அரிசிபால்தீ

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

திருவுறை அருளரசன்


விமானம் சீராகப் பறந்து கொண்டிருந்தது. ரவிக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. நிம்மதி என்பது அஸந்தர்பமான வார்த்தை. ஆஸ்வாசம். விக்கி விக்கி அடங்கியபின் உண்டாகும் நெருடலான நிவாரணம். எப்போது உடைத்துக் கொண்டு விடுமோ என்று பயமுறுத்தும் அமைதி. இரண்டு நாட்களாக அழுது தீர்த்தாயிற்று. கண்ணீர் வற்றவிட்டது நினைவுகள் தாம் வற்றவில்லை. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்துபெற்று என்று பட்டினத்தார் புலம்பியதின் வீச்சு புரிந்தது.

பட்டினத்தார் பாதிப்பில் அவனும் சிறுவயதில் ஒரு வெண்பா இயற்றினான்.

ஒன்பதுவாய்ப் பையிதனை ஒன்பதுமா தஞ்சுமந்து

அன்பு பொழிந்தென்னைப் பெற்றாளே – அந்தோ

அரிசிபால் தீயின்றி யென்னா லவர்க்குப்

பரிசுவே றில்லை யடா.

நினைத்து நினைத்து அழுதான். ஒரு சின்ன காலிடறல். காலி. எழுதியது போலவே அவனால் அம்மாவிற்கு ஒரு நன்மையும் இல்லை. இன்று வரை இவந்தான் பெற்றுக் கொண்டிருந்தானேயொழிய கொடுத்தது ஏதுமில்லை.

‘அழாதடா ரவி. ப்ளீஸ் அழாத ‘, என்று ராதிகா அழுதாள்.

சின்ன வயதில் அம்மா ஒரு முறை அவனிடம், ‘அம்மா செத்துபோய்ட்டா நீ என்னடா பண்ணுவ ‘, என்று வம்பிழுக்க அவனோ, ‘கவலயே படாதம்மா. ஒனக்காக ஸ்பெஷல்லா ‘அம்மா… நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை ‘ லெளட்ஸ்பீக்கர்ல போடுவேன் ‘, என்று சொல்லிச் சிரித்தான்(!).

‘ரவி. ‘

‘என்னப்பா! நீ ஃபோன் பண்ணிருக்க ? ‘

‘படிப்புலாம் எப்டிரா போற்து ? ‘, குரல் சற்று கம்மியது போலிருந்தது அவனுக்கு.

‘ஏதோ போற்துப்பா. ‘

‘ஒன்னால இப்போ லீவு போட்-டு வர முடியுமா ? ‘

அவனுக்குப் பயம் தட்டியது. சிறிது அவன் தயங்க,

‘ஒங்கம்மாக்கு ஒடம்பு சரியில்லடா, ஒன்னப் பாக்காணும்னு ரொம்ப ஆசபட்றா. ஒன்னால சட்டுபுட்டுன்னு கெ-ளம்பி வர முடியுமா ? ‘

‘ஏன். போன வாரம் பேசின போது கூட நன்னா தானே இருந்தா ?, இப்போ என்னாச்சு ? ‘

‘மூணு நாளு மின்னாடி மாடிலேர்ந்து எறங்கி வரும்போது தடுக்கி விழுந்துட்டா. நெனவில்லாம இருந்தாடா. இன்னிக்கித்தான் நெனவு வந்ததும் ஒன்னப் பாக்கணும்னு ஒரேயடியா அழறா. நீ இப்டி வந்துட்டு போனயானா நல்லது ‘, என்றார். அவனுக்கு வயிறு கலங்கிக் கோபமாக வெளிவந்தது.

‘இப்போ எப்டி இருக்கா ? ஏன் மூண்-நாளைக்கு முன்னாடியே ஃபோன் பண்ணல ‘, என்று வெடித்தான்.

‘இப்பகூட ஏதோ தாண்டா இருக்கா. நெனவு வரது போறது. அதான் ஏதாவது ஆய்ட்றத்துக்குள்ள நீ ஒருவாட்டி வந்துட்டுப் போய்ட்டனா நன்னாருக்கும். ‘

ஃபோனில் ‘இனிமே என்ன ‘, என்று ஏதோ சத்தம் கேட்டது. முரளி அப்பாவிடமிருந்து ஃபோனைப் பிடுங்கிக் கொண்டான். ‘ஆறதுக்கு இனிமே ஒண்ணுமில்லடா ரவி. அம்மா போய்ச்சேந்துட்டா. நீ கெ-ளம்பி வா ‘, என்று போட்டுடைத்தான் அந்த ஆண்டி. ரவியால் விஷயத்தை ஒழுங்காகக் கிரஹித்துக் கொள்ள முடியவில்லை.

‘சரி நான் ஒடனே கெ-ளம்பி வரேன். என்ன ஆச்சுன்னு சொல்லு ‘, என்றான்.

‘சொல்றதுக்கு என்ன இருக்கு. மாடிக்குத் துணி ஒலத்த போயிருக்கா. எறங்கி வரும்போது என்ன தடுக்கித்தோ தெரில மாடாலேர்ந்து படிக்கட்டுல சரிஞ்சு விழுந்துட்ருக்கா. அப்பாதான் என்ன சத்தம்னு போய் பாத்துருக்கா. நான் போய் விஷ்வநாதன் டாக்டர கூட்டிண்டு வந்தேன். வர்றதுக்குள்ள போய்ட்டா ‘, என்று ஒப்பித்தான்.

‘எப்படா நடந்தது. ‘

‘இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு ‘, என்று சொல்லி முடிக்கமுடியாமல் அழதான். அவனைத் தேற்ற பாட்டி வந்து ஒரு ஒப்பாரி வைத்தாள். அவளிடமிருந்து அப்பா பேசியைப் பிடுங்கி ‘சீக்ரம் கெ-ளம்பி வா. நீ வந்து தான் எல்லாம் பண்ணனும் ‘, என்று கூறி வைத்தார்.

உடனே அந்த சினிமா பாடல் தான் நினைவுக்கு வந்தது. அழுகையில்லாமல் கண்ணீர் மட்டும் வந்தது. மாடிப்படியில் உருண்டு விழுந்தாளெனில் …, நினைத்துப் பார்க்கவே அவனுக்கு அவள் பட்டிருக்கும் வலியை எண்ணி உடம்பு உதறிப்போட்டது.

அமெரிக்கா வந்த புதிதில் எவ்வளவோ பயந்திருக்கிறான். தான் இங்கிருக்கும் சமயத்தில் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விட்டால் ? பிசாத்து ஆயிரம் டாலர் assistantship-இல் உடனடியாகக் கிளம்பக் கூட முடியாதே. எல்லோரையும் மீண்டும் பார்க்கமுடியாமலே போய்விட்டால் ?

நாட்கள் செல்லச் செல்ல, தான் அங்கு இல்லாததால் எதுவும் மாறிவிடுவதில்லை என்று புரிந்து போயிற்று.

ஆனாலும்… போன வருடம் சின்னதாத்தா இறந்தது ஒருவாரங்கழித்து ஃபோன் பேசியபோது தான் தெரியவந்தது. செய்தி தாக்கியபோதும் பாதிக்கவில்லை. அவரோ எதிர்ப்பார்த்து இறந்தவர். அம்மா ? எதுக்காக இந்த நாட்டில் வந்து உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம் ? என்ன சாதிக்கப்போகிறோம் ? எதுவுமே நிலையில்லை என்று தெரிந்தும் எற்கோ அலைந்து கொண்டிருக்கிறோம். பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.

ஒரு சின்ன காலிடறல்… போச்சு. கால் தடுக்க மாடால என்ன இருக்கு ? ஒண்ணும் இருக்காதே! மாடாலேந்து விழுந்தான்னா… ஐய்யோ…

அவனுக்கு உதறல் எடுத்தது. சட்டெனத் தன்னிலை உணர்ந்தான். எப்போது மறுமுறை அழைப்பு வருமோ என்று இடதுகை தொலைபேசியின் மீதே இருக்க, கண்களிரண்டும் நீரோடு உத்தரத்தில் குத்திட்டு நிற்கக் கசங்கிய துணிபோல் சுவரில் சாய்ந்து கிடந்தான். அவன் கேட்ட விஷயத்தின் பயங்கரம் தாக்க, தனியாய் இருக்க பயமாய் இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்றரை. அவர்கள் தூங்கியிருக்க மாட்டார்கள். அவசர அவசரமாகக் கிளம்பி பக்கத்துக் கட்டடத்தில் வசிக்கும் ராஜன் வீட்டிற்குப் போனான்.

கதவைத் திறந்த ராஜனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘என்னடா ஆச்சு ரவி, ஏன் ஒம்மொகம் வீங்கிப்போய்… ஏண்டா அழற ?… ‘

ராஜனின் குரல் கேட்டு ராதிகாவும் படுக்கையறையிலிருந்து ஓடிவந்தாள். உள்ளே வந்து ஸோஃபாவில் அமர்ந்தவன் ராதிகாவின் முகத்தைப் பார்த்ததும் உடைந்து போய்க் கேவிக்கேவி அழத் தொடங்கினான். இருவருக்கும் வயிற்றுக்குள் குப்பென சூடு பரவியது. அழுகையினூடே சொல்லி முடித்தான்.

‘அழாதடா ரவி. ப்ளீஸ் அழாத ‘, என்று ராதிகா அழுதாள்.

ராஜனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இருக்காது ? நம்பமுடியவில்லை. விபத்துகளுக்கு ஏது கால நேரம் ? யாரை எப்போது அள்ளிக்கொண்டுப் போகவேண்டுமோ போய்விடும். சீ… இப்படி ஆகியிருக்கக் கூடாது. நான்கு மாதங்களுக்கு முன் இந்தியா போய்வந்த போது ரவியின் வீட்டிற்கும் போய்வந்திருக்கிறான். எவ்வளவு பரிவோடு நடந்து கொண்டாள். ரவியின் உருவாக இவனைப் பாவித்தது இவனைப் பலமுறை சிரிக்க வைத்திருக்கிறது.

‘ஒழுங்கா ஸந்த்யாவந்தனம்லாம் உடாம பண்ணுடா. அந்த மடையன்தான் எதுக்கெடுத்தாலும் குதர்க்கம் பேசிண்டே இருப்பான். நீயாவது நல்லபடியா நம்ம பழக்க வழக்கத்த உடாம இருடா ராஜா. ‘

‘சரி மாமி. ‘

அந்தச் ‘சரி ‘க்காக இந்த நான்கு மாதமாகச் செய்துகொண்டு தான் இருக்கிறான்.

‘அவன் இப்பவும் ஆர்ச் பக்கம் போய் வேடிக்க பாத்துண்ட்ருக்கானா ? ‘

இப்போது அந்த கேள்வியை நினைத்து அஸந்தர்பமாகச் சிரிப்பு வந்தது. ராதிகா இவனைப் பார்த்து முரைத்தாள்.

‘அங்க போனாதான் மாமி அவனுக்குக் கவித எழுதவே வரும். போகாம இருப்பானா ? ‘

‘கவித எழுதறேன் கத எழுதறேன்னு தண்டத்துக்கு டயத்த வேஸ்ட் பண்ணிண்ட்ருக்கான். எப்பதாண்டா அவன் முடிக்கப் போறான் ? ‘

ம்… இனி ஆக வேண்டிய வேலைகளைப் பார்க்க வேண்டும். இவனால் இந்த மனநிலையில் ஒன்றும் செய்யமுடியாது. நாம்தான் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும்.

‘ரவி… அழாதடா. ஆறது ஆகிப் போச்சு. இப்ப செய்ய வேண்டியதச் செய்யலாம். ‘

மேலும் கீழும் தலையை ஆட்டினான்.

‘ரவி… எனக்குச் சொல்றது ஈஸி, ஆனா you have to control yourself. ‘

மேலும் என்ன சொல்வதென்று தெரியாமல் நிறுத்தினான். எதிரில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இந்த மாதிரி தான் அழுதிருப்பதாக ராஜனுக்கு நினைவில்லை. அவனுக்கு இந்த மாதிரி பேரிழப்பும் ஏற்பட்டதுமில்லை. முடமாய்க் கிடந்த தாத்தா தான் அவன் பார்த்த கடைசி சாவு. அதுவும் பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன். அவனுடைய அக்கா வைதேஹி தான் அழுது புரண்டாள். இவனுக்கு அவர் மீது ஒரு பிடிப்பும் இருந்தது இல்லை.

ஆனால் அதுவே அம்மா போயிருந்தால் ? சட்டென்று தன்னை ரவியின் நிலையில் நிறுத்திப் பார்த்து நடுங்கத் தொடங்கினான் ராஜன். மரணத்தின் நினைப்பு இவ்வளவு பயமுறுத்துவதாய் இருக்குமா ? வயிறு சில்லிட்டுப் போனது. அம்மா போவதற்குள் இந்தியா திரும்பிவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. நாளையே அவள் போய்விடத் தீர்மானித்துவிட்டது போல் இவனுக்குப் படபடப்பு ஏற்பட்டது.

‘ரவி… நாளைக்கு மொதல் வேலையா பொம்மிய கூப்ட்டுப் பேசறேன். ‘

சரி என்பது போல் தலையை ஆட்டினான்.

‘இன்னிக்கு எப்பிடியாவது தூங்க ட்ரை பண்ணு. நாளைக்கு நெறய வேல இருக்கும். ‘

‘சாரிடா… நான்பாட்டுக்க வந்து ஒங்க தூக்கத்தையும் கெடுத்துட்டேன். ‘

‘என்னடா ரவி இப்டி பேசற.. இந்த மாதிரி சமயத்துல கூட ‘, என்று ராதிகா முடிக்கும் முன்

‘இல்லடி… அங்க தனியா இருக்கறதுக்குப் பயமா இருந்தது… அதான் இங்க வந்துட்டேன்… I ‘m sorry ‘, என்று இடை மறித்தான். அவன் அவளை ‘டி ‘ சொன்னதை விட சாரி சொன்னது தான் இருவரையும் சங்கடப்பட வைத்தது.

‘We understand. நீ ஒன்னு பண்ணு. இன்னிக்கு இங்கயே படுத்துக்கோ. நாளைக்குக் காத்தால எழுந்து நீ இண்டியா கெ-ளம்பற வழியப் பாப்போம் ‘, என்றான் ராஜன்.

‘எல்லார்க்கும் சொல்லிட்டாளாமா ‘, என்றாள் ராதிகா.

‘தெரீல ராதிகா ‘, என்று பேச்சு வளர்ந்தது. அவர்கள் படுக்கப் போகும்போது மணி நான்காகிவிட்டது.

ரவி மட்டும் தூங்கவில்லை. ராஜனும் ராதிகாவும் கூட சரியாகத் தூங்கவில்லை. வழக்கத்தை விட மிகமிகமிகச் சீக்கிரமாக மூவரும் எழுந்துவிட்டனர். ராஜனும் ராதிகாவும் எழுந்து பார்த்தபோது ரவி அங்கு இல்லை. ஏற்கனவே போய்விட்டிருந்தான்.

காலையில் ராதிகா மூலமாகச் செய்தி அறிந்து உடனே ஓடி வந்த சுஷ்மிதாவைப் பார்த்ததும் அடக்க முடியாமல் ரவி அழுதான். பயணக் கட்டணத்தை ஆறு மாதங்களுள் செலுத்தினால் போதுமென்று பொம்மி கூறியதும் அடக்க முடியாமல் அழுதான். தேடித் தேடி கிடைத்த க்ரிஸ், உடனே அலுவலகம் சென்று I-20-இல் கையெழுத்திட்டுத் தந்ததும் அடக்க முடியாமல் அழுதான். தன் பயண நிமித்தம் பல மாணவர்கள் பணந்திரட்டி நானூற்றி முப்பது டாலர்கள் தந்த போது அடக்க முடியாமல் அழுதான். ஆசான் ஆண்டர்சனிடம் தொலைபேசியில் தன்னிலை கூறி அழுதான்.

அன்றும் ராஜன் வீட்டிலேயே உறங்கி மறுநாள் எழுந்து மூட்டை கட்டும் போது தான் அவனுக்கு உரைத்தது. அரிசிபால்தீ கூட கடனில் தான்! அழுகை நின்று கோபம் தான் வந்தது. விமானத்துள் நுழையும் முன் அணைத்து சுஷ்மிதா, காதில், ‘Come back soon okay. We need you here ‘, என்று கூறியது சிரிப்பைத் தான் தந்தது. ‘சரி ‘, என்று தலையசைத்துச் சென்றான்.

விமானம் சீராகப் பறந்து கொண்டிருந்தது. ரவிக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

***

varadhar@psych.ucsb.edu

Series Navigation