும் கடைசி நேரத்துலெ எப்புடியப்பு இதையெல்லாம் தேடிக்கிட்டி இருக்குறது? இப்படி சொல்லிச்சொல்லியே புதுசா வர்ற பயலுவலெ பயமுறுத்தியிருவாய்ங்க இவங்க.” சொல்லிவிட்டு அந்த செயல்முறைகளையெல்லாம் கடுகளவும் கண்டுகொள்ளாமல் எழுந்து மேலே ஏதோ நோண்டிக்கொண்டிருந்தார். இரண்டுமுறை அப்பெண்மணி ‘எக்ஸ்கியூஸ்மி, கேன் யு சிட்டவுன் பிளீஸ்…’என்று சொல்லிச்சொல்லி பார்த்துவிட்டு போய்விட்டாள். இன்னொரு ஆணும் வந்து ஒருமுறை சொல்லிவிட்டுப்போனான். எதற்கும் அசராத ஆசாமியாய் இருந்தார் அவர். பலமுறை பயணம் போலும்!

சற்று நேரத்துக்கு முன்னால், ‘காலங்காலமா இதே சாக்கிலெட்டு. ஒலகமே திருந்துனாலும் இந்த பிளைட்டு மட்டும் திருந்தவே திருந்தாது. அதே சாக்கிலெட்டு முட்டாயி, அதே பொம்பளைங்களும்..’என்று சொல்லிக்கொண்டிருந்தவரும் அவராய்த்தான் இருக்கவேண்டும்.

முதன்முதலில் சிங்கப்பூருக்கு வரும்போது மிகுந்த ஆர்வத்துடன் அவற்றையெல்லாம் கவனித்திருக்கிறான் சுந்தர். பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்ற ஒரு உயிர்ப்பில்லாமல் வெறும் வேலையென அவர்கள் செய்வதை உணர்ந்த தருணம் அவனுக்கும் அது சாதாரணமாகிவிட்டது. அவசர வழி எங்கேயிருக்கிறது? விமானத்துக்குள் ஆக்ஸிஜன் குறையும்பொழுது மேலிருந்து விழும் சுவாசப்பையை எப்படி இணைப்பது, காலுக்குக் கீழேயிருக்கும் அவசர மிதப்புமேலாடையை எப்படி அணிந்து இழுத்து ஊதி பெரிதாக்கிக்கொள்வது அவ்வளவுதான் மொத்தமும். ஆனால் இவையெல்லாம் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. பாதுகாப்பு எப்போதும் சமரசம் செய்யக்கூடியதல்ல. திரும்பி காயத்ரியைப் பார்த்தான். காயத்ரி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் போலும், லேசாய்ப் புன்னகைத்தாள்.

“என்னடா?”

“ஒண்ணுமில்ல, சும்மா பாத்துக்கிட்டு இருக்கேன். ஏர்போர்ட்லெ பெரியத்தான் இருப்பாங்களா?”

“இல்லை. இப்போ தூங்கிக்கிட்டு இருப்பார். மணியைப்பாத்தியா, எட்டரை. இந்தியாவிலெ ஆறு.”

அவனுடைய மனநிலையில் அவ்வப்போது மாறுதல் இருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை. காயத்ரியும் அதைக் கவனித்திருக்கவேண்டும். கைகளை மீண்டும் இறுக்கிக்கொண்டாள்.

எல்லாம் முடிந்து விமானம் கிளம்பத் தயாரானது. வெளியே பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர். கொஞ்சதூரம் தள்ளி ஒரு ‘சைனா ஏர்லைன்ஸ்’ விமானம் கிளம்பிக்கொண்டிருந்தது. அதற்கருகில் இன்னொரு விமானம் பின்னுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தது. வாரச்சந்தைக்குச் செல்ல நம்மூர் பேருந்துநிலையத்தில் நிற்கும் டவுன்பஸ்களைப்போல பயணிகளையும் சரக்குகளையும் இறக்கிக்கொண்டும் ஏற்றிக்கொண்டும் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தன விமானங்கள்.

இத்தனை பெரிய உருவம் ‘பறக்கிறது’ என்று சொன்னால் நம்பமுடியவில்லை! ஆனால் பறக்கிறதே! எத்தனை முறை விமானத்தில் பயணித்தாலும் இந்த பயமும் அதிசயமும் மாறவே மாறாது. விமானம் ஒரு தள்ளுவண்டி போல முன்னாலிருந்து பின்னே தள்ளப்பட்டுக்கொண்டிருந்தது. தரையிலிருந்து பத்துகிலோமீட்டர் உயரத்தில் காடு, மலை, கடல், நாடு என கண்டம் விட்டு கண்டம் தாண்டும் விமானத்தைக்கூட தள்ளி அதன் பாதையில் கொண்டு போய் நிறுத்துவதற்கு ஒரு ‘குட்டி டிராக்டர்’ வேண்டித்தான் ஆகிறது!

பிஸியான சிங்கப்பூர் ஏர்போர்ட். ஆயிரக்கானவர்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சந்தோசம் இருக்குமா? போகிறவர்கள் சந்தோசத்தோடு போவார்களா? வருபவர்களுக்கு என்ன தோன்றும்? எத்தனை எதிர்பார்ப்புகள்.! ஏக்கங்கள்.! நசுங்கி குலைந்து போய்க்கிடக்கும் வாழ்க்கையை தூக்கமுடியுமா, தூக்கி நிறுத்தி விடமுடியுமா என்கிற வேகம், வெறி, வழி தேடல்! நமது வாழ்க்கையை மட்டுமின்றி நாம் தூக்கிவிட முனையும் வாழ்க்கையோரும் சேர்ந்துகொள்வர். ஏழு வருடத்திற்குமுன் அவன் இங்கு வந்தபோது அவனுக்கிருந்த மனநிலையும் இன்றைய அவனது மனநிலையும் ஒரு நிமிடம் சூழ்ந்துகொண்டு கைசேர்த்து புன்னகைத்தன.

சிங்கப்பூருக்கு வந்தால் சம்பாதிக்கலாம் என்பதை பக்கத்து தெருவில் கல்லுவீடு கட்டிவிட்ட ‘சிங்கப்பூர்’ ராமசாமியிடமிருந்து பொறாமையுடன் புரிந்து கண்மாய்க்கருகில் கிடந்த நஞ்செய் நிலத்தை ஒன்றுக்கு முக்காலாய் விற்றுவிட்டு, வீட்டுப்பத்திரத்தை வள்ளியப்பச்செட்டியாரிடம் அடகுவைத்து, பெரியப்பாவிடம் ஐந்து, சித்தப்பாவிடம் பத்து, அக்கா புருஷனிடம் ஐந்து, அம்மாவின் ஒரே ஒரு நகை, பழைய பள்ளிக்கூட வாத்தியாரிடம் பத்து என ஒன்றுக்குப் பத்தாய் அங்குமிங்கும் அலைந்து திரட்டி வாங்கி ஏஜெண்டிடம் கொடுத்து, பெட்டிக்குள் கிடந்த ‘சுமார் ரக’ பேண்டு சட்டைகளில் நாலை அள்ளிப் பெட்டிக்குள் திணித்து மண்ணைக்கும்பிட்டு மரத்தைக்கும்பிட்டு திக்கெல்லாம் தெரியும் கோயிலைக்கும்பிட்டு ஏர்போர்ட்டில் விக்கிவிக்கி அழும் அனைவரையும் தேற்றி ‘இமிக்ரேஷன் ஆபீஸர்’ காட்டும் அலட்சியத்தை மறந்து லேசாகக் குளிரும் விமானத்திற்குள் நுழைந்து தோள்வரை தழும்பும் தலைமுடியும் நேர்த்தியான புடவைக்கட்டும் சிவந்த நிறமும் சினிமாக்களில் வரும் அமெரிக்க மாப்பிள்ளைகளின் அம்மாக்கள்/அக்காக்களைப்போல எடுப்பும் தோற்றமும் கொண்ட பெண்களின் வரவேற்பைத்தாண்டி சன்னல் இருக்கை கிடைத்து உட்கார்ந்து மூச்சு விட்டால் அதுவரையான தலைவலி லேசாய் மாறியும் தனியே இருப்பதாலான தன்னம்பிக்கை மெலிதாய் அதிர்ந்தும் கழுகு வந்தமரும் மரத்தைப்போல பொறுப்பு வந்து உட்காருவதால் கொஞ்சம் தடுமாற்றமும் ஏற்பட்டு உடலும் மனமும் ஓய்வு தேடும்.

சாங்கி விமானநிலையத்தை அடைந்து இமிக்ரேஷன் அதிகாரியின் புன்னகையும் வரவேற்பும் தரும் தைரியத்தில் புதுமனிதனாய் உணர்ந்து ‘தங்கமும் வைரமும் கொட்டிக்கிடக்கும் இடத்தை நாமும் கண்டுபிடித்துவிட்டோம், கவலையில்லை’ என்று பொங்கிவரும் சந்தோசமானது மொழிவித்தியாசம் இன்றி, பங்களாதேஷ, இந்திய, பிலிப்பைன்ஸ, மியான்மர, தாய்லாந்த, வியட்னாமிய, சீன, இந்தோனேசிய மனிதர்கள் என்கிற தேசவித்தியாசம் இன்றி இதோ இந்த விமானநிலையத்தில் எங்கும் பரந்து விரிந்துகிடக்கலாம்.

கற்பக தருவைப்போன்ற கஷ்டம் தீர்க்கும் இவ்விடத்தைச்சேர்ந்து அவர்கள் அடைந்த சந்தோசம், நாளை அல்லது அதற்கு அடுத்தநாள் அவர்களுக்கான வேலையையும் வேலையிடத்தையும் அவர்கள் உணரும்வரைதான்! பிறகு? திரும்பிச்செல்லவோ அல்லது மிகக்கடினமாகவோ எதையும் உணரவைக்காத அம்மாவின் நகை, பெரியப்பா, சித்தப்பா, அக்காபுருஷன், அக்கா, பழைய பள்ளிக்கூட வாத்தியார், வீடு, கல்லுவீடு, கண்மாய் வயல், அதற்கருகே ரொம்ப நாளாய் விலைக்கு வரும் இன்னொரு வயல்!

இதோ சிங்கப்பூரை விட்டுக் கிளம்பிவிட்டான். அவனது வறுமை தீர்த்த அந்த உலகம் அவனைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. அவனது குடும்பப்பிரிவை மட்டுமே எடுத்துக்கொண்டு மொத்த குடும்பப் பிரச்சனையையும் தீர்த்த அந்த உலகம் போகிறது. அவனை வழியனுப்பி வைக்க வந்த நண்பர்கள் திரும்பிப் போய்க்கொண்டிருப்பார்கள். ரயிலில் செல்வார்கள். ரயில் ‘தானாமேரா’ ஸ்டேஷனைக் கடந்துவிட்டிருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் சுரேஷ் சர்ச்சுக்குச்செல்லலாம், சில நாட்களாய் அவன் சர்ச்சுக்குச்செல்கிறான். ரவி இந்தோனேஷியப்பெண்ணைப் பார்க்க கிளம்பலாம். ஐயப்பா ‘மெடிட்டேஷன்’ போய்விட்டு தேக்கா போவான். எல்லாம் இன்று ஒருநாள் தான். நாளைக்காலையில் சூரியன் முளைக்கும்போது ஆட்களை ஏற்றிச்செல்லும் லோரியின் பின்பக்கத்தில் நடுக்கும் குளிரை தார்ப்பாயால் சூழ்ந்து விரட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்காய் அங்கே வேலைகளும் இன்னொரு இடத்தில் தேவைகளோடு மனிதர்களும் காத்துக்கிடப்பார்கள்.

அதிகாலை நாலுமணிக்கு எழுவது, கூட்டத்தோடு கூட்டமாய் குளிப்பது, மாதம் நூற்றியிருபது வெள்ளிக்கு வரும் சாப்பாட்டு பையுடன் லோரியில் ஏறி அமர்ந்துகொள்வது, காலைமுதல் இரவு வரை உருக்கும் வெயிலிலும் மழையிலும் வேலை. முடிந்து வீட்டிற்கு வர மணி ஒன்பது. கூட்டத்தோடு குளியல்; சில நேரங்களில் சமையல், பலநேரங்களில் உப்புச்சப்பில்லாத பார்சல் சாப்பாடு. மூட்டைப்பூச்சிகளுடனும் வியர்வை நாற்றங்களுடனும் மிகுந்த அசதியுடனும் ஒரு தூக்கம். அதிகாலை நான்கு மணிக்கு விழிப்பு. இவை எல்லாவற்றுக்கும் மருந்தாய் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊருக்குப்போகும் தொலைபேசியழைப்புகள். ஆனால் அவற்றிலிருந்து திரும்பிவரும் அறிவிப்புகளும் தேவைகளும்!

ஏழு வருட வாழ்க்கை ஓடிவிட்டது. முதல் வருடம் யாருக்கும் போன் செய்யவில்லை. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் தூக்கம் நெற்றிக்கருகில் இருக்கும். தவிர போன் செய்யவும் பிடிக்கவில்லை. வாங்கிய சம்பளத்தில் போன் செய்யவும் முடியாது. இரண்டாவது, மூன்றாவது வருடங்களில் எப்போதாவது அழைத்தல். பிறகு அவ்வப்போது அழைப்புகள். கடின உழைப்பு. ஓவர்டைம் வேலைகள். திருப்பி வந்த வீடு, திரும்பி வந்த நகைகளும் வயலும். திரும்பி வந்த அக்காவீட்டுக்காரர், திரும்பி வந்த சொந்தம் பந்தம், திரும்பி வந்த மரியாதை, திரும்பி வந்த ஆடம்பரம்! இதோ எல்லாம் முடிந்து திரும்பிப்போகும் அவன்!

என்ன நடந்தது என்பதை ஐயப்பாவிடம் மட்டும் சொன்னான் சுந்தர். வந்த நாளிலிருந்து இன்றுவரை சுந்தரோடு இருக்கும் அவன் நிறைய வருத்தப்பட்டான். சுந்தருக்கும் ஹெச்ஆர்(மனிதவள) மேனேஜருக்கும் ஏற்பட்ட விவாதம், பிறகு கோபமாய் கத்தியது, ஒருவாரத்திற்குள் ‘ஒர்க்பெர்மிட்’ கேன்சல் செய்யப்படும்; சிங்கப்பூரை விட்டு வெளியாகவேண்டும் என்று தரப்பட்ட கம்பெனியின் கடிதம்!

‘யிங் கோங் இஞ்சினீயரிங்க்ஸ்’ என்ற இந்தக் கம்பெனியில் சுந்தர் சேர்ந்தபோது இதே அலுவலகத்தில் வெறும் குமாஸ்தாவாக இருந்தான் மெர்வின் ஆங். ஏழுவருடத்தில் பதினான்கு வெள்ளியிலிருந்து முப்பத்தைந்து வெள்ளிக்கு ஒருநாளைய சம்பளம் ஏறியிருக்கிறது சுந்தருக்கு. ஆனால் அன்றைய குமாஸ்தாவான மெர்வின் ஆங் இதோ இன்று எச்ஆர் மேனேஜர்(மனிதவள நிர்வாகி). ஆரம்பத்திலிருந்தே ஏனோ இவனைக்கண்டாலே அவனுக்குப் பிடிக்காமல் போனது ஒரு துரதிஷ்டம். ஏழு வருடங்களில் எதுவும் இவனுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொண்டான் அவன். சம்பளம் மிதமாய் ஏறிக்கொண்டிருந்தது. இவனோடு வந்தவர்களில் பலர் சூப்பர்வைசர்களாயும் ஆகிவிட்டார்கள். இந்நிலையில் கடந்த இருவருடங்களுக்கு முன் திருமணம். காயத்ரி இரண்டாம் முறையாய் சிங்கப்பூருக்கு வந்திருக்கிறாள். ஒவ்வொருமுறை வரும்போதும் அதே இரண்டரை மாதங்கள். இதோ இம்முறை ஒரே மாதம் மட்டும். எச்ஆர் மேனேஜரிடம் பலமுறை கெஞ்சியிருந்தான். அவர் மனது வைத்திருந்தால் “எஸ்-பாஸ்” வாங்கிக்கொடுத்திருக்கலாம். அது கிடைத்திருந்தால் மனைவியை இங்கேயே அருகில் வைத்திருந்திருக்கலாம். மணமாகி இருவருடங்களில் இன்னும் கருத்தரிக்கவில்லை. கருத்தரிக்க வாய்ப்புமில்லை. எப்படி வாய்ப்பிருக்கும்? காயத்ரி காரைக்குடியில் இருக்கிறாள். இவன் ‘காகி புகித்’தில் இருக்கிறான்.

“ஒண்ணு கேக்கலாமாடா ஒன்னை?”

“என்னப்பா, கேளுங்க… என்ன?”

“இப்படி திடீர்ன்னு சண்டைபோட்டுட்டு கிளம்பிட்டேனே ஊருக்கு, இதிலெ உனக்கேதும் வருத்தமில்லேயா…?”

“எனக்கென்னப்பா வருத்தம்? கல்யாணமான நாள்ளேயிருந்து வந்திடுங்க, வந்திடுங்கன்னு நானும் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கேன். நீங்கதான், இரும்மா, இன்னும் ஒரு வருஷம் இன்னும் ஒருவருசம்ன்னு சொல்லி இழுத்துக்கிட்டே இருந்தீங்க!”

“இல்லை, இல்லை. உன்னோட சுயநலத்துல நீ பேசுறேன்னு நெனைக்கிறேன். புருஷன் பக்கத்துலேயே இருக்கணும்ன்னு நெனக்கிறே, அதுக்காக வரச்சொல்லுறெ. வந்த புருஷன் பக்கத்திலேயே உட்காந்திருந்தா மட்டும் போதுமான்னு நீயும் கூட கேட்க நேரலாம். கரெக்டா?”

“நான் அப்படி சொல்லவே மாட்டேன். காசு பணம் ஏதும் தேவையில்லை எனக்கு. நீங்க மட்டும் இருந்தா போதும்”

மெலிதான புன்னகை படர்ந்தது அவனது முகத்தில். கல்யாணமான புதிதில் இப்படித்தான் பேசுவார்களோ என்றும் தோன்றியது. இதோ ஊருக்குத் திரும்புகிறோம்; வரும்போது வாங்கிய கடன், விற்ற நிலம், வைத்த நகைகள் என எல்லாம் வந்து அதற்குமேலும் வந்துவிட்டன. ஆனாலும் நான் வருவதே போதும் என்று எத்தனை பேர் விரும்பக்கூடும்? வாங்கிய கடனுக்காக இப்போது வட்டிக்கு விடுகிறாளாம் அம்மா. விற்ற நிலத்திற்காக அதனருகில் கிடந்த இருநிலங்களை வாங்கிவிட்டாராம் அப்பா. அக்காவும் மாமாவும் தங்களது மகன்-மகளை மாமாவுக்காகவே பாசத்துடன் வளர்க்கிறார்கள். ஏதோ ஒரு கோயிலுக்கு தங்கத்தில் நகைகளும் வெள்ளியில் கீரீடமும் செய்து போடுவதாய் அம்மா வேண்டியிருக்கிறாளாம். பெரியப்பா வேறு தன்பையன் என்னைப்போலவே நல்லவன் என்றும் சிங்கப்பூருக்கு அவனை அழைத்துச்சென்றே ஆகவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். சித்தப்பா தன்மகளுக்கு காதுகுத்தும்போதே என்னிடம் நிறைய எதிர்பார்த்து ஏமாந்ததாய் சித்தி சொன்னார்களாம். இவர்கள் யாருக்கும் ‘கெப்பல் ஷிப்யார்டு’ தெரியாது. அங்கிருக்கும் வெயில் தெரியாது. சாப்பாடு தெரியாது. தலைக்கவசத்துக்குள்ளே பிசுபிசுக்கும் வியர்வையின் நமைச்சல் தெரியாது. வலி தெரியாது. புரியாத ஆங்கிலத்திற்காய் கிண்டல் பட்டதும் செய்யாத தவறுக்காய் மன்னிப்புக்கேட்டதும் வேலை வேலை என்று சாப்பாடு தண்ணீர் இல்லாமல் உழைப்பதும் அவர்களுக்குத் தெரியவே தெரியாது. எதுவும் தெரியாத இவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்; புரியும்.

விமானம் ‘ரன்வே’யில் ஓட ஆரம்பித்தது. இருவரும் ‘பெல்ட்டு’களை அணிந்திருந்தார்கள். அவளின் கை அவனது கையோடு இருந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தான். அவள் சிறு குழந்தை போல விமானத்தின் பக்கவாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள். விமானத்தின் வேகம் அதிகம் எடுக்க, இன்னும் சில நொடிகளில் மேலே ஏறப்போகிறது. ஒரு நிமிடம் அவனது இஷ்டதெய்வத்தை வணங்கினான். கனவும் வேண்டுதலும் பின்னிக்கொண்டன. மெல்ல முகிழ்க்கிறது அப்போது அது!

எங்கும் அழுகையும் கூக்குரலுமாய் இருக்கிறது. எல்லோரும் பார்க்கவருகிறார்கள் அவனை. அனைவருடைய முகத்திலும் சோகம் படர்ந்திருக்க, சொந்தங்களும் பந்தங்களுமாய் ஏகக்கூட்டம். சித்தப்பா தன் வாயில் துண்டைவைத்து அழுத்தி விம்முகிறார். பெரியப்பா, சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாய் சுந்தர் சொல்லியிருந்த தன் மகனைக் கட்டிக்கொண்டு அழுகிறார். ஒரு மூலையில் அக்காவின் மகள் அலறிக்கொண்டிருக்கிறாள். ‘மாமா சிங்கப்பூர்ல இருந்திருந்தா ஒனக்கு வகவகயா பண்ணிப் போட்டிருப்பானேடி, இப்போ இப்படி வந்து கெடக்குறானேடி’ என்று சொல்லி அவனது அக்கா, அவளும் அழுகிறாள். பெட்டிக்குள் அடைக்கப்பட்டதாய் இருக்கிறது அவனது பிணம். சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய விமானம் விபத்துக்குள்ளானதாய் பேசிக்கொள்கிறார்கள். திடுமென்ற ஒரு அதிர்வுக்குப்பிறகு கண்விழிக்கிறான் அவன். பறவைப்பார்வையில் அலையாடிக்கொண்டிருக்கின்றன தூரத்து நில மேகங்கள்.


kmahalingam@eastman.com

Series Navigation