அரண்/கீர்த்தி சக்கரம் : திரை விமர்சனமல்ல: பாரத மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பரிந்துரை

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

எஸ். அரவிந்தன் நீலகண்டன்


‘அரண்’ திரைப்படத்தின் மலையாள ஒரிஜினல் ‘கீர்த்தி சக்கரம்’. தமிழ் வார்ப்பில் சில தேவையற்ற அசட்டோ அசட்டுத்தனமான நகைச்சுவை காட்சிகளும் காதல் காட்சிகளும் ஒரு குத்தாட்டமும் சேர்க்கப்பட்டு படத்திற்கு பொருத்தமில்லாமல் தொங்குகின்றன. அவற்றைத் தவிர்த்து மலையாள ஒரிஜினல் உக்கிரத்துடன் தமிழிலும் தெரியத்தான் செய்கிறது.

இறந்த பாரத போர்வீரர்களின் நினைவுத்தூண் முன்னால் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட கீர்த்திசக்கர மெடலுடனும் குழந்தையுடனும் நிற்கிறாள் ஜெய் எனும் கமாண்டோவின் மனைவி. அவள் விழிநீர் மெடலை நனைக்க ப்ளாஷ்பேக்காக கதை விரிகிறது.

மகாதேவன் என்னும் கேரளத்தைச் சார்ந்த இராணுவ வீரரின் தலைமையில் இயங்கும் அதிரடி கமாண்டோ படை பயங்கரவாதிகளின் திட்டங்களை தோல்வியடையச் செய்கிறது. வெகு திறமையாக. ஜம்மு-காஷ்மீர ஹிந்துக்களை படுகொலை செய்ய ஜிகாதிகள் நடத்தும் வெறியாட்டம் முதன்முதலாக திரையில் விவரிக்கப்படுகிறது. Of course திரைப்படத்தில் அது தடுத்து நிறுத்தப்பட்டு ஜிகாதிகள் வாக்களிக்கப்பட்ட சுவனத்துக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் பத்திரிகைகளில் வெறும் புள்ளிவிவரங்களாகக் கண்ட ஹிந்து படுகொலைப்பட்டியல்களின் யதார்த்தத்தினை முதன்முதலாக திரையில் காண்கிறோம். கசியப பூமியில் கொல்லப்படும் ஹிந்துக்கள் மதச்சார்பற்ற ஊடகங்களின் புள்ளிவிவரங்கள் எனும் நிலையைத் தாண்டி கண்முன் நடக்கும் ஆஷ்ட்விச்சாக தெரிகின்றனர். அன்றைய ஆஷ்ட்விச்சின் யூதர்களுக்குப் போலவே இன்றைய காஷ்மீர ஹிந்துக்களுக்கும் உலகம் தெரிவிக்கும் எதிர்வினை உதாசீனப்படுத்தும் மௌனம்.

திரைப்படம் நகர்கிறது.

கமாண்டோக்களிடையேயான மானுட பிணைப்புகள் மெதுவாக வெளிப்படும் அதே தருணத்தில் தலிபானின் ஆப்கானிஸ்தானிலிருந்து கிரிமினல்களை ஜிகாதிகளாக்கி பாரதத்துக்குள் ஊடுருவ வைக்கிறது பாகிஸ்தானிய உளவுத்துறை. வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தானில் சுரப்பதை. இமாம்களின் மௌன சம்மதத்துடன் மசூதிகள் ஆயுதக்கிடங்குகளாகின்றன. பாரதச்சட்டம் அளிக்கும் உரிமைகளை பயன்படுத்தி ஜிகாதிகள் பல கொடுஞ்செயல்களைச் செய்கின்றனர். பள்ளிக்குழந்தைகளின் பஸ்களூக்கு வெடிகுண்டுகள் வைப்பது உட்பட. அதனை விசாரிக்க முற்படும் போதும் சரி பயங்கரவாதிகளூடன் போராட்டத்தில் ஈடுபடும் போதும் சரி ‘மனித உரிமைவாதிகள்’ சரியாக ஆஜராகின்றனர் பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்க. அனைத்தும் மீறி பயங்கரவாதிகளூடன் மோதிடும் இராணுவ அதிகாரிகளூக்கு மேலிடத்து தொந்தரவு வேறு. பாகிஸ்தானுக்கு பஸ்களையும் இரயில்களையும் விட்டு அமைதியை வளர்ப்பதாக ஆபத்தை தாய்நாட்டுக்குள் கொண்டுவரும் தரங்கெட்ட அரசியல்வியாதிகளையும் விமர்சிக்கிறது வசனம்.

கேரளம் வரை விரிந்திருக்கிறது ஜிகாத் எனும் கொடூர மிருகத்தின் கரங்கள். குழந்தை கண்ணன் முன் கண் விழித்து வருடப்பிறப்பினைக் கொண்டாடும் மகாதேவனின் மனைவியையும் மகளையும் அவர் கண் முன்னாலேயே வெடிகுண்டுக்கு பலியாக்குகிறது அது. இந்நிலையில் பயங்கரவாதம் திட்டமிடும் மற்றொரு பெரிய திட்டத்தை மோப்பம் பிடிக்கிறது இராணுவ உளவுத்துறை. திருமணமான மனைவியை சிலநாட்களில் பிரிந்து காஷ்மீர எல்லைக்கு வர வைக்கப்படுகிறார் ஜெய் எனும் உதவி கமாண்டோ. ஹஸ்ரத்பல் மசூதியை உடைத்து பழியை இராணுவத்தின் மீது போட முயற்சிக்கும் ஜிகாதி திட்டத்தினை நிறைவேற்ற முனையும் மிருகங்கள் ஒரு அப்பாவி காஷ்மீர குடும்பத்தை சிதைக்கும் காட்சி அதன் மிருகக் கொடூரத்துடன் காட்டப்படுகிறது. இராணுவக் கமாண்டோ ஜெய் தனது உயிரைக்கொடுத்து ஹஸரத்பாலை காப்பாற்றுகிறார். ஜிகாதிகளின் கோழைத்தன பயங்கரவாதத்தின் முன்னால் ஜாதி இன மத உணர்வுகளைக் கடந்து தேசசேவை புரியும் மானுட குலத்திற்கே பெருமை சேர்க்கும் பாரத இராணுவ வீரம் மிளிர்கிறது.

“இந்திய முஸ்லீம்கள் முஸ்லீம்களே அல்ல” என்கிறான் ஜிகாதி வெறியன். வகாபி போதைக்குட்பட்ட ப்ரோட்டோ-ஜிகாதிகள்/·புல்-டைம் ஜிகாதிகள் இதையே நம்மூரில் ‘இந்திய இணைவைப்போரின் தாக்கங்கள் அற்ற தூய இஸ்லாமை வடித்தெடுப்பதாகக்’ கூறுவார்கள். உதாரணமாக இன்று தமிழக சிறையில் இருக்கும் ஜிகாதிகளின் ‘கொலை சாதனைப் பட்டியலில்’ இடம் பெற்றிருப்பவர்கள் ஆறுமுக செட்டியாரும், ஆனந்தகுமாரும் , மேலப்பாளையம் சத்தியசீலனும், வக்கீல் குப்புராமும், ராம்ஜியும் மட்டுமல்ல, சென்னை கே.கே. நகர் இமாமும், கோட்டை அமீரும், மேலப்பாளையம் அபுபக்கரும் அப்பாஸ¤ம் தான். ஆக ‘இந்திய முஸ்லீம்கள் முஸ்லீம்களே அல்ல’ என்பதன் ஜிகாதி விரிவுரை பல தளங்களில் நடக்கும் உண்மை. இந்த வாக்கியத்தின் அப்பட்டமான காட்டுமிராண்டித்தனத்தை நேரடியாக, ‘செத்த நாயிலும் பல் அழகு’ என்று பேசியே பழக்கப்பட்டுப்போன பாரத மனத்துக்குக் காட்டுகிறது இத்திரைப்படம். இறுதியாக தன் கண்முன் ஜிகாதின் பெயரால் தன் குடும்பமே சின்னாபின்னமாக்கப்படுவதை காணும் வயதான காஷ்மீர மாது கூறுகிறாள் :
“ஆம் நாங்கள் முஸ்லீம்கள் அல்ல.
நாங்கள் ஹிந்துஸ்தானத்தைச் சார்ந்தவர்கள்.
எங்கள் சொர்க்கத்தை அழிக்க வந்த மிருகங்களே எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே செல்லுங்கள்”
கொல்லப்பட்ட ஜேயின்(ஜீவா) மனைவி தன் குழந்தையை இராணுவத்தில் சேர்க்க உறுதி எடுக்கிறார். மகாதேவன் (மோகன்லால்) அடுத்ததொரு பயங்கரவாத எதிர்ப்பு பணிக்கு விரைகிறார்.

நாம் குழந்தை குட்டிகளுடன் தொலைக்காட்சி பார்த்து ரவா தோசை ருசித்து விட்டு சொகுசு நாற்காலியில் புளித்த ஏப்பத்துடன் மதச்சார்பின்மையும் மனித உரிமையும் இடதுசாரி தத்துவமும் பேசுகிற நேரத்தில்,
காலம் காலமாய் நம் கலாச்சாரத்தையும் நம்மையும் அழித்திட முயலும் அரக்க சக்திகளை எதிர்த்து காவல் காக்கின்றனர் எல்லையில் தம் சுகங்களை தியாகம் செய்து அரணாக இராணுவத்தினர்.
அண்மையில் இத்திரைப்படத்தில் வந்த சில கொடூர சம்பவங்கள் ஒரு காஷ்மீர வயதான மாது தமது குடும்பத்திற்கு ஜிகாதிகள் இழைத்த கொடுமைகளை கூறியதன் அடிப்படையில் அமைக்கப்பட்டவை எனக் கூறியுள்ளார் இத்திரைப்படத்தினை எடுத்த மேஜர் ரவி.இத்திரைப்படத்தின் மூலம் பாரத இளைஞர்களுக்கு மேஜர் ரவி செய்துள்ள சேவை அவர் காஷ்மீரத்தில் நிஜ வாழ்க்கையில் ஏழு பயங்கரவாதிகளை வீழ்த்தியது போலவே இந்த தேசத்திற்கு செய்துள்ள மகத்தான சேவை.

ஒவ்வொரு உணர்வுடைய பாரதீயனும்
நம் இராணுவ வீரர்களுக்காக,
நாம் மறந்திட்ட காஷ்மீர அகதிகளுக்காக,
நாளை அதே கதி நம் குழந்தைகளுக்கு ஏற்படாமலிருக்க,
கட்டாயமாக கடமையாக இத்திரைப்படத்தினை காணுங்கள்.
ஜெய்ஹிந்த் மேஜர் சார்!
—————————————–

Series Navigation