அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

தாஜ்


முடிவடையாத தேடலுக்குள்… சதா சஞ்சரிக்கும் சாதாரன மனிதனின் தவிர்க்க முடியாமல்போகும் எதிர்வினையாக மட்டுமே இதை இங்கே பதிவு செய்கிறேன்.

யார் இந்த அரவிந்தன் நீலகண்டன்? இந்தியப்பத்திரிகைகளையும், அறிவு ஜீவிகளையும், இஸ்லாமியரையும், இஸ்லாம் மதத்தையும் வரம்பில்லாமல் தொடர்ந்து திட்டுவதற்கு, யார் இவருக்கு இத்தனை அதிகாரம் கொடுத்தது? செய்திக் குறித்த விமர்சனத்தையோ, அது குறித்த ஆதங்கத்தையோ அதனதன் அளவில் வைக்கட்டும். அதை விட்டு, ஏன் சகட்டுமேனிக்கு தடித்த வார்த்தைகளால் எழுத வேண்டும்? எங்கிருந்து இந்த அனுமதியை இவர்பெற்றார்?

நாட்டையும் கலாச்சாரத்தையும் அரவிந்தன் நீலக்கண்டன் மட்டுமே கைகளில் ஏந்தி நடப்பவர் மாதிரி, தொடரும் இவரது மிரட்ட லும் உருட்டலும் சகிக்க முடியவில்லை.

எழுதுபவனுக்கு வானளாவிய சுதந்திரம் இருப்பது உண்மைதான். உலகின் மிகப்பெரிய சுதந்திர நாடான இந்தியாவில் அந்த சுதந்
திரம் தங்கு தடையில்லாதது என்பதும் உண்மைதான். கடவுலிருந்து கந்தசாமிவரை, மண்ணிலிருந்து விண்வரை எல்லாமே எழுத்தா ளனின் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான். ஆனால், அதை உபயோகப்படுத்தும் போது எழுதப்படாத சட்டமாக அளவிடமுடியாத பொறுப்புணர்வு அவனுக்கு கூடுகிறது. பொதுக் கிணற்றில் துணி வெளுக்கும்போதும் கூட அதன் அழுக்கு அடுத்தவர்கள் மேல் பட்டுவிடாத பொறுப்புணர்வு அது. இந்துத்துவா மீது அரவிந்தன் நீலகண்டனுக்கு பற்று இருக்கலாம், பாசம் இருக்கலாம், பிடிப்பும் கூடுதலாக இருக்கலாம். அதை அடுத்தவர்கள் மண்டையில் ஏற்றி வைக்கனும் என்கிற எண்ணமும் இருக்கலாம். எல்லாம் சரி. ஆனால், நிலை மறந்த நிலையில், எதுவும் எழுதுவேன் என்று கிளம்புவதை எந்த நாகரீகச் சமூகம் ஏற்காது.

அரவிந்தன் பேசுகிற, இந்துத்துவா கொள்கையை, எல்லோரும் தலைவணங்கி ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார். மாற்று கருத்துக்களையெல்லாம் தேச துரோகமாகத்தான் பார்ப்பேன் என்கிறார். செழிப்பான ஜனநாயகத்திற்கு மாற்றுக் கருத்து அவசியம் என்பதை இவர் ஏற்பவராக இல்லை. மாற்று கருத்துப் பேசுகிறபோது அவருக்கு ஆத்திரம் வருகிறது. ரௌத்திரம் கொண்டு எழுதத் துவங்கிவிடுகிறார்! வாசிப்பவன் அதனை சகித்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் திரும்பி பதில் சொல்லக்கூடாது. சொன்னால் போச்சு! இவருக்கு சாமியே வந்து விடும். தடித்த தாறுமாறான வார்த்தைகளை உபயோகிப்பதின் மூலம் பதில் சொன்னவர்களை உதாசீனப்படுத்துபவராக செயல்படுகிறார். தப்பித் தவறி பதில் சொல்பவன் இஸ்லாமியனாக இருந்துவிடக் கூடாது. ஆனாலும், ஏ.கே. அப்துல் கலாமின்… அந்த இஸ்லாமியனின்… அறிவு வெளியில் மட்டும் இவர் சொக்கிப் போகிறார். ( அவரது வலைத்தளத்தில் ஏ.கே. அப்துல் கலாமின் புகழ் பாடும் கட்டுரை ஒன்றை சமீபத்தில் இவர் எழுத வாசித்தேன்.) எப்படி இது? என்று யாரேனும் அவரைக் கேட்க கூடுமென்றால், “ஜனாதிபதி தேர்தல் நேரம், இது அரசியலாக்கும்!” யென அவர் சொல்லலாம்!

*******

சென்ற திண்ணையில் இவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தலைப்பு: ‘வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்’ என்பது. மலேசியாவில்
தமிழ் பேசும் ஒரு இந்துசகோதரக் குடும்பம். அவர்களுக்கு ஒருபெண். அந்தப்பெண் பாட்டி வீட்டில் வளர்கிறாள். அந்தக் காலக் கட்டத்தில் அவளது பெற்றோர்கள் இஸ்லாமியர்களாக மாறிவிடுகிறார்கள். புதிய இஸ்லாமிய பெயரோடு தங்களது மாற்றத்தை அரசு கெஸட்டில் பதிவும் செய்துக் கொள்கிறார்கள். பாட்டி வீட்டில் வாழும் தனது மகளுக்கும் அப்படியே இஸ்லாமிய பெயரிட்டு அதையும் அதில் பதிந்து வைக்கிறார்கள். அந்த பெண் பாட்டி வீட்டில் வளர்ந்த நிலையில் தனது பூர்வீக இந்துமத சம்பிரதாயப் படி, பூர்வீக மதத்திலேயே ஒருவரை திருமணம் செய்துக் கொள்கிறாள். ஒரு பெண் குழந்தையும் அவர்களுக்குப் பிறக்கிறது.

அந்தக் குழந்தைக்கு ஒன்னறைவயது ஆகும் காலக்கட்டத்தில், தனது பெற்றோர் தன்னை இஸ்லாமியராக மாற்றியதும், அதையொ ட்டி சூட்டிய புதிய பெயரும் தனக்கு வேண்டாம் என்றும், தனக்கு தனது பூர்வீக பெயர்தான் வேண்டும் என்றும் அவர் அரசிடம் விண்ணப்பிக்கிறார். அப்படி விண்ணப்பித்த நாளில், சட்டசிக்கல் எழுகிறது. அவளதுகோரிக்கை மறுக்கப்படுகிறது. அரசின் குழப் பமும் அதன் அதிகார கரமும் நீள்கிறது. அந்தப் பெண்ணை அவளது கணவனிடம் இருந்து பிரித்து, காபகத்தில் சேர்க்கிறது. தொடர்ந்து அலைகழிக்கப்படுவதும் நடக்கிறது. வேதனைத் தரும் நிகழ்வுதான் இது. பாவம் அந்தப் பெண்.

அந்தப் பெண்ணிற்காக மலேசியாவில் உள்ள பல்வேறு இஸ்லாமிய மனிதஉரிமை ஆர்வலர்களும், இஸ்லாமிய பெண்கள் அமைப்பு களும் வீதியில் இறங்கி போராட முனைந்த வேளையில், அந்த பெண்ணை, அவளது பெற்றோர் வசம்போலீஸ் ஒப்படைக்கிறது. மனிதஉரிமை நசிவுக் குறித்த இந்த சம்பவத்தை ‘அல்ஜஸீரா’ தொலைக்காட்சி, உலப்பார்வைக்கு கொண்டு வருகிறது. ஆதாரசுத்த மாய் இந்தக் குழப்பத்தையும், மனிதஉரிமை நசிவையும் அரவிந்தன் தீர எழுதி இருக்கிறார். இதை முன்வைத்து அவர் நியாயம் கேட்கும் உணர்ச்சி மிகுந்த காட்சிக்கு முன், ஒரு தெளிவுக் குறித்து, நடந்தேறிய சம்பவங்களின் இரண்டுப் பக்கங்களிலும் உள்ள இண்டு இடுக்குகளுக்குள் நாம் போயாகனும்.

*******

இந்தியாவில் அமர்ந்துக் கொண்டு மலேசியஅரசின் நடைமுறைகளை பேசும் நாம், கூடுதல் கவனத்தோடு அதை அணுக வேண்டி யதும் அவசியம். நமது நாட்டு நடைமுறைகளுக்கு ஒப்ப, அந்த நாட்டின் நடைமுறைகளை கண்ணோட்டம் செய்வது நிச்சயம் சரி யாக இருக்காது. அந்த கவனத்துடனேயே அணுகலாம். அந்தப் பெண் தனது பெயரை மாற்ற அரசை அணுகியபோது சட்டச் சிக்கல் ஏற்படுவது எதனால்?

‘ஐடி கார்டை’ எப்பொழுதும் உடன் வைத்திருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. அந்தப் பெண் ணிடம் ‘ஐடி கார்ட்’ இருக்கும் பட்சம்தான், அதில் இருக்கும் பெயரை மாற்றிதர அரசு அலுவலகத்தை அந்தப்பெண் அணுகியிரு க்க முடியும். அப்படியெனில் அந்த ‘ஐடி கார்டில்,’ அந்தப்பெண்ணின் பொற்றோர்கள் பதிந்து வைத்திருக்கும் இஸ்லாமியப் பெயர் இருந்திருக்க வேண்டும். அந்தப்பெண் தனக்கு பழைய (இந்து பெயரில்) பெயர் கொண்ட ‘ஐடி கார்ட்’ கோறும்பட்சம் அதற்கு அந்தப் பெண்ணின் பெற்றோரின் சான்றிதழும் வேண்டும். அதில் அந்த பெற்றோர்களின் மதம் என்கிற காலம் ‘இந்து’ என இருத்தல் வேண்டும். இல்லாதுப் போனால் குழப்பம்தான். இந்த குழப்பம் நடைமுறை சட்டச் சிக்கலையே ஏற்படுத்தும். அரவிந்தன் கூறுவதை வைத்து அலசும்போது அங்கு நடந்திருப்பது இதுதான்யென தெரிகிறது.

அப்படியொரு சட்டச் சிக்கலில் ஒரு பெண் மாட்டிக்கொள்வதென்பது துரதிஷ்டமானதுதான். என்றாலும் தனி ஒரு பெண்ணிற்காக ஒரு நாடு அவர்களின் சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியாது. இப்படி ஒரு சிக்கல் ஏற்படும்பட்சம் போலீஸ் தன் கடமையை செய்யத்தான் செய்யும். அந்தப்பெண்ணை போலீஸ் ‘அரசு காப்பகத்திற்கு’ அனுப்பியதில் நாம் தவறு காணமுடியாது. இங்கே இன்னொ ன்றையும் உன்னிப்பாக கவனம் செய்தல் வேண்டும். அந்தப் பெண்ணை போலீஸ், ‘அரசு காப்பகத்திற்கு’ அனுப்பிய அந்த நாளில் அந்தப் பெண் தஸ்தவேஜுகளின்படி அவள் இஸ்லாமியப் பெண்ணே! அன்றைக்கு ஒரு இஸ்லாமியப் பெண் மீதுதான் போலீஸ் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இதைப் பார்க்க முடியும்! கோணமே மாறிவிடுகிறது.

அந்தப் பெண், அரசு காப்பகத்தில் தாமசம் என்றானப் பிறகு, அதன் உள் வட்டச் சட்டத்திட்டங்களுக்கு அந்தப் பெண் உட்பட வேண்டியவள் ஆகிறாள். அதையொட்டி, அங்கு எல்லோருக்கும் ஒதுக்கும் பார்வையாளர்களுக்கான நேரம், அட்டவணைப் படியான உணவு என்பனவெல்லாம் தவிர்க்க முடியாது. ஆட்டுக்கறியோ, மாட்டுக்கறியோ, மரக்கறியோ எதுவாக இருந்தாலும்… எல் லோருக்குமான உணவுதான் அந்தப் பெண்ணிற்கும் இருந்திருக்குமேயல்லாது, அந்தப் பெண்ணை இம்சிக்ககும் நோக்கத்தில் தனி சமையல் என்றேல்லாம் எதுவும் இருக்க வாய்ப்பே இல்லை. மலேசிய நாடும், அரசும் அப்படி ஒன்றும் தரம் தாழ்ந்தல்ல.

தோட்ட வேலைகளுக்காக இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு வெள்ளை அரசாங்கத்தால் இங்கிருந்து அனுப்பபட்ட நம் தமிழர் களுக்கு அந்த அரசு காட்டும் சலுகையும், அங்கீகாரமும் போற்றத்தகுந்தது. தமிழ் மொழிக்கு, தேசிய மொழிகளுள் ஒன்று என்ற அந்தஸ்த்தையும் தந்திருக்கிறது. காபகத்தின் உணவு விசயத்தைக் குறிப்பிடும்போது, அரவிந்தன் நீலக்கண்டன் மாட்டுக்கறி சமைத் துப் போட்டதுக் குறித்து பதறுகிறார்! என்று பதறுகிறார். அதையும் ஒரு குற்றச்சாட்டாய் எழுதியிருக்கிறார். அதுவே குதிரைக் கறியாக இருந்தால் இத்தனைத்தூரம் பதறியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. ‘பீஃப் மசாலா, பீஃப் கடாய்’ உலக ஃபேமஸ்! அரவிந்தனுக்கு அது தெரிய நியாயமில்லை. சுவைத்தவர்களுக்குத்தான் சுவையின் சுவைத் தெரியும்.

ஆக, தனது பெற்றோர்கள் நிகழ்த்திய மதமாற்றக் குழறுப்படியினால் அந்தப் பெண் பாதிக்கப் பட்டிருக்கிறாள் என்பதுதான் நிதர் சனமான உண்மை. அந்தப் பெண்ணிற்கு நேர்ந்திருக்கிற இம்சைகளுக்காக, அவளின் உரிமைகளின் நசிவிற்காக, மனித உரிமை பாராட்டும் எவரும் மலேசிய அரசுக்கு கோரிக்கை வைக்கத்தான் வேண்டும். அதைத்தாண்டி இந்த விவகாரத்தில், யார் ஒருவரை யாவது நேரிடையாக குற்றம் சாட்ட வேண்டு என்றாலும், அந்தப் பெண்ணின் பெற்றோர்களைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். மகளின் மனோநிலை அறியாது முடிவெடுத்ததற்காகவும், பிரச்சனை வளர்ந்த நிலையிலும் அவர்கள் தங்களது பங்கை சரிவர ஆற்றாது, மகளை மீட்டெடுக்க செயல்படாது மௌனம் காத்ததற்காகவும் அவர்களை நன்றாகவே குற்றம் சாட்டலாம்.

*********

அரவிந்தன் நீலகண்டன், நம்மை கொதிநிலைக்குத் தள்ளும் பிரச்சனையின் சாரம் என்பது இவ்வளவுதான். மலேசியாவில் நடந் தேறிய இந்தப் பிரச்சனையை தமிழகத்தில், தமிழ்ப்பத்திரிகைகள் செய்தியாக்கவில்லை என்பதாக “நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க் கையை தலைப்புச் செய்திகளாக்கி விற்பனை செய்து பிழைக்கும் நாளேடுகள்” என்று அவைகளைத் திட்டித் தீர்த்திருக்கிறார். மலோசியாவிலேயே மூன்று பெரிய தமிழ் தினசரிகள் உண்டு. தமிழ் வாரஇதழ்கள் பத்திற்க்குமேல் உண்டு. மாதாந்திர தமிழ் இதழ் களுக்கும் குறைவில்லை. இது தவிர, எண்ணிக்கையற்ற மலேசியத்தமிழர்களின் வலைத்தளங்கள். இத்தனையும் இந்தப் பெண்ணின் பிரச்சனையை நிச்சயம் எழுதியிருக்கும். அதையும் தாண்டிதான், தமிழகத்துப் பத்திரிகைகளில் அந்தச் செய்தி வந்திருக்க வேண்டும் என்கிறார் அரவிந்தன்! அப்படி தமிழக இதழ்களில் வராததையொட்டித்தான், அவர்களுக்கான இந்த நரசமான அர்ச்சனை.

நமது அறிவு ஜீவிகள், இவரை ஒத்த அளவில் இந்தப்பிரச்சனையை கண்டெடுத்து மோலெடுத்துப் போகவில்லை என்பதற்காகவே அவர்களை, “நம் அறிவிசீவிகளிடம் ஒரு முணுமுணுப்பாக கூட எழும்பாத அளவு மரத்துவிட்டதா அவர்கள் அற உணர்வு?” என்று கோபப்படுகிறார். நமது அறிவு ஜீவிகளை இவர் எப்பொழுதும் ‘அறிவு சீவி’ என்றுதான் குறிப்பிடுவார். அதை அவரது ஸ்டைலாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

“மானுடத்தன்மை இழந்த மதவெறி மிருகங்கள்.” “மடத்தனமான மானுடத்தன்மையற்ற மதவெறியை உரிமைகளை நசுக்கி மதம் வள ர்க்கும் மதமும் ஒரு மதமா?” இப்படி இவர் அடுத்து தடித்த வார்த்தைகளால் தாண்டிக் குதிப்பது இஸ்லாமியர்களையும், இஸ்லாம் மதத்தையும்தான். அரவிந்தனை அவரது ‘அறநெறி’ ரொம்பவுதான் ஆட்டிப் படைக்கிறது!

பாதிக்கப்பட்ட அந்த இந்து சகோதரிக்காக, மலேசியாவில் உள்ள பல்வேறு இஸ்லாமிய மனித உரிமை ஆவலர்களும், இஸ்லாமிய பெண்கள் அமைப்புகளும் வீதியில் இறங்கி போராடி இருக்கிறார்கள். இன்னும் சில இஸ்லாமியத் தலைவர்கள் அந்த சகோதரிக் காக குரல் கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கு பிறகும் இந்த விவகாரத்தை உலக மக்கள் பார்வைக்கு கொண்டு வந்திருப்பதும் ஓர் இஸ்லாமிய நாட்டின் தொலைக்காட்சி ஸ்தாபனம்தான்! ‘அல்ஜஸீரா’ என்கிற அந்தத் தொலைக்காட்சி ஸ்தாபனம் வளைகுடா வில் உள்ள கத்தாருக்குச் சொந்தமானது. இஸ்லாமியர்களின் இத்தனை செயல்பாடும் அரவிந்தனுக்குத் தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணிற்கு அவளது சொந்தப் பெற்றோர்களால்தான் இத்தனைக் குழப்பங்கள் என்பதும் அவருக்கு புரிந்திருந்தும், இஸ்லாமியனையும், இஸ்லாத்தையும் மனம் போனப்படிக்கு தடித்த வார்த்தைகளால் திட்டித் தீர்த்திருப்பது எந்த வகையில் நியாயம்? எதற் க இந்த எழுத்து வன்முறை? வன்முறை எப்பவும் இரண்டுப் பக்கமும் கூர்மையுடையதென்பது அரவிந்தனுக்கு தெரியாதா?

ஸ்ரீரங்கத்துப் பெருமாள் துலுக்கநாச்சியார் கொலுகொண்டிருக்கும் கதையும், இன்றுவரை அந்த நாச்சியாரையோ பெருமாளையோ எந்த ஒரு இஸ்லாமியனும் இம்சிக்காமல், தூசனைப்பாராட்டாமல் மௌனம் காப்பதையும் அரவிந்தன் சரியாக அறிந்திருக்கும் பட்சம் இப்படியெல்லாம் எழுதமாட்டார்.

போகட்டும், மேலே அலசப்பட்ட அந்த பரிதாபத்திற்குறிய பெண்ணின் உரிமை நசுங்களைப் போல், தினம் ஆயிரம் நம் நாட்டிலேயே நடந்துக் கொண்டிருக்க, அரவிந்தன் இதற்காக மலேசியாவரை போய் இருக்கிறார். இனி இப்படி நம் நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும் தொடர்ந்து அரவிந்தன் எழுத வேண்டும். அவரது எழுத்து பெண்ணியத்திற்கு உதவு கிற வகையில் பரிணமிப்பது வரவேற்கத்தக்கதே. இல்லை….. பிற மதத்தவர்களால், பிறமத அரசுகளால், தமிழ்பேசுகிற இந்துப் பெண்களுக்கு நிகழ்ந்தேறும் கெடுமைகளைத்தான் எழுதுவேன் என்றால்… சிங்கள பௌத்த அரசால், அவர்களது ராணுவ சிப்பா ய்களால் தமிழீழப் பெண்கள் அவ்வப்போது மாதம் தவறாமல் கணிசமாக சிதைகிறார்கள். இது அரவிந்தனுக்கும் தெரியும். நிறைய தொலைக்காட்சி ஆதாரங்களும் இருக்கவே செய்கிறது. அப்படியே தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்ரிக்கா என்று ஒரு சுற்றும் வரலாம். அந்த அளவுக்கு நம் பெண்கள் ஆங்காங்கே பாதிக்கப் படுகிறார்கள். கட்டாயம் அரவிந்தன் எழுதனும். அரவிந்தனின் அறநெறி எல்லோரும் போற்றும் வகையில் மிளிரனும்.

******************
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்