அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ஜெயமோகன்


‘துவாத்மர்கள் ‘ என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் – பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு சிறிய வரலாற்றுக்குறிப்பு மட்டுமே. பிற்கால வரலாற்றாசிரியர்களான என் சிவசங்கரன் நாயர் , இளங்குளம் குஞ்ஞன் பிள்ளை , எம் கெ ராஜப்பன் நாயர் ஆகியோரின் எழுத்துக்களில் இவர்கள் மேற்குமலையடிவாரத்தில் சரல்கோடு என்ற ஊரில் வாழ்ந்த ஒரு பழைய மாடம்பி வம்சம் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களுடைய அட்டூழியம் எல்லைமீறிப்போனமையால் பிரிட்டிஷ் ரெசிடண்ட் மேஜர் எஸ் கல்லன் இரு பீரங்கிகளும் முந்நூறு பேரும் கொண்ட ஒரு சிறிய படையை அனுப்பி இவர்களுடைய கோட்டையை உடைத்து இவர்களை தோற்கடித்தார். எவரையுமே கைதுசெய்ய இயலவில்லை. மண்ணால் கட்டப்பட்டு மேலே ஓலைக்கூரை போடப்பட்ட கனத்த கோட்டைக்குள் வாழ்ந்த எண்பத்தியொன்று பேரும் கடுமையாகப் போராடி வீரமரணமடைந்தார்கள். உண்மையில் இவர்கள் ஆங்கிலேயர் எண்ணியதுபோல ஒரு வம்சமோ குடும்பமோ அல்ல, உருவாகிவந்த ஒரு புதிய மதத்தைச் சேர்ந்தவர்கள்.

துவாத்ம மதத்தைப்பற்றி இப்போது தகவலேதும் இல்லாதது ஆச்சரியமல்ல. அம்மதத்தை ஒரு கெட்ட கனவாக மறக்கவே அக்கால மக்கள் அனைவரும் முயன்றிருப்பார்கள். ஆவணங்கள் உண்மையென்றால் இவர்கள் மிக மிகக் கொடூரமான மனித மிருகங்கள். எந்தவிதமான அறவுணர்வோ கருணையோ இல்லாதவர்கள். இவர்கள் தேடிய முக்தி என்பது மனிதத்தன்மையிலிருந்து விடுபட்டு மிருகங்களின் எல்லையில்லா உளச்சுதந்திரத்தை அடைவதுதான் போலும். மேற்குமலையடிவார இடையர் கிராமங்களில் இவர்கள் நடத்திய கொலைகொள்ளைகளுக்கு அளவே இல்லை. இவர்களுடைய மிருகத்தன்மையே இவர்களை அச்சமேயில்லாத பெரும் போர்வீரர்களாக ஆக்கியிருந்தது. மறுபக்கம் இவர்களைப்பற்றிய பேரச்சம் அனைவர் மனதிலும் இருந்தது. ஆகவே கூட்டம் கூட்டமாக சிங்கங்கள் வேட்டைக்கு இறங்குவதுபோலவே இவர்களைப்பற்றி மக்கள் கருதிவந்தனர். இவர்களைப்பற்றி மகாராஜாவுக்கு மீண்டும் மீண்டும் முறையீடுகள் சென்றன. மகாராஜா அனுப்பிய சிறிய படைகள் மூன்றுமுறை முற்றாக தோற்கடிக்கப்பட்டு துரத்தப்பட்டன.

மெல்ல போர் வீரர்களிடையே ஒரு நம்பிக்கை பரவியது, இவர்கள் மனிதர்களே அல்ல என்று . துவாத்மர்கள் உண்மையில் கோட்டைக்குள் தவத்தில் ஆழ்ந்திருக்கும் ரிஷிகள். அவர்கள் தங்களைப் பாதுகாக்க பூத கணங்களை காவல் நிறுத்தியிருக்கிறார்கள். அப்பூதகணங்களே சிலசமயம் கட்டுமீறி ஊருக்குள் புகுந்து பேரழிவினை செய்கின்றன. பல இடங்களில் மக்களும் வீரர்களும் பூதங்களுக்கு ஆடுமாடுகளை பலியிட ஆரம்பித்தனர். மந்திரத்தகடுகளும் தாயத்துக்களும் பரபரப்பாக விற்கப்பட்டன. அரச படைகளும் அஞ்சிய பிறகு அவர்களை எவராலும் தட்டிகேட்க இயலவில்லை. ஒருமுறை கீழ்க்கிராமமான கிடாரம்தோப்பு என்ற ஊரில் புகுந்த துவாத்மர்கள் முப்பதுபேரை பிய்த்துக் கொன்று பதினெட்டு பெண்களை தூக்கிச்சென்று புணர்ந்துவிட்டு கொன்று துண்டுகளாகச் சிதைத்து ஒரு குகையருகே சிதறிப் போட்டுவிட்டுச் சென்றனர்.

அச்செய்தி திருவனந்தபுரத்தை அடைந்தபோது மகாராஜா ‘பத்மநாபா! ‘ என்று கூவியபடி கோயிலுக்கு ஓடிவிட்டார். ‘ ‘ நான்சென்ஸ்! ‘ ‘ என்றார் கல்லன்துரை. அவருக்கு கர்த்தரிலும் நம்பிக்கையில்லை, பேய்களிலும் நம்பிக்கை இல்லை. ஆனால் அவர்களைக் கொன்றுமீண்ட படைவீரர் சொன்னகதைகளைக் கேட்டபோது தர்க்கத்துக்குக் கட்டுப்படாத ஏதோ ஒரு அம்சம் அவர்களிடம் இருப்பதாகத் தோன்றாமலில்லை. அதை அவர் தன் நாட்குறிப்பில் பிரிட்டிஷ் மிதத்தன்மையுடன் சொல்லியிருக்கிறார். ‘ ‘ ஐயத்துக்கு இடமான ஒரு கூறு அவர்களிடம் இருந்தது. அவர்களுக்கு பொதுவாக மனிதர்களிடம் இருக்கும் பல இயல்புகள் அறவே இல்லை என்று அஞ்சவேண்டியிருக்கிறது ‘ ‘

நான் முதலில் கவனித்தது இந்தவரியைத்தான். இதன் வினோதத்தன்மை என்னை புதுவாசனை கிடைத்த வேட்டை நாய்போல நிம்மதியிழக்கச் செய்தது. ஆனால் எனக்கு ஆவணங்களேதும் கிடைக்கவில்லை. அக்காலத்தில் முறையான அரசு ஆவணங்கள் தொகுக்கப்படவில்லை. பல வருட அலைச்சலுக்குப் பின்பு நான் தேடலைக் கைவிட்டிருந்த நாட்களில் ஒருமுறை தற்செயலாக ஒரு நூல் என் கவனத்துக்கு வந்தது. இது காப்டன் எட்வர்ட் வைட்வுட் என்பவர் எழுதிய நாட்குறிப்பு. அதை தன் குடும்ப சேகரிப்பில் இருந்து எடுத்து அவரது பேத்தி கிறிஸ்டினா நீஃபோல்ட் பதிப்பித்திருந்தாள். அது தென்னிந்தியாவைப் பற்றியது என்று இணையத்தில் பார்த்தமையால் வாங்கி வாசித்துப்பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சியான ஆச்சரியத்தை அளித்த அந்த நூல் முழுக்க முழுக்க தென்திருவிதாங்கூரைப்பற்றியது. துவாத்மர்களைப்பற்றிய விரிவான குறிப்புகள் அதில் இருந்தன. காப்டன் எட்வர்ட் வைட்வுட் கல்லன்துரையின் கீழே இரு படைத்தலைவர்களில் மூத்தவராக பதினெட்டுவருடம் பணிபுரிந்தவர். துவாத்மர்களை ஒடுக்கிய படையெடுப்பு இவர் தலைமையில்தான் நடந்தது.

காப்டனின் குறிப்புகளில் துவாத்மர்களைப்பற்றி விரிவாகவே சொல்லபப்ட்டிருந்தது. முக்கியமான விஷயம் காப்டன் தன் ஐயங்களையும் அறிதல்களையும் எவரிடமும் சொல்லவில்லை என்பதே. அவருக்கு கீழை மதங்களில் குறிப்பாக தந்திர மதங்களில் ஈடுபாடு ஏற்கனவே இருந்தது. சாக்தேய மதத்தின் பல்வேறு சடங்குகளைப்பற்றியும் பூசைகளைப்பற்றியும் அரிய குறிப்புகள் எடுத்திருந்தார். கிறித்தவத்துக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்த பாகன் சடங்குமுறைகளுடன் அவற்றை ஒப்பிட்டு ஒரு ஆய்வுநூல் எழுத திட்டமிட்டிருந்தார். அந்நூலிலேயே அவர் கொடுங்கல்லூர் கோயில் மற்றும் மண்டைக்காட்டு கோயில் பற்றி எழுதியிருந்த சித்திரங்கள் அருமையானவை. காப்டன் துவைதிகள் ஒரு தனியான மதம் என்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். அவரது குறிப்புகளைச் சுருக்கமாகத் தருகிறேன்.

துவாத்ம மதத்தை நிறுவியவர் காலன்சாமி என்றழைக்கப்பட்ட முன்னாள் போலீஸ்காரர். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அன்றைய தென்திருவிதாங்கூர் பகுதியான இன்றைய குமரிமாவட்டத்தில் அருமநல்லூர் என்ற ஊரில் பிறந்த மாதேவன் பிள்ளை திண்ணைப்பள்ளிக் கூடத்தில் படித்துமுடித்து மன்னரின் தனிப்போலீஸ் படையில் சேர்ந்தார். அன்றெல்லாம் ‘போக்கற்றவன் போலீஸ் விதியற்றவன் வாத்தியார் ‘ என்ற வழக்கம் நிலவியது. மாதேவனின் குடும்பம் சுசீந்திரம் வட்டப்பள்ளி மடத்துக்கு பாத்தியதைப்பட்ட நிலங்களை குத்தகை விவசாயம் செய்து வந்தது. அதில் கடுமையான நஷ்டமும் பட்டினியும் வாட்டியமையால் உண்மையிலேயே போக்கற்றுத்தான் திருவனந்தபுரத்துக்கு ஓடிப்போய் போலீஸ் ஆனார்.

ராட்சத உருவம் இருந்தாலும் இயல்பிலேயே பெரும் கோழையான மாதேவன் சேர்ந்த சில நாட்களிலேயே வேளி அருகே ஒரு கலவரத்தை ஒடுக்க அனுப்பப்பட்ட சிறு படையில் சேர்க்கப்பட்டார். சண்டையில் அவரது ஏட்டு வாமதேவன்நாயரும் மூன்று கான்ஸ்டபிள்களும் படுகொலைசெய்யப்பட்டார்கள். களத்தில் அவருக்கு காளியின் அருள் கிடைத்ததாகவும் அக்கணமே அவர் பெரும் வீரராக ஆகி தனியாக கேடிகளை எதிர்த்து சண்டையிட்டு துரத்தி நான்குபேரைக் கொன்று மூன்று பேரை வெட்டிக்காயப்படுத்திவிட்டு காலில் ஆழமான வெட்டுக்காயத்துடன் களத்தில் காயம்பட்டுகிடந்த ஒரு போலீஸ்காரரைத் தூக்கி படகில் போட்டு தனியாக துழாவி காலையில் அகத்துமுறி துறைக்கு வந்துசேர்ந்ததாகவும் சொல்லப்பட்டது. அது அன்று பரபரப்பான ஒரு கதையாக வாய்கள் தோறும் படர்ந்தது.

அத்துடன் மாதேவன் போலீஸ் பெரும்புகழ்பெற்றார். அவரும் ஆளே மாறிப்போனார். எந்தக் கொடூரத்துக்கும் அஞ்சாதவர் ஆனார். அரிவாள்மீசையும் கரிய ராட்சத உடலும் ரத்தம்போலச் சிவந்த கண்களும் கையில் தெரச்சிவால் சாட்டையுமாக மாதேவன்போலீஸ் ஆரியசாலைத்தெருவில் நடந்தால் கேடிகள் ஊடுசந்துகள் வழியாக ஓடிமறைவார்கள். எந்தக் கடைக்காரனைச் சுட்டி சுண்டுவிரலை அசைக்கிறாரோ அவர் அன்றைக்குத்தேவையான அனைத்தையும் கொடுத்துவிடவேண்டும். மனைவி குடும்பம் என்று ஏதுமில்லை. எந்தப்பெண் சாயங்காலம் கண்ணில் படுகிறாளோ அவள் அன்று துவம்சம் செய்யப்படுவாள். அந்தப்பெண்களில் பெரும்பாலானவர்கள் அதன் பின் நடக்க ஆரம்பிக்க வெகுகாலமாகும். சுருக்கமாக அவர் காலன்போலீஸ் என்று அழைக்கப்பட்டார்.

திடாரென்று ஒருநாள் எவருமே நம்பமுடியாத சேதி வந்தது. காலன்போலீஸ் துறவு பூண்டு பேச்சிப்பாறை அருகே மலைச்சரிவில் வாழ்ந்துவந்த குட்டன்சாமியின் சீடராகிவிட்டார். குட்டன்சாமி எங்கிருந்தோ வந்து காட்டில் கிழங்கும்காயும் பறித்துத் தின்று குடில் கட்டி முப்பதுவருடமாக வாழ்ந்துவந்தார். காலன் போலீஸுக்கு எப்படி அவருடன் உறவு ஏற்பட்டது என்று எவருக்கும் தெரியவில்லை. காலன் போலீஸுக்கு அப்படி ஒரு முகம் உண்டு என்ற தகவல் மெல்ல வெளியாயிற்று. அவர் பல சமயங்களில் ஆரியசாலை பிரம்மசக்தி அம்மன் கோயிலுக்கு நள்ளிரவில் வந்து விடியும்வரை தியானம் செய்வதுண்டு என்றார்கள். அவர் தன் வீட்டில் இரவெல்லாம் தியானம் செய்வதை வேலையாட்கள் கண்டிருக்கிறார்கள். பல கதைகள் பரவின. மாயமந்திரக் கதைகள்தான் அதிகமும். மெல்ல அவர் மறக்கப்பட்டார்.

குட்டன்சாமி இறந்த போது மரணப்படுக்கையில் அவரிடம் காஷாயம் வாங்கி காலன்சாமி அவரது குடிலிலேயே தங்க ஆரம்பித்தார். மெல்ல அவரது புகழ்பரவி சீடர்கள் திரள ஆரம்பித்தார்கள். அப்பகுதியில் முதலில் அவர்கள் ஒரு சிறு பகுதியை மரவேலி கட்டி வளைத்தெடுத்தார்கள். பிறகு அது மண்கோட்டை ஆகியது. அவர்கள் தங்களை துவாத்மர்கள் என்று சொல்லிக் கொண்டனர். ஊருக்குள் வந்து தகுந்த இளைஞர்களைச் சந்தித்து தங்கள் மதக் கோட்பாடுகளை பரப்பினார்கள். காலன்சாமியின் சீடர்கள் பக்கத்து கிராமங்களைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தபோதுதான் மீண்டும் அவர் பேசப்பட்டார். அதற்குள் அவர் ஒரு பெரும் சக்தியாக உருமாறியிருந்தார்.

காப்டன் எவருக்கும் தெரியாமல் ஒளித்துவைத்திருந்த ரகசியம் ஒன்று உண்டு. அவர் துவாத்மர்களைத் தாக்கி வென்றபோது உள்ளே உயிருடன் இருந்த ஒரு துவாத்மரை பிடித்தார். போர் முடிந்து பிணங்களை திரட்டியபடி அவர்கள் அப்பகுதி முழுக்க நடந்தனர். காலன்சாமி முதிர்ந்து தளர்ந்திருந்தாலும் போரிட்டு இறந்தது. எவருமே எஞ்சவில்லை. விசித்திரமான கோட்டை அது. கோட்டைக்குள் வட்டவடிவமான ஒரு பெரிய கட்டிடம். அதன் வெளிமுற்றத்தில் போர்ப்பயிற்சி சாலைகள் இருந்தன. வெளித்திண்ணையில் பயங்கரமான போர்க்களக் காட்சிகளும் ரத்தவெறிகொண்ட பூதங்களின் படங்களும் வரையப்பட்ட சுதைச்சுவர்களின் கீழ் ஆயுதங்கள் குவிந்து கிடந்தன.

நேர் மாறாக உள்ளறைச் சுவர்கள் மென்மையான நிறம் பூசப்பட்டிருந்தன. அவற்றில் இனிய தியானஓவியங்களும் மலர்களும் பறவைகளும் இருந்தன. எங்கும் ஆழமான அமைதி நிறைந்துகிடந்தது. உள்ளறைகளில் மான்தோலாசனங்களையும் ஜெபமாலைகளையும் தியானலிங்கங்களையும் காப்டன் கண்டார். அங்கு பூசையும் தியானமும்செய்தவர்கள் எங்கே என்று வியந்து அறைகள்தோறும் தேடினார். நிலவறைகளில் அவர்கள் ஒளிந்திருக்கக் கூடும் என்றெண்ணி கட்டிடத்தின் தரையையே கெல்லி நோக்கினார். எவருமேயில்லை, உள்ளறையில் ஒரு மரப்பெட்டிக்குள் தியானத்திலமர்ந்திருந்த ஒரே ஒரு சடாதாரியைத் தவிர.

அவரை ரகசியமாகக் கட்டி இழுத்துவந்து தன் மாளிகையில் லாயத்தில் சங்கிலியில் பிணைத்து வைத்தார் காப்டன். அவரை நுட்பமாக விசாரணை செய்தார். அவர் உடல் போர்வீரர்களுக்கான திடத்துடன் இருந்தது. கைகளில் வாட்பயிற்சிபெற்றமைக்கான வடுத்தடங்கள் இருந்தன. ஆனால் அவர் முற்றிலும் சாந்தியும் கனிவும் பெற்று முழுமைகொண்ட மனிதராக , கண்டவர் மனம் குனிந்து வணங்கத்தக்க முனிவராக இருந்தார். அவர் தன்பெயர் நரபாகன் என்றார். இருபதுவருடங்களுக்கு முன்பு ஒரு விறகுவெட்டியாக இருந்தவரை காலன்சாமி சந்தித்து துவாத்மராக ஏற்றுக் கொண்டார். அங்கு அவர் காலன்சாமி வகுத்த சாதனாமுறைமையைக் கைக்கொண்டு யம நியமங்களை செய்து பூசைகள் வழியாக தியானத்தை நோக்கி நகர்ந்து நான்காண்டுகளாக ராஜயோகம் பயின்று வருகிறார். கையில் இருந்த வடுக்கள் எப்படி வந்தன என்று தெரியவில்லை , பூர்வாசிரமத்தில் ஏற்பட்டவையாக இருக்கலாம் என்றார்.

நரபாகன் ஆசிரம அமைப்பை விரிவாக விளக்கினார். அங்கே காலன்சாமி உட்பட மொத்தம் எண்பத்திரண்டு பேர் கடைசியாக இருந்தனர். அவர்களில் நாற்பத்தியொன்றுபேர்தான் தவம்செய்பவர்கள். பிறர் பாதுகாவலர்கள். தவம்செய்பவர்களை சுக்லர்கள் என்றும் காவலர்களை சியாமர்கள் என்றும் அமைப்பு வகுத்திருந்தது. சியாமர்களிடம் சுக்லர்கள் விரிவாக உரையாடுவது தடைசெய்யப்பட்டிருந்தது. அவசியமானால் மட்டும் தங்கள் தேவைகளைத் தெரியப்படுத்தலாம். சியாமர்கள் மனிதர்களேயல்ல, கிட்டத்தட்ட மிருகங்கள் என்றார் நரபாகர். அவர்கள்தான் ஆசிரமத்தில் உள்ள எல்லாவேலைகளையும் செய்பவர்கள். உணவுதேடிக்கொண்டுவந்து சமையல்செய்து பரிமாறுவது முதல் பூசைக்குரிய இடங்களை அணிசெய்வதுவரை அவர்கள்தான். மந்திரத்தால் கட்டப்பட்ட பூதங்களைப்போலத்தான் அவர்களும் என்றார் நரபாகர்.

நரபாகர் சொன்னது முற்றிலும் உண்மை என்று பலவகையான குறுக்கு விசாரணைகள் மூலம் காப்டனால் உறுதிசெய்துகொள்ளப்பட்டது. அவரைச் சித்திரவதைகூட செய்து பார்த்தார். அப்பழுக்கற்ற தவசீலர் அவர் என்று உணர்ந்தபோது காப்டன் அவரது சீடராக ஆகும் மனநிலைக்கு வந்தார். மனித மனங்கள் நரபாகருக்குக் கண்ணாடி வெளிபோலத் துல்லியமாகத்தெரிந்தன. பிறரது ஆழங்களை அங்கே கூடிக்கிடந்த துயரங்களை தன் கனிந்த கண்களால் அவர் கண்டார். அவற்றை மெல்லிய விரல்களால் தொட்டெழுப்பி இளைப்பாறச்செய்தார். அவரது அகத்தில் நிறைந்திருந்த ஆனந்தமும் ஒளியும்தான் அப்படி பிற மனங்களில் பிரதிபலிக்கின்றன என்று அறிந்தார் காப்டன்.

‘ ‘.. ஒருவகையில் அவர் ஒரு கிறிஸ்து. எல்லையேயற்ற பெருங்கருணையின் மனித வடிவம். இப்பூவுலகையே ஆசீர்வதிக்கும் ஆன்மவல்லமை கொண்ட மாமனிதர் … ‘ ‘ காப்டன் எழுதினார். காப்டனின் குறிப்புகள் நரபாகரைப்பற்றிச் சொல்லும்போது உணர்ச்சிப்பரவசத்தின் எல்லைக்கே செல்கின்றன. ‘ ‘… மனிதர்கள் இறைசக்தியின் பெருங்கருணைக்குப் பாத்திரமாகும் அளவுக்கு ஆதலையே நான் ஆன்மீக மலர்வு என்று எண்ணியிருந்தேன். அவர்களே அந்த பெருங்கருணையாக மாறமுடியும் என்பதை அம்மனிதரைப் பார்த்தபிறகுதான் அறிந்தேன்… இம்மண்ணில் இன்னும் அற்புதங்கள் சாத்தியம்தான். ஆம், இவரது கனிந்த கைகளால் ஓர் அப்பத்தை ஓராயிரம் பேருக்கு பங்கிட முடியும். தன் அழகிய பார்வையால் அவர் தண்ணீரைப் பழரசமாக ஆக்கமுடியும்… ‘ ‘

ஆனால் காப்டனைக் குழப்பிய கேள்வி ஒன்று இருந்தது. பிற சுக்லர்கள் எங்கே ? இறந்த சியாமர்கள் எண்ணிக்கை ஏன் இருமடங்காக இருந்தது ? அது நரபாகருக்கு தெரிந்திருக்கவில்லை. லாயத்தில் சங்கிலிக் கட்டிலும் பின் தன் தனியறையிலும் அவர் பெரும்பாலானநேரம் ஆழ்ந்த தியானத்தில் ஒளிவிடும் முகத்துடன் இருந்தார். அவரை கட்டுகளில் இருந்து விடுவித்தார் காப்டன். பிற சுக்லர்களைத் தேடி அப்பகுதியில் அலைந்தார். எந்த தகவலும் சிக்கவில்லை.

ஆனால் பதிமூன்றாம்நாள் காப்டனின் வினாவுக்கு விடைகிடைத்தது. அன்று அமாவாசை. மாலை இருள்வதுவரை நரபாகர் தியானத்திலிருப்பதை அவரே கண்டார். இரவு கனத்து இருள் பரவி தோட்டம் மறைந்தபோது திடாரென்று அறைக்குள் வேறு ஒருகுரல்கேட்டது. அவர் பாய்ந்தெழுந்து அறைக்குள் சென்றார். அதற்குள் உள்ளே பாய்ந்துசென்ற அவரது மெய்க்காவலன் பயங்கரமாக அலறினான். உள்ளே வெறிகொண்ட மிருகம் போல தசைபுடைக்க நின்ற நரபாகர் அவனை பிடித்து அவன் கரங்களை முறுக்கி சுள்ளியை ஒடிப்பது போல ஒடித்து மூலையில் வீசிவிட்டு ஓநாய் போல சீறும் முகமும் இளித்த பற்களுமாக அவரை நோக்கி வந்தார். காப்டன் பாய்ந்து வெளியே வந்து கதவைச் சாத்திவிட்டார். கதவில் மிருகம் போல மோதி அறைந்து கூக்குரலிட்டு அறைக்குள் அமளி செய்தார் நரபாகர். ஜன்னல்வழியாக பார்த்த காப்டனால் என்ன நடந்தது என்றே ஊகிக்க இயலவில்லை. அறைக்குள் இருந்த மனிதர் முற்றிலும் வேறானவர். குரல் , அசைவுகள், பார்வை அனைத்துமே வேறு. அது மனிதரே அல்ல ஒருவகை மிருகம் !.

மறுநாள் பசித்த போது உணவுதரும்படி அவன் கூவினான். மிகவும் பசிக்கவிட்டு சிறு கவளங்களாக உணவை அளித்து அவனிடம் விசாரணைசெய்தார் காப்டன். அவன் தன் பெயர் வாகடன் என்றான். தன்னை துவாத்ம ஆசிரமத்தைச் சேர்ந்த ஒரு சியாமனாக அடையாளம் சொன்னான். இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு விறகுவெட்டியாக இருந்தவனை காலன்சாமி சந்தித்து துவாத்மராக ஏற்றுக் கொண்டார். அங்கு அவன் ஆசிரம காவலனாக போர்ப்பயிற்சி எடுத்துக் கொண்டு அத்தனை வருடங்களாக வேலைசெய்கிறான். அதன் பிறகு எத்தகவலும் அவனிடமிருந்து கிடைக்கவில்லை. இருநாள் கழித்து கதவை உடைத்து தப்பிய அவன் ஒரு பணிப்பெண்ணையும் சேவகனையும் கழுத்தைமுறித்துக் கொன்றான். முற்றத்து மாமரம் மீது ஏறித்தப்ப முயன்ற அவனை காப்டன் சுட்டுக்கொல்ல நேரிட்டது. அத்துடன் அந்த மர்மமும் முற்றாக அழிந்தது. ஏதோ ஒரு மந்திர வித்தை மூலம் மனிதர்களை பூதங்கள் போல ஆக்கி வேலை வாங்கியிருக்கிறார் காலன்சாமி என்று தெரிந்தது. காப்டன் தன் குறிப்புகளில் அதை கீழ்த்திசையின் மர்மங்களில் ஒன்றாகத்தான் சொல்கிறார்.

நான் அந்த குறிப்புகளால் பலநாட்கள் தூக்கம் இழந்தேன். எவரிடமும் அதைப் பகிரவும் இயலவில்லை. ஒரு எண்ணம் தோன்றி தொகுப்பாசிரியை கிறிஸ்டினா நீஃபோல்ட்டுக்கு எழுதினேன். காப்டன் வேறு ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று கேட்டேன். அவள் ஆச்சரியத்துடன் எனக்குப் பதில் எழுதினாள். அத்தனை நாட்களில் அந்நூலுக்கு பொருட்படுத்தி எதிர்வினையாற்றிய இருவரில் நான் இரண்டாமன். முதல் ஆள் திருவனந்த்புரத்தைச் சேர்ந்த உளவியல் ஆய்வாளர் பங்கஜாட்சன் தம்பி. காப்டனின் வேறு எந்த குறிப்பும் இப்போது எஞ்சவில்லை என்று சொன்னாள். நான் பங்கஜாட்சன் தம்பியின் விலாசத்தைப் பெற்று அவரைக் காண்பதற்காக அனுமதி பெற்றுச் சென்றேன்.

தம்பி எழுபதுவயதான முன்னாள் உளவியல் மருத்துவர். பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்க தன் வளர்ப்புமகள் வீட்டில் வாழ்ந்தார். பிறருக்குப் புரியாத ஆய்வுகள் செய்யும் விசித்திரமான மனிதராக அறியப்பட்டார். இருபதுவருடம்முன்பு தன் மருத்துவர் பணியி துறந்து உளவியல்சார்ந்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை உருவாக்கும் ஓர் அமைப்பை நிறுவி நடத்திவந்தார். அவருக்கு நான் எழுதியகடிதத்துக்கு நிறுவனர் ‘ஆதார உளவியல் பயிற்சி மையம். தைக்காடு திருவனந்தபுரம் ‘[Basic Psychosomatic Training Center] என்ற விலாசத்திலிருந்து பதில் வந்தது.

இளமழை தூறிய ஒரு காலையில் திருவனந்தபுரம் தைக்காட்டில் வரிசையாக உயர்நடுத்தரவற்க வீடுகள் கார்களுடன் வரிசைவகுத்த ஸ்ரீமூலம் காலனியில் நான் அவரை தேடிச்சென்ற போது முன்திண்ணையில் சூரல்நாற்காலியில் கையில்லா பனியன்போட்டு அமர்ந்து மாத்ருபூமி படித்துக் கொண்டிருந்தார். நரைத்த தலை அடர்த்தியாக இருந்தது. மெலிந்த, சற்று கூன்விழுந்த நெடிய உடல். சிவந்த சிறிய உதடுகள். என்னை வரவேற்று மகளிடம் காப்பி கொண்டுவரச்சொன்னார். பொதுவான அறிமுகத்துக்குப் பின் துவாத்மர்கள் பற்றி பேச ஆரம்பித்தோம். தன் அறைக்கு இட்டுச்சென்று தான் சேகரித்த தகவல்களைக் காட்டினார்.

துவாத்மர்கள் வாழ்ந்த சரல்கோடு இன்று சாரோடு என்று அறியப்படுகிறது. அதனருகே உள்ள கல்லுப்பொற்றை என்ற கிராமம்தான் தம்பியின் சொந்த ஊர். அவர்கள் அப்பகுதியில் அறியப்பட்ட நிலக்கிழார்கள். மகாராஜா ராமவர்மா பெண்ணெடுத்தமையால் தம்பி பட்டம் பெற்ற குடும்பம். அவர்களில் ஒருவர் காலன்சாமியின் சீடராகி துவாத்ம மடத்துக்குச் சென்று கடைசிப்போரில் கொல்லப்பட்டார். அரசகோபம் வருமென்பதனால் அச்செய்தியை அவர்கள் அப்படியே மறைத்துவிட்டார்கள். அவர் பெயர் பல்குனன் தம்பி. அவருக்கு சம்ஸ்கிருத ஞானமும் வேதாந்தக் கல்வியும் இருந்திருக்கிறது. வேதாந்த மாலிகா என்று மலையாளத்தில் காகளி விருத்தத்தில் ஒரு நூலும் எழுதியிருக்கிறார். அவர் தனக்கு காலன் சாமி அளித்த மெய்ஞானத்தைப்பற்றி சம்ஸ்கிருத- தமிழ் மணிப்பிரவாள மலையாளத்தில் எழுதிய சுவடிக்குறிப்புகள் பலகாலம் வீட்டில் பாதுகாக்கப்பட்டு குடும்பம் பாகம் பிரிக்கப்பட்டபோது பங்கஜாட்சன் தம்பியிடம் கிடைத்தன. அப்போது அவர் நீண்டநாள் மருத்துவசேவை முடிந்து ஓய்வு பெற்றபின் சும்மா இருந்த காலம். அக்குறிப்புகளை அக்கறையில்லாமல் வாசிக்க ஆரம்பித்தவர் அதில் ஒரு மாய வாசல் திறப்பதைக் கண்டார். அவர் அதுநாள் அவரை மிகுந்த ஆர்வத்துடன் ஆராய்ந்த விஷயமே அதிலும் வேறு ஒரு கோணத்தில் பேசப்பட்டிருந்தது.

தம்பி முப்பதுவருடமாக மனப்பிளவு [Schizophrenia] நோயைப்பற்றி ஆராய்ந்துவந்தார். பிரபலமான டைரோசினுக்குப் [tyrosine ] பதிலாக சக்ரமூலி என்ற கற்றாழைவகையான ஆயுர்வேதமூலிகைச் செடியைப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்து உலகப்புகழ்பெற்றிருந்தார். அச்செடியை அவரது மூதாதையரில் ஆயுர்வேத மருத்துவம்செய்துவந்த சிலர் பயன்படுத்தியிருந்தார்கள். பிற்பாடு துவாத்மர்களின் காலகட்டத்தில் அச்செடிக்கு திடாரென்று அதிகமான தேவை ஏற்பட்டு அவர்களின் தோட்டத்தில் விரிவாகப் பயிர்செய்யப்பட்டிருக்கிறது என்பது அவரது கவனத்துக்கு வந்தது. தோட்டத்தைக் கவனித்துக்கொள்ளும் ஊழியர்கள் சிலர் அச்செடியின் வாசனைக்கு மயங்கி அதன் வசப்பட்டு மெல்ல அதைப் போதைக்காக பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் பெரும்பாலும் சில் வருடங்களிலேயே மனச்சிதைவுக்கு ஆளானார்கள். அவர்களைப்பற்றிய பல கதைகள் குடும்பத்தில் இருந்தன.

‘ ‘சக்ரமூலி நம் மூளையில் உள்ள டோபாமினை மிக அதிகமாக பெருக வைக்கிறது. மூளையின் ரசாயனப் பரிமாற்றமும் உயிர்மின்னூட்டமும் பலமடங்கு அதிகரிக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் நடந்துகொண்டிருக்கும் மூளை சட்டென்று உக்கிரமாக ஓட ஆரம்பிக்கிறது. மூளையின் வேகம் அதிகரிக்கும்போது அதைக் கட்டுப்படுத்தும் தர்க்க அமைப்பு அதற்குப் போதாமலாகிறது. விளைவாக சக்ரமூலியை உள்ளே எடுத்துக் கொண்டால் நம் செயல்பாடுகள் கட்டுக்கடங்காதனவாக மாறிவிடுகின்றன. அதேசமயம் மூளையின் செயல்பாடுகள் மந்தமடைந்துவிட்டவர்களுக்கு அது அமுதம் போல ‘ ‘ டாக்டர் தம்பி சொன்னார்.

‘ ‘அதை துவாத்மர்கள் கொள்முதல்செய்தார்கள் அல்லவா ? ‘ என்றேன்

‘ ‘ஆம். அது ஊகிக்கக் கூடியதுதான்.. ‘ ‘

‘ஏன் ? ‘ ‘

‘ ‘ சக்ரமூலி மூளையில் டோமாமினை பெருமளவில் ஊறச்செய்கிறது என்று சொன்னேனே ? மனப்பிளவுநோய் கொண்டவர்களின் மூளையை ஆராய்ந்தால் முக்கியமான தடையமாகக் கிடைப்பது அங்கு டோபாமின் அசாதாரணமாகப் பெருகியிருப்பதுதான்…. ‘ ‘ என்றாட் டாக்டர் தம்பி ‘ ‘ துவாத்மர்கள் ஒரு மனப்பிளவுச் சமூகம்…மனப்பிளவை திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டவர்கள் அவர்கள். அத்ற்குத்தான் சக்ரமூலி பயன்படுத்தப்பட்டிருக்கிரது… ‘ ‘

நான் அயர்ந்து போனேன். ‘ ‘ துவாத்மர்கள்… இரட்டை ஆத்மாக்கள்… இதுதானா அதன் பொருள் ? ‘ ‘ என்றேன்.

‘ ‘ஆம். நீ என் தாத்தா பல்குனன் தம்பியின் குறிப்புகளைப் படிக்கவேண்டும். காட்டுகிறேன்… ‘ ‘ என்றார்.

குறிப்புகளை என்னால் நேரடியாகப் படிக்க முடியவில்லை. தம்பி அவற்றை ஆய்வுசெய்து பொதுவாக எழுதியிருந்த தகவல்களைப் படித்தேன். ஒட்டுமொத்தமாக இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

மாதேவன் போலீஸின் தனிப்பட்ட ஆளுமையிலிருந்து தொடங்குவது நல்லது என்று படுகிறது. அவர் இயல்பில் ஒரு பெரும் கோழை என்று கதைகள் கூறுவது உண்மையே. ஆனால் வேளி சந்தையில் நடந்த சண்டையின்போது உயிர்தப்பும் ஆவேசத்தில் ஒருவனை வெட்டினார். அவனது மரண அலறலும் துடிப்பும் தன்னுள் உக்கிரமான உவகை ஒன்றை ஊறச்செய்வதை உணர்ந்தார். அதன் பின் அவரை அவராலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. அச்சம் அகன்றது. கோபம் கூட இல்லமலாயிற்று. அச்செயலில் இருந்த மகிழ்ச்சியின் காரணமாகவே அவர் போரிட்டார். வெட்டினார், குத்தினார்.

சண்டைகளில் ஒருவரின் உடல் மற்றும் உள வலிமையில் பெரும்பகுதியை கோபமும் பதற்றமும் வெறியும் சேர்ந்து குடித்துவிடுகின்றன என்பதை வன்முறையில் சிறிதளவாவது அனுபவம் உடையவர்கள் அறிவார்கள். புலன்கள் கூர்மழுங்கி கால்கை தசைகள் கட்டுப்பாட்டை இழந்து அவன் மிதமிஞ்சி வேகம் கொண்ட பிறகு சரசரவென தளர்ந்து தொய்ய ஆரம்பிக்கிறான். சண்டைக்குப் பழகிய ஒரு நோஞ்சான் புதிய பலசாலியை எளிதில் வென்றுவிடுவான். சண்டைப்பயிற்சிகள் என்பவை உண்மையில் சண்டையில் ஒருவகை முன்னனுபவத்தை அளித்து உடலையும் மனதையும் கட்டுப்படுத்தக் கற்றுத் தருகின்றன. அதேபோல ஆழமான நம்பிக்கை, மதம் அல்லது கோட்பாடு மூலம் உருவாகும் நம்பிக்கையை முக்கியமாகச் சொல்லலாம் , வன்முறையை உள்ளூர நியாயப்படுத்தி நிதானத்தை அளிக்கிறது. அன்று மாதேவனில் கூடிய அந்த நிதானம் அவர் மனதை கூர்மை அடையச்செய்தது. அவரை அந்தக்கூட்டமே அஞ்சியது. அவர் வென்றார்.

பிறகு தன் மனதை அவர் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். அந்த ஆர்வமே அவரை தியானப்பயிற்சிகளை நோக்கி இழுத்தது. அந்த ஆழமான பயிற்சிகள் மூலம் மனித மனதின் முக்கியமான இயல்பொன்றை அவர் கவனித்தார். மனம் எப்போதும் பிரிந்து பிரிந்துதான் இயங்குகிறது. காலன்சாமியின் உதாரணம் இது. ‘மரத்தை தறிக்க வேண்டுமென்றால் மனம் உளியாகவும் சுத்தியலாகவும் ஒரேசமயம் மாறும் ‘ . தன் மனம் ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலை வேறு ஒருமனம் வேடிக்கை பார்க்கிறது என்று அவர் கண்டார். எந்த பதற்றத்திலும் எந்த அச்சத்திலும் அது வேடிக்கை பார்க்காமல் இருப்பது இல்லை. அந்த மனத்தை கூர்ந்து கவனித்தார் மாதேவன். எத்தகைய கொடூரத்தை தான் செய்யும்போதும் தன்னில் ஒரு பகுதி அதில் ஈடுபடுவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் அறிந்தார்.

அந்நாட்களில்தான் அவர் ஒரு கொலைவழக்கு விஷயமாக பேச்சிப்பாறை மலைப்பக்கமாகச்சென்ற மாதேவன் அங்கே குட்டன்சாமியின் ஆசிரமத்திற்குச் செல்ல நேர்ந்தது. அவரைக் கண்டதுமே குட்டன்சாமி தாடியை நீவியபடி ‘ ‘ ஒரு கிளி பழம் தின்கிறது பிறிதொன்று பார்த்திருக்கிறது! ‘ ‘ என்ற உபநிடத ஆப்தவாக்கியத்தைச் சொன்னார். காலன் போலீஸுக்கு அது ஒரு அடி போல இருந்தது. அவர் நிலைகுலைந்து போய் சாமியின் காலடியில் பணிந்தார். அங்கேயே சாமியின் சீடராக அமர்ந்தார். அவரிடமிருந்து யோகமுறைகளைக் கற்றார்.

யோகமுறைகளில் காலன்சாமி அறிந்த முக்கியமான விஷயம் தியானத்தில் மனம் கொள்ளும் இரட்டைநிலைதான். ஒருமனம் முனைகொண்டு ஆழம் நோக்கிச்செல்லும்போது அதிலிருந்து பிரிந்தது போல இன்னொரு மனம் பரவி விரிந்து செல்கிறது. மனதின் ஒவ்வொரு செயல்பாடும் அதற்கு நேர் எதிரான இன்னொரு செயல்பாட்டால் தடுக்கப்படுகிறது. மனதின் விசையின் பெரும்பகுதியை மனமே உண்டு விடுகிறது. மனம் ஓயாது மனதுடன் போரிடுகிறது. மனம் மனதை முடிவின்றி உண்டுகொண்டிருக்கிறது. யோகமரபில் தன் வாலைத் தான் விழுங்கும் பாம்பு உருவமாக அதை அமைத்திருக்கிறார்கள் என்று கண்டார் காலன்சாமி.

யோகத்தின் முதற் கட்டத்தில் குவிய யத்தனிக்கும் மனதைக் குலைக்கும் குறுக்குவாட்டு நகர்வுகளுக்கு எதிராக போராடிப் போராடிக் களைக்கிறான் சாதகன். பின்பு பயிற்சியின் விளைவாக காலப்போக்கில் மனச்செயல்பாடு குவிந்து உக்கிரம் கொள்ளும்போது அதன் விசையால் மனவெளியின் ஆழம் அடியற்ற இருண்ட பிலம் போலத் திறந்துகொள்கிறது. அங்கே உக்கிரமான விசையுடன் உள்நோக்கி விரையும் மனதை அதே உக்கிர விசையுடன் சிதறடிக்கிறது மனதின் பிற பாதியின் நேர் எதிர் விசை. மனம் பொருளற்ற கோடிகோடிப் பிம்பங்களாகவும் தொடர்பற்ற அறிதல்களாக சிதறிப்பரந்து கொந்தளிக்கிறது. அந்நிலையை யோகமரபில் மெய்மையை நோக்கிய பாதையை ஊடறுக்கும் கரிய நதி என்கிறார்கள். தொட்டவிரலை அறுத்தோடும் வேகவதி அது. அந்தர்வாகினியான சரஸ்வதி அதன் குறியீடு. அது அபாயகரமானது. சாதகன் தகுந்த குருவும் நல்ல உடல் மற்றும் உள்ளத் திறனும் உடையவனாக இல்லாவிட்டால் அவன் சிதறி அழிந்துவிடக்கூடும். அது ஒருவகை பைத்திய நிலை. பெரும்பாலான சாதகர்கள் அஞ்சி விலகும் இடம் அது. முரட்டுத்தனமாக முயல்பவர்கள் பைத்தியமாகிவிடுவதும் சாதாரணம்.

‘ ‘அது மனப்பிளவுக்கு மிகமிக ஒத்துவரும் நிலை. சொல்லப்போனால் அதுஓருவகை மனப்பிளவேதான். யோகமரபை அறியாத ஒரு மருத்துவன் அதை மனப்பிளவுப்பிரமைநிலை [ Paranoid Schizophrenia ] என்று தீர்மானித்துவிடுவான்…. ‘ ‘ என்றார் டாக்டர் தம்பி. ‘ ‘ காலன் சாமி அந்த நிலையை தாண்ட ஒருவழியைக் கண்டுபிடித்தார். கணிசமான மனப்பிளவுநோயாளிகள் தாங்களாகவே அந்த தீர்வுக்குச் செல்வதுண்டு. மனப்பிளவை ஆளுமைப்பிளவாக [ Dual Personality ] மாற்றிகொள்ளுதல்… ‘ ‘

‘ ‘புரியவில்லை ‘ ‘ என்றேன்.

‘ ‘மனப்பிளவு என்றால் என்ன ? அதற்கு முதலில் நாம் மனம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளவேண்டும். மனம் என்பது ஒரு தொடர் நிகழ்வு. பலவிதமான மூளைச் செயல்பாடுகள் முறைப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது. மனப்பிளவின்போது மூளையின் பல்வேறுசெயல்பாடுகளுக்கு இடையேயான ஒத்திசைவு இல்லாமலாகிறது. புலனறிதல்கள் ஒன்றோடொன்று இணைவதில்லை. தர்க்கமனமும் உணர்ச்சிமனமும் பரஸ்பர இசைவை இழக்கின்றன. கற்பனையும் யதார்த்தமும் பொருந்துவதில்லை. நோயாளிக்கு இல்லாத குரல்கள் கேட்கும். கற்பனைகள் உண்மையாக நிகழும். இட கால உணர்வு குழம்பும் . தன்னை இன்னொரு இடத்தில் இன்னொருவனாக உணரக் கூடும். தன்னை வேறொருவராக நோக்கக் கூடும். இந்த பிரமைகளுக்கு எதிராக அவன் மனம் போராடும். இதன் விளைவான மூளைக்கொந்தளிப்பே சுருக்கமாகச் சொன்னால் மனப்பிளவு நோய். ‘ ‘

டாக்டர் தம்பி தொடர்ந்தார் ‘ ‘ மனப்பிளவு என்பது மிக மிகக் கொடுமையான ஒரு நிலை.டோபாமின் கொப்பளிப்பினால் மூளையின் திறன் பலமடங்கு அதிகரிக்கிறது. ஆனால் அந்த வல்லமை முழுக்க பலதிசைகளிலாகச் சிதறிப்பரவுகிறது. அந்த வலியைத் தாங்கும்பொருட்டு நோயாளி தன் மனதை சிலசமயம் இரண்டாகப் பகுத்துக் கொள்கிறான். தன்னை இரு ஆளுமைகளாக அவன் பிரித்துக் கொள்ளும்போது அவன் மனதுக்குள் பலகூறுகளுக்குள் நிகழும் உள்போராட்டம் இல்லாமலாகிறது. அது ஒருவகையான விடுதலை. யோகசாதனையின் மனப்பிளவுக்கட்டத்தை வெல்ல காலன்சாமி இயல்பாகக் கண்டடைந்த முறை அதுதான்… ‘ ‘

காலன்சாமி தன்னை சுக்லன் [ வெண்ணிறமானவன் ] என்றும் சியாமன் [கருமையானவன்] என்றும் இரண்டு தனிநபர்களாகப் பகுத்தார். வளர்நிலவுக் காலகட்டத்தில் அவர் சுக்லன்.தேய்நிலவில் சியாமன். சுக்லன் முன்னகரும் சக்தி . சத்வ குணம் மட்டுமே கொண்டவன். அனைத்து வகையான நன்மைகளுக்கும் உறைவிடமானவன். சியாமன் நிலைச்சக்தி. தமோகுணமும் ரஜோகுணமும் கொண்டவன். காமம் குரோதம் மோகம் என்னும் முக்குணங்களும் நிறைந்தவன். அப்பகுப்பை நிகழ்த்தி அதைப் பயின்று முழுமைசெய்யும்தோறும் உக்கிரமான விளைவுகள் உருவாவதை அவர் கண்டார். சியாமனுக்கு எந்தவகையான சிதறலும் இல்லாமல் தியானம் கைகூடியது. வெறும்வெளியில் ஒளிபோல அவன் மனம் முடிவின்மைநோக்கிப் பாய்ந்து சென்றது. அதையே ஒரு யோகமுறையாக ஆக்கினார் காலன் சாமி. அதற்கு துவாத்மமுறை என்று பெயரிட்டார். அவரது முறை ஒரு சமூகமாக மாறியது. ஒரு மதமாக வளர்ச்சி காணமுனைந்தது.

‘ ‘ மனப்பிளவை ஒரு பயிற்சியாக முறைபடுத்தி ஆற்றினர் துவாத்மர்கள். செயற்கையான முறையில் மூளையில் டோபாமினை உயர்த்த சக்ரமூலி பயன்படுத்தப்பட்டது. ‘ ‘ என்றார் டாக்டர் ‘ ‘ துவாத்மர்கள் பதினைந்து நாள் சுக்லர்கள். மீதிப் பதினைந்துநாள் சியாமர்கள். சுக்லர்களாக இருக்கும்போது அவர்களின் தியானசக்தியை தடுக்கும் எந்த அம்சமும் அவர்களிடம் இருக்கவில்லை. அதேபோல சியாமர்களாக இருக்கும்போது அவர்களுக்குள் கொந்தளித்த காமத்தையும் வன்முறையையும் கட்டுப்படுத்தும் எந்த விஷயமும் இருக்கவில்லை. மனிதனின் தீமைநாட்டத்துக்கு எல்லையே இல்லை. அவன் போகக் கூடிய தூரம் முடிவின்மைக்கும் அப்பால். அதை நிரூபித்தனர் துவாத்மர்கள்…. ‘ ‘

என்னால் மூச்சை நிதானமாக விட முடியவில்லை. நெஞ்சுக்குள் ஒரு கனம் அழுத்தியது. ‘ ‘ நல்லவேளை….அந்த மதம் உலகில் வேரூன்றியிருந்தால்… ‘ ‘ என்றேன்.

சட்டென்று தம்பி விசித்திரமான ஆவேசத்துடன் பேச ஆரம்பித்தார் . ‘ ‘…இதோபார் ஓர் உளவியலாளனாக நான் ஒரு விஷயத்தை திட்டவட்டமாகச் சொல்வேன். எல்லா மதங்களும் அடிப்படையில் ஒரு மனப்பிளவுத்தன்மை கொண்டவைதான். அதிலும் குறிப்பாக நம்பிக்கையை முதன்மைப்படுத்தும் மதங்கள் தங்கள் விசுவாசிகளை கிட்டத்தட்ட மனப்பிளவு நோயாளிகளாகவே ஆக்குகின்றன. ஆனால் அது குறியீடுகள் மூலம் எல்லையிட்டு கட்டுப்படுத்தப்பட்ட மனப்பிளவு… நமது தெய்வங்களைப்பார் ஒருகையில் ஆயுதம் மறுகையில் அபயமுத்திரை. ஆம், அன்பையும் கருணையையும் போதிக்காத மதம் உலகில் இல்லை. அதேசமயம் லட்சக்கணக்கில் உயிர்ப்பலிவாங்காத மதமும் எதுவும் இல்லை. ஒரு மதநம்பிக்கையாளன் கண்டிப்பாக ஆளுமைப்பிளவின் கூறுகளைக் கொண்டிருப்பான். ஒருபக்கம் அன்பாலும் மறுபக்கம் வெறுப்பாலும் அவன் தளும்பிக் கொண்டிருப்பான்… மதம் அவனை இரண்டாக உடைக்கும். ஒருபகுதியை மதத்தின் ஒளிமிக்க பக்கம் எடுத்துக் கொள்ளும்… இன்னொன்றை இருள்மிக்க பக்கம். மதவிசுவாசி இடைவிடாது தன்னுடைய இரட்டைநிலையை அஞ்சுவான்…அதை தன்னிடமிருந்தே மறைக்க வேடம் போடுவான். உக்கிரமாக ஓயாமல் பிரார்த்தனை செய்வான்… கடுமையான நோன்புகள் மூலமும் பயங்கரச் சடங்குகள் மூலமும் தன்னை தண்டித்துக் கொள்வான். ஒரு தருணத்தில் எக்களிப்பின் உச்சத்தில் இருப்பான். மறுகணம் சோர்விலும் தன்னிரக்கத்திலும் உழல்வான்… அவனுக்குச் சமநிலையே இருக்காது…. தீவிர மதநம்பிக்கையாளனுக்கும் மனநோயாளிக்கும் ஒரேவிதமான உளவியல் நடத்தைகள்தான் இருக்கும் . நீ அதைக் கவனித்திருக்கலாம்…. ‘ ‘

தம்பியின் ஆவேசம் எனக்கு வியப்பை அளித்தது . விழித்து வாய்திறந்து கேட்டிருந்தேன். ‘ ‘ துவாத்மர்கள் தங்கள் மதத்தை அன்றாடவாழ்க்கையில் இருந்து பிரித்துக் கொண்டதுதான் தவறாகப்போயிற்று…. அவர்களின் காலகட்டமும் தவறு . ஆகவே அவர்களால் வேகமாகப் பரவ முடியவில்லை. யோசித்துப்பார், அவர்கள் மத்திய காலகட்டத்தில் வாழ்ந்து தங்கள் மிருக வலிமை மூலம் ஒருசில நாடுகளை வென்றிருந்தால் இன்று அவர்களுக்கும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் விசுவாசிகள் இருந்திருப்பார்கள். அந்நிலையில் அவர்களை எளிதில் முழுக்க அழித்துவிட முடியாது. ஆகவே உலகம் அவர்களை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்ளவும் அவர்களுடன் சேர்ந்துவாழவும் பழகியிருக்கும். அதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் . கோட்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கும். உலகத்தை அந்த மதம் புற்றுநோய்க்கட்டிபோல அழித்துக் கொண்டிருந்தாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது…. ‘ ‘

நான் ஒன்றும் சொல்லவில்லை. என் மனம் அச்சொற்களால் அச்சம் கொண்டிருந்தது . இல்லை பிரமித்துச் செயலற்றிருந்தது. தம்பியின் முகத்தில் தெரிந்த கோப வெறியை அர்த்தமின்றி பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெகுநேரம் கழித்தே என் மனதில் அடுத்த கேள்வி எழுந்தது. ‘ ‘ ஆனால் துவாத்ம மடத்தில் ஒரே ஒரு சுக்லர்தான் இருந்தார் என்று காப்டனின் குறிப்புகள் சொல்கின்றனவே …பிறர் எங்கே ? ‘

‘அது ஊகிக்கக் கூடியதுதான். என் தாத்தாவின் குறிப்புகளில் அதற்கான சில அடையாளக்கூறுகள் உள்ளன. துவாத்ம மடத்தில் மெல்லமெல்ல சியாமர்களின் கை ஓங்கியது. அவர்கள் தங்கள் கால அளவைத் தாண்டியும் சியாமர்களாக நீடித்தார்கள். கட்டுப்படுத்தும் சக்தி ஏதுமில்லாததனால் அவர்களின் வளர்ச்சி மேலும் மேலும் தீவிரமடைந்தது. மறுபக்கம் சுக்லர்கள் வலிமை இழந்தார்கள். நல்லியல்பென்பது தீய இயல்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமே செயல்பட முடியும். அப்படிக் கட்டுப்படுத்த தீய இயல்பு இல்லாத தூய நிலையில் நல்லியல்பு செயல்பாடு இல்லாமல் தேங்கி இல்லாமலாகிறது….அப்படித்தான் இருக்க இயலும். நன்மை என்பது என்ன ? கொல்லாமை, பிறன்மனை விழையாமை, திருடாமை, தீநெறி செல்லாமை— எல்லாமே எதிர்மறையானவை. தீமையை எதிர்ப்பதே நன்மை. தீமை இல்லாத இடத்தில் நன்மை என்பதே இல்லை…ஒரு கட்டத்தில் துவாத்ம மடத்தில் ஒரேஒரு சுக்லர்தான் எஞ்சினார். அவர்தான் நரபாகர்.. ‘ ‘

‘ ‘ அப்படியானால் காமமும் குரூரமும்தான் மனிதனின் இயல்பான நிலைகளா ? ‘ ‘ என்றேன் .

‘ ‘ ஃப்ராய்டிலிருந்து தொடங்கும் மேலைநாட்டு உளவியல் அப்படித்தான் சொல்கிறது. பதினெட்டு வருட மனமருத்துவ அனுபவம் அதைத்தான் எனக்குப் புரியவைத்தது…. ‘ ‘ என்றார் தம்பி. ‘ ‘ என் ஆய்விலும் அனுபவத்திலும் நான் உறுதியாக அறிந்த முடிவு ஒன்றுதான். மனிதனின் மனஅமைப்பைத் தீர்மானிப்பவையாக இன்று உள்ள பெரும் சக்திகள் மதங்களே. மனிதகுலம் இன்றுவரை தேடியடைந்த தத்துவம் கலைகள் குறியீடுகள் எல்லாமே மதங்களின் வடிவில்தான் தொகுக்கப்பட்டுள்ளன. மனிதமனம் இன்று சுதந்திரமாக இல்லை. நம்மைச்சுற்றியுள்ள மனித மனங்கள் அனைத்துமே அபாயகரமான அளவுக்கு மனப்பிளவுக் கூறு கொண்டவை. ஒருவேளை ஆதிவாசிகள் மிக எளிய விவசாயிகள் மந்தபுத்திகொண்டவர்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆமாம், இங்கு எவருமே மகிழ்ச்சியாக இல்லை. பலவிதமான உளச்சிக்கல்கள், உளமோதல்கள், ஆளுமைத்திரிபுகள். அதன் விளைவான பூசல்கள் பகைமைகள் வன்முறைகள். நம் வாழ்க்கைச்சூழல் வன்முறை மிகுந்ததாக மாறியபடியே வருவதை நீ கவனித்திருக்கலாம். எந்த அளவுக்கு நாம் கல்வியும் நாகரீகமும் அடைகிறோமோ அந்த அளவுக்கு மனப்பிளவு அதிகரிக்கிரது. ஆம் நாம் இன்று வாழும் இது உண்மையில் ஒரு மாபெரும் மனப்பிளவுச் சமூகம்தான்… ‘ ‘

‘ஆம் ‘ என்றேன், என்னால் வாதாட இயலவில்லை

‘ ‘ மதங்களில் பிடியிலிருந்து மனிதனை விடுவிக்காதவரை அவனுக்கு மீட்பு இல்லை. மதம் மனிதனுள் வாழும் விஷம்… ‘ ‘ தம்பி சொன்னார். ‘ ‘ இங்கு நாத்திகனும் பகுத்தறிவாளனும் கூட மதத்திற்குள்தான் வாழ்கிறார்கள். மதத்தை வெறுமே அறிவுபூர்வமாக நிராகரிப்பதனால் ஒருவன் மதத்தை துறக்க முடியாது. அதற்குப் முறையான படிப்படியான உளப்பயிற்சி பெறவேண்டும். மதம் உருவாக்கிய ஆழ்மனப் படிமங்களில் இருந்தும் அக நம்பிக்கைகளில் இருந்தும் விடுதலை பெறவேண்டும். 1979ல் நான் உருவாக்கிய ‘ஆதார உளவியல் பயிற்சி மையம் ‘ அதற்கான பயிற்சியை அளிக்கும் அமைப்பு. தைக்காடு — நெடுமங்காடு சாலையில் தலைமை அலுவலகமும் பயிற்சிப்பள்ளியும் இருக்கிறது. இப்போது எங்களிடம் கிட்டத்தட்ட நாலாயிரம்பேர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். எழுபது பேர் அங்கே நிரந்தரமாகப் பயிற்சி கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்… ‘ ‘

தம்பி ஒரு புத்தகத்தையும் சில துண்டுப்பிரசுரங்களையும் தந்தார் ‘ ‘ ஓய்வாகப் படித்துப் பார். ஒருநாள் தலைமைநிலையத்துக்கு வா… எல்லாவற்றையும் பார்க்கலாம். இப்போது நாங்கள் ஒரு சின்ன அமைப்பாக இருக்கலாம். ஆனால் வரப்போகும் அறிவியல் யுகத்துக்கு உரிய மாதிரி மனிதர்களை இங்கே உருவாக்குகிறோம். இவர்களில் இருந்து ஒரு புதிய யுகம் மலரப்போகிறது… ‘ ‘

‘ ‘நீங்கள் என்ன பயிற்சி கொடுக்கிறிர்கள் அப்படி ? ‘

‘ ‘ இது ஒருவகை கூட்டு உளப்பயிற்சி. பலவிதமான நவீன மின்னணுக் கருவிகளை பயன்படுத்துகிறோம். இருபதுவருடங்களாக நாங்கள் படிப்படியாக வளர்த்து எடுத்த அறிவியல்பூர்வமான பயிற்சிமுறை இது. வெற்றிகரமானதாக ஐயத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டது. முதலில் மதம்சார்ந்த அனைத்தையும் தெளிவாக அடையாளப்படுத்துகிறோம்… நம்பிக்கைகள், சிந்தனைகள் ,கலை, இலக்கியம் ,அன்றாட வாழ்க்கை அனைத்திலிருந்தும் அவற்றைப் பிரித்துக் கொள்கிறோம். பிறகு அவற்றுக்கு நேர் எதிராக நகர்வதற்கும் அந்நிலையில் இயல்பாகச் செயல்படுவதற்கும் மனதைப் பயிற்றுவிக்கிறோம்… இப்படிச்சொல்கிறேனே. நாம் மதத்தை நம் பிரக்ஞையில் இருந்து எளிதில் அகற்றிவிடலாம். ஆனால் அதை நனவிலியில் இருந்து அகற்றமுடியாது. நனவிலி மதத்தாலேயே கட்டப்பட்ட ஒன்று. இங்கே நாங்கள் படிப்படியாக நமக்குள் சிறுவயதுமுதல் உருவாகியுள்ள நனவிலியை அகற்றி புது நனவிலியை கட்டியெழுப்பிக் கொள்கிறோம் . ‘ ‘

நான் திடாரென்று ஓர் ஐயத்தை அடைந்தேன் ‘ ‘டாக்டர் நீங்கள் இதில் சக்ரமூலியை பய்ன்படுத்துகிறீர்களா ? ‘ ‘

‘ ‘ஆமாம். இந்தப் பயிற்சிக்கு அன்றாடத்தேவையைவிட பலமடங்கு அதிகமான உளச்சக்தி தேவை. சக்ரமூலி டோபாமினை ஊற்றெடுக்கச்செய்கிறது. நாங்கள் அதை கட்டுப்படுத்துவதில் முழுவெற்றி அடைந்திருக்கிறோம்…எல்லாவற்றையும் நீயே நேரில்வந்து பார்க்கலாம் ‘ ‘

நான் பதற்றம் நிரம்பியவனாக அவரிடம் விடைபெற்றேன். பேருந்தில் வரும்வழியெங்கும் எனக்குத் தூக்கித் தூக்கிப் போட்டது. நான் தைக்காட்டுக்குச் செல்லவில்லை.

என் மனம் அஞ்சியது சரிதான். ஒருவருடம் கழித்து டாக்டர் தம்பியின் ‘ஆதார உளவியல் பயிற்சி மைய ‘த்துக்குள் ஆயுதப்போலீஸ் புகுந்தது.

====

jeyamohan.b@gmail.com

Series Navigation